Thursday, 19 March 2026

கோடுகளும் சொற்களும்


 எனது பள்ளித் தோழனை வெகுநாட்கள் கழித்து சந்தித்தேன். அவனது குழந்தையை பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தான். அப்போது சற்று நேரம் அளவளாவினோம். நான் எவருக்கும் ஏதேனும் பரிசளிக்க வேண்டும் என்று நினைத்தால் பரிசுப் பொருள் என என் மனதில் உதிப்பது புத்தகமே. அந்தக் குழந்தைக்கு ஒரு புத்தகத்தைப் பரிசளிக்க விரும்பினேன். ஜப்பான் மாங்கா காமிக்ஸ் ‘’புத்தர்’’ வரிசை நூலில் முதல் நூலை வரவழைத்து அதனை அளிக்க முடிவு செய்தேன். புத்தகம் இன்று கைக்கு வந்தது. அதனை வாசித்தேன். 

மாங்கா காமிக்ஸ் நூதனமானது. காணலும் வாசித்தலும் ஒருங்கே நிகழ்வது. அந்த நூலை சொற்களை வாசிக்காமல் ஓவியங்களை மட்டும் கண்டவாறு ஒரு வாசிப்பை நிகழ்த்த முடியும். அதில் இருக்கும் சொற்களை மட்டும் வாசித்தவாறு வேறு வாசிப்பை நிகழ்த்த முடியும். சொற்களையும் ஓவியங்களையும் சேர்த்து மற்றொரு வாசிப்பை நிகழ்த்திக் கொள்ள முடியும். 

வாசிப்பு என்பது சொல்லிருந்து சொற்களின் மூலம் அகத்தில் ஒரு காட்சியை உருவாக்கிக் கொள்வது. வாசிப்பு என்பது அதுவே. மாங்கா காமிக்ஸ் சொல்லுடன் சொல்லுக்கு இணையாகவே நம் கண்களுக்கு ஒரு அகச்சித்திரத்தையும் அளித்து விடுகிறது. சொல் உருவாக்கும் அகச்சித்திரமும் புத்தகத்தில் இருக்கும் சித்திரமும் இணைந்து நூதனமான அற்புதமான அனுபவம் ஒன்றை உருவாக்கிக் காட்டுகின்றன. 

100 பக்கங்களுக்கு மேல் மாங்கா காமிக்ஸ் அனுபவத்தில் மூழ்கியிருந்தேன். அதில் ஒரு காட்சி. சித்தார்த்தன் ஒரு வனத்தில் துறவி ஒருவரைச் சந்திக்கிறான். மரணத்தின் அனுபவம் எப்படி இருக்கும் என்பதை எந்த மனிதன் மூலம் அறிய முடியும் எனக் கேட்கிறான். அப்போது அந்தத் துறவி மரணத்தை மனிதன் மூலம் தான் அறிய முடியுமா என்ன எல்லா உயிர்களும் இறக்கின்றன; எல்லா உயிர்களுக்கும் இறப்பு பொதுவானது . இந்தக் காட்டில் இந்தக் கணத்தில் இறந்து கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான பிராணிகளிடமிருந்து கூட நீ இறப்பை அறிய முடியும் என்கிறார். 

எனக்கு அந்த பகுதி பெரும் அகஎழுச்சியை உருவாக்கியது. 

ஒரு ஈசலிடமிருந்து நாம் இறப்பு குறித்து அறிந்திட முடியும் ; நாம் ஈசலின் அனுபவத்தை உணர முடிந்தால். சில வாரங்கள் மட்டுமே உயிர் வாழும் பட்டாம்பூச்சியிடமிருந்து நாம் இறப்பு குறித்து அறிய முடியும். சில மாதங்கள் வாழும் எறும்பிடமிருந்தும் நாம் மரணம் குறித்து அறிய முடியும். 

மனிதனுக்கு மனித சமூகத்துக்கு மரணம் குறித்த ஆர்வம் இல்லை. மனிதர்கள் மனித சமூகங்கள் மரணத்தை அஞ்சுகின்றன. மரணத்திலிருந்து விலகி ஓட நினைக்கின்றன. மனித குலம் உருவான நாளிலிருந்து இன்று வரை எந்த மனிதரும் மரணிக்க விரும்புவதில்லை ; எந்த மனிதரும் மரணிக்காமலும் இருந்ததில்லை. கோடானுகோடி மனிதர்களில் ஒருவரே சாவை உணர்கிறார் ; அறிகிறார். அவர்களே ஞானியர் ; யோகியர். 

சாவை அறிந்தவனால் மட்டுமே வாழ்வையும் அறிய முடியும்.