Saturday, 27 June 2026

தொழிலதிபர்

சிதம்பரம் அருகே ஒரு சிற்றூர். அங்கே புதிய விதத்தில் ஓர் உணவகம் அமைத்திருந்தார்கள். எவ்விதம் என்றால் அந்த உணவகத்தில் கேக் வகைகள் கிடைக்கும் ; சாண்ட்விச், கட்லெட் போன்றவை இருக்கும் ; ஐஸ்கிரீம்கள் இருக்கும். இவை அனைத்துமே வழக்கமான முறையில் மைதா, ஜீனி ஆகியவை பயன்படுத்தப்படாமல் பாரம்பர்ய வகை அரிசி ரகங்களான கருப்பு கவுனி மற்றும் நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றைப் பயன்படுத்தித் தயார் செய்கிறார்கள். வித்தியாசமான முறையில் ஐஸ்கிரீமும் தயார் செய்கிறார்கள். அவர்கள் உணவகத்தில் 20 லிருந்து 25 பேர் அமர்ந்து உணவருந்த முடியும். மாலை 3 மணியிலிருந்து இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.  அந்த சிற்றூரை ஒரு பெரிய கிராமம் என்று கூற முடியும்.  கருப்பு கவுனி கேக் ஆர்டர் செய்தால் 20 நிமிடத்தில் அந்த கேக்கை அந்த தருணத்தில் தயாரித்துக் கொடுக்கிறார்கள். பெரும்பாலும் அவர்களுக்கு கேக் ஆர்டர் மற்றும் உணவு ஆர்டர் ஃபோன் மூலம் வருகிறது. மாலை 3 மணிக்கு ஒரு ஆர்டர் வந்தால் மாலை 3.30க்கு வந்து கேக்கைப் பெற்றுக் கொள்ளவும் என செய்தி அனுப்பி விடுகிறார்கள். கேக் தயாராகி விடுகிறது. 3.30க்கு வந்து பெற்றுக் கொள்கிறார்கள். குழந்தைகளின் பிறந்த நாள் நிகழ்வுகள் அந்த உணவகத்தில் நிகழ்கின்றன. அந்த உணவகத்தில் கேக் , சாட் வகைகள், ஐஸ்கிரீம் அனைத்துமே வழக்கமான விலையை விட 50 சதவீதம் குறைவான விலையில் கிடைக்கிறது என்பது எனக்கு பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஐஸ்கிரீம் கூட இயற்கை உணவுப்பொருட்களால் தயாரிக்கிறார்கள். எனக்கு அங்கே இருந்த போது ‘’ஸ்டார்பக்ஸ்’’ காஃபி ஷாப்கள் நினைவுக்கு வந்தன. இரண்டு தினங்களுக்கு முன் நண்பர் ஒருவருடன் அங்கே தற்செயலாக செல்ல நேர்ந்தது. நண்பர் சென்னையிலிருந்து வந்திருந்தார். அந்த உணவகத்தின் புறச்சூழல் மிக இனிமையானதாக இருந்ததால் எங்கள் உரையாடலிலும் அந்த இனிமை கூடுதல் இனிமையைச் சேர்த்தது. 

இந்த உணவகத்தின் உரிமையாளர்கள் இளம் தம்பதியர். கணவனுக்கு 30 வயது இருக்கக் கூடும் . அவரது மனைவிக்கு 26 வயது இருக்கலாம். கேக் , ஐஸ்கிரீம் என அனைத்தையும் இந்த தம்பதியினரே செய்கின்றனர். பரிமாற ஓரிரு பணியாளர்கள்  இருக்கின்றனர். தம்பதியர் இருவருக்குமே உணவு சமைத்தலில் ஆர்வம் இருந்திருக்கிறது. அதனால் இவ்விதமான ஒரு தொழில் முயற்சியை செய்து பார்த்திருக்கிறார்கள். என்னுடைய கணிப்பின் படி அங்கே சராசரியாக ஒரு நாளைக்கு ரூ.5000க்கு வணிகம் நிகழக் கூடும். 

அந்தப் பிரதேசத்தில் இருக்கும் வங்கிகள் இந்த இருவரையும் கௌரவிக்க வேண்டும் என்பது என் எண்ணம். அவர்கள் வணிகத்தின் வடிவத்தை புதிய தொழில்முனைவோருக்கான ஒரு சாத்தியமாக வங்கிகள் மாநிலமெங்கும் முன்வைக்கலாம்.

அவர்களின் சிறு குழந்தைக்கு 6 வயது இருக்கும். அவன் தன் அன்னையின் பக்கத்திலேயே நிற்கிறான். அன்னை எங்கு சென்றாலும் உடன் செல்கிறான். கேஷ் சாளரத்தில் அடுமனையில் பரிமாறும் இடத்தில் எங்கும் கூட கூட வருகிறான். அன்னை தன்னுடன் நேரம் செலவிட வேண்டும் என்பது அக்குழந்தையின் எதிர்பார்ப்பு. அந்த அன்னை அவனையும் பார்த்துக் கொண்டு தன் வேலையையும் செய்து கொண்டு இருக்கிறார். 

உணவுக்கான தொகையை அளித்த போது எவ்விதம் எல்லா உணவுப் பொருட்களும் 50 சதவீதம் குறைவான விலையில் தர முடிகிறது என்று வியப்புடன் கேட்டேன். அந்தப் பெண் ‘’இடம் சொந்த இடம் என்பதால்’’ எனச் சுருக்கமாகச் சொன்னார். 

இந்த உணவகத்தின் உரிமையாளர்களான தம்பதியரைப் போன்ற தொழிலதிபர்கள் வாழ்க்கையின் மீதும் மனிதர்கள் மீதும் மேலும் நம்பிக்கை ஏற்படுத்துகிறார்கள். 

அவர்கள் குடும்பம் நலமுடன் வாழ இறைமையிடம் வேண்டிக் கொண்டேன். 

Friday, 26 June 2026

ஒரு சாமானியக் குடிமகனின் மனு

 அனுப்புநர்

ர.பிரபு
&&&&&
&&&
மயிலாடுதுறை - 609001

பெறுநர்
மாவட்ட ஆட்சியர் அவர்கள்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மயிலாடுதுறை - 609001

ஐயா,

பொருள் : மயிலாடுதுறை மாவட்டம் - மாவட்ட ஆட்சியர் அலுவலகம் - மனுநீதி நாள் முகாமில் பெறப்படும் மனுக்கள் உரிய விதத்தில்                         தீர்வு காணப்படுவதில்லை என்பதைத் தெரிவிப்பது - உரிய விதத்தில் தீர்வு காணப்படாமல் பைசல் செய்யப்படுவது குறித்து புகாரளிப்பது. 


இந்த மனுவின் நகல் கனம் தமிழக ஆளுநருக்கும் கனம் தமிழக முதலமைச்சருக்கும் கனம் தமிழக வருவாய்த்துறை அமைச்சருக்கும் கனம் குடிமைப்பொருள் வழங்கல் அமைச்சருக்கும் அனுப்பப்படுவதால் சற்று விரிவானது என்பதை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன். 

டாக்டர். பி.ஆர்.அம்பேத்கர் தலைமையில் அமைக்கப்பட்ட இந்திய அரசியல் நிர்ணய சபையால் முறைப்படி உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பின் மீது மாறாப் பற்று கொண்ட குடிமகன் என்ற வகையில் இந்திய அரசியலமைப்பின் முக்கிய அங்கங்கள் ஆன ராஷ்ட்ரபதி பவன், நீதி அமைப்புகள், பாராளுமன்றம், சட்டமன்றம், அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மீது மதிப்பும் நம்பிக்கையும் கொண்டவன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவற்றின் மீது மதிப்பும் நம்பிக்கையும் இருப்பதனாலேயே இந்த மனுவை எழுதுகிறேன். இந்த மனுவில் குறிப்பிடப்படும் விஷயங்கள் முற்றிலும் சரிசெய்யப்படும் என்ற நம்பிக்கை என் அகத்தில் இக்கணத்திலும் நிறைந்தே இருக்கிறது. 

2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்தில் எனது நண்பர் ஒருவருடன் இரு சக்கர வாகனத்தின் சீட் கவர் மாற்றும் கடைக்குச் சென்றிருந்தேன். நண்பரின் வாகனத்துக்கு சீட் கவர் மாற்ற வேண்டியிருந்தது. அது 30 லிருந்து 45 நிமிடம் தேவைப்படும் பணி. அந்தக் கடையின் பணியாளர் சீட் கவர் மாற்றத் தொடங்கினார். ஜனநாயகத் திருவிழாவான தேர்தலுக்கு வாக்களிக்கத் தயாராகி விட்டீர்களா என்று கேட்டேன். சற்று சோர்வுடன், ‘’ ஒவ்வொரு தேர்தலுக்கும் ஓட்டு போடுகிறோம் ; ஆனால் அரசாங்க அலுவலகத்தில் ஒரு சாதாரண வேலை கூட நடப்பதில்லை’’ என அலுப்புடன் கூறினார். அரசாங்க அலுவலகத்தில் அவருக்கு நடக்காமல் இருக்கும் வேலை என்ன என்று கேட்டேன். அவர் தன்னைப் பற்றி சொன்னார். அவர் பெயர் %%% த/பெ %%%%. திருஇந்தளூர் %%%% பகுதியைச் சேர்ந்தவர். திரு. %%% , அவரது மனைவி, இரு குழந்தைகள் என நான்கு பேர் கொண்ட குடும்பம். சீட் கவர் தைக்கும் கடையில் பணி புரிவதால் சொற்பமான மாத ஊதியம் கிடைக்கிறது. அதைக் கொண்டு தன் வாழ்வை தன் குடும்பத்தின் வாழ்வை அமைத்துக் கொள்கிறார். அவருக்கு அரிசி ரேஷன் கார்டுக்குப் பதிலாக ஜீனி ரேஷன் கார்டு வழங்கி விட்டார்கள். %%% பள்ளிப்படிப்பைத் தாண்டாதவர். ஆகையால் எவ்விதம் ஜீனி கார்டை அரிசி கார்டாக மாற்றிக் கொள்வது என்பது தெரியவில்லை. காலை 9 மணியிலிருந்து இரவு 8 மணி வரை கடையில் வேலை இருப்பதால் அவரால் வட்ட வழங்கல் அலுவலகம் தொடர்ந்து செல்ல முடியவில்லை ; ஒரு சில முறை சென்று விட்டு பின்னர் சோர்ந்து போய் அந்த விஷயத்தை அப்படியே விட்டு விட்டார். என்னிடம் என் கேள்விக்குப் பதிலாக மேற்படி விபரங்களைத் தெரிவித்தார். 

அவரிடம் நான், ‘’ மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 10 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை மனுநீதி நாள் முகாம் நடக்கும். அங்கே பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக மனு அளிக்கலாம். அந்த மனுக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நேரடிக் கண்காணிப்பில் இருக்கும். உங்கள் மனுவுக்கு ஒரு ஒப்புகைச்சீட்டு அளிக்கப்படும். அதில் ஒப்புகை எண் இருக்கும். அதனைக் கொண்டு மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை அறியலாம். அங்கே உங்கள் கோரிக்கையை முன்வைத்து மனு கொடுக்கலாம். மனுவின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஜீனி கார்டு அரிசி கார்டாக மாற்றித் தரப்படும் ’’என்று கூறினேன். நம்பிக்கையுடன் நான் இத்தனை முறைமைகளைக் கூறியதால் அவருக்கு நம்பிக்கை உண்டானது. ’’தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கின்றன. எனவே இந்தக் காலகட்டத்தில் மனுநீதி நாள் முகாம் இருக்காது. வாக்குப் பதிவுக்குப் பின் மீண்டும் துவங்கும் ; அப்போது வந்து உங்களுக்கு மனு எழுத உதவுகிறேன்’’ என்றும் சொன்னேன். 

ஏப்ரல் 23 அன்று வாக்குப்பதிவு முடிந்தது. மனுநீதி நாள் நடைமுறைகள் அதன் பின் தொடங்கின. ஆகாஷ்வாணி செய்திகள் மூலம் அதனை அறிந்த நான் திரு. %%% அவர்களை அவருடைய பணியிடத்தில் சந்தித்து அவர் மனு எழுத உதவினேன். அவர் நேரடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து ‘’மனுநீதி நாள் முகாமில் மனு அளித்தால் அரசின் இயங்குமுறையைத் தெரிந்து கொள்ள உணர்ந்து கொள்ள அவருக்கு உதவியாக இருக்கும் என எண்ணினேன். தனது கடையின் பணியிலிருந்து அவரால் வர இயலவில்லை. பலமுறை மனுநீதி நாள் முகாமின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறிய பின் ஜூன் 1 மாவட்ட ஆட்சியர் அலுவலக மனுநீதி நாளில் திரு. %%%% மனு அளிக்கப்பட்டது. 

ஜூன் 1ம் தேதி மனுநீதி நாள் முகாமுக்கு நானும் வந்திருந்ததால் அன்றைய தினத்தில் மனுதாரர்களுக்கு உடனடியாக வழங்கப்பட வேண்டிய மனு ஒப்புகைச் சீட்டு 5 மணி நேரம் தாமதமாக மாலை 3 மணிக்கு மேல் வழங்கப்படுவதை நேரில் கண்டேன். இந்த விஷயத்தை மாவட்ட ஆட்சித் தலைவருக்குத் தெரிவித்து அதனை சரி செய்யக் கோரி ஒரு கடிதமாக எழுதினேன்.மாவடத்தின் பல பகுதியிலிருந்து வருகை தரும் மனுதாரர்களுக்கு உடன் ஒப்புகைச் சீட்டு வழங்கி அவர்கள் 5 மணி நேரம் காத்திருக்கும் அல்லலை நீக்குமாறு கோரினேன். எனது கோரிக்கை மாவட்ட ஆட்சியர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சரி செய்யப் பட்டிருக்கிறதா என்பதைக் காண ஜூன் 8ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக மனுநீதி நாள் முகாம் சென்றேன். அன்றும் மனுதாரர்கள் ஒப்புகைச்சீட்டு பெற 5 மணி நேரம் காத்திருந்தார்கள் என்பதைக் கண்டேன். அன்றே இன்னொரு கடிதம் எழுதினேன். ஜூன் 11 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேரில் வந்து மாவட்ட ஆட்சியரின் தனி உதவியாளரைச் சந்தித்து ஜூன் 1, ஜூன் 8 ஆகிய தேதிகளில் மனுநீதி நாள் முகாம் தொடர்பான புகார் குறித்து தெரிவித்து அந்தப் புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுத்து ஜூன் 15 மனுநீதி நாளுக்கு வரும் மனுதாரர்கள் ஒப்புகைச் சீட்டுக்காக பல மணி நேரம் காத்திருக்க வேண்டி இராமல் உடன் வழங்க ஆவன செய்யுமாறு கேட்டுக் கொண்டேன். மாவட்ட ஆட்சியரின் தனி உதவியாளர் ஆட்சியர் அலுவலகத்தின் ஒரு பகுதியான மின் ஆளுகை அலுவலகத்தில் சென்று சொல்லும்படி சொன்னார். அங்கு சென்று சொன்னேன். அவர்கள் ‘’சமூகப் பாதுகாப்பு திட்டம்’’ அலுவலகம் சென்று தெரிவிக்குமாறு கூறினர். அவ்விதமே செய்தேன். ஜூன் 15 அன்று ஆட்சியர் அலுவலகம் வந்து மனுதாரர்களுக்கு ஒப்புகைச்சீட்டு உடன் வழங்கப்படுகிறதா என்பதைக் காண வந்தேன். மனுதாரர்களுக்கு ஒப்புகைச்சீட்டு உடனுக்குடன் வழங்கப்படுவதை நேரில் கண்டேன். மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அன்றைய தினமே நன்றி தெரிவித்து ஒரு கடிதம் எழுதினேன். 

ஜூன் 1ம் தேதி திரு. %%% அளித்த மனுவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பதை அறிய ஜூன் 24 அன்று மாவட்ட வழங்கல் அலுவலகத்துக்கு வந்தேன். மனுநீதி நாள் முகாம் கோப்புகளுக்கு பொறுப்பான எழுத்தர் விடுப்பில் சென்றிருப்பதால் ஜூன் 25 அன்று வருமாறு கேட்டுக் கொண்டனர். 

ஜூன் 25 அன்று சென்று பார்த்தேன். திரு. %%% அவர்களின் மனுநீதி நாள் புகார் கோப்பு ஜூன் 4 அன்று பைசல் செய்யப்பட்டிருந்தது என்பதை இணையத்தில் மனுதாரரின் ஒப்புகை எண்ணை உள்ளிட்டு மனுநிலை அறிந்து கூறினர். ஆனால் மாவட்ட வழங்கல் அலுவலகத்துக்கு வட்ட வழங்கல் அலுவலகத்திலிருந்து 21 நாட்களாக இந்த விஷயம் குறித்து எந்த தபாலும் வரவில்லை. தங்களிடம் எந்த தபாலும் இல்லை ; வட்ட வழங்கல் அலுவலகம் சென்று விசாரியுங்கள் என்று கூறினர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் இருக்கும் வட்ட வழங்கல் அலுவலகத்தில் விசாரித்தேன். வட்ட வழங்கல் அலுவலகத்திலிலிருந்து மனுதாரருக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டு கோப்பு மூடப்பட்டது எனத் தகவல் தெரிவித்தனர். ‘’நான் மனுதாரருடன் தொடர்பில் இருக்கிறேன் ; அவருக்கு வட்ட வழங்கல் அலுவலகத்திலிருந்து எந்த தபாலும் வரவில்லை ‘’ என்று கூறினேன். மேலும் ‘’வட்ட வழங்கல் அலுவலகமாகிய தங்கள் அலுவலக தபால் ஆவணத்தைப் பரிசீலியுங்கள் ; ஜூன் 4 க்குப் பிறகு மனுதாரருக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தால் அதில் பதிவாகியிருக்கும் அத்துடன் அதன் நகல் மாவட்ட வழங்கல் அலுவலகத்துக்கும் அனுப்பப்பட்டிருக்கிறதா என்பதையும் பரிசீலியுங்கள் ‘’ என்று சொன்னேன்.

அந்த மனுவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை வட்ட வழங்கல் அலுவலகத்தால் மாவட்ட வழங்கல் அலுவலகத்துக்கு அனுப்பப்பட வேண்டும் என்பது கட்டாயம். அதனால் தான் அந்தக் கோப்பு தங்களிடம் இருக்கிறதா என மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் தேடிப் பார்த்தனர் என யூகித்தேன். அதாவது, வட்ட வழங்கல் அலுவலகத்திலிருந்து மாவட்ட வழங்கல் அலுவலகத்துக்கும் எந்த தபாலும் வரவில்லை. மனுதாரருக்கும் எந்தத் தபாலும் வரவில்லை. மனுதாரருக்கும் மாவட்ட வழங்கல் அலுவலகத்துக்கும் எந்த தபாலும் அனுப்பாமல் மனுதாரர் கோப்பை மூடியுள்ளனர். 

மேற்படி விஷயம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மனுநீதி நாள் முகாம், மாவட்ட வழங்கல் அலுவலகம், வட்ட வழங்கல் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் தனி உதவியாளர், மின் ஆளுகை முகமை, சமூகப் பாதுகாப்புத் திட்டம் ஆகிய அலுவலகங்களுக்குப் பலமுறை சென்று வந்த அனுபவத்தின் அடிப்படையில் மனுதாரர் மனு தொடர்பாக முறைமைகள் ஏதும் பின்பற்றப்படாமல் பிழையாக் கோப்பு மூடப்பட்டுள்ளது என்பதை ஒரு சாமானியக் குடிமகனாக என்னால் யூகிக்க முடிகிறது. ஜூன் 1 அன்று திரு. %%% என்ற மனுதாரர் தனது ஜீனி கார்டை அரிசி கார்டாக மாற்றித் தர வேண்டி அளித்த மனு மீது மாவட்ட வழங்கல் அலுவலகம், வட்ட வழங்கல் அலுவலகம் ஆகிய அலுவலகங்கள் மேற்கொண்ட மேல்நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நேரடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த மனுவைக் கையாண்டவர்கள் அதனைக் கையாண்ட விதத்திலோ முறைமைகளிலோ பிழை செய்திருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த மனுவின் மூலம் கேட்டுக் கொள்கிறேன். 

தமிழக மக்கள் மாநில அரசு அலுவலகங்களுக்குச் செல்ல அஞ்சுகிறார்கள் ; தயங்குகிறார்கள் என்பதே இன்றைக்கும் யதார்த்தமாக இருக்கும் நிலை. சாமானிய மக்கள் எல்காட் தலைமை அலுவ்லகம், நெடுஞ்சாலைத் துறை அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம் ஆகிய அலுவலக வாயிற்படிகளை மிதிப்பது இல்லை. தங்கள் சொந்த நிலத்துக்கு பட்டா வாங்க தங்கள் இடவிற்பனையைப் பத்திரப்பதிவு செய்ய தங்கள் வாகனத்துக்கு பதிவு எண் பெற ரேஷன் கார்டு விண்ணப்பிக்க என முறையே வருவாய்த்துறை, பத்திரப்பதிவு அலுவலகம், வாகனப் போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம், குடிமைப் பொருள் வழங்கல் துறை அலுவலக வாயிற்படிகளையே மீண்டும் மீண்டும் மிதிக்கின்றனர். மேற்படி அலுவலகங்களில் குடிமக்களுக்கு நிகழ வேண்டிய சிறு பணிகளுக்குக் கூட - குடிமக்களின் அடிப்படை உரிமையான அரசு சேவைகளைப் பெறுவதற்கு கூட பெரும் பணம் லஞ்சமாகக் கேட்கப்படுகிறது என்பதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும் மாவட்ட ஆட்சியரையும் நம்பி ‘’மனுநீதி நாள்’’ முகாம் அன்று மாவட்ட ஆட்சியரை நோக்கி நம்பிக்கையுடன் வருகிறார்கள். தமிழக மக்கள் இந்திய ஆட்சிப்பணி, இந்தியக் காவல் பணி ஆகியவற்றுக்குத் தேர்வான குடியரசுத் தலைவர் கையொப்பமிட்டு பணி நியமன ஆணை வழங்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மீது இப்போதும் நம்பிக்கை கொள்கிறார்கள். அடிமட்டத்தில் இருக்கும் அரசு அலுவலகங்கள் தங்களுக்கு இழைக்கும் அசௌகர்யங்களிலிருந்து - தங்களுக்கு இழைக்கும் அவமதிப்புகளிலிருந்து - தங்களுக்கு இழைக்கும் அநீதிகளிலிருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் தங்களைக் காப்பார் என உறுதியாக நம்புகிறார்கள். இந்த மனுவின் மூலம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் முன்வைக்கும் கோரிக்கை என்னவென்றால் ‘’மனுநீதி நாள் முகாம்’’ மனுக்கள் அரசு அலுவலகங்களால் முறையாகக் கையாளப்படுவதை உ றுதிப்படுத்த வேண்டும் என்பதும் இது குறித்து மாவட்டத்தின் அனைத்து அரசுத்துறை அலுவ்லகங்களுக்கும் கண்டிப்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட வேண்டும் என்பதுமே ஆகும். 

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் நடைபெறும் தேர்தல்களில் வாக்குக்கு வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் கட்சிகள் வெற்றி பெறுகின்றன என அரசியல் கட்சிகள் மீதும் அதன் மறுபக்கமாக தமிழக வாக்காளர்கள் வாக்குக்குப் பணம் பெற்றுக் கொண்டு வாக்களிக்கிறார்கள் என்னும் புகார் தமிழக வாக்காளர்கள் மீதும் இருந்தது. 2026ல் தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் கட்சி மீது அதன் அரசியல் எதிரிகள் கூட வாக்குக்கு பணம் அளித்தார்கள் என்னும் குற்றம் சாட்டவில்லை. இன்றைய ஆளுங்கட்சி எந்த வாக்காளருக்கும் பணம் கொடுத்து வெற்றி பெற்று தமிழக சட்டசபையில் தனிப்பெரும் கட்சியாக வரவில்லை. தமிழக அரசியல் வரலாற்றில் இந்நிகழ்வு முக்கியமான ஒன்று என்பதை எவரும் மறுக்க மாட்டார்கள். தமிழக மக்கள் மாநில அரசின் அரசாட்சி முறைகளில் மாற்றம் தேவை என்பதற்காகவே ஒரு புதிய கட்சிக்கு வாக்களித்துள்ளனர். கோடானுகோடி தமிழக மக்களின் அபிலாஷை வெளிப்படையான ஊழலற்ற அரசு நிர்வாகமே ஆகும். ‘’ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’’ என்ற அளவில் எனது ஜூன் மாத அனுபவத்தை முன்வைத்துள்ளேன். இந்த விரிவான மனு தமிழக அரசு அலுவலக ஊழியர்களின் அலட்சிய மனோபாவத்தையும் சாமானியக் குடிமக்களுக்கு ஏற்படும் அலைக்கழிப்பையும் எடுத்துக் காட்டுவதாக இருக்கக் கூடும். 

‘’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’’ என்பது தமிழ்மறையின் வாக்கு. இவ்விதமாக , குடிமக்கள் என்ற விதத்தில் அரசு அதிகாரிகளும் குடிமக்களும் சமமே. சாமானியக் குடிமக்களை அலைக்கழிக்க எந்த அரசு அதிகாரிக்கும் உரிமையில்லை. அவ்விதம் அரசு அதிகாரிகள் நடந்து கொள்வது நீதிக்கும் நிர்வாகத்துக்கும் ஒவ்வாதது ஆகும். 

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களே ! தாங்கள் கேரளம் மாநிலத்தைச் சேர்ந்தவர். ‘’தாழக் கிடப்பாரை தற்காப்பதே தர்மம்’’ எனப் போதித்த ஐயா வைகுண்டரும் ‘’மனுஷனுக்கு ஒரே ஜாதி ஒரே மதம் ஒரே கடவுள்’’ எனப் போதித்த ஸ்ரீநாராயண குருவும் வாழ்ந்து வழிகாட்டிய மண்ணிலிருந்து தமிழகத்துக்கு வந்துள்ளீர்கள். தாங்கள் மாவட்ட ஆட்சித்த்லைவராக இருக்கும் காலத்தில் ‘’மனுநீதி நாள் முகாம்’’ மனுக்கள் சிறப்பாகக் கையாளப்பட்ட்ன என்னும் நிலையை மாவட்ட நிர்வாகத்தில் உருவாக்கித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த மனுவின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். சொற்ப மாத ஊதியம் பெற்று வறிய நிலையில் இருக்கும் மனுதாரர் திரு. %%% அவர்களின் ஜீனி கார்டை அரிசி கார்டாக மாற்றித் தர ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். 

இந்த விரிவான மனு - கடிதம் கனம் தமிழக ஆளுநர், கனம் தமிழக முதலமைச்சர், கனம் வருவாய்த்துறை அமைச்சர், கனம் குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர், கனம் சமூகநீதித்துறை அமைச்சர் ஆகியோர் நேரடி கவனத்துக்குச் செல்லுமா என்பது ஓர் ஐயம். இந்த விரிவான மனு - கடிதம் மாவட்ட ஆட்சியரின் நேரடி கவனத்துக்கு செல்லுமா என்பது அதை விடப் பெரிய ஐயம். எனினும் மேற்கூறியோரின் அலுவலகங்களின் உயர் அதிகாரிகளின் கவனத்துக்குச் செல்ல வாய்ப்புண்டு. அவர்கள் கவனம் கொடுத்தால் தீர்க்கக்கூடிய விஷயங்களே இந்த மனுவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளவை. மனுவின் கோரிக்கைகள் நிறைவேற வேண்டும் என்பது மட்டுமே மனுதாரரின் விருப்பமும் எதிர்பார்ப்பும்.. 

ஜெய்ஹிந்த்!

தங்கள் உண்மையுள்ள,

&&&


இடம் : மயிலாடுதுறை
நாள் : 26.06.2026

நகல் 

1. கனம் தமிழக ஆளுநர்
லோக் பவன்
கிண்டி - சென்னை

2. கனம் தமிழக முதலமைச்சர்
தலைமைச் செயலகம்
சென்னை

3. கனம் தமிழக வருவாய்த்துறை அமைச்சர்
தலைமைச் செயலகம்
சென்னை

4. கனம் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர்
தலைமைச் செயலகம்
சென்னை

5. கனம் சமூகநீதித்துறை அமைச்சர்
தலைமைச் செயலகம்
சென்னை  
  

Thursday, 25 June 2026

அரசும் அலைக்கழிப்பும்

இரு சக்கர வாகன சீட் கவர் தைப்பவரின் ஜீனி ரேஷன் அட்டையை அரிசி ரேஷன் அட்டையாக மாற்ற ஜூன் 1ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக மனுநீதி நாளில் மனு தரப்பட்டது. 24 நாட்கள் ஆகிறது. வட்ட வழங்கல் அலுவலகத்திலிருந்தோ அல்லது மாவட்ட வழங்கல் அலுலகத்திலிருந்தோ எந்தத் தகவலும் இல்லை. வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு நேரில் சென்றேன். ஒரு குயர் நோட் ஒன்றில் ‘’மனுநீதி நாள் மனுக்கள்’’ என வரிசை எண். ஆன்லைன் பதிவு எண், மனுதாரர் பெயர் & முகவரி, மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என ஒரு பட்டியல் இருந்தது. சம்பந்தப்பட்ட விஷயத்தில் மனுதாரர் பெயர் மற்றும் முகவரி ஆகிய விஷயங்கள் மட்டுமே இருந்தன. மற்ற எந்த விபரமும் ஏட்டில் குறிப்பிடப்படவில்லை என்பதைக் கவனித்தேன். அந்த ஏட்டைப் பராமரிப்பவர் கிராம நிர்வாக அதிகாரியிடமிருந்து ஒரு சான்றிதழ் பெற்று வர வேண்டும் எனக் கோரினார். அது முக்கியத் தேவை என்றால் அலுவலகத்திலிருந்து ஒரு தபால் அனுப்பியிருப்பார்கள். இவ்விதம் இப்போது கோருவது அலைக்கழிக்கும் செயல் என எனக்குத் தோன்றியது. அலமாரியில் அவர் ஒரு படிவத்தைத் தேடினார். அவர் உத்தேசித்த படிவம் கிடைக்கவில்லை. மறுநாள் வருமாறு கூறினார். மறுநாளான நேற்று அங்கே செல்லவில்லை ; வட்ட வழங்கல் அலுவலகத்தின் தலைமை அலுவலகமான மாவட்ட வழங்கல் அலுவலகத்துக்குச் சென்றேன். மனுதாரர் பெயரையும் ஜூன் 1ம் தேதி ‘’மனுநீதி நாள் முகாம்’’ மனு என்று சொன்னேன். ஒரு கிளார்க் இன்னொரு கிளார்க்கிடம் விபரம் கேட்கச் சொன்னார். இன்னொருவர் இன்னொருவரிடம். மூன்றாவது கிளார்க் என்னிடம் இந்த விஷயத்தைப் பார்க்கும் கிளார்க் இன்று விடுமுறையில் இருக்கிறார். நாளை வாருங்கள் என்றார். மனுவின் விபரம் கூறி என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கேட்டேன். 

மனு சென்னைக்கு அனுப்படும் என்றனர். ‘’மனுநீதி நாள் முகாம்’’ ஆன்லைன் கோப்பு நிலுவையில் தானே இருக்கும் எனக் கேட்டேன். சென்னைக்கு மனு அனுப்பப்பட்டால் மனுவின் கோப்பு மூடப்பட்டு விடும் எனக் கூறினர். ஜூன் 1 ஒரு கோரிக்கைக்காக மனு தரப்படுகிறது. அரசு அந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் ; இல்லையென்றால் நிறைவேற்ற இயலாத கோரிக்கை என்று பதில் சொல்ல வேண்டும் அல்லது நிலுவையிலாவது வைத்திருக்க வேண்டும். கோப்பினை மூடி விட்டால் யார் எவ்விதம் சென்னை அலுவலகத்துக்கு தொடர்பு கொள்வது. சென்னை அலுவலகத்துக்கு மனுவை அனுப்பினால் அதன் நகலையாவது மனுதாரருக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவை எதுவுமே இல்லாமல் ஒரு கோப்பை மூடினால் மனுதாரர் என்ன செய்ய முடியும் ? 

ஏன் இந்த சாதாரண விஷயத்தைக் கூட அரசிடம் எதிர்பார்க்க முடியவில்லை? மாவட்ட வழங்கல் அலுவலகம் அமைந்திருக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மிகப் பெரிய பிரும்மாண்டமான கட்டிடம். மாவட்ட வழங்கல் அலுவலகம் ஒரு மல்டிநேஷனல் கம்பெனியின் அலுவலகம் போல மிகப் பெரிதாக சூரிய ஒளி மற்றும் காற்றோட்டம் நிறைந்து அமைக்கப்படுகிறது. அலுவலகத்தில் குறைந்தது 7 பேர் பணி புரிகிறார்கள். ஒரு மனுவின் கோப்பை எவ்விதம் உருவாக்கிப் பராமரிப்பது என்பதும் மனுதாரருக்கு பதில் அளிப்பது என்பதும் அடிப்படையான விஷயங்கள். எனினும் இதனைச் செய்ய அரசு ஊழியர்களுக்கு விருப்பம் இல்லை. 

‘’நாளை வாருங்கள்’’ என்று சொன்ன கிளார்க்கிடம் ‘’காலை 10.30 க்கு வரட்டுமா’’ என்று கேட்டேன். ‘’11 மணிக்கு வாருங்கள்’’ என்றார். 

எந்த விஷயமாக இருந்தாலும் அமைதியான அணுகுமுறையை மேற்கொள்வதே எனது வழக்கம்.  

Tuesday, 23 June 2026

எண்களின் புதிர் (நகைச்சுவைக் கட்டுரை)

இரண்டு தினங்களாக ஒரு புள்ளிவிபரம் என் மனதில் இருந்தது. அது 1977ம் ஆண்டு தமிழகத்தில் அடுத்தடுத்து நடந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டசபைத் தேர்தல் குறித்த புள்ளிவிபரம்.  

அதாவது, 1977ம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. அதில் தமிழகத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 2 கோடியே 73 லட்சம். அதில் 1 கோடியே 82 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கிறார்கள். மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் காங்கிரஸ்-அதிமுக கூட்டணி 36 தொகுதிகளிலும் ஜனதா கட்சி - திமுக கூட்டணி 3 தொகுதிகளிலும் வெற்றி பெறுகின்றனர். காங்கிரஸ் கூட்டணி 40 சதவீத வாக்குகளும் ஜனதா கூட்டணி 30 சதவீத வாக்குகளும் பெறுகின்றன. அடுத்த 3 மாதங்களில்- ஜூன் மாதத்தில் - தமிழக சட்டசபைத் தேர்தல் நடக்கிறது. அதில் அதிமுக, திமுக , காங்கிரஸ், ஜனதா ஆகிய கட்சிகள் தனித்தனியே போட்டியிட்டன. அதிமுக 35 சதவீத வாக்குகளும் திமுக 25 சதவீத வாக்குகளும் காங்கிரஸ் 17 சதவீத வாக்குகளும் ஜனதா 16 சதவீத வாக்குகளும் பெற்றன. 

எனக்கு ஏற்பட்ட ஐயம் என்னவெனில் நாடாளுமன்றத் தேர்தலில் நான்கு கட்சிகளும் பெற்ற மொத்த வாக்குகள் 70 சதவீதம் ; சட்டசபைத் தேர்தலில் நான்கு கட்சிகளும் பெற்ற மொத்த வாக்குகள் 93 சதவீதம் எனில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட இந்த 4 கட்சிகள் அல்லாத ஏதேனும் ஒரு கட்சி 20 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பெற்றிருக்க வேண்டும். அந்தக் கட்சியின் வாக்குகள் சட்டசபைத் தேர்தலில் குறைந்திருக்க வேண்டும். அவ்விதம் தமிழகத்தில் செல்வாக்கு பெற்றிருந்த கட்சி எதுவாக இருக்கும் என எண்ணி தேர்தல் ஆணையத் தரவுகளைப் பரிசீலித்தேன். 

1977ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழகத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மொத்த வாக்காளர்கள் 2 கோடியே 73 லட்சம் . அதில் வாக்களித்தவர்கள் 1 கோடியே 37 லட்சம். 

1977ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் மொத்த வாக்காளர்கள் 2 கோடியே 82 லட்சம். அதில் வாக்களித்தவர்கள் 1 கோடியே 32 லட்சம். 

நாடாளுமன்றத் தேர்தலுக்கும் சட்டசபைத் தேர்தலுக்கும் இடையே 3 மாத குறுகிய காலம் மட்டுமே இருந்திருக்கிறதே தவிர வாக்காளர் எண்ணிக்கை 5 சதவீதம் கூடி விட்டது. நாடாளுமன்றத் தேர்தலை விட சட்டசபைத் தேர்தலில் வாக்குப்பதிவு 5 சதவீதம் குறைந்து விட்டது. 

சுயேச்சைகளோ அல்லது இதர கட்சிகளோ பெரிய அளவில் வாக்குகளைப் பெறவில்லை. 2 சதவீதம் அளவிலேயே பெற்றிருந்தனர். செல்லாத வாக்குகள் 2 சதவீதம் அளவில் இருந்தன. 

நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியில் போட்டியிட்டதால் கட்சிகளின் வாக்கு சதவீதத்தை வைத்து கட்சியின் வாக்குகளை கணிக்க முடியாது. 

சட்டசபைத் தேர்தலில் ஒரு கட்சிக்கு வாக்களித்தவர் இன்னொரு கட்சிக்கு வாக்களிக்கலாம் அல்லவா? மேலும் அதிமுக சந்தித்த முதல் தேர்தல் அது. இதுதான் அதிமுக பெறும் வாக்கு சதவீதம் என அந்தத் தேர்தலில் கூற முடியாது. மேலும் சில தேர்தலைகளையாவது சந்தித்து வாக்குகளைப் பெற்ற பின் தான் இதுதான் இவர்களின் வாக்கு சதவீதம் என யூகிக்க முடியும் அல்லவா?   

அரசியல்வாதியின் துயரங்கள் (நகைச்சுவைக் கட்டுரை)

நம் நாட்டில் சாமானியர்கள் அரசியல்வாதிகளை பிரமிப்புடன் கண்டு அவர்கள் முன் பணிகிறார்கள் என்பது ஓர் உண்மை என்றால் மனதுக்குள் அரசியல்வாதிகளை வெறுக்கவும் வசை பாடவும் செய்கிறார்கள் என்பது இன்னொரு உண்மை.  

15 ஆண்டுகளுக்கு முன் நான் சந்தித்த ஓர் இளம் அரசியல்வாதி என்னிடம் சொன்னார். ‘’அண்ணன்! அரசியல்வாதி எல்லாமே டயபிடிஸ் வந்து தான் அண்ணன் சாவோம். முகூர்த்த நாள் வந்தா 20 கல்யாண வீட்டுக்கு போக வேண்டியிருக்கு. நாம அரசியல்வாதிங்கறதால உள்ள நுழைஞ்சதுமே நேரா டயனிங்க்கு கூட்டிட்டு போய்டுவாங்க. கேசரி, பொங்கல், பூரி , தோசை, இட்லி சாப்பிட்டே ஆகணும். நம்மள ரொம்ப பாத்து பாத்து கவனிப்பாங்க. நிறைய கல்யாணத்துக்குப் போகணும் கொஞ்சமா வைங்கன்னு சொன்னாலும் கேட்க மாட்டாங்க. சாப்பிடாம இலையை மூடினாலும் மனசு புண்பட்டுடுவாங்க. யாராவது ஒருத்தர் மனசை புண்படுத்திட்டா அந்த தகவல் கல்யாண மண்டபத்துல இருக்கற 1000 பேருக்கும் பரவிடும். அவங்க ஒவ்வொருத்தர் 4 பேர் கிட்ட சொன்னா 4000 பேர்ட்ட பரவிடும். அதனால ரொம்ப கஷ்டப்பட்டு 20 கல்யாண வீட்டுக்காரர்களும் சந்தோஷப்படுற மாதிரி சாப்பிட்டுத்தான் அண்ணன் வருவோம். ஆனி , ஆடி மாசமும் மார்கழி மாசமும் தான் அண்ணன் எங்களுக்கு ரொம்ப சந்தோஷமான மாசம். அந்த மாசங்கள்ல முகூர்த்தமே கிடையாது.’’

அரசியல்வாதிகள் மனித அகத்தின் இருள் பக்கங்களைக் காணவே வாய்ப்பு அதிகமாக இருக்கிறதோ என நான் எண்ணுவேன். ஒரு அரசியல்கூட்டம் நடக்கிறது என்றால் அது உரையாற்றுவதற்கானது ; ஆலோசிப்பதற்கானது. கூட்டத்தில் 100 பேர் இருக்கிறார்கள் என்றால் ஒருவர் 5 நிமிடம் பேசுகிறார் என்றால் அது 100 பேரின் 5 நிமிடம் என்பதால் 500 நிமிடங்களுக்குச் சமம். பேசுபவர் உரையாற்றத் தெரியாமலோ உள்ளடக்கம் இல்லாமலோ பேசினால் கூட்டத்தில் இருக்கும் அனைவரின் மனமும் அசௌகர்யத்தை உணர்ந்து நெளியத் தொடங்கும். கூட்டத்தின் மனநிலையை அது பாதிக்கும். ஆனால் எல்லா கட்சிகளிலும் 99 சதவீத கட்சிக்காரர்கள் உரையாற்றத் தெரியாமலும் உள்ளடக்கம் இல்லாமலும் தான் பேசுப்வார்கள். பதவியில் இருக்கும் அரசியல்வாதி தன் வாழ்நாள் முழுதும் இதனைக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இரண்டு நாட்களுக்கு ஒருமுறையாவது கூட்டமோ ஆலோசனையோ இருக்கும். தினம் இந்தப் பாடினை அரசியல்வாதிகள் பட வேண்டும். 

அரசியல்வாதி ஒரு கூட்டத்துக்கு வந்தால் அந்த கூட்டம் பொதுவாக குறைந்தபட்சம் 2 மணி நேரத்திலிருந்து 3 மணி நேரம் நடக்கும். அந்த நேரத்தில் மேடையில் அமர்ந்திருக்கும் அவர்களால் அலைபேசியில் பேச முடியாது . வேறு எந்த விஷயமும் செய்ய முடியாது. உள்ளடக்கம் இல்லாமல் பேசும் உரையாற்றத் தெரியாமல் பேசும் நபர்களின் பேச்சைக் கேட்டே ஆக வேண்டும். 

இந்தத் துயரங்களை எவரிடமும் அரசியல்வாதிகள் பகிர்ந்து கொள்ள முடியாது.

Monday, 22 June 2026

பெருவியப்பு (நகைச்சுவைக் கட்டுரை)

ஊரில் பேருந்து நிலையத்திலிருந்து ( ஊரில் ஒரு பேருந்து நிலையம் தான் இருந்தது ; சென்ற ஆட்சியில் ஊரிலிருந்து 3 கிமீ தொலைவில் இருக்கும் அண்டை கிராமம் ஒன்றில் ( அந்த கிராமத்தை ஊரின் நகராட்சியுடன் இணைக்க நகராட்சி தீர்மானம் போட்டது ; அந்த கிராமம் நாங்கள் ஊராட்சியாகவே இருக்கிறோம் நகராட்சியுடன் இணைய விரும்பவில்லை எனத் தீர்மானம் இயற்றி விட்டது) புதிய பேருந்து நிலையம் கட்டினார்கள். 2026ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு ஒரு வாரம் முன்பு புதிய பேருந்து நிலையத்திலிருந்து எல்லா பேருந்துகளும் இயங்கும் என்றார்கள். மக்கள் யாரும் அங்கே செல்லவில்லை. நகராட்சி எல்லைக்குள் இருக்கும் பேருந்து நிறுத்தங்களில் காத்திருக்கத் தொடங்கினார்கள். புதிய பேருந்து நிலையத்துக்கு மக்கள் வராததால் பேருந்து நிலையத்தை மீண்டும் பழைய பேருந்து நிலையத்துக்கே மாற்றி விட்டார்கள் ) காவிரிக்கரை நோக்கிச் செல்லும் சாலைக்கு ‘’அஞ்சல் அலுவலக சாலை’’ என்று பெயர். இருந்தாலும் அதனை சினிமா தியேட்டர் சாலை என்றே சொல்வார்கள். ஏனென்றால் அந்த சாலையின் கடைசியில் காவிரியின் தென்கரையில் ஒரு பெரிய சினிமா தியேட்டர் இருந்தது ; இருக்கிறது.  இன்று இரவு நண்பர் ஒருவரை ரயில் நிலையத்திலிருந்து ‘’பிக் அப்’’ செய்து கொண்டு பேருந்து நிலையம் வழியே சினிமா தியேட்டர் சாலையில் டூ-வீலரில் சென்று கொண்டிருந்தேன். பேருந்து நிலையம் எதிரில் ஆளும்கட்சியின் கொடிகள் பறந்து கொண்டிருந்தன. அந்த சாலையின் கடைசியில் சினிமா தியேட்டருக்கு எதிரில் அவர்களின் மாவட்டப் பொதுக்கூட்டம் நடந்து கொண்டிருந்தது. நான் கடந்து சென்ற சிறு பொழுதில் ஒருவர் ஒலிபெருக்கியில் மேடையில் பேசிக் கொண்டிருந்தார். ‘’இந்த மாவட்டக் கூட்டத்துக்கு வருகை தந்திருக்கிற மாவட்ட, ஒன்றிய , நகர, மாநிலப் பொறுப்பாளர்களே! இந்தப் பொதுக்கூட்டம் நடக்கிற இடம் சினிமா தியேட்டரின் வாசல். இந்தப் பொதுக்கூட்டம் எனக்கு என்னென்ன ஞாபகங்களை நினைவுபடுத்துகிறது என்றால் இங்கே நம் தலைவரின் எத்தனை படங்களுக்கு கட் அவுட் வைத்திருப்போம் ; போஸ்டர் ஒட்டியிருப்போம் ; தலைவர் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்திருப்போம்; எத்தனை படங்களை ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ ரசிகர் மன்ற ஷோவாக பார்த்திருப்போம் ; தலைவர் திரையில் தோன்றும் போது எத்தனை விசில் அடித்திருப்போம் ; அந்த நினைவுகள் தான் எனக்கு வருகின்றன. அப்படி தலைவருக்கு ரசிகர்களாக இருந்த நாம் அரசியல் கட்சியாக ஆகி ஆளும்கட்சியாகவும் ஆகி விட்டோம் என்பதை நினைக்கும் போது அப்படியே ‘’கூஸ்பம்ஸ்’’ மொமெண்ட் ஆக இருக்கிறது. இன்று நாம்தான் ஆளுங்கட்சி என்பதை நம்பவே முடியவில்லை’’ என்றார். 

என்னால் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. 

அனைவருக்கும் அதிகாரம்

இன்றைய தேதியில் உலக மக்கள்தொகை தோராயமாக 700 கோடி எனில் அதில் 420 கோடி மக்கள் சர்வாதிகார ஆட்சி அல்லது ராணுவ ஆட்சி அல்லது மன்னர் ஆட்சியின் கீழ் வாழ்கின்றனர் ; 280 கோடி மக்கள் மட்டுமே ஜனநாயகத்தின் கீழ் வாழ்கின்றனர். ஜனநாயகம் நாட்டின் எல்லா குடிமக்களும் அரசியல் அதிகாரத்தின் உச்சநிலையை அடைய முடியும் என்ற உரிமையை அளித்துள்ளது. இயல்பாகவே ஜனநாயக நாட்டில் ஒரு குடிமகன் நாட்டின் உயர்பதவியை அடைய வேண்டும் என விரும்ப முடியும் ; அதற்கான பாதையில் செல்ல முடியும். குடிமகன் விரும்புவதைப் போல குடிமக்கள் சமூகங்களும் நாட்டின் அரசியல் அதிகாரம் தங்கள் கையில் இருக்க வேண்டும் என விரும்பி அதனை நோக்கிச் செல்கின்றன.  இந்தியாவின் குடிமக்கள் சமூகங்களில் சாதி மிகப் பெரியதும் பிரதானமானதும் ஆகும். சாதி என்னும் சமூக அமைப்பு இந்தியாவில் 3000 ஆண்டுகளுக்கு மேலாக உயிர்ப்புடன் இயங்கி வருகிறது. இந்த விஷயத்தைப் புரிந்து கொள்ளும் போது இந்தியாவில் எப்போதுமே விவசாயிகளும் விவசாய சாதிகளுமே எண்ணிக்கையில் மிக அதிகமாக இருந்திருக்கின்றனர் என்பதும் அவர்கள் தங்கள் கிராமத்தை விட்டு வெளியே செல்லுதல் என்னும் தேவை இல்லாமல் இருப்பவர்கள் என்னும் விஷயத்தையும் இதனுடன் சேர்த்து யோசிக்க வேண்டும். நாட்டின் வட பகுதியிலோ அல்லது தென் பகுதியிலோ ஒரு கிராமத்தில் ஒரு விவசாயி வசிக்கிறார் என்றால் அவர் தன் வாழ்நாளில் கிராமத்திலிருந்து 50 கி.மீ தொலைவில் இருக்கும் ஒரு ஊருக்கு வாழ்நாளில் சிலமுறை சென்றிருப்பார் ; தன் கிராமத்திலிருந்து 20 கி.மீ தொலைவில் இருக்கும் கிராமத்துக்கு கணிசமான முறை சென்றிருப்பார். இதற்குக் காரணம் என்னவெனில் அவருக்குத் தேவையான அனைத்தும் அந்த கிராமத்திலேயே இருக்கும். உப்பு, மளிகைப் பொருட்கள், துணி, உலோகங்கள் ஆகியவை வணிகர்களால் ஒவ்வொரு கிராமத்துக்கும் வந்து சேரும் அல்லது 200 கிராமங்களுக்குப் பொதுவாக இருக்கும் ஒரு வணிக நகரில் கிராமத்து மக்கள் தங்கள் நுகர்வுத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வார்கள். இந்தியாவில் விவசாய சாதிகள் இருந்தன ; மேய்ச்சல் சாதிகள் இருந்தன ; போர்ச் சாதிகள் இருந்தன ; வணிகச் சாதிகள் இருந்தன ;  உலோகத்தொழில் செய்யும் சாதிகள் இருந்தன ; கைவினைப் பொருட்கள் செய்யும் சாதிகள் இருந்தன; வேதம் ஓதும் சாதிகள் இருந்தன. மேற்படி சாதிகள் இப்போதும் இருக்கின்றன. இந்திய வரலாற்றை உற்று நோக்கினோம் என்றால் அதன் 3000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றில் 3000 ஆண்டுகளாக ஒரு கிராமத்தில் வசிக்கும் ஒருவன் தன் வாழ்க்கையை அந்த கிராமத்துக்குள் வாழ்ந்து கொள்ள முடியும் என்னும் நிலை இருந்தது. இந்தியாவில் மட்டுமல்ல ; அனேகமாக உலகின் எல்லா நாடுகளிலுமே இந்த நிலை ஏறக்குறைய இருந்தது. 18ம் நூற்றாண்டிலும் 19ம் நூற்றாண்டிலுமே பொருள் உற்பத்தி ஐரோப்பாவில் பெரிய அளவில் நிகழத் தொடங்குகிறது. அதன் விளைவுகள் உலகம் முழுதையும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கத் தொடங்குகின்றன. 

இந்தியாவில் இருந்த சாதிகள் கிராம் அளவிலானவை. ஒரு கிராமம் என்பது 3000 மக்கள்தொகை கொண்டது எனில் சாதி என்பதும் அந்த எண்ணிக்கைக்குள் அந்த கிராமத்துக்குள் இருந்ததே ஆகும். 3000 ஆண்டுகளுக்கு முன்போ 200 ஆண்டுகளுக்கு முன்போ கூட ஒரு கிராமத்தைத் தாண்டி இன்னொரு கிராமத்துக்கு திருமணத் தொடர்புகள் ஏற்படுத்திக் கொள்ளும் வழக்கம் இருக்கவில்லை. 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட எந்த சாதியினரும் தங்கள் கிராமத்துக்கு அப்பால் சொந்த சாதியைச் சேர்ந்தவர்களுடன் கூட மண உறவு கொள்ளவில்லை. இந்த விஷயம் புவியியல் சார்ந்த ஒன்றாகும். இங்கே குறிப்பிட விரும்புவது சாதி நாடு முழுக்க இருந்தாலும் அது கிராம அளவில் அதிகாரம் கொண்டதே ஆகும். இதில் இன்னொரு விஷயத்தையும் கவனித்துப் பார்க்கலாம். தெற்கு வடக்காக நம் நாடு 3000 கி.மீ நீளம் கொண்டது எனில் ஒவ்வொரு 150 கி.மீ க்கும் ஒரு குறிப்பிட்ட சாதியினர் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பார்கள். எந்த சாதியும் 150கி.மீ அல்லது 300 கி.மீ எல்லைக்கு அப்பால் சிறு எண்ணிக்கையில் கூட இல்லாமல் ஆவார்கள். ஒரு புரிதலுக்காக இன்றைய தேதியில் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை அளவிட்டோம் என்றால் கன்னியாகுமரியில் மீனவர்களும் நாடார்களும் எண்ணிக்கையில் அதிகம் ; மதுரையில் முக்குலத்தோர் அதிகம் ; திருச்சியில் முத்தரையர் அதிகம்; விழுப்புரம் வேலூரில் படையாச்சிகள் அதிகம் ; கடப்பாவில் ரெட்டிகள் அதிகம் ; ரெய்ச்சூரில் ஒக்கலிகா அதிகம் ; பூனாவில் மராத்தாக்கள் அதிகம் ; ஆகதாபாத்தில் படேல்கள் அதிகம் ; ஜெய்ப்பூரில் ராஜபுத் அதிகம் ; சண்டிகரில் ஜாட் அதிகம் ; என்னும் விதமாகவே நம் நாட்டில் சாதிப்பரவல் உள்ளது. ஒரு பிரதேசத்தில் ஒரு குறிப்பிட்ட சாதி அதிக எண்ணிக்கையில் இருக்கிறது என்பதன் பொருள் என்னவெனில் அந்த குறிப்பிட்ட சாதி 20 சதவீதத்திலிருந்து 40 சதவீதம் வரை உள்ளது என்பதே ஆகும். கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை விவசாயத் தொழிலாளர்களாக இருக்கும் சாதிகள் 20 சதவீதம் இருக்கிறார்கள். அவர்கள் நாட்டின் பல இடங்களில் ஒவ்வொரு பிராந்தியத்தில் இரண்டாம் இடத்திலும் பல இடங்களில் முதனமை இடத்திலும் இருக்கிறார்கள். விவசாயத் தொழிலாளர்கள் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள் அல்ல ; நூற்றுக்கணக்கான சாதிகள் விவசாயத் தொழிலாளர்களில் இருக்கிறார்கள். அவர்கள் ‘’பட்டியல் சாதிகள்’’ என பொதுவாகக் குறிப்பிடப்படுகின்றனர். பட்டியல் சாதிகள் என்னும் பொதுப் பெயர் நூற்றுக்கணக்கான சாதிகளின் தொகுப்பே ஆகும். 

நம் நாட்டின் வரலாற்றை கவனித்தோம் எனில் 4000 ஆண்டுகளாகவே நம் நாட்டின் அரசுகளும் பேரரசுகளும் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை இருக்கும் சாதிகளுக்குள் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும் தொகுக்கவுமே முயன்றிருக்கின்றனர் என்பதைக் காணலாம். சாதிகள் மூலம் மக்கள் தொகுக்கப்பட்டனர் என்பது ஓர் உண்மை எனில் சாதிகள் கிராமம் என்னும் அளவில் மட்டுமே முழு அதிகாரம் கொண்டிருந்தன என்பதும் அதன் இன்னொரு உண்மை. வரலாற்றின் சுவாரசியமான விஷயம் என்னவெனில் 4000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நாட்டின் சமூக சித்திரத்தில் பெரிய மாற்றம் நிகழ்ந்திடவில்லை. சிறு சிறு மாற்றங்கள் மட்டுமே நிகழ்ந்து சமூகச் சித்திரம் இன்றும் காணக்கூடியதாக இருக்கிறது. 

***

தமிழகத்தின் சமூகச் சித்திரத்தை இவ்விதமாக வரையறுத்துக் கொள்ளலாம். தமிழகத்தில் உள்ள சாதிகள் மாநில மக்கள்தொகையில் யார் எத்தனை சதவீதம் இருக்கிறார்கள் என்பதைக் கணக்கிட்டுக் கொள்வோம். 

பட்டியல் சாதிகள் - 20 சதவீதம் ; படையாச்சி - 14 சதவீதம் முக்குலத்தோர் - 11 சதவீதம் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் - 7 சதவீதம் ஆபிரகாமிய மதத்தினர்-12 சதவீதம் நாடார்கள் - 7 சதவீதம் வேளாளர்கள் - 3 சதவீதம் வேதியர்கள் - 3 சதவீதம் இதர சாதிகள் - 23 சதவீதம். 

தமிழகத்தில் 76 வகையான பட்டியல் சாதியினர் இருக்கிறார்கள். எண்ணிக்கையில் கணிசமாக இருக்கும் பட்டியல் சாதியினர் என பறையர், தேவேந்திர குல வேளாளர், அருந்ததியர், சக்கிலியர் ஆகிய சாதிகளைக் கூற முடியும். இதில் தேவேந்திர குல வேளாளரில் ஒரு பகுதி தங்களை பட்டியல் சாதியிலிருந்து நீக்க வேண்டும் என்னும் கோரிக்கையை முன்வைக்கின்றனர். 

படையாச்சி என்னும் சாதி படையாச்சி, வன்னிய குல ஷத்ரியர், அக்னி குல ஷத்ரியர், வன்னியக் கவுண்டர், கண்டர் ஆகிய சாதிகளின் தொகுப்பு ஆகும். 

முக்குலத்தோர் என்னும் சாதி மறவர், கள்ளர் , அகமுடையார் என்னும் சாதிகளின் தொகுப்பு ஆகும். 

தமிழகத்தில் உள்ள ஆபிரகாமிய மதத்தினரில் லெப்பை, ராவுத்தர், மரக்காயர், மாப்ளா, அன்சார், தக்கனி முஸ்லீம், கிருஸ்தவ நாடார், சி எஸ் ஐ , ஃபெர்ணாண்டோ ஆகிய சாதிகள் உண்டு. 

3 சதவீதம் இருக்கும் பிள்ளை சாதியிலும் சைவப் பிள்ளை, நாஞ்சில் நாட்டு பிள்ளைமார், கோட்டைப் பிள்ளை, துளுவ வேளாளர் ஆகிய சாதிகள் உண்டு. 

3 சதவீதம் இருக்கும் வேதியரில் வடமா, வாத்திமா, பிருஹத்சரணம், அஷ்ட சஹஸ்ரம், ஐயங்கார், மாத்வா,நியோகி ஆகிய சாதிகள் உண்டு. 

சாதி என்பது வகைப்படுத்த வகைப்படுத்த மேலும் மேலும் பிரிந்து கொண்டே செல்லும் இயல்பு கொண்டது. இந்த சாதிகளை ஒருங்கிணைக்கவும் தொகுக்கவும் 4000 ஆண்டுகளாக நம் நாட்டின் அரசுகளும் பேரரசுகளும் முயன்றன. 4000 ஆண்டுகளாக நம் நாட்டின் அரசுகளும் பேரரசுகளும் சாதிகளைத் தொகுக்கவும் ஒருங்கிணைக்கவும் செய்திருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட ஆட்சியில் குறிப்பிட்ட பிராந்தியங்கள் பொருளியல் ரீதியாக முன்னுக்கு வருவதும் அதன் மூலம் அந்தப் பிராந்தியத்தின் குறிப்பிட்ட சாதிகள் பயன்பெற்றதும் நிகழ்ந்தது. 

பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவின் சாதிகளின் மொத்தப் பட்டியலை உருவாக்க முயன்றது. இந்தியாவில் இருக்கும் மொத்த சாதிகளை பட்டியல் சாதிகள், முன்னேறிய சாதிகள் என வகைப்படுத்தியது. நாட்டின் சுதந்திரத்துக்குப் பின் பட்டியல் சாதிகள், பிற்பட்ட சாதிகள், முன்னேறிய சாதிகள் என்னும் பிரிவுகள் பட்டியலிடப்பட்டன.  கல்வி, அரசு வேலை ஆகிய இரு விஷயங்களில் இட ஒதுக்கீடு வழங்க சாதிப் பட்டியல்கள் உதவின. 1980ம் ஆண்டிலிருந்து 2000 ஆண்டு வரை இட ஒதுக்கீடு இந்திய அரசியலில் முக்கிய விஷயமாக இருந்தது ; இப்போதும் நீறு பூத்த நெருப்பாக இருக்கிறது. 

இட ஒதுக்கீடு அரசியல் விஷயமாக மாறி ஆட்சி மாற்றம் வரை தாக்கம் செலுத்துவது உண்மை. இட ஒதுக்கீடு மூலம் பலருக்கு அரசு வேலை கிடைத்து நேரடியாக பலன் அடைந்திருக்கிறார்கள் ; பலன் அடைகிறார்கள் என்பது ஓர் உண்மை. இந்த உண்மையை பரிசீலிக்காமல் இட ஒதுக்கீடு குறித்தோ சாதிப் பட்டியல்கள் குறித்தோ பேசிட முடியாது. எனினும் கல்வி , வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு மட்டுமே எல்லா குடிமக்களுக்கும் லௌகிகத் தீர்வாக இருக்குமா என்னும் கேள்வியை எழுப்பிக் கொள்ள வேண்டியிருக்கிறது. 

இந்தியாவில் அரசுப்பணி புரிபவர்கள் மொத்த மக்கள்தொகையில் 2 சதவீதத்தினர் மட்டுமே. இன்றைய தேதிக்கு இந்திய மக்கள் தொகை 140 கோடி எனில் அதில் 2 கோடியே 80 லட்சம் பேர் மட்டுமே அரசுப் பணி புரிபவர்கள். மீதி 138 கோடி பேர் அரசுப்பணியில் இல்லாமல் இருப்பவர்கள். இந்திய அரசியல் இட ஒதுக்கீட்டை மையம் கொள்ளும் போது 2 சதவீதம் குறித்து மட்டுமே பேசியிருக்கிறது. மீதி 138 கோடி பேர் குறித்து இந்த விஷயத்தில் சிந்திப்பது இல்லை. இந்தியா கோடிக்கணக்கான சிறு விவசாயிகளின் நாடு ; இந்தியா கோடிக்கணக்கான சிறு வணிகர்கள் சிறு தொழில்முனைவோரின் நாடு. கோடிக்கணக்கான மக்கள் தனியார் துறையில் பணி புரியும் நாடு. இருப்பினும் இந்திய அரசியலில் சாதி கல்வியிலும் இட ஒதுக்கீட்டிலும் பொதுமக்கள் அபிப்ராயத்திலும் கணிசமான தாக்கம் ஏற்படுத்துகிறது. 

சாமானிய பொதுமக்கள் தேர்தல் அரசியலை கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கும் அரசியல் என்றே கருதுகிறார்கள். எனவே ஒரு சாதியினர் மற்ற சாதியினரைப் போட்டியாளர்களாகக் கருதுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட சாதி ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்கும் வாக்கு வங்கிகளாக மாறுவது நிகழ்கிறது. 

இந்தியத் தேர்தல் முறையில் ஒரு குடிமகனின் வாக்கு என்பது ரகசியமானது. எனினும் பொதுக் கணிப்பில் எந்த சாதியினர் எந்த கட்சிக்குப் பெருமளவு வாக்களிக்கிறார்கள் என்பதை அரசியலை அவதானிப்பவர்களால் கணிக்க முடிகிறது. வாக்குச்சாவடி அளவிலான வாக்கு எண்ணிக்கை விவரங்கள் மின்னணு வாக்குப்பதிவு முறை மூலம் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தெரியவருகிறது. எனவே அந்தத் தரவுகளைக் கொண்டு எந்த சாதியினர் எந்த கட்சிக்கு அதிகம் வாக்களிக்கிறார்கள் என்பதை ஓரளவு கணிக்க முடிகிறது. 

தமிழகத்தில் ஒரு கட்சி சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 30 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும். 1977ம் ஆண்டு அதிமுக கட்சி 30 சதவீத வாக்குகளைப் பெற்று ஆட்சியமைத்தது. எனினும் தமிழக மக்கள்தொகையில் எந்த சாதியும் 30 சதவீதம் இல்லை. எனவே ஒன்றுக்கு மேற்பட சாதிகளின் ஆதரவைப் பெறும் கட்சிதான் ஆட்சியமைக்க முடியும். இந்த சூழ்நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் ‘’பிரித்து ஆளுதல்’’ என்னும் உபாயத்தை மேற்கொள்வார்கள். எண்ணிக்கை பலம் கொண்ட இரண்டு சாதிகளின் ஆதரவைப் பெற மூன்றாவது சாதியை அந்த இரண்டு சாதிகளுக்கும் போட்டியாளர்களாகக் காட்டுவார்கள். பட்டியல் சாதி இடஒதுக்கீடு பிரிட்டிஷ் காலத்திலிருந்தே இருக்கிறது. எனவே பட்டியல் சாதியினரை இடைநிலை சாதிகளுக்குப் போட்டியாளர்களாகக் காட்டி இடைநிலை சாதியினரின் வாக்குகளைப் பெற முயல்வார்கள். 

தமிழகத்தின் மக்கள்தொகை எண்ணிக்கை அடிப்படையில் பட்டியல் சாதியினர் மக்கள்தொகையில் 20 சதவீதம் அளவில் இருக்கின்றனர். இவர்கள் நாடு சுதந்திரம் அடைந்த போது காங்கிரஸ் கட்சிக்கு அதிக அளவில் வாக்களித்தனர். பின்னர் அதிமுகவுக்கு அதிக அளவில் வாக்களித்தனர். கடந்த 10 ஆண்டுகளாக திமுகவுக்கு வாக்களித்தனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் புதிய தமிழகமும் பட்டியல் சாதியினர் மத்தியில் செல்வாக்கு கொண்ட கட்சிகள். இந்தத் தேர்தலில் ஜோசஃப் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு பட்டியல் சாதியினர் வாக்களித்திருக்கின்றனர். 

தமிழக மக்கள்தொகையில் எண்ணிக்கை அடிப்படையில் இரண்டாம் இடத்தில் இருப்பவர்கள் படையாச்சிகள் ஆவர். இவர்கள் எண்ணிக்கை 14 சதவீதம். இவர்கள் நாடு சுதந்திரம் அடைந்த போது காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தனர். பின்னர் திமுக வுக்கு வாக்களித்தனர். பின்னர் திமுக , அதிமுக ஆகிய இருகட்சிகளுக்கும் வாக்களித்தனர். பாட்டாளி மக்கள் கட்சி படையாச்சி சமூகத்தினரின் ஆதரவைப் பெற்ற கட்சி. இந்தத் தேர்தலில் இவர்களின் வாக்குகள் திமுக, அதிமுக, த வெ க ஆகிய மூன்று கட்சிகளுக்கும் சென்றுள்ளது. 

தமிழக மக்கள்தொகையில் எண்ணிக்கை அடிப்படையில் மூன்றாம் இடம் வகிப்பவர்கள் முக்குலத்தோர். இவர்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுகவுக்கு பெருமளவில் வாக்களிப்பவர்கள். திமுகவுக்கும் வாக்களிப்பது உண்டு. 

தமிழக மக்கள்தொகையில் எண்ணிக்கை அடிப்படையில் நான்காம் இடம் வகிப்பவர்கள் கொங்கு வேளாளக் கவுண்டர்கள். இவர்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுகவுக்கு பெருமளவில் வாக்களிப்பவர்கள். திமுக வுக்கும் வாக்களிப்பது உண்டு. இந்த முறை த வெ க வுக்கும் வாக்களித்திருக்கிறார்கள். 

தமிழகத்தில் பிற சாதியினர் எண்ணிக்கை மிக அதிகம். அவர்களே 23 சதவீதம். இருப்பினும் அவர்கள் ஒரு சாதி இல்லை. எண்ணிக்கையில் பெரிய சாதிகள் எவருக்கு வாக்களித்தாலும் பிற சாதியினர் ஆதரவை எவர் பெறுகிறார்களோ அவர்களே ஆட்சி அதிகாரத்துக்கு வர முடியும். 

தமிழகத்தில் ஆபிரகாமிய மதங்களைச் சேர்ந்தவர்கள் 12 சதவீதம் இருக்கின்றனர். இவர்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக திமுக வுக்கு வாக்களிப்பவர்கள். இந்தத் தேர்தலில் த வெ க வுக்கு வாக்களித்திருக்கின்றனர்.

இந்த புள்ளிவிபரங்கள் மாநில மக்கள்தொகை அடிப்படையிலானவை. இவற்றை பிராந்தியரீதியாகப் பிரித்துப் பார்த்தால் இவை வேறு சித்திரம் கொடுக்கும். எவ்வாறெனில் படையாச்சிகள் தமிழகத்தின் வட மாவட்டங்களில் அதிகம் இருக்கின்றனர். தென் மாவட்டங்களில் அந்த சமூகம் அதிகம் இல்லை. கொங்கு வேளாளக் கவுண்டர்கள் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் அதிகம் இருக்கின்றனர். தென் தமிழகத்திலும் வட தமிழகத்திலும் இல்லை. முக்குலத்தோர் தென் தமிழகத்தில் இருக்கின்றனர். தமிழகத்தின் வடக்கிலும் மேற்கிலும் இல்லை. பட்டியல் சாதியினர் தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் இருக்கின்றனர். ஆபிரகாமிய மதங்களைச் சேர்ந்தவர்களும் எல்லா பகுதிகளிலும் இருக்கின்றனர். எனினும் இந்தத் தரவில் ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். ஒரு வட மாவட்டத் தொகுதி இருக்கிறது என்றால் அங்கே பட்டியல் சாதியினர் மொத்த மாநில மக்கள்தொகையில் அவர்கள் சதவீதமான 20 சதவீதம் என்ற அளவில் இருப்பார்கள். அந்தத் தொகுதியில் படையாச்சிகள் 25 சதவீதம் இருப்பார்கள். படையாச்சிகளின் மாநில முழுதுக்குமான மக்கள்தொகை சதவீதமே 14 சதவீதம். வட மாவட்டஙளில் மட்டும் கணக்கெடுத்தால் அவர்கள் 25 சதவீதம் இருப்பார்கள். தமிழகத்தின் எந்த தொகுதியிலும் பட்டியல் சாதியினர் 20 சதவீதத்துக்கு மேல் அனேகமாக இல்லை. 

தமிழக அரசியலில் இட ஒதுக்கீடு முக்கியமான விஷயமாக கடந்த 50 ஆண்டுகளுக்கு மேல் இருந்திருக்கிறது ; இருக்கிறது. இட ஒதுக்கீடு நீண்ட காலமாகப் பெற்றவர்கள் பட்டியல் சாதியினர். அதன் பின் படையாச்சிகளும், முக்குலத்தோரும் இதர சாதிகளும் இட ஒதுக்கீடு பெற்றார்கள். தமிழக அரசியல் என்பது இன்னொரு சாதி தங்களை விட அதிகமாக இட ஒதுக்கீடு பெற்று விடுமோ என ஒவ்வொரு சாதியையும் ஐயுற வைப்பதே ஆகும். இந்த ஐய உருவாக்கமே தமிழகக் கட்சிகளின் ‘’பிரித்து ஆளும்’’ முறையின் அடிப்படை விஷயம் ஆகும்.

தமிழக அரசியலில் எவர் முதலமைச்சராக இருந்திருக்கிறார்கள் என்று பார்ப்போம் எனில் எண்ணிக்கையில் மிகக் குறைவாக இருக்கும் சாதிகளைச் சேர்ந்தவர்களே அதிகமாக முதலமைச்சர்கள் ஆகியிருக்கிறார்கள். 

ராஜாஜி ஐயங்கார் சாதியைச் சேர்ந்தவர். காமராஜ் நாடார் சாதியைச் சேர்ந்தவர். பக்தவத்சலம் முதலியார் சாதியைச் சேர்ந்தவர். அண்ணாதுரை முதலியார் சாதியைச் சேர்ந்தவர். கருணாநிதி இசை வேளாளர் சாதியைச் சேர்ந்தவர். எம் ஜி ஆர் மன்றாடியார் சாதியைச் சேர்ந்தவர். ஜெயலலிதா ஐயங்கார் சாதியைச் சேர்ந்தவர். ஜோசஃப் விஜய் ஆபிரகாமிய மதத்தைச் சேர்ந்த கிருஸ்துவ வெள்ளாள சாதியைச் சேர்ந்தவர். 

இந்தப் பட்டியலில் ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் மட்டுமே மிகச் சிறு அளவில் மாறுபடுபவர்கள். ஓ. பன்னீர்செல்வத்தின் முக்குலத்தோர் சாதி எண்ணிக்கை அடிப்படையில் பட்டியல் சாதி, படையாச்சி, ஆபிரகாமிய மதங்கள் ஆகியவற்றுக்கு அடுத்ததாக வரக்கூடிய சாதியே. எடப்பாடி பழனிச்சாமியின் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் சாதி எண்ணிக்கை அடிப்படையில் பட்டியல் சாதி, படையாச்சி, ஆபிரகாமிய மதங்கள், முக்குலத்தோர் ஆகிய சாதிகளுக்கு அடுத்த எண்ணிக்கையில் வரும் சாதியே.

தமிழக வாக்காளர்களில் தேர்தல் தினத்தன்று வாக்குச்சாவடிக்கு சென்று தவறாமல் வாக்களிக்கும் வழக்கம் கொண்டவர்கள் பட்டியல் சாதியினர். மொத்த வாக்காளர்களில் 20 சதவீத எண்ணிக்கை கொண்டவர்கள் பட்டியல் சாதியினர். தமிழகத்தின் பொது வாக்கு சதவீதம் 80 சதவீதம் எனக் கொண்டால் பதிவாகும் வாக்குகளில் 25 சதவீதம் பட்டியல் சாதியினரின் வாக்குகள் என்றாகும். இந்த 25 சதவீத வாக்குகளை ‘’வாக்கு வங்கி’’யாகப் பயன்படுத்துகின்றன தமிழகத்தினை ஆளும்கட்சிகள். பட்டியல் சாதியினருக்கு கிடைக்கும் சலுகைகள் அனைத்துமே நாடு சுதந்திரம் பெற்ற போது அரசியல் நிர்ணய சபை வழங்கிய சலுகைகளே. தனித்தொகுதி என்னும் முறை இருப்பதால் சட்டசபைக்கு பட்டியல் சாதியினர் செல்லும் நிலை உள்ளது. திராவிடக் கட்சிகள் பட்டியல் சாதியினரின் கணிசமான வாக்குகளால் பதவிக்கு வந்தாலும் பட்டியல் சாதியினருக்கு அரசியல் அதிகாரம் அளித்ததில்லை. ஆபிரகாமிய மதங்களின் 12 சதவீத வாக்குகளும் திமுக வுக்கு வாக்கு வங்கியாக உதவியது. அவர்களுக்கும் திமுக அரசியல் அதிகாரத்தில் பங்கு கொடுத்ததில்லை. 

இந்த முறை ஆபிரகாமிய மதத்தைச் சேர்ந்த ஜோசஃப் விஜய் முதலமைச்ராக ஆகியிருக்கிறார்.  அவரது அமைச்சரவையில் முக்கியமான நிதி அமைச்சர் பொறுப்பை பட்டியல் சாதியைச் சேர்ந்த ஒருவர் பெற்றிருக்கிறார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கும் ஆட்சியில் பங்கு பெற்றிருக்கின்றன. 

தமிழக அரசியலின் மையப்புள்ளியாக இருக்கும் சாதி கல்வி , வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு என்னும் நிலைக்கு அடுத்த கட்டமாக பட்டியல் சாதியினருக்கும் ஆபிரகாமிய மதத்தினருக்குமான அரசியல் அதிகாரம் என்னும் அடுத்த கட்டத்துக்குச் சென்றிருக்கிறது. வழக்கமாக தமிழக அரசியலில் படையாச்சிகள், முக்குலத்தோர், கொங்கு வேளாளர்கள் என்னும் சாதிகள் கணிசமாகவும் பட்டியல் சாதிகளும் ஆபிரகாமிய மதங்களும் மிகச் சிறு அளவிலும் அரசியல் அதிகாரம் பெறுவார்கள். இந்த முறை த வெ க ஆட்சியில் பட்டியல் சாதியினரும் ஆபிரகாமிய மதத்தினரும் கணிசமாகவும் படையாச்சிகள், முக்குலத்தோர் , கொங்கு வேளாளர்கள் ஆகிய சாதிகள் பட்டியல் சாதியினர், ஆபிரகாமிய மதத்தினருக்கு சமமாகவும் அரசியல் அதிகாரம் பெற்றுள்ளனர். தமிழக அரசியலில் இந்தக் காட்சி புதிய காட்சி ஆகும். 

கடந்த 60 ஆண்டுகளாக தமிழக அரசியல் களத்தில் சாதியே மையப்புள்ளியாக இருந்திருக்கிறது. சாதியை மையமாக வைத்த கல்வி வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு. வாக்காளர்கள் கணிசமானோர் மனதில் பிற சாதியினர் குறித்த ஐயமும் அவநம்பிக்கையும் அரசியல் கட்சிகளால் உருவாக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்து மக்களை இதுவரை ‘’பிரித்து ஆளும்’’ அரசியலே நிகழ்ந்துள்ளது. 

இனி, தமிழக மக்களை ‘’ஒன்றிணைக்கும்’’ அரசியலை அரசியல் கட்சிகள் முன்னெடுக்க வேண்டும் என்பது தமிழகப் பொதுஜனங்களின் எதிர்பார்ப்பு. 

Sunday, 21 June 2026

கவிதையாதல்

 ஒலி 
சொல் ஆதல்
அரிது
சொல்
கவிதை ஆதல்
அதனினும்
அரிது அரிது

25 கவிதைகள்

உச்சபட்சமான பரபரப்பு கொண்ட உலகியல் வணிகச் செயல்பாடு ஒன்றில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். எல்லா வணிகங்களிலும் சிறிதேனும் இந்த அம்சம் உண்டு எனினும் தற்போது ஈடுபட்டிருக்கும் விஷயம் குறிப்பிட்டுக் கூறும் விதமானது. தொடர் சந்திப்புகள். தொடர் பேச்சுவார்த்தைகள். தொடர் உடன்படிக்கை வாசக பரிசீலனைகள். மனதிலிருந்து கொஞ்சம் கூட நீக்கி வைக்க முடியவில்லை. நள்ளிரவிலும் அதிகாலையிலும் விழிப்பு நிகழ்கிறது. விழித்ததும் அச்செயல்பாட்டின் எண்ணங்கள் மனதில் நகரத் தொடங்குகின்றன. என்னில் ஆரம்பித்து என்னில் முடியும் விஷயம் அல்ல அது. இந்த விஷயத்துக்குள் யார் யார் வரப்போகிறார்கள் என்பதை என்னாலேயே கூறிட முடியாது ; இப்போதே பலர் இருக்கிறார்கள் ; மேலும் பலர் வரலாம். எத்தனை பேர் வருவது குறித்தும் விஷய்ம் இல்லை. எண்ணியவாறு விஷயம் முடிய வேண்டும். நடு வயதின் அனுபவம் எந்த விஷயமும் குறிப்பிட்ட காலம் தாண்டி அதிராது என்பதை பல தருணங்களில் உணர்ந்திருக்கும். எந்த விஷயத்துக்கும் அதிர்வு சில வினாடிகள் ; சில நிமிடங்கள் ; சில மணிகள் ; நில நாட்கள்; சில வாரங்கள் ; சில மாதங்களே. மாதக்கணக்கில் எண்ணங்கள் அதிர்வது வெகு அபூர்வம். நாட்கணக்கில் நீடிப்பது கூட அபூர்வமே. சாமானியமாக சில விஷயங்கள் சில நாட்கள் நீடிக்கும்.  

இன்று மதியம் ஒரு வணிகச் சந்திப்பு ஏற்பாடு செய்திருந்தேன். மூன்று நான்கு நாட்களுக்கு முன் நிகழ்ந்திருக்க வேண்டும். ஒரு காலிமனை கிரயம் தொடர்பான வணிகச் சந்திப்பு. சந்திப்புக்கு வாங்குபவர் ஒதுக்கும் நேரமும் விற்பவர் ஒதுக்கும் நேரமும் ஒன்றாக இருக்கவில்லை. நேரம் முடிவு செய்து இரண்டு மூன்று முறை ஒத்திப் போடப்பட்டது. நாளாக நாளாக நான் பேச வேண்டிய விஷயம் இரண்டு தரப்புக்கும் என மனதில் சொல்லிப் பார்த்த சொற்களை இன்னும் எவ்விதம் சிறப்பாகச் சொல்வது என மாற்றி மாற்றி அமைத்துக் கொண்டிருந்தேன். நான் என்ன சொல்கிறேன் என்பது முக்கியம் என்றாலும் அந்த விஷயத்தை வாங்குபவரும் விற்பவரும் எவ்விதம் புரிந்து கொள்கிறார்கள் என்பது தான் முக்கியம் என்பதால் என் மனம் சொற்களைப் பரிசீலிக்கும் தோறும் சோர்வடைந்தது. 

இன்று காலை வணிகச் சந்திப்புக்கு ஊரின் 3 நட்சத்திர விடுதி அறை ஒன்றை பதிவு செய்து விட்டு வீட்டுக்கு வந்தேன். சந்திப்புக்கு இன்னும் 3 மணி நேரம் இருந்தது என்னும் நிலையில் என் புத்தக அலமாரியில் இருந்து ஒரு பெரிய கவிதைத் தொகுப்பை கையில் எடுத்தேன். நான் பொதுவாக கவிதை வாசிப்பது எவ்வாறு எனில் ஒரு கவிதையை வாசித்த பின் அந்த கவிதை அளிக்கும் உணர்வில் நெடுநேரம் இருப்பேன். எனவே கவிதையை மெல்ல ஒன்று ஒன்றாக வாசிப்பதே என் வழக்கம். ஒரே தொகுப்பில் இருக்கும் ஒரு கவிதையும் அடுத்த கவிதையும் கூட வெவ்வேறு உணர்வுநிலைகளில் இருக்கக்கூடும் என்பதால் ஒவ்வொரு கவிதையாக மெதுவாகவே வாசிப்பேன். இன்று அந்த பெரிய கவிதைத் தொகுப்பின் கவிதைகளை வாசிக்கத் தொடங்கினேன். ஒன்று இரண்டு மூன்று என வாசித்துக் கொண்டே சென்றேன். அந்தத் தொகுப்பை பல முறை வாசித்திருக்கிறேன். இருப்பினும் இப்போதுதான் முதல் முறை வாசிக்கிறேன் என்னும் விதமாக மனம் இருந்தது. ஒரே கவிதையை பலமுறை வாசித்தேன். குறிப்பிட்ட வரிகளை மீண்டும் மீண்டும் வாசித்தேன். அந்தக் கவிதைத் தொகுப்பின் 25 கவிதைகளை வாசித்திருந்தேன். ஒவ்வொரு கவிதையின் வாசிப்பனுபவம் குறித்தும் எழுத வேண்டும் என எண்ணினேன். அந்த நினைவைப் பின் தள்ளி எப்போதும் கவிதைத் தொகுப்புகளைக் கையில் வைத்திருந்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் கவிதைகளை வாசித்துக் கொண்டேயிருப்பது என முடிவு செய்தேன். 25 கவிதைகளைத் தொடர்ச்சியாக வாசித்தது என் மன பரபரப்பை முற்றிலும் இல்லாமல் செய்து விட்டது. கவிதைகளை கையில் வைத்திருத்தல் கவிதைகளுடன் இருத்தலே என உணர்ந்தேன்.    

Saturday, 20 June 2026

அரசியல் பயிற்சி அளித்தல்

அரசியல் கட்சிகளின் இயங்குமுறையை சிறு வயதிலிருந்தே கவனித்தது உண்டு. நான் வசிப்பது காவிரி வடிநிலம் என்பதால் இங்கே கட்சிக்கரை கொண்ட வேட்டியை அணிபவர்கள் பலரை தினந்தோறும் கடைத்தெருவில் பேருந்து நிலையத்தில் பொது இடங்களில் காண முடியும். ஒருவர் கட்சிக்காரர் என்றால் பெரும்பாலும் அவர் கட்சிக்கரை போட்ட வேட்டியை அணிந்திருப்பார்.  கட்சிக் கூட்டங்களுக்குச் செல்வார். கட்சி மாநாடுகளுக்கு செல்வார். அவர் இருக்கும் கட்சியின் மற்ற கட்சிக்காரர்களுடன் அறிமுகமாகியும் பரிச்சயமாகியும் இருப்பார். பொது விஷயங்கள் தொடர்பாக கட்சி என்ன நிலைப்பாடு எடுக்கிறதோ அதனையே தனது நிலைப்பாடாகவும் கொள்வார். தமிழகத்தில் ஒரு கட்சிக்காரரிடம் கட்சி எதிர்பார்ப்பதும் கட்சியிடம் கட்சிக்காரர் எதிர்பார்ப்பதும் இவ்வளவே ஆகும். தமிழகத்தை 1967லிருந்து 2026 வரை 60 ஆண்டுகள் ஆண்ட திராவிடக் கட்சிகள் இவ்விதமே கட்சி அரசியலை செய்தன. அவர்களின் இந்த பாணி தமிழகத்தில் அதிகாரத்தில் இல்லாமல் இருந்த மற்ற கட்சிகளின் இயங்குமுறையிலும் பிரதிபலித்து அதுவே அவர்களின் இயங்குமுறையாகவும் நிலை கொண்டது. 

தமிழகத்தில் 12,600 கிராமங்கள் உள்ளன. தமிழகத்தில் 75,000 வாக்குச் சாவடிகள் உள்ளன. 60 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தில் காங்கிரஸ் ஆளும்கட்சியாக இருந்தது. அவர்களுக்கு மாநிலத்தில் உள்ள எல்லாக் கிராமங்களிலும் வாக்குச்சாவடிகளிலும் கட்சிக் கட்டமைப்பு இருந்தது. பின்னர் திராவிடக் கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வரத் தொடங்கியதும் தமிழகத்தில் இரு திராவிடக் கட்சிகளுக்கு மட்டுமே 75,000 வாக்குச் சாவடிகளிலும் கட்சிக் கட்டமைப்பு இருக்கிறது என்னும் நிலை இருந்தது. 

வாக்குச் சாவடி கட்டமைப்பு என்பது ஒரு கட்சிக்கு ஒரு வாக்குச்சாவடியில் 6லிருந்து 10 பேர் கட்சி வேலை செய்ய இருக்கிறார்கள் என்றால் அந்தக் கட்சிக்கு அந்த வாக்குச் சாவடியில் வாக்குச் சாவடி கட்டமைப்பு இருக்கிறது என்று பொருள். ஒரு வாக்குச் சாவடி என்பது 1500லிருந்து 2500 வாக்காளர்களைக் கொண்டிருக்கும். அதில் கரைவேட்டி தினமும் கட்டும் கட்சிக்காரர்கள் என திராவிடக் கட்சிகளுக்கு குறைந்தது 40 பேர் இருப்பார்கள். எனினும் வாக்குச் சாவடி பொறுப்பு என்பது 6 லிருந்து 10 பேருக்கு மட்டுமே தர முடியும் என்பதால் கரைவேட்டி கட்டும் 40 பேரில் 20 பேருக்கு வார்டு தலைவர், வார்டு செயலாளர், வார்டு பொருளாளர், வார்டு பிரதிநிதி என சில பொறுப்புகளை வழங்குவார்கள். சிலருக்கு கட்சி உறுப்பினர் அட்டை மட்டும் கொடுத்து இருப்பார்கள். அவ்விதம் என்றால் மாநிலத்தில் உள்ள 75,000 வாக்குச் சாவடிகளிலும் சாவடிக்கு 20 பேர் என்றால் ஒரு கட்சி தன் பொறுப்பாளர்களாக 15,00,000 பேரை பராமரிக்கும். இவர்களுக்காகவே கட்சி பத்திரிக்கை, டி வி சேனல், மாநாடு ஆகியவற்றை நடத்தும். மாநிலத் தலைமை ஒரு குடும்பத்திடம் இருப்பது போல வாக்குச்சாவடி உறுப்பினர்களும் பாட்டனார், தந்தை, பேரன் என அந்த வாக்குச்சாவடியில் கட்சிப் பொறுப்பில் இருப்பார்கள். வாக்குச்சாவடியின் கட்சிப் பொறுப்பை அவர்கள் ஒரு சமூக அந்தஸ்தாகவும் எண்ணத் தொடங்குவார்கள். 

கடந்த 60 ஆண்டுகளில் தமிழகத்தில் நிகழ்ந்தது என்னவெனில் திமுக, அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகள் மட்டுமே தமிழகத்தின் 75,000 வாக்குச்சாவடிகளிலும் கட்சிப் பொறுப்பாளர்களைக் கொண்டிருக்கிறார்கள் என்னும் நிலை உருவானது. 1967ல் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அடுத்த 30 ஆண்டுகளில் வாக்குச்சாவடிகள் நிலையில் கட்சிக் கட்டமைப்பை முற்றிலும் இழந்தது. கம்யூனிஸ்டுகளிடம் தொழிலாளர், விவசாயத் தொழிலாளர் வலைப்பின்னல் மட்டுமே இருந்ததால் அவர்களுக்கும் 75,000 வாக்குச்சாவடிகளிலும் கட்சிப் பொறுப்பாளர்கள் இல்லை. பாட்டாளி மக்கள் கட்சி தமிழகத்தின் வட மாவட்டங்களில் உள்ள வாக்குச்சாவடிகளில் கட்சிக் கட்டமைப்பு கொண்ட கட்சி ; எனினும் அவர்களுக்கு தமிழகத்தின் மேற்கு மற்றும் தெற்குப் பிராந்தியங்களில் கட்டமைப்பு இல்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் வட மாவட்டங்களில் வாக்குச்சாவடி அளவில் கட்டமைப்பு கொண்ட கட்சியே. அவர்களுக்கும் மேற்கு மற்றும் தெற்கு பிராந்தியத்தில் பலம் இல்லை. 

தமிழக மக்கள் தாங்கள் வாக்களிக்கும் கட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என எண்ணுவார்கள். தாங்கள் வாக்களிக்கும் கட்சி வெற்றி பெறாமல் போனால் அதனைத் தங்கள் தோல்வியாகக் கருதுவார்கள். எனவே திராவிடக் கட்சிகள் தங்களுக்குப் போட்டியாக உருவாகும் கட்சிகள் வாக்குச்சாவடி கட்டமைப்பு இல்லாதவை - அமைப்பு பலம் இல்லாதவை என்று சொல்லி அவர்களுக்குப் பின்னடைவை உருவாக்கி விடும். தமிழக மக்களும் அமைப்பு பலம் இல்லாத கட்சிகளுக்கு வாக்களிக்கத் தயங்குவார்கள். இவ்விதமாக தமிழக அரசியல் அதிகாரம் கடந்த 60 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகளின் ஏகபோகமாக இருந்தது. இத்தனை அமைப்பு பலம் இருந்தும் கூட திராவிடக் கட்சிகள் காங்கிரஸ், பாரதிய ஜனதா, பா ம க, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தே தேர்தலில் போட்டியிடும் வழக்கம் கொண்டிருந்தன. 

இவ்விதமான அரசியல் சூழலில் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நிகழ்ந்தது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனைப் போட்டி உருவானது. தமிழ்த் திரைப்பட நடிகர் ஜோசஃப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 2024ம் ஆண்டு உருவானது. நடிகர் ஜோசஃப் விஜய்யின் கட்சிக்கு திராவிடக் கட்சிகள் பாணியிலான கரைவேட்டி கட்டிய கட்சிக்காரர்களோ 75,000 வாக்குச்சாவடிகளிலும் வாக்குச்சாவடி முகவர் கட்டமைப்போ இல்லை. எனினும் தமிழக வெற்றிக் கழகம் ஒரு கோடியே ஐம்பது லட்சம் வாக்குகள் பெற்று பெருவெற்றி பெற்றது. தமிழக வெற்றிக் கழகத்தின் இந்த வெற்றிக்குப் பிறகு தமிழக அரசியல் இயங்கும் விதம் தலைகீழாக மாறியிருக்கிறது. கரைவேட்டி கட்சிக்காரர்கள், வாக்குச்சாவடி கட்டமைப்பு ஆகியவற்றின் முக்கியத்துவம் கணிசமாகக் குறைந்துள்ளது. வேறு புதிய பாணி மக்கள் தொடர்பு முறைகள் உருவாகின்றன. தமிழக அரசியலுக்கு இது நல்ல விஷயமே. 

தற்போது சில அமைப்புகள் குடிமக்களுக்கு அரசியல் அறிமுகமும் அரசியல் பயிற்சியும் அளிக்கத் திட்டமிடுகின்றன. ஐ ஏ எஸ் , ஐ பி எஸ், ஐ எஃப் எஸ் ஆகிய தேர்வில் தேர்ச்சி பெறுப்வர்களுக்கு ஓராண்டு பயிற்சி அளிக்கப்படும். அந்தப் பயிற்சியே அவர்களை அவர்கள் வகிக்கப் போகும் பதவிக்கு தகுதி பெற்றவர்கள் ஆக்கும். அதே விதமாக தமிழகத்தில் குடிமக்கள் மற்றும் அரசியல் ஆர்வலர்கள் அரசியல் பயிற்சி பெறும் சூழல் உருவாகியுள்ளது. அவ்விதமான பயிற்சிக்கு லட்சக்கணக்கானோர் தங்களைப் பதிவு செய்திருக்கிறார்கள். 

மகாத்மா காந்தி தென்னாஃப்ரிக்காவிலிருந்து இந்தியா வந்து இந்திய சுதந்திரப் போராட்டத்துக்குத் தலைமை ஏற்ற போது காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் கட்டணத்தை 25 பைசா என்றாக்கினார். அந்தக் காலத்தில் அதனை ‘’நாலணா’’ எனக் கூறுவார்கள்.  அவ்விதம் இணைந்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு தமது ‘’யங் இந்தியா’’ ‘’நவஜீவன்’’ பத்திரிக்கைகள் மூலமும் தனது ஆசிரமங்கள் மூலமும் அரசியல் பயிற்சி அளித்தார். அவ்விதம் உருவாகி வந்தவர்களே பின்னாட்களில் இந்தியாவின் ஜனநாயக அரசியலுக்கு அடித்தளமாக விளங்கினர். அதே பாணியில் காலத்தின் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் அரசியல் பயிற்சி துவங்கவிருக்கிறது. எதிர்காலத்தில் அது தமிழகத்துக்கு நல்ல மாற்றங்களைக் கொண்டு வரும் என எதிர்பார்ப்போம். 


Thursday, 18 June 2026

குல்ஃபி ஐஸ் (நகைச்சுவைக் கட்டுரை)

35 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த சம்பவம் இது. அப்போது துவக்கப்பள்ளியை நிறைவு செய்து உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்திருந்தேன். உறவினர் ஒருவர் வீட்டுக்கு சென்னை சென்றிருந்தேன். அந்த வீட்டில் சிறுவர்களும் இளைஞர்களும் அதிகம். ஆகவே சிறுவனான நான் அங்கே உற்சாகமாக இருந்தேன்.  இரவு 10 மணிக்கு அங்கே குல்ஃபி ஐஸ் வந்து மணியடிக்கும் சத்தம் கேட்கும். எனக்கு குல்ஃபி ஐஸ் வாங்கித் தந்தார்கள். சில தகவல்களுடன் குல்ஃபி ஐஸ் எனக்கு அறிமுகமானது. அதாவது குல்ஃபி ஐஸ் சென்னையில் இரவு 10 மணிக்கு மேல்தான் விற்பனை ஆகும். இரவு 10 லிருந்து காலை 3 வரை. இதற்கென காத்திருந்து வாங்குவார்கள். பகலில் குல்ஃபி ஐஸ் விற்பனை இருக்காது. முதல் நாள் சாப்பிட்டோம். இரண்டாம் நாள் சாப்பிட்டோம். மூன்றாம் நாள் இரவு உணவு அருந்தியதும் சிறுவர்களாகிய நாங்கள் இன்றைக்கும் குல்ஃபி ஐஸ் வேண்டும் என்று சொன்னோம். அந்த வீட்டின் பெரியவர் ‘’தினமும் குல்ஃபி ஐஸ் சாப்பிடக் கூடாது ; என்றைக்காவது ஒருநாள் தான் சாப்பிட வேண்டும்’’ என்றார். 

அவர் சொன்னதற்கு முதல் நாள் குல்ஃபி சாப்பிட்டதோடு சரி ; அதன் பின் 35 ஆண்டுகளுக்குப் பின் நேற்று இரவு ஊரில் குல்ஃபி ஐஸ் சாப்பிட்டேன். 

Wednesday, 17 June 2026

கம்யூனிஸ்டுகள் (நகைச்சுவைக் கட்டுரை)

சிதம்பரம் நகரில் ஒரு வேலை இருந்தது. காலை 10 மணி அளவில் சென்றிருந்தேன். வேலை முடிய மதியம் 1 மணி ஆகும் என்ற நிலை. 12 மணி அளவில் சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக கேன்டீனுக்கு வந்தேன். ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தேன். என் அருகில் மூன்று மாணவர்கள் இருந்தனர். கம்யூனிஸ்டு மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள். கையில் ஒரு மனு வைத்திருந்தனர். வாங்கிப் பார்த்தேன். அவர்களுடைய லெட்டர்பேடில் அச்சிடப்பட்டு பின் இன்னொரு தாளில் இரண்டாம் பக்கம் அச்சிடப்பட்டிருந்தது.  

‘’தம்பி ! இந்த மனுவை ஏன் இரண்டு தனித்தனி தாள்ல பிரிண்ட் பண்ணியிருக்கீங்க. ரெண்டு பக்கம் தானே இருக்கு. ஃபிரண்ட் அண்ட் பேக் பிரிண்ட் பண்ணலாமே?’’ என்றேன். 

ஒரு மாணவன் யோசித்தான்.’’ஃபைல் பண்ண இதுதான் ஈஸி’’ என்றான். 

‘’ஃபிரண்ட் அண்ட் பேக் தான் ஃபைல் பண்ண ஈஸி. தனித்தனியா இருந்தா ரெண்டாவது பக்கத்தை ஃபைல்ல இருந்து எடுக்கறது ரொம்ப சுலபம். டைப் ரைட்டர் புழக்கத்தில இருந்தப்ப தனித்தனி தாள்ல டைப் செய்வாங்க. டைப் பண்ண தாளோட பின் பக்கத்துல டைப் பண்ணா ரெண்டு பக்கமும் தெளிவா இருக்காது. இப்ப பிரிண்டிங் டெக்னாலஜி பெருசா வளர்ந்துடுச்சு. ஒரு பக்கத்தோட இம்ப்ரஷன் பின் பக்கத்துல இருக்காது.’’

’’நீங்கள் சொல்றது கரெக்ட் தான் சார்’’ என்றான் ஒரு மாணவன். 

‘’நீங்க ஸ்டூடண்ட் யூனியன்ல என்ன பொறுப்புல இருக்கீங்க?’’

ஒரு மாணவன் மாவட்டப் பொறுப்பு. இன்னொரு மாணவன் வட்டப் பொறுப்பு.

‘’1971ல சிதம்பரம் அண்ணாமலை நகர்ல கம்யூனிஸ்டு கட்சியின் மாணவர் யூனியனைச் சேர்ந்த உதயகுமார் என்னும் மாணவரை கருணாநிதி சர்க்கார் அடிச்சு கொலை செஞ்சது. உங்களுக்கு இந்த விஷயம் தெரியும் தானே?’’

அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. மாணவர்கள் என்பதால் நான் சொன்ன விஷயம் அவர்களுக்கு பரபரப்பை அளித்தது. தங்கள் கட்சிக்காரர்களிடம் ஃபோன் செய்து கேட்கிறோம் என்றான் ஒரு மாணவன். 

‘’உதயகுமார் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்னு கூகுள் செய்ங்க ‘’ என்றேன்.

இரண்டு மாணவர்கள் இரு திசைகளில் சென்று இரண்டு கட்சிக்காரர்களிடம் ஃபோன் பேசி விட்டு வந்தனர். 

‘’உதயகுமார்னு ஒரு ஸ்டூடண்ட் கொல்லப்பட்டிருக்கார். ஆனா அவர் கம்யூனிஸ்டு மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர் இல்லைன்னு கட்சிக்காரங்க சொல்றாங்க’’ 

‘’கூகுள் செய்ங்க’’

கூகுள் உதயகுமார் கம்யூனிஸ்டு மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர் என்பதைத் தெரிவித்தது. மாணவர்களுக்கு அதிர்ச்சி. 

‘’கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து திமுக கூட தேர்தல் கூட்டணி வச்சு எம் எல் ஏ வா எம் பி யா இருந்திருக்காங்க தம்பி. அதனால திமுக தலைவர் கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் கொடுக்கறதும் ஊர்ல திரியற கழுதைக்கு டாக்டர் பட்டம் கொடுக்கறதும் ஒன்னுன்னு சொல்லி கழுதைங்க கழுத்தில டாக்டர்னு எழுதித் தொங்கவிட்ட உதயகுமார் கம்யூனிஸ்டு ஸ்டூடண்ட் யூனியன் மெம்பர்னு சொல்றதை அவங்க அசௌகர்யமா நினைப்பாங்க இல்லயா?’’

பின்னர் உதயகுமார் கொலை குறித்த விபரங்களை அவர்களுக்குக் கூறினேன். போலீஸ் உதயகுமாரைக் கொலை செய்து அவர் உடலை குளத்தில் வீசியது ; அவர்கள் பெற்றோரை மிரட்டி உதயகுமாரின் பிணத்தை உதயகுமாரின் பிணம் அல்ல எனக் கூற வைத்தது. பின்னர் அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் இறந்தது உதயகுமார்தான் எனக் கூறியது. அனைத்து விஷயங்களும் சொன்னேன்.  

Monday, 15 June 2026

நன்றி

அனுப்புநர்

&&&&&
&&&&
&&&

பெறுநர்

மாவட்ட ஆட்சியர்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மயிலாடுதுறை

நகல் மனு : கனம் வருவாய்த்துறை அமைச்சர்

ஐயா,

பொருள் : மனுநீதி நாள் முகாமில் மனுதாரர்களுக்கு உடனடியாக ஒப்புகைச்சீட்டு வழங்கக் கோரிய கோரிக்கையை நிறைவேற்றியதற்கு நன்றி தெரிவித்துக் கடிதம்

ஜூன் 1, ஜூன் 8 ஆகிய தேதிகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் மனுதாரர்களுக்கு உடனடியாக மனுக்களுக்கான ஒப்புகைச்சீட்டு வழங்கப்படாமல் பலமணி நேரம் தாமதமாக வழங்கப்படுவது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு ஒரு கடிதம் எழுதப்பட்டது . அதன் நகல் வருவாய்த்துறை அமைச்சருக்கும் அனுப்பப்பட்டது. இன்று ஜூன் 15 ம் தேதி மனுநீதி நாள் முகாமில் ஒப்புகைச்சீட்டு மனுதாரர்களுக்கு உடனடியாக வழங்கப்பட்டது என்பதை நான் நேரில் கண்டேன். கோரிக்கையை நிறைவேற்றிய மாவட்ட ஆட்சியருக்கு நன்றி. 

தங்கள் உண்மையுள்ள, 

&&&

இடம் : மயிலாடுதுறை
நாள் : 15.06.2026

ரயில்களும் சென்னையும்

சென்னை எனக்கு ரயில் நிலையங்களின் நகரமும் கூட. எழும்பூர் என்பது எனக்கு எழும்பூர் ரயில் நிலையம். தாம்பரம் என்பது தாம்பரம் ரயில் நிலையம். கிண்டியும் அவ்வாறே. இப்போது மெட்ரோ ரயில் நிலையங்களும் அவ்விதம் இணைந்து விட்டன.  மொத்த மெட்ரோ நிலையங்களும் ஒரே நிலையம் என எண்ணும் விதமாக மெட்ரோ ரயில் உள்ளது. மெட்ரோ ரயில் பூமிக்குக் கீழேயும் செல்கிறது ; பூமிக்கு மேலேயும் செல்கிறது. வெளிக்காட்சிகளைக் காண்பது அரிது. எனவே மொத்த மெட்ரோவும் ஒன்றே என எண்ணும் விதமாக இருக்கிறது. இந்த முறை சென்னை பயணத்தில் ஊரில் காலை 7.40க்கு ஒரு விரைவு ரயில் இருந்தது. அது 12.30க்கு தாம்பரம் போகும். அங்கிருந்து ரயில் மாற வேண்டும். அதனைத் தவிர்க்கவே காலை 6 மணி பயணிகள் வண்டியில் சென்றேன். விழுப்புரத்தில் ரயில் மாறி 12.30க்கு எழும்பூர் ரயில் நிலையம் சென்றேன். எழும்பூர் ரயில் நிலையத்தின் ஒரு பகுதியாக எதிர்திசையில் எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையம் உள்ளது. அங்கு சென்று வடபழனிக்கு டிக்கெட் எடுத்துக் கொண்டு வடபழனி சென்றேன். அங்கே வேலையை முடித்து விட்டு மீண்டும் வடபழனி வந்து 12 X என்ற பேருந்தைப் பிடித்து திருவள்ளுவர் சிலைக்கு வந்தேன். வடபழனியிலிருந்து திருவள்ளுவர் சிலை கணிசமான நேரத்தை எடுத்துக் கொண்டது. எனினும் பயணச்சீட்டு ரூ.9 தான். ஆச்சர்யமாக இருந்தது. அங்கே வேலையை முடித்து விட்டு இரவு அங்கிருந்து அருகிலிருந்த ஆயிரம் விளக்கு மெட்ரோவுக்குச் சென்று கிண்டி மெட்ரோ ரயில் நிலையம் சென்றேன். பின்னர் அதன் ஒரு பகுதியில் இருந்த கிண்டி ரயில் நிலையத்தில் ஊருக்கு டிக்கெட் எடுத்துக் கொண்டு மின்சார ரயிலில் தாம்பரம் வந்து சேர்ந்தேன். அந்த்யோதயா புறப்பட்டத் தயாராக இருந்தது. ரயிலின் கடைசிக்கு சென்று கொண்டே இருக்கையில் 8 பேர் இருக்கையில் 4 பேர் அமர்ந்திருந்தனர். அங்கே சென்று அமர்ந்தேன். காலையிலிருந்து தொடர் பயணங்கள். சந்திப்புகள். இடம் இருந்ததால் உடலை நீட்டிப் படுத்தேன். படுத்தவுடன் உறங்கி விட்டேன். வண்டி புறப்பட்டதோ வண்டி நகர்ந்து கொண்டிருந்ததோ தெரியவில்லை. ஆழமான உறக்கம். எழுந்து பார்த்த போது வண்டி ஏதோ ஒரு ஊரில் நின்று கொண்டிருந்தது. பக்கத்தில் இருந்தவர்களிடம் என்ன ஊர் எனக் கேட்டேன். சிதம்பரம் என்றார்கள். எழுந்து அமர்ந்து கொண்டேன். ஊர் வரை விழுத்திருப்பதே உகந்தது. மீண்டும் ஆழ உறங்கி விட்டால் வண்டி தஞ்சாவூர் சென்றடைந்து விடும். அதன் பின் அங்கிருந்து ஊருக்கு தனியே பயணித்து வர வேண்டும். 

Sunday, 14 June 2026

ஐந்து பெண்கள்

நேற்று சென்னை செல்ல வேண்டிய வேலை இருந்தது. எனது வழக்கப்படி காலை 3 மணிக்கு அலாரம் வைத்து எழுந்தேன். 4 மணிக்கு வெளியே புறப்படும் விதமாக தயாரானேன். மெல்ல நடந்து அதிகாலையில் காலைஉணவு தயாராக இருக்கும் உணவகத்துக்குச் சென்று உணவருந்தி விட்டு டவுன்பஸ் பிடித்து ரயில்வே சந்திப்புக்குச் சென்றேன். காலை 5.30 அளவில் அங்கே சென்று சேர்ந்திருப்பேன். திருவாரூர் - விழுப்புரம் பயணிகள் ரயில் காலை 6.02க்கு வரும். அதில் விழுப்புரம் சென்று சேர காலை 9 மணி ஆகும். அங்கே 9.30க்கு பல்லவன் விரைவு வண்டி வரும். அதில் ஏறினால் 12 மணிக்கு சென்னை எழும்பூர். பயணிகள் ரயில் 30 நிமிடம் தாமதமாக வந்தது. ரயிலில் பெரிய கூட்டம் இல்லை. 10 பேருக்கான இருக்கையில் 5 பேர் அமர்ந்திருந்த இடத்தில் நானும் சென்று அமர்ந்து கொண்டேன். அதிகாலையில் எழுந்தது ; உணவகம் பேருந்து நிலையம் வரை நடந்தது ; வழக்கமான நேரத்துக்கு முன்பாகவே உணவு எடுத்துக் கொண்டது ஆகியவற்றால் தூக்கம் கண்களைச் சுழற்றியது. 10 பேருக்கான இருக்கையில் 6 பேர் மட்டுமே அமர்ந்திருந்ததால் உடலை நீட்டிப் படுத்து விட்டேன். எழுந்து பார்க்கும் போது வண்டி புதுச்சத்திரத்தைத் தாண்டியிருந்தது. சக பயணிகள் யார் என கவனித்தேன். பெட்டியில் ஏறும் போதே அவர்கள் பேச்சில் சன்னாநல்லூர் என்னும் பெயர் கேட்டது. திருவாரூர் விழுப்புரம் பயணிகள் ரயிலில் சன்னாநல்லூரில் ஏறியிருக்கிறார்கள். ஒரு மூதாட்டி, மூதாட்டியின் மகள், மூதாட்டியின் பேத்தி, மூதாட்டியின் சகோதரி, மூதாட்டியின் சகோதரி மகள் என ஐந்து பெண்கள் பேரங்கியூர் என்னும் ஊருக்கு பயணிக்கின்றனர். அவர்களது குடும்ப நண்பர் ஒருவர் உடல்நலம் குன்றியிருக்கிறார். அவருக்காக பேரங்கியூரில் இருக்கும் சிவனுக்கு அபிஷேகம் செய்து குடும்ப நண்பர் உடல்நலம் பெற வேண்டிக் கொள்ள சென்று கொண்டிருக்கிறார்கள். எனக்கு இப்போது லேசாக இருமல் இருக்கிறது. நான் இருமியதைக் கண்டு வென்னீர் வேண்டுமா எனக் கேட்டு கொடுத்தார்கள். சகஜமாக பேசிக் கொண்டு வந்தார்கள். கடலூர் முதுநகர் அடைந்தும் அவர்களுக்கு காலை உணவு கொண்டு வரும் விற்பனையாளர்களைப் பார்க்க முடியவில்லை. அனைவரும் உணவுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு கொய்யாக்காய் விற்பனை செய்யும் மூதாட்டி வந்தார். ஒருவருக்கு ஒரு கொய்யாக்காய் என 6 கொய்யாக்காய்களை கொடுக்கச் சொன்னேன். பணம் நான் கொடுத்து விட்டேன். அந்தப் பெண்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. ‘’ குடும்ப நண்பர் ஒருவர் உடல்நலம் பெற வேண்டி சிவனிடம் வேண்டிக் கொள்ள சென்று கொண்டிருக்கிறோம். பக்தர்களாகிய எங்கள் பசியை சற்று முன் அறிமுகமான ஒருவரான நீங்கள் தீர்த்து வைக்கிறீர்கள். எங்களுக்கு கொய்யா கிடைக்க வேண்டும் என்பது இறை சங்கல்பம். அது உங்கள் மூலமாக நிறைவேறியிருக்கிறது ‘’ என்று சொன்னார்கள். அவர்கள் அந்தச் சூழலை மிக உணர்ச்சிகரமாகப் புரிந்து கொண்டாலும் மிக உணர்ச்சிகரமாக எதிர்கொண்டாலும் உலகில் பாரதம் என்னும் இந்த மண்ணில் தான் கடவுளைத் தன் தோழனாகத் தன் பணியாளனாகத் தன் உறவினனாக மக்கள் காண்கிறார்கள். பேரங்கியூர் கோயில் குறித்து நிறைய விஷயம் சொல்லிக் கொண்டு வந்தார்கள். என்னிடம் என்ன தொழில் செய்கிறேன் எனக் கேட்டார்கள். ரியல் எஸ்டேட் என்று சொன்னேன். விழுப்புரம் வந்து ரயில் நின்றதும் அனைவரும் இறங்கினோம். ஐந்து பெண்களும் உங்கள் தொழில் மிகச் சிறப்பாக நடக்கும் ; ரியல் எஸ்டேட்டில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என வாழ்த்தி விட்டு சென்றார்கள். 

Friday, 12 June 2026

எஸ் எம் எஸ் அனுப்புவது எப்படி? (நகைச்சுவைக் கட்டுரை)

நேற்று ஒரு தொழிலதிபரைச் சந்தித்தேன். பல தொழில் செய்பவர். அசையா சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் கொண்டவர். எனக்கு அவரைப் பல ஆண்டுகளாகத் தெரியும். அவருக்கும் என்னைத் தெரியும். சாலையில் பொது இடத்தில் கடக்கும் போது புன்னகைத்துக் கொள்வோம் ; அரிதாக நலம் விசாரித்துக் கொள்வோம். அவருக்கு நெருக்கமான உறவினர் ஒருவர் எனது நண்பர். அவரை மாதம் ஒருமுறையாவது நேரில் சந்திப்பேன். ஒரு இடத்தின் விற்பனை தொடர்பாக நேற்று நண்பரைச் சந்தித்தேன். அவரது நெருக்கமான உறவினரிடம் இந்த விஷயம் தொடர்பாக நேரில் பேசுமாறு கூறினார். அவருக்கு ஃபோன் செய்து வீட்டில் இருக்குமாறு கூறினார். நான் புறப்பட்டுச் சென்றேன். சகஜமாக பேசிக் கொண்டிருந்தோம்.  விற்பனைக்கு உள்ள இடம் தொடர்பான ஆவணங்கள் என்னிடம் மின்னஞ்சலில் பி டி எஃப் ஆக இருந்தன. அவரது மின்னஞ்சல் முகவரியை எஸ் எம் எஸ் அனுப்புமாறு கூறினேன். அவர் தன் ஸ்மார்ட் ஃபோனை எடுத்தார். ‘’சார் ! எஸ் எம் எஸ் அனுப்பி பல வருஷம் ஆச்சு. எப்படி அனுப்பனும்னு மறந்து போச்சு.’’ என்றார். பின்னர் ஒரு விதமாக சமாளித்து அவரது மின்னஞ்சலை எனக்கு எஸ் எம் எஸ் அனுப்பினார். 

Thursday, 11 June 2026

தேர்வை அஞ்சும் ஆசிரியர் (நகைச்சுவைக் கட்டுரை)

இன்று காலை எனது நண்பருக்கு ஃபோன் செய்தேன். அவர் ஒரு துவக்கப்பள்ளி ஆசிரியர். அவரிடம் எப்போது சாவகாசமாக ஃபோனில் பேச முடியும் என்று கேட்டேன். மாலை நேரத்தில் என்றார். இப்போது அதாவது இந்தக் காலகட்டத்தில் ஏதும் முக்கிய பணி இல்லையே என்று கேட்டேன். ‘’இருக்கிறது’’ என்றார். ’’என்ன பணி?’’ என்றேன். 

மிகவும் சோகமாக ‘’டெட் எக்ஸாம் வருது’’ என்றார். 

‘’அதை ஏன் இவ்வளவு சோகமா சொல்றீங்க?’’ என்றேன். 

‘’தீவிரமா பிரிபேர் செஞ்சுட்டு இருக்கன்’’ 

‘’தீவிரமாவா?’’

’’ஆமா சிலபஸ் மாத்தியிருக்காங்க. அதான் தினமும் ரொம்ப நேரம் படிக்கறன்’’ என்றார். 

‘’பதட்டமா இருக்கா?’’

சற்று தயங்கி ‘’ஆமா ரொம்ப பதட்டமா இருக்கு’’ என்றார். 

‘’நீங்களே ஆசிரியர். தேர்வு எழுத தேர்வை நினைச்சு நீங்க பதட்டப்படலாமா ?’’ என்றேன். 

‘’டெட் எக்ஸாம் முக்கியமாச்சே?’’ என்றார். 

’’எத்தனை மார்க்குக்கு எக்ஸாம் ? பாஸ் பண்ண 80% எடுக்கணுமா?’’ என்றேன். 

‘’150 மார்க்குக்கு எக்ஸாம் எழுதணும். அதுல 80 மார்க் எடுக்கணும் பாஸ் செய்ய’’ என்றார். 

‘’ஐம்பது பர்செண்ட் மார்க் எடுத்தா பாஸ்ங்கறதுக்குத் தான் இவ்வளவு பதட்டமா ?’’ என்றேன். 

‘’ஆமா’’ என்றார்.

‘’இந்த மாதிரி ஆட்களை நம்பித்தான் தமிழ்க் குடும்பங்கள் அவங்க குழந்தைகளோட கல்வியை ஒப்படைக்கிறாங்க’’ என்றேன்.

நண்பர் அமைதியாக இருந்தார். 

‘’நீங்க ரொம்ப ஸ்மார்ட் ஆச்சே ? நீங்க ரொம்ப இண்டெலிஜெண்ட் ஆச்சே? ஏன் டெட் எக்ஸாமைக் கண்டு பயம் ?’’ என்றேன். 

‘’பேப்பர் டஃப் ஆ இருந்தா?’’ என்றார். 

‘’எதைப் பத்தியும் நினைச்சு பதட்டப்படாதீங்க. டெய்லி கன்சிஸ்டெண்ட்டா பிரிபரேஷன் மட்டும் செய்ங்க. நல்ல ஸ்கோர் எடுத்து பாஸ் செய்வீங்க ‘’ என்றேன். 

நண்பர் நம்பிக்கை கொண்டார்.   

பண்ணையாரா? பட்டயக் கணக்காளரா? (நகைச்சுவைக் கட்டுரை)

ஊரிலிருந்து 40 கி.மீ தொலைவில் இருக்கிறார் எனது பட்டயக் கணக்காளர். அவர் குடும்பத்தில் மூன்று தலைமுறையாக பட்டயக் கணக்காளர்கள் இருக்கிறார்கள். அவர் வீட்டில் 6 பேர் பட்டயக் கணக்காளர்களாக இருந்திருக்கின்றனர்.  அவரது பாட்டனாரும் தந்தையும் சகோதரரும் பட்டயக் கணக்காளர்கள். மனைவியும் மகனும் பட்டயக் கணக்காளர்கள். சந்தித்த முதல் நாளிலிருந்து எங்களுக்குள் அன்பும் பிரியமும் உருவாகி விட்டது. அவர் வீட்டில் அனைவருமே என் மீது பிரியம் கொண்டவர்கள். 

3 தலைமுறையாக பட்டயக் கணக்காளர்கள் எனினும் பல தலைமுறைகளாக அவர்கள் பூர்வீக கிராமத்தில் பண்ணையார்கள். பல வேலி நிலங்களுக்கு சொந்தக்காரர்கள். ‘’வேலி’’ என்னும் நில அளவு ‘’7 ஏக்கர்’’ ஐ குறிக்கும். பல வேலி நிலத்துக்குச் சொந்தக்காரர் என்று ஒருவரைச் சொன்னால் அவர் பெரிய பண்ணையார் என்று அர்த்தம். 

பழைய தஞ்சாவூர் பண்ணையார்களுக்கென்று பிரத்யேகமான பல வழக்கங்கள் உண்டு. இப்போது பரம்பரையாக பண்ணையார்கள் என்று மிகச் சிலரே இருக்கின்றனர். பெரும்பாலான பண்ணையார்கள் 70 ஆண்டுகளுக்கு 80 ஆண்டுகளுக்கு முன்பே தங்கள் நிலங்களை விற்பனை செய்து விட்டார்கள். ஒருவர் இன்று 50 ஏக்கர் நிலம் வைத்திருக்கலாம் ; அவர் பண்ணையார் தான். ஆனால் அவர் பழைய பண்ணையார் மனோபாவம் கொண்டவராக இருக்க மாட்டார். மளிகைக் கடை வைத்திருத்தல், டூ வீலர் ஸ்பேர் பார்ட்ஸ் கடை வைத்திருத்தல், பால் வியாபாரம் செய்தல், ஃபார்மஸி வைத்திருத்தல் போல 50 ஏக்கர் நிலம் வைத்திருப்பதையும் ஒரு தொழிலாகக் கருதும் நில உரிமையாளர்கள் உண்டு. அவர்கள் பண்ணையார்கள் இல்லை. நில உரிமையாளர் மட்டும் தான். நான் சொல்லக் கூடிய விதமான பழைய பண்ணையார்கள் மொத்த காவிரி டெல்டாவில் இன்று ஒற்றை இலக்க எண்ணிக்கையில் இருக்கக் கூடும். 

எனது பட்டயக் கணக்காளரையும் அந்த பட்டியலில் கொஞ்சம் முயன்றால் சேர்த்திட முடியும். 

வழக்கமாக பட்டயக் கணக்காளர்கள் அலுவலகங்கள் காலை 10 மணிக்குத் துவங்கும். இவர் அலுவலகமும் அவ்விதம் தான். ஆனால் அவர் மதியம் 12.30க்கு தான் வருவார். பூஜை ஜபம் செய்து முடித்து விட்டு BRUNCH எனப்படும் காலை மதிய உணவுக்கு இடையேயான ’’ஃபுல் மீல்ஸ்’’ உணவை முடித்து விட்டு தனது பெரிய காரில் அலுவலகம் வந்து சேருவார். அவரது வேலை நேரம் என்பது 12.30 - 3.30 . மூன்று மணி நேரம் தான் அலுவலகத்தில் இருப்பார். 4 மணிக்கு வீட்டுக்குச் சென்றதும் ஒரு காஃபி அருந்துவார். பல தசாப்தங்களாக இதுவே அவரது வழக்கம். அவரது கிளையண்ட் அனைவரும் 12.30 - 3.30 நேரத்தில் தான் சந்திப்பார்கள். 

அவர் கிளைண்ட் அனைவரும் ஊரின் பெரும் செல்வந்தர்கள். அவர்கள் அனைவரும் பட்டயக் கணக்காளரிடம் மிகப் பணிவாக முதலாளியிடம் பணிந்து பேசும் பணியாள் போல தான் பேசுவார்கள். 

முதல் சந்திப்பிலிருந்தே என்னைத் தன் நண்பனாக எண்ணினார் என் பட்டயக் கணக்காளர். நண்பனாகவே நடத்தினார். நண்பனாக எனக்கு அவர் அலுவலகத்தில் பல உரிமைகளைக் கொடுத்திருக்கிறார். ஒருநாள் நான் அவரிடம் சொன்னேன் : ‘’சார் ! நீங்க நம்ம ஆஃபிஸை ஒரு பண்ணையார் போல நடத்துறீங்க.’’ 

கொஞ்ச நேரம் யோசித்துப் பார்த்து விட்டு பதில் சொன்னார். ‘’ நீ சொல்றது உண்மைதான்’’

Wednesday, 10 June 2026

பிரவீன் சக்கரவர்த்தி - புன்னகைக்கும் அரசியல்வாதி


பொதுவாக அரசியல்வாதிகள் மிகவும் இறுக்கமானவர்கள். தமிழக அரசியல்வாதிகள் மேலும் இறுக்கமானவர்கள். தமிழக அரசியல்வாதிகளை அதிகாரவர்க்க அதிகாரிகள் மனநிலை கொண்டவர்கள் என்று கூறி விட முடியும். அதிகாரவர்க்க அதிகாரிகளுக்கு அரசியல்வாதிகளைப் போல பதவி 5 ஆண்டுகள் தான் என்னும் கட்டுப்பாடு இல்லை ; தமிழக அரசியல்வாதிகளுக்கு அது உண்டு என்பது அவர்களை மேலும் இறுக்கம் கொண்டவர்களாகவும் பதட்டம் மிக்கவர்களாகவும் ஆக்கி விடுகிறது. இன்றைய தமிழக அரசியல்வாதிகளில் இயல்பாகப் புன்னகைக்கக் கூடியவர் பிரவீன் சக்கரவர்த்தி என்பது எனது எண்ணம். அறுபது ஆண்டுகளாக தமிழக அரசியலில் பதவியில் இல்லாத காங்கிரஸை அதிகாரத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார் பிரவீன் சக்கரவர்த்தி. சட்டசபைத் தேர்தலுக்கு முன்னும் பின்னும் அவர் காங்கிரஸைப் பதவிக்குக் கொண்டு வர பல முயற்சிகளை முன்னெடுத்தார். தேர்தலுக்கு முன் அவர் எடுத்த முன்னெடுப்புகள் இலக்கை நோக்கி 99 சதவீதம் சென்றன. 1 சதவீதத்தில் தான் எண்ணியதை எண்ணிய வண்ணம் எய்தாமல் தவற விட்டார். அப்போதும் அவர் புன்னகையுடனே இருந்தார். தேர்தலுக்குப் பின் நடிகர் ஜோசஃப் விஜய் கட்சியுடன் காங்கிரஸின் 5 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை அளித்து தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி என ஆட்சி அமைக்க உரிமை கோரப்பட்டதில் பிரவீன் சக்கரவர்த்தியின் பங்களிப்பு கணிசமாக இருந்திருக்கும் என்பதை எவரும் யூகிக்க முடியும். அவ்விதமான உரிமை கோரலே திமுக விடமிருந்து அதன் கூட்டணிக் கட்சிகளைப் பிரித்தது. தேர்தலில் பெரிய தோல்வியைக் கண்டிருந்த அவர்களுக்கு பிரவீன் தேர்தலுக்குப் பின்னும் இன்னொரு பெரிய இழப்பை ஏற்படுத்திக் கொடுத்தார் ; புன்னகை மாறாமல். அசோகா பல்கலைக்கழகத்தில் வருகை தரு பேராசிரியராக இருக்கிறார் பிரவீன். தமிழகத்தில் புதிய ஆட்சி பொறுப்பேற்ற பின் கல்லூரியில் வகுப்பெடுக்க அவர் தனது வகுப்பறைக்குள் நுழைந்த போது அவரது மாணவர்கள் சீட்டியடித்து சினிமாப் பாடல் ஒன்றைப் பாடி உற்சாகமாக வரவேற்கும் காட்சியை இணையத்தில் காண நேர்ந்தது. மாணவர்களின் உற்சாகத்தை அவர் உள்வாங்கிக் கொண்ட விதம் மேலும் உற்சாகமாக இருந்தது. 

பிரவீன் ராஜ்யசபா உறுப்பினராவது மகிழ்ச்சி. அவருக்கு வாழ்த்துக்கள். 

Tuesday, 9 June 2026

தாமரை மலர்களின் நிலம்

இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்றேன். ஜூன் 1ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் மாவட்டத்தின் பலபகுதிகளிலிருந்து வந்திருந்த பொதுமக்களுக்கு மனுக்களுக்கான ஒப்புகைச் சீட்டு வழங்கத் தாமதமானதால் பொதுமக்கள் பலர் காத்திருக்க நேரிட்டது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு ஒரு கடிதம் அனுப்பினேன். வருவாய்த்துறை அமைச்சருக்கு அதன் நகலை அனுப்பினேன். நேற்று ஜூன் 8ம் தேதி நடந்த மனுநீதி நாள் கூட்டத்தில் ஒப்புகைச் சீட்டு தாமதமின்றி வழங்கப்படுகிறதா என்பதைக் காணச் சென்றேன். நேற்றும் முந்தைய வாரம் இருந்த நிலையே இருந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த அஞ்சல் அலுவலகத்தில் இரண்டு அஞ்சல் அட்டைகள் வாங்கி சென்ற வாரம் தெரிவிக்கப்பட்ட புகார் குறித்தும் அந்தப் புகார் இந்த வாரமும் சரி செய்யப் படாமல் இருப்பது குறித்தும் புகார் எழுதி மாவட்ட ஆட்சியருக்கும், வருவாய்த்துறை அமைச்சருக்கும் அனுப்பி வைத்தேன். அடுத்த வாரம் இதே விஷயம் தொடர்ந்தால் மனுநீதி நாள் முகாமில் இந்த விஷயம் குறித்தே ஒரு மனு எழுதி மாவட்ட ஆட்சியர் கையில் நேரடியாகக் கொடுக்கலாம் எனத் திட்டமிட்டிருந்தேன். இந்த விஷயத்தைச் சரி செய்ய இன்னொரு வாய்ப்பு அளிக்கலாம் என எண்ணி இன்று மாவட்ட ஆட்சியரின் முதல் தனி உதவியாளரைச் சந்தித்து விஷயத்தைக் கூறுவோம் என எண்ணினேன். அங்கே சென்றேன். மாவட்ட ஆட்சியரின் முகாம் உதவியாளர் அவர் அறையில் இருந்தார். என் பெயரைக் கூறி விஷயத்தைச் சொன்னேன். அவர் சற்று அதிருப்தி அடைந்ததை உணர்ந்தேன். ஜூன் 1ம் தேதி கடிதத்தையும் ஜூன் 8ம் தேதி கடிதத்தையும் அவர் வாசித்திருக்க வாய்ப்பு அதிகம் இருக்கிறது. மாவட்ட ஆட்சியர் கவனத்துக்கு கடிதம் கொண்டு செல்லப்பட்டிருக்குமா என்பது ஓர் ஐயமே. ‘’ரெண்டாவது மாடியில் டி எம் இருப்பாங்க. அவங்க கிட்ட சொல்லுங்க. சரி செய்வாங்க’’ என்றார். அங்கே சென்றேன். கலெக்டரின் முகாம் உதவியாளர் அனுப்பினார் எனக் கூறி அங்கே இருந்தவரிடம் விஷயம் சொன்னேன். கிரவுண்ட் ஃபுளோர்ல டிரிபிள் எஸ் மேடம் இருப்பாங்க ; அவங்க கிட்ட சொல்லுங்க என்றார். சொல்கிறேன் அடுத்த வாரம் இந்தபிரச்சனை சரி ஆகலைன்னா இன்னைக்கு நடந்ததையும் சொல்லி புகார் கொடுப்பன் என்றேன். பணிவாகவே என்னுடைய வேண்டுகோளையும் கோரிக்கையையும் கூறினேன். பணிவாகப் பேசினாலே விஷயங்கள் நடப்பதில்லை; சினம் கொண்டு பேசினால் கேட்பானேன்? டிரிபிள் எஸ் மேடத்தை சென்று பார்த்தேன். என் பெயரைக் கூறியதும் ‘’உட்காருங்க சார்’’ என்றார். ‘’பரவாயில்லை அம்மா’’ என்றேன். நான் அமரவில்லை. அமர்ந்தால் உணர்வுகள் கொஞ்சம் குறையும். அதற்கு வாய்ப்பு கொடுக்காமல் பொறுமையாக அமைதியாக சொல்ல வேண்டியதைச் சொன்னேன். ‘’அம்மா ! பொதுமக்கள் கொள்ளிடத்துல இருந்தும் எருக்கூர்ல இருந்தும் வராங்க. காலைல 11 மணிக்கு வந்து மனு கொடுத்ததும் ஒப்புகைச் சீட்டை உடனே கொடுத்தீங்கன்னா மதியம் 1 மணி 1.30 மணிக்கு வீட்டுக்குப் போய் லஞ்ச் சாப்பிடுவாங்க. இங்க 11 மணிக்கு மனு கொடுத்தா ஒப்புகைச் சீட்டு 3 மணிக்குக் கொடுக்கறாங்க. ஒரு முழு நாள் அவங்க கலெக்டர் ஆஃபிஸ்ல இருக்க வேண்டியிருக்கு. ஏன் 5 நிமிஷத்துல முடிக்க வேண்டிய வேலையை 5 மணி நேரம் செய்யறீங்க?’’ என்றேன். ‘’சார் ! நான் இண்டர்நெட் கனெக்‌ஷனுக்கு ரயில்டெல் கனெக்‌ஷன் எக்ஸ்ட்ராவா கொடுக்க சொல்லிட்டன். அடுத்த வாரம் இந்த பிரச்சனை இருக்காது.’’ என்றார். ‘’ரொம்ப நன்றி அம்மா’’ எனக் கூறி விட்டு புறப்பட்டேன்.  ஊரின் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என்பது அவ்வளவு பெரிய கட்டணம். அத்தனை அறைகள். அத்தனை தளங்கள். எனது எதிர்பார்ப்பு என்பது மிக அடிப்படையானது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினுடைய வாரத்தின் முதல் பணி என்பது திங்கட்கிழமை காலை 10 மணிக்கு மனுநீதி நாள் முகாமில் மனுக்களை வாங்குவது. அந்த மனுக்கள் பெற்றுக் கொள்ளப்பட்டது என்பதற்கு ஒப்புகைச் சீட்டை வழங்குவது. ஒப்புகைச் சீட்டை வழங்குவதற்கு 2 நிமிடங்கள் போதும். ஆனால் பொதுமக்கள் 5 மணி நேரம் காத்திருக்கிறார்கள். 10 மணிக்கு ஒருவர் வந்து மனு கொடுக்கிறார் என்றால் அவருக்கு 10.02க்கு ஒப்புகைச் சீட்டைக் கொடுத்து விட வேண்டும். ஆனால் அவருக்கு மாலை 3 மணிக்கு ஒப்புகைச்சீட்டைக் கொடுக்கிறார்கள். உள்ளூர்க்காரர் என்றால் மனு கொடுத்த பின் மீண்டும் திரும்பி வந்து மாலை பெற்றுக் கொள்வார். அதுவும் உகந்த வழிமுறை இல்லை. நகரின் மையப்பகுதியிலிருந்து 4 கி.மீ தள்ளி இருக்கிறது மாவட்ட ஆட்சியர் அலுவலகம். 200 பேர் மனு கொடுக்க உள்ளூர்க்காரர்கள் காலை வருகிறார்கள் என்றால் அவர்கள் மீண்டும் ஒருமுறை திரும்ப வர நேர்ந்தால் அது ஒருவருக்கு 4+4 =8 கி.மீ கூடுதல் பயணம். 200 பேருக்கு என அது ஆகும் போது 1600 கி.மீ கூடுதல் பயணம். ஒரு இரு சக்கர வாகனம் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 80 கி.மீ மைலேஜ் தருகிறது என்றால் அது 20லிட்டர் பெட்ரோல் விரயமாவதன் கணக்கு. மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தின் நிர்வாகத் திறனின்மை ஒவ்வொரு திங்கட்கிழமையும் 20லிட்டர் பெட்ரோலை விரயமாக்குகிறது. வெளியூர்க்காரர்கள் 100 பேர் காத்திருக்கின்றனர். ஒவ்வொருவரும் 10 மணிக்கு கிடைக்க வேண்டிய ஒப்புகைச் சீட்டுக்கு மாலை 3 மணி வரை காத்திருக்கின்றனர். ஒருவருக்கு 5 மணி நேரத் தாமதம். 100 பேருக்கும் சேர்த்து 500 மணி நேரத் தாமதம். நிர்வாகத் திறனில்லாத ஒரு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஒவ்வொரு திங்கட்கிழமையிலும் ஒப்புகைச்ச்சீட்டு வழங்குவதில் தாமதம் செய்வதால் குறைந்தபட்சமாக 20லிட்டர் பெட்ரோலையும் 500 மணி நேரத்தையும் விரயம் செய்கிறது. ஏழு நாட்கள் கொண்ட ஒரு வாரத்தில் 168 மணி நேரங்களே உள்ளன. எனினும் மிக எளிதாக 500 மணி நேரத்தை வீணாக்கி வாரத்தைத் துவங்குகின்றனர். பொதுமக்களின் மனுக்களை மாவட்ட ஆட்சியர் படிக்கிறாரா என்பதே பெரிய ஐயம். ஒரு மாவட்ட ஆட்சியர் தனக்கு வரும் கடிதங்களை மனுக்களை வாசிக்க வேண்டும். அவருக்கு பலவேலைகள் இருக்கலாம். பல பொறுப்புகள் இருக்கலாம். இருந்தாலும் அவருக்கு வரும் கடிதங்களை மனுக்களை அவர் வாசிக்க வேண்டும். அதில் உறுதியாக இருக்க வேண்டும். அது நேர விரயம் அல்ல. உதாரணத்துக்கு, ஜூன் 1ம் தேதி ஒப்புகைச்சீட்டு விஷயம் குறித்து கடிதம் எழுதினேன். வாசித்திருந்தார் என்றால் அதில் என்ன சிக்கல் என்பதை 2 நிமிடத்தில் அறிந்து 3 நிமிடங்களில் சரி செய்திருக்க முடியும். அடுத்த வாரமும் அதே சிக்கல் தொடர்ந்ததால் அவர் கடிதங்களை வாசிக்கிறாரா என்னும் ஐயம் உருவாகி அலுவலகம் மீதான நம்பிக்கையை குறைக்கிறது. பொதுமக்களின் 500 மணி நேரம் வீணானதும் 20லிட்டர் பெட்ரோல் விரயமாவதும் எடுத்துக் கூறப்படுகிறது. அடுத்த வாரம் இந்த சிக்கல் நீடித்தால் இந்த 3 வாரங்களிலும் நிகழ்ந்தது தொகுத்துக் கூறப்பட்டு  பெரியதாகும். நிர்வாகம் எப்போதும் பெரிய விஷயங்களைக் கூட தன் திறனால் மிகச் சிறிதாக்கிட வேண்டும். திறனில்லாதவர்கள் சிறிய விஷயத்தை பெரிதாக்கி விடுகிறார்கள். 

போஸ்ட் ஆஃபிஸில் ஒரு வேலை இருந்தது. கலெக்டரேட் போஸ்ட் ஆஃபிஸிலேயே அந்த வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு வந்தேன். மதிய உணவருந்தி விட்டு உடையார்பாளையம் புறப்பட்டேன். 

ஊரிலிருந்து குத்தாலம் வழியாக அணைக்கரை வந்து அங்கிருந்து ஜெயங்கொண்டம் செல்ல கொல்லாபுரம் வழியே செல்லாமல் ஒரு உள்பாதை இருந்தது. அதில் பயணித்தேன். சிறு கிராமச் சாலைகள். அப்பகுதி சிறு காட்டுப் பகுதி போல் இருக்கும். அதில் பயணித்து ஜெயங்கொண்டம் சென்று அங்கே ஒரு வேலையை முடித்துக் கொண்டு உடையார்பாளையம் புறப்பட்டேன். இந்தப் பிராந்தியத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தபட்சம் இரண்டு குளங்களாவது இருக்கின்றன. அதில் அத்தனை தாமரை மலர்கள் மலர்ந்திருக்கின்றன. ஒவ்வொரு கிராமத்திலும் மலர்ந்திருக்கும் நூற்றுக் கணக்கான தாமரை மலர்களைக் கண்டு கொண்டே செல்லும் பயணம் என்பது மிக்க இனிமை கொண்டது. 


உடையார்பாளையம் பயறணீநாத சுவாமி ஆலயத்துக்குச் சென்றேன். அப்பனும் அம்மையும் சிறு குழந்தைகள் போல் இருக்கின்றனர். அம்பிகையின் முன்னால் நின்ற போது மீனாட்சியம்மன் முன்னால் நிற்பது போல் இருந்தது. அம்பாள் மூன்று வயது பெண் குழந்தை போலவும் தோன்றினாள். ‘’அம்மா’’ ‘’அம்மா’’ என பலமுறை சொன்னேன். உடையார்பாளையம் சிவன் சிவபாலன் என எனக்குத் தோன்றியது. இந்த தலத்தில் அர்ஜூனன் வழிபட்டதாக ஐதீகம். நூற்றுக்கணக்கான முனிவர்கள் இந்த ஆலயத் தடாகத்தில் தினமும் தவம் செய்வதாக நம்பிக்கை. ஆலயம் உணர்வின் ஆழங்களைத் தொடும் வகையில் இருக்கிறது. 

வழிபாடு முடித்து சிலால் என்ற ஊரின் வழியாக அணைக்கரை வந்து அங்கிருந்து பந்தநல்லூர் குத்தாலம் வழியாக ஊர் திரும்பினேன். இன்றைய பயணத்தில் கோடாலி என்ற ஊரைப் பார்த்தேன்; உதயநத்தம் என ஒரு ஊர் ; கடாரம் கொண்டான் என ஒரு ஊர். 

இந்தப் பிரதேசத்தை தாமரை மலர்களின் நிலம் எனக் கூற முடியும். அத்தனை தாமரைத் தடாகங்கள். அத்தனை தாமரை மலர்கள். 

ஓர் எண்ணம்

இரண்டு வாரங்களுக்கு முன்னால், அரியலூர் கலியபெருமாள் கோவிலுக்குச் சென்றிருந்தேன். வழிபாடு முடிந்து மாலை ஊர் திரும்பிய போது எனக்கு ஒரு மனச்சித்திரம் தோன்றியது. மேற்கே திருச்சிராப்பள்ளி கிழக்கே சிதம்பரம் வடக்கே சித்தூர் வடகிழக்கே நெல்லூர் என இந்த எல்லைக்கு உட்பட்ட 48,000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பு ஒரு செவ்வகமாக என் மனதில் எழுந்தது. இந்த நான்கு ஊர்களையும் இந்த நான்கு ஊர்களுக்கு இடைப்பட்ட பெரும்பரப்பையும் என் பயணங்களில் அறிந்திருக்கிறேன். பழைய வடார்க்காடு, பழைய தென்னாற்காடு, செங்கல்பட்டு, பழைய திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் வட பகுதி ஆகியவை இந்த பிரதேசத்தில் அடங்கும்.

வீர நாராயண ஏரி, சோழ கங்கம் ஏரி, பெருமாள் ஏரி, பாகூர் ஏரி, பாணாம்பட்டு ஏரி, மதுராந்தகம் ஏரி,புழல் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி என பல ஏரிகள் இப்பிராந்தியத்தில் அமைந்திருக்கின்றன. இவை சோழர்களால் மக்கள் நலனுக்காக உருவாக்கப்பட்டவை. தமிழகத்தின் சிறு விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் சம அளவில் வாழும் பகுதிகள் இவை. 

இந்தப் பகுதியில் 8500 கிராமங்கள் உள்ளன. ஒவ்வொரு கிராமத்திலும் 100 ஏக்கர் பரப்பு கொண்ட ஒரு ஏரி உருவாக்கப்பட வேண்டும். இவ்விதம் 8500 ஏரிகள் உருவாக்கப்படுமானால் இந்தப் பிராந்தியம் 370 டி எம் சி தண்ணீரைச் சேமிக்க முடியும். தென்னிந்தியாவின் நீர்க்குடுவையாக இப்பிராந்தியம் உருவாகும். (கவனிக்க வேண்டிய விஷயம் : கர்நாடகா தமிழகத்துக்கு வழங்கும் காவிரி நீர் ஆண்டுக்கு 177 டி எம் சி. இந்த 8500 ஏரிகளில் அதைப் போல இரு மடங்கு நீரைச் சேமிக்க முடியும்) இந்த 8500 ஏரிகளை உருவாக்க ரூ.34,000 கோடி தேவைப்படும். 

சோழ மன்னர்களுக்கு நடுநாட்டையும் தொண்டை நாட்டையும் பெரிய அளவில் வளர்த்தெடுக்க வேண்டும் என்னும் எண்ணம் இருந்திருக்கிறது என்பதை அவர்களின் வரலாற்றை நோக்கும் போது அறிய முடியும். அவர்களுக்கு அப்பிராந்தியத்தின் மீது பெரும் நம்பிக்கையும் இருந்திருக்கிறது. சோழ நாட்டில் பேராலயங்களை நிர்மாணித்த சோழர்கள் நடுநாட்டிலும் தொண்டை நாட்டிலும் பெரும் ஏரிகளை உருவாக்கியிருக்கின்றனர். ராஜாதித்த சோழனால் உருவாக்கப்பட்டது வீர நாராயண ஏரி. ராஜராஜ சோழன் தன் வாழ்வின் பெரும்பகுதியைச் செலவிட்ட ஊர் காட்டுமன்னார்குடி. ராஜேந்திரன் உருவாக்கியது சோழகங்கம் ஏரி. தஞ்சையிலிருந்து கங்கை கொண்ட சோழபுரத்துக்கு மாற்றப்பட்ட தலைநகர் கிட்டத்தட்ட 250 ஆண்டுகள் தலைநகராகவே நீடித்திருக்கிறது. 

இன்றும் முந்திரி, பலா, கொய்யா ஆகிய மரப்பயிர்கள் அதிகம் பயிர் செய்யப்படுவது இந்தப் பிராந்தியத்திலேயே. எனது விருப்பம் என்னவெனில் இந்தப் பிராந்தியத்தை தென்னிந்தியாவின் நீர்க்குடுவையாக மாற்ற வேண்டும் என்பதே. ஒவ்வொரு கிராமத்திலும் 100 ஏக்கர் பரப்பு கொண்ட ஏரிகள். அவை நிலத்தடி நீர் மட்டத்தை சில வருடங்களில் பெருமளவில் உயர்த்தி விடும். ஒவ்வொரு கிராமத்திலும் 1000 ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது என்றால் அதில் குறைந்தபட்சம் 100 ஏக்கர் தேக்கு, சந்தனம் போன்ற மரப்பயிர்களைப் பயிரிடலாம். மாநிலத்தின் வனப் பரப்பு 8,50,000 ஏக்கர் கூடும். 

உலகில் 40 சதவீத மக்கள் மட்டுமே ஜனநாயக அமைப்பில் இருக்கின்றனர். உலகில் 60 சதவீத மக்கள் சர்வாதிகார ஆட்சிக்குக் கீழே இருக்கின்றனர். ஜனநாயகத்தில் ஒரு பிரஜையால் அரசுக்கு தன்னுடைய எண்ணத்தைச் சொல்ல முடிகிறது. என்றாவது ஒரு நாள் இது நடக்கலாம் என நம்பவும் முடிகிறது. 1000 ஆண்டுகளுக்கு முன்னால் சோழ மன்னர்கள் சிந்தித்ததை நினைவுபடுத்திக் கொண்டு நாட்டின் பிரஜையால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது என்பது நல்ல விஷயமே. 

 

Monday, 8 June 2026

நீதிபதி மகராஜன் - ஊருக்கு நல்ல பிள்ளை

புனைவுகளை விரும்பி வாசிக்கும் அடியேன் அ-புனைவுகளையும் விரும்பி வாசிப்பேன். அ-புனைவுகளின் பிரதி தன்னளவில் பலவிதமான சுவாரசியமான புனைவுப் பிரதிகளை உருவாக்கிக் கொள்கிறது என நினைப்பேன். உ.வே.சாமிநாத ஐயரின் ‘’வித்துவான் தியாகராஜ செட்டியார் சரிதம்’’ என்ற நூலை அடியேன் வாசித்திருந்தேன். வித்துவான் தியாகராஜ செட்டியார் உ.வே.சா வின் ஆசிரியரான மயிலாடுதுறையைச் சேர்ந்த மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் மூத்த மாணவர். உ.வே.சா வின் தமிழ்ப் பற்றையும் தமிழ் ஆர்வத்தையும் கண்ட தியாகராஜ செட்டியார் திருவாவடுதுறை ஆதீனத்தில் இருந்த உ.வே.சா வை சென்னைக்கு வந்து கல்லூரி ஆசிரியராக ஆக வேண்டும் என்ற முயற்சி எடுத்தவர். அவரது முயற்சியே உ.வே.சா வை சென்னைக்குக் கொண்டு வந்தது ; தமிழ் நூல்கள் பதிப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட சூழ்நிலையை உருவாக்கித் தந்தது. உ.வே.சா சென்னையில் தன் இல்லத்துக்கு ‘’தியாகராஜ நிலையம்’’ என்ற பெயர் சூட்டினார். அவருடைய வாழ்க்கை வரலாறையும் எழுதினார். அந்நூலில் தியாகராஜ செட்டியாரின் பூர்வீகம் திருச்சிராப்பள்ளிக்கு அருகில் இருக்கும் பூவாளியூர் என்று குறிப்பிட்டிருப்பார். அந்த ஊரின் இறைவன் பெயர் திருமூலநாதன் என்றும். பூ என்றால் மலர். வாளி என்னும் சொல்லுக்கு அம்பு என்று பெயர். மலர்களை அம்புகளாகத் தொடுப்பவன் மன்மதன். அவனது வில் கரும்பால் ஆனது. தாமரை, அசோகம், மாம்பூ,முல்லை, குவளை ஆகிய மலர்கள் அவனது அம்புகள் - அதாவது - வாளிகள். பூவாளியூரில் கோயில் கொண்டிருக்கும் திருமூலநாத சுவாமியை பிழையீட்டுக்காக மன்மதன் அந்த ஊருக்கு வந்து வணங்கினான் என்பது தொன்மம். சில ஆண்டுகளுக்கு முன்னால், கவனகர் திருமூலநாதன் அவர்களைச் சந்திக்க நேர்ந்தது. அப்போது அவரிடம் ஒரு விஷயம் சொன்னேன். அது என்னவென்றால் ‘’அதாவது சமீபத்தில் உ.வே.சா வின் ‘’வித்துவான் தியாகராஜ செட்டியார்’’ நூலை வாசித்தேன். அதில் தியாகராஜ செட்டியாரின் பூர்வீகம் திருச்சிராப்பள்ளி அருகில் உள்ள பூவாளியூர். அதனை இப்போது பூவாளூர் என்று சொல்கிறார்கள். அந்த ஊரின் இறைவனின் பெயர் திருமூலநாதன். அதனை வாசித்த போது எனக்கு உங்கள் ஞாபகம் வந்தது’’ என ஆரம்பித்து சிவன் தவமிருந்த கதை, சிவன் தவத்தைக் கலைத்த மன்மதன் எரிந்து போன கதை, மன்மதன் சாப விமோசனம் பெற்ற கதை,  உ.வே.சா கதை, மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் கதை, உ.வே.சா தியாகராஜ செட்டியாரால் சென்னை சென்ற கதை, தன் வீட்டுக்கு ‘’தியாகராஜ விலாசம்’’எனப் பெயர் சூட்டிய கதை என அனைத்தையும் சொன்னேன்.  திருமூலநாதன் என்ற பெயர் இத்தனை கதைகளைக் கொண்டிருக்கிறது என்பதையும் தமிழ் தொல்மொழியாதலால் ஒவ்வொரு சொல்லும் பல கதைகளைக் கொண்டிருக்கும் என்பதையும் அ-புனைவுகள் புனைவுகள் அளவுக்கு எனக்கு சுவாரசியம் அளிப்பவை என்றும் சொன்னேன். திருமூலநாதன் நான் கூறுவதை முழுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தார். பின்னர் அவர் பேசினார். ‘’ எனக்கு சொந்த ஊர் பூவாளூர். வித்துவான் தியாகராஜ செட்டியாருடைய கொள்ளுப் பேரன் நான்’’. 


இரண்டு நாட்கள் முன்னால், டாக்டர் எம்.சந்திரசேகரன் எழுதிய ‘’ நினைவில் நின்ற நிகழ்வுகள்’’ என்ற நூலை வாசித்தேன். அந்த நூல் எனக்கு பெரும் சுவாரசியம் அளித்தது. டாக்டரின் தமிழ் புனைவுத்தன்மையைக் கொண்டிருந்தது. அவர் சம்பவங்களை சூழல்களை மனிதர்களை அவதானிக்கும் விதம் மிக நுண்மையாக இருந்தது. அது கலைமனம் படைத்தவர்களுக்கு இருக்கும் கூறு. இருப்பினும் டாக்டர் அந்த நூலை தனது 70 வயதுக்கு மேல் எழுதியிருக்கிறார். கலைமனம் கொண்ட ஒருவர் தன் கலையை ஏதோ ஒரு விதத்தில் வெளிப்படுத்தவே விரும்புவார். ஒன்றைத் தாண்டி இன்னொன்று என பல விஷயங்கள் மனதில் முட்டி மோதின. அந்த நூலில் அவர் தனது தந்தை நீதிபதி மகராஜன் குறித்து எழுதியிருந்தார். அந்தப் பெயர் பல வருடங்களுக்கு முன்னால் கேள்விப்பட்ட பெயர். கிட்டத்தட்ட 3 தலைமுறைகள் கடந்து விட்டன. டாக்டரின் நூலை வாசித்துக் கொண்டிருந்ததால் அந்த நூலில் ஒரு உப கதாபாத்திரமாகவே நீதிபதி மகராஜன் அறிமுகமானார். சிறுவனாக இருக்கும் சந்திரசேகரன் சிறுவனான தன் இன்னொரு நண்பனை ஒரு அடி அடித்து விடுகிறார். சிறுவன் சந்திரசேகரனின் தந்தையான நீதிபதி மகராஜன் வீட்டுக்கு வந்ததும் அந்தச் சிறுவன் அவரிடம் தயங்கிச் சென்று திக்கித் திணறி ‘’சந்துரு இன்னைக்கு என்னை அடிச்சுது’’ எனக் கூறி விட்டார். என்ன நடந்தது என விசாரித்து அறிகிறார் நீதிபதி. அடிபட்ட சிறுவனிடம் ‘’இன்னொரு தடவை உன்னை சந்துரு அடிச்சா நீ திருப்பி பெருசா ரெண்டு அடி போட்டுட்டு என்கிட்ட வந்து சொல்லு’’ என்கிறார் நீதிபதி மகராஜன். அடுத்த வாரத்திலேயே சந்துருவுக்கு ‘’ரெண்டு அடி’’ கிடைக்கிறது. இன்னொரு சம்பவம் இந்த நூலில் இருக்கிறது. புதுச்சேரியில் நீதிபதியாகப் பணியாற்றுகிறார் நீதிபதி மகராஜன். அங்கே இருக்கும் நீதிபதியின் அரசு வீடு மிகப் பிரமாதமானது. வீட்டுக்கு முன் பெரிய வெளி இருக்கிறது. சந்துருவும் அவரது தோழர்களும் விளையாட மிக உகந்த இடம். ஒருநாள் ஒரு போலீஸ் பட்டாளம் வந்து வீட்டுக்கு முன் இருக்கும் வெளியில் ஒரு பந்தல் போட்டு பாதுகாப்பு கொடுக்க என வந்து குவிந்து விடுகிறார்கள். சிறுவர்களுக்கு ஒரே அதிருப்தி. நீதிமன்றத்திலிருந்து வீட்டுக்கு வந்த நீதிபதி வாசலில் குவிந்திருக்கும் காவலர்களிடம் என்ன விஷயம் என்கிறார். அரசாங்கம் பாதுகாப்பு கொடுக்கச் சொல்லியிருக்கிறது என்கின்றனர். ‘’எதுவும் தேவையில்லை’’ எனக் கூறிவிடுகிறார் நீதிபதி மகராஜன். உடனடியாக காவலர்கள் சென்று விடுகிறார்கள் ; பந்தலைப் பிரித்து எடுத்துக் கொண்டு. சந்துரு உட்பட சிறுவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. டாக்டர் சந்திரசேகரனின் நூலில் இருந்த டாக்டர் மகராஜனின் சித்திரம் எனக்கு சுவாரசியமளித்தது. டாக்டரின் நூல் குறித்து அவருக்கு ஒரு வாசகர் கடிதம் அனுப்பினேன். அவர் எனக்கு ஒரு பதில் எழுதினார். வாசகர் கடிதம் எழுதுவது போல எனக்கு மகிழ்ச்சியளிக்கும் செயல் வேறொன்றில்லை. இன்று இணையத்தில் ‘’நீதிபதி மகராஜன்’’ எனத் தேடினேன். அவரைப் பற்றி நிறையத் தகவல்கள் இருந்தன.நீதிபதி மகராஜன் அவர்கள் சிறந்த தமிழ் அறிஞர். தமிழ் அறிஞர்களான ராஜாஜி, டி.கே.சி, தொ.மு. பாஸ்கரத் தொண்டமான் ஆகியோரின் நண்பர். டி கே சி யின் வட்டத்தொட்டி அமைப்பை சென்னையில் நடத்தியவர். கம்பனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். ஷேக்ஸ்பிய்ரைத் தமிழில் மொழிபெயர்த்தவர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைத் தமிழில் மொழிபெயர்த்தவர். அவரது எழுத்துக்கள் நூல்வடிவம் பெற்றிருக்கின்றன. பத்து ஆண்டுகளுக்கு முன்னால் அவரது நூற்றாண்டு விழா நடைபெற்றிருக்கிறது.  https://justicemaharajan.org என்ற இணையதளமே இருந்தது. அதில் நீதிபதி மகராஜன் அவர்கள் எழுதிய நீதிமன்ற நினைவுகள் என்ற நூல் இருந்தது. அதனை வாசித்தேன். 


நீதிபதி மகராஜனின் மொழிநடை என்பது மிகவும் இனிய மொழிநடை. அவரது சொற்தேர்வுகளும் வாக்கிய அமைப்புகளும் கூறுமுறைகளும் அதிசயிக்க வைக்கின்றன. அவர் கூறும் விஷயத்தை மேலும் இனிமையாகக் கூறுவது சாத்தியமான ஒன்றுதானா என்ற ஐயம் வாசிக்கும் எவருக்கும் ஏற்படும். அத்தனை இனிய நடை அவரது மொழிநடை. 

தமிழ்ச் சமூக வரலாற்றிலும் தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றிலும் மிக முக்கியமான ஆளுமைகளில் ஒருவராக விளங்கியிருக்கிறார் நீதிபதி மகராஜன் அவர்கள். 

அ-புனைவு நூல் எவ்விதம் தனக்குள் பல புனைவு சாத்தியங்களைக் கொண்டிருக்கும் என்பதற்கு ‘’நீதிமன்ற நினைவுகள்’’ நூல் ஒரு சிறந்த உதாரணம். மகராஜன் சிறுவனாக இருந்த போது அவரது வீட்டுக்கு வாராவாரம் பழநியிலிருந்தும் திருச்செந்தூரிலிருந்தும் பழனியாண்டவனின் திருச்செந்திலாண்டவனின் திருநீற்றுப் பிரசாதம் தபாலில் வருகிறது. அதனை மகராஜனுக்குப் பூசி விடும் அவரது அன்னை ஒவ்வொரு முறையும் ‘’ ஊருக்கு நல்ல பிள்ளையாக இருக்க வேண்டும்’’ என்று கூறி பூசுகிறார். ஊருக்கு நல்ல பிள்ளையாக இருத்தல் என்பது அவரது மனதில் பதிந்து விடுகிறது. சிறுவனாயிருக்கும் போது கடவுள் பக்தி கொண்டிருந்த மகராஜன் இளைஞரான போது திராவிட இயக்கம் மேல் ஈர்ப்பு கொண்டவராகிறார். கல்லூரி மாணவர்கள் அனைவரும் கடவுள் மறுப்பு விஷயங்கள் மேல் ஈர்க்கப்படுகின்றனர். ‘’சாமியாவது மந்திரமாவது’’ என இருக்கிறார் மகராஜன். சட்டம் படிக்கும் போது ஒரு சட்டப் புத்தகத்தை நூலகத்தில் எடுக்கும் போது பல ஆண்டுகள் யாரும் எடுக்காத அந்தப் புத்தகத்தில் ஒரு விஷத்தேள் ஒன்று இருந்து அது மகராஜன் கையில் கொட்டி விடுகிறது. பொறுக்க முடியாத வலியில் அவதிப்படுகிறார் மகராஜன். நேரம் ஆக ஆக தேள் விஷத்தின் கடுப்பு கூடிக் கொண்டே போகிறது. சொந்தக்கார பையன் ஒருவன் வருகிறான். ஒரு மந்திரம் சொல்லி தன் கையில் வைத்திருந்த வேப்பிலையால்  தேள் கொட்டிய இடத்தில் நான்கு தடவை அடிக்கிறான் அந்தப் பையன். அடுத்த கணம் மகராஜனின் வலி இருந்த இடம் தெரியாமல் போகிறது. இது எப்படி சாத்தியம் என அந்த இளைஞனிடம் கேட்கிறார் மகராஜன். தனக்கு ’’மந்திர சித்தி’’ உண்டு என்கிறான் அந்த இளைஞன். இந்த சம்பவம் மகராஜனின் மன அமைப்பை மாற்றுகிறது. திராவிட இயக்க கடவுள் மறுப்பு விஷயங்களிலிருந்து விலக்கம் கொள்கிறார். ஆன்மீகம் மீது ஈடுபாடு ஏற்படுகிறது. கொல்லங்கோடு கண்ணப்ப சுவாமிகள் அவருக்கு ஆன்மீக குருவாக விளங்குகிறார். 

அவரது சட்ட வாழ்க்கையில் நடக்கும் பல சுவாரசியமான சம்பவங்களைக் குறிப்பிடுகிறார் நீதிபதி மகராஜன். அந்த சம்பவங்களுக்கு அவர் காட்டும் இலக்கிய மேற்கோள்கள் வாசகன் கற்பனையை பல திசைகளுக்கும் விரிவடையச் செய்கிறது. ஒரு அத்தியாயத்தில் நீதிபதி மகராஜன் ஒரு சம்பவத்தைச் சொல்கிறார். அதாவது மில்டன் வாழ்க்கையில் நடந்த சம்பவம். கவிஞர் மில்டனுக்கு கண் பார்வை பறிபோகிறது. அப்போது மில்டன் கடவுளுக்குத் தன் கவிதை மூலம் ஒரு விஷயத்தைச் சொல்கிறான். அதாவது, ஓர் அரசனுக்கு இரண்டு பணியாளர்கள் இருக்கிறார்கள். ஒருவன் வெளிநாட்டில் ஒரு மாடமாளிகையில் அரசனின் தூதனாக இருந்து அரசுப்பணியை மேற்கொள்கிறான். இன்னொருவன் அரச அரண்மனையின் வாயிற்கதவுக்குப் பக்கத்தில் காவலனாக இருக்கிறான். மில்டன் இருவருமே அரசுப் பணியாளர்களே என்கிறார். அதே போல கண் இருப்பவர்கள் தூதர்களைப் போல பணியாற்றட்டும் ; நான் வாயிற்காப்பாளன் போல இருக்கிறேன் என்கிறான். He also serves who stands and waits என்பது மில்டனின் கவிதை வரி. மில்டனின் மிக மேன்மையான கவிதை வரிகளில் ஒன்று இது என எனக்குத் தோன்றியது. இந்த வரியைக் குறிப்பிடும் நீதிபதி மகராஜன் ஒரு ஆங்கில் நீதிபதியின் தீர்ப்பை சுட்டிக் காட்டுகிறார். அதாவது, வீட்டுக்குள் இருக்கும் ஒருவனைக் கொலை செய்ய இரண்டு பேர் செல்கிறார்கள். ஒருவன் வாசலில் நின்று கொண்டு வெளியில் இருந்து யாரும் உள்ளே சென்று விடாமல் பார்த்துக் கொள்கிறான். இன்னொருவன் உள்ளே சென்று உள்ளே இருப்பவனைக் கொலை செய்கிறான். கொலை செய்தவனுக்கு மரண தண்டனையும் வெளியில் நின்றவனுக்கு ஆயுள் தண்டனையும் கிடைக்கும் என்ற நிலை. அப்போது வழக்கறிஞர் மில்டனின் He also serves who stands and waits  என்ற கவிதை வரியைக் குறிப்பிட்டு வாசலில் நின்று கொலைக்கு உடந்தையாய் இருந்தவனுக்கும் தூக்கு வாங்கிக் கொடுக்கிறார். 

தமிழறிஞர் பாஸ்கரத் தொண்டைமான் டிஸ்டிரிக்ட் மாஜிஸ்ட்ரேட்டாக இருந்த போது எந்த வக்கீலுக்கும் வாய்தா கொடுக்க மறுக்கிறார். ஒரு வக்கீல் தொண்டைமானிடம் 

இன்று போய் நாளை வா என நல்கினன்
நாகிளங்கமுகின் வாளை தாவறு கோசல நாடுடை வள்ளல்

என்ற கம்பனின் வரியைக் கூறியதும் தொண்டைமான் அந்த வ்க்கீலுக்கு ஒருநாள் வாய்தா கொடுத்து விடுகிறார். 

பிரிட்டனில் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை கூட பிரெஞ்சு மொழியே நீதிமன்ற மொழியாக இருந்தது என்றும் பிரிட்டன் மக்கள் பிரெஞ்சு மொழியையே மேன்மையான மொழியாகக் கருதினார்கள் என்றும் ஆங்கிலத்தைத் தகுதிக் குறைவான மொழியாக எண்ணினார்கள் என்றும் ஒரு தகவலைக் கூறுகிறார் நீதிபதி மகராஜன். இந்த இடத்திலிருந்து தொடங்கி கடந்த 400 ஆண்டு காலத்தில் ஆங்கிலத்தின் வளர்ச்சி நிலை வரலாறைக் கற்பனை செய்தால் அதில் உலகத்தின் கடந்த 400 ஆண்டு கால வரலாறும் இருக்கும் அல்லவா? 

நீதிமன்றம் சார்ந்த சாட்சி, குறுக்கு விசாரணை ஆகிய விஷயங்களையும் சுவாரசியமான வழக்குகளையும் சுவாரசியமான மனிதர்களையும் குறித்து மிக இனிமையாக எழுதியிருக்கிறார் நீதிபதி மகராஜன். 

இரண்டு நாட்கள் முன்பாக டாக்டர் எம்.சந்திரசேகரன் எழுதிய ‘’ நினைவில் நின்ற நிகழ்வுகள்’’ நூலை வாசித்த பின் டாக்டரின் தந்தையான நீதிபதி மகராஜனின் ’’நீதிமன்ற நினைவுகள்’’ நூலை இரண்டு நாட்களுக்குப் பின் இன்று வாசித்தது இனிமையான தற்செயல் ; இனிமையான அனுபவம். 

நீதிபதி மகராஜனின் நூல்கள் அனைத்தும் https://justicemaharajan.org என்ற இணையதளத்தில் உள்ளன.