Wednesday, 27 May 2026

மனை பிராப்தி

வீடு மனை வாகனப் பிராப்தி எனக் கூறுவார்கள். பிராப்தி என்றால் என்ன என்று எனக்குத் தெரியும். இணையத்தில் பிராப்திக்கு சமமான தமிழ்ச்சொற்கள் எவை என்று தேடினேன். பல சொற்கள் இருந்தது ; அதில் ஒன்று கொடுப்பினை. ராஜசுந்தர்ராஜனின் கவிதை ஒன்றின் தலைப்பு கொடுப்பினை என்பது நினைவுக்கு வந்தது. 

கொடுப்பினை

------------------------

இரா முழுக்கத் 
தவம் கிடந்தன
வான் நிறைய மீன்கள்
பரிதியை
நேர்நின்று கண்டதோ
விடிய வந்த ஒரு வெள்ளி

-ராஜசுந்தர்ராஜன் 

ரியல் எஸ்டேட்டில் இருப்பவன் என்பதால் வீடு பிராப்தி , மனை பிராப்தி எவ்வளவு முக்கியம் என்பதை அறிவேன். இந்தத் தொழிலுக்கு வாகன பிராப்தியும் மிக முக்கியம். ஓரிடத்துக்குச் செல்ல வேண்டும் என மனம் நினைத்தால் நம் கையில் இருக்கும் வாகனத்துக்கு நம்மை விட அந்த எண்ணம் அதிகமாக ஏற்பட வேண்டும். நாம் கையில் வைத்திருக்கும் வாகனத்துடன் நமக்கு ஒரு உரையாடல் இருக்க வேண்டும். அதுதான் உச்சபட்சமான வாகன பிராப்தி. இன்று வாகனம் என்பது உருளியாக ஆகியுள்ளது. 150 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஜீவன்களே வாகனங்களில் முக்கியமாக இருந்திருக்கின்றன. மாடு, குதிரை ஆகியவை மனிதர்களைச் சுமந்திருக்கின்றன. சமணத் துறவிகள் 2500 ஆண்டுகளாக ச்கடம் வைத்த எந்த வண்டியிலும் ஏறுவதில்லை என்னும் நெறி கொண்டவர்கள். இப்போதும் அந்த நெறி கொண்டிருக்கும் சமணத் துறவிகள் உண்டு. அவர்கள் எங்கு சென்றாலும் எத்தனை கிலோமீட்டர் சென்றாலும் நடந்தே செல்வார்கள். ராணா பிரதாப் சிங்கின் குதிரையின் பெயர் சேட்டக். மொகலாயர்களை எதிர்த்து ராணா பெரும் யுத்தம் நிகழ்த்திய போது அவருக்கு உறுதுணையாக இருந்தது சேட்டக். தன் உயிரைக் கொடுத்து ராணாவின் உயிரைக் காத்தது சேட்டக். இந்தியாவில் பஜாஜ் நிறுவனம் 1980களில் அறிமுகப்படுத்திய ஸ்கூட்டருக்கு ராணாவின் குதிரையின் பெயரான சேட்டக் என்பதைச் சூட்டியது. 

இன்று காலை ஒரு ரியல் எஸ்டேட் குழு வருகை தந்தது. ஊருக்கு 40 கிமீ தெற்கே இருக்கும் ஊரின் பெயரைச் சொல்லி அங்கே ஓர் இடம் இருக்கிறது. அதைப் பார்க்க வருகிறோம் என்று கூறினார்கள். நான் அவர்களுடன் சேர்ந்து கொண்டேன். காரில் வந்தனர். ஒருவர் ஓட்டுநர். ஒருவர் ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர். மூன்றாவது நபர் மீடியேட்டர். நான்காவதாக நான் அவர்களுடன் சென்று சேர்ந்து கொண்டேன். ஊரில் நான் அறிந்த இரண்டு இடங்களை காட்டினேன். 

பின்னர் உத்தேசித்த ஊருக்குப் பயணமானோம். அப்போது தான் தெரிய வந்தது பார்க்க இருந்த இடம் ஊரிலிருந்து 40 கிமீ தொலைவில் இல்லை. 15 கிமீ தொலைவில் தான் இருக்கிறது என. இந்தத் தொழிலில் ஒரு விஷயத்தை சின்ன அளவிலோ பெரிய அளவிலோ மாற்றிச் சொல்லியவண்ணமே இருப்பார்கள். இதுவும் அப்படியே. இடம் காட்டினார்கள். அந்த இடத்தில் முதலீடு செய்தால் முதலீட்டுக்கு மோசம் உண்டாகும் என எனக்குத் தோன்றியது. மீடியேட்டர் இல்லாத நேரத்தில் அதனைச் சொன்னேன். இரண்டு நாட்களில் மீண்டும் இந்த இடத்துக்கு தனியாக வந்து விசாரித்து முழுமையாகக் கூறும் படி சொன்னார். மீடியேட்டர் வேறு வேலை இருக்கிறது என அங்கே இறங்கிக் கொண்டார். நான் ஊரில் இறங்கிக் கொண்டேன். 

நண்பர் இரண்டு நாள் நேரம் கொடுத்திருந்தாலும் மாலையே அங்கே சென்றேன். நாங்கள் பார்த்த இடத்துக்கு 4 கிமீ முன்னதாகவே ஒரு பிரமாதமான இடம் இருந்தது. ரெரா அப்ரூவல், டி டி சி பி அப்ரூவல் அனைத்தும் வாங்கியிருந்தார்கள். சகாயமான விலைக்கு மொத்த பிளாட்டில் பாதியை விற்றிருக்கிறார்கள். மீதி இருக்கும் பிளாட்டை மொத்தமாக வாங்கினால் விலை கணிசமாகக் குறைத்துக் கிடைக்கும். ஒரு பெரிய தொகையை அட்வான்ஸாகக் கொடுத்து விட்டு நேரடியாக மனைகளை விற்கலாம். அது ஒரு சிறிய ஊர். அந்த ஊரில் இருக்கும் மீடியேட்டர்களை சந்தித்து அறிமுகப்படுத்திக் கொண்டேன். சந்திப்புகள் உற்சாகம் அளித்தன. நாளை மீண்டும் வருகிறேன் எனக் கூறி விட்டு வந்தேன். 

வீட்டுக்கு வரும் போது வீடு மனை வாகனப் பிராப்தி என்னும் வாசகம் நினைவில் சுழன்று கொண்டிருந்தது.