Tuesday, 30 July 2024

பூந்தளிர்


 ஐந்து வயதிலிருந்து எனக்கு வாசிப்புப் பழக்கம் இருந்தது. அட்சரங்களை ஒவ்வொன்றாக சேர்த்து வாசிப்பதை ஆர்வத்தின் காரணமாக மிக விரைவில் பழகிக் கொண்டேன். வீட்டிற்கு காலை நேரத்தில் தினமணி வரும். தினமணியின் தலைப்புச் செய்திகள் அனைத்தையும் வாசிப்பேன். செய்தித்தாள் வந்ததும் முதலில் வாசிக்கும் நபர் வீட்டில் நான் தான். தினமணியில் ‘’தினமணி சுடர்’’  வாரம் ஒருமுறை வெளியாகும். அதனை ஆர்வமாக வாசிப்பேன். சிறுவர் இதழ்களான பூந்தளிர், கோகுலம் ஆகிய இரு இதழ்களும் அப்போது நான் கடைக்குச் சென்று நானே வாங்கி வருவேன். பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் போது வழியில் இருக்கும் பத்திரிக்கை விற்பனை கடையில் பூந்தளிர் வந்து விட்டதா என்று அவ்வப்போது கேட்பேன். அதில் வாண்டுமாமா என்பவரின் எழுத்து எனக்கு மிகவும் பிடிக்கும். கபீஷ் என ஒரு படக்கதை வெளியாகும். அதனையும் விரும்பி வாசிப்பேன். சில ஆண்டுகளில் பூந்தளிர் பத்திரிக்கை நின்று போய் விட்டது என்று கூறினார்கள். சிறுவனான எனக்கு ஒரு பத்திரிக்கை ஏன் நின்று போக வேண்டும் என்பது புரியவேயில்லை.பூந்தளிரின் இடத்தை வேறு பத்திரிக்கையால் நிரப்ப முடியவில்லை. மூன்று ஆண்டுகள் தொடர்ந்து பூந்தளிர் வாசித்திருப்பேன். 

பத்து வயதில் ‘’பொன்னியின் செல்வன்’’ வாசித்தேன். சோழ நிலமும் காவிரியும் அரசலாறும் மனதில் நிறையத் துவங்கின.   

Sunday, 28 July 2024

நீரெனில் கடல்

கல்லூரிப் படிப்பை முடித்ததை ஒட்டிய ஆண்டுகளில் ( சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு) வாரம் ஒரு நாளாவது கடல் காணச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அனேகமாக ஒவ்வொரு ஞாயிறும் மாலை 3 மணி அளவில் வீட்டிலிருந்து இரு சக்கர வாகனத்தில் கிளம்பி ஊரிலிருந்து 25 கி.மீ தொலைவில் இருக்கும் பூம்புகாருக்கோ அல்லது தரங்கம்பாடிக்கோ செல்வேன். ஒரு வாரம் பூம்புகார் எனில் மறுவாரம் தரங்கம்பாடி.   

கடலைக் காணும் போது உள்ளம் மகிழும். குதூகலம் கொள்ளும். 

வாரம் ஒரு முறையாவது கடல் காணச் செல்லும் வழக்கத்தை மீண்டும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என இன்று சென்ற போது எண்ணினேன். 

தடாகம் ஒன்று அமைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றிய பின்பு முதல் முறையாகக் கடல் காணச் செல்கிறேன். அந்த உணர்வெழுச்சியின் விளைவாக கடலலைகளுக்குள் நின்று கொண்டு கடலை வணங்கினேன். நீர்க்கடவுள் மேக வர்ணன். நீர்க்கடவுள் கடலின் மீது பள்ளி கொண்டிருப்பவன். ஆழி மழைக் கண்ணன். 

இறைமை பெருங்கடல். அதன் சிறு துளியே மானுடராகிய நாம்.

Thursday, 25 July 2024

நதிமூலம்

 
மகாத்மா காந்தியின் எழுத்துக்கள் நூறு தொகுதியாக தொகுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 40,000 பக்கங்களுக்கு மேல் இருக்கக் கூடும். அவர் மறைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகும் கூட இப்போதும் அவ்வப்போது இன்னும் பிரசுரிக்கப்படாத  அவரது எழுத்துக்கள் வெளியாகின்றன. இன்று மகாத்மா குறித்து ஒரு சுவாரசியமான நூலை இணையத்தில் கண்டேன். அதாவது, மகாத்மா எழுத்துக்களில் அவர் குறிப்பிட்டிருக்கும் அவர் வாசித்த நூல்களின் பட்டியலை அவர் அந்நூல்கள் குறித்து எழுதிய குறிப்புகளுடன் வெளியிட்டிருக்கிறார்கள். மகாத்மாவின் வாசிப்பு பரந்துபட்டதாய் இருப்பதை அப்பட்டியல் மூலம் உணர முடிந்தது. ஆன்மீகம், சமயம், இலக்கியம், வரலாறு, பொருளாதாரம் என பல துறைகளிலும் மகாத்மா வாசித்துக் குவித்திருக்கிறார். உலகில் மிக அதிக பக்கங்கள் எழுதிய மனிதன் எண்ணிக்கையில் அதிக புத்தகங்களை வாசித்திருப்பதில் வியப்பேதும் இல்லையே? 

Tuesday, 23 July 2024

துலா

 

எனது நண்பர் ஒருவருக்கு காலில் சிறு புண் ஏற்பட்டிருந்தது. அவருக்கு உடலில் சர்க்கரைக் குறைபாடு உண்டு. எனவே காலில் இருந்த புண் ஆறுவதில் தாமதம் ஆனது.  சில நாட்களுக்கு முன்னால் அவர் உடல்நிலை மோசமடைந்தது. உடல் எடை பெரிதாகக் குறைந்தது. மயக்கமடைந்தார். குருதி வங்கியிலிருந்து குருதி அளிக்கப்பட்டது. 

திருச்சியில் ஒரு மருத்துவமனைக்கு நண்பரை அழைத்துச் சென்றார்கள். அந்த மருத்துவமனையில் நண்பரின் கால் அறுவைசிகிச்சை மூலம் நீக்கப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். உடனடியாக அறுவைசிகிச்சை செய்யப்பட வேண்டும் என மருத்துவர்கள் வற்புறுத்தியிருக்கிறார்கள். மூன்று மருத்துவர்கள் நண்பரைச் சூழ்ந்து கொண்டு அன்று மாலையே அறுவைசிகிச்சை செய்யப்பட வேண்டும் என விதவிதமாக கூறியிருக்கிறார்கள். இந்த தகவலைக் கேள்விப்பட்ட போது ஏன் அந்த மருத்துவமனை இன்னொரு மருத்துவரின் ‘’செகண்ட் ஒப்பீனியன்’’ கேட்கக் கூட முயலவில்லை என்பது ஆச்சர்யமாக இருந்தது. நண்பர் அங்கிருந்து தப்பி ஊர் திரும்பி விட்டார். 

இவ்விதமான சர்க்கரை நோய் - கால் புண் ஆகியவற்றை கும்பகோணத்தில் ஒரு மருத்துவமனையில் சிறப்பாக மருத்துவம் பார்க்கிறார்கள் என்பதை அறிந்து அந்த மருத்துவமனையில் நண்பர் சென்று சேர்ந்திருக்கிறார். சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி சாதாரண சிகிச்சையின் மூலமே குணப்படுத்திட முடியும் என்று அங்கே கூறியிருக்கிறார்கள். மருத்துவமனையில் சேர வேண்டும் என்பது அவசியமில்லை ; இரண்டு நாட்களுக்கு ஒருமுறை ‘’ஓ.பி பேஷண்ட்’’ ஆக வந்து ‘’டிரெஸ்ஸிங்’’ செய்து கொண்டாலே போதுமானது என்றும் கூறியிருக்கிறார்கள். இருப்பினும் நண்பர் தன் விருப்பத்தின் பேரில் அங்கே அட்மிட் ஆகி விட்டார். 

நேற்று நண்பரைக் காண அந்த மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். அந்த மருத்துவமனையின் இயங்குமுறையின் சிறு சிறு விஷயங்களில் கூட குறைந்தபட்ச மருத்துவ அறம் இருப்பதை உணர முடிந்தது. தினமும் எல்லா நோயாளிகளுக்கும் ஒரு மருத்துவரைக் கொண்டு நோயாளிகளின் நோய் தீர்க்க உதவும் யோகாசனங்கள் கற்பிக்கப்படுகின்றன. அலோபதி மருத்துவமனையில் யோகாசனம் கற்றுத் தருவது என்பது சிறப்பான விஷயம். தலைமை மருத்துவர் முழு நேரமும் மருத்துவமனையில் இருக்கிறார். மருத்துவமனையின் ஒரு பகுதியில் அவரது வீடு அமைந்திருக்கிறது. எனவே எப்போதும் அவரை ஏதேனும் ஒரு அவசரம் எனில் அழைக்க முடியும். 

நண்பர் இப்போது நலமுடன் இருக்கிறார். நண்பருடன் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தேன். அனேகமாக இன்றோ நாளையோ டிஸ்சார்ஜ் ஆகி ஊர் திரும்பி விடுவார். திருச்சி மருத்துவமனை அனுபவம் அவருக்கு பேரச்சத்தை அளித்திருந்தது. குடந்தை மருத்துவமனை அனுபவத்தால் அந்த கொடிய நினைவிலிருந்து மீண்டிருக்கிறார். 




Sunday, 21 July 2024

எதிர்பாராத இனிமை


ஊருக்கு அருகே உள்ள கிராமம் ஒன்றில் எனது நண்பரான ஐ.டி ஊழியர் வசிக்கிறார். அவர் தனது 3 ஏக்கர் நெல் வயலை முழுமையாக தேக்குத் தோட்டமாக மாற்றினார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் நடப்பட்ட அந்த தேக்கங்கன்றுகள் இன்று 15 அடிக்கும் மேற்பட்ட உயரம் வளர்ந்துள்ளன.   

தனது முயற்சியால் தனது நெல்வயலை தேக்குத் தோட்டமாக மாற்றிய ஐ டி ஊழியரின் உறவினர் ஒருவர் அவரை அணுகி தனது 3 ஏக்கர் வயலையும் தேக்குத் தோட்டமாக மாற்றித் தருமாறு கேட்டிருக்கிறார். 

தேக்கு வளர்ப்பு குறித்த தனது இரண்டாண்டு அனுபவங்களின் செழுமையால் வயலை மேடாக்குவதிலிருந்து மரக்கன்றுகள் நடுவது வரை நேர்த்தியாக திட்டமிட்டு செயலாக்கியிருக்கிறார். வயலின் நடுவே ஒரு பண்ணைக் குட்டை உருவாக்கப்பட்டு அந்த மண் மூலம் 3 ஏக்கர் நிலமும் மேடாக்கப்பட்டது. கடந்த மூன்று மாதங்களாக பல்வேறு விதமான எந்திரங்கள் - ஜே.சி.பி, டிராக்டர், ஹிட்டாச்சி - செயலாற்றிக் கொண்டிருந்தன. நான் இரண்டு மூன்று முறை அங்கு சென்று பார்த்து விட்டு வந்தேன்.இன்று நண்பர் வயலுக்கு வந்து நடப்பட்டிருக்கும் மரக்கன்றுகளை வந்து பார்க்குமாறு சொன்ன போது தேக்கு மரக்கன்றுகள் நடப்பட்டிருக்கும் என்னும் எதிர்பார்ப்புடன் சென்றேன். அப்போது ஒரு எதிர்பாராத இனிமையை அறிந்தேன்.

தேக்கு மரத்துக்குப் பதிலாக சந்தன மரங்களை நடுவது என நண்பரும் அவரது உறவினரும் முடிவெடுத்து 3 ஏக்கரில் 700 சந்தன மரக்கன்றுகளை நட்டிருக்கின்றனர். சந்தன மரம் செல்வச் செழிப்பையும் வளமையையும் அளிக்கும் மரம் என்பது இந்தியர்களின் நம்பிக்கை. 

சந்தன மரத்துக்கு ஒரு இயல்பு உண்டு. அது ஒரு சாறுண்ணித் தாவரம். அதாவது அதனால் மற்ற தாவரங்களைப் போல் மண்ணிலிருந்து தான் வளர்வதற்குத் தேவையான சத்துக்களை எடுத்துக் கொள்ள தெரியாது. அருகில் இருக்கும் தாவரத்தின் வேருடன் சந்தன மரத்தின் வேர் சென்று பிணைந்து கொள்ளும். அந்த மரத்தின் வேரிலிருந்தே தான் வளரத் தேவையான சத்தை அதனால் எடுத்துக் கொள்ள முடியும். சந்தனக் கன்று சிறு செடியாய் இருக்கும் போது அதன் அடியில் கீரைகளை நட வேண்டும். கீரைகளின் வேரிலிருந்து சத்துக்களை எடுத்துக் கொண்டு வளரத் தொடங்கும். சந்தனத்தின் அருகில் வேப்ப மரமும் வளர்க்க வேண்டும். நன்றாக வளர்ந்து வேர் பிடித்ததும் வேம்பின் வேரை சார்ந்து வளரத் தொடங்கும். சந்தனத் தோட்டம் அமைக்கும் போது சந்தன மரத்தின் வளர்ச்சிக்கு துணை செய்யும் பணி மட்டுமே வேம்புக்கு என்பதால் அதனை ஒரு குறிப்பிட்ட உயரம் மட்டுமே இருக்குமாறு பார்த்துக் கொள்வார்கள். 

நண்பர் ஒரு முக்கிய முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளார். நண்பரின் முயற்சிக்கும் திட்டமிடலுக்கும் செயலாக்கத்துக்கும் வாழ்த்துக்கள்!

வன வாழ்க்கை - அத்தியாயம் 11- உயர் நெறிகள்

 மனிதர்களுக்கு சிறு வயதிலேயே இயற்கையின் பிரும்மாண்டத்தை உணரும் வாய்ப்புகள் உருவாக்கித் தரப்பட வேண்டும். இயற்கை என்பது பெரும் பிரவாகம். அதனை உணர்பவர்கள் கைக்கொள்ளும் நெறிகள் உயர் நெறிகளாக இருக்கும். 

Saturday, 20 July 2024

மச்சாவதாரம்

மீனுடன்
மீன்களுடன்
உங்களுக்கு நெருக்கம் உண்டா ? 
நீராட
ஆற்றில் இறங்கும் போது
சிறு சிறு மீன்கள் 
உங்கள் உடலை
சிறிது சிறிது
கடித்ததுண்டா?
பளபளத்துக் கொண்டு
வழுவழுப்பாக 
இருக்கும் மீன்களை
செதில் செதிலாக 
இருக்கும் மீன்களை
நீங்கள் கண்டதுண்டா?
நீரில் ஸ்பரிசித்ததுண்டா?
மீன்களிடம் எப்போதும் ஒரு துடிப்பு இருக்கிறது
நீரில் அதன் உடல் அசைந்து கொண்டிருக்கிறது
சிறிய மற்றும் பெரிய அசைவுகள்
கரையில் விழ நேர்ந்தாலும்
மீன் கொத்தியின் அலகில் சிக்கிக் கொண்டாலும்
அவை அசைந்து கொண்டே இருக்கின்றன
அவை துடித்துக் கொண்டே இருக்கின்றன
அசைந்து கொண்டே இருப்பதால் 
நட்சத்திரத்தை வான்மீன் என்கிறோம்
தம் அசைவால்
துடிப்பால்
இருப்பை 
அற்புதமாக்கிக் கொள்கின்றன
மீன்கள்
மீன்களின் அசைவில் 
அற்புதம் 
உணரப்பட்டால் 
வான்மீன்கள் துடிக்கும் வெளியால்
சூழ்ப்பட்ட இந்த உலகின்
மேலும் அற்புதங்களை
கணம் கணமாய்
உணர்வீர்கள்

வன வாழ்க்கை - அத்தியாயம் 10 - உணவும் உழைப்பும்

 கடும் உடல் உழைப்பை நல்கக் கூடியவர்கள் உட்கொள்ள வேண்டிய உணவின் அளவு அதிகம் என்பது எளிதில் புரிந்து கொள்ளக் கூடியதே. குறைவான உடல் உழைப்பை அளிக்கக்க்கூடியவர்களும் அதிக உணவை உண்ணக் கூடிய பழக்கம் இருக்கிறது. அவர்கள் சகஜமான சுமுகமான உடல் இயக்கத்துக்கு ஒருவேளை உணவருந்தினால் போதுமானது. எனினும் மனிதர்கள் ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு என்னும் பழக்கத்துக்கு ஆளாகி விட்டனர். மேலும் அந்த மூன்று வேளை உணவுக்கான செல்வத்தை ஈட்ட வாழ்நாள் முழுதும் பொருள் ஈட்டிக் கொண்டிருக்கின்றனர். இது குறித்து மனிதர்கள் சிந்திக்க வேண்டும். 

Friday, 19 July 2024

வன வாழ்க்கை - அத்தியாயம் 8 - கிராமம்

 தோரோ வால்டன் ஏரிக்கரையில் வசித்த நாட்களில் எப்போதாவது வால்டனிலிருந்து சற்று தொலைவில் இருக்கும் கிராமத்துக்குச் செல்வதுண்டு. அங்கிருக்கும் மக்களை பார்த்து விட்டு அவர்களுடன் உரையாடி விட்டு மீண்டும் வால்டனுக்கு மீள்வதை ஒரு வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

Thursday, 18 July 2024

நண்பர் அறிந்த மொழிகள்

 எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவர் ஓர் அறிஞர். அவர் ஏழு மொழிகள் அறிந்தவர். அவரைப் பற்றி நான் ஒரு பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன். ( ஒரு நண்பரின் யோசனை). 


இன்று நேற்று அறிமுகமான வாசக நண்பரிடம் உரையாடிக் கொண்டிருந்தேன். அப்போது அவர் தனக்கு தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகள் தெரியும் என்று கூறினார். ஒரு மோட்டார்சைக்கிள் பயணியாக நான் நாடு முழுதும் சுற்றியிருக்கிறேன். ஒரு மொழி என்பதன் அற்புதமான சாத்தியங்கள் எனக்குத் தெரியும். மனிதர்களை இணைக்க மொழி அற்புதமாக செயலாற்றும் ஒரு கருவி. 

நண்பரின் அவதானங்கள் சிறப்பானவை. அவரது உரையாடல் மொழி மிக மென்மையானது. அவரது சொற்தேர்வுகள் நேர்த்தியாவை. உரையாடலின் போது தன்னுடைய சொந்த சேகரிப்பில் 1000 புத்தகங்கள் இருக்கும் என்று சொன்னார். எனது உள்ளுணர்வு அவர் எழுதக் கூடியவர் எழுத வாய்ப்புள்ளவர் என்று சொன்னது. அதனை அவரிடம் நேற்றே சொன்னேன். இன்று தான் அறிந்த மொழிகளைக் கூறியதும் அவரை மொழிபெயர்ப்பில் ஈடுபடுமாறு கேட்டுக் கொண்டேன். அவர் கூடிய விரைவில் மொழியில் படைப்பூக்கத்துடன் ஈடுபடுவார் என என் மனம் எண்ணுகிறது. 

நண்பர் தனது தந்தையின் நினைவுகளை என்னிடம் பகிர்ந்து கொண்டார். அவர் தந்தை தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மராத்தி, உருது, ஆங்கிலம் ஆகிய எட்டு மொழிகள் அறிந்தவர் என்று கூறினார். மானுடம் வெல்லும் என்னும் கம்பன் சொல் என் நினைவில் எழுந்தது.