Saturday, 2 May 2026

மோனப் பெரு வெளி (நகைச்சுவைக் கட்டுரை)

 பூம்புகாருக்கு அருகில் எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். சமயத்தில் பூம்புகார் செல்லும் போது அவருக்கு ஃபோன் செய்வேன். ஊரில் இருந்தால் அவரை அழைத்துக் கொண்டு கடற்கரைக்குச் செல்வேன். பல ஆண்டுகளாக இவ்விதமாக நாங்கள் கடற்கரைக்குச் சென்றிருக்கிறோம். நேற்று ‘’சித்திரைப் பௌர்ணமி’’ . எனவே பூம்புகாருக்குச் சென்றோம். சிலப்பதிகாரத்தில் சித்திரை மாத முழுநிலவு நாளில் பூம்புகாரில் நடக்கும் இந்திர விழா குறித்து ‘’இந்திர விழா எடுத்த காதை’’ உள்ளது. அந்தக் காதையில் தான் மாதவியைக் கோவலன் காண்பது நிகழும். மாதவியை இளங்கோ அந்தக் காதையில் தான் அறிமுகம் செய்வார். இந்தக் காதையில் மாதவியை இளங்கோ காட்டும் இடம் மிகவும் நுட்பமானது. மாதவி நடனம் ஆடும் நடனமேடையின் வர்ணனையை மட்டுமே இளங்கோ அளிப்பார். அந்த மேடையில் எவ்விதமான மலரலங்காரங்கள் இருந்தன. எவ்விதமான நிறங்கள் இருந்தன. மேடையை அழகுபடுத்தும் துகில்கள் குறித்த குறிப்புகள். இவற்றை மட்டுமே இளங்கோ சொல்லிக் கொண்டு வருவார். முதல்முறை அதனை வாசித்த போது என் அகம் அந்த எழிலார்ந்த மேடையை கற்பனை செய்து கொண்டே வந்தது. அத்தனை அழகிய மேடையில் மாதவியின் நடனம் நடந்தது எனக் கூறும் போது அவள் எத்தனை அழகாக இருப்பாள் என வாசகனின் மனமே கற்பனை செய்து கொள்ளும். அந்த கற்பனை மகத்தானதாக இருக்கும். உலக இலக்கியத்தில் இவ்வாறான உத்தியை வேறு படைப்பாளிகள் எவரும் பயன்படுத்தியிருக்கிறார்களா என்பது ஐயமே. பூம்புகார் உள் நுழைந்ததுமே ‘’இந்திர விழா’’ என்னும் சொல் என் மனதில் நிறைந்தது. ‘’தேவேந்திர விழா’’ என்னும் புதிய சொல்லும் என் மனத்தில் புதிதாக உலவத் தொடங்கியது. 

கடற்கரையில் அமர்ந்து கொண்டோம். அதற்கு முன் சிறு பொழுது அலைகளில் நின்று கொண்டிருந்தோம். அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்த போது நண்பரிடம் சிறிது நேரம் கண் மூடி அமர விரும்புகிறேன் எனக் கூறி அவ்விதமே செய்தேன். பூரண ஞானம் பொலிந்த நன்னாடு ; புத்தர் பிரான் அருள் பொங்கிய நாடு’’ என்னும் வரி மனதுக்குள் நிறைந்தது. எனக்கு மிகவும் பிடித்த வரிகள் இவை. ஒளிர்தல் ஞானத்தின் இயல்பு என்பதால் பாரதி பொலிதல் என்கிறான். அருள் பிரவாகிப்பது என்பதால் பொங்குதல் என்கிறான். மனிதர்கள் அருள் என்பதை துளியளவில் மட்டுமே உணர்கின்றனர். எனவே சாமானியர்களுக்கு அருள் என்பது ஒரு துளியே. எங்கும் நிறைந்திருக்கும் அருளை முழுமையாக உணர இயலாமல் சாமானியர்களின் அறியாமையும் பந்த பாசங்களும் தடுக்கின்றன. கோடானுகோடியில் ஒருவரை எங்கும் நிறைந்திருக்கும் அருளை முழு வடிவில் காண்கின்றனர். அத்தகையோர் அருள் குறித்து முதல் சொல்லே அருள் என்பது பொங்கிப் பாயும் பிரவாகம் என்பதையே. மாணிக்கவாசகர் வெள்ளக் கருணை என்கிறார். அருட்கடல் என்னும் வார்த்தை உள்ளது. 

நண்பரிடம் ஏன் ஒரே ஊரில் எப்போதும் வசிக்க வேண்டும் என்னும் வினா என்னுள் இருப்பதாகவும் ஊரைத் தவிர ஸ்ரீரங்கத்திலும் காஞ்சிபுரத்திலும் ஒரு வீடு எடுத்து தங்க இருப்ப்பதாகவும் சொன்னேன். நண்பர் ஊரை விட்டுப் போகாதீர்கள் என்றார். இங்கேயும் இருப்பேன் ; அங்கேயும் இருப்பேன் என்று சொன்னேன். ‘’பூம்புகார் மிஸ் பண்ணுவன். ஆனா காஞ்சிபுரத்துல இருந்தா அங்கிருந்து மாமல்லபுரம் பக்கம் தான். அங்க போவன். ஊர் தான் வேற ; கடல் அதே வங்கக் கடல் தான்’’ என்றேன். 

புத்தரைப் பற்றிய பேச்சு வந்ததால் மகாவீரரைப் பற்றியும் பேச்சு வந்தது. ‘’ உளுந்தூர்பேட்டை பக்கத்துல திருநெடுங்குன்றம் என்னும் ஊர் இருக்கு. அங்க ஒரு ஜெயின் குகைக்கோயில் இருக்கு. குந்தவை நாச்சியார் நிவந்தம் அளித்த குகைக் கோயில். நானும் ஃபிரண்டும் போயிருந்த போது அங்க ஒரு ஸ்கூல் டீச்சர் வந்திருந்தாங்க. அவங்க சமணர். அவங்க சொன்னாங்க ‘’தீர்த்தங்கரர்கள் தவம் செய்றது ஒரு மோனப் பெரு வெளி. அங்க மௌனம் மட்டும் தான் இருக்கு. அவங்க அந்த மௌனமா நிறைஞ்சு இருக்காங்க. அவங்களுக்கு மனுஷங்களோட சந்தோஷத்தின் எக்காளங்களோ துயரத்தோட அரற்றல்களோ எதுவுமே கேக்காது. அங்க மௌனம் மௌனம் மௌனம் மட்டும் தான். கால பைவரவரும் பத்மாவதி யட்சியும் மட்டும் தான் சாமானிய உலகத்தில இருந்துட்டு மோனப் பெரு வெளிக்கும் போய்ட்டு வரவங்க. உங்க பிராத்தனைகளை நீங்க அவங்க கிட்ட மட்டும் தான் சொல்லணும்.’’. நண்பரிடம் அதனைக் கூறி விட்டு ‘’ஒட்டு மொத்த பிரபஞ்சமும் அந்த மோனப் பெரு வெளியை நோக்கித்தான் போகுதுன்னு நான் நினைக்கிறேன். இந்த பனை மரத்துக்கு அங்க போய் சேர மூணு கோடி வருஷம் ஆகும். எனக்கு நாலு கோடி வருஷம் ஆகலாம். உங்களுக்கு ஐம்பது லட்சம் வருஷம் ஆகலாம்’’ எனச் சொன்னேன். என்னை விட எட்டு மடங்கு வேகம் நண்பர் கொண்டிருக்கிறார் எனச் சொன்னால் அவர் மகிழ்வார் என எண்ணித்தான் அவரிடம் சொன்னேன். மோனப் பெரு வெளிக்கு அவர் போக இன்னும் ஐம்பது லட்சம் வருஷம் ஆகுமா என்ற அங்கலாய்ப்பே அவருக்கு ஏற்பட்டது.