Tuesday, 9 June 2026

தாமரை மலர்களின் நிலம்

இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்றேன். ஜூன் 1ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் மாவட்டத்தின் பலபகுதிகளிலிருந்து வந்திருந்த பொதுமக்களுக்கு மனுக்களுக்கான ஒப்புகைச் சீட்டு வழங்கத் தாமதமானதால் பொதுமக்கள் பலர் காத்திருக்க நேரிட்டது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு ஒரு கடிதம் அனுப்பினேன். வருவாய்த்துறை அமைச்சருக்கு அதன் நகலை அனுப்பினேன். நேற்று ஜூன் 8ம் தேதி நடந்த மனுநீதி நாள் கூட்டத்தில் ஒப்புகைச் சீட்டு தாமதமின்றி வழங்கப்படுகிறதா என்பதைக் காணச் சென்றேன். நேற்றும் முந்தைய வாரம் இருந்த நிலையே இருந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த அஞ்சல் அலுவலகத்தில் இரண்டு அஞ்சல் அட்டைகள் வாங்கி சென்ற வாரம் தெரிவிக்கப்பட்ட புகார் குறித்தும் அந்தப் புகார் இந்த வாரமும் சரி செய்யப் படாமல் இருப்பது குறித்தும் புகார் எழுதி மாவட்ட ஆட்சியருக்கும், வருவாய்த்துறை அமைச்சருக்கும் அனுப்பி வைத்தேன். அடுத்த வாரம் இதே விஷயம் தொடர்ந்தால் மனுநீதி நாள் முகாமில் இந்த விஷயம் குறித்தே ஒரு மனு எழுதி மாவட்ட ஆட்சியர் கையில் நேரடியாகக் கொடுக்கலாம் எனத் திட்டமிட்டிருந்தேன். இந்த விஷயத்தைச் சரி செய்ய இன்னொரு வாய்ப்பு அளிக்கலாம் என எண்ணி இன்று மாவட்ட ஆட்சியரின் முதல் தனி உதவியாளரைச் சந்தித்து விஷயத்தைக் கூறுவோம் என எண்ணினேன். அங்கே சென்றேன். மாவட்ட ஆட்சியரின் முகாம் உதவியாளர் அவர் அறையில் இருந்தார். என் பெயரைக் கூறி விஷயத்தைச் சொன்னேன். அவர் சற்று அதிருப்தி அடைந்ததை உணர்ந்தேன். ஜூன் 1ம் தேதி கடிதத்தையும் ஜூன் 8ம் தேதி கடிதத்தையும் அவர் வாசித்திருக்க வாய்ப்பு அதிகம் இருக்கிறது. மாவட்ட ஆட்சியர் கவனத்துக்கு கடிதம் கொண்டு செல்லப்பட்டிருக்குமா என்பது ஓர் ஐயமே. ‘’ரெண்டாவது மாடியில் டி எம் இருப்பாங்க. அவங்க கிட்ட சொல்லுங்க. சரி செய்வாங்க’’ என்றார். அங்கே சென்றேன். கலெக்டரின் முகாம் உதவியாளர் அனுப்பினார் எனக் கூறி அங்கே இருந்தவரிடம் விஷயம் சொன்னேன். கிரவுண்ட் ஃபுளோர்ல டிரிபிள் எஸ் மேடம் இருப்பாங்க ; அவங்க கிட்ட சொல்லுங்க என்றார். சொல்கிறேன் அடுத்த வாரம் இந்தபிரச்சனை சரி ஆகலைன்னா இன்னைக்கு நடந்ததையும் சொல்லி புகார் கொடுப்பன் என்றேன். பணிவாகவே என்னுடைய வேண்டுகோளையும் கோரிக்கையையும் கூறினேன். பணிவாகப் பேசினாலே விஷயங்கள் நடப்பதில்லை; சினம் கொண்டு பேசினால் கேட்பானேன்? டிரிபிள் எஸ் மேடத்தை சென்று பார்த்தேன். என் பெயரைக் கூறியதும் ‘’உட்காருங்க சார்’’ என்றார். ‘’பரவாயில்லை அம்மா’’ என்றேன். நான் அமரவில்லை. அமர்ந்தால் உணர்வுகள் கொஞ்சம் குறையும். அதற்கு வாய்ப்பு கொடுக்காமல் பொறுமையாக அமைதியாக சொல்ல வேண்டியதைச் சொன்னேன். ‘’அம்மா ! பொதுமக்கள் கொள்ளிடத்துல இருந்தும் எருக்கூர்ல இருந்தும் வராங்க. காலைல 11 மணிக்கு வந்து மனு கொடுத்ததும் ஒப்புகைச் சீட்டை உடனே கொடுத்தீங்கன்னா மதியம் 1 மணி 1.30 மணிக்கு வீட்டுக்குப் போய் லஞ்ச் சாப்பிடுவாங்க. இங்க 11 மணிக்கு மனு கொடுத்தா ஒப்புகைச் சீட்டு 3 மணிக்குக் கொடுக்கறாங்க. ஒரு முழு நாள் அவங்க கலெக்டர் ஆஃபிஸ்ல இருக்க வேண்டியிருக்கு. ஏன் 5 நிமிஷத்துல முடிக்க வேண்டிய வேலையை 5 மணி நேரம் செய்யறீங்க?’’ என்றேன். ‘’சார் ! நான் இண்டர்நெட் கனெக்‌ஷனுக்கு ரயில்டெல் கனெக்‌ஷன் எக்ஸ்ட்ராவா கொடுக்க சொல்லிட்டன். அடுத்த வாரம் இந்த பிரச்சனை இருக்காது.’’ என்றார். ‘’ரொம்ப நன்றி அம்மா’’ எனக் கூறி விட்டு புறப்பட்டேன்.  ஊரின் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என்பது அவ்வளவு பெரிய கட்டணம். அத்தனை அறைகள். அத்தனை தளங்கள். எனது எதிர்பார்ப்பு என்பது மிக அடிப்படையானது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினுடைய வாரத்தின் முதல் பணி என்பது திங்கட்கிழமை காலை 10 மணிக்கு மனுநீதி நாள் முகாமில் மனுக்களை வாங்குவது. அந்த மனுக்கள் பெற்றுக் கொள்ளப்பட்டது என்பதற்கு ஒப்புகைச் சீட்டை வழங்குவது. ஒப்புகைச் சீட்டை வழங்குவதற்கு 2 நிமிடங்கள் போதும். ஆனால் பொதுமக்கள் 5 மணி நேரம் காத்திருக்கிறார்கள். 10 மணிக்கு ஒருவர் வந்து மனு கொடுக்கிறார் என்றால் அவருக்கு 10.02க்கு ஒப்புகைச் சீட்டைக் கொடுத்து விட வேண்டும். ஆனால் அவருக்கு மாலை 3 மணிக்கு ஒப்புகைச்சீட்டைக் கொடுக்கிறார்கள். உள்ளூர்க்காரர் என்றால் மனு கொடுத்த பின் மீண்டும் திரும்பி வந்து மாலை பெற்றுக் கொள்வார். அதுவும் உகந்த வழிமுறை இல்லை. நகரின் மையப்பகுதியிலிருந்து 4 கி.மீ தள்ளி இருக்கிறது மாவட்ட ஆட்சியர் அலுவலகம். 200 பேர் மனு கொடுக்க உள்ளூர்க்காரர்கள் காலை வருகிறார்கள் என்றால் அவர்கள் மீண்டும் ஒருமுறை திரும்ப வர நேர்ந்தால் அது ஒருவருக்கு 4+4 =8 கி.மீ கூடுதல் பயணம். 200 பேருக்கு என அது ஆகும் போது 1600 கி.மீ கூடுதல் பயணம். ஒரு இரு சக்கர வாகனம் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 80 கி.மீ மைலேஜ் தருகிறது என்றால் அது 20லிட்டர் பெட்ரோல் விரயமாவதன் கணக்கு. மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தின் நிர்வாகத் திறனின்மை ஒவ்வொரு திங்கட்கிழமையும் 20லிட்டர் பெட்ரோலை விரயமாக்குகிறது. வெளியூர்க்காரர்கள் 100 பேர் காத்திருக்கின்றனர். ஒவ்வொருவரும் 10 மணிக்கு கிடைக்க வேண்டிய ஒப்புகைச் சீட்டுக்கு மாலை 3 மணி வரை காத்திருக்கின்றனர். ஒருவருக்கு 5 மணி நேரத் தாமதம். 100 பேருக்கும் சேர்த்து 500 மணி நேரத் தாமதம். நிர்வாகத் திறனில்லாத ஒரு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஒவ்வொரு திங்கட்கிழமையிலும் ஒப்புகைச்ச்சீட்டு வழங்குவதில் தாமதம் செய்வதால் குறைந்தபட்சமாக 20லிட்டர் பெட்ரோலையும் 500 மணி நேரத்தையும் விரயம் செய்கிறது. ஏழு நாட்கள் கொண்ட ஒரு வாரத்தில் 168 மணி நேரங்களே உள்ளன. எனினும் மிக எளிதாக 500 மணி நேரத்தை வீணாக்கி வாரத்தைத் துவங்குகின்றனர். பொதுமக்களின் மனுக்களை மாவட்ட ஆட்சியர் படிக்கிறாரா என்பதே பெரிய ஐயம். ஒரு மாவட்ட ஆட்சியர் தனக்கு வரும் கடிதங்களை மனுக்களை வாசிக்க வேண்டும். அவருக்கு பலவேலைகள் இருக்கலாம். பல பொறுப்புகள் இருக்கலாம். இருந்தாலும் அவருக்கு வரும் கடிதங்களை மனுக்களை அவர் வாசிக்க வேண்டும். அதில் உறுதியாக இருக்க வேண்டும். அது நேர விரயம் அல்ல. உதாரணத்துக்கு, ஜூன் 1ம் தேதி ஒப்புகைச்சீட்டு விஷயம் குறித்து கடிதம் எழுதினேன். வாசித்திருந்தார் என்றால் அதில் என்ன சிக்கல் என்பதை 2 நிமிடத்தில் அறிந்து 3 நிமிடங்களில் சரி செய்திருக்க முடியும். அடுத்த வாரமும் அதே சிக்கல் தொடர்ந்ததால் அவர் கடிதங்களை வாசிக்கிறாரா என்னும் ஐயம் உருவாகி அலுவலகம் மீதான நம்பிக்கையை குறைக்கிறது. பொதுமக்களின் 500 மணி நேரம் வீணானதும் 20லிட்டர் பெட்ரோல் விரயமாவதும் எடுத்துக் கூறப்படுகிறது. அடுத்த வாரம் இந்த சிக்கல் நீடித்தால் இந்த 3 வாரங்களிலும் நிகழ்ந்தது தொகுத்துக் கூறப்பட்டு  பெரியதாகும். நிர்வாகம் எப்போதும் பெரிய விஷயங்களைக் கூட தன் திறனால் மிகச் சிறிதாக்கிட வேண்டும். திறனில்லாதவர்கள் சிறிய விஷயத்தை பெரிதாக்கி விடுகிறார்கள். 

போஸ்ட் ஆஃபிஸில் ஒரு வேலை இருந்தது. கலெக்டரேட் போஸ்ட் ஆஃபிஸிலேயே அந்த வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு வந்தேன். மதிய உணவருந்தி விட்டு உடையார்பாளையம் புறப்பட்டேன். 

ஊரிலிருந்து குத்தாலம் வழியாக அணைக்கரை வந்து அங்கிருந்து ஜெயங்கொண்டம் செல்ல கொல்லாபுரம் வழியே செல்லாமல் ஒரு உள்பாதை இருந்தது. அதில் பயணித்தேன். சிறு கிராமச் சாலைகள். அப்பகுதி சிறு காட்டுப் பகுதி போல் இருக்கும். அதில் பயணித்து ஜெயங்கொண்டம் சென்று அங்கே ஒரு வேலையை முடித்துக் கொண்டு உடையார்பாளையம் புறப்பட்டேன். இந்தப் பிராந்தியத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தபட்சம் இரண்டு குளங்களாவது இருக்கின்றன. அதில் அத்தனை தாமரை மலர்கள் மலர்ந்திருக்கின்றன. ஒவ்வொரு கிராமத்திலும் மலர்ந்திருக்கும் நூற்றுக் கணக்கான தாமரை மலர்களைக் கண்டு கொண்டே செல்லும் பயணம் என்பது மிக்க இனிமை கொண்டது. 


உடையார்பாளையம் பயறணீநாத சுவாமி ஆலயத்துக்குச் சென்றேன். அப்பனும் அம்மையும் சிறு குழந்தைகள் போல் இருக்கின்றனர். அம்பிகையின் முன்னால் நின்ற போது மீனாட்சியம்மன் முன்னால் நிற்பது போல் இருந்தது. அம்பாள் மூன்று வயது பெண் குழந்தை போலவும் தோன்றினாள். ‘’அம்மா’’ ‘’அம்மா’’ என பலமுறை சொன்னேன். உடையார்பாளையம் சிவன் சிவபாலன் என எனக்குத் தோன்றியது. இந்த தலத்தில் அர்ஜூனன் வழிபட்டதாக ஐதீகம். நூற்றுக்கணக்கான முனிவர்கள் இந்த ஆலயத் தடாகத்தில் தினமும் தவம் செய்வதாக நம்பிக்கை. ஆலயம் உணர்வின் ஆழங்களைத் தொடும் வகையில் இருக்கிறது. 

வழிபாடு முடித்து சிலால் என்ற ஊரின் வழியாக அணைக்கரை வந்து அங்கிருந்து பந்தநல்லூர் குத்தாலம் வழியாக ஊர் திரும்பினேன். இன்றைய பயணத்தில் கோடாலி என்ற ஊரைப் பார்த்தேன்; உதயநத்தம் என ஒரு ஊர் ; கடாரம் கொண்டான் என ஒரு ஊர். 

இந்தப் பிரதேசத்தை தாமரை மலர்களின் நிலம் எனக் கூற முடியும். அத்தனை தாமரைத் தடாகங்கள். அத்தனை தாமரை மலர்கள்.