Saturday, 6 June 2026

மனிதர்களை அவதானித்தல்

நூல் : நினைவில் நின்ற நிகழ்வுகள் ஆசிரியர் : டாக்டர்.எம்.சந்திரசேகரன் பக்கம் : 112 விலை : ரூ. 200 பதிப்பகம் : தமிழ்ச்சுவடு பதிப்பகம், எண் 9, பி-3, நூஸ் அபாட்மெண்ட்ஸ் முதல் மாடி, நாராயண மேஸ்திரி 2வது தெரு, வில்லிவாக்கம், சென்னை - 49. மின்னஞ்சல் : thamizhchuvadutngr(at)gnail(dot)com 
உலக வரலாற்றில் மருத்துவர்கள் எப்போதும் நோய்மையை அணுகி அதனை அறிவதை தங்கள் வாழ்க்கையின் பெரும் பகுதியாகக் கொண்டிருக்கின்றனர் என்பதைக் காண முடியும். நோய் அறிதல் என்னும் முதல் பகுதி. அதன் பின்னர் அந்த நோய்க்கான மருந்து என்பது இரண்டாம் பகுதி. ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு வகைப்பட்டவ்ன் என்பதால் நோயாளியின் நோய் அம்சம் ஒவ்வொரு நோயாளிக்கும் ஒவ்வொரு வகையாகவே இருக்கிறது. மருத்துவர் தனது தொழிலை செய்யத் தொடங்குவதிலிருந்து அனுபவம் பெருகப் பெருக நோயாளிகளையும் நோயாளிகளின் உளநிலைகளையும் அவதானிக்கும் திறன் என்பது மிக இயல்பாக கை கூடி விடுகிறது. அந்தத் திறன் அவர்களை மனிதர்களை அவதானிக்கும் தன்மைக்கும் கொண்டு செல்கிறது. எண்டோகிரைன் சர்ஜனான டாக்டர்.எம்.சந்திரசேகரன் மனிதர்களையும் மனித சுபாவங்களையும் நூதனமான வாழ்க்கைத் தருணங்களையும் மிக சுவாரசியமாக அவதானிக்கிறார். தான் அவதானித்ததை தன் எழுத்தில் பதிவு செய்திருக்கிறார். அவ்விதம் அவர் பதிவு செய்த நூலே ‘’நினைவில் நின்ற நிகழ்வுகள்’’

சென்னையிலிருந்து தில்லிக்கு விமானத்தில் பயணிக்கிறார் டாக்டர்.எம்.சந்திரசேகரன். விமானம் 30,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறது. தில்லியை அடைய இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது. அப்போது ஒரு பயணிக்கு நெஞ்சுவலி வந்து விடுகிறது. மொத்தம் 170 பயணிகள். டாக்டர் எவரும் இருக்கிறீர்களா என பைலட் ஒலிபெருக்கியில் கேட்கிறார். டாக்டர் சந்திரசேகர் ஒருவர் மட்டுமே இருக்கிறார். நெஞ்சுவலி வந்தவரின் இருக்கைக்குச் செல்கிறார் டாக்டர். நாடித்துடிப்பை பரிசீலிக்கிறார். நாடி நின்று போய் விட்டது. நோயாளியை தரையில் கிடத்தி பலமுறை கார்டியாக் மசாஜ் செய்கிறார். நோயாளிக்கு உயிர் மீண்டும் வருகிறது. 

வேலைப்பளுவைச் சுமப்பதிலேயே வாழ்வ்வின் பெரும்பாலான நாட்கள் சென்று விட்டதால் பணி ஓய்வு பெற்றதும் மனைவியுடன் சில நாட்கள் நாட்டின் வட கிழக்கு மாநிலங்களில் இருந்து விட்டு வரலாம் என முடிவு செய்கிறார் டாக்டர் சந்திரசேகர். டிராவல் ஏஜென்சியில் உங்கள் பெயர் டாக்டர் சந்திரசேகரன் தானே எனக் கேட்கிறார்கள். ‘’எனது பெயர் சந்திரசேகரன். நான் டாக்டர் தொழில் மேற்கொள்கிறேன்’’ என்றார் சந்திரசேகரன். என்ன செய்வது ? நாட்டில் ரயில்வே முன்பதிவு செய்தாலோ விமான டிக்கெட் புக் செய்தாலோ பெயரை எழுதச் சொல்லும் போது ‘’மருத்துவரானால் பெயருக்கு முன் டாக்டர் எனக் குறிப்பிடவும்’’ எனக் கேட்டுக் கொள்கிறார்களே? டாக்டரின் சேவை எப்போதும் தேவைப்படும் இடத்தில் சமூகம் இருக்கிறது ; ஒரு மருத்துவர் பணி ஓய்வு பெற்று ஓய்வெடுக்க செல்லும் போதும் அவர் தொழில் அவர் பெயருடன் ஒட்டிக் கொண்டே இருப்பேன் என்கிறது. 

டாக்டரும் அவரது நண்பரான இன்னொரு டாக்டரும் மருத்துவர்கள் தங்கள் காக்காய் கிறுக்கல் போன்ற கையெழுத்துக்குப் பெயர் போனவர்கள். அதனை நம்மளவில் நாம் இல்லாமல் ஆக்குவோம் என முடிவு செய்து ‘’காலியோகிராஃபி’’ என்னும் அழகிய கையெழுத்துக்கான கலையைக் கற்றுக் கொள்கிறார்கள். இருவரின் கையெழுத்தும் மிக அழகானதாக ஆகிறது. டாக்டரின் பேஷண்ட்கள் உடன் வ்ரும் ஒரு சிறுமியும் ஒரு சிறுவனும் பிரிஸ்கிரிப்ஷனில் இருக்கும் டாக்டரின் கையெழுத்தைப் பார்த்து அதிசயிக்கின்றனர். அவர்களுக்கு ‘’காலியோகிராஃபி’’யில் பேரார்வம் ஏற்பட்டு விடுகிறது. அவர்கள் இருவரும் யுவ பருவத்துக்கு வந்ததும் யுவதி துபாயில் ஒரு காலியோகிராஃபி பள்ளியைத் தொடங்கி மிக வெற்றிகரமாக நடத்துகிறாள். இளைஞன் தில்லியில் ஒரு காலியோகிராஃபி பள்ளி துவங்கி நடத்துகிறான். 

ரத்த வாந்தி எடுத்த வண்ணம் ஓர் இளம்பெண் மருத்துவமனைக்கு வந்து சேர்கிறார். அவரது அன்னை பதட்டத்துடன் இருக்கிறாள். உறவுக்காரப் பையன் ஒருவன் ரத்த வாந்தி எடுக்கும் பெண்ணுடன் கூடவே இருக்கிறான். அப்பெண்ணின் மருத்துவ அறிக்கையை பரிசீலிக்கும் டாக்டருக்கு எங்கோ ஒரு பிசிறு தட்டுகிறது. அவள் வாந்தி எடுப்பதாகக் கூறப்படும் ரத்தத்தைப் பரிசோதிக்கச் சொல்கிறார். ஷெர்லாக் ஹோம்ஸ் போல ஒரு விஷயத்தைக் கண்டடைகிறார். அதாவது அது ரத்த வாந்தி அல்ல ; குங்குமத்தைக் கரைத்து தன் மீது கொட்டிக் கொள்கிறாள் அந்தப் பெண். உறவுக்காரப் பையனான காதலனும் அந்த இளம் பெண்ணும் தங்கள் காதலுக்குச் சம்மதிக்காத அன்னைக்காக அவர்கள் போடும் நாட்கம். 

இன்ஸ்பெக்டர் ஜெனரல், அட்டர்னி ஜெனரல், ஆடிட்டர் ஜெனரல் என்பதில் வரும் ஜெனரல் என்னும் வார்த்தை ’’தலைமை’’ ‘’முதன்மை’’ ‘’பிரதானம்’’ என்னும் அர்த்தங்களைக் குறிப்பது போல ஜெனரல் மருத்துவமனை என்றால் ‘’தலைமை மருத்துவமனை’’ என்பதைக் குறிக்கும் ; ஆனால் தமிழகத்தில் ஜெனரல் மருத்துவமனையை பொது மருத்துவமனை என மொழிபெயர்த்து புழக்கத்துக்குக் கொண்டு வந்து விட்டார்கள் என்பதை சுவாரசியமாகக் குறிப்பிடுகிறார் சந்திரசேகரன். 

சென்னையின் ஒரு பகுதி ‘’கோல்காரன் பேட்டை’’ . அதனை கொலைகாரன் பேட்டை என அழைத்து வந்தனர் சென்னை மக்கள். ஒரு மருத்துவராக கொலைகாரன் பேட்டை என்னும் பெயர் தனக்கு ஏற்படுத்திய உளக் கலவரத்தை சுவாரசியமாகச் சொல்கிறார் டாக்டர். 

மருத்துவத் தொழிலில் ‘’பொறுமை கடலினும் பெரிது’’என்பதை masterly inavtivity yields better result என்கிறார் டாக்டர். 

தன் அறுவைசிகிச்சைகளில் நிகழ்ந்த சுவாரசியமான பல நிகழ்வுகளையும் நூலில் பதிவு செய்திருக்கிறார் டாக்டர். வாசிக்க மிக சுவாரசியமான நூல்.