Monday, 29 April 2019

வானமர்தல்

உன் விழிகளை நோக்குகிறேன்
சுடர் போன்ற
மலர் போன்ற
சிறு மணி போன்ற
உன் விழிகளை
எல்லையற்றது வான் நீலம்
நீர்மை கொண்ட மேகம்

கரைகிறது அகம்
சொல் மொழியாமல்
உரையாடாமல்

வானில் பறக்கும் புள்
மண்ணமர்கிறது
ஒரு துளி வானமாய்

Sunday, 28 April 2019

அந்தர மலர்

உன் கை விரல்களால்
உன்னிடம் இருக்கும் எந்திரத்தின்
boltஐ  இறுக்கும் போது
தளர்த்தும் போது
கத்தியைக் கொண்டு
மெல்லிய சத்தத்துடன்
பீன்ஸ் நறுக்கும் போது
ஸ்கூட்டி  ஆக்ஸிலரேட்டரை
அதிவேகமாய்ச் சுழற்றி
தொடுவானம் நோக்கி செல்லும்
முனைப்புடன் விரையும் போது
ஒரு குழந்தையைக் கையில் வைத்திருப்பது  போல
கார் ஸ்டியரிங்கை சீராக்கும் போது
மூக்குத்தி வைரம் என ஒளிரும்
ஸ்மார்ட் ஃபோனின் டார்ச்சை ஏற்றும் போது
உன் முகம் கொள்ளும் அழகு
வான் மார்க்கமாகச் செல்லும் தேவதை ஒருத்தி
ஒரு கணம் நின்று புன்னகைத்துப் புறப்பட்டாள்
மரத்திலிருந்து  புவிக்கு இறங்கிய மலர்
அந்தரத்தில் சுழன்றதைக்
கண்ட கவிஞன்
பலநாள் கழித்து எழுதினான்
அது குறித்து
ஒரு  கவிதையை

Saturday, 27 April 2019

சொல்லப்பட்டவை

உனது தோடு
நீ மகிழும் தருணங்களைச்
சொன்னது
உனது வளையல்கள்
நீ
செயல்களை
மிக நுட்பமாய் செய்ய எண்ணுவதைச்
சொன்னது
உனது மோதிரம்
மென்மையான அகம் கொள்ளும்
தூய்மையைச்
சொன்னது
உனது கொலுசு
நீ பூரித்துக் கொண்டாடும்
நிகழ்வுகளைச்
சொன்னது
உனது மௌனங்கள்
உன்னிடம் சொல்லப்பட்ட
பிரியங்களைச்
சொல்லின


ஒரு காதலைச் சொல்லும் போது

ஒரு காதலைச் சொல்லும் போது
நீரடிவாரத்தில்
பின்னிச் சுழன்று பிணைந்திருக்கும்
கையில் ஒட்டிய ரத்தமென
பிசுபிசுக்கும்
அன்றாடத்தின்
கோடுகளும் கணக்குகளும்
உருவாக்கும் எல்லையிலிருந்து
நிகழ்கிறது
ஒரு வெளியேற்றம்
ஒரு விடுபடல்
ஒரு விடுதலை

ஒரு கண்ணாடி டம்ளரின்
ஐஸ் கட்டிகள் மிதக்கும்
ஐஸ் வாட்டரின்
சில்லென்ற தட்பம்
உணரும் உள்ளங்கையளவு
ஜீவன்
எழுகின்றது
நீரளவுக்கு மேல் நிற்கும் மலரென
அதன் மேல் பறக்கும் சிட்டுக்களென
இன்னும் உயரப் பறக்கும் மேகம்
ஆகாய விண்மீன்

Friday, 26 April 2019

வருத்தம்

சாதாரணங்களின் தளத்தில்
மலர்ந்திருக்கும் மலராகவே
நீ
எப்போதும் உணரப்பட்டாய்
*
இந்த உலகின்
அளவற்ற கண்ணீரின்
மறுபக்கமாகவே
மலர்களைப்
புவியிறக்கின
தெய்வங்கள்
*
மலரின் புன்னகை
மலரின் சொற்கள்
மலரின் மௌனம்
மலரின் பிரியங்கள்
*
ஒரு மலரை
எப்படி கையாண்டாலும்
உருவாகிறது
பிழையின் பதட்டம்
*
மலர்கள்
துயருறும் போது
வருந்துகின்றன
தெய்வங்கள்

பெருந்தன்மை

எதையும் புரிந்து கொள்ளாத
எப்போதும் ஐயப்படும்
எதற்கும் தயங்கும்
எதிலும் ஆர்வம் இல்லாத
எங்கும் நம்பிக்கை கொள்ளாத
சாமானிய வெளியில்
நிகழும் எல்லா கிரீச்சிடல்களையும்
நீ
எப்போதும்
மௌனமாகக் கடந்து செல்கிறாய்

மௌன மார்க்கம்

அவள்
தன் சொற்களை
வெளிப்படுத்தாமல் இருப்பதற்கு
பழகிக் கொண்டாள்
தன் அன்பை
தன் பிரியங்களை
தன் காதலை

நூறாண்டுகளாய்
நின்றிருக்கும்
அந்த மரம்
ஏதேனும் உரையாடியதா
கூடடையும் பறவைகளிடம்
சாலையிடம்
வாய்க்காலிடம்

விண்ணகம் நோக்கி செல்கிறது
தினமும்
மௌன மார்க்கமாக

மேகம் மலை வானம்

ஒரு குளிர்காலத்தில்
மலைப்பாதையில்
குளிர் அடர் நீர்
கொட்டும் அருவியில்
தலை வழிந்தோடும்
குளியலாடி
தூய்மை கொண்ட உள்ளங்கைகளால்
அள்ளிப் பருகும் நீர்
வழியே
உள்
நிறைகிறது
மேகம்
மலை
வானம்

உலகம் யாவையும்

உன்னை
விலகியிருக்கும் போது
விலகியிருக்கிறேன்
யாவற்றிலுமிருந்து
உன்னுடன்
இருக்கும் போது
என்னுடன்
இணைந்திருக்கிறது
உலகம் யாவையும்

நள்ளிரவின் ஒலி

தாலாட்டெனக் கேட்கும்
மின்விசிறியின் ஓசை
சுவிட்ச் நிறுத்தப்பட்ட
சில வினாடிகளில்
அறைக்குள் நுழைகிறது
நள்ளிரவின் ஒலி
சில்வண்டுகள்
டியூப் லைட் ஃபிரேமில்
உள்ளிருக்கும் பல்லி

எங்கும் வியாபித்திருக்கிறது
உறக்கம்
படுக்கையின்  மேல்
அசைவின்றி இருக்கிறேன்

அடர்த்தி கூடியிருக்கிறது இந்த இரவு
ஞாபகங்கள் காட்சியாக மிதக்கின்றன
நீ உறங்கிக் கொண்டிருப்பது
ஆசுவாசம் தருகிறது
உனது கனவுகளில் இனிமை நிறையட்டும்
உனது உடல் முழுமையாக ஓய்வு பெறட்டும்

காத்திருப்பின் தவம் கொள்கிறது இரவு
அசைந்தால் தவம் கலையக் கூடும்
என்னைப்  போல
நள்ளிரவின் ஒலி கேட்டு
அசையாதிருக்கின்றன
நட்சத்திரங்கள்

இந்த நீண்ட இரவின்
என் ஒவ்வொரு கண் இமைப்பிலும்
அறையில் மிதக்கும் ஞாபகங்களில்
ஒரு துளி சேர்கிறது
கடிகையின் வினாடிகளைப் போல