Friday, 16 March 2018

ஏதேனும்

மண்ணில் விழுந்து மலர்ந்திருக்கும் மலர்களிடமிருந்தும்
அவ்வப்போது திசை மாற்றும் வண்ணத்துப் பூச்சிகளிடமிருந்தும்
காற்றில் நகரும் விளக்கின் சிறு தீபத்திடமிருந்தும்
கூட்டத்துடன் தன் உணவைச் சுமந்து செல்லும் எறும்பிடமிருந்தும்
வயலை உழும் மண்புழுவிடமிருந்தும்
குளிர்ந்திருக்கும் கிணற்று நீரிடமிருந்தும்
ரயிலுக்குக் கையசைக்கும் குழந்தைகளிடமிருந்தும்

ஏதேனும்
கற்க முடிந்தால்

இந்த உலகம் தான்
எவ்வளவு ஆசிர்வதிக்கப்பட்டது

இந்த வாழ்வு தான்
எவ்வளவு இனிமையானது


13.03.2018
21.45

Thursday, 15 March 2018

காதலாகி

இமைக்காது விழி நோக்கி
மென் காற்றின் சலனங்களில் அலை மோதி
ஈர இரவுகளில் மோனித்திருந்து
நினைவுகளின் நறுமணங்களைப் பரவ விட்டுக்கொண்டு

ஓர் அழைப்பாய்
ஒரு சரணாகதியாய்
கசிந்து உருகி காதல் கொண்டது
ஒரு மலரிடம்

முற்றத்து
தொட்டிச் செடியில்
மலர்ந்திருந்த
ஒரு மலரிடம்

உதயம்

மாறா அன்றாடத்தின்
கசடு படிந்த மாசுகள்
தீண்டாத
உனது பிரதேசங்களில்
தினமும் எழுகிறது
முதல் சூரியக் கதிர்

திங்களின் சுபாவங்களுடன்
நாளின்
உனது வழமையான நகர்வுகள்

உன் துக்கம்
கண்ணீராகும் போது
புவியின் ஒரு பாதி
மூழ்கியிருக்கிறது
இருளின் வெள்ளத்தில்

Wednesday, 14 March 2018

படித்துறை

காலம் தேய்த்துக் கொண்டிருக்கும்
ஒரு கருங்கல் படித்துறையில்
ஓட்டமாய் ஓடிக் கொண்டிருக்கிறது நதி
பாசி இல்லாத படிகளில்
இறங்கி மூழ்கி எழுந்து கொண்டிருந்தனர்
கடந்த நினைவுகளை விட்டு
வலசைப் பறவைகளின் பிம்பங்கள்
நதியால் நெளிந்தன
அசையும் நிழலை
மண்ணிலும் நீரிலும்
பார்த்துக் கொண்டிருந்தது
ஆற்றங்கரை மரம்
சின்னக் குமிழிகள்
இணைந்து
ஒற்றை ஒரே ஓசையாகி
உடைந்து சிதறிக் கொண்டிருந்தது
பல ஒற்றை ஓசைகளாய்
காலம் காலமாய் மிதந்த தக்கை
சுழன்று கொண்டேயிருக்கிறது
விண்ணிலிருந்து மண் நோக்கி

நீரும் நெருப்பும்

மழைத் தாளம்
நிறையும்
நள்ளிரவில்
கருகிக் கொண்டிருந்த
மரத்தின் குஞ்சுகள்
உணர்ந்தன
நீர்மையையும்
நெருப்பையும்

Tuesday, 13 March 2018

புனர்ஜென்மம்

உனது விழி நோக்கி

எனது ஆறாத வடுக்களை காட்டிக் கொண்டிருக்கிறேன்
எனது வன்மங்களை அடையாளப்படுத்துகிறேன்
எனது சொல்லெடுக்கா துக்கங்களை முன்வைக்கிறேன்
எனது கண்ணீரை சமர்ப்பித்துக் கொண்டிருக்கிறேன்
எனது புனிதமற்ற ஆசைகளுக்கு மன்னிப்பு கேட்கிறேன்

மண்டியிட்டிருக்கையில்
உனது விரல்
எனது தலையைத் தீண்டும்
அக்கணம்

பிறப்புக்கு முன்னான இருளிலிருந்து
மீண்டும்
பிறந்தெழுந்து வருகிறேன்

Monday, 12 March 2018

தவம்

அலை பார்த்து நிற்கிறாள்
அந்த இளம்பெண்
அலைகளின் நடுவே
மடித்து விடப்பட்ட பேண்ட் கொண்ட கால்களை
தீண்டுகின்றன
நீரலைகள்
விம்மும் அவள் மனதை
பிரதிபலிக்கிறது
கடல்
முதல் முறை நீராடும் 
சிறுகுழந்தையை
ஒக்கலில்
சுமந்து
அமைதிப்படுத்துகிறாள்
அலை நடுவே நிற்கும் இளம்பெண்

Sunday, 11 March 2018

ஒருங்கமைவு

நீ என்னை அகன்றிருக்கும் நாட்களில்
அன்றாடத்தின் ஒழுங்கின்மை என்னை அச்சுறுத்துகிறது
பொழுதின் வெவ்வேறு முகமூடிகளுடன்
நாம் புழங்கும் ஒவ்வொரு பொருளிலும்
வெளிப்படுகிறது
நீ இல்லாமல் இருப்பதன் நிறைவின்மை
வினாடி முள்ளின் தாளம் மாறுகிறது
உதயாதி அஸ்தமனங்களிலும்
அது பிரதிபலிக்கிறது
நீ திரும்பி வந்ததும்
எல்லாம் ஒருங்கு அமைவதின்
புதிர் என்ன?

ஆயிரம் ஆயிரம்

ஆயிரம் ஆனைகள் உலவிக் கொண்டிருக்கும் வெளியில்
ஆயிரம் தும்பிகள் பறந்து கொண்டிருக்கும் வானில்
ஆயிரம் மகரந்தத்தூள்கள் மிதந்து கொண்டிருக்கும் காற்றில்
ஆயிரம் குமிழிகள் உருவாகி உடையும் நதியில்
ஆயிரம் கனிகள் கனிந்து கொண்டிருக்கும் வனத்தில்
ஆயிரம் தளிர்கள் முன்நகரும் பொழுதில்
ஆயிரம் முறை பிறக்கிறேன்
ஆயிரம் முறை இறக்கிறேன்

Saturday, 10 March 2018

இந்த சாலை

இந்த பனி பொழியும் இரவில்
தனியாய் நடக்கும் இச்சாலை
விளக்குகளின் வெளிச்சம் 
சிறிதாய் தரை தொடும் இச்சாலை
சீர் செய்யப்படாத பள்ளங்கள் கொண்ட இச்சாலை
நாளும் பொழுதும்
பலமுறை கடந்த இச்சாலை
மகிழ்ந்து துக்கித்து கசந்து
சென்ற இச்சாலை
மகவாய் அன்னை ஒக்கலில் அமர்ந்து
தந்தை கைவிரல்கள் பற்றி நடந்து
மிதிவண்டி இயக்கி
ஊர்திகளில் சென்ற இச்சாலை
இச்சாலை
இச்சாலை
அப்படியே இருக்கிறது
வானத்தைப் பார்த்துக் கொண்டு
பூமியில்
அவ்வப்போது வந்து செல்பவர்களைப்
பார்த்துக் கொண்டு