Friday, 10 July 2026

48 மணி நேரம்

இன்று காலை சிதம்பரம் செல்ல வேண்டிய வேலையிருந்தது. நானும் இன்னொருவரும் சேர்ந்து மூன்றாவது ஒருவரைக் காண வேண்டும் என்று திட்டம். சிதம்பரம் சென்று சேர்ந்து இரண்டாம் நபருக்கு ஃபோன் செய்தேன். ஃபோனை அவரது மகன் எடுத்தார்.  நெருங்கிய உறவினர் ஒருவர் இறந்து விட்டார் ; அவரது துக்கத்துக்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னார். இன்றைக்கு உத்தேசித்திருந்த சந்திப்பை நிகழ்த்த வாய்ப்பில்லை. 

சிதம்பரம் வரும் வழியில் சீர்காழியில் எரிந்து கரிக்கட்டையாக நிற்கும் 11 பனை மரங்கள் எவ்விதம் இருக்கின்றன என்பதை ரயில்வே மேம்பாலத்திலிருந்து பார்த்தேன். அபாயகரமாக நின்று கொண்டிருந்தன. 

சிதம்பரத்திலிருந்து ஊருக்குப் புறப்பட்டேன். சீர்காழி ரயில்வே மேம்பாலத்தை என் வாகனம் கடந்தது. அது ஒரு நான்கு வழிச் சாலை. சாலையின் மேல்புறத்தில் செல்லும் போது பனைமரங்கள் தெளிவாகத் தெரியும். சாலையின் கிழக்குப் புறத்தில் செல்லும் போது பனைமரங்கள் தெரியாது. சிதம்பரத்திலிருந்து ஊர் திரும்பும் போது கிழக்குப்புறம் வழியாகவே பயணிக்க முடியும். அங்கிருந்து பனைமரங்கள் தெரியாது என்பதால் ‘’U'' வளைவு எடுத்து வந்து பார்க்கலாமா என நினைத்தேன். இருப்பினும் தொடர்ந்து பயணித்தேன். 30 மீட்டர் தூரத்தில் இடது ஒரு பக்கம் ஒரு கிராமத்துச் சாலை வளைவு இருந்தது. உள்ளுணர்வின் அடிப்படையில் அந்த சாலையில் திரும்பினேன். நேராக 11 பனை மரங்கள் இருந்த இடத்தில் கொண்டு போய் விட்டது. அங்கே இரண்டு ரயில்வே ஊழியர்கள் இருந்தனர். ஜே சி பி வாகனம் கரிக்கட்டையாய் நின்ற 11 மரங்களையும் பூமியில் சாய்த்துக் கொண்டிருந்தது. பொதுவாக பனைமரங்கள் வலு கொண்டவை. ஆனால் முற்றிலும் எரிந்து போயிருந்ததால் ஜே சி பி லேசாக மோதுகையிலேயே அடியோடு சாய்ந்தன. இந்த மரங்கள் கரிக்கட்டைகளாய் நின்று கொண்டிருந்தால் வலுவான ஒரு காற்று அடித்தால் ரயில்வே லைனில் விழுந்து விடும். ரயிலின் மின்சார லைனில் விழவே அதிக வாய்ப்பு. 

நேற்று காலை தென்னக ரயில்வேயின் பொது மேலாளருக்கும் , துணைப் பொது மேலாளருக்கும் திருச்சி கோட்ட மேலாளருக்கும் அனுப்பிய மின்னஞ்சலுக்கு அடுத்த நாளே நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது சிறப்பானது. தெற்கு ரயில்வேக்கு நன்றி. 

8ம் தேதி மாலை 3.15க்கு தீ விபத்தைப் பார்த்தேன். 48 மணி நேரத்தில் மேற்படி விபத்து தொடர்பாக பல நிகழ்வுகள் நடந்து விட்டன. சி.பி.கி.ராம்.ஸ் ல் புகார் அளித்த விதத்தில் இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே தனது துறை சார்ந்த விசாரணையை மேற்கொள்ளவும் வாய்ப்பு உள்ளது.