7456. விண்ணினை இடறும் மோலி;
விசும்பினை நிறைக்கும் மேனி;
கண்ணெனும் அவை இரண்டும்
கடல்களின் பெரிய ஆகும்;
எண்ணினும் பெரியன் ஆன இலங்கையர்
வேந்தன் பின்னோன்
மண்ணினை அளந்து நின்ற
மால் என வளர்ந்து நின்றான்.
கவியுள்ளம் மகத்தான எதைக்
கண்டாலும் உணர்ச்சிகரமாகிறது. கும்பகர்ணன் மேல் கம்பனுக்கு ஒரு பிரியம்
இருக்கிறது. தன் நிலை வழுவாதவன் என்பதால். நீதி அறிந்து உரைப்பவன் என்பதால். இந்த
படலத்தில் அவனைக் காட்டும் முதல் காட்சியிலேயே மிக பிரும்மாண்டமாய் காட்டுகிறான்.
அவனது சிரம் விண்ணைத்
தொடுகிறது. உலகமெனப் பரந்து பெரிதாய் உள்ளது அவன் உடல். கண்கள் இரண்டும் இரண்டு
பெரிய கடலினைப் போல் உள்ளன. கும்பகர்ணன் பாதாளம் புவி வான் என மூன்று உலகளவு
பெரிதாக நின்றான்.
7468. ‘கூயினன் நும்முன் ‘என்று அவர் கூறலும்
போயினன் நகர் பொம்மென்று இரைத்து எழ;
வாயில் வல்லை நுழைந்து மதிதொடும்
கோயில் எய்தினன் குன்று அ(ன்)ன கொள்கையான்.
இந்த பாடலில் கும்ப கர்ணனை ‘’குன்று அன்ன
கொள்கையான்’’ என்கிறான் கம்பன். கொள்கையில் குன்றின் உறுதியோடு இருப்பவன்.
.
7475. அன்ன காலையில் ‘ஆயத்தம் யாவையும்
என்ன காரணத்தால்? ‘என்று இயம்பினான்
மின்னின் அன்ன புருவமும் விண்ணினைத்
துன்னு தோளும் இடம் துடியா நின்றான்.
எதற்கான ஆயத்தங்கள் நிகழ்கின்றன?
7477. ‘ஆனதோ வெஞ்சமம்? அலகில் கற்புடைச்
சானகி துயர் இனம் தவிர்ந்தது இல்லையோ?
வானமும் வையமும் வளர்ந்த வான்புகழ்
போனதோ? புகுந்ததோ பொன்றும் காலமே?
கடும் போர் துவங்கி விட்டதா? மகத்தான கற்பரசியான
ஜானகியின் துயரம் இன்னும் தீரவில்லையா? வானினும் உயர்ந்த உன் புகழ் உன்னை விட்டுப்
போனதா? அழிவுகாலம் நடந்து கொண்டிருக்கிறதா?
7487. ‘பந்தியில் பந்தியில் படையை விட்டு அவை
சிந்துதல் கண்டு நீ இருந்து தேம்புதல்
மந்திரம் அன்று; நம் வலி எலாம் உடன்
உந்துதல் கருமம் ‘என்று உணரக் கூறினான்.
இராவணா! நீ ஒவ்வொருவராக களத்திற்கு அனுப்பி
அவர்களை இழந்து வருந்திக் கொண்டிருக்கிறாய். நாம் நமது முழுப் படையுடன் சென்று
வானர சேனையுடன் மோத வேண்டும்.
7489. ‘மறம் கிளர் செருவினுக்கு உரிமை மாண்டனை;
பிறங்கிய தசையொடு நறவும் பெற்றனை;
இறங்கிய கண் முகிழ்த்து இரவும் எல்லியும்
உறங்குதி போய் ‘என உளையக் கூறினான்.
’’நீ போர்க்களத்துக்குத் தகுதியானவன் அல்ல.
திருப்தியாக ஊண் உண்க. கள் அருந்துக. எந்நேரமும் உறங்கிடுக.’’ என கும்பகர்ணனிடம்
சினத்துடன் கூறினான் இராவணன்.
7493. ‘வென்று இவண் வருவென் என்று
உரைக்கிலேன்; விதி
நின்றது, பிடர் பிடித்து
உந்த நின்றது;
பொன்றுவென்; பொன்றினால்,
பொலன்கொள் தோளியை,
“நன்று “ என, நாயக,
விடுதல் நன்று அரோ.
என்னால் இந்த போரை வெல்ல
முடியும் என்று எண்ண இயலவில்லை. விதி என் பிடரியைப் பிடித்து மரணத்தை நோக்கித்
தள்ளுகிறது. நான் கொல்லப்பட்டால் ஜானகியை விடுவிப்பாயாக. விடுவித்து உன் உயிரை நீ
காப்பாற்றிக் கொள்.
7495. ‘என்னை வென்றுளர் எனில் இலங்கை காவல!
உன்னை வென்று உயருதல் உண்மை; ஆதலால்
பின்னை நின்று எண்ணுதல் பிழை; அப் பெய்வளை
தன்னை நன்கு அளிப்பது தவத்தின் நன்று அரோ.
அவர்கள் என்னை வெல்வார்கள். என்னை வென்றவர்களுக்கு
உன்னை வெல்லுதல் மிகவும் எளிதானதாகும். நான் கொல்லப்பட்ட பின்னராவது சீதையை
விடுவிக்கும் முடிவை எடுப்பாயாக.
7507. பாந்தளின் நெடுந்தலை வழுவி பாரொடும்
வேந்து என விளங்கிய மேரு மால்வரை
போந்தது போல் பொலந் தேரில் பொங்கிய
ஏந்தலை ஏந்து எழில் இராமன் நோக்கினான்.
தேரில் அமர்ந்திருக்கும் மலையினைப் போல இருக்கும்
கும்பகர்ணனை ஸ்ரீராமன் நோக்கினான்.
7508. ‘வீணை என்று உணரின் அஃது அன்று; விண் தொடும்
சேண் உயர் கொடியது வய வெஞ் சீயமால்;
காணினும் காலின் மேல் அரிய காட்சியன்;
பூண் ஒளிர் மார்பினன்; யாவன் போலுமால்?
இவன் வீணைக்கொடி உடையவன் அல்லன். சிம்மக் கொடி
கொண்டவன். மாவீரன். யார் இவன்?
7514. ‘ஆழியாய்! இவன் ஆகுவான்
ஏழை வாழ்வு உடை எம் முனோன்
தாழ்வு இலா ஒரு தம்பியோன்;
ஊழி நாளும் உறங்குவான்;
இராவணின் ஒப்பில்லாத தம்பி. எப்போதும் உறங்கக்
கூடியவன்.
7518. ‘ஊன் உயர்ந்த உரத்தினான்;
மேல் நிமிர்ந்த மிடுக்கினான்;
தான் உயர்ந்த தவத்தினான்;
வான் உயர்ந்த வரத்தினான்;
பெரு வலிமை கொண்டவன். பெரும் நிமிர்வு கொண்டவன்.
உயர்ந்த தவம் படைத்தவன். வானளாவிய வரங்கள் பெற்றவன்.
7524. “‘நன்று இது அன்று நமக்கு ” எனா
ஒன்று நீதி உணர்த்தினான்;
இன்று காலன் முன் எய்தினான்
என்று சொல்லி இறைஞ்சினான்.
சீதையைச் சிறை பிடித்திருப்பது நியாயமல்ல என்று
இராவணனிடம் உரைத்தவன்.
7525. என்று அவன் உரைத்தலோடும்,
இரவி சேய், ‘இவனை இன்று
கொன்று ஒரு பயனும் இல்லை;
கூடுமேல், கூட்டிக் கொண்டு
நின்றது புரிதும்; மற்று இந்
நிருதர் கோன் இடரும் நீங்கும்;
“நன்று “ என நினைந்தேன் ‘என்றான்;
நாதனும், ‘நலன் ஈது ‘என்றான்.
தூயவனான கும்பகர்ணனை நம்முடன் இணைத்துக் கொள்வோம்
என சுக்ரீவன் கூறினான்.
7526. ‘ஏகுதற்கு உரியார் யாரே? ‘
என்றலும், இலங்கை வேந்தன்,
‘ஆகின் மற்று அடியேன் சென்று
அங்கு அறிவினால் அவனை உள்ளம்
சேகு அறத் தரெுட்டி, ஈண்டுச்
சேருமேல், சேர்ப்பன் ‘என்றான்;
மேகம் ஒப்பானும், ‘நன்று, போக! ‘
என விடையும் ஈந்தான்.
வீடணன் கும்பகர்ணனிடம் தான் சென்று நியாயத்தை
எடுத்துச் சொல்கிறேன் என்றான். ராமனும் விடை தந்து அனுப்பினான்.
7527. தந்திரக் கடலை நீந்தி,
தன் பெரும் படையைச் சார்ந்தான்;
வெந்திறலவனுக்கு, ‘ஐய!
வீடணன் விரைவின் உன்பால்
வந்தனன் ‘என்னச் சொன்னார்;
வரம்பு இலா உவகை கூர்ந்து,
சிந்தையால் களிக்கின்றான்தன்
செறிகழல் சென்னி சேர்த்தான்
வீடணன் கும்பகர்ணனிடம் சென்று அடி பணிந்து
வணங்கினான்.
7528. முந்தி வந்து இறைஞ்சினானை,
முகந்து, உயிர் மூழ்கப் புல்லி,
‘உய்ந்தனை, ஒருவன் போனாய் ‘
என மனம் உவக்கின்றேன் தன
சிந்தனை முழுதும் சிந்த,
தெளிவு இலார் போல மீள
வந்தது என், தனியே? ‘என்றான்,
மழையின் நீர் வழங்கு கண்ணான்
வீடணனை ஆரத் தழுவிய கும்பகர்ணன் ஏன் அரக்கர் சேனை
நடுவே தனியே வந்தாய் என வினவினான்.
7529. ‘அவயம் நீ பெற்றவாறும்,
அமரரும் பெறுதல் ஆற்றா
உவய லோகத்திலுள்ள சிறப்பும்,
கேட்டு உவந்தேன், உள்ளம்
கவிஞரின் அறிவு மிக்காய்!
காலன் வாய்க் களிக்கின்றேம்பால்
நவை உற வந்தது என், நீ?
அமுது உண்பாய் நஞ்சு உண்பாயோ?
உன்னை மரணம் சூழ்ந்திருக்கும் இவ்விடம் வந்தது
ஏன்?
7530. “‘குலத்து இயல்பு அழிந்ததேனும்,
குமர! மற்று உன்னைக் கொண்டே
புலத்தியன் மரபு, மாயாப்
புண்ணியம் பொருந்திற்று ‘‘ என்னா,
வலத்து இயல் தோளை நோக்கி
மகிழ்கின்றேன்; மன்ன வாயை
உலத்தினை, திரிய வந்தாய்;
உளைகின்றது உள்ளம், அந்தோ.
7535. ‘ஐய! நீ அயோத்தி வேந்தற்கு
அடைக்கலம் ஆகி, ஆங்கே
உய்கிலை என்னின், மற்று இவ்
அரக்கராய் உள்ேளார் எல்லாம்
எய்கணை மாரியாலே இறந்து,
பாழ் முழுதும் பட்டால்,
கையினால் எள் நீர் நல்கி,
கடன் கழிப்பாரைக் காட்டாய்.
நீ இராமனிடம் அடைக்கலம் ஆனது நல்ல முடிவு.
அரக்கர்களுக்கு எள்ளும் நீரும் இறைத்து இறுதிக்கடன் செய்வதற்கு நீ மட்டுமாவது
எஞ்சுவாய்.
7537. ‘இருள் உறு சிந்தையேற்கும்
இன் அருள் சுரந்த வீரன்
அருளும், நீ சேரின்; ஒன்றோ,
அவயவமும் அளிக்கும்; அன்றி,
மருள் உறு பிறவி நோய்க்கு
மருந்தும் ஆம்; மாறிச் செல்லும்
உருளுறு சகட வாழ்க்கை
ஒழித்து, வீடு அளிக்கும் அன்றே.
7538. ‘எனக்கு அவன் தந்த செல்வத்து
இலங்கையும் அரசும் எல்லாம்
நினக்கு நான் தருவென்; தந்து,
உன் ஏவலின் நெடிது நிற்பென்;
உனக்கு இதின் உறுதி இல்லை;
உத்தம! உன்பின் வந்தேன்;
மனக்கு நோய் துடைத்து,
வந்த மரபையும் விளக்கு வாழி!
ஸ்ரீராமன் அளித்த இலங்கை அரசை நான் உனக்கு
அளிக்கிறேன். நீ எங்களுடன் இணைந்து கொள்க.
7553. ‘நீர் கோல வாழ்வை நச்சி,
நெடிது நாள் வளர்த்துப் பின்னைப்
போர்க் கோலம் செய்து விட்டாற்கு
உயிர்கொடாது, அங்குப் போகேன்;
தார்க் கோல மேனி மைந்த!
என் துயர் தவிர்த்தி ஆகின்,
கார் கோல மேனியானைக்
கூடுதி கடிதின் ஏகி.
உலக வாழ்க்கை நிலையில்லாதது. அதன் மீது ஏற்படும்
விருப்பத்துக்காக என் மீது நம்பிக்கை வைத்துள்ள இராவணனுக்கு உயிர் தராமல் போக
மாட்டேன்.
7566. வணங்கினான்; வணங்கி, கண்ணும்
வதனமும் மனமும் வாயும்
உணங்கினான்; உயிரோடு யாக்கை
ஒடுங்கினான்; ‘உரைசெய்து இன்னும்
பிணங்கினால் ஆவது இல்லை;
பெயர்வது ‘என்று உணர்ந்து பேர்ந்தான்,
குணங்களால் உயர்ந்தான், சேனைக்
கடல் எலாம் கரங்கள் கூப்ப.
7568. எய்திய நிருதர் கோனும்
இராமனை இறைஞ்சி, ‘ எந்தாய்!
உய்திறன் உடையார்க்கு அன்றோ
அற நெறி ஒழுக்கம் உண்மை?
பெய்திறன் எல்லாம் பெய்து
பேசினன்; பெயருந் தன்மை
செய்திலன்; குலத்து மானம்
தீர்ந்திலன் சிறிதும் என்றான்.
7685. மீட்டு அவன் கரங்களால் விலங்கல் ஆரை
மூட்டு அற நீக்குவான் முயலும் வேலையில்
வாட்டம் இல் வைத் தலை வயங்கு வாளிகள்
சேட்டு அகல் நெற்றியின் இரண்டு சேர்த்தினான்.
கும்பகர்ணனது அகன்ற நெற்றியின் மீது இரண்டு
வாளிகளை இராமன் ஏவினான்.
7686. சுற்றிய குருதியின் செக்கர் சூழ்ந்து எழ
நெற்றியின் நெடுங்கணை ஒளிர நின்றவன்
முற்றிய கதிரவன் முளைக்கும் முந்து வந்து
உற்று எழும் அருணனது உதயம் போன்றனன்.
நெற்றிக் குருதியால் நிறைந்த கும்பகர்ணனது முகம்
செக்கச் சிவந்த வானத்தில் எழுந்த கதிரவன் போல் இருந்தது.
7687. குன்றின் வீழ் அருவியின் குதித்துக் கோத்து இழி
புன் தலைக் குருதிநீர் முகத்தைப் போர்த்தலும்
இன் துயில் எழுந்தனெ உணர்ச்சி எய்தினான்;
வன் திறல் தோற்றிலான் மயக்கம் எய்தினான்.
நெற்றியில் தாக்கப்பட்ட கும்பகர்ணன் மயக்கம்
அடைந்தான்.
7689. கண்டனன் நாயகன்தன்னை,
கண்ணுறா,
தண்டல் இல் மானமும்
நாணும் தாங்கினான்,
விண்டவன் நாசியும்
செவியும் வேரொடும்
கொண்டனன், எழுந்து போய்த்
தமரைக் கூடினான்.
சுக்ரீவன் கும்பகர்ணனது மூக்கையும் காதுகளையும்
பிய்த்து எடுத்துக் கொண்டு சென்று வானர சேனையுடன் இணைந்து கொண்டான்.
7690. வானரம் ஆர்த்தன; மழையும் ஆர்த்தன;
தானமும் ஆர்த்தன; தவமும் ஆர்த்தன;
மீன் நரல் வேலையும் வெற்பும் ஆர்த்தன;
வானவரோடு நின்று அறமும் ஆர்த்ததே.
7691. காந்து இகல் அரக்கன் வெங்கரத்துள் நீங்கிய
ஏந்தலை அகம் மகிழ்ந்து எய்த நோக்கிய
வேந்தனும் சானகி இலங்கை வெஞ்சிறைப்
போந்தனள் ஆம் எனப் பொருமல் நீங்கினான்.
7695. எண் உடைத் தன்மையன் இனைய எண் இலாப்
பெண் உடை தன்மையன் ஆய பீடையால்
புண் உடைச் செவியொடு மூக்கும் போன்றவால்
கண்ணுடைக் குழிகளும் குருதி கால்வன.
7723. பனிப் பட்டால் எனக் கதிர்வரப்
படுவது பட்டது, அப்படை; பற்றார்
துனிப் பட்டார் எனத் துலங்கினர்
இமையவர்; ‘யாவர்க்குந் தோலாதான்
இனிப் பட்டான் ‘என, வீங்கின
அரக்கரும் ஏங்கினர்; ‘இவன் அந்தோ,
தனிப் பட்டான்! ‘என, அவன் முகன்
நோக்கி ஒன்று உரைத்தனன், தனிநாதன்.
7724. ஏதியோடு எதிர் பெருந்துணை இழந்தனை;
எதிர் ஒருதனி நின்றாய்;
நீதியோனுடன் பிறந்தனை ஆதலின்,
நின் உயிர் நினக்கு ஈவன்;
போதியோ? பின்றை வருதியோ?
அன்று எனின் போர்புரிந்து இப்போதே
சாதியோ? உனக்கு உறுவது
சொல்லுதி, சமைவுறத் தரெிந்து அம்மா!
களத்தில் தனியாய் நிற்கும் கும்பகர்ணனே! உன் உயிரை
உனக்கு அளிக்கிறேன். நீ மீண்டும் திரும்பி வா. அல்லது உன்னை இப்போதே கொல்கிறேன்.
உனது விருப்பம் என்ன?
7725. ‘இழைத்த தீவினை இயற்றிலது ஆகலின்,
யான் உனை இளையோனால்
அழைத்த போதினும் வந்திலை,
அந்தகன் ஆணையின்வழி நின்றாய்;
பிழைத்ததால் உனக்கு அருந்திரு,
நாெளாடு; பெருந்துயில் நெடுங்காலம்
உழைத்து வீடுவது ஆயினை; என் உனக்கு
உறுவது ஒன்று? உரை என்றான்.
வீடணன் சொல் கேட்டு நீ எங்களுடன் இணையவும் இல்லை.
உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்.
7726. ‘மற்று எலாம் நிற்க; வாசியும்,
மானமும், மறத்துறை வழுவாத
கொற்ற நீதியும், குலமுதல் தருமமும்,
என்று இவை குடியாகப்
பெற்ற நுங்களால், எங்களைப் பிரிந்து,
தன் பெருஞ் செவி மூக்கோடும்
அற்ற எங்கை போல் என்முகம் காட்டி
நின்று ஆற்றலென் உயிர் அம்மா!
செவியும் நாசியும் இன்றி நான் அரக்கர்கள் முன்
முகம் காட்ட விரும்பவில்லை.
7727. ‘நோக்கு இழந்தனர் வானவர், எங்களால்;
அவ் வகை நிலை நோக்கி,
தாக்கணங்கு அனையவள், பிறர்மனை ‘
எனத் தடுத்தனென் தக்கோர் முன்
வாக்கு இழந்தது என்று அயர்வுறுவேன்
செவி தன்னொடு மாற்றாரால்
மூக்கு இழந்த பின் மீளல் என்றால்,
அது முடியுமோ? முடியாதாய்!
7733. தாக்குகின்றன நுழைகில தலை;
அது, தாமரைத் தடங்கண்ணான்
நோக்கி, இங்கு இது சங்கரன் கவசம் ‘
என்று உணர்வுற நுனித்து உன்னி,
ஆக்கி அங்கு அவன் அடுபடை
தொடுத்துவிட்டு அறுத்தனன்; அது சிந்தி
வீக்கு இழந்தது வீழ்ந்தது,
வரைசுழல் விரிசுடர் வீழ்ந்து என்ன.
கும்பகர்ணனுக்கு சங்கரன் கொடுத்த கவசத்தை
அறுத்தான் இராமன்.
7738. அலக்கண் உற்றது தீவினை; நல்வினை
ஆர்த்து எழுந்தது; வேர்த்துக்
கலக்கம் உற்றனர், இராக்கதர்
‘கால வெங்கருங்கடல் திரைபோலும்
வலக் கை அற்றது, வாெளாடும்;
கோளுடை வான மா மதி போலும்;
இலக்கை அற்றது, அவ் இலங்கைக்கும்
இராவணன் தனக்கும் ‘என்று எழுந்து ஓடி.
7742. ‘ஈற்றுக் கையையும் இக்கணத்து அரிதி ‘
என்று இமையவர் தொழுது ஏத்த,
தோற்றுக் கையகன்று ஒழிந்தவன்
நாள் அவை தொலையவும், தோன்றாத
கூற்றுக்கு ஐயமும் அச்சமும் கெட,
நெடுங்கொற்றவன் கொலை அம்பால்,
வேற்றுக் கையையும் வேலையில்
இட்டனன், வேறும் ஓர் அணை மான.
7746. நிலத்தகால், கனல், புனல், என
இவை முற்றும் நிருதனது உருவு ஆகி,
கொலத் தகாதது ஓர் வடிவு
கொண்டால் என உயிர்களைக் குடிப்பானை,
சலத்த காலனை, தறுகணர்க்கு
அரசனை, தருக்கினின் பெரியானை,
வலத்த காலையும், வடித்த வெங்
கணையினால் தடிந்தனன் தனு வல்லான்.
7748. .மாறுகால் இன்றி வானுற நிமிர்ந்து,
மாடு உள எலாம் வளைத்து ஏந்தி,
சூறை மாருதம் ஆம் எனச் சுழித்து,
மேல் தொடர்கின்ற தொழிலானை,
ஏறு சேவகன் எரிமுகப் பகழியால்,
இருநிலம் பொறை நீங்க,
வேறு காலையும் துணித்தனன்,
அறத்தொடு வேதங்கள் கூத்தாட.
7754. ‘புக்கு அடைந்த புறவு
ஒன்றின் பொருட்டாகத் துலை புக்க
மைக் கடம் கார் மதயானை வாள்
வேந்தன் வழி வந்தீர்!
இக்கடன்கள் உடையீர் நீர்
எம் வினை தீர்த்து, உம்முடைய
கைக்கு அடைந்தான் உயிர்
காக்கக் கடவீர், என்கடைக் கூட்டால்.
7755. ‘நீதியால் வந்ததொரு
நெடுந் தரும நெறி அல்லால்,
சாதியால் வந்த சிறு
நெறி அறியான், என் தம்பி;
ஆதியாய்! உனை அடைந்தான்;
அரசர் உருக் கொண்டு அமைந்த
வேதியா! இன்னும் உனக்கு
அடைக்கலம் யான் வேண்டினேன்.
7756. ‘வெல்லுமா நினைக்கின்ற வேல்
அரக்கன் ‘வேரோடும்
கல்லுமா முயல்கின்றான் இவன் ‘‘
என்னும் கறு உடையான்;
ஒல்லுமாறு இயலுமேல்,
உடன்பிறப்பின் பயன் ஒரான்;
கொல்லுமால், அவன் இவனை;
குறிக்கோடி, கோடாதாய்!
7757. ‘தம்பி என நினைந்து, இரங்கித்
தவிரான் அத்தகவு இல்லான்,
நம்பி! இவன்தனைக் காணின்
கொல்லும்; இறை நல்கானால்;
உம்பியைத்தான், உன்னைத்தான்
அனுமனைத்தான், ஒரு பொழுதும்
எம்பி பிரியானாக அருளுதி,
யான் வேண்டினேன்.
இராவணனிடமிருந்து வீடணனைக் காக்குமாறு
ஸ்ரீராமனிடம் வேண்டிக் கொண்டான் கும்பகர்ணன்.
7758. “மூக்கு இலா முகம் என்று
முனிவர்களும் அமரர்களும்
நோக்குவார் நோக்காமை
நுன் கணையால் என் கழுத்தை
நீக்குவாய்; நீக்கியபின்,
நெடுந்தலையைக் கருங்கடலுள்
போக்குவாய்; இது நின்னை
வேண்டுகின்ற பொருள் ‘‘ என்றான்
என் முகத்தை கடலில் அமிழ்த்திடுவாயாக.
7759. ‘வரம் கொண்டான்; இனி மறுத்தல்
வழக்கு அன்று ‘என்று ஒரு வாளி
உரம் கொண்ட தடஞ்சிலையின்
உயர் நெடுநாண் உள் கொளுவா,
சிரம் கொண்டான்; கொண்டதனைத்
திண் காற்றின் கடும் படையால்,
அரம் கொண்ட கருங்கடலின்
அழுவத்துள் அழுத்தினான்.
7760. மாக்கூடு படர்வேலை
மறி மகரத் திரை வாங்கி,
மேக்கூடு, கிழக்கூடு,
மிக்கு இரண்டு திக்கூடு
போக்கூடு தவிர்த்து, இருகண்
புகையோடு புகை உயிர்க்கும்
மூக்கூடு புகப்புக்கு
மூழ்கியது அம் முகக் குன்றம்