Monday, 13 July 2026

காலை - மதியம் - மாலை

இன்று காலை 4.15க்கு அலாரம் வைத்து எழுந்தேன். நீராடித் தயாராகி ஊருக்கு வடக்கே 40 கி.மீ தொலைவில் இருக்கும் நண்பரைக் காணச் சென்றேன். காலை ஊரிலிருந்து புறப்பட்ட போது நேரம் 4.58. நண்பர் இல்லம் சென்றடைந்த நேரம் 6.02. காலை 6 மணிக்கே அவ்வளவு வெளிச்சமாய் இருந்தது. எல் நினோ விளைவை காலநிலையில் மிக நன்றாக உணர முடிகிறது. ரியல் எஸ்டேட் விஷயம் ஒன்றைக் குறித்து பேச வேண்டியிருந்தது. ரியல் எஸ்டேட் விஷயங்கள் பேசப் பேசத்தான் நெருங்கி வரும் ; பேசப் பேச விலகியும் செல்லும். இந்த இரண்டுக்கும் இடையில் விஷயங்கள் நடக்கும் இடம் இருக்கும். பல மாதங்களாக ஆறப் போட்ட ஒரு விஷயம். மீண்டும் அதைக் குறித்து பேசினோம்.  காலை 8 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு ஊர் வந்து சேர்ந்தேன். அப்போது நேரம் 9.15. காலை உணவு அருந்தி விட்டு காலை 10 மணிக்கு நண்பர் ஒருவர் வீட்டுக்கு முன்னரே தெரிவித்திருந்த விதமாக சென்றேன். அவரது உறவினர் ஒருவர் 10 வருடம் முன்பு ஒரு சொத்தை விற்பனை செய்திருக்கிறார். அதற்கு மூலதன ஆதாய வரி என்ப்படும் கேபிடல் கெயின் டேக்ஸ் கட்ட வேண்டும் என நோட்டீஸ் நண்பரின் உறவினருக்கு வந்திருக்கிறது. நண்பரின் உறவினர் விபரம் அறியாதவர். எனவே நண்பரை கும்பகோணத்தில் இருக்கும் வருமான வரி அலுவலகம் சென்று விபரம் கேட்டு வருமாறு கூறியிருந்தார். நண்பர் என்னை அழைத்தார். நானும் சென்றேன். நான் சொன்னவாறு 10 மணிக்குச் சென்று விட்டேன். நண்பர் 10.25க்கு தயாரானார். நண்பர் சற்று பதட்டமாக இருந்தார். அவரை முதலில் ஊரில் இருக்கும் ஆடிட்டர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றேன். அவர்கள் அடிப்படை விபரம் சொன்னதும் நண்பர் சற்று அமைதியானார். பின்னர் இரு சக்கர வாகனத்தில் கும்பகோணம் சென்றோம். எல் நினோ விளைவு மிகக் கடுமையாக இருக்கிறது. நான் பல வருடங்கள் இரு சக்கர வாகனத்தில் பயணிப்பவன். ஆனால் இப்படி ஒரு வெப்பத்தை எப்போதும் பார்த்ததில்லை. 5 கி.மீ க்கு ஒருமுறை உடலுக்கு தண்ணீர் தேவைப்பட்டது ; தண்ணீர் தாகம் எடுத்தது. மெல்ல போய் சேர்ந்தோம். ஆஃபிஸில் அதிகாரியைச் சந்தித்தோம். ஆடிட்டர் ஒருவர் மூலம் பதில் அளிக்குமாறு கூறினார். அங்கிருந்து திரும்பி ஊருக்குப் புறப்பட்டோம். வழியில் மதிய உணவு. ஊர் திரும்பிய போது மணி 4.30. இந்த விஷயம் தொடர்பான பதிவுத்துறை ஆவண நகலுக்கு விண்ணப்பிக்க வேண்டியிருந்தது. அந்த வேலையை நண்பரை வைத்துக் கொண்டு முடித்தேன். நண்பர் சோர்வாக இருந்தார். அவரை வீட்டில் விட்டு விட்டு நான் மீண்டும் ஆடிட்டர் அலுவலகம் வந்து வருமானவரி அலுவலகம் சொன்ன விபரங்களை அவர்களிடம் சொன்னேன். அவர்களுக்கு ஒரு மனச்சித்திரம் இந்த விஷயத்தை எவ்விதம் கையாள்வது என்பது குறித்து உருவானது. அந்த த்கவலுடன் நண்பர் வீட்டுக்கு வந்து நண்பருக்கு விபரம் கூறி விட்டு வீட்டுக்கு வந்தேன். சிறிது நேரம் ஓய்வு. வெம்மை தாங்கவில்லை. நீராடி விட்டு எனது சொந்த வேலைகள் சிலவற்றைப் பார்த்தேன். 

ஒப்பீட்டளவில் நாளை அதிகம் வேலையில்லை. எனினும் அதனை நாளைப் பொழுதே முடிவு செய்யும்.