Thursday, 31 January 2019

மற்றுமோர்

ஓர் அற்புதம்
உணரப்படும்போது
நாம்
அதுவாகவே
ஆகிறோம்
என்பது
அதன்
மற்றுமோர்
அற்புதம்

தூய பூமி

நீ அறிந்திருக்க மாட்டாய்

நேரடியான அல்லது மெல்லிய நுட்பமான
வன்முறைகளை
ஓயாமல் பெருகும் குரோதங்களை
ஊற்றெடுக்கும் வற்றாத கண்ணீரை
சினத்தின் வெம்மைகளை
அச்சத்தின் கவசங்களை
துயரத்தின் பெருங்குரல் அரற்றல்களை
அபயம் கிடைக்குமா என பரிதவிக்கும் நெஞ்சங்களை
தாகம் கொண்ட ஜீவிதங்களை

பாதம் நோக்கும்
உன் உள்ளங்கையிலிருந்து
அன்பின் ஜீவநதிகள் பாய்கின்றன
அவற்றில்
மூழ்கி மூழ்கி
மேலெழுந்து
பறக்கின்றன
வானகப் புள்ளினங்கள்
அது கண்டு
கை கொட்டி
பரவசமாய்
உற்சாகமாய்
சிரிக்கின்றனர்
மழலைச் சிறுவர்கள்
அவர்கள் மகிழும் போதெல்லாம்
பிறக்கிறது
ஒரு தூய பூமி

உன்னைப் பற்றிய வரிகள்

நாம் சந்திப்பதற்கு முன்பே
உன்னைப் பற்றிய வரிகளை எழுதிவிட்டேன்
அவை அனாதி காலமாக எழுதப்படுகின்றன
நீல வானில்
வெண் மேகங்களில்
முழு நிலவில்
கூழாங்கற்களின் மேல் ஓடும் நதியில்
உன்னைப் பற்றிய சொற்கள் உருக்கொண்டன
மண்ணில் நிகழும் மகத்தான அனைத்தும்
சித்தரிக்கப்பட்ட போது
அவை உன் சாயலுடனிருந்தன
விசும்பு நோக்கி
மனித விழிகள் எழும் தோறும்
உன்னைப் பற்றிய வரிகளில்
புதிதாய் சில வார்த்தைகள் சேர்ந்து கொண்டிருந்தன
உன்னைப் பற்றிய வரிகள்
விதையாகின்றன
மலராகின்றன
உயிர்த் தீயாய் எழுகின்றன

Wednesday, 30 January 2019

தெரிவு

இன்று காலை நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். மிக இளைஞர். நான் ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்த வேண்டும் என எப்போதும் பரிந்துரைப்பவர். நான் அலைபேசிப் பயன்பாட்டை நிறுத்தி விட்டு தரைவழித் தொடர்பு தொலைபேசியைப் பயன்படுத்தினால் என்ன என்று சில நாட்களாக யோசித்து வருகிறேன். எனது தொழில் சார்ந்த பணிகள் ஊருக்குள்ளேயே பெரும்பாலும் அடங்கி விடும். தொழில் நிமித்தம் வெளியூர் செல்வதன் தேவை பெரும்பாலும் இல்லை. சட்டை பாக்கெட், பேண்ட் பாக்கெட் இரண்டுமே அலைபேசியை வைத்துக் கொள்ள வசதியாக இல்லை. எங்காவது வெளியூர் சென்றால் சார்ஜர் மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது. கூடிய விரைவில் அதனைத் துறப்பேன் அல்லது வெளியில் எடுத்துச் செல்லாமல் தவிர்ப்பேன் என்றே நினைக்கிறேன்.
யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன் - என்பது பேராசானின் வாக்கு.

அவரிடம் கூறினேன்: மின்னணுப் பொருட்களிலிருந்து தள்ளி இருக்க எப்போதும் விரும்பியிருந்தாலும் மின்னஞ்சலை கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாகப் பயன்படுத்துகிறேன். அப்போதெல்லாம் தமிழில் மின்னஞ்சல் அனுப்புவது என்பது இயலாத காரியம். கணிணி எல்லார் கையிலும் இருக்காது. பதினைந்து நாட்களுக்கு ஒருமுறையாவது மின்னஞ்சல் பார்க்கும் வழக்கம் இருந்தது. வெளிநாட்டில் இருக்கும் நண்பர்கள் மின்னஞ்சலைக் கண்டு மகிழ்வர். பதில் அனுப்புவார்கள். பத்து ஆண்டுகளுக்கு முன்னால் மடிக்கணிணி வாங்கி பயன்படுத்தத் துவங்கினேன்.

நான்கு ஆண்டுகளாக மடிக்கணிணியில் எழுதுகிறேன். எழுதுவதும் இலக்கியத் தளங்களைப் பார்ப்பது மட்டுமே மடிக்கணிணியில் செய்கிறேன்; அல்லது அது மட்டுமே செய்யத் தெரியும். ஒரு முறை நண்பர் ஒருவரிடம் ‘’கட் காப்பி பேஸ்ட்’’ பயன்படுத்துவது எப்படி என்று கேட்டுத் தெரிந்து கொண்டேன். வேர்டில் எழுதி இணையத்தில் ‘’கட் காப்பி பேஸ்ட்’’ செய்ய அது வசதியாக இருந்தது.

என்னினும் இளையோர்களைச் சந்திக்கும் போது அவர்கள் நான் தமிழில் அனுப்பும் மின்னஞ்சல்கள் குறித்து கேட்பார்கள். எப்படி தமிழில் எழுதுகிறீர்கள் என சொல்லித் தாருங்கள் என்று சொல்வார்கள். நான் சொல்லித் தருவேன்.

நாம் எதை முக்கியமாக நினைக்கிறோமோ அதைச் சென்றடைகிறோம். நாம் எதை முக்கியமாக நினைக்கிறோம் என்பதை நாம் தான் தெரிவு செய்கிறோம். 
என் கவசங்கள் கனக்கின்றன
நழுவி வீழ்கின்றன
கரங்கள் ஏந்தியிருக்கும் படைக்கலன்கள்
பாதங்களில் படியும் இரத்தச் சேறுடன்
நிலத்தில் நடக்கிறேன்
எக் கோணத்திலும் அன்னியமாய் பூங்காவின்
நீர்ச்சுனையில்
மூழ்கி எழுகிறேன்
கிளையிலிருந்து மண்ணுக்குப் பறக்கும்
மரமல்லிகளைக் கடந்து
புல்வெளியில் அமர்ந்திருக்கும்
உன் முன் வரும் நேரம்
தொலைவில் அதிரும் மணி
ஓசையாய் நிறைகிறது
எங்கும்
ரசவாதப் பொழுதுகளை அளக்கும்
கால அகாலங்களின்
கடிகார முட்கள்
சம்மட்டி அடி போல்
திக் திக் கென்று
இறுக்கமாக
விழும்
எந்த உலோகத்தால்
ஆக்கப்பட்டுள்ளன?

Tuesday, 29 January 2019

மர்ஃபியின் பரிசுகள்

மர்ஃபி பரிசுகளை விரும்புகிறான்
அவன் கைகளில் அது வந்து சேர்வது வரை
பள்ளியில்
நடைபெறும் நிகழ்வுகளின் தொடர்
அவனுக்குப் புதிராக இருக்கிறது
அவனுக்கு மர்மமாக இருக்கிறது
அவனுக்கு சுவாரசியமாக இருக்கிறது
சில பரிசுகள் கைக்கு வராமல் இருப்பதிலும்
புதிரும் மர்மமும் இருப்பது
அவனுக்கு மேலும் சுவாரசியம் தருகிறது
வீட்டின் ஒவ்வொருவரிடமும் சென்று
கண்களை மூடச் சொல்லி
தான் பெற்ற பரிசை
அவர்கள் கைகளில் அளிக்கிறான்
அவர்கள் கொள்ளும் மகிழ்ச்சியில்
கூடுதல் மகிழ்ச்சி அடைகிறான்
நான் அவனிடம்
நீ
இனிமையை
உற்சாகத்தை
எப்போதும் பரிசளிப்பவன்
என்றேன்
அவன் புரியாமல் யோசித்தான்
இந்த தருணம்
பித்தேறிய கடவுளின்
ஒரு கண்ணீர்த்துளி
அவன்
சூடும் நிலவின்
ஒரு துண்டு வெளிச்சம்
அவன் முன் நிற்கும்
காளையின்
யுகாந்திரக் காத்திருப்பு
அவனுக்குப் பிரியமானவளின் சிறு புன்னகை

Monday, 28 January 2019

அன்பின் வழியது

தும்பிகளெனப் பறக்கும்
உனது நினைவுகள்
மனதின் மலைப் பாறைகளை
உருகச் செய்து கொண்டிருந்தன

துயரத்தின் பாலை நிலங்களிலிருந்து
எழும் ஓயா அரற்றல்களை
ஆசுவாசப்படுத்தியது
உனது கருணை மேகங்கள்
பொழியும் மழை

முடிவிலி வரை நீளும்
கடலின் நுனியில்
ஒளிர்கிறது
உனது இருப்பின் புன்னகை

சிறு நுரையில்
தன்னை
உன் பாதத்தில் விட்டு விட்டு
பின்னால்
செல்கிறது
அலைகள் ஓயாப் பெருங்கடல்
உன்னிடம் சொல்வதற்கு
சில காட்சிகள் இருந்தன
கண்ணீர் இருந்தது
வடிவப்படுத்த இயலாத சில மகிழ்ச்சிகள் இருந்தன
உள்ளங்கைகளால் முகம் பொத்தி
சில மூச்சுகளின் ஆசுவாசத்துக்குப் பின்
கூறும்
துயர்களின் சிறு நிரல் ஒன்று இருந்தது
பிரியங்களின் பல ஆசிகள் இருந்தன
குறுந்திரையில்
அக்கணம் மலர்ந்து
மாரியாய்ப் பொழியும்
டிஜிட்டல் மலர்கள்
சொல்லும்
உணர்வுகளும்
தோன்றி மாயமாகின்றன
உன் முன்னால்
நீ புரியாமல்
வேறு என்ன என்கிறாய்
புதிதாய்ப் பிறந்திருக்கும்
அவ்வப்போது விழி திறக்கும்
கைக்குழந்தையைத்
தொட்டுப் பார்ப்பதைப் போல்
அணுகத் தொடங்குகிறேன்
எப்போதும்
எனைச் சூழ்ந்திருக்கும்
வாழ்வை