Wednesday, 3 November 2021

ஒளி நிறைக


 

பெயர் தெரியாத பெட்டி

நகரம் 
ஒன்றின் வீதியில்
வீதிக்கு நடுவில்
ஒரு கனசெவ்வகப் பெட்டியொன்று
இணைக்கப்பட்ட திரியில் 
நெருப்பிடப்பட்டிருந்தது
பண்டிகை அவசரம்
வழிப்போக்கர்கள்
நின்றனர் சில கணம்
கழுத்திலும் கழுத்துச் சரடிலும்
மஞ்சள் மிகுந்திருந்த
இளம்பெண்
இருசக்கர வாகனத்தில்
கணவன் தோள்களைப் பற்றிக் கொண்டாள்
இன்னொரு வாகனத்தில்
எரிதிரவ டேங்க் மேல் 
அமர்ந்திருந்த
சிறு குழந்தை
தந்தையிடம்
இது வெடிக்குமா
என்று கேட்டான்
நடந்து செல்பவர்களும்
2 வீலர்களும்
4 வீலர்களும் 
இருபுறமும் காத்து நின்றனர்
சிறு சீற்றத்துடன்
தீ
பெட்டியினுள் புகுந்தது
செந்நிறத்தில்
பசுமையாய்
நீலமாய்
மஞ்சளாய்
தீச்சுடர் பூக்கள்
வானில் எழுந்தன
காற்றில் பூத்தன
சுடர் மலர்கள் நின்று விடும் 
என எல்லாரும் எதிர்பார்த்த 
நேரத்தையும் தாண்டி
அவை மலர்ந்து கொண்டே இருந்தன
சுடர் பூக்கள் ஓய்ந்த பின்னும்
யாரும் பயணிக்கத் துவங்கவில்லை
வானத்தைப் பார்த்த வண்ணமே இருந்தனர்
அந்த இளம்பெண் கணவனிடம் 
தன் காதலைச் சொல்ல விரும்பினாள்
சொல்லாமல்
அவன் முதுகில் சாய்ந்து கொண்டாள்
குழந்தை தந்தையிடம்
‘’சூப்பரா இருந்துச்சுப்பா’’ என்றான்
காத்திருந்த யாருக்கும்
அதன் 
பெயர் தெரியவில்லை
பெயர் தெரியாத 
அந்த பெட்டி
அளித்த 
பிரியங்களுடனும்
மகிழ்ச்சியுடனும்
நம்பிக்கையுடனும்
அனைவரும்
கடந்து சென்றனர்
 

வீடும் வாழ்வும் ( மறுபிரசுரம்)

இன்று காலை எனது நண்பரான கட்டிடக்கலை வடிவமைப்பாளரிடம் (ஆர்க்கிடெக்ட்)  பேசிக் கொண்டிருந்தேன். அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்றவர். அதை நான் அறிவேன். அடுத்த வாரம் அவர் பயின்ற அண்ணா பல்கலை.யில் பி. ஆர்க் பயிலும் மாணவர்களுக்கு ஒரு உரை அளிக்கப் போகிறேன் என்றார். சட்டென எனக்கு ஒரு பொறி தட்டியது.  கட்டிடக்கலையில் உயர் பட்டம் பெற்றீர்களா என்றேன். உயர் பட்டம் பெற சேர்ந்தேன். பாதியில் படிப்பை நிறுத்தி விட்டேன் என்றார். உங்கள் தகுதிகளில் அது மிக முக்கியமானது என்றேன். இருவரும் சிரித்தோம். அவரது துறை சார்ந்தும் பொது விஷயங்கள் குறித்தும் பரந்த அறிவு கொண்டர். நல்ல அறிஞர். பல பெரிய கட்டிடங்களை வடிவமைத்தவர். உலகின் பல நாடுகளுக்குப் பயணம் செய்தவர். வருடம் ஒருமுறை இமயத்தில் மலையேற்றம் செய்வார். இலக்கிய வாசகர். எனக்கு கிடைத்துள்ள நண்பர்களால் நான் பெரும் நிறைவு கொள்கிறேன். இது ஓர் அரிய பேறு.

எனது கட்டுமானங்களை வடிவமைக்கும் ஆர்க்கிடெக்ட் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். அவர் கட்டிடங்களும் கட்டிக் கொடுக்கிறார். ரியல் எஸ்டேட்டும் செய்கிறார். இடம் வாங்கி அதில் பெரிய வீடுகளைக் கட்டி விற்பனை செய்கிறார். தொழிலில் நுணுக்கமும் நேர்த்தியும் கொண்டவர். அவர் எனது நண்பரின் நண்பர். அந்த முறையில் நான் அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். என்னுடைய மனையின் வரைபடங்களை அனுப்புவேன். அவருக்கு அது கிடைத்த இரண்டாவது தினம் என்னிடம் கட்டிட பிளான்கள் வந்து சேர்ந்திருக்கும். மின்னல் போல அதிரடியாக வேலை செய்யக் கூடியவர். நாங்கள் பல வருடங்கள் நேரில் பார்த்துக் கொண்டது கிடையாது. ஃபோனில்தான் பேசியிருக்கிறோம். எங்களுக்குள் பரஸ்பர மரியாதையும் நட்பும் இருந்தது. அவர் உருவம் குறித்து என்னிடம் ஒரு மனச் சித்திரம் இருந்தது. பல வருடங்களுக்குப் பின் நாங்கள் சந்தித்துக் கொண்ட போது அவர் குறித்து என்னிடம் இருந்த மனச்சித்திரம் குறித்து சொல்லி சிரித்துக் கொண்டோம். இப்போதும் அவரைப் பற்றி எண்ணும் போது அந்த இரு சித்திரங்களும் மனதில் எழும். கட்டிட பிளான்களில் சிறந்த அறிவு கொண்டவர். அவர் கணிணித் திரையில் அவர் உருவாக்கும் கோடுகள் சில நிமிடங்களில் அற்புதமான மாய உலகங்களை உருவாக்கி விடும். மிகச் சிறு இடத்தைக் கூட நம்ப முடியாத வாய்ப்புகள் கொண்டதாக ஆக்கி விடுவார். 

நான் கட்டிடத் தொழிலுக்கு வந்த போது - பொறியியல் பட்டம் பெற்ற இரண்டாவது ஆண்டில் ( அதற்கு முன் ஒரு வருடம் தமிழ்நாட்டையும் இந்திய மாநிலங்களையும் ரயிலில் ஒரு சுற்று சுற்றி வந்தேன்)- சென்னையில் மிக அதிக அளவில் அபார்ட்மெண்ட்கள் கட்டப்பட்டுக் கொண்டிருந்தன. அதனை அடிக்கடி பார்க்கும் போது எனக்கும் ஒரு அபார்ட்மெண்ட் கட்டி விற்பனை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதற்கான ஒரு பொருத்தமான இடத்தை வாங்கினேன். பின்னர் சில பெரிய கட்டிடங்களைக் கட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தேன்.

வீடுகள் கட்டிக் கொடுத்தவன் என்ற முறையில் எனக்கு சில அவதானங்கள் உண்டு. வீடு பௌதிகமான ஓர் இருப்பு மட்டும் அல்ல. அதில் வாழும் - வசிக்கும் மனிதர்களின் சுபாவமும் மன அமைப்புமே வீட்டை உயிர்ப்புடன் இருக்கச் செய்யும். ஓர் இடத்தை எப்படிப் பயன்படுத்திக் கொள்வது  என்பது பயன்படுத்துபவர்களின் எண்ணங்களைப் பொறுத்தது. மயிலாடுதுறை போன்ற ஊர்களில் நான் கட்டிடம் கட்ட வந்த போது ஒரு மனை என்பது 40 அடி அகலமும் 60 அடி நீளமும் கொண்டது. அதில் கீழ்த்தளத்தில் வெளிச்சம் நிறைந்ததாக காற்றோட்டத்துடன் கூடியதாக 1100லிருந்து 1200 சதுர அடி வரையிலான வீட்டைக் கட்ட முடியும். அதே பரப்புடன் அப்படியே முதல் தளமும் இரண்டாவது தளமும் எழுப்பலாம். இடம் இருக்கிறதே என்று அடைத்துக் கட்டினால் வெளிச்சமும் காற்றோட்டமும் இல்லாமல் ஆகும்.

நான் வாங்கியிருந்த வீட்டு மனை இரண்டு கிரவுண்டு அளவுள்ளது. ஆர்க்கிடெக்ட்டிடம் வீடுகள் பெரியவையாக வாங்குபவர்களுக்கு எல்லா விதத்திலும் வசதி மிக்கதாக இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டேன். அவர் அருமையான ஒரு பிளானையும் எளிவேஷனையும் அளித்தார். அவர் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் என்பதால் அவரது வடிவமைப்புகள் கேரள பாணியைச் சேர்ந்தவை. வான் நோக்கி சிறகு விரிக்கும் பறவையைப் போன்ற எளிவேஷன் கொண்டது நான் கட்டி விற்பனை செய்த அபார்ட்மெண்ட். ஆனால் அந்த வடிவம் கட்டிடக்கலை அறிந்தவர்களுக்கு மட்டுமே நுட்பமாக புலப்படும். மற்றவர்களுக்கு அழகானது என்ற எண்ணத்தை உண்டாக்கும்.

அபார்ட்மெண்ட் வாங்கியவர்களில் ஒருவர் அமெரிக்காவில் வசிப்பவர். அவர் பிறந்தது வளர்ந்தது அனைத்துமே சென்னையில். அவரது சொந்த ஊர் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள ஒரு கிராமம். அங்கே அவரது குலதெய்வம் கோயில் உள்ளது.  ஆண்டுக்கு ஒருமுறை மனைவி குழந்தையுடன் இங்கே வருவார். சாமி கும்பிடுவார். அப்போது ஒரு வாரம் வரை தங்கியிருந்து பக்கத்தில் உள்ள சிவாலயங்களுக்கும் விஷ்ணு கோவில்களுக்கும் சென்று வருவார். மாதம் ஒரு முறை அவரது பெற்றோர்களும் உறவினர்களும் வந்து தங்கி விட்டுச் செல்வர். அவர்கள் எங்கு சென்றாலும் என்னையும் உடன் அழைத்துச் செல்வார்கள். அவர் சென்னையில் தனது சொந்த இடத்தில் ஒரு அபார்ட்மெண்ட் கட்டி விற்பனை செய்தவர். சென்னையில் தான் கட்டிய அபார்ட்மெண்டை விட இந்த அபார்ட்மெண்ட் சிறப்பாக இருக்கிறது என்று சொல்வார். 

மயிலாடுதுறையின் மிக முக்கியமான தொழில் அதிபர் ஒருவர் அபார்ட்மெண்ட்வாசி. வீடு கட்டுவதின் எந்த சிரமமும் தனக்கு அனுபவமாகாமலே தான் ஒரு சிறந்த இல்லத்தை அடைந்திருப்பதாக எல்லாரிடமும் கூறுவார். 

வீடு பவித்ரமானது. புனிதமானது. அந்த உணர்வு எல்லா மனிதர்களிடமும் இருக்குமாயின் இந்த உலகமும் வாழ்வும் கணந்தோறும் அற்புதமானதாக இருக்கும்.

 

உள்ளுணர்வு

ஊரில் ஒரு கட்டுமானப் பணி நடந்து கொண்டிருந்தது. ஒரு இல்லம். 1000 சதுர அடி கொண்டது. அதன் கிழக்குப்  பக்கத்தில் ஒரு காலிமனை உண்டு. வீட்டுக்கும் காலிமனைக்கும் இடையே ஒரு காம்பவுண்டு சுவர் எழுப்ப வேண்டும். வீட்டில் பூச்சு வேலை நடந்து கொண்டிருந்தது. எல்லா பணியாளர்களும் அந்த பணியில் அதிக எண்ணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். கட்டுமானத்தைப் பார்வையிட எனது தந்தை பணியிடத்துக்கு வந்தார். பணிகளைப் பார்வையிட்டார். 

புறப்படும் போது என்னை அழைத்தார். ‘’பிரபு! பூச்சு வேலை நடக்கற படி நடக்கட்டும். ஈஸ்டர்ன் சைடு காம்பவுண்ட் வால் கிரேடு பீம் கான்கிரீட்டுக்கு ஏற்பாடு செய்’’ . குறிப்பைக் கொடுத்து விட்டு சென்று விட்டார். 

நான் தொழிலாளர்களிடம் சொன்னேன். ‘’சார் ! பூச்சு வேலை முடியட்டும். பாத்துக்கலாம். ‘’ என்றனர். 

இரண்டு நாளாக கட்டிடத்தினுள் பூச்சு வேலையை மட்டுமே செய்து கொண்டிருந்தனர். 

மூன்றாவது நாள் நான் மீண்டும் நினைவுபடுத்தினேன். அதே பதில். 

இன்னும் இரண்டு நாட்கள் ஆனது. முன்னேற்றம் எதுவும் இல்லை. அன்று மாலை ஊதியம் பட்டுவாடா செய்யும் போது ‘’ நாளைக்கு கம்பி ஃபிட்டரை வரச் சொல்லி ஃபோன்ல சொல்லிட்டன். அவங்க அரை நாள்ல கம்பி கட்டி சைடு அடச்சிடுவாங்க. நாளைக்கு மதியம் மூணு மணிக்கு காம்பவுண்டு சுவர் கிரேடு பீம் கான்கிரீட் போட்டுடலாம்’’ என்றேன். எல்லா ஏற்பாடும் எல்லா திட்டமிடலும் செய்து விஷயத்தைச் சொன்னது தொழிலாளர்களுக்கு வியப்பு அளித்தது. ‘’ அப்பா என்கிட்ட தான் சொல்லிட்டு போயிருக்காங்க. செய்யலைன்னா அத என்னோட மிஸ்டேக்கா நினைப்பாங்க. அவங்ககிட்ட காரணம் சொல்லிட்டு இருக்க முடியாது. ‘’ 

மறுநாள் காலை கம்பி ஃபிட்டர் வந்து வேலை செய்தார். மாலை 3 மணிக்கு கான்கிரீட் போடத் துவங்கி 6 மணிக்கு நிறைவு செய்தோம். 

மறுநாள் காலை கட்டிடத்தினுள் நடக்கும் பூச்சு வேலை நடந்தது. 

காலை 11 மணி இருக்கும். வானம் இருட்டத் துவங்கியது. மூன்று மணி நேரம் கனமழை பெய்தது. பக்கத்தில் உள்ள காலிமனையில் ஒரு அடி ஆழத்துக்கு தண்ணீர் தேங்கி நின்றது. 

எல்லாரும் ஆச்சர்யமாகப் பார்த்தோம். முதல் நாள் கான்கிரீட் போட்டிருக்காவிட்டால் அந்த பணியை காலிமனையின் தண்ணீர் முழுமையாக வடிந்த பின் தான் செய்திருக்க முடியும். அது முற்றிலும் வடிய இரண்டு மாதங்கள் ஆகியிருக்கும். இப்போது கிரேடு பீம் எழுப்பி விட்டதால் அதன் மீது காம்பவுண்டு சுவரை மூன்று நாளில் எழுப்பி பூசி விட்டோம். 

தந்தைக்கு அவரது உள்ளுணர்வு வழிகாட்டியிருக்கிறது என்று பேசிக் கொண்டோம். 

துவங்கிய இடம்

கல்லூரிப் படிப்பு முடித்து சில மாதங்கள் நான் சில பயணங்கள் மேற்கொண்டேன். கங்கையைக் காண ஹரித்வார் சென்று வந்தேன். தமிழ்நாட்டில் நான் சென்றிராத சில பகுதிகளுக்குச் சென்று வந்தேன். ஆயிரக்கணக்கான மக்கள் முகங்களை மக்கள் வாழிடங்களைப் பார்த்தவாறே பயணம். முன்பதிவு செய்யாத ரயில் பெட்டியிலோ அல்லது பேருந்திலோ பயணிப்பேன். காலை 6 மணிக்கு வீட்டில் கிளம்பினால் இரவு 9 மணிக்கு வீடு திரும்புவேன். ஊரில் மோட்டார்சைக்கிள் எடுத்துக் கொண்டு அருகில் இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று வருவதும் உண்டு. 

அதன் பின்னர் என் முதல் கட்டுமானப் பணியைச் செய்தேன்.

அதில் எனக்கு நிறைய அனுபவம் கிடைத்தது. தொழிலின் பல நடைமுறை விஷயங்கள் குறித்த புரிதல் உண்டானது.  நாம் எதை அறிந்தாலும் எதை உணர்ந்தாலும் நாம் நம்மைப் பற்றியே அறிகிறோம் ; உணர்கிறோம். 

என்னுடைய இரண்டாம் கட்டுமானப் பணியை நான் பொறியியல் கல்வி பயின்ற ஊரில் மேற்கொண்டேன். அந்த பணியிடம் கல்லூரியை நோக்கிச் செல்லும் சாலையில் அமைந்திருந்ததால் எனக்கு பாடம் எடுத்த பல விரிவுரையாளர்கள் அந்த வழியே செல்வார்கள். அப்போது எங்கள் பணியிடத்துக்கு வந்து வேலை எவ்விதம் நடைபெறுகிறது என்று பார்ப்பார்கள். பணியின் தரம் சிறப்பாக இருக்கிறது என்று அனைவருமே அபிப்ராயம் சொன்னார்கள். அது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. 

கல்லூரியில் எங்கள் பேராசிரியர் ஒருவர் கூறுவார் : The college will teach you to solve ''n'' number of problems but you have to face ''n+1'' number of problems in real life. அதனை அனுபவபூர்வமாக உணர்ந்து கொண்டேன். 


Tuesday, 2 November 2021

ஆரம்பம்

தமிழ் வாழ்க்கையில், கல்லூரியை நிறைவு செய்தல் என்பதை மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்த முதல் நாளிலிருந்தே கற்பனை செய்ய ஆரம்பித்திருப்பார்கள். தனக்கு வெற்றியை மட்டுமே அளித்து வரவேற்க காத்துக் கொண்டிருக்கும் உலகத்துக்கும் தனக்கும் இடையே கல்லூரிக் காலம் ஒரு தடையென இருப்பதாகவே அனைத்து மாணவர்களுக்கும் எண்ணம் இருக்கும். உலகியலின் கடினமான கரங்களை தம் மக்களைத் தீண்டாமல் காத்துக் கொண்டிருக்கும் பெற்றோர் செயலின் விளைவு அந்த எண்ணம். லௌகிக வாழ்க்கையைப் பற்றி என்ன என்று சொல்வது? அவரவர் அந்தந்த காலத்தில் பட்டுத் தெரிந்து கொள்ளட்டும் என பெற்றோர் எண்ணி விடுவர். படிப்பு முடிந்ததும் நல்ல வேலைக்கு நல்ல ஊதியத்துக்குச் சென்று விடலாம் என்பதே அனைத்து மாணாக்கனின் எண்ணமாக இருக்கும். ஒருவருக்கு நல்ல வேலை கிடைப்பதும் நல்ல ஊதியம் கிடைப்பதும் அவரை மட்டுமே அடிப்படையாய்க் கொண்டது அல்ல. அது பெரும்பகுதி வேலை கொடுப்பவரையும்  வேலை கொடுப்பவரின் தேவையையும் அடிப்படையாய்க் கொண்டது . கல்லூரியில் சேர்ந்த தினத்திலிருந்தே நானும் படிப்பை நிறைவு செய்வது குறித்து கற்பனை செய்தேன். இலக்கிய வாசகன் என்பதால் அது மற்றவர்களைக் காட்டிலும் தீவிரமாக இருந்தது. ஆனால் வேலைக்குச் செல்ல வேண்டும் என்று நான் எப்போதும் எண்ணியதில்லை. சுயதொழில் ஒன்றைத் தொடங்கி நடத்த வேண்டும் என விரும்பினேன்.  

படிப்பு நிறைவு பெறும் காலம் வந்தது. 

அதுவரை எனது தந்தையின் எந்த விருப்பத்தையும் நிறைவேற்றுபவனாகவே இருந்திருக்கிறேன். தேர்வு முடிவுகள் வந்தன. முதல் வகுப்பில் தேர்ச்சி. பொறியியல் பட்டத்தை தபாலில் அனுப்ப பணம் கட்டி விட்டு வந்து விட்டேன். 

சில நாட்கள் சென்றன. 

தந்தை என்னிடம் ‘’எம். ஈ அப்ளை பண்ணு’’ என்றார். 

‘’இல்லை ! இனிமேல் நான் மேலே எந்த பட்டமும் படிக்கப் போவதில்லை. சொந்தமாக தொழில் தொடங்கப் போகிறேன்’’ என்றேன். 

முதல் முறையாக தந்தையின் எண்ணத்தை ஆமோதிக்காமல் மாற்றுக்கருத்தை வெளிப்படுத்தினேன். 

இந்த தருணமும் பல வருடமாக மனதுக்குள் நான் ஒத்திகை பார்த்த ஒன்று தான். 

உலகம்

என்னுடைய முதல் கட்டுமானப் பணியின் போது, ஊரில் ஒரு கடையில் சிமெண்ட் வாங்கிக் கொண்டிருந்தேன். அந்த கடையின் உரிமையாளர், நிர்வாகிகள், பணியாளர்கள் அனைவருமே நல்லறிமுகமாகிப் பரிச்சயமானார்கள். ஊரில் எல்லா பொறியாளர்களுக்கும் அந்த கடை தான் சிமெண்ட் சப்ளை செய்து கொண்டிருந்தது.  அவர்களிடம் பெரிய குடோன் இருந்தது. அதில் எப்போதும் 2000 மூட்டை ஸ்டாக் இருக்கும். பொதுவாக எல்லா சிமெண்ட் கடைகளும் அவர்களுக்கு வரும் சிமெண்ட் லோடை கடையில் அன்லோடு செய்யாமல் பார்ட்டியிடம் ஆர்டர் வாங்கிய இடத்தில் இறக்கி விடுவார்கள். அன்லோடு மற்றும் லோடு செலவு மிச்சம். இந்த கடையும் இவ்வாறு செய்வார்கள். ஒருவேளை சிமெண்ட் வண்டி வரத் தாமதமானால் குடோனிலிருந்து அவர்கள் வண்டியில் சிமெண்ட் ஏற்றி சைட்டுக்கு கொண்டு வந்து விடுவார்கள். எனவே ஆர்டர் கொடுத்தால் டெலிவரி சரியாக இருக்கும் என்பதால் எல்லாரும் அந்த கடையை விரும்புவார்கள். ஒரு பணி தொடங்கும் போது , அவர்களிடம் முன்பணமாக ரூ.50,000 எல்லா பொறியாளர்களும் வழங்கி விடுவார்கள். பணி முடிந்ததும் கணக்கு பார்த்துக் கொள்வார்கள். 

எனது தந்தைக்கு இந்த முன்பண விவகாரத்தில் முழு உடன்பாடு இல்லை எனினும் நான் அதனை செய்தேன். 

எங்கள் கட்டுமானப் பணி நிறைவு பெற்றது. என்னுடைய டைரியில் எழுதியிருந்த சிமெண்ட் கணக்கைப் பார்த்தேன். அட்வான்ஸ் ரூ. 50,000. சிமெண்ட் வாங்கியது ரூ. 44750க்கு. சிமெண்ட் கடை எனக்கு ரூ. 5250 பாக்கி தர வேண்டும். அவர்களுக்கு ஃபோன் செய்து கணக்கு பார்க்குமாறு கூறினேன். அவர்கள் பார்ப்பதாகக் கூறினார்கள். மறுநாள் ஃபோன் செய்தேன். ரூ. 5250 மீதம் இருப்பதைச் சொன்னார்கள். அதை சிமெண்ட்டாக வாங்கிக் கொள்கிறீர்களா என்று கேட்டார்கள். அடுத்த பணி துவங்க எனக்கு சில வாரங்கள் ஆகும். எனவே தொகையாகவே பெற்றுக் கொள்கிறேன் என்றேன். அடுத்த வாரம் தொகையைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்றனர். நான் சரி என்றேன். 

அடுத்த வாரம் ஃபோன் செய்தேன். ஓனர் ஊரில் இல்லை; அடுத்த வாரம் என்றனர். நானும் சம்மதித்தேன். 

இது நடந்து ஓரிரு நாளில் அப்பா என்னிடம் சிமெண்ட் பற்றி கேட்டார்கள். நான் விஷயத்தைச் சொன்னேன். ‘’அவர்கள் கடை பொருளாதாரச் சிக்கலில் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். நீ அந்த 5250 ரூபாயை மறந்து விடு’’ என்றார்கள். 

நான் எதுவும் கேள்விப்படாதது போல அந்த கடைக்குச் சென்றேன். 

கடையின் அக்கவுண்டண்ட் , ‘’சார் ! ஓனர் சென்னை போயிருக்கார். நாலு நாள் முன்னாடியே அவரு வந்திருக்கணும். கொஞ்சம் தாமதம் ஆகுது. நீங்க வருத்தப்படாம அடுத்த வாரம் இதே கிழமை வாங்க சார். நாம செட்டில் செஞ்சிருவோம் ‘’ என்றார். 

‘’ஏதாவது பிராப்ளமா?’’ என்றேன். 

‘’அதெல்லாம் ஒன்னுமில்லை சார். நீங்க அடுத்த வாரம் வாங்க’’

ஒரு வாரம் காத்திருந்தேன். பின்னர் அங்கு சென்றேன். 

அங்கே எனக்கு நல்ல பழக்கமாயிருந்த இன்னொரு அக்கவுண்டண்ட் இருந்தார். அவர் என்னை கடைக்கு வெளியே தனியே அழைத்துச் சென்றார். 

‘’சார்! உங்களுக்கு உலகம் தெரியல. கடை பெரிய ஃபினான்ஷியல் கிரிஸிஸ்ல இருக்கு. பேங்க் லோன் கடைக்கு ஹெவியா இருக்கு. ஓனர் கடைக்கு வந்தே ஒரு மாசம் ஆகுது. உங்களுக்கு என்ன பதில் சொல்றதுன்னே தெரியலை’’ என்றார். 

‘’ஓனர் கிட்டே நான் வந்துட்டு போன விஷயத்தைச் சொல்லுங்க. ஃபோன் பண்ணுவாரில்லையா?’’

மறுநாள் கடையிலிருந்து ஃபோன் வந்தது. கடைக்கு வரச் சொல்லி. 

மூத்த அக்கவுண்டண்ட் கடையில் இருந்தார். அவர் ஒரு கவரை என்னிடம் கொடுத்தார். அதில் ரூ. 5250 இருந்தது. 

‘’சார்! ரொம்ப நாளைக்கு அப்புறம் ஓனர் இன்னைக்கு காலைல ஃபோன் செஞ்சார். நீங்க ரெண்டு மூணு தடவை ஃபோன் பண்ணிங்க. வந்துட்டு போனீங்கன்னு சொன்னேன். ஓனர் என்ன நினைச்சாரோ தெரியலை. உங்க கணக்கை செட்டில் பண்ண சொல்லிட்டார். இந்த நாலு மாசத்துல உங்களுக்கு மட்டும் தான் அமௌண்ட் ரிடர்ன் பண்றோம்’’

அப்பாவிடம் தொகையை ஒப்படைத்தேன். 

‘’கேஷ் அண்ட் கேரி மட்டுமே இனிமே வச்சுக்க’’ என்றார் அப்பா. 

மெய்ப்பொருள்

எனது தந்தை மிகவும் கண்டிப்பானவர். கட்டுமானப் பணி நுண்ணிய திட்டமிடலும் நேர்த்தியான செயலாக்கமும் கொண்டிருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார். கட்டுமானப் பணியிடம் மிகவும் தூய்மையாக இருக்க வேண்டும்  என எதிர்பார்ப்பார். அவரது சுட்டிக்காட்டல்களும் எதிர்வினைகளும் கடுமையாக இருக்கும். நீண்ட கால அனுபவம் உள்ளவர் என்பதால் தொழிலில் அவரது உள்ளுணர்வுகள் துல்லியமாக இருக்கும். பணியிடத்தில் அவர் கருத்துக்கு மாற்றுக் கருத்து இருக்காது. அவர் இடும் பணிகளை நாங்கள் செய்வோம். அதில் இரண்டாம் எண்ணமே யாருக்கும் இருக்காது. 

என்னுடைய மனம் படைப்பூக்கம் கொண்டது. கல்லூரி முடித்து ஓராண்டில் தொழிலுக்கு வந்தேன். தந்தையாயினும், நெடிய அனுபவம் கொண்ட கண்டிப்பான ஒருவரின் கீழ் பணி புரிய நேர்ந்தது. ‘’சென்சிடிவ்’’ ஆன இயல்பு என்னுடையது. கட்டுமானப் பணியின் ‘’செய் - செய்யாதே’’ விதிகள் இறுக்கமானவை. அவை சிறு அளவில் கூட நெகிழ்வதில்லை; மாறுவதில்லை. 

எனது தந்தைக்கு வாரத்தின் ஏழு நாட்களும் கட்டுமானப் பணி நடைபெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உண்டு. இது சற்று கடுமையானது போல் தோன்றும். ஆனால் இது கடுமையானது அல்ல. ஏனென்றால், கட்டுமானம் அலுவலக வேலை அல்ல. ஒரு கட்டுமானப் பணியின் கால அளவு 6 மாத காலம் எனில் அதில் கொத்து வேலை 60 நாட்கள் இருக்கும். கம்பி வேலை 40 நாட்கள் இருக்கும். தச்சு வேலை 30 நாட்கள். மின் பணிகள் 25 நாட்கள். ஒரு பணி நடக்கும் போதே மற்ற பணிகள் வேறு இடத்தில் நடத்தலாம். உதாரணத்துக்கு கொத்து வேலை நடக்கும் போது தச்சு வேலை பட்டறையில் நடைபெற்று உருப்படிகள் தயாராகிக் கொண்டிருக்கும். இவ்வாறு இருக்கையில் ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் பணிக்கு ஓய்வு தருவது என்பது 60 நாள் பணிக்காலத்தை 70 நாளாக்குவதற்கு சமம். துவங்கிய கணத்திலிருந்து கட்டுமானப் பணி இடைவெளி இல்லாமல் நதி போல முன்னே சென்று கொண்டிருக்க வேண்டும் என எனது தந்தை எதிர்பார்ப்பார். ’’வெள்ளை காலர்’’ பணிகளின் நியதிகளை கட்டுமானத்துக்குப் பொருத்திக் கொள்ள தேவையில்லை என்பது அவரது அபிப்ராயம். 

அவர் எந்த விஷயத்தையும் குறிப்புகளாக மட்டுமே சொல்வார். விரிவாக விளக்க மாட்டார். இளைஞனான எனக்கு அது புதியது. இளமைக்குரிய ததும்பலுடன் ஏதேனும் யோசனைகள் சொல்வேன். நான் பணியில் சேர்ந்த மூன்றாவது நாள் என்னை அழைத்தார். என்னிடம் ஒரு விஷயம் சொன்னார் : ‘’நான் உன்னிடம் என்ன சொல்கிறேனோ அதை மட்டும் செய்’’. அப்பா தமிழில்தான் சொன்னார். ஆங்கிலத்தில் ‘’Do What I Say'' என்பார்கள். நான் தேசிய மாணவர் படையில் இருந்தவன். அதன் முதல் கட்டளை , ‘’Obey with Smile'' என்பது. நான் அதனை முழுமையாக ஏற்றுக் கொண்டு விட்டேன். 

பணியிடத்துக்கு செங்கற்கள் வந்து இறங்கும். செங்கற்களை அடுக்கும் முறையை ‘’கட்டு ஆயம்’’ என்பார்கள். கிடைமட்டமாக 50 அல்லது 40 கற்களை பரப்புவார்கள். செங்குத்தாக 20 அல்லது 25 வரிசை செல்லும். செங்குத்து எண்ணிக்கையும் கிடைமட்ட எண்ணிக்கையும் சரியாக இருக்கிறதா என சரிபார்க்க வேண்டும். ஒரு வரிசை குறைந்தால் கூட 50 கற்கள் குறைந்துள்ளது எனப் பொருள். அதன் பொருள் மதிப்பு அதிகம். அத்துடன் பணியிடம் கவனமின்மையுடன் இருக்கிறது என்றாகி விடும். எனது தந்தைக்கு ‘’பார்வை உணர் திறன்’’ ( Visual Memory)  அதிகம். சற்று தொலைவில் இருந்து பார்த்தே ‘’கட்டு ஆய’’ த்தின் செங்குத்து எண்ணிக்கையைக் கூறி விடுவார். என்னாலும் பணியாளர்களாலும் எண்ணிப் பார்த்தே சொல்ல முடியும். செங்கல் வரும் போதெல்லாம் எண்ண வேண்டும். அடிக்கடி செய்ய வேண்டிய வேலை. இருந்தாலும் ஒன்று , இரண்டு , மூன்று என முதல் வகுப்பு குழந்தைகள் பாடம் படிப்பது போல எண்ண வேண்டிய வேலை. ஒரு வரிசையை விட்டு விட்டோம் என்றால் 20 என்பதை 19 ஆகக் காட்டும். அப்போது மீண்டும் எண்ண வேண்டும். எண்ணியதையே மீண்டும் எண்ணினால் எங்கோ எண்ணிக்கையில் தவறியிருக்கிறோம் என்பது பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்குத் தெரியும். 

ஒருமுறை பணியிடத்துக்கு மிக அதிக எண்ணிக்கையில் செங்கல் வந்து இறங்கியது. எனது தந்தை அவற்றைப் பார்த்து விட்டு, 18,000 செங்கல் வந்துள்ளது என்றார். வழக்கம் போல், நான் சரிபார்க்கத் தொடங்கினேன். ஒரு சாக்பீஸ் எடுத்துக் கொண்டு ஒவ்வொறு ‘கட்டு ஆய’’மாக எண்ணினேன். 16,000 என எண்ணிக்கையைக் காட்டியது. எனினும் தந்தை கணக்கிட்டு சொன்ன எண்ணிக்கை. அது சரியாகத்தான் இருக்கும். இப்போது நாம் போய் 16,000 என சொல்லி மீண்டும் அவர் முன்னிலையில் எண்ணி 18,000 வந்தால் ஒன்று , இரண்டு கூட சரியாக எண்ணத் தெரியவில்லை என்றாகி விடும். என்ன செய்யலாம் என்று யோசித்தேன். மீண்டும் ஒருமுறை எண்ணினேன். 16,000 எண்ணிக்கை தான் வந்தது. எனது தந்தையிடம் சென்றேன். ‘’செங்கல் 18,000 இல்லை. 16,000 தான் வந்திருக்கிறது’’ என்றேன். ‘’நான் வெரிஃபை செஞ்சனே’’ என்றார். நான் மீண்டும் ஒருமுறை எண்ணச் சென்றேன். எனது தந்தை ‘’பிரபு’’ என அழைத்தார். நான் திரும்பிப் பார்த்தேன். ‘’அதில் 16,000 கல் தான் இருக்கிறது’’ என்றார். 

அன்று மாலை என்னை அழைத்தார். ‘’பிரபு! இந்த ஃபீல்டு வித்யாசமானது. பல பேரு நம்ம முன்னாடி ரொம்ப பொலைட்டா நாம சொல்ற எல்லாத்தையும் ஏத்துக்கிட்டதா காட்டிப்பாங்க. இங்க ‘’உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுபவர்கள் தான்’’ அதிகம். நம்மளை ரொம்ப பிளீஸ் பண்ணி பேசுவாங்க. அது எதையும் நாம உண்மைன்னு நம்பக் கூடாது. ஒரு ஆள் அவனோட வேலைய எந்த அளவு புரிஞ்சிக்கிட்டு இருக்கான் ; எவ்வளவு சரியா செய்யறான்; நம்ம முன்னாடியும் நாம இல்லாதப்பவும் ஒரே மாதிரி நடந்துக்கிறானா எவ்வளவு உண்மையா இருக்கான் என்பது தான் அளவுகோல். 
நாம சொல்ற எல்லாத்தையும் எந்த அனலைஸும் இல்லாம ஒரு ஆள் ஆமோதிக்கிறான்னா அவன் அதை ஒரு மெக்கானிக்கல் ஹேபிட்டா வச்சுருக்கான்னு அர்த்தம். அது ரொம்ப டேஞ்சரஸ். ‘’என்றார். 

நான் அவர் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். 

‘’காலைல உனக்கு நான் வச்சது ஒரு டெஸ்ட். நீ முதல் தடவை எண்ணிப் பாத்தப்பவே உனக்கு 16,000 கல்லுன்னு தெரிஞ்சிருச்சு. இருந்தும் நான் 18,000ம்னு சொன்னேன்னு நீ திரும்ப ஒரு தடவை எண்ணுன. நான் சொன்னா ரொம்ப சரியா இருக்கும்னு தெரிஞ்சும் நீ 16,000 கல் தான்னு வந்து சொன்ன. 18,000 த்தை நான் வெரிஃபை செஞ்சுட்டன்னு சொல்லியும் நீ நான் சொல்றன்ங்கறதுக்காக ஏத்துக்காம திரும்ப ஒரு தடவை எண்ணப் போன. நீ நம்புற விஷயத்தை நான் சொல்லியும் விட்டுக் கொடுக்கல. கன்ஸ்ட்ரக்‌ஷன் ஒர்க்ல ஒருத்தரோட இயல்பு என்னங்கறது இந்த மாதிரி ஒரு டெஸ்ட்லயே தெரிஞ்சிரும்.’’

இந்த நிகழ்ச்சி எனக்கு பல விஷயங்களைப் புரிய வைத்தது.