Sunday, 30 June 2019

புத்தகமும் கையும்

கைகளுக்கு அழகு எது? ஓர் இலக்கிய வாசகன் புத்தகத்தை ஏந்தி வாசித்திருத்தல் என்றே சொல்லுவான். வாசிப்புப் பழக்கம் உள்ளவர்கள் ஒரு புத்தகத்தை ஏந்துவதற்கும் மற்றவர்கள் ஏந்துவதற்குமே வித்யாசம் உண்டு. வாசிப்பில் ஆர்வம் உள்ளவனுக்கு புத்தகம் வசப்படுகிறது. அதன் மூலம் அவனுக்கு வாழ்க்கையே வசப்படுகிறது. நான் சிறுவயதில் எப்போதும் புத்தகமும் கையுமாகவே இருப்பேன். பெரிய நூலகங்களைப் பற்றி வாசிக்கும் போது இந்த உலகின் எல்லா புத்தகங்களையும் வாசித்து விட முடியுமா என்று தோன்றும். உலகின் எல்லா புத்தகங்களையும் எவராலும் வாசித்திட முடியாது. ஆனால் நமக்கு ஆர்வம் இருக்கும் துறைகளின் முக்கியமான புத்தகங்களை வாசித்திட முடியும். புத்தகம் மூலம் ஆசான்கள் நம்முடன் உரையாடுகின்றனர். விவாதிக்கின்றனர். வழிகாட்டுகின்றனர். அது எவ்வளவு பெரிய பேறு! இன்னும் வாசிக்க வேண்டிய புத்தகங்கள் குறித்த ஏக்கம் எனக்கு இப்போதும் இருக்கிறது. மடிக்கணினியில் எழுதினாலும் இப்போதும் அச்சுப் புத்தகங்களையே அதிகம் வாசிக்கிறேன். சமீபத்தில் கிண்டில் பாதி. புத்தகம் பாதி. 

Saturday, 29 June 2019

நீர்த்தேசம்
சென்று திரும்பும்
நாடோடிகள்
பார்வையில்
நிற்கிறது
கலங்கரை விளக்கம்
நீருக்கும்
நிலத்துக்கும்
வானுக்கும்
நடுவே

Friday, 28 June 2019

சரணம்

கானகச் சாலையில் நடந்து கொண்டிருந்தேன்
ஒடித்த சிறுகிளைகளை தூக்கி எறிந்து விளையாடிய
ஆனைக்கூட்டம்
என் துயரங்களை கிளையுடன் சேர்த்து பந்தாடியது
சட்டெனக் கடந்த கீரியொன்று
ஒரு கணம் நோக்கி
ஒரு அவசரவேலை என்றபடி
கடக்கையில்
யார் இவன்
என
நினைவின் அடுக்குகளில்
துழாவியது
எனது அடையாளங்களை
உகிர்களால் கொத்தின
வான் பறந்த பறவைகள்
அருவி நீரில்
குளிர்ந்து கிடக்கும்
அசையாப் பாறையிடம்
சரணடைந்தேன்
மலைச்சரிவில் கண்ட
அஸ்தமன சூரியன்
ஒளியாய் நிரம்பிய
அகத்துடன்

Thursday, 27 June 2019

எதிர்பார்த்திருந்த மழை
ஒரு மாலை அந்தியில் பெய்யும் போது
நாம் பலவற்றைத் தொகுத்துக் கொள்கிறோம்
நம்பிக்கையளிப்பதாகவே எதிர்காலம் இருக்கிறது
இன்னும் கேட்காத மன்னிப்புகளை
கேட்பதற்கான சொற்களைத் தேர்ந்து கொள்கிறோம்
பிரியங்களின் வகைவகையான மலர் மணங்கள்
சூழ்ந்து கொள்கின்றன
ஈரக் காற்றெங்கும் மிதக்கிறது இருப்பின் இனிமை
வெம்மையைக் குளிரச் செய்யும் அன்பின் ரசவாதம்
மழை கற்றது எப்படி
விரல் கோர்த்து நிகழும் நெசவின் மாபெரும் நெசவாளன் யார்

Wednesday, 26 June 2019

அந்தரப் பயணம்

மழை பெய்யும் இந்த இரவில்
உன்னை நினைத்துக் கொள்கிறேன்
மழையின் காலடிகள் சீராக நடக்கின்றன மண்ணில்
இந்த கணம்
மண்ணின் தவத்திற்கு கனிந்த
மலரென
நீ
உறங்கிக் கொண்டிருப்பாய்
நான் மழையுடன் பயணிக்கிறேன்
அந்தரத்தின்
முடிவிலா மர்மங்களை நோக்கி

Tuesday, 25 June 2019

அசையும் தீச்சுடர்

உச்சி சூரியனை மறைக்கும்
கன்னங்கருமேகமென
அடர்ந்திருக்கும் கூந்தல்
படிந்திருக்கிறது
சொல் கேட்கும்
சாதுவான பிள்ளையென
மாசற்ற உன் முகம்
அவ்வப்போது
மலராகிறது
நீ புன்னகைக்கும் போதெல்லாம்
மெல்ல உயர்ந்து அமரும்
உன் மென் தோள்கள்
அடையாளப்படுத்துகின்றன
மூச்சின் தியானத்தை
காற்றில் அசையும்
தீபத்தின் முன் நிற்பது போல்
அசைந்து உரையாடும்
உன் முன் நிற்கிறேன்

Monday, 24 June 2019

நடுநிசி மழை

நகரம் மழையை எதிர்பார்க்கிறது
நண்பகலில்
உனது அறையின் வெம்மையைத் தாண்டி
வாசலுக்கு வந்ததும்
தன்னிச்சையாக
வானத்தைப் பார்க்கிறாய்
அசையும் மர இலைகளுக்கு
அப்பால் தெரியும் வானம்
மேகங்களின்றி பளிச்சென்றிருக்கிறது
அனல்காற்று வீசும்
பரபரப்பான சாலையை
மெல்ல கடக்கிறது
உனது வாகனம்
ஏன் அனல் ஏறிக் கொண்டே போகிறது
என்ற
மெல்லிய அச்சம் சூழ்கிறது
உன்னை
சட்டென நிகழ்ந்து விடும்
பல விஷயங்களின்
தாறுமாறான இயல்பால்
திகைக்கிறாய்
எப்போதோ
உள்ளங்கைகளில்
முகம் பொத்திக் கொள்கிறாய்
துயர் மிகும் பொழுதைக்
கடந்து உறங்குகையில்
நடுநிசியில்
உணரும் குளுமையால்
எழுந்து
சாளரங்களின் வழியே
பார்க்கிறாய்
எல்லாரும் உறங்கும் நகரில்
நீ
மட்டும் பெருமூச்சுடன் பார்த்திருக்க
பெய்து கொண்டிருக்கிறது
மழை

Sunday, 23 June 2019

இன்னொரு நிலவு

குன்றுகள் சூழ்ந்த சிறு நகரில்
கொன்றை மலர்கள் கொட்டிக் கிடக்கும்
மேகங்கள் கருப்பாய் நகராமல் நிற்கும்
அந்தி மாலையில்
சிந்தும் லேசான தூறலுக்கு
உன் கை விரல்களால்
முகம் மறைக்கையில்
நிறைவை நோக்கி நகரும்
இன்னொரு
நிறையா நிலவாய்
சாலையில்
நீ
நடந்து கொண்டிருக்கிறாய்

Saturday, 22 June 2019

அன்பு

என் நினைவுகளை உதிர்க்கிறேன்
என் அடையாளங்களை உதிர்க்கிறேன்
எல்லையற்ற கடல் மேல்
நின்றிருக்கும்
உன்னை நோக்கி
வந்து கொண்டிருக்கிறேன்

Friday, 21 June 2019

ஒன்றுதல்

யோகா இந்தியா உலகுக்கு அளித்த கொடை. ஆன்மீகப் பாதையில் செல்பவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த யோகா இப்போது அனைவருக்கும் கிடைக்கக் கூடிய வகையில் உள்ளது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கூட இந்தியர்கள் செய்யக்கூடிய உடல் சார்ந்த வேலைகள் அதிகம். மாணவர்களும் மாணவிகளும் பள்ளிக்கு நடந்து செல்வார்கள். குடும்பப் பெண்கள் எந்திரங்களின் துணையின்றி வீட்டு வேலைகளைச் செய்வார்கள். இன்று அனைவருக்கும் எந்திரங்களின் துணையால் உடல் சார்ந்த பணிகள் குறைந்து விட்டன. உடலின் ஆற்றல் செலவு செய்யப்படாமல் இருப்பது உடலின் சமநிலையைப் பாதித்து உடல் மற்றும் மன நோய்மைக்கு இட்டுச் செல்லும். இன்று ஒவ்வொருவருக்கும் யோகா வந்து சேர்ந்திருக்கிறது. ஆரோக்கிய வாழ்வின் ஒரு பகுதியாக யோகாவைக் கொண்டால் கூட, அது அளிக்கும் பயன் அளப்பரியது. பெண்களுக்கும் குறிப்பாக வேலைக்குச் செல்லும் பெண்களுக்கும் யோகா அளிக்கும் பலன் அற்புதமானது. தமிழ்ச் சூழலில், வேலைக்குச் செல்லும் பெண் காலை உணவையும் மதிய உணவையும் சேர்த்து சமைத்து விட்டு காலை உணவு உண்டு மதிய உணவை எடுத்துக் கொண்டு அலுவலகத்துக்கு காலை எட்டு மணிக்குப் புறப்பட்டால் வீடு திரும்ப இரவு எட்டு மணியாகிறது. வீட்டுக்கு வந்து இரவு உணவை அவர்களே தயாரிக்க வேண்டும் என்ற நிலை. வாழ்நாளின் பெரும்பகுதி இந்த காரியத்தைச் செய்வது என்பது ஒரு சோர்வளிக்கும் செயல்பாடு. அவர்களுடைய உடல்நிலையை சீராகப் பராமரிக்க அவர்கள் காலையிலும் மாலையிலும் 15 நிமிடங்கள் யோகா செய்வது நல்ல பலன்  தரும். முப்பது ஆண்டுகளுக்கு முன்னால்  இந்தியர்களுக்கு பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றால் வரக் கூடிய நோய்களே அவர்களின் ஆரோக்கியத்துக்கு அச்சுறுத்தலாக இருந்தன. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் கூட காசநோயால் இறப்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக இருந்தது. இன்று அவ்வாறான நோய்கள் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டன. இன்று சர்க்கரை நோயும் உயர் இரத்த அழுத்தமும் எலும்புத் தேய்மானமும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான பிரச்சனைகளாயிருக்கின்றன.

இன்று மருத்துவத் துறை மிக மோசமான சீர்கேடான இடத்தை அடைந்துள்ளது. நூறு மருத்துவர்களில் ஓரிருவரே நம்பிக்கை அளிக்கக் கூடியவர்களாகவும் நோய் தீர்க்கும் மருத்துவத்தின் புனிதத்தை உணர்ந்தவர்களாகவும் இருக்கின்றனர். மற்றவர்கள் மருந்து கம்பெனிகளின் முகவர்களாக  செயல்படக் கூடிய நிலை இருக்கிறது. 

யோகப் பயிற்சிகள்  எளியவை.  எளிய யோகப் பயிற்சிகள் தொடர்ச்சியாக செய்யப்படும் போது அற்புதமான பலன்களைத் தரக்கூடியவை. நவீன வாழ்க்கை பொருளாதார சுதந்திரத்தை அளிக்கிறது. பொருளாதார சுதந்திரம் அளிக்கும் உபரி நேரத்தை தொலைக்காட்சியும் சமூக ஊடகங்களும் எடுத்துக் கொள்கின்றன.  அவை மனத்தை அடிமைப்படுத்தி நம்மை சிக்கலில் ஆழ்த்தக் கூடியவை. அவற்றிலிருந்து விடுபட்டு இருக்க  யோகப்பயிற்சிகள் உதவும்.

இந்திய அரசாங்கம் யோகாவை எல்லா  இந்தியர்களிடமும் கொண்டு சேர்க்க முயற்சி மேற்கொள்கிறது. அது ஒரு பண்பாட்டுச் செயல்பாடு என்பதைத் தாண்டி உடல்நலம் மற்றும் சுகாதாரம் சார்ந்த செயல்பாடாகவும் அதனை முன்னெடுக்கிறது. பெண்களுக்கும் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கும் அவர்கள் தங்கள் உடல்நிலையை சீராக வைத்திருக்க யோகா ஒரு வரப்பிரசாதம்.

மகாபாரதத்தில் யக்‌ஷப் பிரசன்னத்தில், யக்‌ஷன் யுதிர்ஷ்டிரனிடம் கேட்கிறான்.

லாபத்தில் சிறந்தது எது? (லாபா நாம் உத்தமம் கிம்?)

பதில்: ஆரோக்கியம் (லாபா நாம் சிரேயஸ்; ஆரோக்ய)