Friday, 27 February 2026

ஆசிரியரும் மாணவரும் ( நகைச்சுவைக் கட்டுரை)

 எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். எங்களுக்கு 35 ஆண்டு கால பழக்கம். அவரது மிக நெருங்கிய உறவினர் ஒருவர் எனக்கு கல்லூரியில் பேராசிரியராக இருந்தார். எனது பேராசிரியர் எனது நண்பரின் நெருங்கிய உறவினர் என்பது எனக்கு கல்லூரியை நிறைவு செய்த பின்னரே தெரியும். நண்பரின் ஊர் எனக்கு கிழக்கே இருக்கிறது. கல்லூரி வடக்கே இருக்கிறது. எனது பேராசிரியர் நண்பரின் உறவினர் என்பது சமீபகாலமாகத்தான் எனக்குத் தெரிய வந்தது. பேராசிரியர் தனது நிலம் ஒன்றை விற்க விரும்புகிறார். நண்பர் மூலம் அந்த தகவல் வரப்பெற்றதும் பேராசிரியரைக் காணச் சென்றேன். ஒரு மாணவனுக்கு கல்லூரியில் நான்கு ஆண்டுகளில் 50 லிருந்து 60 பேராசிரியர்கள் வகுப்பு எடுத்திருப்பார்கள். எனவே மாணவனுக்கு ஆசிரியர்களை நன்றாக நினைவிருக்கும். பேராசிரியர்கள் ஓர் ஆண்டில் 200 மாணவர்களுக்கு வகுப்பெடுத்தால் 35 ஆண்டுகளில் 7000 மாணவர்களுக்கு வகுப்பெடுத்திருப்பார்கள். அத்தனை பேரையும் நினைவில் வைத்திருப்பது இயலாது. நண்பர் பேராசிரியரின் அலைபேசி எண் கொடுத்தார். எனக்கு அது அவ்வளவாக வசதி இல்லாத உபகரணம். அதில் குறுஞ்செய்தி அனுப்பினால் தெரிவிக்க வேண்டிய விஷயத்தை தெளிவாகத் தெரிவித்து விட்டேன் என எண்ணுவேன். பேசுவது சரியாக இருக்கிறதா என்பது எனக்கு ஐயம். இரண்டு முறை பேசினேன். ஆனால் நான் அவரது மாணவன் என்பதை தெரிவிக்கவில்லை. நண்பரின் பெயரைச் சொல்லி அறிமுகம் செய்து கொண்டேன். இன்று நேரில் சந்தித்தேன். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கிறோம். நான் படித்த ஆண்டைக் கூறி அவருடைய மாணவன் என்பதைக் கூறினேன். எங்களுக்குள் மிகவும் சகஜத்தன்மை ஏற்பட்டு விட்டது. அவர் கல்லூரியில் ‘’ஸ்டாஃப் ரூம்’’க்குள் இருக்கும் மனநிலைக்கு வந்து விட்டார். பல நகைச்சுவைகளைக் கூறினார். அவர் மிகவும் நகைச்சுவையாகப் பேசக் கூடியவர் என மாணவர்களிடம் பிரபலம். எனக்கு காலவெள்ளத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்னால் போய் விட்டதாகத் தோன்றியது. அவரது மகனை அறிமுகப்படுத்தினார். அவர் லண்டனில் வணிக மேலாண்மை படித்தவர். அவரிடம் நில விஷயங்களை நாம் பேசிக் கொள்வோம் ; தங்கள் தந்தை எனது பேராசிரியர் எனக் கூறினேன். அவரும் உற்சாகமாக சரி என்றார்.