Saturday, 30 June 2018

மழை மேகம்

மீண்டும் மீண்டும்
மீண்டு
வருகையில்
உன் நம்பிக்கைகள்
சலிப்பின்
ஒரு துளி இன்றி
அமைதிப்படுத்துகின்றன
குருதியும்
மறுபக்கம் கண்ணீரும்
நிறைந்து வழியும்
அகத்தில்
உன் இருப்பு
சொல்லெடுக்காமல்
மௌனம்
கொள்கிறது
ஒவ்வொரு முறையும்
மலர்களைத் தவற விடும்
கரத்தில்
எப்படியோ
வந்து சேர்கிறது
கொலைவாள்
முடிவில்லாமல்
ஓடிக் கொண்டேயிருக்கிறேன்
அகம்
அடங்கா வஞ்சத்துடன்
கை நழுவிப் போன
வாளை
தேடிக் கொண்டிருந்த போது
உன் சிரிப்பின்
ஒளி
மின்னியது
பின்னர்
இடியோசையாய்க்
கேட்டது

Friday, 29 June 2018

சாரல்

சில்லென்றிருக்கும்
வனாந்தரத்தில்
உன் வழித்தடத்தில்
மலர்ந்துள்ள
மலர்கள்
நீ நடக்கும் முன்
மலர்ந்தவையா
நடக்கையில்
மலர்ந்தவையா

துளிர்

ஆசுவாசப்படுத்துகிறது
இரவின் மைதானம்
மனம் ஓய்ந்து
சிரமபரிகாரம்
செய்து கொள்கின்றனர்
தற்காலிக ஓய்வில்
தனித்திருக்கின்றனர்
கைவிடப்பட்டவர்கள்
துக்கம் கொண்டவர்கள்
ஒரு சவால்
ஒரு நம்பிக்கை
ஓர் அழைப்பு
துளிர்க்கிறது
நுட்பமான
மிக நுட்பமான
இருட்
கணம்
ஒன்றில்

விழி

குறைந்த ஒளி
மிகக் குறைந்த ஒளி
மெல்ல கேட்கிறது
ஆற்றின் ஓசை
மகிழ்வின் ததும்பலாய்
கொஞ்சும் பிரியமாய்
யுகம் யுகமாய்
பழகிய புள்
முதல் ஒலி எழுப்புகிறது
ஓர் அழைப்பாக
உயிர்களை நோக்கி
பதில் குரல் தருகின்றன
விழித்துக் கொண்ட பறவைகள்
அமைதியை தியானித்திருந்த
வெண்கல மணி
சப்தத்தைத்
தியானிக்கிறது
சுடரும் மலரும் கண்டு
விழித்தெழுகிறது
பிரும்மாண்டம்
ஒலிரும் உடுக்கையில்
ஒடுங்குகின்றன
ஜடங்கள்
உயிர் இனங்கள்

Thursday, 28 June 2018

நீறு

ஓயாமல் எழுகிறது சிற்றலை
மகா நதியில்
கரை நோக்கி
ஓடக்காரன் பாடல் கேட்கிறது
எப்போதுமான காலத்தில்
பயணி அமர்ந்திருக்கிறான்
காலப்பெருக்கில்
அலையும் ஓடத்தில்
மயானக் கரையின் புகை
மேலே சென்று கொண்டிருக்கிறது
நெளிந்த மனம்
விடுபடும் கணத்தில்
எஞ்சியிருக்கிறது
தணல் உதிர்த்த சாம்பல்
பூசகன் அள்ளிச் செல்லும்
கலத்தில்
சிரிக்கிறது
அறிதலின் மகரந்தம்

Tuesday, 26 June 2018

உன் புன்னகையில்
எவ்வளவு தொலைதூரங்கள் இருக்கின்றன?
உன் பறக்கும் கூந்தலின்
எதிர்பாராமை
சாத்தியத்தின் எத்தனை கூறுகளைக்
கொண்டிருக்கிறது?
மெல்லிய மென்சோகம் கொண்ட
உன் முகம்
எத்தனை யுகங்களாய்
அதனை சூடிக் கொண்டிருக்கிறது?
உன் சிவந்த உள்ளங்கைகளின்
மலர்கள்
மகரந்தத்தைத் தூவிக் கொண்டிருக்கின்றன
நிலமெங்கும்
உனது ஒவ்வொரு மூச்சிலும்
நிகழ்கின்றன
ஆயிரம்
ஆயிரம்
ஜீவ மரணங்கள்

Monday, 25 June 2018

அவதானம்

பள்ளி விட்டு வந்த
மர்ஃபி
என்னிடம் கேட்டான்:
‘’கெட்டவங்கல்லாம்
சினிமா தியேட்டர்
ஸ்கிரீன்லதான
இருப்பாங்க’’

நான் யோசித்துப் பார்த்தேன்

Friday, 22 June 2018

வாரத்தின் இரு நாட்கள்
கரி எண்ணெய் பிசுபிசுப்பு போக
புளியால் அழுத்தி தேய்க்கப்பட்டு
நீரில் கழுவப்படும்
மங்கி இருக்கும்
பித்தளை விளக்கின்
செந்நிற தீச்சுடர்
போல
இருக்கிறோம்
நீயும் நானும்

Wednesday, 20 June 2018

பாலை மலர்

ஒரு சிறு சிற்பம் போல
அத்தனை வசீகரமாக
அவ்வளவு ஆர்வமூட்டுவதாக
ஏந்திக் கொண்டிருப்பது தத்தளிக்கச் செய்வதாக
உணர்ந்திருக்கிறேன்
உன்னைப் பற்றி
உன்னுடன் இருக்கும் பொழுதுகளில்

பனி நாட்களின் 
ஆற்று நீர் போல
குளிர்ந்தும் சுட்டும்
கோடையின் ஆறென
சுட்டும் குளிர்ந்தும்
இருந்திருக்கின்றன
உனது
தற்செயலான தீண்டல்கள்

சிட்டுக்குருவியின் துள்ளல்களை
புறாக்களின் சிறகடிப்புகளைக்
கண்டிருக்கிறேன்
உற்சாகமாய்
நீ
சித்தரிக்கும் தருணங்களில்

மென் காற்றாக
ஒரு விருட்சத்தின் நிழலாக
விடாய் தீர்க்கும்
ஒரு டம்ளர்
பானை நீராக
நீ
அனுபவமாகிறாய்

என் அகப் பாலையில்
பூத்து நிற்கும்
தாலப்பனையாகவும்

Tuesday, 19 June 2018

இன்று காலை நடை




இன்று காலை நடையில்
நிகழ்ந்த
சந்திப்புகள்
பல

கட்டப்பட்ட மூட்டையில்
எட்டிப்பார்க்கும்
ஒரு கீரைக் கட்டு
சைக்கிளில்
சென்று கொண்டிருந்தது
அவசரமாகத் தாண்டி
எதிர்பாராமல்
புன்னகைத்தது

அரசடி மதகில்
ஓடிய நீர்
முகமன் சொன்னது
ஆரவாரக் குரல் எழுப்பி

மேலவீதி விநாயகர்
கண்விழித்திருந்தார்
திருமஞ்சனத்துக்கு
தயாராகிக் கொண்டு

அரவம் கேட்டு
சிறகடித்துப் பறந்து
சுழன்று
அமர்ந்தன
மாடப் புறாக்கள்
கோபுர சிற்பங்களில்

வழக்கம் போல்
சூரியன்
மைதானத்தில் உருளும்
கால்பந்து