Thursday, 4 June 2026

கொல்லாபுரம்

சாலைகள் சந்திக்கும் இடம் சந்தி. மூன்று சாலைகள் சந்திக்கும் இடம் முச்சந்தி. நான்கு சாலைகள் சந்திக்கும் இடம் நாற்சந்தி. 

நாட்டில் கடுமையான உணவுப்பஞ்சம் நிலவிக் கொண்டிருந்த போது 1967ம் ஆண்டு தி.மு.க தலைவராக இருந்த அண்ணாத்துரை தி.மு.க ஆட்சிக்கு வந்தால் ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி கொடுப்போம் என தேர்தல் வாக்குறுதி தந்தார். ஆட்சி அமைத்து தி.மு.க ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி ரேஷனில் கொடுக்கவில்லை என்றால் தன்னை முச்சந்தியில் நிற்க வைத்து சவுக்கால் அடியுங்கள் என்றார். 1967ம் ஆண்டு தி.மு.க ஆட்சிக்கு வந்தது ; ரூபாய்க்கு மூன்று படி அரிசி என்னும் தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.   

1980களின் பிற்பகுதியில் ஓர் அரசியல் கோஷம் எழுந்தது. ‘’கலி கலி மெய்ன் ஷோர் ஹை ; ராஜிவ் காந்தி சோர் ஹை’’. இதனைத் தமிழில் இவ்விதம் மொழிபெயர்க்கலாம் : ‘’சந்திக்கு சந்தி ஒரே கூச்சல் : ராஜிவ் ஊழல்வாதி  என்று’’. ஹிந்தியில் கலி என்றால் தெரு , சந்து ஆகிய அர்த்தம். 

வட தமிழகத்தின் பழைய தென்னாற்காடு மாவட்டத்தில் பேருந்து நிலையங்களில் ஊர்ப்பெயர்கள் சொல்லி பேருந்தில் ஏற நடத்துநர்கள் அழைக்கும் போது திருச்சிற்றம்பலம் கூட்டு ரோடு, கோலியனூர் கூட்டு ரோடு என்று சொல்வார்கள். எனக்கு அந்த கூட்டு ரோடு என்னும் பெயர் நூதனமாக இருந்தது. கூட்டு ரோடு என்பதை கிராஸ் ரோடு என்றும் சொல்வார்கள். பேருந்துகளில் X ரோடு என எழுதி இருப்பார்கள். 

ஒருமுறை சிதம்பரத்திலிருந்து ஜெயங்கொண்டம் செல்லும் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தேன். நடத்துநர் என்னிடம் வந்து என்ன ஊருக்கு டிக்கெட் என்று கேட்டார். கொல்லாபுரம் என்றேன். ‘’நீங்க சொல்ற ஊருக்கு வண்டி போகாதுங்க’’ என்றார். எனக்கு விஷயம் புரிய சில கணங்கள் ஆனது. அவரிடம் ஜெயங்கொண்டம் கூட்டு ரோடு என்றேன். அவர் டிக்கெட் கொடுத்தார். ஜெயங்கொண்டம் கூட்டு ரோடு இருக்கும் கிராமத்தின் பெயர் கொல்லாபுரம் என்பது உங்களுக்குத் தெரியாதா என்று கேட்டேன். ‘’நான் 20 வருஷமா பஸ் கண்டக்டரா இருக்கேன் ; என்கிட்ட ஜெயங்கொண்டம் கிராஸ் ரோட்டை கொல்லாபுரம்னு பேர் சொல்லி டிக்கெட் கேட்ட முதல் ஆள் நீங்கதான்’’ என்றார்.