எனக்கு 10 வயதான போது சோவியத் யூனியன் உடைந்தது. சிறுவனான நான் தமிழகச் சூழலிலும் இந்தியச் சூழலிலும் அதன் பின்னும் கம்யூனிசம் ஒரு வலுவான குரலாக ஒலிப்பதை ஆச்சர்யமாகப் பார்த்தேன். கம்யூனிஸ்டுகள் கருத்தியல் இதழியல் கலை நுண்கலைத் தளங்களில் நிரம்பியிருந்தனர். பெரும்பாலான கட்சிகள் சிறிய கட்சிகளிலிருந்து பெரிய கட்சி வரை கம்யூனிச சித்தாந்தத்தை ஆதரித்துப் பேசின. நாட்டின் பெரிய கட்சியாயிருந்த காங்கிரஸ் கட்சி கூட இடதுசாரி சிந்தனைகள் கொண்டவர்களால் நிரம்பியிருந்தது. நாட்டின் அதிகாரவர்க்கம் மற்றும் வங்கிகள் கம்யூனிச யூனியன்கள் கையில் இருந்தன. மார்க்ஸ் பார்த்த வகையில் உலகை உலகியலை மானுட சமூகங்களைப் பார்த்து அவற்றின் இயங்குமுறையைத் தீர்மானிக்க முயன்று கொண்டிருந்தனர் மார்க்ஸிஸ்டுகள். பத்திரிக்கையைத் திறந்தால் இடதுசாரிகள். கடைத்தெருவுக்குச் சென்றால் சிவப்புக் கொடி கட்டிய தெருமுனைக் கூட்டங்கள். மாதம் ஒருமுறையாவது நிகழும் பெரும் வேலைநிறுத்தங்கள். கம்யூனிசத்தை லட்சியவாதமாகவும் கம்யூனிஸ்டை லட்சியவாதியாகவும் காட்டும் முயற்சிகள். உல்ஃபா , மக்கள் யுத்தக் குழு, விடுதலைப் புலிகள் என பல பயங்கரவாத அமைப்புகளின் பயங்கரவாத செயல்பாடுகள். இவற்றை நான் நோக்கிக் கொண்டிருந்தேன்.
என்னுடைய 10 வயதில் நான் பாரதியார் கவிதைகளை எப்போதும் வாசித்துக் கொண்டிருப்பேன். பாரதி எனக்கு தேசமே தெய்வம் எனக் காட்டினான். பூரண ஞானம் பொலிந்த நன்னாடு ; புத்தர் பிரான் அருள் பொங்கிய நாடு’’ என நம் நாட்டைக் குறித்துப் பாடினான். அந்த சொற்களின் உணர்ச்சியே என் சிந்தனைகளை வழிநடத்தியது.
எனக்கு எப்போதுமே கம்யூனிசம் மீது ஈடுபாடு இருந்ததில்லை. கீழை மரபின் பொருளியல் சிந்தனைகளே என்னைக் கவர்ந்தன. மார்க்ஸ், கிராம்ஷி, இ எம் எஸ் நம்பூதிரிபாடு ஆகியோர் மீது எனக்கு பெருமதிப்பு உண்டு. அவர்கள் ஒரு விஷயத்தை நோக்கும் விதத்தை நான் அறிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் செய்வேன். அதன் பின் அதனை விரிவுபடுத்தியும் அதன் மற்ற கோணங்களை ஆராய்ந்தும் அந்த விஷயத்தை முன்னகர்த்தி சிந்திப்பேன். அரசியலுக்கும் பொருளியலுக்குமான நெருக்கமான உறவை முழுமையாகப் புரிந்து வைத்திருந்தவர் மகாத்மா காந்தி. அவரிடம் கோடிக்கணக்கான மக்களுக்கு வாழ்வளிக்கும் பொருளியல் வழிமுறைகளையும் வாழ்வியல் வழிமுறைகளையும் முன்வைக்கும் இயல்பு எப்போதும் இருக்கிறது. அரசு அதிகாரத்தின் எந்த பதவியிலும் அவர் இருந்தது இல்லை எனினும் அவர் தன் இயங்குமுறையாக அதனை கைக்கொண்டிருந்தார். ‘’கதர்’’ ஆடையை நம் தேசத்தவர் அணிய வேண்டும் என்பதற்காக தன் வாழ்நாள் முழுவதும் அவர் கதர் இயக்கத்தை நடத்தியதை இதனுடன் இணைத்துப் புரிந்து கொள்ளலாம்.
இருபதாம் நூற்றாண்டின் துவக்கம் முதல் இன்று வரை கருத்தியல் தளத்தில் இடதுசாரிகளின் ஆதிக்கம் அதிகம் இருந்தது ; இப்போதும் இருக்கிறது. லெனின் தலைமையில் சோவியத் யூனியன் உருவானதிலிருந்து அது உலகெங்கும் தனது உளவு அமைப்புகள் மூலம் எல்லா நாடுகளிலும் கம்யூனிச சித்தாந்தத்தைப் பரப்பியது.
சோவியத் யூனியன் உலகெங்கும் கம்யூனிச சித்தாந்தத்தைப் பரப்பிக் கொண்டிருக்கையில் அதே காலத்தில் ஜோசஃப் ஸ்டாலின் ருஷ்ய நாட்டின் சிறு விவசாயிகள் கோடானுகோடி பேரைக் கொன்று குவித்துக் கொண்டிருந்தார். அவ்விதம் கோடானுகோடி எளிய விவசாயிகளான குடிமக்கள் கொன்றழிக்கப்பட்டனர் என்னும் விஷயமே 1990ம் ஆண்டில் தான் முழுமையாகத் தெரிய்வந்தது. சோவியத் யூனியனின் கம்யூனிச அதிபர் ஜோசஃப் ஸ்டாலினின் கொடுங்கோன்மை முன் அடால்ஃப் ஹிட்லர் ஒரு சிறு புள்ளி மட்டுமே. இன்றும் கம்யூனிசம் என்றால் மனிதாபிமானம் என வெட்கமில்லாமல் கூறுகிறார்கள் கம்யூனிஸ்டுகள்.
சோவியத் யூனியன் உடைந்த பின் கம்யூனிசம் அஸ்தமித்து விட்டது. உலகில் எங்குமே அது பெரிய அரசியல் சக்தி அல்ல. இருப்பினும் நம் நாட்டில் கருத்தியல் தளத்தில் அதன் உயிர் இருக்கிறது.
ஒரு எளிய சாமானியனின் வாழ்வுக்கு எவ்வகையிலேனும் உதவ முடியும் என்றால் அதுவே எனது பொருளியல் கொள்கை. ரூ.100 சம்பாதிக்கும் ஒரு விவசாயிக்கு அவன் விவசாய வருமானத்தை ரூ.150 ஆக்க முடியும் என்றால் அதுவே எனக்கு மாபெரும் மகிழ்ச்சி. நான் மனிதனை நம்புகிறேன் ; அவனைப் புரிந்து கொள்கிறேன். அவன் நல்லியல்பின் மீது நம்பிக்கை வைத்து செயல்படுகிறேன். சனாதனம், சமணம், பௌத்தம் ஆகிய கீழை மரபின் பொருளியல் சிந்தனைகள் ஒட்டு மொத்த மானுடத்துக்கும் வரலாற்றின் தொல்காலத்திலிருந்து வழிகாட்டி வருவதை உலகம் முழுமையாக அறியும் வண்ணம் செய்ய வேண்டும் என்பதே நம் தேசத்தவரின் நம் அனைவரின் கடமை.