Tuesday, 17 March 2026

நீங்குதல்

யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன். 

-திருக்குறள்.  

யாதொரு பொருளின் யாதொரு பொருளின் நீங்கினான், அவன்
அப்பொருளால் துன்பம் எய்துதல் இலன்.

-பரிமேலழகர் உரை

***

எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவர் எங்கள் குடும்ப நண்பர். நான் பிறப்பதற்கு முன்பிருந்தே எங்கள் குடும்ப நண்பர். அவர் ஓர் அலாதியான மனிதர். சீர்காழியைச் சேர்ந்தவர். அவருடைய பழைய வீடு சீர்காழியில் இருக்கிறது. பல ஆண்டுகளாகவே மிகவும் மதிப்பு மிக்க சொத்து. கோடிக்கணக்கான மதிப்பு கொண்டது. அதனை விற்பனை செய்தால் அவர் அந்த ஊரின் பெரிய பணக்காரர்களில் ஒருவராக இருப்பார். எனக்குத் தெரிந்து அந்த சொத்தை 25 ஆண்டுகளாக விலைக்குக் கேட்கிறார்கள். நண்பர் எந்த பதிலும் சொல்வதில்லை. அவரது சிறப்பியல்பு என்னவெனில் யார் எதற்கு அழைத்தாலும் அவர்களுடன் சென்று விடுவார். திருமணம், மங்கள நிகழ்ச்சிகள், துக்கம் என அனைத்துக்கும் சென்று விடுவார். இவ்விதமான நிகழ்வுகளின் அனைத்து பணிகளும் அவருக்குத் தெரியும். மூன்று நான்கு நாட்கள் இருந்து எல்லா பணிகளையும் முடித்துக் கொடுத்து விட்டு தான் வருவார். ஒரு மளிகைக் கடையில் வேலை பார்த்தார். வருடத்தில் 100 நாட்கள் கடையில் இருந்தால் மிகப் பெரிய விஷயம். ஆனால் கடைக்காரர் ஏன் அடிக்கடி விடுப்பு எடுக்கிறீர்கள் எனக் கேட்க மாட்டார். நண்பரின் சுபாவம் அவருக்குத் தெரியும். நான் பிறந்து மருத்துவமனையில் இருந்த தினத்திலேயே என்னைக்  காண வந்தவர்களில் ஒருவர். என்னை விட பல வயது பெரியவர். இருப்பினும் சிறு குழந்தையாயிருந்த நாளிலிருந்து அவரை அண்ணன் என்றே அழைப்பேன். 

அவரைப் பற்றி சொன்னால் நிறைய நிகழ்வுகள். இன்று எங்களுக்குள் நிகழ்ந்த உரையாடலை மட்டும் குறிப்பிடுகிறேன். 

***

இன்று காலை மரணத் தறுவாய் குறித்து எழுதியதும் மரணம் குறித்து நிறைய யோசித்துக் கொண்டிருந்தேன். காலை 10 மணி அளவில் ஒரு மரணச் செய்தி வந்தது. அங்கே செல்ல வேண்டும். இங்கிருந்து 2 மணி நேர பைக் பயணம். அண்ணனுக்கு ஃபோன் செய்தேன். 

‘’அண்ணன் ! ஊர்ல இருக்கீங்களா? ஒரு ‘’டெத்’’க்கு போகணும்’’

‘’இங்க தான் தம்பி இருக்கன்.’’

‘’நான் இன்னும் 1 மணி நேரத்துல கிளம்பிடுவேன். நீங்க எங்க வரீங்க?’’

‘’நான் பை பாஸ்-ல நிக்கறன். வந்துடுங்க’’

ஒரு ஆவணம் தயார் செய்ய வேண்டியிருந்தது. ஆவண எழுத்தரைப் பார்த்து தயார் செய்யச் சொல்லி பணியைத் துரிதப்படுத்தி விட்டு கிளம்பினேன்.

புறவழிச்சாலையில் சட்டநாதபுரம் திரும்பியதும் அண்ணனிடமிருந்து ஃபோன். நான் வழக்கமாக பிக் அப் செய்யும் இடத்துக்கு வந்திருந்தார். 

***

பங்குனி வெயில். 

நாங்கள் சென்று கொண்டேயிருந்தோம். 

’’அண்ணன்! நீங்க பிறந்த வருஷம் என்ன?’’

‘’தெரியல. ஞாபகம் இல்ல’’

ஞாபகம் இல்லையெனில் சற்று முயன்று ஞாபகத்துக்குக் கொண்டு வந்து விடலாம். தெரியவில்லை என்றால் சிரமம் தான். 

‘’அண்ணன் உங்க மேரேஜ் எந்த வருஷம் நடந்தது? அப்ப உங்களுக்கு என்ன வயசு?’’

‘’1996. அப்ப எனக்கு 35 வயசு’’

’’அப்ப நீங்க பிறந்த வருஷம் 1961. இப்ப உங்களுக்கு 65 வயசாகுது’’

கொள்ளிடத்தைத் தாண்டி விட்டோம். 

‘’அண்ணன் நீங்க சீர்காழி. நான் மாயரம். நம்மகிட்ட 10 வருஷம் முன்னாடி யாராவது நாம இப்படி நம்ம ஏரியால 4 வழிச் சாலைல போவோம்னு சொல்லியிருந்தா நாம நம்பியிருப்போமா?’’

‘’நம்பவே முடியாத விஷயம். உண்மையாயிருக்கு.’’

50 நிமிடங்களில் கொள்ளிடத்திலிருந்து கடலூர் சென்று விட்டோம். துக்க நிகழ்வில் இறுதி மரியாதை செலுத்தி விட்டு வெளியேறினோம். 

***

’’அண்ணன் ! இன்னைக்கு நியூஸ் பேப்பர்ல ஒன்னு படிச்சன். அதாவது சாவுக்கு ரொம்ப பக்கத்துல போன ஒருத்தருக்கு சாவுக்கு அப்புறம் நடக்க இருக்கற விஷயங்கள் தெரிஞ்சுருக்கு. அத அவர் ஒரு படமா வரைஞ்சிருக்கார்.’’

‘’அந்த படம் எப்படி இருக்கு’’

‘’பூமி சுத்திட்டு இருக்கு. மேலே சூரியன் இருக்கு. அதுக்கு நடுவுல ஒவ்வொரு உயரத்துல ஒவ்வொரு லைன் இருக்கு. அந்த லைன்ல நிறைய ஜீவன் லாம் நிக்குது. எல்லாத்துக்கும் மேல சூரியன்.’’

அண்னன் அந்த காட்சியை கற்பனை செஞ்சு பாத்தார். 

‘’நாம இப்ப டெத் வீட்டுக்கு போனோம்ல அந்த ஜீவனுக்கு என்ன நடந்ததுன்னு தெரியாது. உடம்பிலிருந்து நீங்கிடும். ஆனா உடம்பு பக்கத்துலய இருக்கும். ஏன்னா பல வருஷம் இருந்த இடம். அதனால என்ன செய்யணும்னா ஒருத்தர் இறந்திட்டா 6 மணி நேரத்துக்குள்ள அந்த சடலத்தை தகனம் செஞ்சிடணும். இனிமே அதுக்கு இங்க வேலை இல்ல. மெல்லவோ வேகமாவோ அது வானத்தை நோக்கி   போகணும். அது போய் சேர வேண்டிய இடம் அதுதான். கூட இருக்கறவங்க அந்த பயணத்துக்கு அந்த வழியனுப்பலுக்கு ஹெல்ப் பண்ணனும். பயணத்தை டிலே செய்துட கூடாது’’

அண்ணன் யோசித்தார். 

‘’பூமிக்கும் வானத்துக்கும் நடுவ கோடு கோடா இருக்குல்ல. அது ஒவ்வொன்னும் ஒவ்வொரு குரூப். இப்ப நீங்க இருக்கீங்க. உங்களுக்கு நிகழ்ச்சிகள்ல கலந்துக்கறது இண்ட்ரஸ்ட். அந்த மாதிரி இருப்பவங்க ஒரு குரூப் நிப்பாங்க. விளையாட்டுல இண்ட்ரஸ்ட் இருக்கறவங்க ஒரு குரூப்பா நிப்பாங்க. அமைதியா இருக்கணும்னு நினைக்கறவங்க ஒரு குரூப்பா இருப்பாங்க. ( அப்போது ஒரு டாஸ்மாக் கடை அங்கே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது) குடிபோதைல இண்ட்ரற்ஸ்ட் இருக்கறவங்க இன்னொரு குரூப்பா இருப்பாங்க. நாம அதில ஏதாவது ஒன்னுல போய் சேர்ந்திடுவோம். நாம எதை விரும்புறோமோ அதுல இருப்போம். நல்லதை விரும்பியிருந்தா நல்லதோட. கெட்டதை விரும்பியிருந்தா கெட்டதோட. திரும்ப பூமிக்கு வரணும். இன்னொரு ஜென்மம் வாழணும்’’

சொல்லும் போது எனக்கும் கேட்கும் போது அண்ணனுக்குமே சோர்வாக இருந்தது ; இன்னொரு ஜென்மத்தை நினைச்சா. 

‘’ஆனா சில ஜீவன்கள் மட்டுமே மேலே உயரத்துக்கு போயிடுறாங்க. உடல்லயிருந்து உயிர் நீங்கனதும் எங்கயும் நிக்காம வானத்துல போய்ட்டேயிருக்காங்க. சூரியனுக்கும் மேல கடவுள் இருக்கார். அவர்ட்ட போயிடுறாங்க. அவங்க திரும்ப பூமில ஒரு ஜீவனா கருப்பைல பிறக்க மாட்டாங்க. 100 கோடி மனுஷ ஜீவன்ல ஒருத்தருக்குத்தான் இது சாத்தியம் ஆகுது. ‘’

’’அடுத்த ஜென்மத்துல மனுஷங்க மனுஷங்களாதான் பிறப்பாங்களா?’’ அண்ணன் கேட்டார்.  

‘’தெரியாது அண்ணன் ! ( அங்கே ஒரு உடும்பு ஓடியது. ஒரு பசு மாடு நின்றது) . உடும்பா கூட பொறக்கலாம். பசு மாடா பொறக்கலாம். இந்த பசு மாடும் உடும்பும் அடுத்த ஜென்மத்துல மனுஷனா பொறக்கலாம்’’ 

இருவரும் மௌனமாகி விட்டோம். 

‘’காசில அண்ணன் சடலங்களை எடுத்துட்டு போகும் போது ‘’ ராம் நாம் சத் ஹை’’ அப்படின்னு சொல்லுவாங்க. அதாவது இந்த உலகத்துல ராம நாமம் மட்டும்தான் சத்தியம் அப்படின்னு அர்த்தம்’’

நம் நாட்டில் எவர் தான் ராமன் கதையை ஆர்வமாகக் கேட்காதவர் ? ஆர்வமாகச் சொல்லாதவர்?

‘’அடுத்த நாள் காலைல பட்டாபிஷேகம். முதல் நாள் ராத்திரி கூப்பிட்டு கைகேயி சொல்றாங்க. (கம்பன் பாடலைச் சொன்னேன்). 

ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள நீ போய்த்
தாழ் இருஞ் சடைகள் தாங்கி தாங்க அருந் தவம் மேற்கொண்டு
பூழி வெங் கானம் நண்ணி புண்ணியத் துறைகள் ஆடி
ஏழ் இரண்டு ஆண்டின் வா என்று இயம்பினன் அரசன் என்றாள்.

உலகமே பெருசு. கடல் சூழ்ந்த உலகம் இன்னும் பெருசு. நீ சடாமுடி தரித்து நிறைய தவம் செஞ்சு காட்டுல இருந்துட்டு தூரத்தில இருக்கற புண்ணிய நதிகள்ல நீராடிட்டு 14 வருஷத்துக்கு அப்புறம் வா. இந்த 14 வருஷம் கேட்க பெருசா தெரிய போகுதுண்ணு ஏழிரண்டு ஆண்டுன்னு சொல்லப்படுது. ஏழு இரண்டு எவ்வளவு “

அண்னன் ‘’14’’ என்றார். 

‘’என்னடா இப்படி ஆயிடுச்சேன்னு ராமன் நினைச்சு மனசு வருத்தப்பட்டிருக்கலாம். எல்லா ராஜ்யத்தையும் சேர்ந்தவங்க வந்திருக்காங்க. முக்கியமான அரசு நிகழ்வு நடக்கலண்ணா நம்ம நாட்டைப் பத்தி தப்பா நினைப்பாங்களேன்னு நினைச்சுருக்கலாம். வசிஷ்டர் வார்த்தை தப்பா போய்டக் கூடாதேன்னு யோசிச்சிருக்கலாம். ஆனா அவர் எதையுமே நினைக்கல. அவர் மனசுல துளி கூட வருத்தம் இல்ல. கம்பன் சொல்றான் ; ‘’ராஜ்யம் இல்லை ; காட்டுக்குப் போ’’ன்னு சொன்னப்ப ராமன் மகன் ‘’அன்றலர்ந்த தாமரை முகத்தினன்’’ அப்படிங்கறான். அவன் முகம் 10 செகண்ட் முன்னாடி பூத்த தாமரைப்பூ மாதிரி இருந்துச்சாம். ‘’

இருவரும் மீண்டும் மௌனமாகி விட்டோம். 

’’ஒரு மனுஷன் அடையக்கூடிய உச்சபட்சமான வாழ்க்கை ராமனுடைய வாழ்க்கை. ராஜ்யத்தை இழந்தான். அத பெருசா நினைக்கல. காட்டுல கஷ்டமான வாழ்க்கை வாழ்ந்தான். அதயும் பெருசா நினைக்கல. மனைவியைப் பிரிஞ்சு வேதனைப்பட்டான். அவங்களை திரும்பக் கண்டடைஞ்சான். திரும்ப ராஜ்யம். திரும்ப பிரிவு. குழந்தைகள் கூட இருக்க முடியல. ஆனா ராமன் எல்லா துன்பத்தையும் ஏத்துக்கிட்டு செய்ய வேண்டியதை செஞ்சுட்டு இருந்தான். ராமன் கிட்ட ஒவ்வொரு மனுஷனுக்கும் படிக்க பாடம் இருக்கு. நாம பொருளை இழந்திருக்கோமோ முயற்சி செஞ்சா திரும்ப கிடைக்கும்ங்கறது ராமன் வாழ்க்கைல இருக்கு. ஒரு பின்னடைவா அத இல்லாம ஆக்க முடியும் இதுவும் ராமன் வாழ்க்கைல இருக்கு. அவன் வாழ்க்கைய பாத்து நாம நிறைய கத்துக்கலாம்’’

***

கொள்ளிடம் பாலத்தைத் தாண்டினோம். 

‘’ மண்ணில இருந்து வானத்துக்கு போற பயணத்துக்கு எதுவும் கூட வராது. நாம சேர்த்த செல்வம் நம்மோட சொந்த பந்தங்கள் எதுவும் வராது. அந்த பயணம் ரொம்ப தூரம்ங்கறது மட்டும்தான் தெரியுது. வேற என்ன சொல்றதுன்னு தெரியல’’

அண்ணனை சீர்காழியில் டிராப் செய்து விட்டு கிளம்பினேன்.