Sunday, 29 September 2024

விருந்தினர்கள்

 இராமேஸ்வரத்தில் எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவரது தொழில் மளிகை வணிகம். எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர். அவரைப் பற்றி கூறவேண்டுமெனில் அவரது உபசரிப்பு குறித்து கூறினால் அவரைப் பற்றி புரிந்து கொள்ள முடியும். ஒருமுறை ஒரு வாடகை பேருந்தில் எனது நண்பர்கள் குடும்பத்தினர் 60 பேர் ராமேஸ்வரம் சென்றிருந்தனர். நான் அலைபேசியில் நண்பர்கள் வருகிறார்கள் என தகவல் தெரிவித்தேன். சாதாரண தகவலாகவே சொன்னேன். இராமேஸ்வரம் நண்பர் பேருந்தில் வரும் என் நண்பர்களின் அலைபேசி எண்ணை வாங்கி அவர்களிடம் பேசி தனக்குச் சொந்தமான ஒரு கட்டிடத்தில் 60 பேரையும் தங்க வைத்தார். அவர்கள் அனைவருக்கும் மோர் தயாரித்து அளித்திருக்கிறார். இன்று வரை அந்த நண்பர்கள் இராமேஸ்வரம் நண்பரின் உபசரிப்பு குறித்து சிலாகித்துக் கூறுவார்கள். அவரை விடவும் அவரது குடும்ப உறுப்பினர்கள் உபசரிப்பில் மேலும் சிறந்தவர்கள். 

இராமேஸ்வரம் நண்பரும் அவரது குடும்பத்தினரும் வெள்ளியன்று மாலை ஊருக்கு வந்திருந்தனர். அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தது மகிழ்ச்சியை அளித்தது. 

Friday, 27 September 2024

டவுன் பஸ் பயணம்

 இன்று காலை வண்டியைக் கிளப்ப யத்தனித்தேன். நேற்று இரவு திருக்கோவிலூரிலிருந்து திரும்பியதும் வண்டியை துடைத்து வைத்தேன். அது ஒரு பழக்கம். நாள் முழுதும் அளித்த ஒத்துழைப்புக்கு நன்றி பாராட்டும் செயல். தினமும் செய்ய வேண்டும் என்று நினைப்பேன். ஊரில் இருக்கும் போது காலை புறப்படும் முன் வண்டியைத் துடைப்பேன். நீண்ட தூரப் பயணம் சென்று வந்தால் அன்று இரவே துடைக்க வேண்டும் என நினைப்பேன். இன்று காலை வண்டியைக் கிளப்ப முயல்கையில் வண்டி பஞ்சர் என அறிந்தேன். 

தந்தையின் வாகனகத்தை எடுத்துக் கொண்டு திருக்கோவிலூர் தபோவனம் குறித்து கூறிய நண்பரைச் சந்திக்கச் சென்றேன். தபோவனத்தில் அவருக்காக ஒரு நூல் வாங்கியிருந்தேன். அதனை அவரிடம் அளித்தேன். அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி. 

நேற்று தபோவனத்தில் இருந்ததால் இன்றும் ஏதேனும் ஒரு ஞானியின் சன்னிதியில் சில நிமிடங்களாவது இருக்க வேண்டும் என்று தோன்றியது. 

கோவிந்தபுரம் செல்வது என முடிவெடுத்தேன். ஒரு பேருந்தில் ஏறினேன். அந்த பேருந்து ஆடுதுறையில் நிற்கும். கோவிந்தபுரத்தில் நிற்காது. ஆடுதுறை சென்று இறங்கினேன். பைக்கில் சென்ற ஒருவரிடம் லிஃப்ட் கேட்டு கோவிந்தபுரத்தில் இறங்கிக் கொண்டேன். 

கோவிந்தபுரத்தில் நாட்டில் இருக்கும் சகல விதமான பஜன் பததிகளும் நிகழ வேண்டும் என்ற முனைப்புடன் பல விதமான பஜன் மண்டலிகள் உள்ளன. ஆலயத்தின் பின்புறம் காவிரியின் கிளைநதியான வீர சோழன் ஓடுகிறது. அதில் இருந்த சிறு படித்துறையில் கை கால் முகம் கழுவிக் கொண்டேன். சிறு மீன்கள் வந்து காலைக் கொத்திக் கொண்டிருந்தன. 

அதிஷ்டானம் அருகே விசிறி சாமியார் ‘’யோகி ராம்சுரத்குமார்’’ ஆலயம் ஒன்று அமைந்துள்ளது. அதில் சிறிது நேரம் அமர்ந்திருந்தேன். சுவாமியின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களை சித்திரமாகத் தீட்டியிருந்தனர்.

கோவிந்தபுரத்தில் ஒரு லிஃப்ட் கிடைத்தது. நரசிங்கன்பேட்டை வரை வந்தேன். அங்கிருந்து இன்னொரு லிஃப்ட். குத்தாலம் வரை வந்தேன். பின்னர் ஒரு டவுன் பஸ் பிடித்து ஊர் வந்து சேர்ந்தேன். 

சில அவதானங்கள்

 நீண்ட தூரம் பைக்கில் பயணிக்கும் போது முதல் மூன்று நாட்கள் அடிப்படையானவை. அந்த மூன்று நாட்களில் உடலும் மனமும் தன்னைப் பயணத்துக்கு ஏற்றார் போல் தகவமைத்துக் கொள்ளும். 

இப்போது இரு சக்கர வாகனம் பி.எஸ் 6 என்னும் வகையில் அமைக்கப்படுகின்றன. எனக்கு முன்னர் இருந்த 100சி.சி வகை மேலும் அணுக்கமாக இருப்பதாக உணர்ந்தேன். 

நேற்று மாலைக்கு மேல் லேசாக தோள்பட்டையில் வலி இருப்பதாக உணர்ந்தேன். 

Thursday, 26 September 2024

புதிய பிரதேசங்கள்

 சமீபத்தில் நான் அடிக்கடி சந்திக்கும் நண்பரின் வீட்டில் உரையாடிக் கொண்டிருந்த போது திருக்கோவிலூர் ஞானானந்த தபோவனம் குறித்து நிறைய விஷயங்களை எங்கள் உரையாடலில் பல நாட்களாக கூறிக் கொண்டிருந்தார். அங்கே சென்று வர வேண்டும் என்ற எண்ணம் தோன்றிக் கொண்டேயிருந்தது. கடந்த இரண்டு வாரமாக உடல்நலக் குறைவால் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்தேன். இரு சக்கர வாகனத்தில் நீண்ட தூரம் பயணித்தால் உடலும் மனமும் புத்துணர்வு பெறும் என எண்ணினேன். 

இன்று காலை 5.30 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி பைக்கில் திருக்கோவிலூர் செல்லலாம் எனத் திட்டமிட்டிருந்தேன். என்னுடைய பைக் பயணத்துடன் ஒன்றிப் பிணைந்து விட்ட விஷயம் என்பது காலை 6 மணிக்கு பயணத்தைத் துவக்க வேண்டும் என்பது. அதே போல் மாலை 6 மணிக்கு தங்குமிடத்துக்கு வந்து சேர்ந்து விட வேண்டும் என்பது. இந்த இரண்டு விதிகளும் எப்போதும் என்னை ஆள்கின்றன. நேற்று இரவு காலை 4.30க்கு அலாரம் வைத்து விட்டு படுத்தேன். அலாரம் அடித்தது. அணைத்து விட்டு உறங்கி விட்டேன். எழுந்த போது மணி 6. அதன் பின் கிளம்பினேன். 6.45க்கு வீட்டிலிருந்து புறப்பட்டேன். அதில் ஒரு நன்மை இருக்கிறது. 5.30க்கு கிளம்பினால் அனைவரும் உறங்கிக் கொண்டிருப்பார்கள். கதவைத் திறப்பது வெளி வாயில் கதவைத் திறப்பது பைக்கை ஸ்டார்ட் செய்வது ஆகிய ஒலிகள் அனைவருக்கும் கேட்கும். எல்லாரும் எழுந்து நடமாட்டம் இருக்கும் போது கிளம்பினால் தனிக் கவனம் இருக்காது. இந்த விஷயம் நேற்று இரவிலிருந்து மனதில் இருந்திருக்கிறது. அதனால் தான் அலாரத்தை நிறுத்தி விட்டு தூங்கி விட்டேன். இந்த காலை 6 மணி - மாலை 6 மணி விதி இந்தியப் பயணத்துக்குத்தான் என்றாலும் எந்த பயணம் செய்தாலும் அதைப் பின்பற்ற வேண்டும் என என் மனம் தவிக்கிறது. நான் கிளம்பும் போது வானம் மேகமூட்டமாக இருந்தது. எனவே காலை 7 மணி காலை 6 மணி போலவே இருந்தது. 

ஊரிலிருந்து திருக்கோவிலூர் 150 கி.மீ. பைக்கில் செல்ல 4 மணி நேரம் ஆகலாம். நேற்று இரவே அலைபேசியை ‘’சுவிட்ச் ஆஃப்’’ செய்து வைத்து விட்டேன். பைக் பயணத்தில் அது ஒரு முக்கிய விஷயம் என்று நான் எண்ணுவேன். பைக் பயணம் செல்லும் போது அலைபேசி இல்லாமல் இருப்பது உகந்தது என்பது எனது எண்ணம். 

இப்போது வைத்தீஸ்வரன் கோவில் ஊருக்கு புறவழிச் சாலை வந்து விட்டது. அந்த புறவழிச் சாலை சீர்காழி புறவழிச் சாலையுடன் சென்று இணையும். ஆனைக்காரன் சத்திரம் என்னும் கொள்ளிடத்தில் இருக்கும் பாலம் இருக்கவே இப்போது இன்னொரு பாலம் புதிதாகக் கட்டப்பட்டுள்ளது. அது சிதம்பரம் புறவழிச் சாலையுடன் இணைய கிட்டத்தட்ட கீரப்பாளையம் வரை கொண்டு சேர்த்து விடுகிறது. வைத்தீஸ்வரன் கோவில் புறவழிச் சாலையில் தொடங்கி பிடி பிடி என்று கீரப்பாளையம் வந்து சேர்ந்தேன். புவனகிரி ஸ்ரீராகவேந்திர சுவாமி ஆலயத்துக்கு செல்ல விரும்பினேன். இருப்பினும் புவனகிரியைக் கடந்து சென்று விட்டேன். சேத்தியாதோப்பு வடலூர் வழியாக பண்ணுருட்டி. அங்கிருந்து மடப்பட்டு வழியாக திருக்கோவிலூர் 45 கி.மீ. எனக்கு அந்த பாதை புதிய பாதை. அதில் பயணித்த நினைவில்லை. புதிய பிரதேசங்களைப் பார்த்தவாறு திருக்கோவிலூர் வந்து சேர்ந்தேன். தோராயமாக 10.45 நான் வந்து சேர்ந்த போது இருக்கலாம். 

தபோவன அதிஷ்டானத்தில் இரண்டு மணி நேரம் இருந்தேன். அதிஷ்டானத்தில் அன்ன தானம் செய்தார்கள். அதனை உண்டேன். உணவில் பாயசம் இருந்தது. கேரளத்தில் செய்யப்படும் ‘’சக்க பிரதமன்’’ ( பலாப்பழ பாயசம்) போன்ற பாயசம் இன்றைய உணவில் இருந்தது. 

தபோவன அலுவலகத்தில் ஞானானந்தர் குறித்த இரண்டு நூல்களை வாங்கினேன். குறைந்தபட்சம் இரண்டு நாட்களாவது முழுமையாக தங்கியிருக்கும் விதமாக தபோவனத்துக்கு மீண்டும் வர வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஸ்வாமியை நமஸ்கரித்து புறப்பட்டேன். 

திருக்கோவிலூர் மணம்பூண்டியில் ரகுராய தீர்த்தரின் அதிஷ்டானம் உள்ளது. அங்கு சென்று வணங்கினேன்.

பண்ணுருட்டி பாதை சாலை அமைத்துக் கொண்டு இருப்பதால் வேறு பாதையில் செல்லலாமா என எண்ணினேன். திருக்கோவிலூர் உளுந்தூர்பேட்டை சாலை நன்றாக இருக்கிறது என்று சொன்னார்கள். அதில் சென்றேன். எலவானசூர் என்ற ஊரில் பைக் டயர் பஞ்சர் ஆகி விட்டது. ஒரு டாடா ஏஸ் டிரைவர் தன்னிடம் இருந்த ‘’டூல்ஸ்’’ மூலம் பைக் டயரை கழட்டிக் கொடுத்தார். அந்த டிரைவரின் நண்பர் எனக்கு லிஃப்ட் கொடுத்து மெக்கானிக் கடையில் டிராப் செய்தார். டயரை பஞ்சர் ஒட்டியதும் மெக்கானிக் தனது நண்பர் ஒருவரிடம் ‘’டூல்ஸ்’’ கொடுத்து டயரை பொருத்திக் கொடுக்க சொன்னார். அவரும் அவ்வாறே செய்தார். அவர் எனக்கு ஒரு புதிய வழியைக் கூறினார். அதாவது எலவானசூரிலிருந்து உளுந்தூர்பேட்டை உள்ளே செல்லாமல் விருத்தாசலம் செல்ல வழியுள்ளது ; அதில் சென்றால் பயண தூரம் 10 கி.மீ குறையும் என்றார். அவர் சொன்ன படியே சென்றேன். 

பின்னர் விருத்தாசலத்திலிருந்து வடலூர் செல்லாமல் கம்மாபுரம் வழியாக சேத்தியாதோப்பு சென்றடைந்தேன். அங்கிருந்து சிதம்பரம். வழியில் புவனகிரியில் ஸ்ரீராகவேந்திர சுவாமி ஆலயம் சென்று வணங்கினேன். பின்னர் புறவழிச்சாலைகளின் வழியே மயிலாடுதுறை. வீடடைந்த போது நேரம் மாலை 6.45.

Monday, 23 September 2024

அலோபதியின் எல்லைகள்

 நான் அலோபதி மருத்துவத்துக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவன் அல்ல. இந்த நூற்றாண்டிலும் கடந்த நூற்றாண்டிலும் அலோபதி மருத்துவம் கோடிக்கணக்கான மக்களின் உயிரை பல்வேறு விதங்களில் காத்துள்ளது என்னும் வரலாற்று உண்மையை அறிந்தவன். எலும்பு முறிவு, பல் மருத்துவம், அறுவை சிகிச்சைகள் ஆகியவற்றில் அலோபதி மருத்துவமே பிரதான இடத்தைப் பிடித்துள்ளது. அந்த துறைகளில் அலோபதி அதனை சாதித்துள்ளது என்பது உண்மை. இன்று மருத்துவம் என்றாலே அலோபதி மருத்துவம் என்னும் நிலையில் வியாபித்து இருக்கிறது. அலோபதி மருத்துவத்துக்கும் பல எல்லைகள் இருக்கின்றன. 

கடந்த மூன்று வாரங்களாக எனக்கு வறட்டு இருமல் இருந்தது. இருமலில் சளி இல்லை. சளி உறைந்து இருந்திருக்கலாம். 

எனக்கு சில முக்கியமான லௌகிகப் பணிகள் இருந்தன. எனவே ஒரு எம்.டி மருத்துவரைக் காணச் சென்றேன். அவர் எனது ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு ஆகியவற்றைச் சோதித்தார். எல்லாம் இயல்பாக இருந்தன. எனது உடல் எடை குறைந்திருக்கிறதா என்னும் ஐயம் அவருக்கு ஏற்பட்டது. ஒப்பீட்டளவில் கடந்த சில மாதங்களில் எனது உடல் எடை குறைந்திருக்கிறது. பல காரணங்களால், உட்கொள்ளும் உணவின் அளவு பாதிக்குப் பாதியாகி விட்டது. கடந்த மூன்று மாதங்களாக தேனீர் , பால் ஆகியவற்றை முற்றிலும் தவிர்த்து விட்டேன். அதனால் உடல் எடை குறைந்திருக்கலாம். எனது உடலை சோதித்து விட்டு ஒரு எக்ஸ்-ரே எடுக்குமாறு கூறினார். மேலும் ஒரு ரத்தப் பரிசோதனையும் செய்து வருமாறு கூறினார்.

எக்ஸ்=ரே எடுத்துக் கொண்டு சென்றேன். இரத்தப் பரிசோதனை அறிக்கையும் கொண்டு சென்றேன். எனது இரத்தத்தின்  வேதிக் கூறுகள் எண்ணிக்கை இயல்பாகவே இருந்தது. அவர் என்னை நுரையீரல் தொடர்பான மருத்துவர் ஒருவரைச் சென்று சந்திக்கச் சொன்னார். அவரைச் சென்று சந்தித்தேன். அவர் என்னிடம் ஐந்து நாட்களுக்கான மாத்திரை எழுதிக் கொடுத்து ஒரு சி.டி ஸ்கேன் எடுத்துக் கொண்டு வருமாறு கூறினார். எனக்கு ஒரே குழப்பமாகி விட்டது. ஐந்து நாட்கள் அளிக்கப்பட்ட மாத்திரைகளை உட்கொண்டேன். இருமல் 80 சதவீதம் குறைந்து விட்டது. ஐந்து நாட்களுக்குப் பின்னர் சி.டி ஸ்கேன் எடுத்துக் கொண்டு நுரையீரல் மருத்துவரைச் சந்தித்தேன். ஸ்கேன் ரிப்போர்ட் இயல்பாக இருக்கிறது எனக் கூறி 15 நாட்களுக்கு ஒரு இன்ஹேலர் மருந்தை எடுத்துக் கொள்ளுமாறு கூறினார். வேறு மாத்திரைகள் தேவையில்லை ; 15 நாளில் குணமாகி விடும் என்றார். 

எனது உடல் நலக் குறைவு வறட்டு இருமல். நான் முதலில் சந்தித்த எம்.டி மருத்துவர் எனக்கு ஒரு வாரத்துக்கு இருமல் , சளிக்கான மருந்தைப் பரிந்துரைத்திருக்கலாம். எனது உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததே தவிர மிக மோசமாக இல்லை. எனக்கு நிமோனியா காய்ச்சல் இருக்கக்கூடும் என அவர் எண்ணியிருக்கலாம். நிமோனியாவாக இருப்பின் இரத்தத்தின் வேதி அளவுகளில் தீவிரமான மாற்றங்கள் இருந்திருக்கும். அவ்வாறு இல்லை.  இருப்பினும் அவர் நுரையீரல் நிபுணரிடம் அனுப்பினார். நுரையீரல் நிபுணர் அளித்த மாத்திரைகளால் இருமல் குறைந்தது ; எனினும் அவர் சி.டி ஸ்கேன் எடுத்துக் கொண்டு வருமாறு கூறியிருந்தார். 

எக்ஸ் ரே க்கான செல்வு ரூ.500. சி.டி ஸ்கேன் செலவு ரூ. 3500. 

இந்த ஒரு வாரம் எனது வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டன. அதிகம் வெளியில் செல்லாமல் வீட்டில் ஓய்வில் இருந்தேன். சிறு பதட்டம் இருந்தது. 

வருடத்துக்கு ஒரு முறை எனக்கு இருமல் , சளி வருவதுண்டு. அப்போது அலோபதி மருத்துவர்களிடம் சென்று ஒரு வாரம் மருந்து உட்கொள்வேன். இம்முறை இப்படி நடந்த பின்பு இனி சாதாரண உடல்நலக் குறைவுக்கு அலோபதி மருத்துவர்களிடம் செல்ல வேண்டாம் என முடிவெடுத்துள்ளேன். 

ஈசன் இணையடி நிழல்

 இன்று ஒரு அஞ்சலிக் கட்டுரையை வாசிக்க நேர்ந்தது. எல்லா மனிதர்களும் பாச பந்தங்களால் பிணைக்கப்பட்டவர்களே. கோடியில் ஓரிருவர் விதிவிலக்காக இருக்கலாம். பாச பந்த பிணைப்பு ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு ஒரு விதத்தில் இருக்கிறது. சிலர் மிக லேசாகப் பிணைக்கப்பட்டிருக்கின்றனர். சிலர் மிகச் சிக்கலாக பாச பந்தங்களால் பிணைக்கப்பட்டிருக்கின்றனர். இறப்பு, முதுமை, நோய்மை ஆகியவை நேரடியாகவோ நெருங்கிய உறவினர்களுக்கோ வந்து சேரும் போது வாழ்க்கை மேலும் எடை கொள்கிறது. இவை தவிர , மனிதனுக்கே உரிய அகங்காரச் சிக்கல்கள் இருக்கவே இருக்கின்றன. இறப்பு , முதுமை, நோய்மையை விடவும் வலி மிக்கது அகங்காரச் சிக்கல். வாழ்நாள் முழுவதும் உடன் வருவது. 

தன் வாழ்நாள் முழுதும் கண்ணுக்குத் தெரியாத மிகப் பெரிய எடை ஒன்றைத் தூக்கிச் சுமந்து கொண்டிருந்த ஒரு பெண் மரணிக்கிறாள். அவள் சுமந்த எடையையும் வாழ்நாளில் தான் எப்போதும் பகிர்ந்து கொள்ளாத வலியையும் சற்றே தூரத்தில் இருந்து கண்ட ஒருவர் அப்பெண்ணுக்கு அஞ்சலிக் கட்டுரையை எழுதியிருக்கிறார். 

ஓர் இலக்கியப் பிரதியை வாசிக்கும் போது வாழ்க்கை தன் முன் பேருரு கொண்டு நிற்பதைக் காணும் இலக்கிய வாசகன் ஒவ்வொரு முறையும் திகைக்கிறான். இன்று அந்த அஞ்சலிக் கட்டுரையை வாசித்த போது அத்தகைய திகைப்பை அடைந்தேன். 

அஞ்சலிக் கட்டுரையின் சொற்கள் மூலம் இறந்து போன பெண் மீண்டும் உயிர் பெற்று உருக் கொண்டு மீண்டும் பந்த பாசங்களில் சிக்கி மரணத்தின் நிழலில் அடைக்கலம் ஆகியிருக்கிறார். இறைவன் திருவடி நிழலில் மட்டும் இனி எப்போதும் அந்த ஜீவன் அமைதி கொள்ளட்டும். 

Thursday, 19 September 2024

மாநில தகவல் ஆணையம் - விசாரணை

 14 மரங்கள் வெட்டப்பட்ட விவகாரத்தின் கோப்பினை முழுமையாக வழங்குமாறு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி கோரியிருந்தோம். முழுக் கோப்பு நமக்கு அளிக்கப்படவில்லை. எனவே தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி மாநில தகவல் ஆணையத்திடம் முழுக் கோப்பினைக் கேட்டு இரண்டாம் மேல்முறையீடு செய்திருந்தோம். அடுத்த வாரத்தில் மாநில தகவல் ஆணையத்தின் முன் நேரில் ஆஜராகுமாறு சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கும் மனுதாரராகிய நமக்கும் மாநில தகவல் ஆணையம் கடிதம் அனுப்பியிருக்கிறது. 

14 மரங்கள் - மாநில தகவல் ஆணையம் ( மறுபிரசுரம்)

  ஊருக்குப் பக்கத்தில் இருக்கும் கிராமத்தில் புராதானமான விஷ்ணு ஆலயத்தின் சன்னிதித் தெருவில் அந்த தெருவில் வசிப்பவர்கள் தங்கள் வீட்டு வாசலில் நட்டு வளர்த்து பராமரித்த பத்து ஆண்டுகளுக்கு மேல் அகவை கொண்ட வேம்பு, மலைவேம்பு, புங்கன் மரங்கள் அந்த ஊரின் ஊராட்சி மன்றத் தலைவரால் 09.07.2021 அன்று வருவாய் கோட்டாட்சியரின் உத்தரவு இல்லாமல் வெட்டப்பட்டன. வெட்டப்பட்ட மரங்களின் பொருள் மதிப்பு மிக அதிகம். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு குற்றம் இழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அந்த கிராமத்தின் பொது மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

வட்டாட்சியர் அலுவலகத்தின் பொது தகவல் அதிகாரியிடம் இந்த சம்பவம் தொடர்பான கோப்பினை முழுமையாக அளிக்குமாறு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி கோரப்பட்டது. பொது தகவல் அதிகாரி எந்த தகவலும் அளிக்கவில்லை. அதனால் வட்டாட்சியர் அலுவலக மேல்முறையீட்டு அலுவலரிடம் மேல்முறையீடு செய்யப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் மேல்முறையீட்டுக்கும் பதில் இல்லை என்பதால் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் இரண்டாம் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு சில நாட்கள் கழித்து வட்டாட்சியர் அலுவலக பொது தகவல் அதிகாரி கோப்பின் சில பகுதிகளை மட்டும் அனுப்பியிருந்தார். அவை நாம் கோரிய முழுமையான தகவல்கள் இல்லை. 

தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் சில நாட்களுக்கு முன் எனக்கு ஒரு தபால் அனுப்பியிருந்தது. அதாவது, மாநில தகவல் ஆணையம் வட்டாட்சியர் அலுவலக பொது தகவல் அதிகாரிக்கு ஒரு கடிதம் அனுப்பி விண்ணப்பதாரர் கோரிய விபரங்களை அளித்து விட்டு விபரம் அளிக்கப்பட்டதை ஆணையத்துக்கு ஒரு மாதக் காலக்கெடுவில் தெரிவிக்குமாறு கோரியிருந்திருக்கிறது. அந்த காலக்கெடுவைத் தெரிவித்து அதற்குள் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து எந்த தபாலும் வரவில்லை என்றாலோ அல்லது முழுமையான விபரங்கள் அளிக்கப்படாமல் இருந்தாலோ மாநில தகவல் ஆணையத்துக்கு விபரம் தெரிவிக்குமாறு அந்த தபாலில் கூறப்பட்டிருந்தது. வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து மாநில தகவல் ஆணையத்துக்கு எந்த தபாலும் அனுப்பப்படவில்லை. நமக்கும் எந்த தபாலும் வரவில்லை.  

மாநில தகவல் ஆணையம் என்பது நீதிமன்றத்துக்கு சமானமான அதிகாரம் கொண்ட அமைப்பு. அந்த அமைப்பின் அறிவுறுத்தலின் படி கூட வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் நடக்க மறுக்கிறார்கள் என்றால் அதன் அர்த்தம் என்ன என்பதை எவரும் யூகித்து விட முடியும். அந்த கோப்பு முழுமையாக வழங்கப்பட்டால் வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகளுக்கு அந்த கோப்பின் மூலம் பலவிதமான அசௌகர்யங்கள் ஏற்படும். அந்த விஷயத்தின் உண்மை முழுமையாக வெளிவரும். எனவே அதனை தவிர்க்கப் பார்க்கிறார்கள். 

மாநில தகவல் ஆணையம் தெரிவித்திருந்தவாறு ஒரு கடிதத்தை ஆணையத்துக்கு அனுப்பி விட்டேன். இனி ஆணையம் இதனை விசாரணை செய்யும். அந்த விசாரணை மூலம் உண்மைகள் வெளிவரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. 

14 மரங்கள் - தொடர் பிழைகள் ( மறுபிரசுரம்)

 14 மரங்கள் தொடர்பாக 12.07.2021 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் அளித்த போது மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தை மிகவும் கவனத்துக்குரிய ஒன்றாகக் கருதி செயல்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.  அன்றைய தேதியில் மரங்களை வெட்டிய குற்றம் செய்தது ஒரு நபர். அந்த ஊரின் ஊராட்சி மன்றத் தலைவர். கள்ளத்தனமாக மரம் வெட்டுதல், அதிகார துஷ்பிரயோகம், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் இந்த விஷயம் வருவதால் மாவட்ட நிர்வாகம் இதனைக் கடுமையாக எடுத்துக் கொள்ளும் என்று எனக்குத் தோன்றியது. 

இந்த விஷயத்தில் என்னென்ன நிகழ்கின்றன என்பதைக் கவனித்த போது நான் சட்டம் தொடர்பான பல விஷயங்களை தெரிந்து கொண்டேன். இணையம் மூலம் தேடி இந்த விஷயங்கள் குறித்த சட்டங்களைத் தேடிப் படித்தேன். அப்போது சட்டம் பற்றியும் சட்டம் எழுதப்படும் முறை பற்றியும் புரிந்து கொள்ள முடிந்தது. ஒரு மாணவனைப் போல புதிதாக தெரிந்து கொள்வதன் ஆர்வம் சட்டம் குறித்து ஏற்பட்டது. உதாரணத்துக்கு, ஊராட்சி மன்றத் தலைவர் கள்ளத்தனமாக மரம் வெட்டுதலில் ஈடுபடும் போது அது எவ்வாறு அணுகப்பட வேண்டும் என்பதை ஊராட்சிகள் சட்டத்தில் பல பக்கங்களில் தேடிப் பார்த்தேன். கிராமங்களில் பொது இடத்தில் உள்ள மரங்களை வெட்டும் பொதுமக்களுக்கு என்ன தண்டனை என்பதை உணர்த்தும் சட்டம் ஒரு சிறு குறிப்பு போல இருந்தது. அது அனைவருக்கும் பொருந்தும் என்பதை உணர்ந்து கொண்டேன். ஆனால் அது ஒரு சிறு குறிப்பு மட்டுமே. ‘’கள்ளத்தனமாக மரம் வெட்டுதல்’’ குறித்த சட்டத்தை எடுத்து வாசித்துப் பார்த்தேன். அது தெள்ளத் தெளிவாக கள்ளத்தனமாக மரம் வெட்டப்படும் போது கிராம ஊராட்சி ஊழியர்களும் வருவாய்த்துறை ஊழியர்களும் செய்ய வேண்டிய கிரமங்கள் என்ன என்பதை எடுத்துரைக்கிறது. அதனைப் பலமுறை வாசித்திருக்கிறேன். சட்டம் என்பது பலமுறை வாசிக்கப்பட வேண்டியது. ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் புதிதாக ஒரு விஷயம் புலப்படும். இத்தனை நாள் இதனை கவனிக்காமல் இருந்தோமே என்று ஆச்சர்யம் உண்டாகும். 

தமிழ்நாட்டில் பொதுவாக மக்களுக்கு சட்டபூர்வமான செயல்முறைகள் மேல் நம்பிக்கையும் அதன் மீது பற்றும் இருப்பதில்லை. தமிழ்நாட்டின் அரசு அலுவலர்களும் பொது மக்களிலிருந்து வருபவர்கள் என்பதால் அவர்களிடமும் அதே வழக்கம் இருப்பதைக் காண முடியும். ‘’வழக்கமான நடைமுறை’’ என ஒன்று பழக்கத்தில் இருக்கும். அதையே அலுவலர்கள் பின்பற்றுவார்கள். 

கள்ளத்தனமாக மரம் வெட்டுதல் நிகழும் போது கிராம நிர்வாக அதிகாரி வெட்டப்பட்ட மரங்களைக் குறித்த விபரங்களை ‘’சி’’ படிவம் என்ற படிவத்தில் பதிவு செய்ய வேண்டும். யாரேனும் புகார் அளித்தால்தான் பதிவு செய்ய வேண்டும் என்று கிடையாது. ஒரு கிராமத்தில் பொது இடத்தில் இருக்கும் எந்த மரமும் வெட்டப்படும் என்றால் அதனை தனது வருவாய்த்துறை அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லுதலும் கள்ளத்தனமாக மரம் வெட்டியவருக்கு வெட்டப்பட்ட மரத்தின் விபரங்களை ( வெட்டப்பட்ட மரத்துண்டுகளின் எண்ணிக்கை, அவற்றின் கனஅளவு, எடை) ஆகியவற்றைக் குறிப்பிட்டு ‘’சி’’ படிவத்தை வழங்குவதும் கிராம நிர்வாக அதிகாரியின் பணிகள். கள்ளத்தனமாக மரம் வெட்டப்பட்டு 24 மணி நேரத்தில் ‘’சி’’ படிவம் அளிக்கப்பட்டு விட வேண்டும். அவ்வாறு அளிக்கப்படாமல் இருந்தால் அதுவே பணி நெறிமுறை மீறல் என்றாகும். வெட்டியவர் எவரெனத் தெரியாது வெட்டப்பட்ட மரத்துண்டுகளும் சம்பவ இடத்தை விட்டு அகற்றப்பட்டு விட்டன என்றால் கிராம நிர்வாக அதிகாரி அதனைக் காவல்துறையில் புகாராக அளிக்க வேண்டும்.  ‘’சி’’ படிவ அறிக்கை கிராம நிர்வாக அதிகாரியில் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வழங்கப்படும்.  வருவாய் ஆய்வாளர் கிராம நிர்வாக அதிகாரி அளித்த ‘’சி’’ படிவத்தை பரிசீலித்து அதில் பதிவு செய்யப்பட்ட விபரங்கள் சரியானவையா என்பதை ஆய்வு செய்வார். அந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களிடம் வாக்குமூலத்தைப் பதிவு செய்வார். அதன் பின்னர் வருவாய் வட்டாட்சியர் கிராம நிர்வாக அதிகாரியின் ‘’சி’’ படிவத்தையும் வருவாய் ஆய்வாளரின் அறிக்கையையும் அடிப்படையாய்க் கொண்டு குற்றத்தின் தன்மையைப் பொறுத்து சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து மரத்தின் மதிப்பை நிர்ணயம் செய்ய வேண்டும். கிராம நிர்வாக அதிகாரி மதிப்பிட்டிருக்கும் பொருள் மதிப்பு குறைவாக இருப்பதாக வட்டாட்சியர் நினைத்தால் மரத்தின் மதிப்பு அதிகமாக இருக்கக்கூடும் என தனது அறிக்கையில் எழுதி வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்ப வேண்டும். அதன் பின்னர் வருவாய் கோட்டாட்சியர் சம்பவ இடத்துக்கு வருகை தந்து பார்வையிட்டு மரத்தின் மதிப்பை நிர்ணயம் செய்து ஆணை வெளியிட வேண்டும். வெட்டப்பட்ட ஒரு மரத்தின் மதிப்பு ரூ.1000க்குள் எனில் அந்த மரத்தின் மதிப்பை நிர்ணயம் செய்வதற்கும் அந்த மரக்கிரயத்தின் மீது 40 மடங்கு வரை அபராதம் விதிக்கவும் வருவாய் வட்டாட்சியர் அதிகாரம் படைத்தவர். வெட்டப்பட்ட மரத்தின் மதிப்பு ரூ.1000க்கு மேல் எனில் அந்த மரத்தின் மதிப்பை நிர்ணயம் செய்யவும் அதன் மீது 40 மடங்கு வரை அபராதம் விதிக்கவும் வருவாய் கோட்ட ஆட்சியர் அதிகாரம் படைத்தவர். 

14 மரங்கள் வெட்டப்பட்ட சம்பவம் நடந்தது 09.07.2021 அன்று. மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்ட தினம் 12.07.2021. வருவாய் வட்டாட்சியர் வெட்டப்பட்ட 14 மரங்களின் மதிப்பு ரூ.950 என நிர்ணயம் செய்து ஒரு மடங்கு அபராதம் ரூ.950 விதித்து கூடுதல் தொகைக்கு 8 சதவீதம் ஜி.எஸ்.டி வரி விதிப்புடன் சேர்த்து ரூ.2052 செலுத்தச் சொல்லி கள்ளத்தனமாக மரம் வெட்டியவருக்கு உத்தரவிட்டது 13.07.2021 அன்று. அந்த உத்தரவில் உள்ள வாசகம் ‘’ 17.07.2021 அன்று வருவாய் ஆய்வாளர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் ‘’ இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 14 மரங்கள் விஷயத்தில் இந்த உத்தரவு முக்கியமான ஒன்று. மாவட்ட நிர்வாகம் 14 மரங்கள் விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாக வருவாய் வட்டாட்சியரின் ஆணையையே குறிப்பிடுகிறது என்பதால் அதில் இருக்கும் ஒவ்வொரு அம்சமும் பெரும் முக்கியத்துவம் கொண்டதாகி விடுகிறது. 

நாம் ஒரு விஷயம் யோசித்துப் பார்ப்போம். மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது 12.07.2021 தேதியில். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து 12ம் தேதி அளிக்கப்பட்ட மனுக்கள் வருவாய் கோட்டாட்சியருக்கு தபாலில் அனுப்பப்பட்ட தேதி 19.07.2021. வருவாய் வட்டாட்சியர் 13.07.2021 அன்று பிறப்பித்த ஆணையில் அந்த ஆணையின் நகல் வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்படுவதாகக் குறிப்பிடுகிறார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து வருவாய் வட்டாட்சியர் முகவரியிட்டு எந்த தபாலும் அனுப்பப்படாத நிலையில் 13ம் தேதி தான் பிறப்பித்த உத்தரவின் நகலை வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பி வைக்க வேண்டியதன் அவசியம் என்ன என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. அவருடைய மரக்கிரய நிர்ணய மதிப்பின் எல்லைக்குள் இந்த விஷயம் வருகிறது என்னும் போது 13ம் தேதி அந்த உத்தரவை அவர் வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை. வருடத்துக்கு வருவாய் வட்டாட்சியரின் அதிகார எல்லைக்குள் ஓரிரு கள்ளத்தனமாக மரம் வெட்டுதல் நிகழும். வெட்டப்பட்ட மரங்களின் மதிப்பு ரூ.1000க்குள் இருந்தால் வட்டாட்சியரே அபராதம் விதித்து ஆணை வெளியிட்டு விடுவார். அவர் அந்த ஆணையின் நகல்களை வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்ப அவசியம் இல்லை. 14 மரங்கள் விஷயத்தில் ஏன அப்படி செய்தார் என்பது புரியாத ஒன்றாக உள்ளது. 

ஐந்து ஆண்டுகளுக்கு மேல் அகவை கொண்ட வேம்பு, மலைவேம்பு, புங்கன் ஆகிய 14 மரங்களின் மதிப்பை ரூ.950 என வருவாய் வட்டாட்சியர் நிர்ணயம் செய்து விட்டார். கள்ளத்தனமாக மரம் வெட்டுதலுக்கு மரத்தின் மதிப்பில் ஒரு மதிப்பிலிருந்து 40 மடங்கு வரை அபராதம் விதிக்க முடியும் என்ற நிலையில் ஒரு மடங்கு அபராதம் விதிப்பது என்றும் முடிவு செய்து விட்டார். அவ்வாறெனில் வரியுடன் கூடிய தொகையான ரூ.2052ஐ ஊராட்சித் தலைவரின் ஊதியக் கணக்கிலிருந்து பிடித்தம் செய்து செலுத்தச் சொல்லியிருக்க வேண்டும். அதுதான் நடைமுறை. அந்த நடைமுறை ஏன் பின்பற்றப்படவில்லை என்பதற்கான காரணம் தெரியாத ஒன்றாக இருக்கிறது. அபராதத்துடன் கூடிய வரி விதிப்பை வட்டாட்சியரின் ஆணை வெளியிடப்பட்ட பின் 120 நாட்கள் கழித்து இணையம் மூலம் செலுத்தியிருக்கிறார். ஆணை பிறப்பிக்கப்பட்ட 120வது நாளில் ரூ.1000 அதன் பின் 127வது நாளில் ரூ.1052 என இரண்டு தவணைகளாக செலுத்தியிருக்கிறார். இத்தனை காலதாமதத்தை மாவட்ட நிர்வாகம் ஏன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது தெரியவில்லை. 

குறுக்கு வழிகள் அனைத்துமே நேர் வழிகளை விட மிக நீளமானவை என்று சொல்லப்படுவதுண்டு. இந்த தருணத்தில் நான் அந்த வாசகத்தைத் தான் நினைவில் வைத்துக் கொள்கிறேன். மேலே குறிப்பிட்டிருக்கும் விஷயங்களை சிறு எடுத்துக்காட்டாக மட்டுமே கோடிட்டுக் காட்டியிருக்கிறேன். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் பெறப்பட்ட விபரங்கள் மேலும் பல விஷயங்களை புரியச் செய்கின்றன. 

ஐயத்துக்கு இடமான விதத்தில் நிகழ்ந்திருக்கும் செயல்பாடுகள் ஆவணங்கள் ஆகியவை மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு புகார் மனுவாக அனுப்பப்பட்டுள்ளன. அவ்வாறு அனுப்பப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிறது. மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பது எனக்கு புரியவில்லை. இதில் ஒரு முக்கியமான விஷயம் ஒன்று உண்டு. என்னுடைய நண்பர்களும் நலம் விரும்பிகளும் என்னைக் கடிந்து கொள்கிறார்கள். இதில் ஈடுபடாதே என எச்சரிக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு முறை அவ்வாறு கூறும் போதும் எனக்கு நானே என்னிடம் கேட்டுக் கொள்கிறேன். இந்த விஷயத்தை நான் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொண்டிருக்கிறேனா என்ற கேள்வியை என்னிடம் நான் கேட்டுக் கொள்கிறேன். அதற்கான பதில் அவ்வாறு இல்லை என்பதே. ஒருமுறைக்கு பலமுறை ஆழமாக சிந்தித்துப் பார்த்தே இதனைக் கூறுகிறேன். 

இதில் இன்னொரு விஷயம் உண்டு. நான் அரசாங்கம் என்ற அமைப்பின் மீது நம்பிக்கை கொண்டவன். அரசாங்கம் சட்டப்படியாக இயங்கும் அமைப்பு என்பதில் தீவிரமான உறுதி கொண்ட்வன் நான். பொதுவாக தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு அரசாங்கம் அரசாங்க அலுவலகங்கள் மீது பெரும் அவநம்பிக்கை கொண்டிருப்பார்கள். நான் எந்நாளும் அவ்வாறான அவநம்பிக்கை கொண்டதில்லை. அரசாங்க வேலையை இரவு பகல் பாராமல் அர்ப்பணிப்புடன் ஆற்றக் கூடிய நூற்றுக்கணக்கானோரை எனக்குத் தெரியும். ஒட்டு மொத்தமாக அரசாங்கம் என்பதை குற்றம் சாட்டுவது அவர்களின் அர்ப்பணிப்பை புறந்தள்ளுவதற்கு சமம். எந்த சூழ்நிலையிலும் நான் அதனைச் செய்ய மாட்டேன். தவறுகள் திருத்தப்பட வேண்டும் ; முறைகேடுகள் சரி செய்யப்பட வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு. அரசாங்க அமைப்பும் சட்டமும் ஜீவித்திருப்பதனால்தான் ஒரு சாதாரண குடிமகனால் நியாயம் கேட்க முடிகிறது.  

இரண்டு தினங்களுக்கு முன்னால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்று மாவட்ட ஆட்சியரின் முதல் தனி உதவியாளரைச் சந்தித்தேன். என்னை அறிமுகம் செய்து கொண்டு ‘’14 மரங்கள்’’ விஷயம் தொடர்பாக அக்டோபர் மாதம் ஒரு மனு அனுப்பியிருந்தேன். அது தொடர்பாக விசாரிக்க வந்தேன் என்று கூறினேன். அவருக்கு விஷயம் என்ன என்பது உடன் புலப்பட்டு விட்டது. வருவாய் கோட்டாட்சியரை சந்திக்குமாறு கூறினார். அவரைச் சந்தித்து விட்டு அவர் என்ன கூறுகிறார் என்பதைத் தங்களிடம் வந்து தெரிவிக்கிறேன் எனக் கூறி விட்டு வருவாய் கோட்டாட்சியரை சந்திக்கச் சென்றேன். அந்த அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள் விஷயத்தை எங்களிடம் சொல்லுங்கள் ; நாங்கள் வருவாய் கோட்டாட்சியரிடம் தெரிவித்து விடுகிறோம் என்று கூறினார்கள். ‘’மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளைச் சந்தித்து விட்டு அவர்கள் கேட்டுக் கொண்டதின் படி நான் இங்கு வந்திருக்கிறேன். வருவாய் கோட்டாட்சியரை சந்திக்க வேண்டும்’’ என்று சொன்னேன். ஐந்து நிமிடம் காத்திருக்கச் சொன்னார்கள். அதன் பின் சென்று சந்தித்தேன். சுருக்கமாக - மிகச் சுருக்கமாக விஷயத்தைச் சொன்னேன். அவர் அந்த கோப்பினை முழுமையாகப் பார்த்திருப்பார் என்பது எனக்குத் தெரியும். மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரி கேட்டுக் கொண்டிருப்பதன் பேரில் இங்கு வந்திருப்பதாகத் தெரிவித்தேன். இந்த விஷயத்தில் குறைந்தபட்ச நியாயத்தை எதிர்பார்ப்பதாகக் கூறி விட்டு நன்றி தெரிவித்துவிட்டுப் புறப்பட்டேன். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திரும்பி வந்து விபரம் தெரிவித்து அவரிடம் விடை பெற்றேன். 

ஒரு புராதானமான விஷ்ணு ஆலயத்தின் சன்னிதித் தெருவில் இருந்த குழந்தைகளும் பெண்களும் நீரூற்றி வளர்த்த - பல நூறு பேருக்கு நிழல் அளித்து வந்த - வேம்பு, மலைவேம்பு, புங்கன் ஆகிய மரங்கள் சட்ட விரோதமாக வெட்டப்பட்டுள்ளன. மக்கள் தெரிவித்த எதிர்ப்பு துச்சமாக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த விஷயம் எத்தனை அடர்த்தியும் தீவிரமும் கொண்டது என்பதை வருவாய்த்துறை அதிகாரிகள் அறிவார்கள். நிகழ்ந்த பிழை உரிய பிழையீடால் சமன் செய்யப்பட வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு. 

14 மரங்கள் விஷயத்தில் ஒரு குறைந்தபட்ச நியாயம் நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இப்போதும் இருக்கிறது. 
  

நலம்

 இன்று உடல்நலம் சீராகப் பெற்றேன். வெயில் கடுமையாக இருப்பதால் அந்த நேரத்தில் வெளியில் செல்வதில்லை. 15 நாட்களாக இருமல் கடுமையாக இருந்தது. மிகக் குறைந்த அளவு உணவே உட்கொள்ள முடிந்தது. வீட்டை விட்டு வெளியில் செல்லாமல் இருந்தேன். வெயில் காலத்திலிருந்து மழைக் காலம் மாறும் காலத்திலும் மழைக் காலத்திலிருந்து பனிக்காலம் மாறும் காலத்திலும் பனியிலிருந்து கோடை மாறும் காலத்திலும் எப்போதாவது எனக்கு இருமல் ஏற்படுவதுண்டு. பதினைந்து நாட்கள் உடல்நிலையை தீவிரமாக உலுக்கி விட்டு நீங்கிச் செல்லும். இம்முறையும் அவ்வாறே. இன்னும் ஓரிரு நாளில் முழுமையான நலம் திரும்பும் என எண்ணுகிறேன். 

Sunday, 15 September 2024

எனது படைப்புகள் ( மறுபிரசுரம்)

    2016ம் ஆண்டு மயிலாடுதுறையிலிருந்து ரிஷிகேஷ் வரை 22 நாட்கள் மோட்டார்சைக்கிளில் பயணித்தேன். அப்பயணம் குறித்த  பயணக் கட்டுரை சொல்வனம் இதழில் வெளியானது. அதன் இணைப்பு


காவிரியிலிருந்து கங்கை வரை - பகுதி 1

அதன் இரண்டாம் பகுதியின் இணைப்பு

ஹம்பி - நிலவைக் காட்டும் விரல்

சொல்வனம் இதழில் வெளியான எனது சிறுகதைகள்











வருகை              





இரு பள்ளிகள்

சொல்வனம் இதழில் எழுதும் ‘’யானை பிழைத்தவேல்’’ கம்பராமாயணத் தொடரின் கட்டுரைகள் இணைப்பு

யானை பிழைத்தவேல் - பகுதி 1   யானை பிழைத்தவேல் - பகுதி 2

யானை பிழைத்தவேல் - பகுதி 3   யானை பிழைத்தவேல் - பகுதி 4

யானை பிழைத்தவேல் - பகுதி 5

ஜெயமோகன் இணையதளத்தில் வெளியான எனது கட்டுரைகள் & கடிதங்கள்


சுப்பு ரெட்டியார்         



வீரப்ப வேட்டை                         







Wednesday, 4 September 2024

பூம்புகார்

இன்று மாலை பூம்புகார் கடற்கரைக்குச் சென்றிருந்தேன். கடல் காண வேண்டும் என்ற உணர்வு இரண்டு நாட்களாக இருந்தது. கடற்கரையும் கடல் அலைகளின் ஸ்பரிசமும் மனதை இலகு ஆக்குபவை. மனதிற்கு இதம் அளிப்பவை.  

பூம்புகார் சிறு மீன் பிடி துறைமுகமாக உருவாகி வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளாகவே அதற்கான பூர்வாங்க பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. முதலில் கரையிலும் கடலில் 100 மீட்டர் அளவுக்கும் பாறைகள் கொண்டு வந்து போடப்பட்டன. இப்போது மேலும் சில விரிவாக்கப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதிக படகுகள் நிற்க ஏற்பாடு நிகழ்ந்தால் மீன் பிடித்தல் அதிகமாகும். இந்த மீன்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விற்பனை ஆவதால் ஊரின் பொருளியலும் பெருகும். தேசத்தின் பொருளியலும் பெருகும். மத்திய அரசின் கப்பல் போக்குவரத்துத் துறை அங்கே ஒரு கலங்கரை விளக்கத்தை நிறுவியிருக்கிறது. இப்போது மீன் பிடி துறைமுகப் பணிகள் பக்கத்து கிராமமான வாணகிரி வரை நீண்டு சென்றுள்ளது. 

மாநில சுற்றுலாத் துறையின் சார்பில் சில கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுவதைக் கண்டேன். பூம்புகார் என்றால் மக்களுக்குக் கடல் தான். ஊரை அடைந்ததும் அவர்கள் காண விழைவதும் கடலையே. 

எங்கள் பகுதியில் இறந்தவர்கள் சடலம் எரியூட்டப்பட்டு அந்த அஸ்தி பூம்புகார் கடலில் கரைக்கப்படும். காவிரி கடலுடன் சங்கமாகும் இடம் என்பதால் மூத்தோர் வழிபாட்டுக்கு மிக உகந்த இடம் பூம்புகார். 

கரையிலும் கடலிலும் கொட்டப்பட்டுக் கிடந்த பாறைகளில் ஒன்றின் மீது அமர்ந்து கடலை ஒரு மணி நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். மனம் புத்துணர்ச்சியை உணர்ந்தது.