Sunday, 4 October 2020

சாரம்

நீ
உனது மென் இயல்புகள் 
காக்கும் மௌனம்
அழகுணர்வு
பிறர் பொருட்டு
நீ சிந்தும் கண்ணீர்த்துளிகள்
பிறருக்காக
நீ ஏற்கும் வலிகள்
நீ
தரும் ஆறுதல்கள்

பூத்திருக்கும் மலர் மரத்தை
மெல்ல நடக்கும் சிறிய ஆற்றை
சிறு புள்ளை
குட்டி நாய் ஒன்றை
மழைத்துளிகளை
சந்தோஷம் தரும் நிறங்களை

எழுதினாலும்

அவை
உன்னைப் பற்றியதாகவே
ஆவது
எப்படி



Saturday, 3 October 2020

 ஒரு கிராமம்
சாலையை ஒட்டி
நெல்வயல்களின் களம்
அதன் ஓரத்தில்
ஓர் அரசமரம்
ஐம்பதாண்டு இருக்கும்
ஐம்பதாண்டுகளாக 
காலையும் மாலையும்
கோழி
மரத்தடியில் 
சருகுகளைப் புரட்டி கொத்திக் கொண்டிருக்கிறது
ஐம்பதாண்டுகளாக
பட்சிகள் அமர்கின்றன
ஐம்பதாண்டுகளாக 
நிழலுக்கு அமர்கிறான் ஒருவன்
ஐம்பதாண்டுகளாக
பார்த்தும்
பார்க்காமலும்
செல்கிறார்கள் மனிதர்கள்
பார்த்தும்
பார்க்காமலும்
செல்லும்
மனிதர்களை 
தினமும் பார்க்கிறது
உதய அஸ்தமனம் 
பார்க்கும்
காற்று வீசும் போது
இலைகளை
அசைக்கும் மரம்
வியர்த்த உடல் புவியால் ஈர்க்கப்பட்டுக் கொண்டிருந்தது
தீரும் கணக்கின் நிம்மதி
மூச்சின் நடனம் புதுவிதமாய்
உள்ளும் வெளியும்
வந்து சுழன்று சென்று
ஞாபகங்கள் ஒளி வெளியில் 
மிக பக்கத்தில் நின்றன
ஒரு குழந்தை முகம் 
உன் முகம்
அப்போதும்
உன்னிடம் ஏதோ சொல்ல வருகிறேன்
கையில் ஒரு வசீகரமான மலர் 
நீ கொடுத்ததா என யோசிக்கிறேன்
உனக்கு கொடுக்க விரும்புகிறேன்
உயிர்க்காற்றின் உச்ச கணம்
சூட்சுமக் கரங்களில் மலர்
விண்ணகம்
ஒளி உலகம்
ஒளி

உன்னை
உச்சி முகரும் போது
எண்ணிக் கொள்ளும் போது
மெச்சிப் புகழும் போது
உன் முகத்தை கைகளில் ஏந்திக் கொள்ளும் போது
தழுவிக் கொள்ளும் போது
ஒவ்வொரு முறையும்
தூய நீராழங்களில் 
மூழ்கி
நீராடி எழுகிறேன்
அதிகாலைப் பனியை
நுனியில்
சூடியிருக்கும் புற்கள்
விளிம்பில்
மண்டியிருக்கும்
மென் ஈர மண் சாலையில்
தனியே
நடக்கிறேன்
விண் அளவு அகத்துடன்
உன்னிடம்
மென்மையான சொற்களைப் பேசிய போது
உனது வெளிப்பாடுகள்
மேலும் மென்மையாயின

மிக முயன்று
பலவற்றைக் கண்டறிந்து
பலவற்றை நீக்கி
மென்மையான சுபாவத்தை
வெளிப்படுத்திய போது
உனது இருப்பு
மேலும் மென்மையானது

பல ஆண்டு
தவம் செய்து
உனது இருப்பை
உணர்ந்த போது

எதிரில் நின்று
‘என்ன செய்து கொண்டிருக்கிறாய்?
எவ்வளவு நேரம் காத்திருப்பது?’
என்கிறாய்

காகம்

 பலிச்சோறுகளின் கரை
மெல்ல ஊர்கிறது நதி
பிராத்தனைகள்
அரற்றல்கள்
பிழை பொறுக்க
மன்றாடல்கள்
குருதி
கண்ணீர்
வலி
துயரம்
வட்டமிடும் காக்கைகள்
கரையும் காக்கைகள்
அலகால் கொத்தி கிளறி
சோறுண்ணும் காக்கைகள்
மன்னிக்கும் காக்கைகள்
மன்னிக்கும் காக்கைகள்
மன்னிக்கும் காக்கைகள்

Friday, 2 October 2020

நீ அறிவாய்
யாவையும்
எனது சொற்கள்
சொற்தேர்வுகள்
சொல்லெழாமல் போகும் தருணங்கள்
எனது பிரியங்கள்
என் அன்பின் நீர்மைகள்
எனது கண்ணீர்
மௌனம்
எனது வாழ்வு
எனது உலகம்
நீ
யாவையும்

வெள்ளி

கன்றறியும் பாலின் தாய்மை
தூ வெண் மலர்
மணம் நிறைக்கும் புவி
பெருக்கெடுக்கும்
வானின் அமுத நதி
விண் சுமந்து
புவி வீழும்
மழைத் துளிகள்
ஒலி ஒழுங்கு
அக இசை
பனி மலை ஒளி
மௌனம் மௌனம் மௌனம்





நாம்

அணை
அணைத்துக் கொள்
நீரை
அகமும்
புறமும்
மச்சம்
அணைத்துக் கொள்வது போல

கொண்டு செல்
உன்னுடன் கொண்டு செல்
பெருநதி
தன் பாதையில்
மரக்கட்டைகளைக்
கொண்டு செல்வது போல

நிரம்பு
என்னுள் நிரம்பு
சாளரங்கள் திறக்கப்பட்டதும்
அறையில் நிரம்பும்
சாரல் காற்றைப் போல

சூழ்ந்து கொள்
முற்றாக சூழ்ந்து கொள்
மண்ணை
இருளாலும்
ஒளியாலும்
விண் சூழ்வது போல

பற்று
பற்றிப் படர்
உக்கிரத்துடன்
தீவிரத்துடன்
முழுமையாக உண்டு
முழுமையாக எடுத்துக் கொண்டு
தன்மயமாகி
தீயைப் போல

எரி சாம்பல்
கரையும்
நீர் வெளி
நம் உலகம்
 

Thursday, 1 October 2020

பொருள் முதல்

இல்லம்
உன் கனவாய் இருந்தது
உன் சொற்கள்
அதைக் குறித்தே பேசின
சிற்றில்
சிற்றில்
என வலியுறுத்தினாய்
எளிமையாகவேனும்
என இறைஞ்சினாய்
அதன் குறைந்த பரப்பில்
கணமும்
நீ ஏற்றிய தீபம் 
சுடர்கிறது
உன் கோலங்களுக்கு
நடுவே
வந்து சேர்கின்றன
ஜீவ ராசிகள்
தேவதைகள்
உனது உள்ளங்கையின் கனிவு
தானியங்களின்
தாவரங்களின்
தண்ணீரின்
ருசி ஆகிறது
சிற்றில் அமைந்ததும்
நீ
தெய்வமானது 
எப்படி?