Tuesday, 31 March 2026

உத்தரவு

பெயருடன் ஊரை இணைத்துக் கொண்டிருப்பவன் அடியேன். ஊரிலிருந்து புறப்படுவதும் ஊருக்குத் திரும்பி வருதலுமே என் வழமையாக இருந்திருக்கிறது. சிறுவனாக மகிழ்ந்திருந்ததும் இங்கு தான் ; இளைஞனாக வாழ்வை எதிர்கொண்டதும் இங்கு தான். அகத்தின் ஏதோ ஒரு சிறு புள்ளி புதிய நிலம் நோக்கிச் செல் எனக் கூறிக் கொண்டிருக்கிறது. அக்குரலின் உறுதி மாற்றமடையாமல் இருப்பது எனக்கு வியப்பைத் தருகிறது. எந்தப் புதிய நிலம் என என் அகத்தைத் துழாவிப் பார்த்தேன். ஸ்ரீரங்கம் செல்ல வேண்டும் என்னும் விருப்பம் எனக்கு உண்டு. காஞ்சிபுரம் சென்று விட வேண்டும் என்றும் நினைக்கிறேன். கோதாவரி பாயும் ராஜமுந்திரி சென்று விட வேண்டும் என்பதும் என் விழைவு. கர்நாடகாவின் கூர்க் பிராந்தியம் எனக்கு விருப்பமானது. மத்தியப் பிரதேசத்தின் சிறு குன்றுகள் இனியவை. காசியும் ரிஷிகேசமும் என்றைக்குமான விருப்பங்கள். இமயத்தில் வாழ்ந்தால் வாழ்நாளின் மீதி உள்ள நாட்கள் எல்லாம் இமயத்தைப் பார்த்துக் கொண்டேயிருந்தால் அதை விட இன்னொரு இனிமை இருக்க இயலாது. என்ன நிகழப் போகிறது என்பதை அறியேன். அகத்தின் குரலைக்கு செவி சாய்க்கப் போகிறேனா என்பதை அடியேன் நோக்கிக் கொண்டிருக்கிறேன். 

இந்த எண்ணம் ஏன் உருவானது என்பதை என்னால் அத்தனை தெளிவாக வகுத்துக் கொள்ள முடியவில்லை. இந்த ஊர்கள் எவ்விதம் என் தெரிவாக இருக்கின்றன அவற்றின் பொதுத்தன்மை என்ன என்பதும் என்னால் அறிய இயலாததாக இருக்கிறது. எல்லா ஊர்களுமே நதிக்கரையின் ஊர்கள். ஸ்ரீரங்கமும் கூர்க் கும் காவிரிக்கரை ஊர்கள். காசியும் ரிஷிகேசமும் கங்கைக்கரை ஊர்கள். ராஜமுந்திரி கோதாவரிக்கரையில் இருக்கும் ஊர். நதிக்கரையில் பிறந்து வாழ்ந்த நான் இன்னொரு நதிக்கரை நகருக்கே செல்ல விரும்புகிறேன். 

சராசரி வாழ்நாளின் பாதி பங்கு கடந்து விட்டது. மீதி பங்கு எவ்வளவு என்பது என் திட்டமிடலுக்கு உட்பட்ட விஷயம் அல்ல. புதிய நிலத்துக்குச் சென்று ஒவ்வொரு கணமும் புதிதாய் உணரும் வாழ்க்கையை அங்கு வாழ வேண்டும் என விரும்புகிறேன். தினமும் புதிதாக ஏதேனும் கற்றுக் கொள்ளும் வாழ்க்கை. இயற்கையிடமிருந்து பெற்றுக் கொண்டவற்றுக்கு நன்றி தெரிவிக்கும் வாழ்க்கை. துயர் இல்லாத வாழ்க்கை. 

ஒரு புதிய நிலம் நோக்கி செல்வது என்னும் ஆர்வம் சில விஷயங்களை தீவிரமாக உறுதிப்படுத்துகிறது. செல்லும் ஊரில் சொந்தமாக நிலம் எதுவும் வாங்கக் கூடாது. ஏன் இவ்விதம் தோன்றுகிறது என அறியேன். சொந்தமாக நிலமோ வீடோ இல்லாமல் இருப்பது சிறப்பான விஷயம் என்பது என் அபிப்ராயமாக இருக்கிறது. எனது தொழில் கட்டுமானமும் மனை வணிகமும். இருப்பினும் என் அபிப்ராயம் இதுவே. இது மிக உறுதியான எண்ணம் அல்ல எனினும் நாம் ஒரு தொழில் செய்கிறோம் அந்தத் தொழிலுக்கு ஒரு சொந்த இடம் இருப்பது நல்லது எனில் நிலம் வாங்கி அதில் வீடு கட்டிக் கொள்ளலாம். வட இந்திய வணிகர்களுக்கு இந்த வழக்கம் உண்டு. அவர்கள் வீடுகள் பெரும்பாலும் கடைவீதியில் இருக்கும் ; அவர்களின் வணிகத்துக்குரிய கடை கீழ்தளத்திலும் வீடு மேல்தளத்திலும் இருக்கும். ஒருவர் கையில் பணம் இருக்கிறது அவர் ஒரு புதிய ஊருக்கு இடம் பெயரப் போகிறார் என்றால் அங்கே கையில் இருக்கும் பணத்தை வீடாக மாற்ற வேண்டியதில்லை. சொந்தமாக வீடு இல்லை என்றால் எந்த ஊருக்கும் சென்று அங்கே ஓராண்டோ இரண்டு ஆண்டுகளோ வாழ்ந்து விட்டு அடுத்த ஊருக்குச் செல்லலாம். பெங்களூரில் இரு ஆண்டுகள் ; ஸ்ரீகாகுளத்தில் இரு ஆண்டுகள்; திருவண்ணாமலையில் இரு ஆண்டுகள்; நாகபுரியில் இரு ஆண்டுகள் ; கௌஹாத்தியில் சில ஆண்டுகள் ; ஸ்ரீநகரில் சில ஆண்டுகள். எண்ணிப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. 

இங்கிருந்து புறப்படுவது என்று மனதுக்குத் தோன்றி விட்டது. அந்த எண்ணத்தை தெரிவித்து உத்தரவு பெற வேண்டும் என எண்ணுகிறேன். யாரிடம்? மாயூரநாதரிடமும் அபயாம்பிகையிடமும். திருஇந்தளூரின் பரிமள ரங்கநாதனிடம். இறை உரு முன் சென்று நிற்கப் போகிறேன். எனக்கான உத்தரவை அவர்களே கொடுக்கட்டும் என்று. 

என் மண்ணே ! என் நிலமே ! எனக்கு நீ எவ்வளவோ அளித்தாய். இப்போதும் அளித்துக் கொண்டிருக்கிறாய். கூட்டை விட்டுப் பறக்க வேண்டும் என்பதே பறவைகளின் தணியாத தாகம். எல்லையற்ற வானத்துக்குப் பறந்து செல்ல தளம் அமைத்துக் கொடுத்தலே கூட்டின் இயல்பு. என் மண்ணே! என் நிலமே ! உன் கூட்டிலிருந்து எல்லையற்ற வானம் நோக்கி இந்தப் பறவை பறந்து செல்லட்டும். என் மண்ணே ! என் நிலமே ! எனக்கு எப்போதும் ஆசியளி.