Wednesday, 16 October 2019

உனது பிறந்தநாள்
ஒரு புதிய பிரபஞ்சத்தைப் போல
பிறக்கிறது
உன்னைப் போல
முடிவிலா இனிமைகள் கொண்ட
பிரபஞ்சம்
இன்று
நீ
கூடுதலாக அலங்கரித்துக் கொள்கிறாய்
அவ்வப்போது மெல்ல புன்னகைக்கிறாய்
உன்னால் என்றுமே
முழுமையாகப்
புரிந்து கொள்ள இயலாத
இந்த உலகின்
சிடுக்குகளில்
மெல்ல நகரும்
மேகங்களென
நகர்ந்து கொண்டிருக்கிறாய்
இந்த புவி
அறிந்திராத
உன் வண்ணச் சீரடிகள்
இந்த மண்ணில்
உருவாக்கிக் கொண்டேயிருக்கின்றன
விண்ணகத்தை 

Tuesday, 15 October 2019

வாய்ப்பும் யதார்த்தமும்


நேற்று ஒரு ஹார்டுவேர் கடைக்குச் சென்றிருந்தேன். ஸ்டீல் மற்றும் சிமெண்டின்  தற்போதைய மார்க்கெட் நிலவரத்தை தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது. கடையின் உரிமையாளர் எனது நண்பர். வெளியே சென்றிருந்தார். கடையில் அக்கவுண்டண்டான ஓர் இளம்பெண் இருந்தார்.
காத்திருக்கும் நேரத்தில் பொதுவாக பேசிக் கொண்டிருந்தேன்.

’’நீங்கள் என்ன ஊர்?’’

‘’குத்தாலம் பக்கத்தில் பழையகூடலூர் சார்”

‘’அப்படியா! குத்தாலத்துக்கு சைக்கிள்ல வந்து அங்கேயிருந்து பஸ் பிடிச்சு வருவீங்களா?’’

‘’ஆமா சார்”

’’என்ன படிச்சிருக்கீங்க?’’

‘’எம். பி. ஏ”

’’நல்ல படிப்பாச்சே. பேச்சுலர் டிகிரி என்ன பண்ணீங்க”

’’பி. காம்’’

‘’ரொம்ப நல்ல படிப்பாச்சே. நீங்க பேங்கிங் எக்ஸாம் எழுதலாமே. இதுவரைக்கும் ஏதாவது எக்ஸாம் எழுதியிருக்கீங்களா?’’

‘’இல்ல சார்! எதுவும் எழுதலை.’’

‘’எனக்கு ரொம்ப வேண்டிய ஒரு பையன் பேங்க் எக்ஸாம் எழுதி பாஸ் பண்ணி இப்ப கர்நாடகா-ல அசிஸ்டெண்ட் மேனேஜரா இருக்கார்மா. எனக்கு வேண்டிய இன்னொரு பையனும் எக்ஸாம் எழுதி ரிசல்ட்டுக்கு வெயிட் பண்ணிட்டு இருக்கார். இன்னும் ஒரு வாரத்துல ரிசல்ட் வரும். நிச்சயம் செலக்ட் ஆயிடுவார்மா”

‘’காலேஜ்ல டிகிரி வாங்கினதுக்குப் பிறகு இந்த வேலைக்கு வந்துட்டன் சார். நேரம் சரியா இருக்கு.’’

‘’எனக்குத் தெரிஞ்சு ஆன்லைன் கோர்ஸ் பேங்கிங் எக்ஸாம் பிரிபேர் பண்றதுக்கு இருக்கு. அதுல கூட நீங்க படிக்கலாம்’’

‘’எங்க வீட்டுல ரொம்ப கஷ்டம் சார்.’’

‘’நான் சென்னைல இருக்கற என்னோட நண்பர்ட்ட கேட்டு விபரம் சொல்றன். பெரிய ஃபீஸ் எதுவும் இருக்காது. அது எவ்வளவு அமௌண்டோ அதை நான் கொடுக்கறன். நீங்க பேங்க் எக்ஸாம்-ல செலக்ட் ஆகி வேலைக்குப்  போனதும் திருப்பிக் கொடுங்க போதும்’’

‘’உங்க அக்கறைக்கு ரொம்ப நன்றி சார்’’

கடை உரிமையாளர் வந்து விட்டார். அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.

‘’சார்! உங்க அக்கவுண்டண்ட்ட பேங்க் எக்ஸாம் எழுத சொல்லியிருக்கன்’’

‘’நல்ல விஷயம் தாராளமா செய்யட்டும்’’.

வீட்டுக்கு வந்ததும் சென்னை நண்பருக்கு ஃபோன் செய்தேன்.

‘’அண்ணா! நமஸ்காரம் அண்ணா. எப்படி இருக்கீங்க”

‘’நல்லா இருக்கன் தம்பி. உன்னோட பிரிபரேஷன் எப்படி போவுது?’’

‘’நல்லா போயிட்டிருக்குண்ணா’’

‘’உங்கிட்ட ஒரு கன்சல்டேஷனுக்காக ஃபோன் செஞ்சன். எனக்குத் தெரிஞ்ச ஹார்டுவேர் கடையில வேலை பாக்கற ஒரு  பொண்ணு. பி.காம் படிச்சிருக்கு எம்.பி.ஏ பண்ணியிருக்கு. நான் பேங்க் எக்ஸாம் எழுதச் சொன்னேன்.’’

‘’நல்ல விஷயம்னா. பி. காம் கிராஜூவேட்ஸுக்கு கணக்கு நல்லா வரும்னா. இங்கிலீஷ்ல மட்டும்  கொஞ்சம் கவனம் கொடுத்தா ஈஸியா பாஸ் பண்ணலாம்னா’’

‘’ஆன்லைன் கோர்ஸ் எது நல்லா இருக்கும்?’’

‘’ஆன்லைன் கோர்ஸ் இருக்குன்னா. ஆனா அதை விட பெட்டர் ஒரு மாசம் சென்னைக்கு வரச் சொல்லுங்கன்னா.  இருக்கறதிலயே பெஸ்ட்டான கோச்சிங் இன்ஸ்ட்டிடியூட்ல சேரட்டும். எல்லா இன்ஸ்டிடியூட் பக்கத்திலயும் நிறைய லேடீஸ் ஹாஸ்டல் இருக்கு. கிளாஸ் ஒரு மாசம்தான் நடக்கும். கொஸ்டின் சால்வ் பண்றதோட எல்லா டெக்னிக்கையும் சொல்லித் தந்திருவாங்க. எப்படி பிரிபேர் பண்ணனும்னு வழிகாமிச்சிடுவாங்க. அதுக்கப்பறம் தொடர்ந்து அப்டேட்ஸ், கொஸ்டின் பேப்பர்ஸ், ஸ்டடி மெட்டீரியல்ஸ் மெயில்ல அனுப்புவாங்க. டவுட்ஸ கிளியர் பண்ணுவாங்க’’

‘’கோர்ஸ் ஃபீஸ் எவ்வளவு  ஆகும்?’’

‘’பதினைஞ்சாயிரம் ஆகும்னா”

‘’ஹாஸ்டல் ஃபுட் ஒரு பத்தாயிரம் ஆகுமா”

‘’அவ்ளோதான்னா ஆகும்’’

‘’அந்த பொண்ணு வீட்டுல கஷ்டம்னு சொல்லுச்சு. கோர்ஸ் ஃபீஸும் ஹாஸ்டல் ஃபீஸும் நான் கொடுக்கறன்னு சொல்லியிருக்கன். டுவெண்டி ஃபைவ் சமாளிச்சுக்கலாம்’’

‘’நல்ல விஷயம்னா. தகுதி படைச்ச ஒருத்தருக்கு தேவையான நேரத்துல உதவி செய்யறது அவசியமான ஒண்ணுன்னா’’

இன்று அந்த கடைக்கு மீண்டும் சென்றேன். அந்தப்  பெண்ணைச் சந்தித்தேன்.

விபரம் சொன்னேன்.

‘’சார்! எனக்கு வீட்டுல கல்யாணத்துக்குப் பார்த்துகிட்டு இருக்காங்க. ஜனவரிக்குள்ள முடிஞ்சிரும்னு எதிர்பாக்கறாங்க. கல்யாணத்துக்கு அப்புறம்தான் மத்ததப் பத்தி யோசிக்க முடியும்.’’

‘’அதாவதும்மா ஆணா இருந்தாலும் பொண்ணா இருந்தாலும் நாம கத்துகிட்ட விஷயம்தான் நமக்கு பெருசா உதவி செய்யும். ஒரு பழமொழி கேட்டிருப்பீங்க. ‘’பெற்ற  பிள்ளை கைவிட்டாலும்  கற்ற  கல்வி கைவிடாது’’ன்னு.’’

‘’நீங்க சொல்றது உண்மைதான் சார்! என் சூழ்நிலை இப்படி இருக்கு.’’

நான் என்னுடைய விசிட்டிங் கார்டைக் கொடுத்தேன்.

‘’நீங்க எப்ப வேணாலும் கான்டாக்ட் பண்ணுங்க அம்மா. நான் உங்களுக்கு உதவி பண்ண தயாரா இருக்கன்”

நான் விடைபெற்றுக் கொண்டேன்.

தமிழ்நாட்டுக் கல்வியில் என்ன தான் நடக்கிறது? ஏன் கல்லூரி அந்தப் பெண்ணுக்குத் தேவையான வழிகாட்டலையும் அறிவுறுத்தலையும் பட்டம் பெறும் போது வழங்கி  அனுப்பவில்லை? பாடத்திட்டத்தில் மாற்றம் என்றால் அதை அரசியல் பிரச்சனையாக்குகிறார்கள். இன்னொரு மொழி படியுங்கள் என்றால் தமிழ் அழிந்து விடும் என்கிறார்கள். நுழைவுத்தேர்வுகள் கூடவே கூடாது என்கிறார்கள். சாமானியர்களுக்கு தமிழ்நாட்டின் கல்லூரிகள் எவ்வகையில் உபயோகமாய் இருக்கின்றன? இதற்கெல்லாம் யார் பொறுப்பேற்பார்கள்? ஈஸ்வரோ ரக்‌ஷதோ.


பழக்கம்

எனக்கு இப்போது ஒரு நண்பர் இருக்கிறார். அப்படியென்றால், சமீப காலமாக அடிக்கடி சந்திக்கும் நண்பர். நான் எவரிடமும் மூன்று விஷயங்கள் குறித்து பேசுவதேயில்லை; என்னிடம் ஒரு மூத்த முக்கியமான வட இந்திய சமூக சேவகர் ஒருவர் வழங்கிய அறிவுரை. எவரிடம் பேசினாலும் அரசியல், சினிமா மற்றும் விளையாட்டு குறித்து பேசக் கூடாது என்பது. தமிழ்நாட்டில் நண்பர்கள், உறவினர்கள் என எவர் கூடினாலும் இந்த மூன்று விஷயங்கள் குறித்துதான் பேசுவார்கள். அரசியல் எவராலும் முழுமையாகப் புரிந்து கொள்ளப்பட்ட விஷயம் அல்ல. அது லட்சக்கணக்கானோரின் நேரத்தாலும் செயலாலும் ஆனது. அரசியல்வாதிகளே வீட்டிலோ நண்பர்களிடமோ உறவினர்களிடமோ சக அரசியல்வாதிகளிடமோ அரசியல் பேச மாட்டார்கள். பொதுவான விஷயங்களையே பேசுவார்கள். அரசியல் பேசுவதெல்லாம் கட்சிக் கூட்டங்களில் தொண்டர்களிடம் மட்டும்தான். அதிகாரத்தின் உயர்நிலைகளில் நிகழும் விஷயங்களின் ஒரு சிறு பகுதியையே நாம் அறிகிறோம். நமக்கு முழுமையான விபரம் கிடைக்காத ஒன்றைப் பற்றி பேசும் போது அதில் நம் விருப்பு வெறுப்புகள் மட்டுமே இருக்கும் என்பதால் பேசக் கூடிய இருவருக்கும் ஒருவரைப் பற்றி இன்னொருவருக்கு ஒரு நல்ல புரிதல் உருவாக வாய்ப்பு குறைவு. சினிமா கலை சார்ந்தது. ஒருவரின் கலை உணர்வும் இன்னொருவரின் கலை உணர்வும் அளவில் தரத்தில் ஈடுபாட்டில் வேறுபாடு கொண்டிருக்கும். ஆதலால் சினிமா குறித்து பேசும் போதும் நல்ல புரிதலை உண்டாக்க முடியாது. விளையாட்டு ஒவ்வொருவரின் விருப்பம் சார்ந்தது. ஒருவருக்கு கிரிக்கெட் பிடிக்கும். இன்னொருவருக்கு ஹாக்கி பிடிக்கும். இன்னொருவருக்கு டென்னிஸ். அந்த விளையாட்டிலும் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு வீரரைப் பிடிக்கும். விவாதங்கள் முடிவில்லாமல் செல்லும். 

நான் இந்த மூன்று விஷயங்களை எவரிடமும் பேசுவதில்லை என்பதால் நான் சந்திக்கும் எவரிடமும் எனக்கு நிறைய நேரமும் பேசுவதற்கு நிறைய விஷயமும் இருக்கும். என்னுடன் கட்டுமானப் பணியில் பணிபுரிந்த தொழிலாளர் ஒருவர். சில ஆண்டுகளுக்கு முன்னால், பணி புரிந்து கொண்டிருந்த போது உடல்நிலை மிகவும் சோர்வாக இருப்பதாகக் கூறினார். நான் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தேன். காசநோய் இருப்பது தெரிய வந்தது. அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருந்துகள் வாங்கித் தந்தேன். அந்த பணியாளர் ஓர் இளைஞர். அவருக்கு காசநோய் குறித்தோ அதன் விளைவுகள் குறித்தோ தெரியவில்லை. அவர் உடனிருப்பவர்கள் அவரிடம் இது குறித்து வெவேறு விதமாகக் கூறி பீதியூட்டுவார்கள் என்பதால் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன். அவர் வீட்டுக்குக் கூட விபரம் தெரியாது. அப்போதெல்லாம் அரசு மருத்துவமனையில் வாராவாரம் மருந்து கொடுப்பார்கள். ஒவ்வொரு வாரமும் உடன் செல்வேன். மருத்துவமனை ஊழியர்கள் நோயாளி வந்தால் போதும் நீங்கள் ஏன் ஒவ்வொரு வாரமும் வந்து சிரமப்படுகிறீர்கள் என்பார்கள். ஆனால் அவர் செல்லாமல் இருந்து விட்டால் உடல்நிலை சிக்கலாகுமே என்பதால் நான் எப்போதும் உடன் செல்வேன். என்னுடைய வீட்டிலும் யாருக்கும் இது தெரியாது. ஒரு மாதம் தொடர்ச்சியாக கவனம் கொடுத்த பின் அந்த பணியாளரே அரசு மருத்துவமனைக்குச் சென்று மருந்தை வாங்கி வந்து என்னிடம் காட்டி விட்டு தொடர்ச்சியாக மருந்து எடுத்துக் கொண்டிருந்தார். ஆறு மாதம் மருந்து எடுத்துக் கொண்டார். உடல்நிலை பூரணமாக குணம் அடைந்தது. பூரண குணம் பெற்ற பின் வெளிநாட்டில் கட்டுமான வேலை கிடைத்து சென்று விட்டார். திரும்பி வந்ததும் அவருக்குத் திருமணம் நடந்தது. நான் சென்றிருந்தேன். என்னுடைய கட்டுமானத்திலும் பின்னர் பணி புரிந்தார். சில நாட்களுக்கு முன்னால் அவரும் அவர் மனைவியும் குழந்தையும் டிவிஎஸ் 50ல் செல்வதைப் பார்த்தேன். எனக்கு அவர் என்னுடைய தொழிலாளராக நினைவில் இருந்தாரேயொழிய அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது என் நினைவை விட்டே அகன்று விட்டது. அவர் சென்ற நிமிடங்கள் கழித்துதான் அந்த நினைவுகள் திரும்ப வந்தன. ஒரு சரியான செயலை சரியான நேரத்தில் செய்தோம் என்ற நிறைவு இருந்தது. மனித உறவுகளில் நிறைவு எஞ்சி நிற்குமாயின் அதை விடச் சிறப்பானது வேறொன்றில்லை.

ஊரில் என்னுடன் பழக்கத்திலிருப்பவர்கள் மிகக் குறைவு. என்னை அறிந்தவர்களும் மிகக் குறைவு. ஆதலால் எப்போதும் எனக்கு பெரும் சுதந்திரம் இருக்கும். நான் எனக்கேயான பிரத்யேக உலகில் உலவிக் கொண்டிருப்பேன். எனக்கு அடுத்தவர்கள் பற்றிய செய்திகளில் ஆர்வம் மிகக் குறைவு. சின்ன வயதிலிருந்தே அப்படி பழக்கம். என்னுடைய தொழில் சார்ந்து நான் தெரிந்து வைத்திருக்க வேண்டியவர்களை மட்டுமே தெரிந்து வைத்திருப்பேன். என்னால் என் தொழில் சார்ந்து எந்த பணியையும் மற்ற எவரையும் விட விரைவாகவும் சிறப்பாகவும் செய்து விட முடியும்.

நான் எவரைச் சந்தித்தாலும் அவர்களிடம் அவர்கள் உடல்நலன் குறித்தும் அவர்கள் குழந்தைகள் கல்வி குறித்தும் அவர்களுடைய பணி குறித்தும்  விசாரிப்பேன். உடல்நலன் குறித்து அக்கறையில்லாமல் இருப்பார்கள். நான் சொல்லி சிகரெட்டை முழுமையாகக் கைவிட்ட நண்பர்கள் உண்டு.  குழந்தைகள் கல்வி குறித்து அறியாமையுடன் இருப்பார்கள். உடல்நலனுக்கு நடைப்பயிற்சியும் யோகாவும் செய்யச் சொல்வேன். குழந்தைகள் கல்வி மேம்பாட்டுக்கு ஏதேனும் ஆலோசனைகள் சொல்வேன். நான் சொல்லி வெளியூரில் ஹாஸ்டலில் சேர்த்து கல்வியில் முன்னேற்றம் கண்ட குழந்தைகள் உண்டு. நான் சொல்லியதால் தங்கள் துறையை மாற்றிக் கொண்டு மிக நல்ல வேலைகளுக்குச் சென்றவர்கள் உண்டு.

மிக அதிக நபர்களுடன் பழக்கம் இல்லாதவன் என்பது ஒருபுறமும் பழகியவர்களுடன் ஆழமான நட்பில் இருந்திருக்கிறேன் என்பது இன்னொரு புறமும் இருக்கிறது. இந்த இரண்டுக்கும் இடையில் நான் இருக்கிறேன்.

Sunday, 13 October 2019

சில மாற்றங்கள்

எனது நண்பர் ஒருவர் கடந்த சில மாதங்களாக ஒரு புதிய கார் வாங்குமாறு கூறிக் கொண்டேயிருக்கிறார். இப்போது இருக்கும் காரை ஏன் மாற்ற வேண்டும் என்பது எனக்குப் புரியவில்லை. பழையதாகி விட்டது அதனால் மாற்ற வேண்டும் என்கின்றனர் நண்பர்களும் நலம் விரும்பிகளும். வண்டியின் இயக்கம் நன்றாகத்தான் இருக்கிறது.  மயிலாடுதுறையின் நகர அமைப்பில் கடைவீதியில் காரைப் பார்க் செய்வ்து என்பது இயலாத காரியம். கடைவீதிக்குப் பக்கத்தில் இருக்கும் தெருக்களில் காரை நிறுத்தி விட்டு நடந்து செல்ல வேண்டும். எனவே நான் மயிலாடுதுறைக்குள் டூ-வீலரில் செல்வதையே விரும்புவேன். வெளியூர் செல்வதாயிருந்தால் நான் ரயிலையே முதல் தேர்வாகக் கொள்வேன். சிரமமின்றி ஓய்வாகப் பயணிக்கலாம். மக்களைச் சந்திக்கவும் அவதானிக்கவும் அவர்கள் எண்ணங்களை அறியவும் ஒரு வாய்ப்பு கிடைக்கும். செலவும் மிகக் குறைவு. எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவர் நகருக்குள் சைக்கிளில்தான் செல்வார். வெளியூருக்கு ரயிலில் செல்வார். என்னிடம் ஒருமுறை சொன்னார். அவரிடம் ஒரு ஹெலிகாப்டர் சொந்தமாக வைத்துக் கொண்டு பயணிக்கும் அளவுக்கு செல்வம் இருக்கிறதென. அது அவருடைய பக்கத்து வீட்டுக் காரருக்குக் கூட தெரியாது. மிக எளிய வீடு அவருடையது. எளிய பொருட்களால் ஆனதாக அவருடைய வீடு இருக்கும். சமீபத்தில் மனைவியுடன் ஐரோப்பா சென்று வந்தார். இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களுக்குச் சென்று வந்தவர்.அவர் மிகக் குறைவாகவே பேசுவார். என்னிடம் மிகவும் பிரியத்துடனும் சகஜமாகவும் இருப்பார். அவசியம் என்றால் மட்டுமே ஒரு முறைக்கு இரு முறை யோசித்து எதையும் வாங்குமாறு சொல்வார். இருந்தாலும் பல விதங்களில் தொடர் வற்புறுத்தல் என்பதால் ஒரு புதிய கார் வாங்கலாமா என்று பரிசீலிக்கத் துவங்கினேன்.

என்னிடம் இப்போது இருப்பது மாருதி ஆம்னி. அதில் எட்டு பேர் பயணிக்க முடியும். சிறிய வாகனம். 800 சிசி எஞ்சின் திறன் கொண்டது. அளவிலும் அடக்கமானது. ஆனாலும் பெரிய வாகனம் என உரிமையாளரை நம்ப வைப்பது.

புதிய வாகனமாக மஹிந்திரா ‘’தார்’’ வாங்கலாமா என்று யோசித்தேன். மஹிந்திரா மாருதியைப் போலவே ஓர் இந்திய நிறுவனம். ராஜஸ்தானின் ‘’தார்’’ பாலைவனத்தை நினைவுபடுத்தும் பெயர். ராஜஸ்தானின் ராஜபுத்திரர்கள். சித்தூர்கர் கோட்டை முற்றுகை. அன்னியர்களிடமிருந்து பண்பாட்டைக் காக்க நெருப்பில் குதித்து ஆத்ம நிவேதனமாகின்றனர் ராஜபுத்ர பெண்கள்.  ஹால்திகாட் யுத்தம். பிருத்விராஜ் சௌஹான். சம்யுக்தா தேவி. சதுரங்கக் குதிரைகள் நாவல். ‘’தார்’’ என்ற பெயரிலிருந்து கற்பனையில் ரொம்ப தூரம் சென்று விட்டேன். அந்த வண்டியை எடுத்துக் கொண்டு இந்தியா முழுதும் செல்கிறேன். கார்கில். லடாக். ஆஜ்மீர். டேராடூன். அல்மோரா. கல்கத்தா. அப்பப்பா பயணியாக இருப்பது தான் எவ்வளவு பெரிய பேறு!

கார் வாங்கச் சொன்ன நண்பரும் நானும் எங்கள் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தோம். அப்போது ஒரு ‘’தார்’’ எங்களைக் கடந்து சென்றது. நான் அதைப் பார்த்துப் பரவசமாகி ‘’இதுதான் இதுதான்’’ என்று கூவினேன். நண்பர் சற்று தயக்கத்துடன் ‘’ஜீப் போல இருக்கே’’ என்றார். அதனால் என்ன என்று எனக்குத் தோன்றியது. நான் இணையத்தில் வாசித்த ‘’தார்’’ பெருமைகளை அவரிடம் விரிவாக எடுத்துரைத்துக் கொண்டிருந்தேன். பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்து விட்டு ‘’ஜீப் வேண்டாம்; நாம் ஏதாவது நல்ல காராக வாங்குவோமே’’ என்றார்.  நடந்ததை அம்மாவிடம் சொன்னேன். எல்லாரையும் போல நீ யோசிப்பதில்லை; செயல்படுவதில்லை என்பது தானே உனது தனித்துவம் என்று சொன்னார்கள். அம்மா என்னைப் புரிந்து வைத்திருக்கிறார் என சந்தோஷப்பட்டேன். இந்த உலகில் நம்மைப் புரிந்து கொள்ளக் கூடிய ஒருவர் இருக்கிறார் என்பது எவ்வளவு பெரிய சந்தோஷம். பிறகு அம்மா சொன்னார்கள்: ‘’பிரபு! நீ புது கார் வாங்கலன்னாலும் பரவாயில்லை; எக்காரணம் கொண்டும் நீ சொன்ன மஹிந்திரா ஜீப்பை வாங்கிட்டு வந்து வீட்டுல நிறுத்திடாத”. 
 
வீட்டின் அமைப்பில் சில மாறுதல்களைக் கொண்டு வரலாமா என்று மனதில் ஒரு யோசனை சமீபநாட்களாக ஓடிக் கொண்டிருக்கிறது. கட்டிடம் என்பது எனது தொழில் என்பதால் சொந்த வேலை செய்ய மனம் பெரிய ஆர்வம் காட்டுவதில்லை; இடத்திற்கு அங்கு வாழும் மனிதர்களே அர்த்தம் அளிக்கிறார்கள் என்பது என்னுடைய ’’ஃபேவரைட் தியரி’’. எனது வீடு இரண்டு தளங்கள் கொண்டது. தரைத்தளமும் முதல் தளமும். தரைத்தளத்தில் கூடம், உணவுக்கூடம், சமையலறை, ஒரு சிறு அலுவலக அறை மற்றும் ஒரு அறை. முதல் தளத்தில் இரு அறைகள். முதல் தளத்தில் என்னுடைய அறை இருக்கிறது. நான் முதல் தளத்துக்கு உறங்கும் போது மட்டுமே செல்வேன். எப்போதும் கூடத்திலும் என் அலுவலக சிறு அறையிலுமே இருப்பேன்.

போர்டிகோவிற்குக் கீழே ஏறத்தாழ 100 சதுர அடி கொண்ட இடம் இருக்கிறது. அதனை ஒரு அறையாக மாற்றலாமா என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. அதனை வரவேற்பு அறையாக ஆக்க முடியும். என்னுடைய அலுவலக அறையில் ஒரு புத்தக ஷெல்ஃப் அமைக்க வேண்டும். மேஜைக்கு அடியில் இருக்குமாறு கோப்புகளை வைக்க ஒரு பிளைவுட் ஷெல்ஃப் அமைக்க வேண்டும். மாடியில் எனது அறையில் ஒரு புத்தக ஷெல்ஃப் அமைக்க வேண்டும். என்னிடம் நிறைந்திருப்பவை புத்தகங்கள். என் உற்ற தோழமையும் புத்தகங்களே. ஆசாரி எப்போது வேலை ஆரம்பிக்கலாம் என்று கேட்டுக் கொண்டேயிருக்கிறார். கட்டிடப் பொறியாளர்களிடம் உலகத்தில் இனிய ஓசை எது என்று கேட்டால் டிரில்லிங் மெஷின் இயங்கும் சத்தமும் ஜல்லி அள்ளப்படும் சத்தமும் கான்கிரீட் மெஷின் சுழலும் சத்தமும் என்பார்கள். உலகின் இனிய இசைகளில் ஒன்றுக்காக செவிகள் காத்திருக்கின்றன. தீபாவளிக்கு முன் பணியைத் துவங்கலாம் என இருக்கிறேன்.

மாற வேண்டும் என்ற எண்ணமே மாற்றத்தைக் கொண்டு வருகிறது. ஈஸ்வர ஹிதம். 

Saturday, 12 October 2019

அற்புதங்களின் வெளியின்
நடுப்புள்ளியாக
உனது இருப்பு
உயிர்த்திருந்தது
மூடிய திரண்ட  மேகங்களின்
நுனியில்
ஒளிரும் சூரிய ஒளி
அமைதியாய்ப் புலரும் அதிகாலை
எங்கும் நிறையும்
பிரபஞ்ச கர்ப்பத்தின்
மௌனம்
தனித்துவமான இரவுகள்
*
காத்திருப்பவனுக்குக்
காத்திருப்பைத் தவிர
வேறேதும் இல்லை
அன்றாடங்களின்
முடிவற்ற பெருக்கில்
*
இந்த உலகம்
அற்புதங்களையும்
அன்றாடங்களையும்
கொண்டுள்ளது
அல்லது
அன்றாடங்களையும்
அற்புதங்களையும்

Friday, 11 October 2019

நுனி ஈரம்

முகம் கழுவி
சிறிது நேரமாவது
புதிதாகிக் கொள்வதைப்  போல
சோப்பால்
கைகளைக் கழுவி
விடுபடுவதைப் போல
ஒரு பென்சிலைக்
கூராக்கி வைத்திருப்பது போல
குடிநீர்க் கலனில்
நிரம்ப
நீர் சேமித்து
எடுத்து வைப்பதைப் போல

திட்டவட்டமாய்
அறுதியிடக் கூடியதாய்
சிறியதாய்
கட்டுக்குட்பட்டதாய்

இல்லை
உனது மொழிகள்
உனது மௌனங்கள்
உனது தொடர்புறுத்தல்கள்

பெருமழையில்
ஓயாமல் நனைந்த
மஞ்சள் மலர்
இதழ்களில்
விரல் நுனி ஈரத்தை
மட்டிலுமே
தக்க வைத்துக் கொண்டுள்ளது

மேகங்கள் இல்லாத வானம்
சூரியன்

Thursday, 10 October 2019

பண்டிகைகள் - சில சிந்தனைகள்

தமிழ்நாட்டில் கடந்த ஐம்பது ஆண்டுகாலமாக திராவிட இயக்கம் மக்களின் பொதுப்புத்தியில் சில விஷயங்களை பரவச் செய்துள்ளனர். அதில் ஒன்று மரபான பழக்கங்கள் மீதான தாக்குதல். அவர்களுடைய கண்மூடித்தனமான பரப்புரையில் பல நல்ல விஷயங்கள் காணாமல் போயின. நாம் நிலப்பிரபுத்துவ சமூகமாயிருந்து முதலாளித்துவ சமூக நிலைக்கு கடந்த ஐம்பது ஆண்டுகளில் வந்திருக்கிறோம். நிலப்பிரபுத்துவ சமூகத்தில் விவசாய உற்பத்தியும் விவசாய விளைபொருளின் பகிர்வுமே சமூகத்தின் பொருளியல் அடிப்படைக்கான காரணிகள். அம்முறை ஒரு கிராமத்தையே அடிப்படை அலகாய்க் கொண்டது. கிராமம் அடிப்படை அலகு என்ற முறையில் கிராமச் சுயசார்புக்கான பல விஷயங்கள் அதில் உள்ளடங்கியே இருந்தது. கிராமத்து மக்கள் இணைந்து மேற்கொள்ளும் குடிமராமத்து, உள்ளூர் நீர்நிலைகளைக் காப்பதிலும் பராமரிப்பதிலும் சிறந்த முறை. கோயில் திருவிழாக்கள் கிராம அளவில் ஒருங்கிணைக்கப்படுவதும் மற்றொரு சிறந்த முறை. இன்றும் கிராமக் கோயில்களைச் சமயக் கல்விக்கான மையங்களாக மாற்ற முடியும். கிராமத்துப் பெண்கள் அதற்கான பொறுப்பை எடுத்துக் கொள்ள முடியும். தேவாரம், நாலாயிர திவ்ய பிரபந்தம் ஆகியவற்றில் உள்ள பாடல்களை கிராமத்தின் குழந்தைகளுக்குச் சொல்லித் தர முடியும். மொழி பயிலப்பட்டால் மட்டுமே மரபு பேணப்படும். மரபை அப்படியே ஏற்க வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லை. எது நம் மரபு எதனால் அவ்வாறு உருவாக்கப்பட்டது என்ற புரிதல் இருந்தால் மட்டுமே அதனைப் பரிசீலித்து ஏற்க வேண்டியதை தக்கவைத்துக் கொண்டு மற்றவற்றைப் புறக்கணித்து முன்னகர முடியும். சமயமும் சமயச் சடங்குகளும் பெரும்பாலானோர் வாழ்க்கையில் முக்கிய இடம் வகிக்கின்றன. சாதி சமயத்தின் தொடர்ச்சியாகவே தமிழ்ச் சமூகத்தில் உள்ளது. சமயக் கல்வி இல்லாததன் விளைவுகளில் ஒன்றே நம் சமகாலத்தில் பெருகியிருக்கும் வன்முறை மனோபாவம். எப்போதெல்லாம் சமயம் பரவியிருக்கிறதோ அப்போதெல்லாம் வன்முறை கட்டுப்படுத்தப் பட்டிருக்கிறது என்பதே தமிழ்நாட்டின் வரலாறு. கிராமங்களில் சமயக் கல்வியை அளிக்க ஏதேனும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

இன்று தமிழ்நாட்டில் நடுத்தர வர்க்கம் எண்ணிக்கையில் பெரிதாக இருக்கிறது. தீபாவளி போன்ற பண்டிகை தினத்தில் நாம் அறிந்திராத யாரோ ஒரு வறியவருக்கு ஓர் எளிய புத்தாடையை வழங்கலாம். அது அன்பின் அடையாளம். பெற்றுக் கொள்பவர் அடையும் மகிழ்ச்சி என்பது ஆடையின் பொருள் மதிப்பு சார்ந்தது அல்ல. பெற்றுக் கொள்பவர் அடையும் அளவற்ற நம்பிக்கையைச் சார்ந்தது.

நம் மரபில் அதை ‘’வஸ்திர தானம்’’ என்கிறார்கள். 

Wednesday, 9 October 2019

பண்டிகைக் காலம்

இந்த ஆண்டு காவேரி நிறைந்து ஓடுகிறது. டெல்டா மாவட்டங்களுக்கு இது ஓர் உற்சாகமான சமிங்ஞை. தீபாவளி மக்கள் மனதில் நம்பிக்கையைக் கொண்டு வருகிறது. வாணிகம் செழிக்கிறது. பல்வேறு விதமான பண்டங்கள் விற்பனையாகின்றன. போக்குவரத்து வாகனங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. பெரும்பாலானோர் கொண்டாட்ட மனநிலைக்கு வரும் போது அந்த அலை மீதமிருப்போரையும் சேர்த்து அழைத்துச் செல்கிறது. இந்த ஆண்டு தீபாவளிக்கு கதராடை உடுத்த வேண்டும் என்று எண்ணியிருக்கிறேன். நாம்- தமிழர்கள் எவ்வாறு மகிழ்ச்சியாக இருப்பது என்பதையே இன்னும் முழுமையாக அறியாதவர்கள். தமிழர்களை எப்போதும் ஓர் அச்சம் மறைமுகமாக அச்சுறுத்திக் கொண்டேயிருக்கிறது. தங்கள் சந்தோஷங்களை கூட இருப்பவர்கள் இல்லாமல் செய்து விடுவார்களோ என்ற ஐயமும் அச்சமும் அவர்களுக்கு எப்போதும் உண்டு. ஐயமும் அச்சமும் விலகும் போதே மகிழ்ச்சி பிறக்கும். மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் போதே கொண்டாட்ட மனநிலை உண்டாகும். இன்றும் எல்லா தமிழ் குடும்பங்களும் கொண்டாடும் தினம் தீபாவளி. சமீபத்தில் சுப்பு ரெட்டியார் நூல் வாசித்ததிலிருந்து ‘’சோழ நாட்டு திவ்ய தேசங்களில்’’ நான் இன்னும் சேவிக்காமல் இருக்கும் உத்தமர் கோவிலுக்கும் அன்பிலுக்கும் சென்று வர வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. பண்டிகைக் காலத்தில் மக்களின் உற்சாகத்தையும் கண்டவாறு இருக்கும். பெருமாளையும் சேவித்தவாறு இருக்கும்.

Tuesday, 8 October 2019

விஜயதசமி

நேற்று சரஸ்வதி பூஜை - ஆயுத பூஜை. காருக்கும் ஹீரோ ஹோண்டாவுக்கும் ஸ்கூட்டிக்கும் பூஜை போடப்பட்டது. பூஜையறையில் பேனாவுக்கும் ஃபைல்களுக்கும் பூஜை. கட்டுமான சாதனங்களுக்கும் பூஜை.

ஒரு கதை எழுதி பாதியில் இருந்தது. அதன் மீதி பாதியை நேற்று எழுதத் துவங்கினேன். இன்று நிறைவு செய்தேன். சில எடிட்டிங் வேலைகள் உள்ளன. இன்று முடித்து விட வேண்டும்.

விஜயதசமியில் துவங்கும் செயல்கள் வெற்றியடையும் என்பது இந்திய நம்பிக்கை. இன்று காலை 5 கி.மீ வாக்கிங் சென்றேன். சூர்ய நமஸ்காரம் செய்தேன். யோகப்பயிற்சிகள் செய்தேன். தொடர்ந்து செய்ய வேண்டும்.

மூன்றாண்டுகளுக்கு முன்னால் ரிஷிகேஷ் வரை சென்ற மோட்டார்சைக்கிள் பயணத்தை விஜயதசமி அன்றுதான் துவக்கினேன். இந்த ஆண்டு சில முக்கியமான கட்டுமானப் பணிகள் உள்ளன.

மனதில் நம்பிக்கை இருக்கிறது. அதுவே எல்லா செயலுமாகிறது.

ஒன்பது இரவுகள் - 9

அன்னையரே
அன்னை உணர்வே
அன்னைத் தெய்வங்களே

நின் கருணை
கருக்கிருட்டாக
செஞ்சூரியனாக
அந்தியின் முதல் விண்மீனாக
வானத்து நிலவாக
பாயும் நதிகளாக
வயல்களின் பச்சை முளையாக
எங்களைச்  சூழ்கிறது

வாழ்க்கை என்றும் எம்மைத் தளைக்காதிருக்கட்டும்
நின் கருணை
எம் விடுதலையாக
இருக்கட்டும்