Tuesday, 9 June 2026

ஓர் எண்ணம்

இரண்டு வாரங்களுக்கு முன்னால், அரியலூர் கலியபெருமாள் கோவிலுக்குச் சென்றிருந்தேன். வழிபாடு முடிந்து மாலை ஊர் திரும்பிய போது எனக்கு ஒரு மனச்சித்திரம் தோன்றியது. மேற்கே திருச்சிராப்பள்ளி கிழக்கே சிதம்பரம் வடக்கே சித்தூர் வடகிழக்கே நெல்லூர் என இந்த எல்லைக்கு உட்பட்ட 48,000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பு ஒரு செவ்வகமாக என் மனதில் எழுந்தது. இந்த நான்கு ஊர்களையும் இந்த நான்கு ஊர்களுக்கு இடைப்பட்ட பெரும்பரப்பையும் என் பயணங்களில் அறிந்திருக்கிறேன். பழைய வடார்க்காடு, பழைய தென்னாற்காடு, செங்கல்பட்டு, பழைய திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் வட பகுதி ஆகியவை இந்த பிரதேசத்தில் அடங்கும்.

வீர நாராயண ஏரி, சோழ கங்கம் ஏரி, பெருமாள் ஏரி, பாகூர் ஏரி, பாணாம்பட்டு ஏரி, மதுராந்தகம் ஏரி,புழல் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி என பல ஏரிகள் இப்பிராந்தியத்தில் அமைந்திருக்கின்றன. இவை சோழர்களால் மக்கள் நலனுக்காக உருவாக்கப்பட்டவை. தமிழகத்தின் சிறு விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் சம அளவில் வாழும் பகுதிகள் இவை. 

இந்தப் பகுதியில் 8500 கிராமங்கள் உள்ளன. ஒவ்வொரு கிராமத்திலும் 100 ஏக்கர் பரப்பு கொண்ட ஒரு ஏரி உருவாக்கப்பட வேண்டும். இவ்விதம் 8500 ஏரிகள் உருவாக்கப்படுமானால் இந்தப் பிராந்தியம் 370 டி எம் சி தண்ணீரைச் சேமிக்க முடியும். தென்னிந்தியாவின் நீர்க்குடுவையாக இப்பிராந்தியம் உருவாகும். (கவனிக்க வேண்டிய விஷயம் : கர்நாடகா தமிழகத்துக்கு வழங்கும் காவிரி நீர் ஆண்டுக்கு 177 டி எம் சி. இந்த 8500 ஏரிகளில் அதைப் போல இரு மடங்கு நீரைச் சேமிக்க முடியும்) இந்த 8500 ஏரிகளை உருவாக்க ரூ.34,000 கோடி தேவைப்படும். 

சோழ மன்னர்களுக்கு நடுநாட்டையும் தொண்டை நாட்டையும் பெரிய அளவில் வளர்த்தெடுக்க வேண்டும் என்னும் எண்ணம் இருந்திருக்கிறது என்பதை அவர்களின் வரலாற்றை நோக்கும் போது அறிய முடியும். அவர்களுக்கு அப்பிராந்தியத்தின் மீது பெரும் நம்பிக்கையும் இருந்திருக்கிறது. சோழ நாட்டில் பேராலயங்களை நிர்மாணித்த சோழர்கள் நடுநாட்டிலும் தொண்டை நாட்டிலும் பெரும் ஏரிகளை உருவாக்கியிருக்கின்றனர். ராஜாதித்த சோழனால் உருவாக்கப்பட்டது வீர நாராயண ஏரி. ராஜராஜ சோழன் தன் வாழ்வின் பெரும்பகுதியைச் செலவிட்ட ஊர் காட்டுமன்னார்குடி. ராஜேந்திரன் உருவாக்கியது சோழகங்கம் ஏரி. தஞ்சையிலிருந்து கங்கை கொண்ட சோழபுரத்துக்கு மாற்றப்பட்ட தலைநகர் கிட்டத்தட்ட 250 ஆண்டுகள் தலைநகராகவே நீடித்திருக்கிறது. 

இன்றும் முந்திரி, பலா, கொய்யா ஆகிய மரப்பயிர்கள் அதிகம் பயிர் செய்யப்படுவது இந்தப் பிராந்தியத்திலேயே. எனது விருப்பம் என்னவெனில் இந்தப் பிராந்தியத்தை தென்னிந்தியாவின் நீர்க்குடுவையாக மாற்ற வேண்டும் என்பதே. ஒவ்வொரு கிராமத்திலும் 100 ஏக்கர் பரப்பு கொண்ட ஏரிகள். அவை நிலத்தடி நீர் மட்டத்தை சில வருடங்களில் பெருமளவில் உயர்த்தி விடும். ஒவ்வொரு கிராமத்திலும் 1000 ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது என்றால் அதில் குறைந்தபட்சம் 100 ஏக்கர் தேக்கு, சந்தனம் போன்ற மரப்பயிர்களைப் பயிரிடலாம். மாநிலத்தின் வனப் பரப்பு 8,50,000 ஏக்கர் கூடும். 

உலகில் 40 சதவீத மக்கள் மட்டுமே ஜனநாயக அமைப்பில் இருக்கின்றனர். உலகில் 60 சதவீத மக்கள் சர்வாதிகார ஆட்சிக்குக் கீழே இருக்கின்றனர். ஜனநாயகத்தில் ஒரு பிரஜையால் அரசுக்கு தன்னுடைய எண்ணத்தைச் சொல்ல முடிகிறது. என்றாவது ஒரு நாள் இது நடக்கலாம் என நம்பவும் முடிகிறது. 1000 ஆண்டுகளுக்கு முன்னால் சோழ மன்னர்கள் சிந்தித்ததை நினைவுபடுத்திக் கொண்டு நாட்டின் பிரஜையால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது என்பது நல்ல விஷயமே.