பிரிட்டிஷார் நம்மை ஆண்டது என்பதன் நேரடி அர்த்தம் நம் நாட்டு மக்களிடம் வரிவசூல் செய்தார்கள் என்பதே. நிலவரியே பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பிரதான வருவாய். இன்னொரு விதத்தில் அவர்கள் நாட்டில் உற்பத்தியான பண்டங்களை நம் நாட்டில் விற்பனை செய்து லாபம் ஈட்டினர். அவர்கள் நாட்டின் உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களை நம் நாட்டில் குறைந்த விலைக்கு வாங்கி அதிலும் லாபம் அடைந்தனர். ஒரு விதமான கூட்டுக் கொள்ளை அது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நம் நாட்டில் எழுத்தறிவு 10 சதவீதம் என்ற அளவில் இருந்தது. பிரிட்டிஷ் அரசாங்கம் காகிதக் கோப்புகளால் ஆனது என்பதால் எழுத்தறிவு பெற்ற கல்வியறிவு பெற்றிருக்கும் சிலரே 2 சதவீதம் மக்கள்தொகை வீதத்தில் இருக்கும் அரசு அலுவலகங்களை அணுகவே முடியும் என்னும் நிலை. எனவே சாமானியன் அரசு அலுவலகத்தை அணுகுவது என்பதே அரிதான ஒன்று என்னும் நிலை. எனவே அரசு ஊழியர்கள் குறுங்குழு மனப்பான்மையுடன் செயல்படுவார்கள். நாடு சுதந்திரம் பெற்ற பின்னும் அரசு ஊழியர்களுக்கு இந்த குறுங்குழு மனநிலை மாறவில்லை.
தமிழகத்தில் நீங்கள் எந்த அரசு அலுவலகத்துக்குச் சென்றாலும் உங்கள் வருகையை விரும்பாத முகபாவத்தையும் பேச்சையும் செயல்களையுமே நீங்கள் வாழ்நாள் முழுக்க எதிர்கொண்டிருப்பீர்கள். அனேகமாக வருகை புரிந்த எவரையும் ‘’தங்கள் வருகையின் நோக்கத்தை அறியலாமா?’’ என மரியாதையுடன் கேட்கப்பட்ட ஒரு நிகழ்வைக் கூட வாழ்நாளில் ஒருநாளும் சந்தித்திராதவர்களே 99.99 சதவீதம் இருப்பார்கள். அதற்குக் காரணம் அங்கே நிலவும் ஊழல் மனப்பான்மை. ஒருவரிடம் சகஜமாகப் பேசினால் அவரை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குவது கடினம். மிகக் கடினமான சொற்களில் மிகக் குறைவாகப் பேசினால் மட்டுமே சாமானியக் குடிமகனை உளவியல்ரீதியாக அச்சுறுத்த முடியும்.இதனை அத்தனை அரசு அலுவலகங்களும் செய்வதைக் காணலாம்.
நாட்டின் வரிவிதிப்பில் எவ்வளவோ மாற்றம் வந்து விட்டது. நிலவரி மட்டுமே பிரதான வருவாய் என்னும் நிலை இப்போது இல்லை. ‘’வறுமையை ஒழிப்போம்’’ எனக் கூறிய இந்திரா காந்தி சாமானிய மக்களிடமிருந்தே பெரும் வரியை வாங்கினார். ‘’கார்பொரேட் வரி’’ என்னும் வரியைக் கொண்டு வந்து நாட்டின் நிதி நிலையை உயர்த்தியது காங்கிரஸ் பிரதமரான நரசிம்ம ராவ் ; இந்திரா அந்த முடிவை எடுக்கவில்லை. இப்போது ஜி.எஸ்.டி நடப்பில் உள்ளது. சாமானிய மக்களின் நுகர்விலிருந்து ஜி.எஸ்.டி கிடைக்கிறது. அவர்களே அரசு ஊழியர்களுக்கான ஊதியத்தை வரியாக அளிக்கும் எஜமானர்கள். அரசு ஊழியர்கள் இந்த பொருளாதாரக் கணக்கைப் புரிந்து கொள்வது இல்லை. அரசு அதிகாரிகளும் புரிந்து கொள்ள வேண்டும். சாமானிய மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.