விழுந்து
தளர்ந்து
சோர்ந்து
அரற்றி
அமர்ந்தேன்
இறுகிப் போயிருந்தது உடல்
வலி கொண்டிருந்தது மனம்
இந்த உடல் அழியட்டும்
இந்த மனம் அழியட்டும்
ஓயாது அழுதேன்
உடல் அழிக்கும்
காலம்
மனம் அழிக்கும்
காலம்
அமர்ந்தேன்
அமர்ந்து கண்களை மூடிக் கொண்டேன்
துளித்துளியாக
காலம் சொட்டிக் கொண்டிருந்தது
வலிகளை
வலிகளின் நினைவுகளை
மனம் மீட்டிக் கொண்டிருந்தது
அழுதேன்
அழுதேன்
அழுது கொண்டேயிருக்கிறேன்
சினம்
வஞ்சம்
பழி
ஆழத்தில் புதைந்திருந்தவை
புரண்டு கொண்டன
சாதல் வாழ்வின் முடிவு எனில்
சாதல் துயரத்தின் முடிவும்
இந்த உடல் சாகும்
இந்த மனம் சாகும்
அழிந்து கொண்டிருக்கும் உடல்
வலித்துக் கொண்டிருக்கும் மனத்தில்
அணுவினும் அணுவாக
உயிர்த்துணை
ஒன்று
விளையாடிக் கொண்டிருப்பதைக் காண்கிறேன்
உள்ளே வருகிறான்
வெளியே செல்கிறான்
குழந்தையின் பிரியத்துடன் கை நீட்டுகிறான்
இந்தப் பிரியத்தின் கை நீட்டலை
நீ ஏன் இத்தனை நாள் தீண்டவேயில்லை
என மழலைச் சொல் உரைக்கிறான்
எல்லாக் கணமும் என் உடன் இருந்திருக்கிறான்
ஒரு கணமும் விலகியதில்லை
அவன் உடன் இருந்தான்
அவன் உடன் இருக்கிறான்
உடனிருப்பதை
உணர உணர
அவன் உணர்த்திக் கொண்டேயிருக்கிறான்
ஆக்கத்துக்கும் அழிவுக்கும்
அப்பால் இருக்கும்
இருப்பை
உயிர்த்துணையே
என் உடல் அழியப் போகிறது
நீ எப்போதும் இருப்பாய்
உன் பிரியம் மாறுவதில்லை
உன் அன்பு மாறுவதில்லை
நீ
சொல் உரைக்காமல்
மௌனமாக மட்டும் இருக்கிறாய்
இப்பொழுது
நான் கண்டுகொண்டேன்
உன்னை
உன்னைத் தொழுகிறேன்
எனக்குத் துணையாக இரு
எனக்கு
விடுதலையைக் கொடு
***