Friday, 31 July 2020

தாகம்

குளக்கரை
அஸ்தமன சூரியன்
சலசலக்கும் கெண்டைகள்
நீர் மலர்கள்
தாவரக் கொடிகள்
காற்றில் நிற்கும் மீன்கொத்தி
தொலைதூரப் பயணி
உள்ளங்கைகளில் ஏந்திக் கொள்கிறான்
சூழலின் ஒரு பகுதியை
தீர்கிறது
ஒரு தாகம்

மங்களம்

அந்தி மழை பொழிந்ததற்கு
மறுநாள்
சுள்ளெனச் சுடுகிறது
சூரியக்கதிர்
மகவுகளெனத் தாவுகின்றன
புதுத் துளிர் பச்சைகள்
வான் நோக்கி
காத்திருப்பவனை ஆசிர்வதிக்கிறது
இலையில் இருந்து
சொட்டும்
ஒரு துளி மழை
ஈரமான சாலையில்
முன்னகர்கின்றன
சீரடிகள்

Wednesday, 29 July 2020

மகாத்மாவின் அன்னை

நேற்று எனது நண்பர் ஒருவர் அழைத்திருந்தார். என் மீது மிகுந்த பிரியமும் அக்கறையும் கொண்டவர். கிராமத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் பணிகளின் முன்னேற்றம் குறித்து அவரிடம் விளக்கினேன். சமீபத்தில் வெளியான ‘’பிரிவு’’ சிறுகதை குறித்து அவருடைய அபிப்ராயங்களைத் தெரிவித்தார். 15 நாட்கள் முன்பு பேசிய போது என்ன புத்தகம் வாசிக்கிறீர்கள் என்று கேட்டார். மகாராஷ்ட்ராவின் வரலாறு குறித்த நூல் ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தேன். அதனைக் கூறினேன். இப்போதும் அந்த புத்தகத்தையே வாசித்துக் கொண்டிருப்பதாக பதிலளித்தேன். 

இன்று விடிகாலை விழிப்பு வந்து விட்டது. நேற்றைய உரையாடல் என் மனத்தில் இருந்தது. என் நூலகத்தைத் துழாவினேன். ஒரு சிறு நூல் கையில் கிடைத்தது. அதனை முழுமையாக வாசித்தேன். எனது இப்போதைய மனநிலைக்கு மிகவும் முக்கியத்துவம் கொண்ட நூலாக உணர்ந்தேன். அது எப்போதும் துணையிருக்கும் நூலும் ஆகும். 

மகாத்மா ஹரிஜன், யங் இந்தியா நூல்களில் பகவத்கீதை குறித்து எழுதிய கட்டுரைகளின் மொழிபெயர்ப்பு இச்சிறு நூல். நூலின் பெயர் : கீதை - என் அன்னை.

மகாத்மாவின் சொற்களை நாம் படிக்கும் போது உணரும் விஷயம் அவர் கூறுபவை அவரது அனுபவத்திலிருந்து எழுந்து வந்தவை என்பதே. அவர் எந்த விஷயத்தையும் முழுமையாக சிந்திக்கக் கூடியவரே. எனினும் அவரது எழுத்துக்களில் தனது சொந்த அனுபவத்தின் சாரத்தை வெளிப்படுத்துகிறார். அந்த அனுபவத்தை ஆதியோடு அந்தம் படிப்படியாக விளக்குகிறார். அதனால் ஓர் ஆரம்ப மாணவனிலிருந்து அறிஞர் வரை அனைவரின் வினாக்களுக்கும் அதில் விடை இருக்கிறது. 

மகாத்மா இந்தியர்கள் அனைவரும் பகவத்கீதையைப் பயில வேண்டும் என்று கூறுகிறார். அன்றாட வாழ்க்கையின் பல்வேறு செயல்பாடுகளுக்கு மனிதர்களின் வெவ்வேறு விதமான முயற்சிகளுக்கு அந்நூல் துணை செய்யும் என்பதில் உறுதியாக இருக்கிறார். நாடு முழுவதும் பகவத் கீதை முற்றோதல் செய்யப்பட வேண்டும் என்ற விருப்பம் காந்திக்கு இருக்கிறது. சிறுவர்களின் இளைஞர்களின் மனத்திற்குள் கீதையின் பிரதி நுழைந்து விட வேண்டும்; அது நெருக்கடியான வாழ்க்கைத் தருணங்களில் வழிகாட்டும் என்ற புரிதல் காந்திக்கு இருக்கிறது.

இந்தியாவில் வேத காலத்திலிருந்து தொடர்ந்து வரும் கல்விமுறைகளில் ஒன்று பிரதியை மனனம் செய்தல். வேதம் எழுதாக் கிளவி. ஒலி ஒழுங்காகவே தலைமுறை தலைமுறையாக கைமாற்றப்பட்டு வந்தது. இன்றளவும் அந்த முறை தொடர்கிறது. மறை ஓதப்படுதல் போல கீதையும் மனனம் செய்து ஓதப்பட வேண்டும் என காந்தி விரும்புகிறார். மனனம் செய்யும் போது பிரதி மனதினுள் ஒத்திசைவாகச் சென்று விடும். குறிப்பிட்ட வாழ்க்கைத் தருணங்களின் போது அப்பிரதியின் சில சொற்கள் அகத்தில் எழுந்து வழிகாட்டும். ஒரு பிரதியை புறவயமாக அணுகி விளக்கங்களுடன் புரிந்து கொள்வது என்பது முறை. அதை விடவும் சக்தி வாய்ந்த வழிமுறை மனனம் செய்தல். கீதையைப் பாராயணம் செய்வதுடன் நமது நெருக்கடியான வாழ்க்கைத் தருணங்களில் அதன் ஒளியில் பயணிக்க வேண்டும் என காந்தி விரும்புகிறார்.

நமது இன்றைய வாழ்க்கைமுறையில், முதலாளித்துவம் வாழ்க்கையை தனிநபர்வாதத்தை நோக்கி நகர்த்தியுள்ளது. தனிநபர்வாதம் பொருள் சார்ந்த வாழ்க்கையை நோக்கி அனைத்தையும் திருப்புகிறது. இந்த காலகட்டத்தில் கீதையின் செயல் யோகம் உலகம் உய்வு பெற சிறப்பான மார்க்கம். செயல் மூலம் கற்றல் நிகழும். கர்மயோகம் ஒருவனை ஞானியாகவும் ஆக்கும். செயல் மூலம் உன்னதமான உணர்வுகளை உண்டாக்க முடியும். கர்மயோகம் ஒருவனை பக்தனாகவும் ஆக்கும். கர்மம் - ஞானம் - பக்தி என்ற மூன்றும் செயல் மூலம் சாத்தியமாகும்.

பகவத் கீதையை மகாத்மா தன் அன்னை என்கிறார். 

Tuesday, 28 July 2020

புதிர் - விடை

முதல் கட்டத்தில் ஒரு நெல்மணியை வைக்கிறோம்.

அதன் இரண்டு மடங்கை சதுரங்கக் கட்டங்களில் வைத்துக் கொண்டே சென்றால் கடைசி கட்டத்தில் நெல்மணிகளை வைக்க

பூமியில் உள்ள நிலம் முழுவதையும்

பூமியின் ஒட்டுமொத்த சமுத்திரப் பரப்பையும்

சந்திர மண்டலம் முழுமையையும்

நெல் விவசாயம் செய்து கிடைக்கும் மொத்த மகசூலையும் 64 வது கட்டத்தில் வைக்க வேண்டியிருக்கும். 

Sunday, 26 July 2020

பிரிவு

சொல்வனம் இதழில் சமீபத்தில் எழுதிய சிறுகதை ஒன்று வெளியாகி உள்ளது. அதன் இணைப்பு

பிரிவு

Saturday, 25 July 2020

ஒரு புதிர்

இந்த புதிரைச் சிறு வயதில் வாசித்தேன்.

இந்த புதிரை விடுவிக்க முயன்று பாருங்கள்.

ஒரு சதுரங்கப் பலகையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 64 கட்டங்கள் இருக்கும்.

முதல் கட்டத்தில் ஒரு அரிசியை வையுங்கள். இரண்டாவது கட்டத்தில் அதன் இரண்டு மடங்கான இரண்டு அரிசியை வையுங்கள். மூன்றாவது கட்டத்தில் அதன் இரண்டு மடங்கான நான்கு அரிசியை வையுங்கள். பின்னர் எட்டு அரிசி. அதன் பின்னர் பதினாறு அரிசி மணிகள். இப்படி வைத்துக் கொண்டே செல்லுங்கள்.

1, 2, 4, 8, 16, ...

கடைசி கட்டத்தில் எத்தனை அரிசி மணிகள் வைக்க வேண்டியிருக்கும்?

இந்த புதிருக்கான விடையைக் கண்டடைந்தவர்கள்  ulagelam(at)gmail(dot)com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன். 

Wednesday, 22 July 2020

ஆடிப்பிறை

இன்று ஆடிப்பிறை. வானில் பிறை கண்டேன். ஆடிப்பிறை காண்பது அபூர்வமானது என்பார்கள். ஆடியில் அந்தி மழை பொழியும். அந்தி மழை என்பது மாலை ஆறு மணி அளவில் பெய்யத் துவங்கி சிறு சிறு தூரலாக ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் பெய்யும். அதனால் ஆடியில் மாலைகளில் வானம் மூட்டமாய் இருக்கும். அதனால் ஆடிப்பிறை காண்பது அபூர்வம் என்று கூறியிருக்கலாம் என்று படுகிறது. ஊரைச் சுற்றி சில கிராமத்துச் சாலைகளைத் தேர்ந்தெடுத்து வைத்திருப்பேன். மாலைப் பொழுதுகளில் அங்கே சென்று வானத்தை நோக்கியவாறு அமர்ந்திருப்பேன். இது பல வருடப் பழக்கம். இன்று அவ்வாறான ஒரு சாலையில் நின்று கொண்டு பிறையைக் கண்டேன். பிறை தென்படத் துவங்குவதிலிருந்து மறையும் வரை காண்பது மனம் கரையும் ஓர் அனுபவம். 

நாம் எப்போதும் புழங்கும் இடத்தில் நம் மனம் ஒரே விதமாக இயங்குகிறது. அதை விட்டு சற்று விலகிச் சென்றால் நாம் ஓர் விடுபடலை உணர்கிறோம்.

மாற்றத்துக்கான பணிகள் எப்போதும் நிகழ்ந்தவாறே இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். 

வாழ்வின் உண்மைகளை அறிவதும் இறைமையை உணர்வதும் அழகின் அனுபவமும் ஒன்றே என்ற புரிதல் சிறு அளவில் இந்த நாட்களில் இருக்கிறது. 

சத்யம் சிவம் சுந்தரம்

ஈஸ்வர ஹிதம்

ஒரு காட்சி

காவிரிப் படுகையில் ஆற்றங்கரையில் ஒரு கிராமம்.

பிரம்ம முகூர்த்தத்தில் நான்மறையைக் குறிக்கும் நான்கு மணியோசை ஒலிக்கப்படுகிறது.

கீற்றுக் கொட்டகை ஒன்றில் நூற்றுக்கணக்கான மாடுகள் மணியோசை கேட்டு தங்கள் கழுத்துமணியை அசைக்கும் ஓசை இனிமையாகப் பரவுகிறது.

கொட்டகையின் நுழைவாயிலில் ஆனைமுகத்தானின் சிற்றாலயம். அதில் நெய் தீபங்கள் ஏற்றப்படுகின்றன.

காலை ஐந்து மணிக்கு நூற்றுக்கணக்கான அக்கிராமத்தின் பெண்கள் ஆவின சாலையில் திரள்கின்றனர்.

சூடிக் கொடுத்த சுடர்க்கொடியின் முப்பது பாடல்களை இசைக்கின்றனர். பின்னர் சம்பந்தர் தேவாரத்திலிருந்து திருநீற்றுப் பதிகம் பாடுகின்றனர். 
அதன் பின்னர் ஸ்ரீகுமரகுருபரரின் சகலகலாவல்லி மாலையால் கலைமகளைத் துதிக்கின்றனர். அபிராமி அந்தாதியால் உமையவளைத் தொழுகின்றனர். 

பெண்களால் மாடுகள் அருகில் உள்ள மைதானத்தில் விடப்படுகின்றன. 

மாட்டுக் கொட்டகை சாணம் அள்ளப்பட்டு தூய்மை செய்யப்படுகிறது. சாணத்தை சிறு சிறு ராட்டிகளாக தட்டி அதற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் காய வைக்கின்றனர். சில நாட்கள் முன்பு காயவைக்கப்பட்டு உலர்ந்த ராட்டிகள் பணியாளர்களால் நெற்பதர் மூட்டம் இடப்பட்டு தீயிலிடப்படுகின்றன. முன்னர்  தீயிலிடப்பட்ட ராட்டிகள் பதர் நீக்கப்பட்டு திருநீறாக மாற்றப்படுகின்றன. 

பெண்கள் மீண்டும் காலை 10 மணி அளவில் மாட்டுக் கொட்டகைக்கு வருகின்றனர். மாடுகள் நின்றிருந்த இடத்தில் அமர்ந்து ஒரு மணி நேரம் இராட்டையில் நூல் நூற்கின்றனர். 

ஆவின சாலையில் ஒரு ஆயுர்வேத மருத்துவமனை இருக்கிறது. அதன் பெயர் ‘’ஆரோக்கிய நிகேதன்’’.  அதில் ஓர் ஆயுர்வேத மருத்துவர் இருக்கிறார். காலை 7 மணியிலிருந்து மாலை 5 மணி வரை அவர் பணியாற்றுகிறார்.  நோயுற்ற கிராம மக்கள் தினமும் அதில் ஆயுர்வேத சிகிச்சை பெறுகின்றனர். 

வாழ்க்கையின் அன்றாடச் செயல்பாடுகளுக்கு உதவக் கூடிய கல்வியை ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் என கிராமத்தின் குழந்தைகள் வந்து பயின்று செல்லும் கல்விச்சாலை ஒன்று அங்கே அமைக்கப்படுகிறது. எளிய பாரம்பர்ய தொழில்நுட்பங்களில் அங்கே குழந்தைகளுக்குப் பயிற்சி தரப்படுகிறது. 

ஆவின சாலைக்கு அருகில் ஒரு விளையாட்டு மைதானம் அமைக்கப்படுகிறது. அதில் கால்பந்து, பாட்மிட்டன், கைப்பந்து, மற்றும் கிரிக்கெட் ஆட வசதி செய்து தரப்படுகிறது. ஊரின் குழந்தைகள் அங்கே தினமும் யோகாசனம் பயில்கின்றனர். காலை அந்தியிலும் மாலை அந்தியிலும் கிராமத்தின் குழந்தைகள் கதிர் வணக்கம் செலுத்துகின்றனர். 

கோசாலை , கல்விச்சாலை, ஆரோக்கிய நிகேதன் அனைத்துமே சூரிய ஒளி மின்சாரம் பெறுகின்றன. 

மாலை அந்தியில் மாடுகள் கொட்டகைக்குத் திரும்புகின்றன. 

இரவு கிராமத்தைச் சூழ்கையில் மாடுகளின் கழுத்து மணியோசை மெல்ல எழுகிறது. 

Tuesday, 21 July 2020

நீறு பூத்த நெருப்பு

வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு வுண்மையி லுள்ளது நீறு
சீதப் புனல்வயல் சூழ்ந்த திருவால வாயான் திருநீறே.

-திருஞானசம்பந்தர், திருநீற்றுப் பதிகம்

இன்று காலை எனக்கு ஒரு புது யோசனை உதித்தது.

ஓர் ஆங்கிலக் கவிதை உள்ளது.

ஒரு சிறு குன்றை ஏறிக் கடக்கும் ரயில் என்ஜின் பாடும் பாடல்.

I think, I can, I think, I can

ஏறிக் கடந்த பின்

I knew i can, I knew i can

என்று பாடும்.

மனத்தில் முழுமையாக கிராம முன்னேற்றம் குறித்த எண்ணங்களே ஓடிக் கொண்டிருக்கின்றன. எனக்கு அது ஒரு விதமான புது அனுபவமாக இருக்கிறது. நடைமுறை சாத்தியமான விஷயத்தை முன்வைத்தால் மக்கள் வரவேற்கிறார்கள் என்பதை நேரடியாக உணர்ந்தது காரணமாக இருக்கலாம்.

காந்தியப் பொருளியல் அறிஞர் ஜே.சி. குமரப்பாவிடம் வயல்களில் உழவுக்கு டிராக்டர் பயன்படுத்துவது குறித்து கேட்ட போது அவர் டிராக்டர் சாணி போடுமா என்று கேட்டதாகக் கூறுவார்கள். அது மிகவும் பொருள் பொதிந்தது. நமது நாட்டில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஆவினங்கள் விவசாயத்தின் ஒரு பகுதியாக – முதன்மையான முக்கியமான பகுதியாக – இருந்திருக்கின்றன. பசுவின் பாலை விடவும் வெண்ணெய், நெய் போன்ற பாலிலிருந்து உற்பத்தியாகும் பொருட்களே அதிக அளவில் உணவுப் பயன்பாட்டில் இருந்திருக்கிறது. கிருஷ்ணனின் கிராமமான கோகுலத்தில் ஆய்ச்சியர் மோரைக் கடைந்து வெண்ணெய் எடுக்கும் சித்திரம் மகாபாரத காவியத்திலேயே உள்ளது. மேலைச் சிந்தனைகள் மீது நமக்கு இருந்த வழிபாடு நமது விவசாயத்தில் டிராக்டர் போன்ற எந்திரங்களை அதிகமாக்கி ஆவினங்களுக்கும் விவசாயத்துக்குமான தொடர்பை பெருமளவு குறைத்தது.

மரக்கன்றுகள் நட உள்ள கிராமத்தில், மரக்கன்றுகள் நட்டு முடித்த பின், இந்த எண்ணத்தை மக்களிடம் சொல்லி அவர்களுடைய ஆலோசனைகளைப் பெற்று இதனைச் செயல்படுத்தலாம் என இருக்கிறேன். I think I can.

1. ஒரு கிராமத்தை எடுத்துக் கொள்வோம். அதில் 500 குடும்பங்கள் உள்ளன எனக் கொள்வோம்.

2. ஒரு ஏக்கர் பரப்புள்ள ஒரு பொது இடம் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது. அதில் ஒரு பெரிய கொட்டகை அமைத்து அதில் கறவை நின்று போன 500 நாட்டுப் பசுமாடுகளைப் பராமரிப்பது.

3. ஒவ்வொரு மாட்டுக்கும் கொட்டகையில் 6 அடிக்கு 10 அடி என தனித்தனியான இடம் ஒதுக்கப்படும்.

4. பசுக்கள் இலக்கமிடப்பட்டு ஒவ்வொரு குடும்பத்துக்கும் இன்ன மாடு என்பது அடையாளப்படுத்தப்படும்.

5. கொட்டகைக்குப் பக்கத்திலேயே மூன்று ஏக்கர் அளவில் பகலில் மாடுகள் உலவுவதற்கு ஓர் இடம் உருவாக்கப்படும்.

6. பசுக்கள் மாலை 6 மணியிலிருந்து காலை 6 மணி வரை மட்டுமே கொட்டகையில் இருக்கும். பகலில் பக்கத்தில் உள்ள வேலியிடப்பட்ட இடத்தில் உலவிக் கொண்டிருக்கும்.

7. காலை 6 மணிக்குக் கொட்ட்கைக்கு வரும் ஒருவர் தனக்குரிய மாட்டுக்கு 20 கிலோ பசுந்தீவனம் கொண்டு வர வேண்டும். பசுந்தீவனம் சந்தையில் கிலோ ரூ. 2 என்ற அளவில் கிடைக்கிறது. அதனை பசுமாட்டுக்கு அளிக்க வேண்டும். அவர் கொண்டு வரும் பசுந்தீவனம் எடை போடப்பட்டு குறித்துக் கொள்ளப்படும். தனது மாட்டை கொட்டகைக்கு அருகில் உள்ள வெளியில்  அந்த மாடு கட்டப்பட்டிருக்கும் 60 சதுர அடி பரப்பைத் தூய்மை செய்து அதில் இருக்கும் சாணத்தை சிறு சிறு ராட்டிகளாகத் தட்டி காய வைக்க வேண்டும். இந்த பணிகள் காலை 6 மணிக்குத் தொடங்கினால் அதிகபட்சம் ஒரு மணி நேரம் தேவைப்படும். எத்தனை ராட்டிகள் தட்டப்பட்டுள்ளது என்பதும் குறித்துக் கொள்ளப்படும்.

8. போதிய பணியாளர்களைக் கொண்டு கொட்டகையில் மாடுகளுக்குத் தண்ணீர் வைக்கப்படும். அவற்றின் ஆரோக்கியம் பராமரிக்கப்படும். திறந்த வெளியில் மாடுகள் இடும் சாணம் சமமாகப் பிரிக்கப்பட்டு ராட்டிகள் தயாரிக்க வழங்கப்படும். ராட்டிகள் தீயிலிடப்பட்டு திருநீறாக மாற்றும் பணியை சில பணியாளர்கள் மேற்கொள்வார்கள்.

9. ஒரு நாட்டு மாடு ஒரு நாளைக்கு 10 கிலோ சாணமிடும். அந்த சாணத்திலிருந்து ஒரு கிலோ திருநீறு தயாரிக்க முடியும். ஒரு கிலோ திருநீறின் விலை ரூ. 400.

10. ஒவ்வொருவரும் மாட்டுக்கு அளிக்கும் உணவின் விலை ரூ. 40. பணியாளர்களின் நிகர ஊதியம் ஒரு மாட்டுக்கு ரூ.10 எனக் கொள்வோம். நெற்பதர் முதலிய செலவுகள் ரூ. 50 எனக் கொள்வோம். ஒரு மாட்டுக்கு தினமும் ஆகும் செலவு ரூ. 100. ஒரு கிலோ விபூதி மூலம் கிடைப்பது ரூ. 400. நிகர லாபம் ரூ. 300.

ஒரு சுவாரசியமான விஷயம்

ஒரு கிராமத்தில் விவசாயம் செய்யப்படும் நிலம் சராசரியாக 500 ஏக்கர். ஒரு போகத்தில் ஒரு ஏக்கருக்கு ரூ. 20,000 லாபம் கிடைப்பதாகக் கூறுகிறார்கள். இரண்டு போகம் ஆகவே லாபம் ரூ.40,000. 500 ஏக்கருக்கு லாபம் ரூ. இரண்டு கோடி.

500 நாட்டுப் பசுமாடுகளைக் கொண்டு திருநீறு தயாரிக்கும் விஷயத்தில் ஒரு மாட்டிலிருந்து ஒரு நாளைக்கு லாபம் ரூ. 300. 500 மாட்டிலிருந்து ஒரு நாளைக்கு லாபம் ரூ. 1,50,000. 500 மாட்டிலிருந்து ஒரு வருடத்தில் லாபம் ரூ. ஐந்து கோடியே நாற்பத்து ஏழு லட்சத்து ஐம்பதாயிரம்.

500 நாட்டுப் பசுமாடுகள் உருவாக்கும் செல்வம் விவசாய வருமானத்தைப் போல இரண்டரை மடங்கு.

வினாக்களும் விடைகளும்

1. இது சாத்தியமா?

எல்லா புதிய முயற்சிகளும் முன்னெடுப்புகளும் யோசனைகளும் இது சாத்தியமா என்ற வினாவை எப்போதும் எதிர்கொள்ளவே செய்கின்றன. இது சாத்தியமே. கிராம மக்கள் வீட்டுக்கு ஒருவர் என ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே கொடுக்கின்றனர். ஒரு மணி நேர உடல் உழைப்பையும் 20 கிலோ பசுந்தீவனமும் நெற்பதரும் மட்டுமே கொடுக்கின்றனர். அவர்கள் ஈட்டும் லாபம் ஒரு நாளைக்கு ரூ. 300. இது விவசாயிகளுக்கு லாபம் தருவது எனவே 100 சதவீதம் சாத்தியமானது.

2. உற்பத்தியாகும் அவ்வளவு விபூதிக்கும் விற்பனை வாய்ப்பு எப்படி?

ஒரு கிராமத்தில் உள்ள எல்லா குடும்பமும் இந்த விஷயத்தில் தங்கள் பங்களிப்பை வழங்கி பயன் பெற உள்ளனர். இந்த முயற்சியை ஆவினங்களை நேசிப்பவர்களும் திருநீறு அணிபவர்களும் பெருமளவில் வரவேற்பர். தேவை மிக அதிகமாகவே உள்ளது. உற்பத்திதான் குறைவு.

3. கிராமத்துக்கு வெளியில் இருப்பவர்கள் எவ்விதம் இதில் பங்கேற்கலாம்?

பசுப் பாதுகாப்பிலும் விவசாயிகள் நலனிலும் அக்கறை உள்ளவர்கள் இதில் பங்கு பெற விரும்பினால் உற்பத்தியாகும் திருநீறை வாங்கிக் கொண்டாலே போதுமானது.

4. இதில் வேறு ஏதாவது வணிக நோக்கங்கள் உள்ளனவா?

ஒரு கிராமத்தின் மக்களே முழுமையாக இதில் ஈடுபடப் போகிறார்கள். முழுக்கப் பயன் பெறப் போவதும் அவர்களே.

கிராமியப் பொருளாதாரத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் இதை மேலும் செழுமையாக்க ஆலோசனை தரலாம்.

தொடர்புக்கு: ulagelam(at)gmail(dot)com