Wednesday, 29 January 2025

சந்தானம்

 இரண்டு குடும்பங்கள் எதிரெதிர் வீட்டில் குடியிருக்கின்றன. ஒரு குடும்பத்தின் தலைவருக்கு ‘’ஐலுரோஃபோபியா’’. அதாவது பூனையைக் கண்டால் பயம். எதிர் வீட்டில் குடியிருக்கும் குடும்பம் வளர்ப்புப் பூனையை குழந்தை என வளர்க்கிறது. இந்த இரு குடும்பத்துக்கும் பூனையால் நடக்கும் இரு சம்பவங்களே தி. ஜா வின் ‘’சந்தானம்’’ சிறுகதை. 

மேகம் - கருநிலவு

 இரண்டு சினேகிதிகள். அவர்கள் வாழும் குடும்பத்தின் சுபாவம் இருவரையும் பாதிக்கிறது. ஒருத்தி சூழலின் மூலம் மேலும் பண்பில் வளர்கிறாள். இன்னொருத்தி சூழலால் தன்னை தாழ்த்திக் கொள்கிறாள். தி. ஜா அதனை மேகம்- கருநிலவு என்ற சிறுகதையில் எழுதிப் பார்க்கிறார். 

மேரியின் ஆட்டுக்குட்டி

 பதின் வயது சிறுமி ஒருத்தி பெண்கள் விடுதி ஒன்றில் இருந்து கொண்டு பள்ளிப்படிப்பை படிக்கிறாள். அவளது பாடத்தில் ‘’மேரியின் ஆட்டுக்குட்டி’’ என்ற பாடல் வருகிறது. சிறுமி சிறு வயதில் ஏமாற்றப்பட்டு கர்ப்பமடைந்து ஒரு குழந்தையை ஈன்றவள். மேரியின் ஆட்டுக்குட்டி பாடலுக்கும் அவள் வாழ்வுக்கும் ஒற்றுமைகள் பல இருக்கின்றன. துயரம் வெவ்வேறு வகைகளில் சூழ்கிறது அவள் வாழ்வை. அவளுக்கு மீட்பு என நிகழ்ந்தது எது என்னும் கேள்வியை சிறுகதையாக்கி உள்ளார் தி.ஜா

Monday, 27 January 2025

ஸீடிஎன்

 1965ல் இந்த கதையை எழுதியிருக்கிறார் தி.ஜா. இந்திய அதிகார வர்க்கம், சராசரி இந்திய மனநிலை ஆகியவற்றைப் பகடி செய்து எழுதப்பட்ட சிறுகதை. 

தாத்தாவும் பேரனும்

பண்டைய வரலாற்றுக் காலகட்ட கதை ஒன்றை எழுதியிருக்கிறார் தி.ஜா. அக்கதையே ‘’தாத்தாவும் பேரனும்’’. பேத புத்தியை அகத்தில் கொண்டிருக்கிறான் பாட்டன். பாட்டன் மேல் குரோதம் கொண்டிருக்கிறான் பேரன். பேதமும் குரோதமும் ரணகளத்துக்கு இருவரையும் இட்டுச் செல்கின்றன. இருவரும் அடைந்தது என்ன என்னும் கேள்விக்கான பதிலை வாசகனைச் சிந்திக்கச் செய்கிறது. இருவரும் இழந்தது என்ன என்பதையும் வாசகனை உணர வைக்கிறது.   

விரல்

 ஒரு கனவான். மிகவும் நாசுக்கானவர். இது அவருடைய ஒரு இயல்பு. தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சில அற்பத்தனங்களைச் செய்கிறார். அவர் வீணை வாசிக்கக் கூடியவர். அவரது விரல்கள் வீணை மூலம் நிகழ்த்தும் அற்புதத்தை கண்ட ஒருவர் அந்த கரங்களா அற்பத்தனம் நிகழ்த்தின என துணுக்குறுகிறார். எதிர்பாரா சிறு விபத்து அவர் விரல்களை நசுக்கி விடுகிறது. தி.ஜா வின் விரல் சிறுகதை ஒரு கனவானின் ஒளி மிக்க பக்கத்தையும் இருள் கப்பியிருக்கும் பகுதியையும் அடையாளம் காட்டிச் செல்கிறது. 

Sunday, 26 January 2025

இவனும் அவனும் நானும்

 காம குரோத மோகம் லோபம் மதம் மாச்சர்யம் என்பது மனித மனத்தின் ஆறு ப்கைவர்கள். எனினும் மனித மனம் அவற்றை பகையென்று எண்ணி விலகி நின்றிருப்பதில்லை. அவை உட்பகைவர்கள். உடனிருந்தே அழிப்பவை. அவற்றுடன் நேரடியாகப் போராடுவதை விட அவற்றை விலக்கி வைப்பதே பாதுகாப்பான அணுகுமுறை. மனித மனம் அந்த ஆறு பகைவர்களுடனும் எப்போதும் விஷப் பரீட்சை செய்து கொண்டேயிருக்கிறது. அந்த விஷப்பரீட்சை குறித்த கதை தி.ஜா வின் ‘’இவனும் அவனும் நானும்’’. 

ஒரு விசாரணை

 நவரசங்களை வெளிப்படுத்தி நாடகம் போடும் ஒரு கோஷ்டி. அந்த கோஷ்டியில் இருவர் காதலிக்கின்றனர். காதலித்து பதிவுத் திருமணம் செய்து கொள்கிறார்கள். அந்த திருமணத்துக்கு நாடகக் கோஷ்டியில் பலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். சிலர் ஆதரவு தெரிவிக்கின்றனர். வாதப் பிரதிவாதங்கள் நிகழ்கின்றன. விசாரணை முடிகிறது. காலைக் காட்சி முடிந்து மாலைக் காட்சி தொடங்குவது போல விசாரணை முடிந்து நடிகர்களின் அன்றாட வாழ்க்கை தொடங்குகிறது. இதுவே தி.ஜா வின் ‘’ஒரு விசாரணை’’ சிறுகதை. 

போர்ஷன் காலி

நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த நடுவயது கொண்ட இரண்டு நண்பர்கள். கலையில் பொது விஷயங்களில் ஆர்வம் கொண்ட ஒரு பேராசிரியர் ஒருவர். அவரது நண்பரான சூது வாது அறியாத இன்னொருவர். பேராசிரியர்  மகள் பிரசவத்துக்காக பிறந்தகம் வந்திருக்கும் சமயம் பேராசிரியர் தன் வீட்டின் கீழ் போர்ஷனில் குடியிருக்கும் குடும்பத்தின் இளம் பெண்ணுக்கு ஒரு காதல் கடிதம் எழுதிக் கொடுத்ததாக ஒரு பேச்சு எழுகிறது. சுற்றியிருப்பவர்கள் கொதித்துப் பொகிறார்கள். குடித்தனக்காரர் வீட்டை காலி செய்து விட்டு சென்று விடுகிறார். நீண்ட ஆண்டுகளாக வீட்டை காலி செய்யாமல் இருந்தார் ; எந்நேரமும் சினிமாப் பாட்டு அவர்கள் வீட்டில் ஓடிக் கொண்டேயிருந்தது ; அதன் காரணத்துக்காகவே இப்படி ஒரு அதிர்ச்சிகரமான நடவடிக்கை எடுத்தேன் என்கிறார் பேராசிரியர் சூது வாது அறியாத நண்பரிடம். நண்பருக்கு நம்புவதா நம்பாமல் இருப்பதா என்று தெரியவில்லை. தன் மனைவியிடம் பேராசிரியர் சொன்னதை அப்படியே வந்து சொல்கிறார். முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார்; அதை அப்படியே கேட்டு நம்புகிறீர்களே என்கிறாள் மனைவி. தி.ஜா வின் ‘’போர்ஷன் காலி’’ நல்ல ஒரு ஹாஸ்ய கதை. 

Saturday, 25 January 2025

ஒரு காட்சி

வீட்டிலிருந்து 600 மீட்டர் தூரத்தில் சற்றே பெரிய மனை ஒன்றில் சிறு புதர்கள் அடர்த்தியாக மண்டியிருந்தது. அதனைக் கடந்து செல்கையில் வானில் நூறு கருடன்கள் வட்டமிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டேன். அத்தனை கருடன்களை ஒரே இடத்தில் பார்த்தது ஆச்சர்யம் அளித்தது. ஏன் அவை அந்த இடத்தை வட்டமிடுகின்றன என சற்று நின்று நோக்கினேன். அந்த புதரிலிருந்து ஈசல்கள் ஆயிரக்கணக்கில் வெளிப்பட்டுக் கொண்டிருந்தன. வெளிப்படும் ஈசல்களை உணவாக்கிக் கொள்ள கருடன்கள் வட்டமிடுகின்றன. வட்டமிடும் வேகத்தில் தன் உகிர்களால் ஈசலைக் கவ்விக் கொள்கின்றன. கவ்விய அடுத்த கணமே தன் வாய்க்குக் கொண்டு சென்று ஈசலை விழுங்கி விடுகின்றன. ஆயிரக்கணக்கான ஈசல்கள்- நூற்றுக்கணக்கான கருடன்கள்.  ஈசல் சில மணி நேரம் மட்டுமே உயிர்த்திருக்கும் ஜீவன். அந்திப் பொழுது தொடங்குகையில் பிறந்து சில மணி நேரங்களில் தன் வாழ்வை நிறைவு செய்து கொள்வது. ஆக்கல் காத்தல் அழித்தல் என பிரபஞ்ச இயக்கத்தை நிகழ்த்தும் இறைமையின் எல்லையின்மையை ஒரு கணம் நினைத்து வியந்தேன்.