ஒரு நாட்டில் ஒரு ராஜாங்கம் இருந்தது.அந்த ராஜ்யத்தின் ராஜனுக்கு ராணி மீது கொள்ளைப் பிரியம். அவள் மீது ஒரு துரும்பு விழுந்தால் கூட ராஜன் துடிதுடித்துப் போய்விடுவான்.
அந்த ராஜாங்கத்தில் ஒரு மந்திரி இருந்தார். அவர் கவனத்துக்கு ஒரு விஷயம் வந்தது. அதாவது , அந்த ராஜ்யத்தின் பிரஜை ஒருவன் எந்தத் திறனும் இல்லாதவனாக இருக்கிறான் என்று. மந்திரி சொன்னார், ‘’அது எப்படி ஒருவன் எந்தத் திறனும் இல்லாதவனாக இருக்க முடியும். அவனை என்னிடம் அழைத்து வாருங்கள். நான் விசாரிக்கிறேன்’’ என்றார். அவனை மந்திரி முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.
‘’உன்னிடம் உள்ள திறன்களைச் சொல்’’ மந்திரி மென்மையாகவே கேட்டார்.
அவன் மௌனமாயிருந்தான்.
‘’அஞ்சாதே ! சொல்ல நினைப்பதைச் சொல்.’’ மந்திரி அவனுக்கு ஊக்கம் கொடுத்தார்.
‘’எனக்கு நல்லா துக்கம் சொல்ல வருங்க. அதைத் தவிர வேறு எதுவும் தெரியாது.’’
மந்திரி ஓலைநாயகத்தை அழைத்து ‘’எந்தத் திறனும் இல்லாதவன்’’ எனக் கூறப்பட்டவனுக்கு பணி நியமன உத்தரவு அளிக்கச் சொன்னார்.
மந்திரி அவனிடம் ‘’ இனி நீ அரசாங்க ஊழியன். அரண்மனையில் ஊழியர் குடியிருப்பில் தங்கிக் கொள்ளலாம். மூன்று வேளை உணவும் மாத ஊதியமும் உண்டு. குடும்பத்தை அழைத்து வந்து விடு.’’
அரண்மனை செயலக ஊழியர்களுக்கு மந்திரி ஏன் இவனுக்கு பணி நியமனம் செய்தார் என்பது புரிந்து கொள்ள முடியாததாக இருந்தது. அரசாங்கத்தில் எல்லாம் புரிந்து தெரிந்தா நடக்கிறது ; நாம் இதில் மனதைச் செலுத்த வேண்டாம் என தங்கள் வழமைகளுக்குத் திரும்பினர்.
நாட்கள் வேகமாக ஓடின.
ராஜன் நாட்டில் இருந்த காட்டுக்கு வேட்டையாடச் சென்றார். காட்டில் 15 நாள் முகாம் செய்வதாய் திட்டம். காட்டுக்குச் சென்று 5 நாள் ஆகியிருந்தது.
ராஜன் காட்டுக்குச் சென்ற 5 வது நாள் ராணிக்கு விஷ ஜூரம் வந்தது. அரண்மனை வைத்தியர்கள் எவ்வளவோ முயன்று பார்த்தனர். ஒரு ராத்திரி கூட சிகிச்சையால் அவள் உயிரைப் பிடித்து வைக்க முடியவில்லை. அவள் காலமாகி விட்டாள். இந்த தகவல் மன்னனுக்குத் தெரிவிக்கப்பட்டு அவன் திரும்பி வர குறைந்தது 3 நாளாவது ஆகி விடும். அதுவரை சவத்தைப் பாதுகாத்து அரண்மனையில் வைக்க முடியாது என்பதால் அரச குடும்பத்தின் வாரிசுகளைக் கொண்டு தகனத்தை முடித்து விட்டனர்.
ஒன்றுக்கு இரண்டு எதிர்பாராமைகள் அரங்கேறி விட்டன. ராணி உயிரையும் சிகிச்சை அளித்து காக்க முடியவில்லை ; ராணி சடலத்தைக் கூட மன்னன் பார்க்க முடியாமல் தகனம் செய்தாயிற்று. இந்த இரண்டு தகவலையும் மன்னனுக்கு எவ்விதம் தெரிவிப்பது என ராஜாங்கத்தின் அமைச்சகங்களும் செயலகங்களும் திணறின. கூடிக் கூடி ஆலோசித்தன. மந்திரிக்கு தான் அரசாங்க வேலை கொடுத்த ‘’எந்தத் திறனும் இல்லாதவன்’’ நினைவு வந்தது. அவனை அழைத்து வரச் சொன்னார்.
அவனிடம்,’’ விஷயம் உனக்குத் தெரிந்திருக்கும். இந்த செய்தியை யார் கொண்டு சென்று தெரிவித்தாலும் ராஜன் அக்கணமே செய்தி கொண்டு சென்றவன் தலையைக் கொய்து விடுவார். மேலும் அரண்மனைக்கு வந்து இங்கே உள்ள அத்தனை ஊழியர்களையும் கழு ஏற்றி விடுவார்’’என்றார்.
‘’மந்திரி ஐயா! நாடே நான் எதுக்கும் பயன்படாதவன்னு சொன்னப்ப எனக்கு நீங்க அரசாங்க வேலை கொடுத்தீங்க. அதை எப்போதும் நான் நன்றியோட நினைப்பன். நான் தகவல் கொண்டு போறன்’’ என்று சொல்லி புறப்பட்டான்.
அரசாங்க ஊழியர்கள் இன்னும் ஓரிரு நாளில் ஒட்டுமொத்தமாக கழுவேற்றம்தான் எனக் கவலையோடு இடிந்து போய் உட்கார்ந்திருந்தனர்.
துக்கம் சொல்லச் சென்றவன் காட்டில் மன்னன் கூடாரத்தை அடைந்து நெடுஞ்சாண் கிடையாக மன்னனை வணங்கினான்.
ராஜன் எச்சொல்லும் உரைக்காமல் அவனை நோக்கினான்.
’’மஹாராஜா! ராணிக்கு லேசாக உடம்பு சரியில்லை’’ என்றான் துக்கம் சொல்ல வந்தவன்.
ராஜன் பதறி விட்டான். ‘’ஆ! என்ன சொல்கிறாய்? என்ன உடம்புக்கு? வைத்தியம் நடக்கிறதா ? வெளிநாட்டிலிருந்து வைத்தியர்கள் வந்தார்களா ? நான் இப்போது உடனே புறப்படவா ? ‘’ என அடுக்கடுக்காக கேள்வியாகக் கேட்டான்.
‘’ராஜா! நம் வைத்தியரே குணப்படுத்தி விட்டார்’’ என்றான் துக்கம் சொல்ல வந்தவன்.
’’அப்பாடா’’ என ஆசுவாசம் ஆனார் மன்னர்.
‘’குணமான அடுத்த நாள் ராணியின் கால் சுண்டு விரலில் சிறு காயம் மஹாராஜா’’
மன்னன் அதற்கும் பதட்டமடைந்து பின் விபரம் கூறப்பட்டு சகஜமானான். துக்கம் சொல்ல வந்தவன் விரல், கை, கால் என ஒவ்வொரு அவயங்களிலும் சிறு காயம் ஏற்பட்டு ராணிக்குச் சரியானது என்றான். ஒவ்வொரு முறையும் பதட்டமைந்து பின் ஆசுவாசமாகி நிலை மீண்டான் ராஜன். அதன் பின் ராணிக்கு ஜூரம் வந்தது ; விஷ ஜூரம் வந்தது எனக் கூறப்பட்டது.
ராஜன் உச்சகட்ட பதட்டத்துக்குச் சென்று கத்தினான். ‘’ ராணி உயிரோட இருக்காளா? இல்ல செத்து தொலஞ்சிட்டாளா?’’
‘’ நாலு நாள் முன்னாடியே ராணி இறந்துட்டாங்க மஹாராஜா. தகனமும் ஆயிடுச்சு’’
ராஜன் தலை சுற்றி மயங்கி விழுந்து விட்டான். மயக்கம் தெளிந்து விழித்ததும் அவன் மனம் ராணி இறந்து போன யதார்த்தத்தை ஏற்றுக் கொண்டது. அவள் விதி அவ்வளவு தான் என்ற துக்கத்தோடு சோகமாக அரண்மனைக்குப் புறப்பட்டான்.
சினத்துடனும் வஞ்சத்துடனும் வந்து தங்களை ராஜன் கழுவேற்றப் போகிறார் என எண்ணிய அரண்மனை ஊழியர்கள் ராஜன் அவ்விதம் செய்யாததைக் கண்டு வியப்படைந்தனர். நடந்த விஷயத்தை விசாரித்து அறிந்து ‘’எந்தத் திறனும் இல்லாதவன்’’ எனக் கூறப்பட்டவன் கொண்டிருந்த திறமையை வியந்தனர். அவனுக்கு அரசாங்க வேலை கொடுத்த மந்திரியின் சமயோஜித தன்மையைத் தங்களுக்குள் பாராட்டிக் கொண்டனர்.