Tuesday, 9 November 2021

காதலின் துயரம்

 

உலக இலக்கியத்தின் மாபெரும் படைப்பாளியான கதேயின் ‘’காதலின் துயரம்’’ நாவலை முதன்முறையாக 18 ஆண்டுகளுக்கு முன்பு வாசித்தேன். முதல் வாசிப்பின் முதல் கணத்திலிருந்தே அந்த நாவல் என்னை ஆட்கொண்டது. அதன் பின்னர் அந்த நாவலை மூன்று நான்கு முறை வாசித்திருக்கிறேன். இன்று காலை மழை மிகுந்து பொழிந்து கொண்டிருந்த ஒரு பொழுதில் இந்த நாவலை மீண்டும் வாசிக்கத் தொடங்கினேன். மாலை வாசித்து முடித்தேன்.  முதல் முறை வாசித்த போது இந்த நாவலை எப்போதும் என் கையிலேயே வைத்திருப்பேன். மேஜையில் புத்தக அலமாரியில் என் பார்வையில் இருக்கும்படியே வைத்திருப்பேன். அந்த நூல் கையில் இருக்கும் போது பார்வையில் இருக்கும் போது மகத்தான ஓர் உணர்வுடன் அணுக்கமாக இருப்பதான எண்ணம் இருக்கும். 

வாழ்க்கை பொன்னொளியாலும் சாமானியத்தன்மையாலும் ஆனது. இந்த தூரம் கொண்ட தன்மைகள் உலகத்தின் இயல்பு. இந்திய மரபு சத்வ, ரஜோ, தமோ குணங்கள் என்கிறது. 

கி. ராஜநாராயணன் ‘’கன்னிமை’’ என்ற சிறுகதையை எழுதியிருக்கிறார். சிறுமியாக இருக்கும் போது கன்னிப் பெண்ணாக இருக்கும் போது நாச்சியார் என்ற அக்கதையில் வரும் கதாபாத்திரம் தன் இயல்பால் தன் சூழலை பொன்னென பொன்னிசையென ஆக்கும் மாயத்தை அதிசயித்து எழுதியிருப்பார். பின்னர், அதே பெண் லௌகிகமான மிகச் சாதாரணமான மெச்சும்படியான நளினங்கள் ஏதும் இல்லாத ஒரு குடும்பத் தலைவியாக ஆவதை அக்கதையில் காட்டியிருப்பார். 

காதல் பல்லாண்டுகளாக புழங்கிய உலகை மிகப் புத்தம் புதிய ஒன்றாக மாற்றிக் காட்டும் மாயத்தை நிகழ்த்துகிறது. காதல் கொண்ட அகம் உலகை எழில்களின் மேன்மைகளின் இயக்கமாகக் காண்கிறது. அந்த உலகில் புரிதலும் அன்பும் மட்டுமே இருக்கிறது. அவையே ஜீவித இயல்புகள் என்ற உணர்வு அடிக்கடி தோன்றி மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுக் கொண்டே உள்ளது. காதல் கொண்டவர்கள் சக மனிதர்களை எல்லையின்றி மன்னிக்கிறார்கள். மனிதர்களைப் பெருந்தன்மையுடன் அணுகுகிறார்கள்.

வெர்தர் லோதா என்ற பெண்ணைக் காண்கிறான். அவளை அவள் வீட்டில் முதல் முறையாகக் காணும் போது அவள் சிறு குழந்தைகளாயிருக்கும் தன் சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் ரொட்டித் துண்டை பகிர்ந்து அளித்துக் கொண்டிருக்கிறாள். அந்த இளம்பெண்ணை தெய்வீக ஒளி கொண்டவளாக உணர்கிறான் வெர்தர். வெர்தர் தன் மனத்தில் கடவுளுக்குக் கொடுக்கும் இடத்தை அவளுக்குக் கொடுக்கிறான். முதல் சந்திப்பிலேயே தனக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயமானதைத் தெரிவிக்கிறாள் லோதா. 

வெர்தர் தன் மீது கொண்டிருக்கும் தூய அன்பு லோதாவாலும் உணரப்படுகிறது. தான் மணந்து கொள்ளப் போகும் ஆல்பர்ட்டை வெர்தருக்கு அறிமுகப்படுத்துகிறாள். ஆல்பர்ட், வெர்தர், லோதா மூவரும் நல்ல நன்பர்களாக இருக்கிறார்கள். 

படைப்பூக்கம் கொண்டவனும் கலைஞனுமான வெர்தர் தன் காதலால் பித்தேறிய அதி உச்ச மனநிலைக்குச் செல்கிறான். அவன் அகத்தில் தூய அன்பு மட்டுமே இருக்கிறது. லோதாவை மானசீகமாக பூஜித்த வண்ணம் இருக்கிறான் வெர்தர். வெர்தர் லோதாவையும் ஆல்பர்ட்டையும் பிரியும் நாள் வருகிறது. அவர்கள் கண்ணிலிருந்து மறைந்து விட வேண்டும் என விரும்பி நாடெங்கும் அலைகிறான். உலகியலின் சாதாரணத் தன்மையால் மனக்காயங்களை அடைகிறான். ஒளியின் வானத்தில் மேலேறி நின்றவன் இருளின் காலாக்கிரகங்களில் அடைபட நேர்கிறது. 

வெர்தருக்கு நிகழ்வது என்ன என்பதே நாவல். 

இந்த நாவல் எனக்கு தாஸ்தவெஸ்கியின் ‘’வெண்ணிற இரவுகள்’’ நாவலை நினைவுபடுத்தியது. வெண்ணிற இரவுகளில் ‘’காதலின் துயரம்’’ நாவலின் பாதிப்பு என்பது நேரடியானது. 

கதேயின் இந்த நாவலைப் போல உலக இலக்கியத்தில் பல மொழிப் படைப்புகளை பாதித்த பிறிதொரு நாவல் இல்லை. இந்த நாவல் வெளியான போது ஐரோப்பாவின் ஒவ்வொரு இளைஞனின் கையிலும் இந்த நாவல் இருந்தது என்று சொல்கிறார்கள். இந்த நாவலை வாசித்த இளைஞர்கள் தன்னை வெர்தராகவும் இளம்பெண்கள் தன்னை லோதாவாகவும் எண்ணிக் கொண்டார்கள். 

நுட்பமான உணர்ச்சிகள், உணர்ச்சி வேகம் கொண்ட மொழி, படைப்பு மொழியில் படிந்திருந்த உச்சபட்சமான அழகியல் என கதேயின் நாவல் வாசகனைத் தன் நேர்த்தியாலும் அழகாலும் சூழ்ந்து கொள்கிறது. 

நூல் : The Sorrows of Young Werther.  ஆசிரியர் : கதே.   தமிழில் : காதலின் துயரம். மொழிபெயர்ப்பு ; எம். கோபாலகிருஷ்ணன். பிரசுரம் : தமிழினி



Monday, 8 November 2021

மழை


நேற்று இரவு முழுக்க மழை பொழிந்து கொண்டேயிருந்தது. இரவில் உறக்கத்தில் விழிக்கும் போதெல்லாம் மழைத்தூறலின் ஒலி கேட்டவாறிந்தது. மழையின் சத்தம் எப்போதும் சூழ்ந்திருப்பது போன்ற உணர்வை மழைக்காலம் எளிதில் உருவாக்கி விடுகிறது. மழை ஓர் ஆசுவாசத்தை மனத்தில் நிறைக்கிறது. மழை நாட்கள் இளம் பிராயத்தின் நினைவுகளை மிக அருகில் கொண்டு வருகிறது. சிறுவர்கள் மழையால் ஆத்மார்த்தமாக மகிழ்கிறார்கள். பெரியவர்கள் உலகம் ஏற்படுத்தும் கட்டுப்பாடுகளை விதிமுறைகளை தற்காலிகமாக ரத்து செய்வதால் மழை மேல் சிறுவர்களுக்குப் பேரார்வம். காலம் காலமாக சிறுவர்களின் காகிதக் கப்பல்களை ஏந்தி முன்னழைத்துச் சென்று கொண்டிருக்கின்றன மழைநீர் ஓடைகள்.  

சென்னையில் உள்ள ‘’தக்‌ஷிண சித்ரா’’  தென்னிந்தியாவின் வெவ்வேறு விதமான கூரை வீடுகளின் வடிவமைப்பை காட்சிப்படுத்தியுள்ளது. அதில் கடலோர ஆந்திராவில் வசிக்கும் மீனவர்களின் கூரை வீடுகள் வட்ட வடிவிலானவை. வட்ட வடிவிலான வடிவமைப்பு புயலுக்குத் தாக்குப் பிடிக்கக்கூடியவை. 

எனக்கு வெகுநாளாகவே ஒரு ஆசை. சற்று பெரிய கூரைவீடு ஒன்றில் வசிக்க வேண்டும் என்று. 

கூரைவீடு. சுற்றிலும் மரங்கள். கிணறு. கிணற்றடி. இரவில் ஒளிக்கு அகல் விளக்குகள். இரண்டு பசுமாடு. ஒவ்வொரு வேளைக்கான உணவை அவ்வப்போது தயாரித்து உண்பது. 

இறைமையிடம் வேண்டிக் கொள்கிறேன். 

Saturday, 6 November 2021

எழு பசும் பொற்சுடர் - 06.11.2020 - மறுபிரசுரம்

மரக்கன்றுகள் நட்டு செயல்புரியும் கிராமத்தில் வெள்ளிக்கிழமையன்று (06.11.20) மாலை 6.15 மணிக்கு ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ஏழு தீபங்கள் ஏற்றுமாறு கேட்டுக் கொண்டோம். ஒற்றுமையிலும் கூட்டுச் செயல்பாட்டிலும் மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையையும் உறுதியையும் வெளிப்படுத்தும் விதமாக தீபங்களை ஏற்றச் சொன்னோம்.  அன்றைய தினம் சப்தமி என்பதால் ஏழு தீபங்கள். இந்திய மரபில் ஏழு என்பது பலவகையில் முக்கியத்துவம் கொண்டது. ஸ்வரங்கள் ஏழு. தெய்வ அன்னையர் எழுவர். முதல் முனிவர்கள் ஏழு பேர். புண்ணிய நதிகள் ஏழு. வானவில்லின் வர்ணங்கள் ஏழு. வாரத்தின் நாட்கள் ஏழு. பிறவிகள் ஏழு. பெருங்கடல்கள் ஏழு. அதிசயங்கள் ஏழு. உடலின் உயிர்ச் சக்கரங்கள் ஏழு. 

ஆறு மாதங்களுக்கு முன்னால் முதல்முறையாக அந்த கிராமத்துக்குச் சென்றேன். ஊரின் பெயரை மட்டும் சில முறை கேட்டிருக்கிறேன். முன்னர் எப்போதும் அங்கு சென்றது கிடையாது. அப்போது, அந்த ஊரில் யாரும் எனக்கு அறிமுகமோ பரிச்சயமோ இல்லை. இந்தியா முழுக்க மோட்டார்சைக்கிளில் பயணித்தவன் என்ற முறையில் இந்திய கிராம மக்கள் ஊருக்குப் புதிதாக வருபவர்களிடம் அன்பு பாராட்டுவார்கள் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்திருந்தேன். அந்த நம்பிக்கையே அவ்வளவு தொலைவில் உள்ள அந்த கிராமம் நோக்கி என்னைச் செலுத்தியது. 

இத்தனை நாட்கள் செயல்புரிந்த முறையில், இன்று அந்த கிராமத்தில் உள்ள அனைவரும் நண்பர்களாக உள்ளனர். அவர்கள் என் மீது காட்டும் அன்பு மறக்க இயலாதது. 

வெள்ளியன்று மாலை கிராமத்தின் எல்லா வீட்டு வாசலிலும் மக்கள் ஏழு தீபங்கள் ஏற்றினர். கிராமத்தின் வீதிகள் அகல் விளக்குகளின் ஒளியில் அழகுற மிளிர்ந்தன. அன்றைய மாலை திருக்கார்த்திகைக் கொண்டாட்டம் போல் இருந்தது. 

நான் எளிய கருவி மட்டுமே. அங்கே நிகழ்ந்த அனைத்தும் அக்கிராம மக்களாலேயே நிகழ்ந்தது. 

பணிகளுக்கு முடிவு என்பது எப்போதுமே கிடையாது. மேலும் என்ன பணிகளைச் செய்ய முடியும் என்பது குறித்தே யோசிக்கிறேன். செயல்படுகிறேன். 

கடமையைச் செய் என்கிறது கீதை.











 

Friday, 5 November 2021

வேலை

அடிப்படையில் கட்டுமானப் பணி தன்னளவில் ஒழுங்கினை அதன் இயல்பாகக் கொண்டது. இந்த பணி இவ்வாறுதான் செய்யப்பட வேண்டும் என்பது முன்னரே தீர்மானிக்கப்பட்டது. கலவைக்கு மணல் இட கலவைப்பெட்டியில் அளந்து போட வேண்டும். சிமெண்ட்டையும் அளந்து போட்ட மணலையும் இரண்டும் ஒன்றாகும் விதத்தில் நன்றாகக் கலக்க வேண்டும். ஒரு நாளைக்கு கட்டுவேலை இரண்டரை அடி உயரத்துக்கு மட்டுமே செய்ய வேண்டும். அதற்கு மேல் உயரம் போகக் கூடாது. கட்டுவேலையும் பூச்சுவேலையும் செய்த பின் ஒரு வார காலம் முழுமையாக கியூரிங் செய்ய வேண்டும். இவை மாறாத விதிகள். இவை என் மனதிலும் செயலிலும் முழுமையாகப் பதிந்து விட்டன.  

பணி நடைபெறும் போது, காலை 7 மணிக்கு வீட்டில் டிஃபன் சாப்பிட்டு விட்டு பணியிடத்துக்குப் புறப்படுவேன். அனேகமாக முக்கால் ஜல்லி லோடு வந்திருக்கும். சமயத்தில் காலை 5 மணிக்கே வந்து விடும். டிரைவர் ஃபோன் செய்வார். கிளம்பிச் செல்ல வேண்டும். ஜல்லியை அளந்து இறக்கிக் கொள்ள வேண்டும். இறக்கும் நேரம் முழுவதும் அங்கே இருக்க வேண்டும். பின் ஜல்லிக்கான பேமெண்ட்டைக் கொடுத்து அனுப்ப வேண்டும். ஜல்லி வராத நாளிலும் காலையிலேயே பணியிடம் சென்று விட வேண்டும். முதல் நாள் நடந்த வேலைகளுக்கு கியூரிங் செய்ய வேண்டும். ஒரு பணியாளர் இருப்பார். இருப்பினும் கியூரிங் முறையாக நடக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். செங்கல், மணல், சிமெண்ட், வேலைத்திறன் ஆகியவை கட்டுவேலையிலும், பூச்சுவேலையிலும் , கான்கிரீட்டிலும் 20 சதவீதம் மட்டுமே. கட்டு வேலை நடந்த பின் ஒரு வாரம் கியூரிங் முறையாக நடந்தால்தான் மீதி 80 சதவீதமும் பெற முடியும். சரியாக கியூரிங் செய்யப்படாத வேலை 20 சதவீதம் மட்டுமே வலு உடையது. 

காலை 9 மணிக்குப் பணியாளர்கள் வருவார்கள். அன்று செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றிய குறிப்புகளை அவர்களுக்கு அளிக்க வேண்டும். ஏதேனும் கட்டுமானப் பொருட்கள் தேவைப்பட்டால் வாங்கித் தர வேண்டும். மதியம் 2 மணிக்கு உணவு இடைவேளை. அந்த நேரத்தில் வீட்டுக்கு சாப்பிட வருவேன். மீண்டும் 3 மணிக்கு வேலை துவங்கும். அப்போது அங்கு இருப்பேன். மாலை 6.30 மணி வரை பணி நடைபெறும். அன்றைய ஊதியத்தை பணியாளர்களுக்கு வழங்கி விட்டு வீட்டுக்கு வருவேன். அன்றைய கணக்கை எழுதுவேன். குளித்து விட்டு இரவு உணவு அருந்துவேன். 

ஊரில் 1000 சதுர அடி கொண்ட வீடு ஒன்றை பல ஆண்டுகளுக்கு முன் கட்டினேன். 10 ஆண்டுகள் இருக்கும். அந்த வீட்டின் உரிமையாளர் 5 ஆண்டுகளுக்கு முன் அந்த வீட்டை விற்று விட்டு அந்த பணத்தையும் மேலதிகமாகத் தன் கையில் இருந்த பணத்தையும் சேர்த்து சென்னையில் ஒரு வீடு வாங்கி விட்டார். அதன் பின்னர் அந்த வீட்டுக்கு உரிமையாளர் இன்னொருவர் ஆகி விட்டார். அவர் வீட்டை வாடகைக்கு விட்டார். 

சமீபத்தில் எனக்கு ஒருவர் அறிமுகமானார். எனது நண்பருக்கு நண்பர் அவர். அவரை அவருடைய வீட்டில் சந்திக்க விரும்பி ஃபோன் செய்தேன். அவர் வீட்டை அடையாளம் சொன்னார். கட்டுமானத்துக்காக பணி புரிந்த இடம் என்பதால் என்னால் எளிதில் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனாலும் அதே வீடாக இருக்கும் என நான் எண்ணியிருக்கவில்லை. பக்கத்து வீடு அல்லது இரண்டு வீடு தள்ளியிருக்கும் வீடு என்று தான் நினைத்தேன். சென்று பார்த்தால் அதே வீடு. 

அந்த கட்டுமானம் நான் செய்தது என்று அவரிடம் சொல்லவில்லை. 

பல விஷயங்கள் பேசிக் கொண்டிருந்தோம். 

‘’சார் ! இந்த வீடு ரொம்ப வசதியானது சார்’’ நண்பர் சொன்னார். 

‘’அப்படியா’’ என்றேன். 

’’நல்ல வெளிச்சம். நல்ல காத்தோட்டம். நிறைய ஜன்னல். மழை பெய்தா ஓப்பன் டெரஸ்ல ஒரு துளி தண்ணி கூட தேங்காது சார். முழுக்க வடிஞ்சிடும். வீடு உள்ள பாக்கறீங்களா?’’

‘’பரவாயில்லை இருக்கட்டும்’’

’’ஆக்சுவலா சார், பழைய ஓனர் வீட்டை விக்கப் போறன்னு சொன்னதும் வீட்டைக் காலி பண்ணிட்டு பக்கத்து தெருவுல இன்னொரு வீட்டுக்குப் போய்ட்டோம். வீட்டை வாங்கின புது ஓனர் ‘’டூ லெட்’’ போர்டு வச்சாரு. திரும்ப நாங்களே வாடகைக்கு வந்துட்டோம். இந்த வீட்டை விட்டு போக மனசில்லை சார். அவ்வளவு வசதியான வீடு’’

Wednesday, 3 November 2021

ஒளி நிறைக


 

பெயர் தெரியாத பெட்டி

நகரம் 
ஒன்றின் வீதியில்
வீதிக்கு நடுவில்
ஒரு கனசெவ்வகப் பெட்டியொன்று
இணைக்கப்பட்ட திரியில் 
நெருப்பிடப்பட்டிருந்தது
பண்டிகை அவசரம்
வழிப்போக்கர்கள்
நின்றனர் சில கணம்
கழுத்திலும் கழுத்துச் சரடிலும்
மஞ்சள் மிகுந்திருந்த
இளம்பெண்
இருசக்கர வாகனத்தில்
கணவன் தோள்களைப் பற்றிக் கொண்டாள்
இன்னொரு வாகனத்தில்
எரிதிரவ டேங்க் மேல் 
அமர்ந்திருந்த
சிறு குழந்தை
தந்தையிடம்
இது வெடிக்குமா
என்று கேட்டான்
நடந்து செல்பவர்களும்
2 வீலர்களும்
4 வீலர்களும் 
இருபுறமும் காத்து நின்றனர்
சிறு சீற்றத்துடன்
தீ
பெட்டியினுள் புகுந்தது
செந்நிறத்தில்
பசுமையாய்
நீலமாய்
மஞ்சளாய்
தீச்சுடர் பூக்கள்
வானில் எழுந்தன
காற்றில் பூத்தன
சுடர் மலர்கள் நின்று விடும் 
என எல்லாரும் எதிர்பார்த்த 
நேரத்தையும் தாண்டி
அவை மலர்ந்து கொண்டே இருந்தன
சுடர் பூக்கள் ஓய்ந்த பின்னும்
யாரும் பயணிக்கத் துவங்கவில்லை
வானத்தைப் பார்த்த வண்ணமே இருந்தனர்
அந்த இளம்பெண் கணவனிடம் 
தன் காதலைச் சொல்ல விரும்பினாள்
சொல்லாமல்
அவன் முதுகில் சாய்ந்து கொண்டாள்
குழந்தை தந்தையிடம்
‘’சூப்பரா இருந்துச்சுப்பா’’ என்றான்
காத்திருந்த யாருக்கும்
அதன் 
பெயர் தெரியவில்லை
பெயர் தெரியாத 
அந்த பெட்டி
அளித்த 
பிரியங்களுடனும்
மகிழ்ச்சியுடனும்
நம்பிக்கையுடனும்
அனைவரும்
கடந்து சென்றனர்
 

வீடும் வாழ்வும் ( மறுபிரசுரம்)

இன்று காலை எனது நண்பரான கட்டிடக்கலை வடிவமைப்பாளரிடம் (ஆர்க்கிடெக்ட்)  பேசிக் கொண்டிருந்தேன். அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்றவர். அதை நான் அறிவேன். அடுத்த வாரம் அவர் பயின்ற அண்ணா பல்கலை.யில் பி. ஆர்க் பயிலும் மாணவர்களுக்கு ஒரு உரை அளிக்கப் போகிறேன் என்றார். சட்டென எனக்கு ஒரு பொறி தட்டியது.  கட்டிடக்கலையில் உயர் பட்டம் பெற்றீர்களா என்றேன். உயர் பட்டம் பெற சேர்ந்தேன். பாதியில் படிப்பை நிறுத்தி விட்டேன் என்றார். உங்கள் தகுதிகளில் அது மிக முக்கியமானது என்றேன். இருவரும் சிரித்தோம். அவரது துறை சார்ந்தும் பொது விஷயங்கள் குறித்தும் பரந்த அறிவு கொண்டர். நல்ல அறிஞர். பல பெரிய கட்டிடங்களை வடிவமைத்தவர். உலகின் பல நாடுகளுக்குப் பயணம் செய்தவர். வருடம் ஒருமுறை இமயத்தில் மலையேற்றம் செய்வார். இலக்கிய வாசகர். எனக்கு கிடைத்துள்ள நண்பர்களால் நான் பெரும் நிறைவு கொள்கிறேன். இது ஓர் அரிய பேறு.

எனது கட்டுமானங்களை வடிவமைக்கும் ஆர்க்கிடெக்ட் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். அவர் கட்டிடங்களும் கட்டிக் கொடுக்கிறார். ரியல் எஸ்டேட்டும் செய்கிறார். இடம் வாங்கி அதில் பெரிய வீடுகளைக் கட்டி விற்பனை செய்கிறார். தொழிலில் நுணுக்கமும் நேர்த்தியும் கொண்டவர். அவர் எனது நண்பரின் நண்பர். அந்த முறையில் நான் அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். என்னுடைய மனையின் வரைபடங்களை அனுப்புவேன். அவருக்கு அது கிடைத்த இரண்டாவது தினம் என்னிடம் கட்டிட பிளான்கள் வந்து சேர்ந்திருக்கும். மின்னல் போல அதிரடியாக வேலை செய்யக் கூடியவர். நாங்கள் பல வருடங்கள் நேரில் பார்த்துக் கொண்டது கிடையாது. ஃபோனில்தான் பேசியிருக்கிறோம். எங்களுக்குள் பரஸ்பர மரியாதையும் நட்பும் இருந்தது. அவர் உருவம் குறித்து என்னிடம் ஒரு மனச் சித்திரம் இருந்தது. பல வருடங்களுக்குப் பின் நாங்கள் சந்தித்துக் கொண்ட போது அவர் குறித்து என்னிடம் இருந்த மனச்சித்திரம் குறித்து சொல்லி சிரித்துக் கொண்டோம். இப்போதும் அவரைப் பற்றி எண்ணும் போது அந்த இரு சித்திரங்களும் மனதில் எழும். கட்டிட பிளான்களில் சிறந்த அறிவு கொண்டவர். அவர் கணிணித் திரையில் அவர் உருவாக்கும் கோடுகள் சில நிமிடங்களில் அற்புதமான மாய உலகங்களை உருவாக்கி விடும். மிகச் சிறு இடத்தைக் கூட நம்ப முடியாத வாய்ப்புகள் கொண்டதாக ஆக்கி விடுவார். 

நான் கட்டிடத் தொழிலுக்கு வந்த போது - பொறியியல் பட்டம் பெற்ற இரண்டாவது ஆண்டில் ( அதற்கு முன் ஒரு வருடம் தமிழ்நாட்டையும் இந்திய மாநிலங்களையும் ரயிலில் ஒரு சுற்று சுற்றி வந்தேன்)- சென்னையில் மிக அதிக அளவில் அபார்ட்மெண்ட்கள் கட்டப்பட்டுக் கொண்டிருந்தன. அதனை அடிக்கடி பார்க்கும் போது எனக்கும் ஒரு அபார்ட்மெண்ட் கட்டி விற்பனை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதற்கான ஒரு பொருத்தமான இடத்தை வாங்கினேன். பின்னர் சில பெரிய கட்டிடங்களைக் கட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தேன்.

வீடுகள் கட்டிக் கொடுத்தவன் என்ற முறையில் எனக்கு சில அவதானங்கள் உண்டு. வீடு பௌதிகமான ஓர் இருப்பு மட்டும் அல்ல. அதில் வாழும் - வசிக்கும் மனிதர்களின் சுபாவமும் மன அமைப்புமே வீட்டை உயிர்ப்புடன் இருக்கச் செய்யும். ஓர் இடத்தை எப்படிப் பயன்படுத்திக் கொள்வது  என்பது பயன்படுத்துபவர்களின் எண்ணங்களைப் பொறுத்தது. மயிலாடுதுறை போன்ற ஊர்களில் நான் கட்டிடம் கட்ட வந்த போது ஒரு மனை என்பது 40 அடி அகலமும் 60 அடி நீளமும் கொண்டது. அதில் கீழ்த்தளத்தில் வெளிச்சம் நிறைந்ததாக காற்றோட்டத்துடன் கூடியதாக 1100லிருந்து 1200 சதுர அடி வரையிலான வீட்டைக் கட்ட முடியும். அதே பரப்புடன் அப்படியே முதல் தளமும் இரண்டாவது தளமும் எழுப்பலாம். இடம் இருக்கிறதே என்று அடைத்துக் கட்டினால் வெளிச்சமும் காற்றோட்டமும் இல்லாமல் ஆகும்.

நான் வாங்கியிருந்த வீட்டு மனை இரண்டு கிரவுண்டு அளவுள்ளது. ஆர்க்கிடெக்ட்டிடம் வீடுகள் பெரியவையாக வாங்குபவர்களுக்கு எல்லா விதத்திலும் வசதி மிக்கதாக இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டேன். அவர் அருமையான ஒரு பிளானையும் எளிவேஷனையும் அளித்தார். அவர் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் என்பதால் அவரது வடிவமைப்புகள் கேரள பாணியைச் சேர்ந்தவை. வான் நோக்கி சிறகு விரிக்கும் பறவையைப் போன்ற எளிவேஷன் கொண்டது நான் கட்டி விற்பனை செய்த அபார்ட்மெண்ட். ஆனால் அந்த வடிவம் கட்டிடக்கலை அறிந்தவர்களுக்கு மட்டுமே நுட்பமாக புலப்படும். மற்றவர்களுக்கு அழகானது என்ற எண்ணத்தை உண்டாக்கும்.

அபார்ட்மெண்ட் வாங்கியவர்களில் ஒருவர் அமெரிக்காவில் வசிப்பவர். அவர் பிறந்தது வளர்ந்தது அனைத்துமே சென்னையில். அவரது சொந்த ஊர் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள ஒரு கிராமம். அங்கே அவரது குலதெய்வம் கோயில் உள்ளது.  ஆண்டுக்கு ஒருமுறை மனைவி குழந்தையுடன் இங்கே வருவார். சாமி கும்பிடுவார். அப்போது ஒரு வாரம் வரை தங்கியிருந்து பக்கத்தில் உள்ள சிவாலயங்களுக்கும் விஷ்ணு கோவில்களுக்கும் சென்று வருவார். மாதம் ஒரு முறை அவரது பெற்றோர்களும் உறவினர்களும் வந்து தங்கி விட்டுச் செல்வர். அவர்கள் எங்கு சென்றாலும் என்னையும் உடன் அழைத்துச் செல்வார்கள். அவர் சென்னையில் தனது சொந்த இடத்தில் ஒரு அபார்ட்மெண்ட் கட்டி விற்பனை செய்தவர். சென்னையில் தான் கட்டிய அபார்ட்மெண்டை விட இந்த அபார்ட்மெண்ட் சிறப்பாக இருக்கிறது என்று சொல்வார். 

மயிலாடுதுறையின் மிக முக்கியமான தொழில் அதிபர் ஒருவர் அபார்ட்மெண்ட்வாசி. வீடு கட்டுவதின் எந்த சிரமமும் தனக்கு அனுபவமாகாமலே தான் ஒரு சிறந்த இல்லத்தை அடைந்திருப்பதாக எல்லாரிடமும் கூறுவார். 

வீடு பவித்ரமானது. புனிதமானது. அந்த உணர்வு எல்லா மனிதர்களிடமும் இருக்குமாயின் இந்த உலகமும் வாழ்வும் கணந்தோறும் அற்புதமானதாக இருக்கும்.

 

உள்ளுணர்வு

ஊரில் ஒரு கட்டுமானப் பணி நடந்து கொண்டிருந்தது. ஒரு இல்லம். 1000 சதுர அடி கொண்டது. அதன் கிழக்குப்  பக்கத்தில் ஒரு காலிமனை உண்டு. வீட்டுக்கும் காலிமனைக்கும் இடையே ஒரு காம்பவுண்டு சுவர் எழுப்ப வேண்டும். வீட்டில் பூச்சு வேலை நடந்து கொண்டிருந்தது. எல்லா பணியாளர்களும் அந்த பணியில் அதிக எண்ணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். கட்டுமானத்தைப் பார்வையிட எனது தந்தை பணியிடத்துக்கு வந்தார். பணிகளைப் பார்வையிட்டார். 

புறப்படும் போது என்னை அழைத்தார். ‘’பிரபு! பூச்சு வேலை நடக்கற படி நடக்கட்டும். ஈஸ்டர்ன் சைடு காம்பவுண்ட் வால் கிரேடு பீம் கான்கிரீட்டுக்கு ஏற்பாடு செய்’’ . குறிப்பைக் கொடுத்து விட்டு சென்று விட்டார். 

நான் தொழிலாளர்களிடம் சொன்னேன். ‘’சார் ! பூச்சு வேலை முடியட்டும். பாத்துக்கலாம். ‘’ என்றனர். 

இரண்டு நாளாக கட்டிடத்தினுள் பூச்சு வேலையை மட்டுமே செய்து கொண்டிருந்தனர். 

மூன்றாவது நாள் நான் மீண்டும் நினைவுபடுத்தினேன். அதே பதில். 

இன்னும் இரண்டு நாட்கள் ஆனது. முன்னேற்றம் எதுவும் இல்லை. அன்று மாலை ஊதியம் பட்டுவாடா செய்யும் போது ‘’ நாளைக்கு கம்பி ஃபிட்டரை வரச் சொல்லி ஃபோன்ல சொல்லிட்டன். அவங்க அரை நாள்ல கம்பி கட்டி சைடு அடச்சிடுவாங்க. நாளைக்கு மதியம் மூணு மணிக்கு காம்பவுண்டு சுவர் கிரேடு பீம் கான்கிரீட் போட்டுடலாம்’’ என்றேன். எல்லா ஏற்பாடும் எல்லா திட்டமிடலும் செய்து விஷயத்தைச் சொன்னது தொழிலாளர்களுக்கு வியப்பு அளித்தது. ‘’ அப்பா என்கிட்ட தான் சொல்லிட்டு போயிருக்காங்க. செய்யலைன்னா அத என்னோட மிஸ்டேக்கா நினைப்பாங்க. அவங்ககிட்ட காரணம் சொல்லிட்டு இருக்க முடியாது. ‘’ 

மறுநாள் காலை கம்பி ஃபிட்டர் வந்து வேலை செய்தார். மாலை 3 மணிக்கு கான்கிரீட் போடத் துவங்கி 6 மணிக்கு நிறைவு செய்தோம். 

மறுநாள் காலை கட்டிடத்தினுள் நடக்கும் பூச்சு வேலை நடந்தது. 

காலை 11 மணி இருக்கும். வானம் இருட்டத் துவங்கியது. மூன்று மணி நேரம் கனமழை பெய்தது. பக்கத்தில் உள்ள காலிமனையில் ஒரு அடி ஆழத்துக்கு தண்ணீர் தேங்கி நின்றது. 

எல்லாரும் ஆச்சர்யமாகப் பார்த்தோம். முதல் நாள் கான்கிரீட் போட்டிருக்காவிட்டால் அந்த பணியை காலிமனையின் தண்ணீர் முழுமையாக வடிந்த பின் தான் செய்திருக்க முடியும். அது முற்றிலும் வடிய இரண்டு மாதங்கள் ஆகியிருக்கும். இப்போது கிரேடு பீம் எழுப்பி விட்டதால் அதன் மீது காம்பவுண்டு சுவரை மூன்று நாளில் எழுப்பி பூசி விட்டோம். 

தந்தைக்கு அவரது உள்ளுணர்வு வழிகாட்டியிருக்கிறது என்று பேசிக் கொண்டோம்.