சமீபத்தில் ஒரு பத்திரிக்கை செய்தியை வாசித்தேன். அதாவது, மரணத் தருவாய் வரை சென்று வந்த ஒருவர் தனது அனுபவத்தை ஒரு சித்திரமாகத் தீட்டியிருக்கிறார். அந்த படத்தை மேலே கொடுத்துள்ளேன். படத்தின் கீழே பூமி. மேலே சூரியன். ஜீவன்களின் சாரம் புவி மேற்பரப்பில் குவிந்து ஓர் அலைப்பரப்பின் கீழ் வெளியில் இருக்கின்றன. அந்த அலைப்பரப்பின் மேல் அடுக்குகளில் வேறுவிதமான ஜீவ சாரங்கள் இருக்கின்றன. சூரியன் சுடர்ந்து கொண்டிருக்கிறது. பூமி சுழன்று கொண்டிருக்கிறது. மரணத் தருவாயை அடைந்தவர் இவ்விதமான காட்சியை உணர்ந்திருக்கிறார். அதனை சித்திரமாக வரைந்திருக்கிறார்.
எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். என்னை விட 5 வயது இளையவர். அவர் தந்தை ஒரு விவசாயி. அவரது சகோதரர்கள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார்கள்.இவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். அவரது கல்லூரி நாட்களில் அவரை நான் சந்தித்திருக்கிறேன். பட்டப்படிப்பு முடித்ததும் அவர் வெளிநாடு சென்று விட்டார். அதனால் பல வருடங்கள் பார்க்க முடியவில்லை. ஒரு நாள் தற்செயலாக ஊரின் கடைத்தெருவில் சந்தித்தோம். அவருக்கு என்னைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. வெகுநாள் கழித்து சந்தித்ததைக் கொண்டாடும் விதமாக ஐஸ்கிரீம் சாப்பிடச் சென்றோம். அவர் அப்போது உடல் மிகவும் சோர்வாக இருந்தார். ஏன் சோர்வு தென்படுகிறது என்று கேட்டேன். பெங்களூரில் 30 நாள் முன்பு தனக்கு நடந்ததை என்னிடம் கூறினார். வெளிநாட்டில் வேலை பார்த்த அவர் பின்னர் பெங்களூரில் வீடு வாங்கிக் கொண்டு வந்து குடியேறி விட்டார். அப்போது அவருக்குத் திருமணம் ஆகியிருக்கவில்லை.
பெங்களூரில் ஒரு ஹோட்டலுக்கு உணவருந்தச் சென்ற அவரிடம் ‘’மெனு’’ கார்டு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் ‘’கார்லிக் ஜூஸ்’’ என இருந்திருக்கிறது. அதனை ஆர்டர் செய்து விட்டார். ஜூஸ் வந்திருக்கிறது. அதனைக் குடித்து விட்டார். குடிக்கும் போது அவர் நாவுக்கு உகந்த ருசியாகவே இருந்திருக்கிறது. விருப்பத்துடன் குடித்திருக்கிறார். குடித்து முடித்த பின் அவர் ஏதோ ஒரு மாறுபாட்டை உணர்ந்திருக்கிறார். அதனை இன்னதென்று சொல்ல முடியவில்லை என்றார். ஜூஸுக்கான கட்டணத்தை செலுத்தி விட்டு தனது ஃபிளாட்டுக்கு வந்து விட்டார்.
அவர் உடல் எப்போதும் இருப்பதைப் போல் இல்லாமல் கொஞ்சம் மாறுபாடு அடைவதைப் போல் தோன்றியிருக்கிறது. மிகவும் இலகுவாக ஆவதைப் போல தோன்றியிருக்கிறது. உடல் என்ற ஒன்றே இல்லாமல் இருப்பதைப் போல உணர்ந்திருக்கிறார். படுக்கையில் படுத்து விட்டார். நிமிடங்கள் மெல்ல கடந்திருக்கின்றன. உடலற்ற நிலையில் தான் இருப்பதாக அவருக்குத் தோன்றியிருக்கிறது. ‘’கார்லிக் ஜூஸ்’’ அருந்தியதன் விளைவு என அவர் எண்ணவில்லை. திடீரென மூச்சு வேகமாக இயங்கத் தொடங்கியிருக்கிறது. மூச்சு மட்டுமே இருப்பதாக உணர்ந்திருக்கிறார். மூச்சு மட்டுமே இருந்திருக்கிறது . வேறு ஏதும் இல்லை. மூச்சு உள்ளே செல்கிறது ; வெளியேறுகிறது. அதனை மட்டுமே கவனித்திருக்கிறார். வேறு எதிலும் கவனம் இல்லை. மிக வேகமாக மூச்சு படபடக்கத் தொடங்கியிருக்கிறது. அவர் அதன் லயத்தில் அதனுடன் ஆழ்ந்து விட்டார். பல மணி நேரங்கள் இவ்வாறே சென்றிருக்கின்றன. அவர் தான் மயக்கம் அடையவில்லை என்பதை உறுதியாகக் கூறுகிறார். அப்போது அவருக்கு சில காட்சிகள் தென்பட்டிருக்கின்றன. அவர் உடல் பூமியில் கிடப்பதாகவும் மேலே சூரியன் ஒளி விட்டுக் கொண்டிருப்பதாகவும் தான் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே இருப்பதாகவும் சூரியனுக்கு அருகில் இருந்தாலும் வெம்மையாக இல்லை ; குளிரான சூழ்நிலையாகவே இருந்தது என்றும் சொன்னார். தான் அந்த நிலையை விரும்பியதாகவும் அப்படியே அங்கேயே இருந்து விடலாம் எனத் தோன்றியதாகவும் கூறினார். அங்கே துயரம் இல்லை ; வலி இல்லை ; அல்லல் இல்லை.
அவர் கார்லிக் ஜூஸ் குடித்த போது நேரம் மாலை 6.30. தனது ஃபிளாட்டில் படுத்த போது நேரம் இரவு 7.15. நிச்சயமாகத் தான் தூங்கவும் இல்லை ; மயக்கமடையவும் இல்லை என உறுதியாக மீண்டும் மீண்டும் கூறினார். அதிகாலை 4 மணிக்கு அவர் சூழலில் ( ஹாஸ்யம் : அப்படித்தானே சொல்ல முடியும் ? உடல் பிரக்ஞை இல்லை. மனமும் இல்லை ; உடலும் மனமும் மூச்சில் லயித்து விட்டன) சிறு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அது ஒரு சுருதிபேதம் என அவர் கருதுகிறார். (ஹாஸ்யம் :அவர் அதை விரும்பவில்லை.) எனினும் சூரியனையும் அண்ட வெளியையும் விட்டு விட்டு தன் உடல் பக்கத்தில் அவரது பிரக்ஞை வந்து விட்டது. உடலில் சிறு அசைவு ஏற்பட்டு மனம் தன் வழமையான இயக்கத்துக்கு வந்திருக்கிறது. பெருவெளியில் உலவி வந்ததால் அவர் எழுந்து அமர்ந்து ஃபிளாட்டைப் பூட்டி விட்டு கீழே சென்று அங்கே இருந்த அபார்ட்மெண்ட் காவலரிடம் ஒரு ஆட்டோ பிடித்து வருமாறு கூறியிருக்கிறார். தெரு முக்கில் அந்த நேரத்தில் ஆட்டோ இருந்திருக்கிறது. ஆட்டோ பிடித்து அருகில் இருந்த மருத்துவமனைக்குச் சென்று சேர்ந்திருக்கிறார். இதயம் மிக படபடப்பாக இருப்பதை நாடி பிடித்துப் பார்த்தே அறிந்திருக்கிறார்கள். மூச்சு மிகவும் படபடப்பாக இருந்திருக்கிறது. ( ஹாஸ்யம் : நான் அவரிடம் கேட்டேன் : இரவு 7.15க்கு மூச்சுத்திணறல் இருந்ததா என்று கேட்டேன். அவருக்கு சொல்லத் தெரியவில்லை. அவர் தான் ஒரு லயத்தை 7.15 லிருந்தே உணர்ந்ததாகச் சொன்னார். ‘’லயம்’’ என்பது என்னுடைய வார்த்தை. அவர் அவ்விதம் சொல்ல ’’அதை என்ன வார்த்தையில் சொல்வது என்று தெரியவில்லை’’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்). மருத்துவமனையில் அப்போது இருந்த ’’டியூட்டி டாக்டர்’’ இரவு என்ன சாப்பிட்டீர்கள் எனக் கேட்டிருக்கிறார்.நண்பர் கார்லிக் ஜூஸ் எனக் கூறியிருக்கிறார். வேறு திட உணவு ஏதும் சாப்பிட்டீர்களா ? குமட்டல் இருந்ததா ? வாந்தி எடுத்தீர்களா? எனக் கேட்டிருக்கிறார்கள். எதுவும் இல்லை. ‘’டியூட்டி டாக்டர்’’ இதயம் படபடப்பதும் மூச்சு மிக அதிகமாகத் திணருவதும் இருப்பதால் வாயின் வழியாக ஒரு டியூபைச் செலுத்தி குடலில் இருக்கும் வஸ்துக்களை வெளியேற்றி விட்டனர். வெளியேறிய பின் சில மணி நேரங்கள் மூச்சுத் திணறல் இருந்திருக்கிறது. அப்போது நண்பர் அசௌகர்யத்தையும் வலியையும் உணர்ந்திருக்கிறார். ( ஹாஸ்யம் : அப்போது நான் கேட்டேன். மருத்துவமனையில் இருந்த போது பூமி, சூரியன் ஆகிய உணர்வு இருந்ததா என சீரியஸாகவே கேட்டேன். இல்லை அப்போது வலி மட்டுமே இருந்தது. வீட்டு மனிதர்கள் நினைவு இருந்தது என்றார்). அதன் பின்னர் மயக்கமாகி விட்டார். மயக்கத்தில் எந்த நினைவும் இல்லை. மெடிக்கல் உபகரணங்கள் அவர் மூச்சு இயல்பாக இருப்பதையும் அவர் இதயம் இயல்பாக இயங்குவதையும் காட்டியிருக்கிறது. மருத்துவர்கள் அவரை எழுப்பியிருக்கின்றனர். சீனியர் மருத்துவர்கள் வந்திருகின்றனர். ‘’டியூட்டி டாக்டர்’’ சற்று முரட்டி வைத்தியம் தான் செய்திருக்கிறார் ; இருந்தாலும் அவ்விதம் செய்யப்படவில்லை எனில் நோயாளியின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியாது. இது ஒரு வித்தியாசமான சூழ்நிலை. உணவு ஒவ்வாமை ஏற்பட்டால் குமட்டலும் வாந்தியும் இருக்கும் ; உணவு ஒவ்வாமை குடலைத்தான் பாதிக்கும் ; ஆனால் இவர் விஷயத்தில் நுரையீரலை பாதித்திருக்கிறது. எனினும் நுரையீரலில் ஸ்கேன் எந்த மாறுதலையும் காட்டவில்லை. நோயாளி எவ்விதம் நோயுற்றார் என்பதும் எவ்விதம் உயிர் பிழைத்தார் என்பதும் கண்டறியப்படாததாகவே இருக்கிறது ‘’ எனக் கூறியிருக்கின்றனர்.
ஐஸ்கிரீம் சாப்பிட்டு முடித்த பின்னர் ‘’சூரியனுக்குப் பக்கத்துல போனேன்’’ என்றார்.
ஊருக்குப் பக்கத்தில் ஒரு சில்லறை சிமெண்ட் வியாபாரி இருக்கிறார். அவரிடம் எப்போதும் 10 மூட்டை சிமெண்ட் இருக்கும். எவரும் அவரசரமாக ஒரு மூட்டை இரண்டு மூட்டை வேண்டும் என்றால் அவரிடம் வாங்குவார்கள். அவரை ஒரு நாகப்பாம்பு கடித்து விட்டது. மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். பின்னர் உடல்நலம் மீண்டு வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அவரைக் கண்டு நலம் விசாரிக்கச் சென்றேன். ‘’சார் ! மூச்சு மட்டும் தான் ஃபீல் பண்ணன். சூரியனுக்குப் பக்கத்துல போய்ட்டன்’’ என்றார்.
யோகா வகுப்புகளில் ‘’மூச்சை கவனியுங்கள்’’ என்பார்கள். சாமானியமாக மனிதர்களுக்கு மூச்சு என ஒன்று இருக்கிறது எனும் கவனம் கிடையாது. உடல் இருப்பதை அறிவார்கள். மனம் இருப்பதை அறிவார்கள். அந்த இரண்டும் அவர்கள் நேரடி அனுபவத்தில் இருக்கும். மூச்சு சாமானியமாக கவனத்துக்கு வராது. ஏனென்றால் மூச்சு சூட்சுமமானது. அதனைக் கவனித்தல் என்பது அபூர்வம். விளையாட்டு வீரர்கள், ராணுவ வீரர்கள், தீவிரமான உடல் உழைப்பு கொடுப்பவர்கள், நீச்சல் அடிப்பவர்கள் ஆகியோருக்கு ‘’மூச்சைக் கவனித்தல்’’ என்னும் தன்மை இயல்பாக இருக்கும். உடலைக் கடுமையாகப் பயிற்றுவிப்பதன் மூலம் மூச்சு அடையும் மேனிலையை அவர்கள் அனுபவபூர்வமாக உணர்வார்கள். அவர்களிடம் அதனை வார்த்தையாக சொல்லுங்கள் என்று சொன்னால் அப்படி ஒன்று இருக்கிறது என்பது கூட அவர்களுக்குத் தெரிந்திருக்காது. அவர்கள் வாழ்க்கை அனுபவத்துடன் அது வேறுபடுத்த முடியாததாக இருக்கும்.
ஹாஸ்யம் : சமீபத்தில் சாவின் பக்கத்தில் சென்று வந்து ஓவியம் வரைந்தவரும் ‘’கார்லிக் ஜூஸ்’’ குடித்த எனது நண்பரும் நாகப்பாம்பு கடித்த சிமெண்ட் வியாபாரியும் என மூவருமே சூரியனுக்குப் பக்கத்தில் போனதாகவே சொல்கிறார்கள்.