அன்புள்ள நண்பனுக்கு,
நலமாக இருக்கிறாயா? வீட்டில் அனைவரும் நலம்தானே? அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் அனைவரும் நலமா? நீ குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் குடும்பத்தில் அனைவரும் நலமாக இருக்கிறார்கள் அல்லவா? வாழ்க்கையில் நலம் விசாரித்தல் மிகவும் நல்ல மங்களமான விஷயம் என்று தோன்றுகிறது. நாம் - மனிதர்கள் - ஒற்றுமையுடன் இருப்போமென்றால் யாவரும் நலத்துடன் சிறப்பாக இருப்பது சாத்தியமே என்று மனதுக்குப் படுகிறது. நடுவயதுக்கு வரும் போது மனிதன் சில விஷயங்களை உணர்கிறான். அனுபவம் உணர்த்தும் விஷயங்கள். உனது ஊருக்கு வர வேண்டும் என்பதும் உனது அலுவலகம் இருக்கும் இடத்தைக் காண வேண்டும் என்பதும் உன்னுடன் ஒரு சில நாட்களாவது இருக்க வேண்டும் என்பதும் எனது தீவிரமான விருப்பங்கள். இருப்பினும் பல நாட்களாக நிறைவேறாமலேயே இருக்கிறது. அதற்கான தருணம் விரைவில் வாய்க்கும் என நம்புவோம்.
உன்னுடைய கவிதைத் தொகுப்பையும் சிறுகதைத் தொகுப்பையும் கொண்டு வருவதற்கான பணிகளைத் துவக்கலாம் என இருக்கிறேன். ஃபிப்ரவரி மாதம் பிறக்க இருக்கிறது. மாதங்களில் ஃபிப்ரவரி ஒரு மினிமலிஸ்ட் மாதம். லீப் ஆண்டுக்குக் கூட 29 நாட்கள் தான்! இந்த ஃபிப்ரவரியின் 28 நாட்களில் உனது படைப்புகளை நூலாகக் கொண்டு வந்து விடலாம் என எண்ணுகிறேன். நாம் இருவரும் சந்தித்தோம் எனில் உரையாடல் மட்டுமே நடக்கும். படைப்புகளைத் தொகுக்கும் பணி நடக்காது. எனவே என்னுடைய எண்ணப்படி தொகுத்து உனக்கு அனுப்புகிறேன். நீ அவற்றில் ஏதும் மாற்றம் செய்ய நினைத்தால் செய்து விடவும். இந்த விஷயங்களில் எனக்கு ஓரளவு பரிச்சயம் உண்டு என்பதை நீ அறிவாய்.
கைப்பட கடிதம் எழுதத் தொடங்கி சென்ற மாதம் உனக்கு ஒரு கடிதம் எழுதிய பின் அடுத்த கடிதமும் உனக்குதான் எழுதியிருக்கிறேன். சமீபத்தில் நண்பர் ஒருவரின் வீட்டில் ‘’5 சப்ஜெக்ட் நோட் புக்’’ என ஒன்றைப் பார்த்தேன். எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. அனேகமாக 2 குயர் நோட்டை 5 ஆகப் பிரித்திருந்தார்கள். ஒரு பிரிவுக்கும் இன்னொரு பிரிவுக்கும் மத்தியில் ஒரு வண்ணக் காகிதம் வைத்திருந்தார்கள். எனக்கு அது மிகவும் பிடித்திருந்தது. ஐந்து பிரிவுகள் என்பது தமிழ், இங்கிலீஷ், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என நினைத்துக் கொண்டேன். எம் -1, எம் -2, ஸ்ட்ரெந்த் ஆஃப் மெட்டீரியல், ஆர். சி. சி-1, ஈ.டி என நினைவுக்கு வந்திருக்கலாம். மானசீகமாக இன்னும் பள்ளி நாட்களைத் தாண்டவில்லையோ என்ற எண்ணம் ஏற்பட்டது.
இந்த மாதம் ஒரு வாரம் குஜராத் சென்றிருந்தது மனதுக்கு உற்சாகமாக இருந்தது. ஃபிப்ரவரியில் ஒரு வாரம் உத்திரப் பிரதேசம் செல்கிறேன். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஒரு வாரம் பயணம் செய்யும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள். வாழ்வின் மிகப் பெரிய வரங்களாகவும் வரப்பிரசாதங்களாகவும் செல்வமாகவும் அவை அமையும். இமயமலையில் மலையேற்றம் செய்ய அந்த ஒரு வாரத்தை திட்டமிட்டுக் கொள்.
உனக்கு கடிதம் எழுதியது மகிழ்ச்சி தருகிறது.
அன்பும் பிரியமும்
பிரபு