Saturday, 6 June 2026

நேற்றும் இன்றும்

நேற்று என்னுடைய கவனத்துக்கு ஒரு இடம் வந்தது. அந்த இடம் 1.5 ஏக்கர் பரப்புடையது. அந்த இடத்தின் இரு பக்கங்களில் சாலைகள் உள்ளன. மொத்த இடத்தைத் தோராயமாக 2000 சதுர அடி கொண்ட 30 மனைகளாகப் பிரித்துக் கொடுக்க முடியும். மனையின் அகலத்தை ஒட்டி சாலை செல்வதால் அந்த இடத்தை மொத்தமாக வாங்கி 30 மனைகளாகப் பிரித்து விற்பனை செய்யத் தொடங்கலாம்.  இடத்தின் உரிமையாளரைச் சந்திக்க நேர்ந்தது. அவர் R என்ற விலையைக் கூறினார். அந்த விலைக்கு வாங்கினால் 2R என்ற விலைக்கு விற்பனை செய்ய முடியும். நேற்று காலை அந்த இடத்தைப் பார்த்த பின் நில உரிமையாளர் சந்திப்பு இருந்தது. முடிய மாலை 3 மணி ஆகி விட்டது. அதன் பின் வீட்டுக்கு 5 மணிக்கு வந்தேன். 

இன்று காலை 8.30 மணிக்கு அந்த இடத்தைக் காணப் பேருந்தில் கிளம்பி சென்றேன். 11 மணி அளவில் அங்கு சென்று சேர்ந்தேன். அந்த இடம் இருக்கும் பகுதிக்கு மிக அருகில் ஒரு பெரிய பாலிடெக்னிக் கல்லூரி இருந்தது. அங்கே ஒரு பெரிய கல்லூரியும் பெரிய பள்ளியும் இருந்தன. இடத்துக்குப் பக்கத்தில் நிறைய 2000 சதுர அடி அளவு கொண்ட மனைகள் விற்பனை செய்யப்பட்டு இரும்பு வேலியிடப்பட்டிருந்தன. அவற்றில் பலவற்றில் பெரிய வீடுகள் கட்டப்பட்டிருந்தன. அந்தப் பகுதியில் மனைகள் என்ன விலை போகின்றன எனப் பலரிடம் விசாரித்தேன். எனது விசாரணை நேற்று என்னிடம் கூறப்பட்ட விஷயங்களை ஊர்ஜிதம் செய்தன. இதைப் போன்ற பணிகளில் மோட்டார்சைக்கிள் பெரிய அளவில் துணை புரியும். இருந்தாலும் இன்று பேருந்தில் சென்று அந்த இடத்தைச் சுற்றி நடந்து சென்று விசாரித்து வந்தேன். அது அந்த இடத்தைக் குறித்து நுணுக்கமாக அறிய உதவியது. நான் அங்கே சுற்றிக் கொண்டிருந்த பொழுது நண்பகல் வேளை. வெயில் உக்கிரமாக இருந்தது. ரியல் எஸ்டேட்டில் இடம் பார்ப்பது இடம் குறித்து விசாரிப்பது ஆகியவற்றைப் பகலில் தான் செய்ய வேண்டும். நிலத்துக்கு சூரிய வெளிச்சத்தைப் போல நெருக்கமான நண்பன் கிடையாது. பணி முடிந்ததும் ஊர் திரும்பினேன். 

ஊருக்கு வடக்கே 40 கி.மீ தொலைவில் இருக்கும் ஊரில் நான் பார்த்த இடம் இருக்கிறது.