Friday, 31 July 2026

இந்தியன் வங்கி தலைமை நிர்வாக அதிகாரிக்கு ஒரு கடிதம்

 கீழ்க்கண்ட கடிதத்தை ஆங்கிலத்தில் இந்தியன் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரிக்கு விரைவுத் தபாலில் அனுப்பியுள்ளேன். அதன் நகலை மத்திய நிதியமைச்சருக்கு விரைவுத் தபாலில் அனுப்பியுள்ளேன். 


From

@@@@

&&&

&&

To

தலைமை நிர்வாக அதிகாரி

இந்தியன் வங்கி

சென்னை

ஐயா,

பொருள் : இந்தியன் வங்கியின் ‘’ஸ்விஃப்ட்’’ படிவத்தில் ஒப்புகைச்சீட்டு வசதி செய்து கொடுக்க விண்ணப்பம்

இத்துடன் தங்கள் பார்வைக்காக இந்தியன் வங்கியின் ‘’ஸ்விஃப்ட்’’ படிவத்தையும் பாரத ஸ்டேட் வங்கியின் ‘’ஸ்விஃப்ட்’’ படிவத்தையும் இணைத்துள்ளேன். ஸ்டேட் வங்கி படிவத்தில் ‘’ஒப்புகைச் சீட்டு’’ வசதி இருப்பதையும் இந்தியன் வங்கி படிவத்தில் ‘’ஒப்புகைச் சீட்டு’’ வசதி இல்லாமல் இருப்பதையும் காணலாம். இக்கடிதத்தை தொடங்கும் இத்தருணத்திலேயே இந்தியன் வங்கி ‘’ஸ்விஃப்ட்’’ படிவங்கள் இனி வாடிக்கையாளருக்கு ‘’ஒப்புகைச் சீட்டு’’ வழங்கும் வசதி கொண்டதாக இருக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்.

***

இந்தக் கடிதம் நீண்டது. சற்று உணர்வுபூர்வமானதும் கூட. உணர்வின் அம்சங்கள் இன்றி தர்க்கபூர்வமாகவே இந்த விஷயத்தை அணுக வேண்டும் ; இந்த விஷயம் தொடர்பான கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும் என எண்ணுகிறேன். இருப்பினும் இந்தக் கடிதம் எழுதப்படுவதற்கு காரணமான சம்பவத்தை முன்வைக்காமல் போனால் இக்கடிதம் ஏன் உணர்வுபூர்வமான அம்சங்களையும் கொண்டிருக்கிறது என்பது விளக்கப்படாமலேயே போகும். இந்தியன் வங்கிக்கும் அதன் வாடிக்கையாளர்களுக்குமான உறவு உணர்வுபூர்வமான உறவும் கூட என்பதை அதன் தலைமை நிர்வாக அதிகாரியான தாங்கள் ஏற்பீர்கள் என நம்புகிறேன்.

***

வங்கித்துறையின் பல பொறுப்புகளை வகித்து இன்று தாங்கள் இந்தியன் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி என்னும் உயர் பதவியை அடைந்திருக்கிறீர்கள். வங்கி நடைமுறைகள் அனைத்திலும் நீங்கள் ஆழங்கால் பட்டவராக இருப்பீர்கள். ஒரு எளிய விஷயத்தை தங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.

ஒரு வாடிக்கையாளர் வங்கிக்கு வருகிறார். வங்கி எழுது மேஜையில் இருக்கும் ‘’பே இன் சிலிப்’’ நிரப்பி தனது பாஸ் புத்தகத்துடன் வங்கி சாளரத்தில் தருகிறார். அந்த ‘’பே இன் சிலிப்’’ 25 சதவீத இடம் ஒப்புகைச் சீட்டுக்கும் 75 சதவீத இடம் வங்கி உபயோகத்துக்கும் உரியது. சாளரத்தின் எழுத்தர் படிவத்தைச் சரிபார்த்து வங்கி முத்திரையிட்டு வாடிக்கையாளர் தரும் பணத்தை வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் வரவு வைத்து விட்டு ஒப்புகைச்சீட்டை வாடிக்கையாளரிடம் கொடுத்து விடுவார் அல்லவா? இதுதானே வங்கி நடைமுறை. அனேகமாக உலகில் வங்கி என்னும் ஸ்தாபனம் துவங்கிய நாள் முதல் நிகழும் வங்கி முறைமையாகவும் வங்கி என்னும் ஸ்தாபனத்தில் முதல் வங்கி முறைமையாகவும் இந்த ஒப்புகைச்சீட்டு வழங்கும் முறை இருந்திருக்கும் அல்லவா? இந்த முறை இருப்பதால் தான் வாடிக்கையாளர்  வங்கிக்கு வந்து பணம் செலுத்தினார் என்பதற்கான அத்தாட்சி அவர் கையில் இருக்கிறது. இந்த முறை இல்லையென்றால் வாடிக்கையாளர்கள் பணம் வாடிக்கையாளர்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படாமல் முறைகேடுகள் மிக சாதாரணமாக நடக்கும் அல்ல்வா? ஒப்புகைச்சீட்டு மட்டுமே இன்ன வாடிக்கையாளர் இன்ன தேதியில் வங்கிக்கு வந்தார் ; தனது கணக்கில் பணம் செலுத்தினார் என்பதற்கான ஆதாரம் அல்லவா? வாடிக்கையாளரிடம் ஒப்புகைச்சீட்டு இல்லை என்றால் அவர் வங்கிக்கே வரவில்லை என்று சொல்லி விடலாம் அல்லவா? வங்கி வாடிக்கையாளரின் நலனைக் காக்க ஒப்புகைச்சீட்டுக்கு அப்பாலும் முறைகேடுகள் நடக்காமல் இருக்க பல முன்னேற்பாடுகளையும் முன்னேற்பாட்டு முறைமைகளையும் செய்துள்ளது என்றாலும் ஒப்புகைச்சீட்டு என்பது வாடிக்கையாளர் கையில் இருக்கும் அடிப்படை ஆதாரம் என்பதை தாங்கள் ஏற்பீர்கள் என நம்புகிறேன்.

***

நான் வசிக்கும் பகுதியில் 78 வயதான முதிய பெண்மணி ஒருவர் இருக்கிறார். அவரது மூத்த மகன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இயற்கை எய்தினார். இறந்து போன தனது மூத்த மகனின் மகனான தனது பேரன் ஐரோப்பியக் கல்லூரி ஒன்றில் சேர்க்கை அனுமதி பெற்றதற்காக ஐரோப்பாவில் இருக்கும் கல்லூரிக்கு தனது கணக்கிலிருந்து பணம் அனுப்ப 28.07.2026 அன்று காலை 10.30 மணிக்கு மயிலாடுதுறை இந்தியன் வங்கிக்கு வந்தார். 78 வயதான மூத்த குடிமகள் என்பதால் அவருக்கு வங்கி நடைமுறைகளில் உதவ அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சிலரும் அவர்களின் குடும்ப நண்பனான நானும் வந்திருந்தேன். ( மயிலாடுதுறை இந்தியன் வங்கிக் கிளையின் 28.07.2026 அன்று முழு நாளைய சி சி டி வி காட்சிகளை தங்கள் அலுவலகம் கோரிப் பெற்று நான் கூறுவதை உறுதி செய்து கொள்ளலாம்). அந்தப் பெண்மணியிடம் ‘’ஸ்விஃப்ட்’’ நடைமுறைக்கு வங்கி கோரிய அனைத்து ஆவணங்களும் இருந்தன. தன்னுடைய ஆதார் நகல், தன்னுடைய பான் கார்டு நகல், தன்னுடைய கேன்சல் செய்யப்பட்ட இந்தியன் வங்கி காசோலை, தனது பேரனின் பாஸ்போர்ட் நகல், தனது பேரனின் ஆதார் நகல், தனது பேரனின் பான் கார்டு நகல், தனது பேரனின் கல்லூரி சேர்க்கை அனுமதி கடிதம், தனது பேரனின் கல்லூரிக் கட்டண விபரங்கள் ஆகியவை அவரால் வங்கி துணை மேலாளரிடம் காலை 11.30 மணி அளவில் ஒப்படைக்கப்பட்டன. இந்தியன் வங்கியின் ‘’ஸ்விஃப்ட்’’ படிவத்தில் வாடிக்கையாளரால் நிரப்பப்பட வேண்டிய அனைத்து விபரங்களும் அந்த 78 வயதான மூதாட்டியால் நிரப்பப்பட்டிருந்தன. இந்தியன் வங்கி ஸ்விஃப்ட் படிவத்தில் ‘’ஒப்புகைச்சீட்டு’’க்கான இடம் இல்லை என்பதை இத்துடன் இணைத்துள்ள படிவம் மூலம் அறியலாம். ஆதலால் ஒப்புகைச்சீட்டு எவ்விதத்தில் வழங்கப்படும் என அந்த மூதாட்டியோ மூதாட்டி உடன் வந்த நாங்களோ அறிந்திருக்கவில்லை. நாங்கள் ‘’ஸ்விஃப்ட்’’ விண்ணப்பம் அளித்ததற்கு ஒப்புகைச்சீட்டு கேட்டோம். மதியம் 3 மணிக்கு வருமாறு கூறினார்கள். மதியம் 3 மணிக்கு சென்று கேட்டோம். மாலை 5.30 மணிக்கு வருமாறு கூறினார்கள். மாலை 3.30 உடன் வங்கி வேலை நேரம் முடிந்து விடுமே என பதட்டம் அடைந்தோம். அன்றைய பொழுது முழுவதுமே எங்கள் கணக்கிலிருந்து ஐரோப்பிய கல்லூரிக்கு செலுத்த வேண்டிய தொகை எங்கள் கணக்கிலிருந்து எடுக்கப்படவில்லை. மறுநாள் 29.07.2026 அன்று முழு நாள் பொழுதும் பலமுறை வங்கிக்கு சென்று 28.07.2026 அன்று அந்த மூதாட்டி கொடுத்த ‘’ஸ்விஃப்ட்’’ விண்ணப்பத்தின் அடிப்படையில் அந்த மூதாட்டியின் கணக்கிலிருந்து ஐரோப்பாவில் உள்ள கல்லூரிக்கு பணம் மாற்றப்பட்டு விட்டதா எனக் கேட்டோம். அன்றைய வங்கி நேரமும் மாலை 3.30க்கு முடிந்தது. மாலை 6 மணிக்கு வருமாறு கூறினார்கள். மாலை 6 மணிக்கும் மூதாட்டியின்  கணக்கிலிருந்து பணம் மாற்றப்படவில்லை. ஐரோப்பிய கல்லூரி நிர்வாகத்துக்கு நாங்கள் 28.07.2026 அன்று வங்கியில் ‘’ஸ்விஃப்ட்’’ விண்ணப்பம் கொடுத்திருக்கிறோம் என தகவல் தெரிவித்திருந்தோம். நாங்கள் தகவல் தெரிவித்து 33 மணி நேரம் கடந்த பின்னும் எந்த முன்னேற்றமும் இல்லை. எங்கள் விண்ணப்பத்தைப் பரிசீலித்து எங்களுடன் தொடர்பில் இருந்தது மயிலாடுதுறை இந்தியன் வங்கியின் துணை மேலாளர் ஒருவர். 28.07.2026, 29.07.2026 ஆகிய இரு தினமும் மயிலாடுதுறை இந்தியன் வங்கி கிளையின் மேலாளர் டெபுடேஷனில் வெளியூர் சென்றிருந்தார். அவருக்கு ஃபோன் செய்து பேசினோம். 29.07.2026 அன்று மாலை 6.45 க்கு மூதாட்டியின் கணக்கிலிருந்து தொகை மாற்றப்பட்டிருக்கிறது என்னும் குறுஞ்செய்தி வங்கியிடமிருந்து வந்ததால் ஆசுவாசமடைந்தோம்.

***

இந்த விஷயத்தை மேலோட்டமாகப் பார்த்தால் வெளிநாட்டுக்கு பணம் அனுப்புவது பல கட்டங்களால் ஆனது என்பதால் ‘’ஸ்விஃப்ட்’’ முறையில் பணம் ஒரு கணக்கிலிருந்து இன்னொரு கணக்குக்கு மாற கால அவகாசம் தேவை எனத் தோன்றும். ஆனால் இந்த விஷயத்தை சற்று கூர்ந்து கவனிக்க வேண்டும். ஒவ்வொரு வங்கிக்கும் ‘’ஃபாரெக்ஸ்’’ என்னும் அன்னியச் செலாவணி பரிவர்த்தனைக்கு ஒரு நேரம் இருக்கும் அல்லவா? இந்தியன் வங்கிக்கு மதியம் 2 மணியிலிருந்து மதியம் 3 மணி வரை ‘’ஃபாரெக்ஸ்’’க்கான நேரம் என்றால் ஒரு வாடிக்கையாளர் காலை 11.30க்கு ‘’ஸ்விஃப்ட்’’ விண்ணப்பம் கொடுத்தால் அதனை வங்கி ஊழியர் மாலை 3.15க்கு உள்ளிடுவார் என்றால் அன்றைய தினத்தின் ‘’ஃபாரெக்ஸ்’’ முடிந்து அது அடுத்த நாள் கணக்குக்கு சென்று விடாதா? ஒரு வாடிக்கையாளர் மாலை 3.25க்கு ‘’ஸ்விஃப்ட்’’ விண்ணப்பம் கொடுத்தால் அது அடுத்த நாள் கணக்கில் சேரும் எனக் கூறலாம். காலை 11.30க்கு கொடுத்ததை எவ்விதம் மாலை 3.15க்கு உள்ளிடலாம்? இது விதிமீறல் இல்லையா? இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. ‘’ஃபாரெக்ஸ்’’ நாணய மதிப்புகள் நாளுக்கு நாள் மாறிக் கொண்டேயிருப்பவை. வெளிநாட்டு நாணயத்தின் மதிப்பு உயர்ந்தால் முதல் நாள் விண்ணப்பத்தை இரண்டாம் நாள் உள்ளிடுவதால் வாடிக்கையாளருக்கு பண இழப்பு ஏற்படாதா? ஒரு வாடிக்கையாளர் விண்ணப்பத்தை அவர் விண்ணப்பம் அளிக்கும் நாளன்றே  உள்ளீடு செய்தால் அது ஒரு வங்கி முறைமை எனக் கொள்ள முடியும். கிளையின் பணியான உள்ளீடு செய்தலையே அடுத்த நாள் அதற்கு அடுத்த நாள் என ஊழியர்கள் தங்கள் வசதிக்கு செய்தால் அதனை ஒரு நாள் இரண்டு நாட்கள் ஒரு வாரம் ஒரு வருடம் எனத் தாமதித்து அந்த நாட்களை இன்ஃபினிட்டி வரை கொண்டு செல்லலாம் என்றாகி விடுகிறது அல்லவா? இந்நிலையைத் தான் இந்தியன் வங்கி நிர்வாகம் விரும்புகிறதா? இவ்விதமான வாடிக்கையாளர் சேவையைத்தான் இந்தியன் வங்கி உயரதிகாரிகள் விரும்புகிறார்களா?

***

இந்தியாவின் தேசிய மயமாக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகள் சென்ற நிதி ஆண்டில் 383 லட்சம் கோடி ரூபாய்க்கு வணிகம் செய்ததாக புள்ளிவிபரம் கூறுகிறது. இத்தனை பெரிய வணிகம் நிகழ்த்தும் இந்திய பொதுத்துறை வங்கிகள் ‘’ஒப்புகைச் சீட்டு’’ போன்ற எளிய சேவையைக் கூட அளிக்க இயலாத நிலையிலா இருக்கின்றன? ஆண்டுக்கு 383 லட்சம் கோடி வணிகம் கொடுக்கும் கோடானுகோடி வாடிக்கையாளர்களின் நலன் மீது பொதுத்துறை வங்கிகளின் நிர்வாகத்துக்கு ஒரு ‘’ஒப்புகைச்சீட்டு’’ கூட வழங்க இயலாத அக்கறை தான் இருக்கிறதா?

***

நான் குறிப்பிட்டிருக்கும் மேற்படி சம்பவத்தை ‘’சு மோட்டோ’’ வாக இந்தியன் வங்கி நிர்வாகம் எடுத்து விசாரணை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். 28.07.2026 அன்று 78 வயதான மூதாட்டியான வங்கி வாடிக்கையாளர் வங்கிக்கு வந்த நேரம் , அவருக்கு உதவியாக வந்தவர்கள் விண்ணப்பம் அளித்த நேரம் , மயிலாடுதுறை இந்தியன் வங்கி துணை மேலாளரால அந்த விண்ணப்பம் அவரது கணிணியில் உள்ளீடு செய்யப்பட்ட நேரம், 29.07.2026 அன்று வாடிக்கையாளர் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்ட நேரம் ஆகியவற்றை ஆராய்ந்து துணை மேலாளரான இந்தியன் வங்கி ஊழியர் 78 வயதான மூதாட்டி அளித்த ‘’ஸ்விஃப்ட்’’ விண்ணப்பத்தை வங்கி ஊழியர்களுக்கு அளித்திருக்கும் குறிப்புகளின் படி வங்கி சட்ட திட்டங்களின் படி முறைப்படி உள்ளீடு செய்து பணம் மாற்றியிருக்கிறாரா என்பதை ஆராயுமாறு கேட்டுக் கொள்கிறேன். வங்கி ஊழியர் செயல்பட்ட விதத்தில் சட்ட திட்டங்கள் அனுசரிக்கப்படாமல் இருந்தால் வங்கி அளித்திருக்கும் குறிப்புகள் படி மேற்படி ஊழியர் நடக்காமல் இருந்திருந்தால் அவர் மீது வங்கி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். 28.07.2026, 29.07.2026 ஆகிய இரு தினங்களும் வாடிக்கையாளரான 78 வயது மூதாட்டியும் அவர் உடன் வந்தவர்களும் முழுமையாகப் பொறுமை காத்தோம். ‘’திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை’’என அமைதியாய் இருந்தோம்.

***

இந்தியன் வங்கி தலைமை நிர்வாக அதிகாரி அவர்களே!

அல்லற் பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றே

செல்வத்தைத் தேய்க்கும் படை

என்பது திருக்குறள். ஒரு வங்கி தலைமை நிர்வாக அதிகாரிக்கு நாட்டின் சாதாரண குடிமகன் ஒருவன் எழுதும் கடிதத்தில் திருக்குறள் மேற்கோள் காட்டப்படுவது அபூர்வமான ஒன்று தான். நாட்டின் நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யும் போது நிதி நிலை அறிக்கை உரையில் திருக்குறளும் அர்த்தசாஸ்திரமும் கபீரின் கவிதைகளும் இடம் பெறுவதை நாம் காண்கிறோம். எனவே வங்கி பொது மேலாளருக்கு எழுதப்படும் கடிதத்தில் ஒரு திருக்குறள் இடம் பெற்றிருப்பது இயல்பானது தான். அந்தத் திருக்குறளின் அர்த்தம் இதுதான் தலைமை நிர்வாக அதிகாரி அவர்களே. ‘’ துயரப்பட்டு நிர்கதியாக இருக்கும் ஒருவன் சிந்தும் கண்ணீர்த்துளி ஒரு நாட்டின் கருவூலத்தை இல்லாமல் ஆக்கும் பெரும் படையாக மாறும்’’ . 28.07.2026 அன்றும் 29.07.2026 அன்றும் இந்தியன் வங்கி மயிலாடுதுறை கிளைக்கு வந்த 40 ஆண்டு காலம் இந்தியன் வங்கி வாடிக்கையாளராக இருக்கும் 78 வயதான மூதாட்டி மௌனமாக அந்த இரு நாட்களின் சில பொழுதுகளேனும் வங்கி தமக்கு அளித்த சேவைக் குறைபாட்டை எண்ணி வங்கியின் செயலின்மையை எண்ணி கண்ணீர் சிந்தினார். அந்தக் கண்ணீருக்கு இந்தியன் வங்கி பிழையீடு செய்ய வேண்டும்.

***

இந்தக் கடிதத்தின் முடிவுப் பகுதியாக எனது கோரிக்கைகளை முன்வைக்கிறேன்.

1.   பாரத ஸ்டேட் வங்கி ‘’ஸ்விஃப்ட்’’ படிவத்தில் உள்ளவாறு இந்தியன் வங்கி ‘’ஸ்விஃப்ட்’’ படிவத்திலும் ‘’ஒப்புகைச் சீட்டு’’ இருக்கும் விதமாக படிவத்தை இந்தியன் வங்கி வடிவமைக்க வேண்டும்.

2.   உலகில் எந்த இந்தியன் வங்கிக் கிளைக்கு வாடிக்கையாளர் ‘’ஸ்விஃப்ட்’’ செய்ய வந்து தங்கள் ஆவணங்களை அளிக்கும் பட்சத்தில் அவற்றை உடன் பரிசீலித்து வாடிக்கையாளருக்கு உடன் ஒப்புகைச்சீட்டு வழங்க ஆவன செய்ய வேண்டும்.

3.   28.07.2026, 29.07.2026 ஆகிய இரு தினங்களும் மயிலாடுதுறை இந்தியன் வங்கியில் இந்தியன் வங்கியின் 40 ஆண்டு கால வாடிக்கையாளரான 78 வய்தான மூதாட்டி அளித்த ‘’ஸ்விஃப்ட்’’ விண்ணப்பம் மீதான வங்கி துணை மேலாளரின் நடவடிக்கைகளை உரிய மேலதிகாரிகளைக் கொண்டு துறை ரீதியான விசாரணை மேற்கொள்ள வேண்டும் ; சி சி டி வி காட்சிகள் , வங்கியின் கணிணி ஆவணங்கள் ஆகியவற்றைப் பரிசீலித்து நிகழ்ந்த சேவைக் குறைபாடுக்கு பொறுப்பான துணை மேலாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

***

நாட்டின் சாமானியக் குடிமகனான நான் இந்தக் கடிதத்தை தபால் மூலமாகவே அனுப்புகிறேன். இந்தக் கடிதம் இந்தியன் வங்கியின் பொது மேலாளரான தங்களைச் சென்றடையுமா என்பது ஐயம். தங்கள் காரியதரிசியின் கவனத்துக்கு வர வாய்ப்பிருக்கிறது. வங்கியின் குறைதீர் பிரிவு மற்றும் வங்கியின் மண்டல அலுவலகத்துக்கு தங்கள் அலுவலகத்திலிருந்து பிரதி எடுத்து அனுப்பப்பட வாய்ப்புள்ளது. குறைந்தது இந்தியன் வங்கியின் உயரதிகாரிகள் 10 பேராவது இந்தக் கடிதத்தை வாசிக்க வாய்ப்புள்ளது. அவர்களுக்கு இது ஒரு வாய்ப்பு. ஆண்டுக்கு 383 லட்சம் கோடி ரூபாய்க்கு வணிகம் அளிக்கும் நாட்டின் வங்கி வாடிக்கையாளர்களிடம் வங்கி ஊழியர்கள் எவ்விதம் நடந்து கொள்கிறார்கள் என்பதை அறிய உதவும் உரைகல் இந்தக் கடிதம்.

 

இந்தக் கடிதத்தின் நகலை மத்திய நிதியமைச்சருக்கும் அனுப்புகிறேன். அங்கிருக்கும் உயர் அதிகாரிகளும் இந்தியன் வங்கியின் 40 வருட வாடிக்கையாளரான 78 வயது மூதாட்டிக்கு இந்தியன் வங்கியின் மயிலாடுதுறை கிளையில் நிகழ்ந்த சம்பவம் குறித்து அறியட்டும்.

 

மயிலாடுதுறை இந்தியன் வங்கியின் 40 வருட வாடிக்கையாளரான 78 வயது மூதாட்டி 28.07.2026 அன்று காலை 10.30க்கு அளித்த ‘’ஸ்விஃப்ட்’’ விண்ணப்பத்தின் படி அவர் வங்கிக் கணக்கிலிருந்து தொகை மறுநாள் 29.07.2026 அன்று மாலை 6.45 மணிக்கு கிட்டத்தட்ட 32 மணி நேரம் கழித்து எடுக்கப்பட்டது. குறுஞ்செய்தியாக அவர் அதனை அறிந்தார்.

 

நன்றி

 

தங்கள் உண்மையுள்ள,


&&&

 இடம் : மயிலாடுதுறை

நாள் : 31.07.2026

 

நகல்

மத்திய நிதியமைச்சர்

பாரத் சர்க்கார்

புதுதில்லி

 

 

 

      

Thursday, 30 July 2026

ஒரு காதல் கடிதம்

 அன்புள்ள அண்ணனுக்கு, 


நீங்கள் என்னை தொலைபேசியில் அழைக்காமல் இருப்பது எனக்கு ஒரு வகையில் மன கஷ்டத்தை தான் கொடுக்கிறது. 

ஏதோ ஒரு வகையில் நான் உங்களை ரசிக்க ஆரம்பித்து விட்டேன் கவனிக்க ஆரம்பித்து விட்டேன்.

எதற்காக என்றால் என்னிடம் பதில் இல்லை.

உங்கள் அளவுக்கு என்னால் பேச முடியவில்லை அந்த அளவுக்கு என்னிடம் தகவலும் இல்லை. இருந்தாலும் உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் என்னை ஒரு முறை காசி வரை பயணம் செய்ய வேண்டும் என்பதுதான். 

அந்த ஆசை கூட நான் உங்களிடத்தில் பேச வேண்டிய விஷயத்தை பேசிவிட முடியும் உங்களிடமிருந்து ஒன்றை கற்றுக் கொள்ள முடியும் என்பது தான். 

என்றும் உங்களை நினைவில் வைத்திருக்கும்

உங்கள் அன்புத்தம்பி

Wednesday, 29 July 2026

விண்ணப்பம் - 7 குடும்பங்கள்

அனுப்புநர்

%%%%%
%%%%
%%%
மயிலாடுதுறை- 609001.

பெறுநர்

மாவட்ட ஆட்சியர்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மயிலாடுதுறை - 609001

ஐயா, 

பொருள் ; சென்சஸ் - சுய விபரப் பதிவு
பார்வை : செம்பனார்கோவில் மைதானத்தில் கூடாரத்தில் வசிக்கும் பட்டியல் பழங்குடியின 7 குடும்பத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர்.

மத்திய அரசு 2027ம் ஆண்டுக்கான சென்சஸ் மேற்கொண்டு வருகிறது. அதன் முதல் கட்டமாக வீடுகள் கணக்கெடுப்பு முறைமைகள் தொடங்கியுள்ளன. அவற்றின் ஒரு பகுதியாக நாட்டின் குடிமக்கள் தங்கள் வாழிடம் குறித்த சுய விபரங்களை டிஜிட்டல் முறையில் பதிவு செய்யும் வசதி அளிக்கப்பட்டுள்ளது. 

செம்பனார்கோவில் காவல் நிலையத்துக்கு எதிரில் இருக்கும் மைதானத்தில் கூடாரம் அமைத்துக் கொண்டு பட்டியல் பழங்குடியினரான ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர். சுய விபரக் கணக்கெடுப்பில் தங்கள் வாழிடத்தின் தரை மண்ணால் ஆனது ; சுவர்களும் கூரையும் பாலிதீன் ஷீட்டால் ஆனவை ; குளியலறை இல்லை ; கழிவறை இல்லை ; சமையல் திறந்த வெளியில் நடக்கிறது ; மின்சார வசதி இல்லை என சென்சஸ் இணையதளத்தில் பதிவு செய்து சுய விபரப் பதிவு எண்ணைப் பெற்றுள்ளனர். 

இது குறித்த செய்தி தினமலர் நாளிதழில் வெளியாகியுள்ளது. அதன் நகலை இத்துடன் இணைத்துள்ளேன். 

ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் வீடுகள் கணக்கெடுப்பு மேற்கொள்ளும் போது செம்பனார்கோவில் காவல் நிலையத்துக்கு எதிரில் இருக்கும் மைதானத்தில் வசிக்கும் பட்டியல் பழங்குடியினரான 7 குடும்பங்களின் சுய விபர எண்கள் சென்சஸ் கணக்கெடுப்பில் சேர்க்கப்படுவதை உறுதி செய்யுமாறு மாவட்ட ஆட்சியரைப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். 

மேலும் சென்சஸ் சுய விபரப் பதிவை ஒரு நிமித்தமாகக் கொண்டு அவர்களுக்கு மத்திய மாநில அரசுகளின் பல திட்டங்களில் பட்டியல் பழங்குடியின 7 குடும்பங்களுக்குப் பொருந்தும் வகையிலான திட்டங்கள் மூலம் அவர்களுக்கு வசிக்க நல்ல வாழிடமும் மின்சார வசதியும் கழிவறை வசதியும் கிடைக்க ஆவன செய்யுமாறு மாவட்ட ஆட்சித் தலைவரை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். 

தங்கள் உண்மையுள்ள,


இடம் : மயிலாடுதுறை
நாள் : 29.07.2026

நகல்

1. கனம் தமிழக ஆளுநர்
லோக்பவன்
கிண்டி - சென்னை

2. கனம் தமிழக முதலமைச்சர்
தலைமைச் செயலகம்
சென்னை

3. கனம் தமிழக வருவாய்த்துறை அமைச்சர்
தலைமைச் செயலகம்
சென்னை

4. கனம் தமிழக சமூகநீதித்துறை அமைச்சர்
தலைமைச் செயலகம் 
சென்னை

5. வருவாய் கோட்டாட்சியர் 
சீர்காழி

6. வருவாய் வட்டாட்சியர்
தரங்கம்பாடி

7. வட்டார வளர்ச்சி அலுவலர்
செம்பனார்கோவில்

8. சென்சஸ் கட்டுப்பாட்டு அறை
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மயிலாடுதுறை  



@@@@@ கிளை அஞ்சல் நிலையம் மீது சி பி கி ராம் ஸ் புகார்

 29.07.2026 அன்று 1315 மணிக்கு @@@@@அஞ்சல் நிலையம் சென்று 9 போஸ்டல் கவர் வேண்டும் எனக் கேட்டேன். அங்கிருந்த சப் போஸ்ட் மாஸ்டர் போஸ்டல் கவர் கையிருப்பு இல்லை ; வேண்டுமானால் ரூ.5 போஸ்டல் ஸ்டாம்ப் 9 தருகிறேன். வெளிமார்க்கெட்டில் ஆஃபிஸ் கவர் வாங்கி ரூ.5 ஸ்டாம்ப் வாங்கி ஒட்டி அனுப்பிக் கொள்ளுங்கள் என்று கூறினார். மேலும் போஸ்டல் கவர் கையிருப்பு வைத்துக் கொள்வதில்லை என்றும் கூறினார். என்னுடைய புரிதலின் படி போஸ்ட் ஆஃபிஸ் என்பது போஸ்டல் டிபார்ட்மெண்ட் தொடர்பான அடிப்படையான விஷயங்கள் கிடைக்கும் இடம். அது விதிமுறைகளின் படியும் சட்ட திட்டங்களின் படியும் இயங்கக் கூடிய இடம் என்றே கருதுகிறேன். என் கையில் ரூ.50 இருந்தது. நான் 9 போஸ்டல் கவர் வாங்கி அதில் 9 தபால்களை வைத்து அனுப்புவதாக இருந்தேன். போஸ்டல் ஸ்டாம்பும் வெளிமார்க்கெட்டில் கவரில் வாங்கினால் எனக்கு ரூ.54 ஆகும். கூடுதல் செலவாகும் என்பதுடன் என் கையில் ரூ.54 இல்லை எனில் என் பணி நிறைவடையாது. இந்த விஷயத்தை சில்லறை விஷயமாக நான் நினைக்கவில்லை. ஒரு வாடிக்கையாளருக்கு இது ரூ.4 சம்பந்தப்பட்ட பிரச்சனையாக இருக்கும். ஒரு நாளில் அந்த அஞ்சல் நிலையத்துக்கு 10 பேர் வருவார்கள் எனில் அது ரூ.40 சம்பந்தப்பட்டது. 300 நாட்கள் ஒரு ஆண்டில் வேலைநாட்கள் எனில் அது ரூ.12,000 தொடர்பான பிரச்சனை. இந்த சி பி கி ராம் ஸ் புகார் மூலம் அஞ்சல்துறை மேலதிகாரிகளை @@@@@ கிளை அஞ்சல் நிலையம் மயிலாடுதுறை தலைமை தபால் நிலையத்துடன் மேற்கொண்ட வரவு செலவுகளை ஆடிட் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். @@@@@ கிளை அஞ்சல் நிலையத்துக்கு கடைசியாக எப்போது போஸ்டல் கவர் வழங்கப்பட்டது ? அது விற்று தீர்ந்தது எப்போது? விற்ற பின் ஏன் போஸ்டல் கவர் ஆர்டர் செய்யவில்லை? ஆகிய வினாக்களைக் சம்பந்தப்பட்ட அலுவலரிடம் கேட்டு விசாரணை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். மத்திய அரசின் முக்கிய துறைகளில் ஒன்றான தபால் துறையின் அஞ்சல் அலுவலகம் ஒன்றில் போஸ்டல் கவர் இருப்பு வைத்துக் கொள்ளாமல் இருப்பதையும் போஸ்டல் கவர் கேட்டு வரும் வாடிக்கையாளரிடம் போஸ்டல் கவர் இருப்பு வைத்துக் கொள்வதில்லை என சப் போஸ்ட் மாஸ்டர் பதில் கூறுவதையும் அஞ்சல்துறை உயர் அதிகாரிகள் சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என நம்புகிறேன். மேற்படி விஷயம் குறித்து விசாரணை நடத்தி உரிய மேல்நடவடிக்கை எடுக்குமாறு அஞ்சல்துறை உயர் அதிகாரிகளை கேட்டுக் கொள்கிறேன்,

மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை (நகைச்சுவைக் கட்டுரை)

பணி நிமித்தம் சிதம்பரம் சென்று விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தேன். சீர்காழி அருகே வரும் போது அலைபேசி ஒலித்தது. இரு சக்கர வாகனத்தின் ஒலியையும் தாண்டி அலைபேசி ஒலி கேட்டது. எனது வாகனம் சென்று கொண்டிருந்த இடம் சீர்காழி புறவழிச்சாலை. வாகனத்தை ஓரங்கட்டி அலைபேசியை எடுத்தேன். சுருக்கமாக ‘’எக்மோர் எஸ் ஐ பேசறன்’’ என்றார் ஃபோனில் பேசியவர். ‘’வணக்கம் மேடம்’’ என்றேன். ‘’முத்துநகர் எக்ஸ்பிரஸ்ல ஜெனரல் கம்பார்ட்மெண்ட்ல கேம்ளிங் நடக்கறதா கம்ப்ளெயிண்ட் கொடுத்திருக்கீங்க இல்லையா?’’ என்றார். ‘’ஆமாம் மேடம்! சி பி கி ராம் ஸ் ல புகார் கொடுத்திருந்தேன்.’’ என்றேன். ‘’நீங்க டிராவல் பண்ண அன்னைக்கு டிரெயின்ல டி டி ஈ யாரும் ஜெனரல் கம்பார்ட்மெண்ட்க்கு வரலியா?’’ என்று கேட்டார். ‘’அன்னைக்கு யாரும் வரலை மேடம். வந்திருந்தா அவங்க சீட்டாடி இருக்க மாட்டாங்க’’ என்றேன். ‘’இன்னைக்கு முத்துநகர் டிரெயின்ல ரெய்ட் பண்ண போறோம்’’ என்றார். ‘’மேடம் ! ஈவ்னிங் 1815க்கு புதுச்சேரி மெமு இருக்கு. அதுலயும் ரெய்டு பண்ணுங்க’’ என்றேன். ‘’ஓ சரி’’. ‘’கேம்ளிங் குக்கு பப்ளிக் டிரான்ஸ்போர்ட் ஆன டிரெயின யூஸ் பண்றது இஸ் நாட் நைஸ் மேடம்’’. ‘’நீங்க புகார் கொடுத்தது நல்ல விஷயம். உங்களுக்கு தாம்பரம் எஸ் ஐ யும் செங்கல்பட்டு திண்டிவனம் எஸ் ஐ யும் ஃபோன் பண்ணுவாங்க. அவங்ககிட்டயும் விபரம் சொல்லுங்க’’ என்றார். 

சனிக்கிழமை காலை 10 மணிக்கு சீர்காழி தீ விபத்து தொடர்பாக மயிலாடுதுறை ஆர் பி எஃப் அலுவலகத்தில் வாக்குமூலம் பதிவு. புதன்கிழமை எக்மோர் எஸ் ஐ யிடமிருந்து அலைபேசி அழைப்பு. மேலும் தாம்பரம் செங்கல்பட்டு திண்டிவனம் எஸ் ஐ யும் ஃபோனில் அழைப்பார்கள் என கூடுதல் தகவல். 

ஊர் திரும்பிக் கொண்டிருந்த போது ‘’மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை எமை வதைக்க நினைத்திடும் சிறைச்சாலை’’ என்னும் வரி மனதில் ஓடிக் கொண்டேயிருந்தது.    

இளைஞர்கள் குழு

அசாத்தியத்தை சாத்தியமாக்குபவர் 


கால்பந்தில் ஆர்வம் கொண்ட சிறுவனுக்காக வெளிநாட்டுப் படிப்புக்கு வழிகாட்டும் நிறுவனம் ஒன்றுடன் கடந்த 1 மாதத்துக்கு மேலாக தொடர்பில் இருக்கிறேன். சிறுவனின் கல்லூரி சேர்க்கை தொடர்பான பொறுப்பு அந்நிறுவன ஊழியர் ஒருவருக்குத் தரப்பட்டுள்ளது. அவரை சென்னையில் ஒரு முறை நேரில் சந்தித்துப் பேசினேன்.  நிதி ஏற்பாடுகள் தொடர்பாக தேவைப்படும் ஆலோசனை சொல்வதற்காக மற்ற விஷயங்களில் உதவுவதற்காக என  அந்நிறுவனத்தைச் சேர்ந்த வேறு சிலருடனும் பேசினேன். அத்தனை உரையாடல்களும் மிகவும் ஆக்கபூர்வமாக இருந்தன. சிறுவனும் நானும் திட்டமிட்ட நிதி ஏற்பாடுகள் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. மிகவும் சிரமப்பட்டே ஏற்பாடுகள் நடந்தன. உத்தேசித்த நாட்களுக்கு சில நாட்கள் தள்ளியே தொகை ஏற்பாடு செய்ய முடிந்தது ; தொகை அனுப்ப முடிந்தது. எனினும் அந்நிறுவன ஊழியர்களான இளைஞர்கள் தளரா மனத்துடன் எப்போதும் இருந்தனர். ஒவ்வொரு தருணத்திலும் செய்ய வேண்டிய விஷயம் என்னவோ அந்த விஷயத்தில் மட்டுமே கவனம் செலுத்தினர். 

நான் சாதாரண ஜி எஸ் எம் அலைபேசி பயன்படுத்துபவன். மடிக்கணிணியை டெஸ்க் டாப் கணிணி போல உபயோகிப்பவன். சிறுவனின் கல்லூரி சேர்க்கைக்கு பொறுப்பான ஊழியரும் அவரது குழுவும் முழுக்க முழுக்க ஸ்மார்ட்ஃபோனிலும் அதன் வழியே சகலவிதமான தொடர்பு முறைகளிலும் மூழ்கியிருப்பவர்கள். இருப்பினும் என்னிடம் ஒரு வார்த்தை கூட ஸ்மார்ட்ஃபோன் வைத்துக் கொள்ளவில்லையா எனக் கேட்கவில்லை. என்னிடம் ஸ்மார்ட்ஃபோன் இல்லை என்பதால் எந்த தகவல் இடைவெளியும் ஏற்படவில்லை. விபரங்கள் தேவைப்பட்டால் குறுஞ்செய்தி அனுப்புவார்கள். மின்னஞ்சல் அனுப்புவார்கள். ஃபோனில் அழைப்பார்கள். கால்பந்து ஆடும் சிறுவனிடம் ஸ்மார்ட்ஃபோன் இருக்கிறது ; ஆவணங்களை பி டி எஃப் வடிவில் அனுப்பினால் அவன் ஸ்மார்ட்ஃபோனுக்கு அனுப்பி விட்டு எனக்கு இவ்விதம் அனுப்பப்பட்டுள்ளது என குறுஞ்செய்தி அனுப்புவார்கள். இவை அனைத்தும் தகவல் தொடர்பு முறைகள். இதனைத் தாண்டி அவர்களுக்கு நான் இயங்கும் விதம் குறித்து முழுமையான புரிதல் இருந்திருக்கிறது என்பதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். எங்கள் இலக்கினை நோக்கிச் செல்ல எனது பங்களிப்பை எப்படி சிறப்பாக பயன்பெறச் செய்ய வேண்டுமோ அப்படி பயன்பெறச் செய்தார்கள். 

அந்த இளைஞர் குழுவின் சராசரி வயது 27 ஆக இருக்கக் கூடும். 

விஷயங்களைக் கையாள்வதில் அக்குழு காட்டும் பொறுமையும் அக்குழுவின் விடாமுயற்சியும் மகத்தானது. அக்குழு மகத்தான விஷயங்களை எப்போதும் சாதிக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.  

Tuesday, 28 July 2026

பொறுப்பில்லாதவர்கள் - 2

நேரம் இப்போது மாலை 6.55. இப்போது வரை எங்களுக்கு ‘’ஸ்விஃப்ட்’’முறையில் பணம் செலுத்த விண்ணப்பித்ததற்கான ஒப்புகைச் சீட்டு அளிக்கப்படவில்லை.  

பொறுப்பில்லாதவர்கள்

கால்பந்து ஆடும் சிறுவன் 17 வயது மட்டுமே ஆனவன். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். அவன் தந்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இயற்கை எய்தினார். தன்னுடைய சுய ஆர்வத்தல் ஐ ஈ எல் டி எஸ் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி அடைந்தான். ஐரோப்பிய பல்கலைக்கழகம் ஒன்றில் சேர்ந்து படித்து அதன் மூலம் ஐரோப்பாவின் கால்பந்து கிளப் ஒன்றில் இணைய வேண்டும் என்பது அவனது ஆவல். அவன் சாமானிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் சேர்க்கை அதன் முறைமைகள் ஆகிய்வை அவனுக்கும் அவன் குடும்பத்துக்கும் மிகவும் புதிது.  மிகச் சமீபத்தில் அவன் என்னிடம் வந்தான். அவனும் நானும் சேர்ந்து சில விஷயங்களை முயன்றோம். விவாதித்தோம். எங்கள் தொடர் முயற்சியின் விளைவாக 3 வாரங்களுக்கு முன்னால் அவனுக்கு ஐரோப்பிய பல்கலைக்கழகம் ஒன்றில் சேர்க்கை அனுமதி கிடைத்தது. சேர்க்கை கிடைத்த பின் அந்தப் பல்கலை.க்கு கட்டணம் செலுத்த வேண்டும். ஓராண்டுக்கான கட்டணம் ரூ.5,30,000. மிகவும் சிரமப்பட்டு அத்தொகையை ஏற்பாடு செய்தோம். மேலும் அவன் ஐரோப்பா செல்ல ரூபாய் தேவைப்படும். முதலில் இந்த ஆண்டுக் கட்டணத்தை செலுத்தி முதல் படியைத் தாண்டுவோம். அதன் பின் மற்ற படிகளையும் கடப்போம் என முடிவு செய்தோம். எங்களிடம் நிறைய நம்பிக்கை இருக்கிறது. போராடியாவது எங்கள் நோக்கத்தை நிறைவேற்ற முயல்வோம் என்னும் உறுதி இருக்கிறது. கட்டணம் அவன் கணக்கிலிருந்து செலுத்தப்படுவதை விட அவன் குடும்ப உறுப்பினர்கள் எவர் கணக்கிலிருந்தாவது செலுத்தப்படுவது உகந்தது என உணர்ந்தோம் ; கால்பந்து ஆடும் சிறுவனுக்கு வயது 17 தான் ஆகிறது. அவன் மைனர். அவன் தன் கணக்கில் பெரும் தொகை வைத்திருக்க வாய்ப்பில்லை என்பதால் அவன் குடும்ப உறுப்பினர்கள் கணக்கிலிருந்து மாற்றுவது என முடிவு செய்தோம். அவன் பாட்டி தன்னிடமிருந்த சிறு தொகையை ( மொத்த பணத்தில் 25 சதவீதம்) அவனுக்காக அளித்தார். மொத்த பணமும் அவர் கணக்கில் போட்டு அவர் கணக்கிலிருந்து ‘’ஸ்விஃப்ட்’’ முறை மூலம் வங்கிக் கணக்கிலிருந்து ஐரோப்பிய பல்கலைக்கழகத்துக்கு அனுப்புவது என முடிவு செய்தோம். மொத்த பணம் வந்து சேர ஜூலை 24 வெள்ளிக்கிழமை இரவு 8 மணியாகி விட்டது. அடுத்த இரு நாட்கள் சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் வங்கி விடுமுறை. திங்கட்கிழமை காலை 10 மணிக்கு வங்கிக்கு சென்று ‘’ஸ்விஃப்ட்’’ மூலம் பணம் அனுப்புவது தொடர்பாக விசாரிக்கச் சென்றோம். நான் தான் வங்கி துணை மேலாளரிடம் விபரம் விசாரித்தேன். ‘’ஸ்விஃப்ட்’’  பணப் பரிவர்த்தனைக்கு அவரே பொறுப்பானவர். 

நேற்று காலை 10 மணிக்கு வங்கிக்குச் சென்றேன். ‘’ஸ்விஃப்ட்’’ படிவம் கொடுங்கள் எனக் கூறினேன். படிவம் எனக்குக் கொடுக்கப்படவில்லை. கணக்கு வைத்திருப்பவரின் ஆதார் நகல், கணக்கு வைத்திருப்பவரின் பான் கார்டு நகல், சிறுவனினி பாஸ்போர்ட் நகல், சிறுவனின் ஆதார் நகல், சிறுவனின் பான் கார்டு நகல், ஐரோப்பியக் கல்லூரி அளித்த சேர்க்கை அனுமதிக் கடிதம், கல்லூரியின் கணக்கு விபரங்கள் அனைத்தும் தேவை என்று கூறினார். சிறுவனை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து அவர்கள் கேட்ட அனைத்து ஆவணங்களையும் ஒரு மணி நேரத்தில் தயார் செய்து எடுத்துக் கொண்டு சென்றேன். காலை 11 மணிக்கு அவர் இருக்கையில் இல்லை. காத்திருந்தோம். மதியம் 12 மணி அளவில் வந்தார். சிறுவனின் பாட்டி கண்க்கு பான் கார்டுடன் இணைக்க்ப்பட வேண்டும் என்றார். நாங்கள் உடன் வீட்டுக்கு வந்து சிறுவனின் பாட்டியை அழைத்துக் கொண்டு வங்கிக்கு வந்து இ-கே ஒய் சி செய்தோம். அதன் பின் இந்தக் கணக்குக்கு காசோலை வசதி இல்லை ; அதனை அப்ளை செய்யுங்கள் என்றார். அதனையும் செய்து காசோலை பெற்றோம். உணவு இடைவேளை நெருங்கி விட்டதால் வங்கி ஊழியர்கள் உணவருந்த சென்று விட்டார்கள். நாங்கள் மூவரும் வீட்டுக்கு வந்து உணவருந்தி விட்டு உடன் வங்கிக்கு சென்றோம். உதவி மேலாளர் வங்கி நேரம் முடியும் வரை இருக்கைக்கு வரவே இல்லை. நாங்கள் சோர்வுடன் வீடு திரும்பினோம். 

இன்று காலை 10 மணிக்குச் சென்று ‘’ஸ்விஃப்ட்’’ படிவம் வாங்கி வந்தேன். அதனை நிரப்பி 10.30க்கு கொடுத்தேன். சிறுவன், சிறுவனின் பாட்டி, நான் ஆகிய மூவரும் வங்கிக்கு சென்றிருந்தோம். எங்களிடம் ‘’ஸ்விஃப்ட்’’ படிவம் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகைச் சீட்டை கொடுங்கள் எனக் கேட்டேன். எங்களுக்கு ஒப்புகைச்சீட்டு கொடுக்கப்படவில்லை. மாலை 3.15க்கு வாருங்கள் எனக் கூறினர். மாலை 3.15க்கு வங்கிக்கு வந்து எங்களால் பணம் அனுப்ப முடியவில்லை என வங்கியில் கூறினால் என்ன செய்வது என எனக்குப் பதட்டம் உருவானது. வழக்கமான நிலைமை எனில் எங்கள் நுகர்வோர் உரிமையை வலியுறுத்திப் பேசியிருப்பேன். இப்போது , ஒரு சிறுவன் தன் 12 ஆண்டு கால கனவை நிறைவேற்றும் தருவாயில் இருக்கிறான் ; அவனது பாட்டி இறந்து போன தன் மகன் செய்திருக்க வேண்டிய கடமையை நிறைவேற்ற வந்திருக்கிறார். மேலும் கல்லூரி சேர்க்கை என்பது அவர்கள் குடும்பத்தில் நிகழும் மங்களமான செயல் என்பதால் அமைதி காப்போம் என முடிவு செய்தேன். 

நாங்கள் சென்றது தேசியமயமாக்கப்பட்ட பொதுத்துறை வங்கி ( இவ்வளவு நடந்தும் நாகரிகம் கருதி வங்கியின் பெயரைத் தெரிவிக்காமல் இருக்கிறேன்). எனது கேள்விகள் : 

1. 27.07.2026 அன்று காலை 10 மணிக்கு வந்த வாடிக்கையாளர் கேட்ட ‘’ஸ்விஃப்ட்’’படிவத்தை ஏன் அப்போதே தரவில்லை? 

2. பாட்டி 1986லிருந்து அந்த வங்கிக் கிளையில் கணக்கு வைத்திருக்கிறார். 40 ஆண்டுகளாக் அந்த கிளையின் வாடிக்கையாளர். அவருக்கு செக் புக் தேவைப்படவில்லை. இன்று காலை ‘’ஸ்விஃப்ட்’’ படிவம் நிரப்பி கொடுக்கப்பட்ட போதும் ''pay yourself'' என எழுதி எந்தக் காசோலையும் கோரப்படவில்லை. ஒரு காசோலையை கேன்சல் செய்து படிவத்துடன் இணைக்குமாறு சொன்னார்கள். விண்ணப்பிப்பது அந்தக் கணக்கு எண்ணின் வாடிக்கையாளர்தானா என்பதை அவருடைய கைரேகையை மின்னணு முறையில் சோதித்து ஆதாருடன் இணைந்திருக்கும் வசதி மூலம் அறிய முடியும். அந்த கைரேகையைக் கூட பிரிண்ட் அவுட் எடுத்து ஆதாரமாக வைத்துக் கொள்ள முடியும். அதை ஏன் முயலவில்லை?

3. 28.07.2026 அன்று காலை 10.30க்கு கொடுத்த ‘’ஸ்விஃப்ட்’’படிவத்துக்கு ஒப்புகைச் சீட்டு கொடுக்காதது ஏன்? 

4. நேற்று வந்த வாடிக்கையாளர் கோரிய சேவையை இன்றைக்கு நகர்த்திக் கொண்டு வந்தது ஏன்? 

5. அன்னியச் செலாவணி வர்த்தகத்தில் யூரோ - ரூபாய் மதிப்பு நேற்று இருந்ததற்கும் இன்று இருப்பதற்கும் வேறுபாடு உள்ளது. நேற்று 1 யூரோவின் மதிப்பு ரூ. 108. இன்று 1 யூரோவின் மதிப்பு ரூ.109. துணை மேலாளர் அனாவசியமாக ஒருநாள் நகர்த்தியதால் எங்களுக்கு தோராயமாக ரூ.5000 இழப்பு. 

6. துணை மேலாளர் எவ்விதம் கடமை தவறி விட்டு சகஜமாக இருக்க முடிகிறது?

7. பாட்டியின் வயது 78. அவர் மூத்த குடிமகள். தன் பேரன் வெளிநாட்டுக் கல்லூரியில் சேரப் போகும் மங்களமான தருணத்தை அவர் நினைக்க வேண்டுமா? இந்த நேரத்தில் வங்கி மேலதிகாரிகளுக்கு தனக்கும் தன் பேரனுக்கும் நிகழ்ந்த அலைக்கழிப்பு குறித்து புகார் எழுதிக் கொண்டிருக்க வேண்டுமா? 

8. இந்தப் பதிவை நான் எழுதிக் கொண்டிருக்கும் நேரம் மதியம் 2.34. இன்னும் கணக்கிலிருந்து பணம் மின்னணு பரிமாற்றம் செய்யப்பட்டதாக எந்த குறுஞ்செய்தியும் பாட்டி அலைபேசிக்கு வரவில்லை. 

9. நானும் சிறுவனும் 3.15க்கு செல்ல இருக்கிறோம். 

பி எஸ் என் எல் எனப்படும் பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் ஊழியர்கள் பொறுப்பின்மைக்கு மிக பெயர் போனவர்கள். நாட்டின் தொலைபேசிகளும் ஆரம்ப கட்டத்து அலைபேசிகளும் அவர்கள் பராமரிப்பில் இருந்தது. உச்சபட்சமான பொறுப்பின்மையையும் அக்கறையின்மையையும் வெளிப்படுத்தி வந்தார்கள். பொதுமக்களும் குடிமக்களும் அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளால் நொந்து போயிருந்தனர். ஒரு நல்ல காலைப் பொழுதில், அந்த நிறுவனம் ஒரு ’’விருப்ப ஓய்வு’’ திட்டத்தை அறிவித்தது. அந்த ‘’விருப்ப ஓய்வில்’’ சென்று விடுவது அவர்களுக்கு மிக்க நலம் என்பது குறிப்புணர்த்தப்பட்டது. லட்சக்கணக்கான ஊழியர்கள் அந்த ‘’விருப்ப ஓய்வில்’’ நிறுவனத்தை விட்டு வெளியேறினர். கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை இருக்கும் கோடானுகோடி குடிமக்களும் அந்நிகழ்வால் பெருமகிழ்ச்சி அடைந்தனர். 

நம் நாட்டின் பொதுத்துறை தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஊழியர்களுக்கும் அந்நிலை வர வேண்டும். அப்படி ஒரு நிலை வருவதே நாட்டுக்கு நலம். 

Sunday, 26 July 2026

வாக்குமூலம் (நகைச்சுவைக் கட்டுரை)

ஒருநாள் ஊரில் இல்லை என்றால் அடுத்த நாள் பல வேலைகள் குவிந்து விடும். வெள்ளியன்று இரவு 7.30 மணியளவில் முத்துநகர் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த போது ரயில்வே பாதுகாப்பு படையிலிருந்து ஃபோன் வந்தது. சீர்காழி தீ விபத்து தொடர்பாக நான் அளித்த புகார் தொடர்பாக என்னிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என.  சனிக்கிழமை காலை 10 மணிக்கு ரயில் நிலையத்தில் இருக்கும் ரயில்வே பாதுகாப்பு படை நிலையத்துக்கு வருகிறேன் என சொன்னேன். காலை 8 மணி அளவில் தான் வீடு வந்து சேர்ந்தேன். குளித்து உணவருந்தி விட்டு கிளம்ப 9.45 ஆகி விட்டது. காலையிலேயே ரயிலில் சீட்டாடும் கும்பல் குறித்த புகாரை சி பி கி ராம் ஸ் ல் பதிவு செய்தேன். பயண விபரங்களை எழுதி தளத்தில் பதிவிட்டேன். அதற்கே நேரம் சரியாக இருந்தது. நான் அளித்த சி பி கி ராம் ஸ் புகாரை ’’கட் காபி பேஸ்ட்’’ செய்து பிரிண்ட் அவுட் எடுத்து கையில் வைத்துக் கொண்டேன். சம்பவம் நடந்த நாள் என்ன என்பதை உறுதிப்படுத்திக் கொண்டேன். எட்டாம் தேதி. புதன்கிழமை. சம்பவம் நடந்து 17 நாட்கள் ஆகியிருப்பதால் நினைவுகள் மங்கியிருக்கும் என விசாரணை செய்பவர்கள் எதிர்பார்ப்பார்கள் என யூகித்தேன். ரயில் நிலையம் வீட்டிலிருந்து 5 கி.மீ. பாதி தூரம் சென்றிருப்பேன். 9.56க்கு ரயில்வே பாதுகாப்பு படையிலிருந்து ஃபோன் வந்தது. ‘’ஆன் தி வே . இன்னும் 5 நிமிடத்தில் இருப்பேன்’’ என்று சொன்னேன். ரயில் நிலையம் சென்று பிளாட்ஃபாரம் டிக்கெட் எடுத்துக் கொண்டு நடைமேடை 1 ல் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை நிலையத்துக்குச் சென்றேன். அங்கே ஆய்வாளர் ஒருவர் இருந்தார் ; சார் ஆய்வாளர் வந்து விடுவார்; சற்று காத்திருங்கள்’’ என்றனர். காத்திருந்தேன். பின்னர் அவர் வந்தார். என்னைப் பற்றி விசாரித்தார். சிவில் என்ஜினியர். கன்ஸ்ட்ரக்‌ஷன் அண்ட் ரியல் எஸ்டேட். இதையெல்லாம் சொன்னேன். நீங்கள் வாக்குமூலம் தர வேண்டும் எனக் கூறினார். ஒரு காகிதம் கொடுங்கள் ; எழுதிக் கொடுக்கிறேன் என்றேன். நான் வாக்குமூலம் கொடுக்க அவர் எழுதி பதிவு செய்து அதில் நான் கையெழுத்திட்டுக் கொடுக்க வேண்டும் என்பதே அவர்கள் முறை என்றார். நான் மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. ஒரு முழு வெள்ளைக் காகிதத்தில் தேதி நேரம் இடம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு ரயில்வே பாதுகாப்பு படை நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை சார் ஆய்வாளர் இன்னார் முன்னிலையில் பதிவு செய்யப்படும் இன்னாரின் வாக்குமூலம் என எழுதி அதன் அடியில் ஒரு கார்பன் தாள் வைத்து எழுதிக் கொண்டார். வாக்கிய அமைப்புகள் எவ்விதம் அமைக்க வேண்டும் என அவருக்கு முன் தீர்மானம் இருந்தது. அதன் படி அமைத்தார். நான் ஆட்சேபம் ஏதும் தெரிவிக்கவில்லை. சம்பவம் நடந்த தேதி என்ன என்று கேட்டார். ஜூலை 8ம் தேதி என்றேன். அன்று என்ன நாள் என்றார். புதன்கிழமை என்றேன். அன்று அஷ்டமியும் கூட எனக் கூற எழுந்த ஆவலை மனதுக்குள்ளேயே வைத்துக் கொண்டேன். அவர் ஒரு வாசகம் சொல்ல அதில் நான் திருத்தம் சொல்ல என நான் கூறிய திருத்தங்களுடன் வாக்குமூலம் பதிவானது. நான் மிகவும் இழுத்துப் பிடிக்கவில்லை ;  சி பி கி ராம் ஸ் ல் புகார் பதிவான பின் சம்பவ இடத்தில் கரிக்கட்டையாய் இருந்த 11 மரங்கள் ரயில்வே நிர்வாகத்தால் நீக்கப்பட்டன.விசாரணை பல அளவில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த இடத்தில் நிறுத்திக் கொள்வது சிறப்பு என எனக்குத் தோன்றியது. அங்கே தீ எரிந்து கொண்டிருந்த போது 3 ரயில்கள் அப்பாதையைக் கடந்து சென்றிருக்கின்றன. ரயில்வே லைனுக்கு அருகில் தீ எரிந்து கொண்டிருக்கிறது என்னும் தகவல் ரயில் லோகோ பைலட், ரயிலின் கார்டு, ரயிலில் பயணித்த ரயில்வே பாதுகாப்பு படை காவலர்கள் ஆகிய மூவராலும் சீர்காழி ஸ்டேஷன் மாஸ்டருக்குத் தெரிவித்திருக்கப்பட வேண்டும். 3 ரயில்கள் என்பதால் 9 பேர் இதற்கு பொறுப்பு. இரண்டு ரயில்கள் பயணிகள் ரயில்கள் என்பதால் 7 பேர் இதற்கு பொறுப்பு. இந்த 7 பேரிடம் ரயில்வே லைன் அருகில் தீ பற்றி எரிந்து கொண்டிருப்பது குறித்து ஸ்டேஷன் மாஸ்டருக்குத் தகவல் தெரிவித்தீர்களா என விளக்கம் கேட்க வேண்டும். அவ்விதம் நிகழ்ந்ததா என்பது இனிமேல் தான் தெரியும். துறை ரீதியான விசாரணை நடத்துங்கள் என எனது புகார் மனுவில் கோரியிருந்தேன். இப்போதே விசாரணை நடந்து கொண்டிருக்கிறது ; எரிந்து போய் நின்றிருந்த 11 மரங்களின் ஒளிப்படம் அவர்கள் கோப்பில் இருந்ததைக் கண்டேன். அந்த மரங்கள் நீக்கப்பட்டதன் ஒளிப்படங்களும் இருந்தன. நான் அளித்த சி பி கிரா ம் ஸ் புகார் இன்னும் நடப்பில் இருக்கிறது என்பதை எனது சி பி கி ராம் ஸ் கணக்கில் நுழைந்து தினமும் பார்க்க முடிகிறது. கோப்பு தீர்வு காணப்பட்டது எனக் கூறப்படும் போது தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி அந்த முழுக் கோப்பையும் கோர முடியும். முழுக் கோப்பையும் கண்டால் என்ன செய்தார்கள் என்பது தெரியவரும். அந்தக் கோப்பை ஆதாரமாகக் கொண்டு தேவையெனில் சி பி கி ராம் ஸ் ல் மேலும் ஒரு அப்பீல் செய்ய முடியும். சூழலை உன்னிப்பாகக் கவனிப்போம் என இருந்தேன். என்னுடைய ஆதார் அட்டையின் நகல் இரண்டு வேண்டும் எனக் கேட்டனர். வீட்டுக்கு வந்து எடுத்துக் கொண்டு போய் கொடுத்தேன்.    

ஆர்யா

மறைமலை நகரிலிருந்து எழும்பூர் மின்சார ரயிலில் சென்ற போது இடையில் இருந்த ரயில் நிலையம் ஒன்றில் ஒரு விளையாட்டுக் குழு ஏறியது. அவர்களின் உபகரணங்கள் பையைப் பார்த்த போது ஹாக்கி வீரர்களாக இருக்கலாம் எனத் தோன்றியது. என் எதிரில் அமர்ந்திருந்தனர். அவர்களிடம் ‘’ஹாக்கி வீரர்களா?’’எனக் கேட்டு பேச்சைத் தொடக்கினேன்.  அவர்கள் ஹாக்கி வீரர்கள்தான். விருத்தாசலத்தில் மேட்ச் விளையாடி விட்டு ஊர் திரும்புகின்றனர். உடற்கல்வி பட்டப்படிப்பு படிக்கின்றனர். அனைவருமே இளம் பெண்கள். அவர்களிடம் ஐரோப்பா செல்ல உள்ள கால்பந்து வீரனைக் குறித்து கூறினேன். அவனுடைய கல்லூரி சேர்க்கை தொடர்பாக ஒருவரிடம் உதவி கேட்க சென்று கொண்டிருப்பதாகச் சொன்னேன். அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. ஐரோப்பாவில் விளையாட்டு வீரர்களுக்கு நிறைய ஊக்கம் கிடைக்கிறது ; நம் நாட்டில் அவ்விதம் இல்லை என்றார்கள். ஒரு குழந்தைக்கு விளையாட்டு அறிமுகம் பெற்றோர்கள் மூலமே நிகழ வேண்டும் ; நம் நாட்டில் பெற்றோர்கள் குழந்தைகள் படிப்பில் மட்டுமே ஈடுபட வேண்டும் வேறு எதிலும் ஈடுபடக்கூடாது என்னும் எண்ணம் கொண்டவர்கள் ; அதுவே முதற் பிழை - அது களையப்பட வேண்டும் எனக் கூறினேன். என்னிடம் உரையாடிக் கொண்டிருந்த பெண்ணிடம் ‘’உன் பெயர் என்ன?’’ என்று கேட்டேன். ‘’ஆர்யா’’ எனக் கூறினாள். அவளுக்கு யாருடைய பெயர் இடப்பட்டுள்ளது என அவள் அறிவாளா என்று கேட்டேன். அவளுக்கு விடை தெரியவில்லை. ‘’உனக்கு ஆதி சங்கரரின் அன்னையின் பெயர் இடப்பட்டுள்ளது. ஆதி சங்கரரின் அன்னை ஆர்யாம்பாள். தந்தை சிவகுரு.’’ என்றேன். அவளுக்கு ஆச்சர்யம். அந்தக் குழு தாம்பரத்தில் விடை பெற்றுக் கொண்டது ; கால்பந்து வீரனுக்கு வாழ்த்துக்கள் சொன்னது. 

Saturday, 25 July 2026

ரயில் சீட்டாட்டக் கும்பல் - சி பி கி ராம் ஸ் புகார்

 24.07.2026 அன்று மாலை 6.20 மணி அளவில் சென்னை எழும்பூரிலிருந்து தூத்துக்குடி செல்லும் முத்துநகர் அதிவிரைவு ரயிலில் விழுப்புரம் வரை பயணம் செய்ய பயணச்சீட்டு எடுத்துக் கொண்டு ரயிலின் என்ஜினுக்கு அருகில் இருக்கும் முன்பதிவு இல்லாத பெட்டியில் ஏறினேன். தொலைதூரம் செல்லக் கூடிய வண்டி என்பதால் ரயில் புறப்படும் நேரத்துக்கு 1 மணி நேரம் முன்பிருந்தே பயணிகள் அமர்ந்திருந்தனர். ஒரு பகுதியில் 8 பேர் அமரக்கூடிய இருக்கையில் 4 பேர் மட்டுமே அமர்ந்திருந்ததால் அங்கு சென்று அமர்ந்து கொண்டேன். அங்கே இருந்த 4 பேரும் இங்கே அமர ஆட்கள் வருவார்கள் என்றார்கள். நான் அதனைப் பொருட்படுத்தவில்லை. எனக்குத் தேவை அமர ஒரு இருக்கை. அதில் அமர்ந்து கொண்டேன். தொடர்ந்து என்னிடம் இங்கே ஆட்கள் வருவார்கள் என்று கூறிக் கொண்டேயிருந்தார்கள். நான் அதனைப் பொருட்படுத்தவில்லை. ரயிலில் தொலைதூரங்களுக்கு டிக்கெட் எடுத்துக் கொண்டு வரும் பயணிகள் இருக்கை காலியாக இருக்கிறதே என அமர முயல்வதும் அவர்களிடம் அங்கிருந்தவர்கள் ஆட்கள் வருவார்கள் எனக் கூறுவதும் நடந்து கொண்டேயிருந்தது. ரயில் புறப்படும் நேரத்தில் அவர்கள் குறிப்பிட்ட நபர்கள் இவர்கள் முடக்கி வைத்திருந்த இருக்கைகளில் அமர்ந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் சீசன் டிக்கெட் எடுத்து பயணிப்பவர்கள் என்பதை அவர்கள் பேச்சிலிருந்து யூகிக்க முடிந்தது. ரயில் புறப்பட்டதும் அந்த 7 பேரும் சீட்டுக்கட்டு சூதாட்டம் ஆடத் தொடங்கினர். பணம் வைத்து ஆடினர். இந்த சூதாட்டத்தை நிகழ்த்துவதற்காகவே ரயிலில் தொலைதூரங்களுப் பயணிக்கும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். பணம் வைத்து சூதாடுவது குற்றம். பணம் வைத்து சூதாடும் குற்றச்செயலை ரயிலில் ரயில் இயக்கத்தில் இருக்கும் போது செய்வது அதை விடப் பெரிய குற்றம். ரயில் என்பது குழந்தைகள், மாணவர்கள் , இளைஞர்கள், நடுத்தர வயதினர், மூத்த குடிமக்கள் ஆகியோர் பயணிக்கும் வாகனம். அவர்கள் முன்னிலையில் சூதாட்டம் போன்ற குற்றச் செயலில் ஒரு கும்பல் ஈடுபடுவது என்பது அப்பட்டமான மனித உரிமை மீறல் ஆகும். மேலும் ஸ்பீக்கர் மூலம் மிக அதிக சத்தத்தில் திரைப்படப்பாடல்களை ஒலிக்க விடவும் செய்தனர். இந்த கும்பலில் சிலர் மேல்மருவத்தூரில் இறங்கிக் கொண்டனர் ; பலர் திண்டிவனத்தில் இறங்கிக் கொண்டனர். 24.07.2026 மாலை 7.20க்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்ட முத்துநகர் விரைவு ரயிலில் என்ஜினுக்கு அருகில் இருந்த பொதுப் பெட்டியில் 7 பேர் கொண்ட கும்பல் சூதாட்டத்தில் ஈடுபட்டது என்பதை இந்த புகார் மூலம் பதிவு செய்கிறேன். சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்டு தொலைதூரம் செல்லும் ரயில்களின் பொதுப் பெட்டியில் பயணிகளுக்கு இடையூறாக ஸ்பீக்கர் மூலம் இரைச்சலை உருவாக்கியும் சீட்டுக்கட்டு சூதாட்டம் ஆடும் கும்பலை மொத்தமாக அடையாளப்படுத்தி அவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்குமாறு இந்தப் புகார் மூலம் கேட்டுக் கொள்கிறேன்.    

ஆயிரமும் பூஜ்யமும்

நேற்று காலை எனது வழக்கப்படி இரு சக்கர வாகனத்தை சைட் லாக் செய்து வீட்டில் எல்லார் கண்ணிலும் படும் படி வைத்து விட்டு காலை 8 மணிக்கு சென்னை செல்ல கிளம்பினேன். 1 கி.மீ தூரம் நடந்ததும் என் நண்பர் ஒருவர் விளையாட்டு மைதானத்தில் உடற்பயிற்சி முடித்து விட்டு வெளியே வந்தார். என்னைக் கண்டதும் பேருந்து நிலையத்தில் டிராப் செய்கிறேன் என்றார். அவருடன் ஒரு உணவகத்துக்குச் சென்று காலை உணவு அருந்தினேன். பின் பேருந்து நிலையம் சென்றோம். திருத்துறைப்பூண்டியிலிருந்து சென்னை செல்லும் பேருந்து நின்று கொண்டிருந்தது. நடத்துனரிடம் ‘’அண்ணன்! சென்னை போக எத்தனை மணியாகும்?’’ எனக் கேட்டேன்.’’ மதியம் 2.30க்கு வண்டி கிளாம்பாக்கத்துல இருக்கும்’’ என்றார். ’’4 மணிக்கு எழும்பூர்ல ஒருத்தரைப் பார்க்கணும் அண்ணன். சென்னை டிக்கெட் எடுத்துடவா? இல்ல சிதம்பரம் போய் பஸ் மாறிக்கவா?’’ என்றேன். ’’சிதம்பரத்துல நம்ம வண்டி 5 நிமிஷம் மட்டும்தான் நிக்கும். போய்கிட்டே இருக்க வேண்டியது தான்’’ என்றார். பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டேன். மொத்தமே 10 பேர் தான் பேருந்தில் இருந்தோம். நம் மாநிலத்தில் வெள்ளிக்கிழமையன்று பொதுவாக வெளியூர் கிளம்பி செல்வதைப் பெண்கள் தவிர்ப்பார்கள். ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் இருக்கும் இருக்கையில் அமர்ந்து கொண்டேன் ; பேருந்தில் அந்த இருக்கையை நான் எப்போதும் விரும்புவேன். என் கையில் ரூ.1000 இருந்தது. அதில் காலை உணவுக்கு நண்பருடன் சேர்ந்து அருந்தியதால் ரூ.200 செலவாகி விட்டது. சென்னைக்கு டிக்கெட் ரூ.250. சிதம்பரத்தில் அனைவரும் இறங்கி விட்டார்கள். புதிதாக 5 பேர் மட்டும் ஏறினார்கள். மொத்த பயணிகள் 6 பேர் தான். நிலக்காட்சிகள் எந்த நிலையிலும் எனக்கு இனியவை. அவற்றில் தோய்ந்திருந்தேன். வடலூரில் அவித்த கடலை வாங்கிக் கொண்டேன். தண்ணீர் பாட்டில் வாங்கிக் கொண்டேன். வெயில் கடுமையாக இருந்தது. ஓட்டுநரும் நடத்துனரும் நண்பர்களாகி விட்டார்கள். நடத்துநர் என்னிடம் ‘’சார் ! உங்கள மறைமலர் நகர்ல இறக்கி விடறன். அங்க ரயில்வே ஸ்டேஷன் பக்கம். டிரெயின் புடிச்சு எக்மோர் போயிடுங்க’’ என்றார். சொன்னது போலவே மறைமலர்நகரில் இறக்கி விட்டார். பசி கடுமையாக இருந்தது. உணவருந்தி விட்டு அடுத்த வேலையைப் பார்க்கலாம் என எண்ணினேன். அங்கே இருந்த ஆட்டோ டிரைவரிடம் ‘’பக்கத்துல வெஜிடேரியன் ஹோட்டல் இருக்கா?’’ என்று கேட்டேன். மெயின் ரோட்டிலிருந்து 500 மீட்டர் தூரம் உள்ளே இருக்கும் ஹோட்டல் ஒன்றைக் கூறினார். அங்கே சென்று உணவருந்தினேன். உணவு உண்ணும் போது அந்த ஹோட்டல் உணவில் தஞ்சாவூர் சாயல் இருப்பதை உணர்ந்தேன். பணம் கொடுக்கும் போது ‘’அண்ணன் ! நீங்க பூர்வீகம் பழைய தஞ்சாவூரா?’’ என்று கேட்டேன். அவர் சிதம்பரத்துக்காரர். சிதம்பரம் பழைய தென்னாற்காடு என்றாலும் காவிரி வீர நாராயண ஏரி புண்ணியத்தில் அதுவும் காவிரி டெல்டா என ஒரு கணக்கு. ஹோட்டல் உரிமையாளர் மறைமலைநகர் வந்து 35 ஆண்டுகள் ஆகிறது. வருடம் ஒரு தடவை குலதெய்வம் கோயிலில் சாமி கும்பிட மட்டும் ஊருக்குச் செல்கிறேன் என்றார். உரையாடிக் கொண்டிருந்ததில் இருவரும் மன அணுக்கத்தை உணர்ந்தோம். ஸ்மார்ட்ஃபோனில் செக் செய்து ‘’சார் ! 3.15க்கு சென்னை கடற்கரை செல்லும் ரயில் இருக்கு. அத புடிச்சுடுங்க’’ என்றார். அந்த ரயிலைப் பிடித்து விட்டேன். உணவுக்கு ரூ.100 கொடுத்தது போக ரூ.450 கையில் இருந்தது. மறைமலை நகரிலிருந்து எழும்பூருக்கு கட்டணம் ரூ.10. எழும்பூர் சென்று சேர்ந்தேன். நண்பரைச் சந்தித்த போது நேரம் மாலை 5 மணி. ஒரு மணி நேரம் தாமதம். மறைமலைநகரில் இருக்கும் போதே குறுஞ்செய்தி அனுப்பி சந்திக்க 5 மணி ஆகும் எனக் கூறியிருந்தேன். ஒரு மணி நேரம் நடந்த சந்திப்பு உபயோகமானதாக இருந்தது. நண்பர் தேனீர் தயாரித்து அளித்தார். சந்திப்பு முடிந்ததும் புறப்பட்டு எழும்பூர் ரயில் நிலையம் வந்தேன். அப்போது நேரம் 6.15. அப்போதுதான் புதுச்சேரி மெமு கிளம்பியது. முத்துநகர் எக்ஸ்பிரஸ் அடுத்த வண்டி அதில் விழுப்புரம் வரை மட்டுமே செல்ல முடியும். அங்கேயிருந்து வண்டி மாற வேண்டும்.  கிளம்பும் மனநிலைக்கு வந்து விட்டதால் அதில் ஏறினேன். பொதுப் பெட்டியில் எட்டு பேர் இருக்கும் இடத்தில் 4 பேர் மட்டும் இருந்தனர். அதில் சென்று அமர்ந்து கொண்டேன். இந்த இடத்துக்கு ஆள் வருகிறார்கள் என அவர்கள் கூறியதை நான் பொருட்படுத்தவில்லை. பல பயணிகளிடம் அவர்கள் இந்த பதிலைக் கூறி அமர விடாமல் செய்தனர். வண்டி கிளம்பும் நேரத்தில் அங்கே அமர்ந்திருந்தவர்களின் நண்பர்கள் வந்து அமர்ந்தனர். அது ஒரு சீட்டாட்டக் கும்பல். வண்டி புறப்பட்டதும் பணம் வைத்து சீட்டுக்கட்டு சூதாட்டம் நடத்தினர். ஒருவர் ஒரு ஸ்பீக்கர் மூலம் திரைப்பாடல்களை அலற வைத்தார். ரயிலில் பெருங்கூட்டம் பொதுப்பெட்டியில் நின்று கொண்டு வந்தது. அந்தப் பெருங்கூட்டம் அவர்கள் சீட்டாட்டத்துக்கு வசதியாக இருந்தது. இவர்கள் அனைவரும் ரயில் சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்கள். இவ்விதம் சூதாடுவதை பல வருடமாகப் பழகியிருக்கிறார்கள் எனப் புரிந்து கொண்டேன். இதைப் பற்றி ஊருக்குச் சென்றதும் ரயில்வேயில் புகார் கொடுப்போம் என எண்ணினேன். மேல்மருவத்தூரில் சிலரும் திண்டிவனத்தில் அனைவரும் அந்த சீட்டாட்டக் கும்பல் ஆட்கள் இறங்கி விட்டனர். விழுப்புரம் வந்த போது நேரம் இரவு 10. ரயில் நிலையத்துக்கு அருகில் இருந்த ஹோட்டல் ஒன்றில் ஒரு தோசை மட்டும் உண்டு விட்டு ரயில் நிலைய நடைமேடை பெஞ்சு ஒன்றில் படுத்து உறங்கி விட்டேன். விழுப்புரம் ரயில் நிலையம் 15 நிமிடத்துக்கு ஒருமுறை ஏதேனும் ஒரு ரயில் கடக்கும் நிலையம். அதனால் எப்போதும் அறிவிப்புகள் ஒலித்துக் கொண்டேயிருக்கும். எனவே கொஞ்ச நேரத்தில் விழிப்பு வந்து விடும் என எண்ணித்தான் படுத்தேன். ஆழமாக உறங்கி விட்டேன். விழித்துப் பார்த்தால் நேரம் அதிகாலை 2.45. ஊருக்குச் செல்லும் ரயில்கள் அனைத்தும் கடந்து சென்றிருந்தன. அடுத்த வண்டி காலை 6 மணிக்கு. எனவே கோலியனூர் கூட்டு ரோடு சென்று பஸ் பிடித்து சேத்தியாத்தோப்பு கூட்டு ரோடுக்கு டிக்கெட் எடுத்தேன். பஸ் ஏறியதும் தூங்கி விட்டேன். வண்டி சேத்தியாதோப்பு சென்ற போதுதான் விழிப்பு வந்தது. அங்கே இறங்கி சிதம்பரம் பஸ் பிடித்து வந்தேன். கையில் எவ்வளவு இருக்கிறது எனப் பார்த்தேன். ரூ. 35 இருந்தது. ஊர் செல்லும் பேருந்திற்குச் சென்று ஊருக்கு பஸ் கட்டணம் எவ்வளவு என்று கேட்டேன். ரூ.35 என்றார். பயணச்சீட்டு எடுத்து விட்டு பஸ்ஸில் அமர்ந்து உறங்கத் தொடங்கினேன். ஊரை நெருங்கும் போது விழிப்பு வந்தது. ‘’கால்டெக்ஸ்’’ நிறுத்தத்தில் இறங்கி வீடு நோக்கி நடக்கத் தொடங்கினேன். நேற்று கையில் ரூ.1000 உடன் பயணித்தேன். இப்போது கையில் பூஜ்யத்துடன் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தேன். ‘’ஆயிரமும் பூஜ்யமும்’’ என மனதில் தோன்றியது. இன்று நிறைய வேலைகள் இருந்தன. நேற்று ரயிலில் பயணம் செய்த போது ஊரின் ரயில்வே பாதுகாப்பு படையிலிருந்து ஃபோன் செய்தனர். சீர்காழி தீ விபத்து தொடர்பாக எனது வாக்குமூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று. காலை 10 மணிக்கு வருகிறேன் எனக் கூறியிருந்தேன். முத்துநகர் எக்ஸ்பிரஸின் சூதாட்டக் கும்பல் குறித்து சி பி கி ராம் ஸ் இணையதளத்தில் புகார் பதிவு செய்தேன். 

Thursday, 23 July 2026

ஆம்புலன்ஸ்

 இன்று மதியம் சீர்காழியிலிருந்து ஊருக்கு வந்து கொண்டிருந்தேன். சோழசக்கர நல்லூர் அருகில் சைக்கிளில் சென்ற ஒருவரும் மோட்டார்சைக்கிளில் சென்ற ஒருவரும் மோதி இருவருக்கும் பலத்த அடி. இருவர் தலையிலும் ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. மக்கள் கூட்டமாகக் கூடியிருந்தனர். நான் வண்டியை நிறுத்தி விட்டு 108 ஆம்புலன்ஸுக்கு ஃபோன் செய்தேன். மயிலாடுதுறை தலைமை மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் வரும் எனக் கூறினார்கள். சில நிமிடங்களில் ஆம்புலன்ஸ் டிரைவர் எனக்கு ஃபோன் செய்தார். ‘’இருவருக்கு வலுவான் அடி. இருவர் தலையிலும் ரத்தம் கொட்டுகிறது. முதலுதவி அவசியத் தேவை ‘’ என்றேன். 10 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் வந்தது. ஒருவர் சிகிச்சை எடுக்க பைக்கின் பின்னால் அமர்ந்து சென்று விட்டார். இன்னொருவருக்கு ஆம்புலன்ஸ் மருத்துவப் பணியாளர்கள் முதல் உதவி செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆம்புலன்ஸ் புறப்பட்டுச் சென்றதும் நான் கிளம்பினேன். 

விரிவான செய்திக் கட்டுரை

 இன்று மதியம் தினமலர் நிருபர் ஃபோன் செய்தார். தினமலர் பத்திரிக்கை மைதானத்தில் கூடாரத்தில் வசிக்கும் 7 குடும்பங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் குறித்து விரிவான செய்திக் கட்டுரை கேட்டிருப்பதாகச் சொன்னார். நாளை காலை அங்கு சென்று முழு தரவுகளைச் சேகரிக்க உள்ளோம். 

தினமலர் செய்தி

 


பத்திரிக்கை செய்தி

செம்பனார்கோவிலில் மைதானத்தில் பிளாஸ்டிக் ஷீட்டால் ஆன கூடாரத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் வசிக்கும் 7 குடும்பத்தைச் சேர்ந்த 50 பேரைக் குறித்த செய்தி இன்றைய தினமலரில் வெளியாகியிருக்கிறது.   

ஏற்றம் பெறுமா ஏழு குடும்பங்கள்?

 நாடு முழுமைக்குமான மக்கள்தொகை கணக்கெடுப்பு இந்த ஆண்டு நிகழ்கிறது. முதல் கட்டமாக வீடுகள் கணக்கெடுப்பும் அதன் பின் மக்கள்தொகை கணக்கெடுப்பும் நிகழ்த்த திட்டமிடப்பட்டுள்ளது. சுதந்திர இந்திய வரலாற்றில் முதல் முறையாக முழு கணக்கெடுப்பும் டிஜிட்டல் முறையில் நிகழ்த்த திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் குடிமக்கள் தங்கள் வீடு வசதிகள் தொடர்பான விபரங்களை சுயமாக பூர்த்தி செய்யும் வகையிலான வசதி இந்த முறை மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. இதன் படி அலைபேசி வைத்திருப்பவர்கள் se(dot)census(dot)gov(dot)in என்ற இணைய தளத்தில் தங்கள் வீடு வீட்டில் இருக்கும் வசதிகள் குறித்த விபரங்களைப் பதிவிட முடியும். அவ்விதம் பதிவிடுபவர்களுக்கு ஒரு பதிவு எண் வழங்கப்படும். அந்தப் பதிவு எண்ணை மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலர்கள் வீடுகளுக்கு வரும் போது அவர்களிடம் வழங்கினால் அவர்கள் தங்களுக்கு அரசால் வழங்கப்பட்டுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பு ஸ்மார்ட்ஃபோனில் அதனை உள்ளீடு செய்ய குடிமக்கள் பதிவு செய்திருந்த விபரங்கள் முழுவதும் அலுவலரின் ஸ்மார்ட்ஃபோன் பதிவில் இடம் பெறும். கணக்கெடுப்பாளர்களின் நேரத்தை சேமிக்க உதவுவதும் உலகின் மாபெரும் மக்கள்தொகை கொண்ட நம் நாட்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பில் குடிமக்களையும் ஈடுபடுத்துவமான செயல்பாடாகும் இது. ஜூலை 17 முதல் ஜூலை 31 வரை சுய கணக்கெடுப்பில் குடிமக்கள் ஈடுபட முடியும். தமிழக முதலமைச்சர் ஜோசஃப் விஜய் சுய கணக்கெடுப்பு மூலம் தனது விபரங்களை மக்கள்தொகை கணக்கெடுப்பு இணையதளத்தில் பதிவிட்டதை அச்சு ஊடகங்களும் காட்சி ஊடகங்களும் தமிழக மக்கள் கவனத்துக்கு பரவாலக் கொண்டு சென்றன. மேலும் தமிழக முதலமைச்சர் பெரிய அளவில் தமிழக மக்கள் சுய கணக்கெடுப்பு செயலில் ஈடுபட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

 

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், செம்பனார் கோவில் கிராமத்தில் காவல் நிலையத்துக்கு எதிரில் இருக்கும் மைதானத்தில் ஏழு பட்டியல் பழங்குடியினர் குடும்பத்தைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். வடலூரைப் பூர்வீகமாகக் கொண்ட அவர்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக செம்பனார்கோவில் காவல் நிலையத்துக்கு எதிரில் இருக்கும் மைதானத்தில் வசிக்கின்றனர். பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வதும் மூங்கில் கூடை முடைவதும் அவர்கள் தொழில் ஆகும். ஏழு குடும்பத்தைச் சேர்ந்த 50 பேரில் குழந்தைகள், சிறுவர் சிறுமிகள், இளைஞர்கள், இளம்பெண்கள் முதியவர்கள் ஆகியோரும் உள்ளனர்

 

அவர்கள் மைதானத்தின் தெற்குப் பகுதியில் பாலிதீன் ஷீட்களால் ஆன கூடாரங்களை அமைத்துக் கொண்டு வாழ்கின்றனர். கூடாரத்தின் தரை மண் தரை ஆகும். கூடாரத்தின் கூரையும் பக்கச்சுவர்களும் பாலிதீன் ஷீட்டால் ஆனவை. மின்சார வசதி இல்லை. இரவில் விளக்கு வசதி இல்லை. குழந்தைகள் சாலையில் இருக்கும் மின்விளக்கு வெளிச்சத்தில் படிக்கின்றன. சமையல் திறந்தவெளியில் விறகடுப்பு கொண்டு நடக்கிறது. சமையல் எரிவாயு இணைப்பு எவருக்கும் இல்லை. குளியலறை வசதி இல்லை. 7 குடும்பத்தைச் சேர்ந்த 50 பேருக்கும் கழிவறை வசதி இல்லை. பிளாஸ்டிக் பொருள் வணிகத்துக்குச் செல்லும் ஆண்கள் இரு சக்கர வாகனம் வைத்திருக்கின்றனர். அனைத்து குடும்பங்களும் அலைபேசி பயன்படுத்துகின்றனர். அலைபேசி பயன்படுத்துவதால் இணைய வசதி இருக்கிறது.

 

ஜூலை 19, ஞாயிற்றுக்கிழமை அன்று செம்பனார்கோவில் காவல் நிலையத்துக்கு எதிரில் வசிக்கும் ஏழு பட்டியல் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த 7 குடும்பத்தினர் மக்கள்தொகை கணக்கெடுப்பு சுய விபர இணையதளத்தில் தங்கள் குடியிருப்பின் நிலை குறித்து கேட்கப்பட்ட 33 கேள்விகளுக்கும் பதில் அளித்து மக்கள்தொகை கணக்கெடுப்பு சுய விபரப் பதிவு எண்ணைப் பெற்றனர்.

வீட்டின் தரை எதனால் ஆனது என்னும் கேள்விக்கு மண்ணால் ஆனது என்றும் வீட்டின் கூரையும் பக்கச்சுவரும் எதனால் ஆனது என்னும் கேள்விக்கு பாலிதீன் ஷீட்டால் என்றும் சொந்த வீடா வாடகை வீடா அல்லது மற்றவை என்னும் பகுப்பில் வரும் வீடா என்னும் கேள்விக்கு மற்றவை என்றும் விளக்கு வசதி இருக்கிறதா என்னும் கேள்விக்கு இல்லை என்றும் சமையலறை , குளியலறை, கழிவறை இருக்கிறதா என்னும் கேள்விக்கு இல்லை என்றும் பதிலைப் பதிவு செய்தனர். குடிநீர் ஆதாரம் என்ன என்னும் கேள்விக்கு ஊராட்சியின் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய் மூலம் சற்று தொலைவில் கிடைக்கிறது என பதிவு செய்தனர். இணைய வசதி உள்ளதா என்னும் கேள்விக்கு அலைபேசி மூலம் இணைய வசதி இருக்கிறது என்றும் பதிவு செய்தனர்.

 

நாட்டின் குடிமக்களாக அரசு எதிர்பார்க்கும் விதமாக மக்கள்தொகை கணக்கெடுப்பின் சுய விபரம் அளித்தலில் ஈடுபட்டிருக்கும் செம்பனார்கோவில் பட்டியல் பழங்குடியின 7 குடும்பங்களும் மாவட்ட நிர்வாகத்தையும் மாநில அரசையும் மத்திய அரசையும் தாங்கள் பதிவு செய்திருக்கும் தரவுகள் சென்றடையும் என நம்புகிறார்கள். சாமானிய வசதிகள் கூட இல்லாமல் வாழும் தங்கள் வாழ்நிலையை மக்கள்தொகை கணக்கெடுப்பின் சுய விபரப் பதிவு மாற்றியமைக்கும் என அந்த 7 குடும்பத்தினரும் தீவிரமாக நம்புகிறார்கள். அவர்கள் நம்பிக்கையை மெய்யாக்குவது மாவட்ட நிர்வாகம், மாநில மத்திய அரசுகள் கையில் இருக்கிறது.

சுய விபரப் பதிவு (நகைச்சுவைக் கட்டுரை)

நேற்று ஒரு நண்பர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். 

இப்போது யாரைச் சந்தித்தாலும் மக்கள்தொகை கணக்கெடுப்பு சுய விபரப் பதிவு செய்து விட்டீர்களா எனக் கேட்கிறேன். பலரும் இல்லை என்கிறார்கள். சிலர் நான் கேட்ட பிறகு அதனால் உந்தப்பட்டு செய்து விட்டு பின்னர் என்னிடம் தகவல் தெரிவிக்கிறார்கள்.  

நண்பரின் வீட்டில் நண்பரும் அவரது மனைவியும் இருக்கிறார்கள். இருவருமே சீனியர் சிட்டிசன். குழந்தைகள் வெளியூரிலும் வெளிநாட்டிலும் வேலை பார்க்கிறார்கள். 

சிறிது நேர உரையாடலுக்குப் பின் ‘’மக்கள்தொகை கணக்கெடுப்பு சுய விபரப் பதிவு செய்து விட்டீர்களா’’ எனக் கேட்டேன். 

‘’வாட்ஸப் பில் நிறைய மெஸேஜ் இது பத்தி வந்தது. இன்னும் செய்யல’’ என்றார்கள். 

‘’உங்களோட ஐ பேட் கொடுங்க’’

’’ஐ பேட் , லேப் டாப் இரண்டையும் தம்பி கொண்டு போயிருக்கான்’’

‘’உங்க ஸ்மார்ட்ஃபோன் கொடுங்க’’

சற்று தயக்கத்துடனே கொடுத்தனர். 

எனக்கு இந்த சுய விபரப் பதிவில் நல்ல பழக்கம் இருப்பதால் சர சர என ஸ்மார்ட்ஃபோனில் இயங்க ஆரம்பித்தேன். அவர்கள் இருவருக்கும் இவன் சாதாரண ஜி எஸ் எம் ஃபோன் பயன்படுத்துபவன் தானே . ஸ்மார்ட்ஃபோனில் இவனால் 33 கேள்விகளுக்கும் பதில் சொல்லி எடுத்த காரியத்தை முழுக்க முடிக்கத் தெரியுமா அல்லது பாதி பிராசஸில் விஷயத்தை நிறுத்தி வைத்து விடுவானா என ஐயம். எனக்கு ‘’நாள் முழுவதும் ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்துகிறார்கள். என்ன ஏது என உள்நுழைந்து பார்த்தால் தான் என்ன’’ என்று எண்ணம். 

பெயரும் அலைபேசி எண்ணும் உள்ளிட்டு பக்கத்தைத் திறந்தேன். வீட்டின் அமைவிடத்தை கூகுள் மேப்பில் குறிக்க வேண்டும். முதல் முறை இணையத்தின் வேகம் ஒத்துழைக்கவில்லை ; இருவரும் சோர்ந்து விட்டார்கள். உடன் விரைவாக மீண்டும் உள்சென்று கூகுள் மேப்பில் வீட்டின் அட்ச ரேகையையும் தீர்க்க ரேகையையும் குறித்து விட்டேன். எல்லா கேள்விகளுக்கும் பதில் பதிவு செய்தேன். வீடு சொந்த வீடு. வீட்டின் தரை கல் ( மார்பிள்). வீட்டு வளாகத்தில் சுத்திர்கரிக்கப்பட்ட குடிநீர் இருக்கிறது. சமையல் எரிவாயு இணைப்பு உண்டு. பிரதான உணவு அரிசி. இணையம், டிவி, ரேடியோ, இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் உண்டு. பதிவு முடிந்தது. 

சுய விபர எண் கிடைத்தது. 

‘’இதை ஒரு நோட்ல எழுதி வச்சுக்கங்க. கணக்கெடுக்க வர்ரப்ப சொல்லுங்க’’ என்றேன். 

‘’ஸ்கிரீன் ஷாட் எடுத்துக்கறன்’’ எனக் கூறி எடுத்துக் கொண்டார்கள். 

கிஷோர்

திருவாரூர் வடக்கு வீதி முக்கில் ஒரு சிறுவன் என்னிடம் ‘’லிஃப்ட்’’ கேட்டான். பள்ளி மாணவன்.  சீருடை அணிந்திருந்தான்.

வண்டியை நிறுத்தி ஏற்றிக் கொண்டேன். ‘’ரொம்ப நன்றி அண்ணன்’’ என்றான்.

’’இப்பதானே டிராவல் ஆரம்பிச்சுருக்கோம். நீ போக வேண்டிய இடத்துக்கு கொண்டு போய் விட்டதும் நன்றி சொல்லு’’எனக் கூறி வாகனத்தை தொடர்ந்து இயக்கினேன். 

‘’உன் பேரு என்ன தம்பி’’

‘’கிஷோர்’’

‘’உன் பேருக்கு என்ன அர்த்தம்னு உனக்குத் தெரியுமா?’’

‘’பேருக்கு அர்த்தம் இருக்குமா அண்ணன். எனக்கு இந்த விஷயம் புதுசா இருக்கு அண்ணன்’’ 

‘’எல்லா பேருக்கும் ஒரு அர்த்தம் இருக்கும் தம்பி. ஒன்னு அது நவுனா இருக்கும் இல்லன்னா வெர்ப் ஆ இருக்கும். இப்ப ஒருத்தருக்கு பேரு ராஜன் அப்படின்னா ராஜ்யத்தை ஆள்றவன் அப்படின்னு அர்த்தம். ராஜ்யத்தை ஆள்றவன் ராஜன்’’

‘’என் பேருக்கு என்ன அர்த்தம்னு தெரியல அண்ணன்?’’

‘’நீ வேலைக்கு ஒரு இண்டர்வியூக்கு போனா உன் கிட்ட முதல் கேள்வியே உன் பேருக்கு என்ன அர்த்தம்னு கேப்பாங்க. உனக்கு தெரிஞ்சுருந்து நீ சொன்னா நீ பிரிபேர்டா வந்திருக்கன்னு அர்த்தம். தெரியலன்னு சொன்னா அவங்களுக்கு ஆரம்பத்துலய உன் மேல ஒரு அப்பர் ஹேண்ட் உருவாகும்.’’

‘’இதெல்லாம் இண்டர்வியூ ல கேப்பாங்களா அண்ணன்’’

‘’நிச்சயம் கேப்பாங்க.’’

‘’உங்களுக்கு என் பேருக்கு என்ன அர்த்தம்னு தெரியுமா அண்ணன்?’’

‘’கிஷோர். உன் பேருக்கு என்ன அர்த்தம்னா பிறந்த குழந்தையை சிசுன்னு சொல்வாங்க. 3 வயசு குழந்தையை பாலன்னு சொல்வாங்க, 10 வயசு இருக்கற குழந்தையை கிஷோர்னு சொல்வாங்க. 18 வயசானா தருண் - இளைஞன்னு சொல்வாங்க. கிஷோர்னா சிறுவன்னு அர்த்தம். இந்த பேரு ஸ்ரீகிருஷ்ணனைக் குறிக்கற பேரு. அவன் தான் சிசுவாவும் கடவுளாவும் இருந்தவன். பாலனாவும் கடவுளாவும் இருந்தவன். சிறுவனாவும் கடவுளாவும் இருந்தவன். இளைஞனாவும் கடவுளாவும் இருந்தவன். ராமனுக்கும் இந்த பேரு பொருந்தும் ஆனா கிருஷ்ணனுக்குத்தான் ரொம்ப பொருந்தும்.’’

’’அண்ணன் இதே மாதிரி வேற ஏதாவது பேருக்கு அர்த்தம் சொல்லுங்க’’

‘’ஜெய் அப்படின்னா வெற்றின்னு அர்த்தம். விஜய் அப்படின்னா புகழுடன் கூடிய வெற்றின்னு அர்த்தம்’’

‘’அண்ணன்! உங்களுக்கு நிறைய விஷயம் தெரிஞ்சுருக்கு அண்ணன்’’

‘’எந்த விஷயத்துலயும் ஆர்வமா இருக்கணும். ஆர்வம் இருந்தா நிறைய விஷயம் தெரிஞ்சுக்கலாம்’’

‘’உலகத்துல உள்ள எல்லா மொழிகள்ல இருக்கற பேருக்கும் அர்த்தம் உண்டா அண்ணன்’’

‘’நிச்சயம் உண்டு’’

கிஷோர் இறங்க வேண்டிய இடம் வந்தது. இறக்கி விட்டேன். 

கிஷோர் நன்றி சொன்னான். 

’’வீட்டுக்குப் போய் கூகுள் செஞ்சு கிஷோர் மீனிங் பாரு’’என்று கூறி விட்டு புறப்பட்டேன்.  

Sunday, 19 July 2026

ஏழு குடும்பங்கள்

ஊரின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து சில கிலோமீட்டர்கள் தூரத்தில் கிழக்கு திசையில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்ய்யும் 7 குடும்பங்கள் ஒரு மைதானத்தில் பாலிதின் கூடாரம் அமைத்துக் கொண்டு பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்கள். குடும்பத் தலைவர்கள் பகலில் காலையில் கிளம்பி பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்ய சென்று விடுவார்கள். அவர்கள் வீட்டுப் பெண்கள் சமையல் பணிகளிலும் கூடை பின்னும் பணியிலும் ஈடுபட்டிருப்பார்கள். குழந்தைகள் பள்ளிக்குப் படிக்கச் செல்கின்றன.  

மக்கள்தொகை கணக்கெடுப்பு- சுய விபரம் அளித்தல் முறையில் விபரம் பதிவு செய்ய மைதானத்தில் வசிக்கும் இந்தக் குடும்பத்தினரை அணுக முடிவு செய்தேன். இன்று காலை அங்கே சென்று மக்கள்தொகை கணக்கெடுப்பு சுய விபரம் அளித்தல் தொடர்பான விஷயங்களைச் சொன்னேன். அவர்கள் அனைவரும் ஆர்வமாக இருந்தனர். எவ்விதம் சென்சஸ் இணையதளத்தில் சுய விபரம் பதிவு செய்வது என்பதை அவர்களுக்கு விளக்கினேன். அனைவரிடமும் அலைபேசி இருந்ததால் அனைவரும் சுய விபரம் பூர்த்தி செய்து சென்சஸின் சுய விபர குறியீட்டு எண்ணைப் பெற்றனர். 

மக்கள் தொகை கணக்கெடுப்பு கேட்ட கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்கள் : 

வீட்டின் தரை எதனால் ஆனது ? மண்ணால்

வீட்டின் சுவர் எதனால் ஆனது ? பாலிதீன் ஷீட்டால்

வீட்டின் கூரை எதனால் ஆனது ? பாலிதீன் ஷீட்டால்

குடிநீர் எவ்விதம் கிடைக்கிறது ? ஜல்ஜீவன் திட்டத்தின் பொது தண்ணீர்க் குழாய்

வீட்டில் கழிவறை இருக்கிறதா? இல்லை

வீட்டில் குளியலறை இருக்கிறதா? இல்லை

வீட்டில் விளக்கு இருக்கிறதா? இல்லை

வீட்டிற்குள் சமையல் நடக்கிறதா ? இல்லை ; திறந்த வெளியில்

சமையல் எரிபொருள் என்ன? விறகு

இந்த சுய விபரம் அளித்தல் அவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் அவர்கள் வாழ்நிலை மேம்பட உதவும் என்று என் மனத்துக்குப் பட்டது. சுய விபரம் மூலம் பதிவு செய்யப்படும் விபரங்களின் மொத்த தொகுப்பை மாவட்ட ஆட்சியர் தன் கணிணி மூலம் நேரடியாகக் காண முடியும். அவ்விதமெனில் மேற்படி நிலை குறித்து மாவட்ட ஆட்சியர் கவனத்துக்குச் செல்ல வாய்ப்பிருக்கிறது. இவ்விதமான நிலையில் 7 குடும்பத்தினர் மட்டுமே இப்பிராந்தியத்தில் இருக்கின்றனர் என்பதால் இவர்களின் வாழ்நிலையை மாற்ற இந்த சுய விபரம் அளித்தல் உதவும் என்று என் மனத்துக்குப் பட்டது. 

தினசரி பத்திரிக்கைகளின் நிருபர்கள் சிலரைத் தொடர்பு கொண்டு மைதானத்தில் கூடாரத்தில் வாழும் ஏழு குடும்பங்கள் சுய விபரம் அளித்தல் பணிகளைச் செய்திருப்பதைச் சொன்னேன். நேரில் சென்று அந்த விஷயம் குறித்து விசாரித்து பத்திரிக்கையில் செய்தியாக வெளியிட அவர்கள் ஆர்வமாயிருந்தனர். 7 குடும்பத்தினரை அவர்கள் சுய விபர எண்ணுடன் மாவட்ட ஆட்சியருக்கு ஒரு மனு அனுப்பக் கூறலாம் என உத்தேசித்துள்ளேன். 

சில தினங்களுக்கு முன்னால் தமிழக முதலமைச்சர் தலைமைச் செயலகத்தில் தனது முதல்வர் நாற்காலியில் அமர்ந்து மக்கள்தொகை கணக்கெடுப்பின் சுய விபரப் பதிவை மேற்கொண்டதை பத்திரிக்கைகளும் காட்சி ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டன. திறந்தவெளி மைதானத்தில் பாலிதீன் கூரையும் பாலிதீன் சுவரும் கொண்ட கூடாரத்தில் வசிக்கும் மின்வசதி இல்லாத எரிவாயு இணைப்பு இல்லாத விறகில் சமைத்து வாழும் ஏழு குடும்பங்களும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் சுய விபரப் பதிவை மேற்கொண்டிருக்கின்றனர் என்பது முதல்வர் பதிவு செய்து கொண்டதற்கு சமமான செய்தி முக்கியத்துவம் கொண்டது என்றே நான் கருதுகிறேன். 

Saturday, 18 July 2026

நாம் எதிர்பார்ப்பது என்ன?

நான் வங்கி அமைப்பின் மீது நம்பிக்கை கொண்டவன். வங்கிகள் சமூக வளர்ச்சிக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் பங்களிப்பாற்ற முடியும் என்பதை உணர்ந்தவன். அந்த அடிப்படையிலேயே வங்கிகள் மீதும் வங்கிச் சேவைகள் மீதும் வங்கிப் பணியாளர்கள் மீதும் சேவைக் குறைபாடு தொடர்பான புகார்களை பதிவு செய்பவன்.  

சென்ற ஆண்டு நம் நாட்டின் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் ஆண்டு வணிகம் ரூ.383 லட்சம் கோடி என புள்ளிவிபரம் கூறுகிறது. நம் நாட்டின் மொத்த தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை 85,000. இந்த கணக்கீட்டின் படி ஒவ்வொரு வங்கிக் கிளையும் ஓராண்டுக்கு சராசரியாக 450 கோடி ரூபாய்க்கு வணிகம் புரிகின்றன. ஒரு மாதத்துக்கு ரூ.37.5 கோடி. ஒரு நாளைக்கு சராசரியாக 1.25 கோடி ரூபாய்க்கு ஒவ்வொரு வங்கியிலும் வணிகம் நடக்கிறது. 

ஒரு நாளைக்கு ரூ.1,25,00,000 வணிகம் நடத்தும் வணிக நிறுவனம் போல் வங்கிகள் வாடிக்கையாளர்களை நடத்துகின்றனவா? வங்கிக்கிளைக்கு சென்ற ஒரு வாடிக்கையாளரை எந்த வங்கி ஊழியராவது ‘’வருக வருக’’ எனக் கூறி வரவேற்றது உண்டா? இவர்கள் நடத்தும் வணிகத்துக்கு பணம் தருபவர்கள் வாடிக்கையாளர்களாகிய பொது மக்கள். ஒரு வட்டிக்கடைக்காரர் கூட தன்னுடைய சொந்த பணத்தை வட்டிக்கு விடுகிறார். வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் குறைந்த வட்டிக்கு வாங்கி வாடிக்கையாளர்களிடம் அதிக வட்டிக்கு கடன் கொடுக்கின்றன. வட்டிக்கடைக்காரர் அளவுக்கு கூட வங்கிகளுக்கு சிரமம் இல்லை. 

வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அடிப்படை வங்கிச் சேவையைக் கூட திருப்தியாக அளிப்பது இல்லை. ஒரு பெட்டிக்கடை வைத்திருப்பவர் கூட சிறப்பான கனிவான வாடிக்கையாளர் சேவையை அளிக்கிறார். அதனால் தான் வணிகத்தில் நிலைத்திருக்கிறார். ஆண்டுக்கு 383 லட்சம் கோடி வணிகம் செய்யும் வங்கி ஊழியர்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான கனிவான சேவையை அளிக்க வேண்டும் என எதிர்பார்ப்பது இயல்பானது தானே?

Friday, 17 July 2026

மக்கள்தொகை கணக்கெடுப்பு

 இன்று இணையம் மூலமாக மக்கள்தொகை கணக்கெடுப்பு கோரும் விபரங்களை அளித்தேன். 

1980கள் அச்சு ஊடகங்களின் காலம். மத்திய அரசு மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பாக அளிக்கும் விளம்பரங்கள் தினமணியில் வெளியாகும். வீடு வீடாகக் கணக்கெடுக்க வரும் அரசு ஊழியர் கேட்கும் விபரங்களை அளித்து நாட்டின் வளர்ச்சிக்கு உதவுங்கள் எனக் கோரும் நாளிதழின் கால் பக்க விளம்பரங்கள் பசுமையாக நினைவில் இருக்கின்றன. 

இன்று இணையம் மூலம் மக்கள்தொகை கணக்கெடுப்பு கோரும் விபரங்களைப் பதிவு செய்தேன். மிக எளிய வடிவமைப்பு கொண்ட பக்கம். மிக எளிதாக விபரங்கள் நிரப்பலாம். பொதுமக்கள் அனைவரும் சுயமாக தங்கள் அலைபேசி மூலமோ அல்லது கணினி மூலமோ இதனை மேற்கொண்டால் ஊழியர்களுக்கு நேரமும் உழைப்பும் கணிசமாக மிச்சமாகும். 

மிக எளிய கேள்விகளும் மிக அடிப்படையான விபரங்களும் மட்டுமே கோரப்பட்டுள்ளன. எனினும் அவற்றிலிருந்து ஒரு ஊரின் ஒரு  தாலுக்காவின் ஒரு ஜில்லாவின் ஒரு மாநிலத்தின் மக்கள் வாழ்நிலையை எளிதில் உய்த்துணரலாம். 

வீட்டுக்கூரை எதனால் ஆனது என ஒரு கேள்வி. நம் நாட்டில் பல மாநிலங்கள் 90 சதவீதத்துக்கு மேல் கான்கிரீட் என்ற பதிலைக் கொண்டிருக்கக் கூடும். வீட்டின் சமையல் எரிபொருள் என்ன என இன்னொரு கேள்வி. இதற்கும் பல மாநிலங்கள் 90 சதவீதத்துக்கு மேல் எரிவாயு என்ற பதிலைக் கொண்டிருக்கக்கூடும். 

‘’காவிரி போற்றுதும்’’ பணிக்காக ஒரு கிராமத்தில் உள்ள எல்லா வீடுகளுக்கும் வீடு வீடாக சென்றவன் என்ற முறையில் இந்த கணக்கெடுப்பின் விபரங்களை எப்படிப் புரிந்து கொள்வது என்பதும் இந்தத் தரவுகளிலிருந்து எவ்விதம் புதிய திட்டங்களை உருவாக்கிக் கொள்வது என்பதையும் என் மனம் யூகிக்கிறது ; கற்பனை செய்கிறது. 

ஏதேனும் ஒரு கிராமத்தில் 100 பேருக்கு சுய மக்கள்தொகை கணக்கெடுப்பு பதிவைச் செய்தால் ஒரு ஊழியரின் 500 நிமிடங்களை மிச்சப்படுத்த  முடியும். ஒரு ஊழியரின் ஒரு நாள் பணியை மிச்சமாக்கலாம். இதனை முயற்சி செய்யலாம் என இருக்கிறேன்.