Friday, 13 March 2026

பாகம் 2 -ஆட் மேன் அவுட் (இன்னொரு நகைச்சுவைக் கட்டுரை)

 பொதுவாக தமிழக மக்களுக்கு நகைச்சுவை உணர்ச்சி சற்றே குறைவு. அண்டை மாநிலமான கேரளம் நகைச்சுவை உணர்ச்சிக்கு பேர் போனது. அங்கே நம்பூதிரி, நாயர் ஜோக்கள் மிகவும் பிரபலம். வட இந்தியாவில் சர்தார்ஜி ஜோக் மிக பிரபலம். நகைச்சுவையை நகைச்சுவையாகக் காணும் தன்மை என்பது சிறப்பானது. எனக்கு சிறு வயதிலிருந்தே முல்லா நஸ்ருதீன் ஜோக் மிகவும் விருப்பத்துக்குரியது. தெனாலி ராமன், பீர்பால் நகைச்சுவையும் மிகவும் பிடிக்கும். இங்கே எதையுமே சீரியசாக எடுத்துக் கொள்பவ்ர்கள் அதிகம் என்பதால் நகைச்சுவையாய் எழுதப்படும் விஷயங்களை (நகைச்சுவைக் கட்டுரை) எனக் குறிப்பிட்டு எழுதி விடுகிறேன். சமீபத்தில் எழுதும் கணிசமான கட்டுரைகள் நகைச்சுவைக் கட்டுரைகளாக இருப்பதைக் கண்டு எனக்கு வியப்பும் ஆச்சர்யமும் ! எனது நகைச்சுவை உணர்ச்சி மிகவும் மிகுந்து விட்டதா அல்லது அன்றாடத்தில் மிக அதிக நகைச்சுவை அம்சங்கள் என் கண்ணில் பட ஆரம்பித்து விட்டதா என!

இன்று பிற்பகலில் ‘’ஆட் மேன் அவுட்’’ என ஒரு நகைச்சுவைக் கட்டுரை எழுதினேன். எழுதிய விஷயம் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. மாலை 4 மணிக்கு வீட்டிலிருந்து 500 மீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு பெட்ரோல் பங்க்கிற்கு சென்றேன். பெட்ரோல் பங்கின் அருகில் ஒரு கல்யாண மண்டபம். அதில் ஒரு பேனர் வைக்கப்பட்டிருந்தது. அந்த பேனர் என்ன என்று பார்த்தேன். கட்டிடப் பொறியாளரான எனது நண்பரின் குழந்தைக்கு முதல் பிறந்தநாள். நண்பரின் படமும் குழந்தையின் படமும் பேனரில் இருந்தது.நண்பரின் அலுவலகத்துக்கு தினமும் செல்வேன் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு தடவையாவது செல்வேன். ஊரின் கட்டிடப் பொறியாளர்கள் அனைவரும் சந்திக்கும் இடம் அது. அங்கே காலை மாலை ஒரு மணி நேரமாவது உட்கார்ந்திருப்போம். விழா எப்போது எனப் பார்த்தேன். மார்ச் 12 என இருந்தது. எனக்கு ‘’ஆ! விழா முடிந்து விட்டதா’’ என அதிர்ச்சி. நண்பர் அலுவலகத்தில் பணி புரியும் ஊழியருக்கு ஃபோன் செய்தேன். அவர் மிக சாவகாசமாக ஃபோனை எடுத்து , ‘’சார் ! சொல்லுங்க சார்’’ என்றார். ’’தம்பி நேத்து குழந்தை ஃபர்ஸ்ட் பர்த் டேஆ. கல்யாண மண்டபத்துல இருக்கற பேனர் பாத்து தான் தெரிஞ்சுகிட்டன். என்னப்பா எனக்கு சொல்லவே இல்லை!’’ ‘’என்ன சார் சொல்றீங்க உங்களுக்குத் தெரியாதா அண்ணன் சொல்லலையா?’’ ‘’இல்லப்பா . என்ன தினமும் வரேன். எப்படி விடுபட்டுது?’’ ‘’சார் ! மன்னிச்சிடுங்க சார். எப்படியோ விடுபட்டுடுச்சு’’ என சற்று தயங்கியவர் ‘’சார் ! இன்விடேஷன் எல்லாருக்கும் வாட்ஸ் அப் ல அனுப்பினோம். நீங்க வாட்ஸ் அப் ல இல்லாததால விடுபட்டு போயிடுச்சு.’’

நான் ஊழியரிடம் பேசிக் கொண்டிருந்த போது எனது நண்பரான கட்டிடப் பொறியாளர் அவர் வீட்டிலிருந்து அலுவலகத்துக்கு தன் இரு சக்கர வாகனத்தில் கடந்து சென்றார். நான் நின்றிருந்த இடம் என் எதிரில் இருந்த அவரது பேனர் ஆகியவற்றைப் பார்த்த அவருக்கு நான் அவரது அலுவலக ஊழியரிடம் நேற்றைய ஃபங்ஷன் குறித்து பேசுகிறேன் என்பது மூட்டமாகத் தெரிந்து விட்டது. ஒரு கணம் திகைத்தவர் பின்னர் என்னைப் பார்த்துப் புன்சிரிப்புடன் கையசைத்தார். நானும் கையசைத்தேன். ஆஃபிஸ் போகிறேன் என சைகை மொழியில் கூறி விட்டு  சென்று விட்டார்.