Saturday, 2 May 2026

சிவபுரம்

மாணிக்கவாசகரின்

பூவார் சென்னி மன்னன் என் புயங்கப் பெருமான் சிறியோமை

ஓவா துள்ளம் கலந்துணர்வாய் உருக்கும் வெள்ளக் கருணையினால்
ஆவா என்னப் பட்டன் பாய் ஆட்பட் டீர்வந் தொருப்படுமின்

போகும் காலம் வந்தது காண் பொய் விட்டு உடையான் கழல் புகவே

என்னும் பாடல் கடந்த சில வாரங்களாக மனதுக்குள் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தது. நாளின் பல சந்தர்ப்பங்களில் மீண்டும் மீண்டும் மனதில் வந்து நின்றது. ஊரை விட்டுப் புறப்படுவோம் என்ற எண்ணம் வந்ததால் இந்தப் பாடல் இன்னும் மனதுக்கு நெருக்கமானது. 

மாணிக்கவாசகரின் திருவாசகத்தில் ‘’யாத்திரைப் பத்து’’ என்னும் பகுதியில் இடம் பெற்றிருக்கும் பாடல் இது. எளிய ஜீவன்கள் ஒன்று கூடுகின்றன. அவற்றுக்கு முழுமுழுமையான பரம்பொருளைக் காணச் செல்ல வேண்டும் என ஆவல். அந்த ஆவல் உண்மையானது . தீவிரமானது. ஆனால் அவை தாம் கர்மவினைகளிலும் பாச பந்தங்களிலும் சிக்கியிருக்கும் இன்னும் விடுபடாத முடியாத நிலையில் இருக்கும் ஜீவன்கள் என தங்களை அறியும். அவற்றின் எல்லைகள் அவற்றுக்கு மிக நன்றாகவே தெரிகிறது. அவற்றை நம்பிச் சென்றால் பயணத்தை நிறைவு செய்து இலக்கை அடைய வாய்ப்பில்லை என்பதால் இப்பயணத்தை எவ்விதம் துவக்குவது எனத் தெரியாமல் திகைத்து நிற்கின்றன. மாணிக்கவாச்கர் அவற்றிடம் நம் ஆற்றலை நம்புவதை விட நமது இறைவனின் கருணையை நம்பிப் பயணிக்கலாம். அவன் நம் மீது கருணை கொண்டு நம் பயணத்தை நிறைவேற்றுவான் என நற்சொல் கூறுகிறார். ‘’யாத்திரைப் பத்தில்’’ சிவனின் இருப்பிடத்தை மாணிக்கவாசகர் சிவபுரம் என்கிறார். 

எனக்கு முதல் பாடலில் உள்ள 

‘’போகும் காலம் வந்தது காண்’’ என்னும் வரியும் ‘’பொய் விட்டு உடையான் கழல் புகவே’’ என்னும் வரியும் உணர்ச்சிகரமான வரிகளாக இருந்தன. ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு சென்று விட வேண்டும் என்னும் உணர்வு தீவிரமாக இருக்கும் எனக்கு ‘’போகும் காலம் வந்தது காண்’’ என்னும் வரி மனதுக்கு மிக நெருக்கமாகிப் போனது. 

இங்கே செய்து முடிக்க வேண்டியதை எல்லாம் விரைவில் செய்து முடித்து விட்டு புறப்பட வேண்டும். நிறைவுப் பணிகள் என வரையறுத்துக் கொண்டு செல்ல நினைக்கும் ஊரிலிருந்து கூட இங்கே வந்து அவற்றை நிறைவு செய்யலாம் என அவ்வப்போது எண்ணம் கொண்டேன். 

சிவன் நினைவில் எப்போது முழுமையாக மூழ்குகிறோமோ அப்போது அந்நிலையில் நாம் இருக்கும் எல்லா ஊரும் சிவபுரமே. சிவபுரம் புறத்தில் இல்லை. அகத்தில் இருக்கிறது. 

இன்று திருக்குடந்தை அருகில் இருக்கும் சிவபுரம் என்னும் ஊருக்குச் சென்றிருந்தேன். அங்கே கோயில் கொண்டிருக்கும் இறைவனின் பெயர் சிவகுருநாதன். அம்மையின் பெயர் ஆர்யாம்பாள். அங்கப் பிரதட்சணம் செய்யும் வழக்கம் கொண்ட ஒரே சிவன் கோவில் இதுவே. ஆலயத்தில் சில நிமிடங்கள் கண் மூடி அமரும் போது ஆழ்ந்த அமைதி ஒன்றை உணர முடிகிறது.