இன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு விட்டேன். இரு சக்கர வாகனத்தை நண்பரின் ஹார்டுவேர் கடைக்கு முன் நிறுத்தி விட்டு வலது பக்கக் கண்ணாடியில் எனது தலைக்கவசத்தை மாட்டினேன். நண்பர் வந்து தலைக்கவசத்துடனான வாகனம் என்றால் எனது வாகனம் என்பதை புரிந்து கொள்வார். அருகிலிருக்கும் பேருந்து நிலையத்துக்கு நடந்து சென்று ஊரிலிருந்து 40 கி.மீ வடக்கில் இருக்கும் ஊருக்குப் பயணமானேன். வைகாசியின் வளர்பிறை முகூர்த்தங்கள் நிறைவு பெற்று விட்டன. எனவே வாகனம் பெரிய கூட்டமில்லாமல் இருந்தது. ஒருமணி நேரம் அளவில் அங்கே சென்று சேர்ந்தேன். பேருந்து நிறுத்தத்திலிருந்து நண்பரின் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தேன். 1990களில் ஒருவரைக் காண நடந்து செல்வது என்பது மிக அதிகமாக நிகழும் செயல். சைக்கிளில் மனிதர்கள் செல்வதும் மனிதர்கள் நடந்து செல்வதும் எப்போதும் காணக் கிடைக்கும் செயல். ஒரு வீட்டின் முன் ஆலமரம் இருந்தது. அதன் விழுதுகளைத் தொட்டுப் பார்த்தேன். அந்தப் பகுதியில் நிறைய புங்கன் மரங்கள் இருந்தன. நாம் மனித உறவுகளையும் மனித நட்பையுமே உறவு என்றும் நட்பு என்றும் எண்ணுகிறோம். மரங்கள் மிகவும் உணர்வுபூர்வமானவை. மிகவும் நட்பார்ந்தவை. நான் மரங்களைத் தொட்டுப் பார்க்க விரும்புவேன். நண்பரைச் சந்தித்தேன். வழக்கமான அலுவலக நேரத்துக்கு 2 மணி நேரம் முன்னால் அவரைச் சந்திக்கிறேன். முதலில் ஒரு விஷயத்தைச் சொன்னேன். பின்னர் இன்னொரு விஷயத்தைச் சொன்னேன். அவர் ஒரு விஷயம் குறித்து கேட்டார். ஒரு விஷயம் குறித்து சொன்னார். தேநீர் அருந்துகிறீர்களா எனக் கேட்டார். தேநீர் வந்தது. புறப்படும் போது அவர் ஊரில் இருந்த அவருடைய பூர்வீக வீட்டில் பழுத்திருந்த ஒரு பெரிய பலாப்பழத்தை ஒரு பிக் ஷாப்பர் பையில் என்னிடம் கொடுத்தார்கள். அவ்வளவு பெரிய பழம் என்பதால் ‘’காரில் தானே வந்தீர்கள்?’’ எனக் கேட்டார்கள். நான் காரை விட மிகப் பல மடங்கு பெரிய வாகனத்தில் வந்திருந்தேன். இருப்பினும் அவர்கள் கேள்விக்கு ஆம் என்னும் உடன்பாட்டு பதிலையே அளித்தேன். பலாப்பழத்துடன் பேருந்து நிலையம் நோக்கி நடந்தேன். இவ்விதம் நடப்பது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அர்த்தபூர்வமான ஒரு செயலைச் செய்வதாய் மனம் எண்ணியது. பேருந்து நிலையம் எதிரில் அமைதியான பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அங்கே முதலில் சாம்பார் இட்லி சொன்னேன். பின்னர் கல்தோசை சொன்னேன். சந்திப்பு குறித்து என் நண்பர் ஒருவருக்கு விபரம் சொன்னேன். அவர் நான் இருந்த ஊருக்கு மேற்கே 70 கி.மீ தொலைவில் இருந்தார். அவரைச் சந்திப்பது நலம் பயப்பது என எண்ணினேன். பேருந்தில் அவர் இருந்த ஊருக்குப் பயணமானேன். முதலில் 40 கி.மீ மேற்கே பயணித்து பின்னர் அங்கே இறங்கி அடுத்த பேருந்தில் ஏறி அடுத்த 30 கி.மீ பயணிக்க வேண்டும். உத்தேசித்த நேரத்தை விட 20 நிமிட தாமதமாக சென்று சேர்ந்தேன். என் கையில் பெரிய பலாப்பழம் இருந்தது. அதனை நண்பருக்குக் கொடுத்தேன். என்னிடம் இருப்பதைக் கொடுப்பது எனக்கு எப்போதுமே மகிழ்ச்சி தருவது. நண்பருடன் விபரம் சொன்னேன். புதிய விபரம் ஒன்றும் சொன்னேன். 30 நிமிடம் பேசிக் கொண்டிருந்து விட்டு ஊருக்குப் புறப்பட்டேன். ஊர் நான் இருக்கும் இடத்திலிருந்து 35 கி.மீ கிழக்கே இருந்தது. பேருந்து நிறுத்தத்தில் பஸ் பிடித்து ஊர் வந்து சேர்ந்தேன். நண்பர் கடைக்கு வந்தேன். அப்போது நேரம் 2.15. நண்பர் உணவருந்த வீட்டுக்குச் சென்றிருந்தார். நான் வண்டியை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.