Sunday, 30 August 2026

ஒரு குடும்பத்துக்கு என்னென்ன மரக்கன்று வழங்கலாம்?

வாழை மரம்

பப்பாளி 

பலா மரம்

நெல்லி மரம்

கொய்யா மரம்

எலுமிச்சை

நாவல்

வில்வ மரம்

வன்னி மரம்

அகத்தி

முருங்கை

சந்தனம்

வேம்பு 

மூங்கில்

சீதாப்பழம்

மாதுளை

கொடுக்காப்புளி

புங்கன்

மகிழ மரம்

ஒரு சிந்தனை - ஒரு யோசனை

’’காவிரி போற்றுதும்’’ ஒரு நுண் அமைப்பு. அதன் பலமும் அதுதான் ; அதன் எல்லையும் அதுதான். தற்போது ஒரு கிராமத்தில் மரக்கன்று வழங்கும் பணியைத் துவங்க ஆரம்பகட்ட வேலைகளைச் செய்து வருகிறேன்.  பல கிராமங்களில் பணியாற்றிய அனுபவத்தில் கிராமத்தில் அதிக மரக்கன்றுகள் வளர்க்க சிறப்பான வழிமுறைகள் என்ன என்பது குறித்து யோசித்தேன். இந்த விஷயம் குறித்த என்னுடைய எண்ணங்கள் என் அனுபவத்தின் அடிப்படையிலானவை. எல்லா இடத்துக்கும் எல்லா சூழ்நிலைக்கும் இவை பொருந்த வேண்டும் என்பது அவசியமில்லை. நான் சொல்வதற்கு நேர் எதிர் கூட சாத்தியமாக வாய்ப்பு உள்ளது. அதனைத் தெரிந்தே இதனைச் சொல்கிறேன். 

1. பொது இடங்களில் மரக்கன்றுகள் வளர்ப்பதில் கிராமங்களில் முக்கிய சிக்கல் மின்சாரக் கம்பிகள் வரை மரங்கள் வளர்ந்து மின் வினியோகத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் உயரமாக வளரும் மரங்களை பொது இடங்களில் வளர்க்க கிராம மக்கள் விரும்புவதில்லை. உயரம் குறைவாக வளரக்கூடிய மரங்களே மின் கம்பிகளுக்குக் கீழே வளர்க்க முடியும். நந்தியாவட்டை மரம் அதற்கு உகந்தது. அரளியும் உகந்தது. செம்பருத்தியும் வளர்க்கலாம். 

2. தமிழக கிராமங்களில் ஆடு மாடுகள் எல்லா இடங்களிலும் மேயும். எனவே கிராமங்களில் வளர்ப்பது என்றால் பொது இடங்களில் வளர்த்தாலும் வீட்டுத் தோட்டத்தில் வளர்த்தாலும் வேலி அவசியம். மீன்வலை வேலிகள் ஓரளவு செலவு குறைவானவை. 

3. ஒரு கிராமத்தைத் தொடர்பு கொண்டால் அதில் உள்ள எல்லா வீடுகளும் ஒரே விதமாக நல்ல முறையில் மரக்கன்றுகளை வளர்க்க வேண்டும். அனைவருமே நல்ல விதமாக வளர்க்கவே விரும்புவார்கள். செயலாக்குவதில் நிச்சயம் வித்தியாசங்கள் இருக்கும். விழுப்புணர்வின் மூலமே செயலாக்கத்தில் துல்லியத்தைக் கொண்டு வர முடியும். 

4. ஒரு கிராமத்தில் 500 வீடுகளுக்கு எலுமிச்சை மரக்கன்று கொடுக்கிறோம் என்றால் அது காய்க்க 3 ஆண்டுகள் ஆகும். ஒரு மரத்தில் 100 காய்கள் காய்த்தால் ஒவ்வொரு ஆண்டும் அந்த கிராமத்தில் 50,000 எலுமிச்சம்பழங்கள் கிடைக்கும். இது எண்ணிப்பார்க்க உற்சாகம் தரும் செயல். இருப்பினும் அந்த 3 ஆண்டுகளும் நாம் ஒவ்வொரு வீடாக செடியை எவ்விதம் பராமரிக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். ஊக்கமளிக்க வேண்டும். மண் , சூரிய ஒளி ஆகியவை பொறுத்து இடத்துக்கு இடம் செடியின் வளர்ச்சி மாறும் என்றாலும் சம அளவில் எல்லாருக்கும் நலன் கிடைக்கும் வகையில் செய்யும் பொறுப்பையும் நாமே ஏற்க வேண்டும். 

5. எனது அனுபவத்தில் கிராம மக்கள் பொதுவாக மரக்கன்றுகள் தானாக வளரும் என்ற எண்ணம் கொண்டிருக்கிறார்கள். மரங்கள் தண்ணீர் ஊற்றினால் தான் வளரும் என்பது அவர்கள் உணர்வில் இல்லை. அந்த விழுப்புணர்வை மரக்கன்றுகளை வழங்குவதற்கு முன்பும் ஏற்படுத்த வேண்டும். மரக்கன்றுகளை வழங்கும் போதும் ஏற்படுத்த வேண்டும். மரக்கன்றுகளை வழங்கிய பின்னரும் 5 ஆண்டுகளுக்கு ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் நாம் எதிர்பார்த்த பயன் கிடைக்கும். அந்த கிராமத்தின் அகத்திலும் புறத்திலும் 5 ஆண்டுகளில் மாற்றம் நடக்கும். 

Wednesday, 26 August 2026

நூதனம்

நேற்று மாலை அஞ்சல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து ஃபோன் செய்தார்கள். நிகழ்ந்த விஷயத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாகக் கூறினார்கள். ‘’நான் தான் ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப செய்கிறேன் என நினைத்தால் அஞ்சல்துறை கண்காணிப்பாளர் அலுவலகமும் வருத்தம் தெரிவிப்பதை திரும்ப திரும்ப செய்கிறது’’ என்று கூறினேன். பேசியவர் வருத்தத்துடனே பேசினார். அவரிடம் நடந்ததை ஒருமுறை கூறினேன். ஓரிரு மணி நேரங்களில் என் சி.பி.கி.ராம்.ஸ் புகாருக்கு பதில் அளிக்கப்பட்டிருந்தது. ரூ.5 போஸ்டல் ஸ்டாம்ப்பும் ரூ.5 போஸ்டல் கவரும் இருப்பு வைத்துக் கொள்ள ஒரு அஞ்சல் அலுவலகத்தால் இயலவில்லை என்றால் அந்த அஞ்சல் அலுவலகத்தை மூடி விடலாமே ; அவ்வாறு செய்தால் துறைக்கு லாபம் தானே ? என புகாரில் தெரிவித்திருந்தேன். அது அவர்களை அமைதியிழக்கச் செய்திருக்கிறது. எனக்கு கொடுத்த பதிலில் ஓர் அஞ்சலகம் ஸ்டாம்ப் , கவர் இருப்பு வைத்துக் கொள்ளவில்லை என்பதால் எந்த சேவையும் அளிப்பதில்லை எனக் கொள்ள இயலாது என்பதை முதற்கண் தெரிவித்துக் கொண்டு தங்கள் பதிலைத் தெரிவித்திருந்தார்கள்.  

அவர்கள் தெரிவித்த பதிலில் ஒரு விஷயம் நூதனமானது. அதாவது, அந்த அஞ்சல் நிலையத்தில் ரூ.5 ஸ்டாம்ப் தான் இருப்பு இல்லை ; ரூ. 4 மற்றும் ரூ.1 ஸ்டாம்ப் கள் இருந்திருக்கின்றன என்பதை பதிலில் தெரிவித்திருந்தார்கள். 

நான் கையில் உறையுடன் சென்று அதனை அனுப்ப ரூ.5 ஸ்டாம்ப் வேண்டும் எனக் கேட்கிறேன். அங்கிருந்த ஊழியர் என்ன செய்திருக்க வேண்டும் ரூ.4 ஸ்டாம்ப் ஒன்றும் ரூ.1 ஸ்டாம்ப் ஒன்றும் தந்திருக்க வேண்டாமா? அவர் இருப்பு வைத்துக் கொள்ளாததை விட ரூ.5 ஸ்டாம்புக்கு ரூ.4 ஸ்டாம்ப் ஒன்றும் ரூ.1 ஸ்டாம்ப் ஒன்றும் சமமானது என்பதை அறியாதது இன்னும் பெரிய பிழை அல்லவா?

Tuesday, 25 August 2026

மீண்டும் ஓர் அஞ்சலகம் ; மீண்டும் ஒரு சி.பி.கி.ராம்.ஸ் புகார்

இன்று அளித்த சி பி கி ராம் ஸ் புகாரின் தமிழாக்கம் 

நேற்று நண்பகல் **** ஊரில் உள்ள அஞ்சலகத்துக்குச் சென்று ரூ.5 தபால் ஸ்டாம்ப் கேட்டேன். அந்த ஊரின் சப் போஸ்ட் மாஸ்டர் தன் அஞ்சலகத்தில் ரூ. 5 ஸ்டாம்ப் கையிருப்பு இல்லை எனக் கூறினார். என் கையில் முகவரி எழுதப்பட்டு ஒட்டப்பட்டிருந்த காக்கி உறை இருந்தது. அதை அஞ்சல் உறையில் இட்டு முகவரி எழுதி தபாலை அனுப்ப முயற்சித்து ரூ.5 அஞ்சல் உறை தாருங்கள் எனக் கேட்டேன். தன் அஞ்சலகத்தில் ரூ.5 தபால் உறையும் இல்லை எனக் கூறினார். மயிலாடுதுறை எல்லைக்கு உட்பட்ட அஞ்சலகங்களில் போஸ்டல் ஸ்டாம்ப் , போஸ்டல் கவர் இல்லை எனக் கூறுவதும் அதனை நான் புகாராகத் தெரிவிப்பதும் எனக்கு இது மூன்றாவது தடவை. முதல்முறை ***** ஊரில் இல்லை என்றார்கள். இரண்டாம் முறை ***** ஊரில் இல்லை என்றார்கள். இப்போது மூன்றாவதாக ***** இந்த ஊரில். ஒரு வாடிக்கையாளர் அஞ்சல் அலுவலகத்தில் அடிப்படையான ரூ.5 போஸ்டல் ஸ்டாம்பும் ரூ.5 போஸ்டல் கவரும் எதிர்பார்ப்பது நூதனமான ஒன்றா? சாதாரண அடிப்படை விஷயம் இல்லையா? ஒரு ரயில் நிலையத்துக்குச் சென்று பயணிக்க விரும்பும் ஊருக்கு பயண டிக்கெட் கேட்டு ரயில் நிலைய ஊழியர் டிக்கெட் கையிருப்பு இல்லை எனக் கூறுவதற்கு ஒப்பான செயல் அல்லவா ஒரு போஸ்ட் ஆஃபிஸில் ரூ.5 போஸ்டல் ஸ்டாம்பும் ரூ.5 போஸ்டல் கவரும் இல்லை எனக் கூறுவது? ஒரு போஸ்ட் ஆஃபிஸ் ரூ.5 போஸ்டல் கவரும் ரூ.5 ஸ்டாம்பும் விற்பனை செய்ய இயலாத நிலையில் இருக்கிறது என்றால் அந்த போஸ்ட் ஆஃபிஸை மூடி விடுவது தானே உத்தமம்? அஞ்சல்துறைக்கு செலவு மிச்சம் அல்லவா? ரூ.5 போஸ்டல் கவர் ரூ.5 போஸ்டல் ஸ்டாம்ப் கூட இருப்பு வைத்துக் கொள்ள இயலாத அஞ்சல் அலுவலகம் வாடிக்கையாளர் சேவையை மற்ற விஷயங்களில் அளிக்குமா என்னும் ஐயம் எழுவது இயல்பான ஒன்று தானே? 

Monday, 24 August 2026

சங்கர நாராயணன்

ஊரிலிருந்து 20 கி.மீ தொலைவில் ஒரு சிவத்தலம். 1400 ஆண்டுகளுக்கு முன் சைவத் திருமுறைகளின் துவக்கம் நிகழ்ந்த ஊர். சைவத்தின் பேராலயங்களில் ஒன்று. நேற்று மாலை அந்த ஆலயத்துக்குச் சென்றிருந்தேன். ஆலயப் பிரகாரங்களில் ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டேன். கோயில் குளக்கரையில் அக்குழந்தைகளின் தாய்மார்கள் 10 பேர் ஒரு வட்டமாக அமர்ந்து துதிப்பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் அந்த ஊரில் துணிக்கடை, நகைக்கடை வைத்திருக்கும் வட இந்திய வணிகர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என யூகித்தேன். இன்னிசையால் தமிழ் பரப்பிய திருத்தலத்தில் ஒலித்த ஹிந்தி பஜன் மேலும் இனிமையை சேர்ப்பதாக எண்ணினேன். அவர்கள் துதிப்பது யாரை என அவர்கள் பாடும் பாடல்களை கவனித்தேன். ‘’கோபால்’’ ஜமுனா’’ ஆகிய வார்த்தைகள் காதில் விழுந்தன. அந்தப் பெண்கள் ராஜஸ்தான் அல்லது குஜராத் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடும். அவர்கள் இசைப்பது மீராவின் பாடல்கள். அத்தலத்தில் கோயில் கொண்டிருப்பவன் சங்கரன். அவன் சங்கர நாராயணனும் தானே! 

Sunday, 23 August 2026

ஒரு பகல் ஒரு புத்தகம் ஒரு ஆலயம்

இன்று காலையிலிருந்து மனம் அமைதியற்று இருந்தது. அந்த உணர்வை இன்னதென்று கூறிட முடியாது. எங்காவது வெளியே சென்றால் நன்றாக இருக்கும் என எண்ணினேன். என்னுடைய இரு சக்கர வாகனத்தில் சென்றால் என் மனம் விடுபடலை உணர சில மணி நேரங்களாவது ஆகும். வீட்டில் காலை 7.30 மணியளவில் சட்டை பாக்கெட்டில் ரூ.50 மட்டும் வைத்துக் கொண்டு கையில் ஒரு ஆங்கிலப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டேன். எங்கே செல்வது என பேருந்து நிலையம் செல்லும் வரை கூட எந்த உத்தேசமும் இல்லை. பேருந்து நிலையம் சென்றதும் ஒரு பேருந்தில் ஏறிக் கொண்டேன். அப்பேருந்தில் ரூ.20க்கு ஒரு பயணச்சீட்டு எடுத்துக் கொண்டேன். 30 நிமிடத்தில் பேருந்து அங்கு சென்று சேர்ந்தது. அந்த ஊரின் புராதானமான சிவாலயத்துக்குச் சென்றேன். கோயிலை ஒரு சுற்று சுற்றி விட்டு கோயில் மண்டபத்தில் அமர்ந்து கொண்டு  புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன். ஒரு புதிய இடத்தில் அமர்ந்து புத்தகம் படிப்பது என்பது அவ்வளவு இலகுவாக இராது. புதிய ஓசைகள் வாசிப்புக்கு இடையூறுகளை உண்டாக்கும். இருந்தாலும் தொடர்ந்து வாசிக்க ஆரம்பித்தேன். அந்த நூல் ‘’மரணம்’’ குறித்த நூல். மரணம் அடையக் கூடியவர்களுக்கான நூல் என அந்நூலாசியர் தன் நூல் குறித்து குறிப்பிடுகிறார். வாசிக்க மிகவும் சுவாரசியமாக இருந்தது. வாழ்வில் நிச்சயமான ஒன்று மரணம். ஒரு மனிதன் எண்ணியதை எய்த நலமுடன் வாழ செல்வந்தனாக வாழ இயலலாம் அல்லது இயலாது போகலாம் ஆனால் எந்த மனிதனும் மரணித்தே ஆக வேண்டும். இருப்பினும் மனிதர்களுக்கு ‘’மரணம்’’ குறித்த உண்ர்வு அனேகமாக இல்லை. இன்று தான் அவ்வாறு எனக் கூறிட முடியாது ; 5000 ஆண்டுகளுக்கு முன்னால் மகாபாரதத்தில் ‘’யட்சப் பிரசன்னத்தில்’’ யுதிர்ஷ்ட்ரனிடம் இந்த உலகின் ஆச்சர்யம் என்ன என யட்சன் கேட்கிறான். ‘’தினம் தினம் நூற்றுக்கணக்கானோர் சாவதை அறியும் மனிதன் அந்த சாவு தனக்கு வராது என எண்ணி செயல்படுகிறான். இதுவே உலகின் பெரும் ஆச்சர்யம்’’ என பதில் சொல்கிறான் யுதிர்ஷ்ட்ரன். நூலாசிரியர் சிறுவனாக இருந்த போது மயானங்களுக்குச் சென்று அமர்ந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். பிணங்கள் எரிவதை வேடிக்கை பார்க்க அவருக்குப் பிடித்திருக்கிறது. பிணத்தைக் கொண்டு வந்து வைத்து முதல் ஒரு மணி நேரம் பிணத்தைக் கொண்டு வந்தவர்கள் கதறி அழுகின்றனர். சிதையில் நெருப்பு வைத்து விட்டு அங்கிருந்து சென்று விடுகின்றனர். பிணம் எரியும் போது முதலில் எரிவது கழுத்துப் பகுதி. உடலில் தடிமன் குறைவான பகுதி அதுதான். கழுத்துப் பகுதி எரிந்தவுடன் பிணத்தின் தலை ‘’ஃபுட்பால்’’ போல எம்ப ஆரம்பித்து விடுகிறது. நூலாசிரியர் மரக்கட்டைகளை பிணத்தின் தலைப்பகுதியில் அதிகமாக அடுக்கி தலையாகிய ‘’ஃபுட்பால்’’ எகிறி விடாமல் பார்த்துக் கொள்கிறார். நம் உடலுக்கு பஞ்ச பூதங்களின் இயல்பாலான ஞாபகம், அன்கான்சியஸ் , சப்கான்சியஸ், கான்சியஸ் மனங்களின் ஞாபகம், அடாமிக் சப் அடாமிக் கூறுகளின் ஞாபகம், பரிணாம ஞாபகம், மரபணு ஞாபகம் என இத்தனை ஞாபகங்கள் இருக்கின்றன. யோகப்பாதையில் செல்பவர்கள் இந்த ஞாபகங்களை இல்லாமல் ஆக்குகின்றனர். இப்படியாக சென்றது அந்நூல். 

நூலை வாசித்துக் கொண்டே ஆலயத்தில் 4 மணி நேரத்துக்கு மேல் மண்டபத்தில் அமர்ந்திருந்தேன். அந்த அனுபவம் சிறப்பானதாக இருந்தது. அவ்வளவு பெரிய ஆலயத்தில் இருந்து பழகி விட்டால் வீடுகள் மிகச் சிறியதாக தோன்றத் தொடங்கி விடும். 

ஒரு குடும்பம் தன் கைமகவு ஒன்றுக்கு சோறூட்டும் சடங்கைச் செய்தனர். 

அம்மன் சன்னிதியில் ஒரு திருமணம் நடந்தது. அந்த திருமண கோஷ்டி மதிய உணவருந்த கோயிலிலிருந்தவர்களை அழைத்தனர். சென்று உணவருந்தினேன். மதிய உணவருந்திய போது தான் காலை உணவருந்தவில்லை என்பது ஞாபகத்துக்கு வந்தது. மதியம் 1 மணிக்கு கோயில் நடை சாத்தும் நேரம். நடை சாத்தினர். கோயில் வாயிலில் வானத்தைப் பார்த்துக் கொண்டு படுத்திருந்தேன். 30 நிமிடம் அவ்வாறு இருந்திருப்பேன். பின்னர் பேருந்து நிலையம் வந்து ஊருக்குப் பஸ் பிடித்து வந்து சேர்ந்தேன். பேருந்து நிலையத்திலிருந்து வீட்டுக்கு வரும் போது வழியில் ஒருவர் ‘’லிஃப்ட்’’ கொடுத்தார். வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். 

கோயில் இறைவன் உறையும் இடம். இறைவன் மனித எல்லைகளுக்கும் கணிப்புகளுக்கும் சிந்தனைகளுக்கும் அப்பாற்பட்டவன். அவனுக்கு உலகில் எறும்பும் ஒன்றே ; ஆனையும் ஒன்றே. அளவோ பாகுபாடோ அவனுக்கு கிடையாது. இறைவன் சன்னிதியில் நீண்ட நேரம் இருக்கும் போது இந்த விஷயங்கள் புலப்படுகிறது.  

Thursday, 20 August 2026

ஆலயமும் கலையும் மரபும்

நேற்று ஊருக்கு அருகில் மிகப் புராதானமான ஆலயத்துக்குச் சென்றிருந்தேன். ஆலயத்தின் இறைவன் போர்க்கடவுள். உயிர்களின் அக இருளை அழிக்கக்கூடியவன். அவன் சன்னிதி முன் கண் மூடி அமர்ந்திருந்தேன். அப்பேராலாயம் விரிந்து கிடக்க அதில் இருக்கும் ஒவ்வொரு மனிதருமே சிறு எரும்பெனவே தம்மை உணர்வார்கள் என்னும் விதமாக ஆலயம் தன் இருப்பில் நிலைத்திருந்தது. அக அலைகள் எழுந்து விழுந்து கொண்டிருந்தன. சிறிது நேரத்தில் கண்களைத் திறந்தேன். மனம் அமைதி கொண்டிருந்தது.  

அப்போது அங்கு நாதஸ்வர இசை கேட்டது. மெல்ல அந்த இசை கோயில் முழுவதும் நிரம்பியது. ஒலிபெருக்கி இல்லாத நேரடியான இசை. இவ்விதம் இந்த இசை இந்த இடத்தில் 1500 ஆண்டுகளாகக் கேட்கிறது. இந்த ஆலயம் கற்றளியாக எழுப்பப்படுவதற்கு முன் ஆலய இறைவன் விருட்சம் ஒன்றின் அடியில் வீற்றிருந்த போதும் இந்த இசை இசைக்கப்பட்டிருக்கும். 

மாலிக்காஃபூர் படையெடுத்து வந்த போதும் அதன் பின் 60 ஆண்டுகளும் இந்த இசை கேட்காமல் இருந்தது. அந்த இருளை நீக்கி எழுந்த விஜயநகரப் பேரரசு தென்னகத்தில் அந்த இசையை மீண்டும் ஒலிக்கச் செய்தனர். அதன் பின்னரும் சில ஐரோப்பிய ஆட்சியாளர்களால் இடையூறு ஏற்பட்டது. அப்போதும் அந்த இசை இடைவெளிகளுடன் கேட்டுக் கொண்டிருந்தது. 

தமிழகத்தில் 38 மாவட்டங்கள் உள்ளன. மாவட்டத்துக்கு 30 கோயில்கள் எனத் தேர்ந்தெடுத்துக் கொண்டால் கூட 1140 கோயில்கள். ஒரு கோயிலில் ‘’கோயில் பணியாளர்கள்’’ என வேதம் ஓதுபவர்கள், தேவார ஓதுவார்கள், நாதஸ்வரம், தவில் மற்றும் மற்ற இசைக்கருவிகளை இசைப்பவர்கள் என 100 பேரை அரசாங்கத்தால் நியமிக்க முடியும். அவர்களுக்கு மாத ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.25,000 வழங்க வேண்டும். மொத்தம் 1,14,000 பேர். அவர்களுக்கு ஒரு மாதத்துக்கு ஆகும் ஊதிய செலவு ரூ.250 கோடி. ஓராண்டுக்கு ரூ.3000 கோடி. ஆலயம் மூலமாக ஆலய சொத்துக்கள் மூலமாக அரசுக்கு கணிசமான வருவாய் கிடைக்கிறது. அந்த வருவாய் இவ்விதம் செலவு செய்யப்பட்டால் மாநிலத்தில் ஆன்மீகமும் கலையும் தமிழும் வளரும். அதன் மூலம் மொழியும் பண்பாடும் எல்லா மக்களையும் சென்றடையும். 

பண்டைய அரசுகள் இவ்விதமே செய்திருக்கின்றன. 

அதன் தொடர்ச்சியை ஜனநாயக அரசுகளும் செய்ய வேண்டும். 

இதன் மூலம் தமிழ் வளரும் . இசை வளரும். பண்பாடு வளரும். 

தமிழகத்தில் கடந்த 60 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த திராவிடக் கட்சிகள் பதவியிலிருந்து அகற்றப்பட்டு புதிய கட்சி ஒன்று அரசமைத்துள்ளது. இனி தமிழகத்தில் பழைய திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. புதிய கட்சிகளே இனி தமிழக அரசியலில் ஆதிக்கம் செலுத்துவர். ஏதேனும் ஓர் அரசியல் கட்சி தமிழகக் கோயில்களில் 1,00,000 ஓதுவார்கள், வேதம் ஓதுபவர்கள், நாதஸ்வர, தவில், மிருதங்கக் கலைஞர்கள் மாதம் ரூ.25,000 ஊதியத்தில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசு சார்பில் கோயில் ஊழியர்களாக நியமிக்கப்படுவார்கள் என அறிவிக்க வேண்டும்.  

Wednesday, 19 August 2026

கவிஞர் கண்ணதாசன் 100

 கவிஞர் கண்ணதாசன் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையிலும் அவருடைய பண்பாட்டுப் பங்களிப்பைப் போற்றும் வகையிலும் கவிஞர் கண்ணதாசனின் பாடல்களில் எனக்குப் பிடித்த 100 பாடல்களின் வரிகளை வெளியிட உத்தேசித்துள்ளேன். 

Tuesday, 18 August 2026

கவிஞர் கண்ணதாசன்

 
தமிழகச் சூழலில் கவிஞர் கண்ணதாசனின் ஆளுமை என்பது அரிதான ஒன்று. இருப்பினும் அவருடைய காலகட்டத்தில் தமிழகம் கணிசமான மேதைகளையும் அறிஞர்களையும் உருவாக்கியிருக்கிறது என்பதைக் காண முடியும். காந்திய யுகத்தின் உருவாக்கங்கள் அந்த நிரையில் பெரும்பான்மையினராக இருப்பதையும் நாம் அந்த விஷயத்துடன் சேர்த்து யோசிக்க வேண்டும். 

கவிஞர் கண்ணதாசன் மரபான தமிழ்க்கல்வி பயின்றவர் என்பது அவரது ஆளுமையின் முக்கியமான அம்சம் என்றும் அவரது ஆளுமைக்கு அடிப்படையாக அமைந்தது என்றும் நான் கருதுகிறேன். தமிழில் மரபுக்கவிதை இயற்றும் திறன் கண்ணதாசனுக்கு இருந்தது. 

கவிஞர், பத்திரிக்கையாளர், திரைப்படப் பாடலாசிரியர், திரைப்பட வசனகர்த்தா, நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், அரசியல்வாதி, மேடைப்பேச்சாளர், நூலாசிரியர், எழுத்தாளர் என பல வகைகளில் கவிஞர் கண்ணதாசன் தீவிரமாக செயல்பட்டிருக்கிறார். ஒருவர் தன் வாழ்வில் இத்தனை விஷயங்களில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார் என்பதே மிகப் பெரியது என்பது எனது அபிப்ராயம். 

பல விஷயங்களில் கண்ணதாசன் ஈடுபட்டிருந்தாலும் தமிழக மக்கள் அவரைக் ‘’கவிஞர் கண்ணதாசன்’’ என்றே நினைவில் ஏந்துகிறார்கள். கண்ணதாசனின் வரிகளை தங்கள் சொந்த வரிகளாக எண்ணும் தமிழக மக்கள் இன்றும் இருக்கிறார்கள். மரபினைக் கற்றவர் என்பதால் 2500 ஆண்டு தமிழ் இலக்கியமும் நம் மரபின் புராண இதிகாசங்களும் அவர் பாடல்களில் இரண்டறக் கலந்திருந்தது. கண்ணதாசனும் தமிழகமும் பிரித்துப் பார்க்க முடியாமல் இருப்பதற்கு அதுவே காரணம். 

1927ம் ஆண்டு பிறந்த அவர் 1981ம் ஆண்டு வரை 54 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார். அவர் நினைவுகளும் புகழும் வரிகளும் இன்றும் தமிழக மக்களுடன் வாழ்கிறது. 
 
கவிஞர் கண்ணதாசனின் நூற்றாண்டைத் தமிழகம் இப்போது கொண்டாடிக் கொண்டிருக்கிறது. 

Monday, 17 August 2026

கணக்கெடுப்பு எண்

இன்று வீட்டுக்கு மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளும் ஆசிரியை வந்திருந்தார். நான் கடந்த 15 நாட்களாகவே சென்சஸ் எடுக்க வீட்டுக்கு வருவார்கள் என அனைவரிடமும் கூறியிருந்தேன்.  இன்று காலை வீட்டிலிருந்து 200 மீட்டர் தொலைவில் இருந்த நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அப்போது வீட்டிலிருந்து ஃபோன் வந்தது. உடன் வீட்டுக்குச் சென்றேன். கையில் திறன்பேசியுடன் ஆசிரியை காத்திருந்தார். அவரிடம் என்னுடைய பாக்கெட் நோட்டில் குறித்து வைத்திருந்த சுய கணக்கெடுப்பு எண்ணைக் கூறினேன். அவர் தன் திறன்பேசியில் பதிவிட்டார். உடன் சென்சஸ் இணையதளத்தில் நான் பதிந்திருந்த விபரங்கள் அவர் கணக்குக்கு சென்று விட்டது. அவருக்கு மிக்க மகிழ்ச்சி. தமிழகத்தில் பத்து லட்சம் பேர் சுய கணக்கெடுப்பு விபரம் பதிவு செய்திருப்பதாகக் கூறினார். சுய கணக்கெடுப்பு பதிவு செய்திருந்தால் தங்கள் பணி மிகவும் எளிதானதாக இருக்கும் என்று சொன்னார். ஃபிப்ரவரியில் மேற்கொள்ள உள்ள மக்கள்தொகை கணக்கெடுப்புக்கும் சுய கணக்கெடுப்பு உண்டு என்று கூறினார். அவர் கூறிய தகவல் எனக்குப் புதிது. இந்த முறை மக்கள்தொகை கணக்கெடுப்பில் 40 கேள்விகள் கேட்கப்பட உள்ளன. வீட்டின் கணக்கெடுப்பு எண்ணை சுவரில் எழுதி விட்டு அடுத்த வீட்டில் கணக்கெடுப்பு மேற்கொள்ள புறப்பட்டார். 

Sunday, 16 August 2026

தெருவிளக்கும் தமிழக அரசியலும்

தமிழக அரசியலுக்கும் தெருவிளக்குகளுக்கும் மிக நெருங்கிய பொருத்தம் இருக்கிறது. தமிழக கிராமங்களில் குழல் விளக்குகள் எனப்படும் டியூப் லைட்டுகள் தெருவிளக்குகளாக இருந்தன. அதற்கு முன் குண்டு பல்புகள் தெருவிளக்குகளாக இருந்தன. இரவு நேரத்தில் மக்கள் நடமாட தெருக்களில் தெருவிளக்குகள் ஒளிர்வது அவசியம் என்பதால் தெருவிளக்கு ஓர் அத்தியாவசியத் தேவை. ஊராட்சிகள் தெருவிளக்குகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள். 

தமிழகத்தில் 2006ம் ஆண்டு தேர்தல் முடிவுகளின் படி 93 இடங்களில் வெற்றி பெற்றிருந்த திமுக காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, கம்யூனிஸ்டு கட்சிகளின் ஆதரவோடு ஒரு மைனாரிட்டி அரசை அமைத்து நடத்தியது. மேற்படி கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு தந்ததால் அந்த மைனாரிட்டி அரசு 2006 - 2011 வரை நீடித்தது. அந்தக் காலகட்டத்தில் மைனாரிட்டி திமுக அரசு இந்தோனேஷியாவிலிருந்து தரக்குறைவான நிலக்கரியை இறக்குமதி செய்து அனல் மின் நிலையங்களில் மின்சாரம் தயாரிக்கப் பயன்படுத்தியதால் மின்சார உற்பத்தி குறைந்தது. தமிழகம் மிக அதிக மின்வெட்டைச் சந்தித்தது. ஒரு நாளைக்கு காலை 2 மணி நேரம் மாலை 2 மணி நேரம் என 4 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் ஆனது. அப்போது மின்சாரத்துறை அமைச்சராக இருந்தவர் ’’ஆற்காடு’’ வீராசாமி. 

அந்தக் காலகட்டத்தில் இன்னொரு விஷயமும் நடந்தது. தமிழக மின்சார அமைச்சர் ‘’ஆற்காடு’’ வீராசாமி தமிழகத்தின் எல்லா ஊராட்சிகளிலும் உள்ள தெருவிளக்குகளை சோடிய ஆவி விளக்குகளாகவும் பாதரச ஆவி விளக்குகளாகவும் மாற்றும் திட்டத்துக்கு ஒப்புதல் தந்தார். சாதாரண குழல் விளக்கு அமைக்க ரூ.200 செலவாகிறது என்றால் சோடிய ஆவி விளக்குகளும் பாதரச ஆவி விளக்குகளும் அமைக்க குறைந்தபட்சம் ரூ.5000 செலவாகும். தமிழகத்தில் 12,500 கிராமங்கள் உள்ளன. ஒவ்வொரு கிராமத்திலும் 200 விளக்குகள் அமைத்தால் கூட 25,00,000 விளக்குகள் அமைக்க வேண்டும். குறைந்தபட்சம் ரூ.5000 செலவாகும் என்றால் அரசியல்வாதிகள் அதற்கு ரூ.8000 செலவாகும் என கணக்கு எழுதுவார்கள் . ஒரு விளக்குக்கு ரூ.3000 ஊழல் எனில் 25,00,000 விளக்குகளுக்கு ரூ.750 கோடி ஊழல் செய்து வெளியே எடுத்தார்கள். இது குறைந்தபட்ச கணக்கீடு. நிகழ்ந்தது இன்னும் பல மடங்கு இருக்கும். 

இதில் இன்னொரு எதிர்பாராத விஷயம் நடந்தது. குழல் விளக்குகள் எரிந்தால் ஆகும் மின்சாரப் பயன்பாட்டை விட சோடிய ஆவி விளக்குகள் எரிந்தால் ஆகும் மின்சாரப் பயன்பாடு மிக அதிகம். பல மடங்கு யூனிட் மின்சாரம் அதற்கு தேவைப்பட்டது. தரமற்ற நிலக்கரியால் மின் உற்பத்தி குறைந்த நிலையில் சோடிய பாதரச ஆவி விளக்குகளும் கூடுதல் மின்சாரம் எடுத்துக் கொண்டன. இவை அத்தனையும் தினம் 4 மணி நேர மின்வெட்டுக்கு கொண்டு வந்து சேர்த்தன. பல ஊராட்சிகள் இந்த சோடிய பாதரச ஆவி விளக்குகளால் மின்சார வாரியத்துக்குச் செலுத்த வேண்டிய மின் கட்டணம் செலுத்த இயலாமல் ஆனது. கோடிக்கணக்கான ரூபாய் மின்வாரியத்துக்கு ஊராட்சிகளின் நிலுவைத்தொகை ஆனது. 

2014ம் ஆண்டு நிகழ்ந்த நிகழ்வையும் குறிப்பிடுகிறேன். 

2014ம் ஆண்டு மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்றது. பியூஷ் கோயல் மத்திய மின்சாரத்துறை அமைச்சராகப் பதவியேற்றார். அவர் ஒரு பட்டயக் கணக்காளர் (சார்டட் அக்கவுண்டண்ட்). சி ஏ தேர்வில் நாட்டில் இரண்டாம் இடத்தில் தேர்ச்சி பெற்றவர். அவர் மின்சார சேமிப்பை நாடெங்கும் நிகழ்த்த மாநில அரசாங்கங்கள் தங்கள் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி , மாநகராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளில் குண்டு பல்பு, குழல் பல்பு, சோடிய ஆவி விளக்கு, பாதரச ஆவி விளக்கு இவற்றுக்குப் பதில் சி எஃப் எல் அல்லது எல் இ டி விளக்குகளை மத்திய அரசு வழங்கும் எனக் கூறினார். நாட்டின் உள்ளாட்சி அமைப்புகளின் குண்டு பல்பு, குழல் பல்பு, சோடிய பாதரச ஆவி விளக்குகளுக்குப் பதிலாக மின்சாரம் குறைவாகத் தேவைப்படும் எல் இ டி விளக்குகள் பயன்பாட்டுக்கு வந்தன. இதனால் நாட்டுக்கு பல லட்சம் யூனிட் மின்சாரம் சேமிக்கப்பட்டது.  

அரசு நிர்வாகமும் ஊழலும்

பிரிட்டிஷார் உலகெங்கும் காலனி நாடுகளை அடிமைப்படுத்தி உருவாக்கினர். அந்த நாடுகளின் செல்வத்தையும் மனிதர்களின் உழைப்பையும் கொள்ளையடிப்பதே அவர்களின் ஆட்சியின் நோக்கம்.  பிரிட்டிஷ் அமைப்பில் உச்ச அதிகாரத்தில் இருப்பவர்களிடமிருந்து கீழ்நிலை அதிகாரத்தில் இருப்பவர்கள் வரை அனைவரும் மக்கள் வரிப்பணத்தை ஊழல் செய்து கொள்ளையடித்தனர். பிரிட்டிஷ் ஆட்சி முறை ஊழலை அடிப்படையாய்க் கொண்டது. தனது பணியாளர் மேல் மேலாதிக்கம் செலுத்த ஊழல் புகார் மீதான நடவடிக்கைகளையும் பிரிட்டிஷ் ஆட்சிமுறை கொண்டிருந்தது. அது அவர்களின் நிர்வாக பாணி. இதைக் கூறும் அதே நேரத்தில் இன்னொரு விஷயத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். ஊழல் மிகக் குறைவாக இருக்கும் நிர்வாகங்களையும் தம் ஆட்சியில் பிரிட்டிஷார் கொண்டிருந்தனர். நூதனமான விஷயமாக இருந்தாலும் அதுவும் ஓர் உண்மையே. ரயில்வே, தபால் ஆகிய இரு துறைகள் பிரிட்டிஷ் ஆட்சியில் மிக மிகக் குறைந்த ஊழல் கொண்டிருந்ததைக் காணலாம். பிரிட்டிஷ் ஆட்சியில் மிக அதிக ஊழல் இருந்த துறைகள் என உள்ளாட்சி அமைப்புகளைக் கூறலாம். நகராட்சி, மாநகராட்சி, ஜில்லா போர்டு ஆகியவற்றைக் கூறலாம். 

நாடு சுதந்திரம் பெற்ற பின்னரும் அரசு ஊழியர்கள் பிரிட்டிஷ் ஆட்சியின் மனோபாவத்துடனே விளங்கினர் ; இப்போதும் விளங்குகின்றனர். இன்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஊழல் நிறைந்து இருப்பதையும் ரயில்வேயும் தபால் துறையும் ஊழல் மிகக் குறைவாக இருப்பதையும் காணலாம். நம் நாடு வளர வேண்டும் என்றால் ஊழல் மனோநிலை அரசு ஊழியர்களிடம் இல்லாமல ஆக வேண்டும். பொதுமக்கள் அரசு குறித்தும் நிர்வாகம் குறித்தும் போதிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். 

மக்கள் விழிப்புணர்வே ஜனநாயகத்தின் மிகப் பெருஞ்செல்வம். 

Saturday, 15 August 2026

வருவாய் கோட்டாட்சியருக்கு ஒரு கடிதம்

 அனுப்புநர்


ர.பிரபு
&&&&&
&&&&&
&&&

பெறுநர்

வருவாய் கோட்டாட்சியர்
வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்
மயிலாடுதுறை

ஐயா,

பொருள் : ***** ஊராட்சி - கிராம சபைக் கூட்டம் - 01.04.2026 லிருந்து 31.07.2026 வரையிலான வரவு செலவு விபரம் - தெரு விளக்கு பழுது பார்த்தல் தொகை ரூ.25,440 & தெரு விளக்கு பொருள் வாங்கியது ரூ.8140

15.08.2026 அன்று ***** ஊராட்சியின் கிராம சபைக் கூட்டத்தில் தாங்கள் கலந்து கொண்டீர்கள். அக்கூட்டத்தில் 01.04.2026 லிருந்து 31.07.2026 வரையிலான ஊராட்சி வரவு செலவு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. அதில் தெருவிளக்கு பழுது பார்த்தல் செலவாக ரூ.25,440ம் தெருவிளக்கு பொருட்கள் வாங்கிய செலவாக ரூ.8140ம் செலவுக் கணக்கில் காட்டப்பட்டுள்ளது. மேற்படி 120 நாட்களில் மேற்படி ஊராட்சியில் தெருவிளக்கு தொடர்பாக ரூ. 33,580 செலவாகியிருக்கிறது என்றால் நாளொன்றுக்கு சராசரியாக ரூ.280 செலவாகிறது. முதற்பார்வைக்கு இந்த செலவு மிகைப்படுத்தப்பட்ட செலவு என்பது தெரிகிறது அல்லவா? தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த கிராமத்தின் தெருவிளக்கு செலவை தணிக்கை அல்லது மறுதணிக்கை செய்யுமாறும் அவ்விதம் தணிக்கை அல்லது மறுதணிக்கை செய்கையில் மேற்படி ரூ.33,580 மிகைப்படுத்தப்பட்ட செலவு எனத் தெரிய வந்தால் அதனை அரசுக் கணக்கில் சேர்க்காமல் இருக்கவும் தெருவிளக்கு பராமரிப்புத் தொகை இல்லாத புதிய கணக்கை அரசு ஏடுகளில் பதிவு செய்யுமாறும் உத்தரவிடுமாறும் கேட்டுக் கொள்கிறேன். 

இன்று பொதுவாக எல் இ டி மின்விளக்குகள் தெருவிளக்குகளாகப் பயன்படுகின்றன. அவை குறைந்தபட்சம் 18 மாதத்திலிருந்து 24 மாதங்கள் வரை ஒளிரக்கூடியவை. மேற்படி செலவுக் கணக்கின் படி பார்த்தால் ஓராண்டுக்குத் தோராயமாக அந்த ஊராட்சி தெருவிளக்கு பராமரிப்புக்கு ரூ.1,00,000 செலவழிக்கிறது என்று ஆகி விடும் அல்லவா?

கிராம சபைக் கூட்டங்களில் பொதுமக்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் எனக் கோரப்படுவது அரசு நிர்வாகத்தில் மக்கள் பங்களிக்க வேண்டும் என்பதற்காகவே. அவ்வகையில் இந்த விஷயத்தை தங்கள் கவனத்துக்கு கொண்டு வந்திருப்பதன் மூலம் ஒரு குடிமகனாக எனது கடமையைச் செய்திருப்பதாக எண்ணுகிறேன். 

நன்றி

தங்கள் உண்மையுள்ள், 


இடம் : மயிலாடுதுறை
நாள் : 15.08.2026

நகல்

1. மாவட்ட ஆட்சியர்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மயிலாடுதுறை

வருவாய் கோட்டாட்சியருக்கு ஒரு ஆர் டி ஐ மனு

அனுப்புநர்

ர.பிரபு
&&&&&
&&&&&
&&&

பெறுநர்

வருவாய் கோட்டாட்சியர்
வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்
மயிலாடுதுறை

ஐயா,

பொருள் : தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் படி தகவல் கோரி விண்ணப்பம்

பார்வை : 15.08.2026 - தாங்கள் கலந்து கொண்ட ***** ஊராட்சி கிராம சபைக் கூட்டம் - 01.04.2026 லிருந்து 31.07.2026 வரையிலான வரவு செலவு அறிக்கை

15.08.2026 அன்று ***** ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தாங்கள் கலந்து கொண்டீர்கள். அந்தக் கூட்டத்தில் அந்தக் கிராம ஊராட்சி மன்றத்தால் 01.04.2026 லிருந்து 31.07.2026 வரையிலான ஊராட்சியின் செலவு கணக்கு சமர்ப்பிக்கப்பட்டது. பொதுமக்கள் பார்வைக்கு அது சுவரொட்டியாக ஒட்டப்பட்டிருந்தது. அதில் மேற்படி 120 நாட்களில் மணக்குடி ஊராட்சியில் தெருவிளக்கு பழுது பார்க்க என ரூ.25,440 செலவிடப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி விபரத்தின் மூலம் ***** ஊராட்சியில் ஒரு நாளைக்கு சராசரியாக தெருவிளக்கு பழுது பார்க்க ரூ.200 செலவாகிறது என்று ஆகிறது அல்லவா? 

தகவல் பெறும் உரிமைச் சட்டம் படி தங்களிடம் கீழ்க்காணும் விபரங்களைக் கோருகிறேன். 

(1) ***** ஊராட்சியில் உள்ள மொத்த தெருவிளக்குகள் எத்தனை? 

(2) *****ஊராட்சியில் 01.04.2026 லிருந்து 31.07.2026 வரை எரியாத மின்விளக்குகள் என எத்தனை இருந்தன? 

(3) மின்விளக்கு பழுது பார்க்க செலவழித்த தொகை ரூ.25,440க்கான ரசீதுகள், வவுச்சர்கள் முதலானவற்றின் தகவல்

மேற்படி விபரங்களை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அதற்கான கட்டணம் ரூ.10 ஐ மனுவில்லையாக செலுத்தியுள்ளேன். 

தங்கள் உண்மையுள்ள,


இடம் : மயிலாடுதுறை
நாள் : 15.08.2026

கிராம சபைக் கூட்டம்

இன்று ஊருக்குப் பக்கத்தில் உள்ள கிராமத்தில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்துக்குச் செல்ல வேண்டும் என் காலையிலிருந்தே எண்ணம் கொண்டிருந்தேன். தமிழகத்தில் இரண்டு திராவிடக் கட்சிகள் தோற்கடிக்கப்பட்டு ஒரு புதிய கட்சி ஆட்சிக்கு வந்திருக்கும் நிலையில் கிராம அளவில் சூழல் எவ்விதம் இருக்கிறது என்பதை அறிய கிராம சபைக் கூட்டம் உதவும் என எண்ணினேன். 

தமிழக அரசியல் என்பது ஒரு மூடுமந்திரம். என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்வதற்குள் எந்த விஷயமும் முடிந்து விடும். 

காலை 10 மணி அளவில் கிராம சபை கூட்டம் நடைபெறும் இடத்துக்குச் சென்றேன். கூட்டம் 12 மணி அளவில் தொடங்கியது. வருவாய் கோட்டாட்சியர் கூட்டத்துக்கு வருகை புரிந்திருந்தார். மாவட்ட ஆட்சித் தலைவருடன் சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்று அது முடிவடைந்த பின் வந்ததால் சற்று தாமதம்.  

தமிழக மக்கள் எந்நேரமும் அரசியலையும் அரசையும் குறித்து பேசிக் கொண்டிருப்பார்கள். ஆனால் அடிப்படைக் கடமையைச் செய்வதில் சுணக்கம் காட்டுபவர்கள். ஒரு கிராமத்தின் மக்கள் தொகை 1000 - 5000 வரை இருக்கும். கிராம சபைக் கூட்டத்துக்கு குறைந்தபட்சம் 50 பேர் வருகை தர வேண்டும். நான் கலந்து கொண்ட கூட்டத்தில் இழுத்துப் பிடித்து 50 பேர் வந்திருந்தனர். 01.04.20226 லிருந்து 31.07.2026 வரை அந்த கிராமத்துக்கு ஆன செலவுகளை ஒரு போஸ்டராக சபை அரங்கில் வைத்திருந்தார்கள். அந்த விபரங்களைக் குறிப்பேட்டில் குறித்துக் கொண்டேன். அங்கிருந்த அரசு ஊழியர் நான் விபரங்களைக் குறித்துக் கொள்வதைப் பார்த்து என்னிடம் நான் யார் என்ற விபரங்களை கேட்டுக் கொண்டார். 120 நாளில் ரூ.4,80,000 செலவு செய்திருக்கின்றனர். ஒரு நாளைக்கு ரூ.4000 செலவாகிறது. 

முதற் பார்வையில் தெரு விளக்கு பழுது நீக்கம் ரூ.25,000 எனக் குறிப்பிட்டிருந்தனர். 120 நாளில் ரூ.25,000 செலவு எனில் ஒரு நாளைக்கு ரூ.200 செலவாகிறது என்று பொருள். அந்த ஊரில் தினம் ஒரு மின்விளக்கு மாற்றினால் தான் அந்த செலவு ஆகும். தினம் ஒரு விளக்கு பழுதடைய சாத்தியம் இல்லை. 

தெருவிளக்கு பொருள் வாங்கியது என ரூ.8000 செலவு. முன்னர் குறிப்பிட்டது தெருவிளக்கு பழுது நீக்க. இப்போது பொருள் வாங்கியது என்பதற்காக. ரூ.8000க்கு வாங்கிய பொருளை ரூ.25,000 செலவு செய்து பொருத்தினார்களா என்னும் கேள்வி எழுகிறது. 

கை பம்ப் வாங்க என ரூ.6000 செலவு. கை பம்ப் பழுது நீக்க என ரூ.8000 செலவு. 

தெரு விளக்கு, கை பம்ப் செலவை தணிக்கை செய்ய வேண்டும் எனக் கேட்கலாம் என உள்ளேன். 

அரசு மக்களை இணைக்க வேண்டும். மக்கள் இணைந்தால் மகத்தான மாற்றங்கள் நடக்கும். 

தமிழகம் இப்போது தான் ஒரு ஆட்சிமாற்றத்தை நிகழ்த்தி மாற்றங்களுக்குத் தயாராகி உள்ளது. இனி வரும் காலங்களில் இன்னும் அதிக மாற்றங்கள் நிகழும் என நம்புவோம்.   

சட்டமும் அரசும்

எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவர் பல அரசியல் கட்சிகளில் செயல்பாட்டாளராக இருந்தவர். திராவிடக் கட்சிகள் மற்றும் பிராந்தியக் கட்சிகளில் செயல்பட்டிருக்கிறார். எந்த விஷயமும் அதனுள் அரசியலைக் கொண்டுள்ளது எனத் தீவிரமாக நம்புபவர். அவர் எந்த விஷயத்தையும் அரசியலின் ஒரு பகுதியாகவே புரிந்து கொள்வார். 

தனது பூர்வீக சொத்து ஒன்றை விற்பனை செய்யும் முயற்சியில் சமீபத்தில் ஈடுபட்டுள்ளார். சிறு அளவில் அதில் அவருக்கு சில ஆலோசனைகள் வழங்கினேன். பூர்வீக சொத்து 100 ஆண்டுகளாக அவர்கள் குடும்பத்திடம் இருக்கிறது. இப்போது விற்பனை செய்யும் நிலையில் ‘’கேப்பிடல் கெயின்’’ எனப்படும் மூலதன ஆதாய வரி அதற்கு வரும். அந்த மூலதன ஆதாய வரியை மொத்த வரித்தொகைக்கு வேறு ஒரு சொத்தை வாங்கினாலோ அல்லது மொத்த வரித்தொகைக்கு அவருடைய சொத்து ஏதேனும் ஒன்றில் கட்டுமானம் மேற்கொண்டாலோ அல்லது மூலதன ஆதாய வரி பத்திரங்கள் வாங்கினோலோ அதனைத் தவிர்க்க முடியும். வருமான வரியில் மிகச் சாதாரணமான விஷயம் இது. 

இப்போது அவர் மனதை இந்த விஷயம் முழுவதுமாக ஆக்கிரமித்திருக்கிறது ; பின் தொடர்கிறது . மூலதன ஆதாய வரி இப்போது அவரை முழுவதுமாக வியாபித்திருக்கிறது. எனினும் அதனை அதன் கணக்கீடுகளை அவர் முழுமையாகப் புரிந்து கொண்டாரா என்பது இப்போதும் ஐயமே. 

ஓர் எளிய சட்டத்தினைப் புரிந்து கொள்ளவே இவ்வளவு சிரமப்படுகிறாரே இவர் தன் வாழ்நாள் முழுக்க அரசியலை எப்படி புரிந்து கொண்டிருப்பார் என்று எண்ணினேன்.  

Friday, 14 August 2026

நாம்

ஜூலை 28, 29 ஆகிய இரு தினங்களில் வங்கியில் நிகழ்ந்த சேவைக்குறைபாட்டை வங்கியின் சி இ ஓ வுக்கு கடிதம் மூலம் தெரிவித்தேன். எனது கடிதம் எந்த தனிநபருக்கும் எதிரானது அல்ல ; சினத்தின் வெளிப்பாடும் அல்ல. ஒரு வித்தியாசமான நிகழ்வை  வங்கி நிர்வாகத்துக்குத் தெரியப்படுத்தினேன் . அவ்வளவுதான். நாம் ரயில் நிலையம் செல்கிறோம் ; அங்கே சந்தேகத்துக்கு இடமாக ஒரு பை கேட்பாரற்று கிடக்கிறது எனில் ஆர் பி எஃப் காவலர்களிடம் தெரிவிப்பதைப் போன்ற நிகழ்வுதான் நான் செய்ததும். 

எங்களுக்கு சேவைக்குறைபாடு நிகழ்ந்த தினத்தில் காலை 11.30க்கு வங்கியில் உரக்க குரலெழுப்பியிருக்க முடியும். அதனை நான் ஒரு வழிமுறையாகவோ அல்லது தீர்வாகவோ எப்போதும் எண்ணுவதில்லை. காலை 11.30 மணிக்கே ‘’ஸோனல் அலுவலகம்’’ ஃபோன் செய்ய முடியும். அந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் 100 கிளைகள் இருக்கும். 5 நிமிடத்துக்கு ஒருமுறை அந்த 100 கிளைகளிலிருந்தும் ஏதேனும் ஒரு ஃபோன் வந்தால் அந்த அலுவலகம் ஃபோன் அட்டண்ட் செய்வதை மட்டுமே ஒரு வேலையாகச் செய்ய முடியும். நான் தாமதமாக வேலை முடிந்த பின் நடந்ததை விவரித்து கடிதம் அனுப்பினேன். அது ஒரு நாகரிக வழிமுறை. 

எனக்கு வங்கி மீதோ வங்கி ஊழியர்கள் மீதோ வங்கியின் சம்பந்தப்பட்ட ஊழியர் மீதோ அல்லது பிற ஊழியர்கள் மீதோ வருத்தம் கிடையாது. நிகழ்ந்தது ஒரு பிழை. அதனை சுட்டிக் காட்டினேன். அவ்வளவுதான். கடிதம் அனுப்பிய பின் வங்கிக்குச் சிலமுறை செல்ல  நேர்ந்த  போது வங்கி ஊழியர்களின் பார்வையில் சிறு துணுக்குறலை உணர்ந்தேன். அது ஏன் என யோசித்தேன். அவர்கள் வங்கி என்பது ஊழியர்களான அவர்களுடையது என எண்ணுகிறார்கள். அது முழு உண்மை அல்ல ; பகுதி உண்மை. வங்கி என்பது வங்கி ஊழியர்கள் மற்றும் வங்கி வாடிக்கையாளர்கள் என்னும் இரு குழாமுக்கும் சொந்தமானது. நான் புரிந்து கொண்டிருப்பது முழு உண்மை. 

Tuesday, 11 August 2026

விசாரணை

எனது நண்பர் ஒருவர் அவரது சொத்தை வங்கியில் அடமானம் வைத்து கடன் பெற விரும்பினார். அவர் சொத்து பத்திரத்தின் நகலை எடுத்துக் கொண்டு அவருக்கு விபரம் கேட்டு சொல்வதற்காக வங்கிக்குச் சென்றேன். மேலாளரின் அறை கண்ணாடி அறை. மேலாளர் இருக்கைக்கு எதிரே கோட் அணிந்திருந்த ஒருவர் அமர்ந்திருப்பதை நான் அறைக்கு வெளியிலிருந்து பார்த்தேன். அவர் வங்கியின் ‘’ஸோனல் மேனேஜர்’’ ஆக இருக்கக் கூடும் என யூகித்தேன். வங்கிக்கு வெளியே வந்து வெளியூர் பதிவு எண் கொண்ட நான்கு சக்கர வாகனம் நிற்கிறதா என்று பார்த்தேன். ‘’இந்திய அரசு’’ என எழுதிய வாகனம் ஒன்று வங்கியிலிருந்து சற்று தள்ளி புங்கன் மர நிழல் ஒன்றில் நின்று கொண்டிருந்தது. ஓட்டுநர் நல்ல தூக்கத்தில் இருந்தார். வாகனம் வந்து நெடுநேரம் ஆகிறது என எண்ணினேன். பின்னர் வங்கிக்கு உள்ளே வந்தேன். மேலாளர் அறையில் வங்கி ஊழியர்களிடம் விசாரணை நடந்து கொண்டிருந்தது. ஊழியர்கள் சற்று பதட்டமாக இருந்ததாகத் தோன்றியது. இவ்வாறான சூழ்நிலையில் அங்கு இருப்பதா அல்லது வெளியேறி விடுவதா என யோசித்தேன். மேலாளரிடன் ஆவண நகலைக் காண்பித்து அபிப்ராயம் கேட்டு விட்டு புறப்படலாம் என எண்ணினேன். மேலாளர் மேஜையில் கணிணித் திரை புதிய திசையில் இருந்தது. தலைமை அலுவலகத்திலிருந்து எவரேனும் இணையம் மூலம் வந்திருக்க முடியும் என யூகித்தேன். 

‘’டாகுமெண்டல் எவிடெண்ஸ்’’ பலமாக உள்ளது. ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் உறுதி கொண்டவர்கள் விசாரணை நடத்தினால் தாமதத்துக்கு காரணமான ஊழியர் மேல் நடவடிக்கை இருக்கும். எனது கடிதம் சி இ ஓ வை அடைந்து இன்றுடன் ஒன்பது நாள் ஆகிறது. உச்ச அலுவலகத்திலிருந்து கீழ் அலுவலகம் வரை குறைந்தபட்சம் 200 ஊழியர்களையாவது இந்த சம்பவம் சென்றடைந்திருக்கும். கடிதத்தின் நேரடிப் பலன் அதுதான். பெற்றுக் கொண்ட விண்ணப்பத்துக்கு ஒரு ஒப்புகைச்சீட்டு அளித்திருந்தால் இந்த பிரச்சனையே உருவாகியிருக்காது என்றே எல்லாரும் சொல்வார்கள். இருந்தாலும் வங்கிச் சூழல் ஒரு வாடிக்கையாளர் புகார் ஒரு ஊழியரின் ‘’பணிப் பதிவு’’ ஆவணங்களில் எதிர்மறைப் பதிவை உருவாக்குவதை வங்கிச் சூழலின் அகங்காரம் சீண்டப்பட்டு அனுமதிக்காது; அந்த ஊழியரைத் தப்ப வைக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வார்கள். எனது அறிதலின் ஒரு பகுதியாக என்ன நிகழ்கிறது என்பதையும் கவனித்துக் கொள்கிறேன். 

‘’ஸோனல் மேனேஜர்’’ சிஸ்கோ ஃபோன் மூலம் திரையில் பார்த்துப் பேசி அறிமுகம் உள்ளவர். 10 நிமிடம் அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அந்த வகையில் அவரிடம் இன்றும் ஒரு உரையாடலை மேற்கொள்வோமா என எண்ணினேன். விசாரணை ரொம்ப நேரம் பலரிடம் நடந்து கொண்டிருந்ததை கண்ணாடி அறைக்கு வெளியிலிருந்து பார்த்தேன். வேறு ஒரு வாசல் வழியே ‘’ஸோனல் மேனேஜர்’’ வெளியேறிச் சென்றார். மேலாளர் வெளியே வந்தார். அவரிடம் நண்பரின் சொத்து ஆவணத்தைக் காட்டி விட்டு சில ஜயங்களைக் கேட்டு விட்டு புறப்பட்டேன். அப்போது ஜூலை 28,29 ஆகிய தினங்களின் சி சி டி வி காட்சிகளை வங்கி ஊழியர் ஒருவர் சோதித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். 

Sunday, 9 August 2026

எழுதும் ஒருவர்

எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவர் அகம் ஆழம் மிக்கது என அவரை சந்தித்த முதல் தினத்திலிருந்து எண்ணியிருக்கிறேன். அவர் உலகியல் பணிகளையும் உலகியல் திட்டமிடல்களையும் சிறப்பாகச் செய்யும் ஒருவர். அவரது உத்யோகம் தொடர்பான பணிகள் அவரது நாளின் பெரும்பகுதி நேரத்தை எடுத்துக் கொள்ளும். அவருடன் சில முறை பயணிக்கவும் வாய்ப்பு அமைந்தது. அவரது காரில் ஒருமுறை நீண்ட பயணம் செய்தோம். அவரது டூ வீலரில் நீண்ட பயணம் ஒன்று மேற்கொண்டோம். சிலமுறை ஒன்றாக ரயிலில் பயணித்திருக்கிறோம். வெவ்வேறு ஊர்களில் சந்தித்திருக்கிறோம்.  ஓரிரு வாரங்கள் முன்னால் அவர் தனது முதல் சிறுகதையை எழுதி அனுப்பியிருந்தார். எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அதனை நான் எவ்விதம் வாசிக்கிறேன் என்பதை அவருக்குத் தெரிவித்தேன். இன்று ஒரு சிறுகதை எழுதி அனுப்பியிருந்தார். இந்தக் கதையும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதைப் பற்றி அவரிடம் சொன்னேன். அப்போது அவர் ஒரு விஷயம் சொன்னார் : ‘’அதாவது , ஒரு வாசகர் ஒருவரிடம் நான் எழுதுமாறும் படைப்புச் செயல்பாட்டுக்குள் இருக்குமாறும் சொல்லிக் கொண்டிருந்த போது நான் உடனிருந்தேன் . அச்சொற்களை எனக்கான சொற்களாகவும் எடுத்துக் கொண்டேன்’’ என்றார். நண்பர் தொடர்ந்து எழுத வேண்டும் என விழைகிறேன்.

அகம் நிறைந்த ரயில்கள்

 எல்லா ரயில்களுமே என் மனதுக்கு மிகவும் நெருக்கமானவைதான். பாசஞ்சர் ரயில்கள் மீதும் பிரியமும் ஈடுபாடும் உண்டு. ரயில் அளவுக்கே ரயில் நிலையங்களும் என்னை ஈர்ப்பவை. ரயில் நிலையங்கள் வாழ்வின் மீது கூடுதல் நம்பிக்கையை உருவாக்குகின்றன. காவிரி வடிநில பிராந்தியத்தின் சிறு ரயில் நிலையங்கள் அனைத்திலும் குறைந்தபட்சம் ஒரு ஆலமரமாவது அல்லது அரசமரமாவது இருக்கும். அனேகமாக நம் நாட்டின் பெரும்பாலான ரயில் நிலையங்களில் நிழல் தரும் மரங்கள் வைத்து பராமரிக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன. ஊரிலிருந்து புறப்படும் பாசஞ்சர் ரயில்கள் விழுப்புரம் பாசஞ்சர், திருச்சிராப்பள்ளி பாசஞ்சர். முன்னர் காரைக்குடி பாசஞ்சர் இருந்தது. இப்போது அது திருவாரூரிலிருந்து புறப்படுகிறது. எல்லா ரயில்களின் பெயர்களும் எனக்கு மிகவும் பிடிக்கும். எல்லா ரயில்களும் எனக்குப் பிடிக்கும். கொரமண்டல் எக்ஸ்பிரஸ், நவஜீவன் எக்ஸ்பிரஸ் ஆகிய பெயர்கள் பிடித்த பெயர்கள். ரயில் ஒன்றைப் பிடித்து ஒரு ஊருக்குச் செல்வதில் இன்றும் தீராத உவகை இருக்கிறது ; அந்த உவகையே என் வாழ்க்கை இன்னும் உயிர்த்துடிப்புடன் இருக்கிறது என்பதை எனக்குக் காட்டுகிறது. 

Saturday, 8 August 2026

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்


இந்திய ரயில்களில் என் மனத்துக்கு மிகவும் நெருக்கமானது தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில். அந்த ரயிலில் முதல்முறை பயணித்ததிலிருந்தே அது எத்தனை மணிக்கு எந்த ஊரில் இருக்கும் என்பது துல்லியமாக மனதில் பதிவாகி விட்டது. சென்னை சென்ட்ரலில் இரவு 10.30க்கு அந்த ரயில் புறப்படும். அதிகாலை 4.30க்கு விஜயவாடா. காலை 10 மணிக்கு வாரங்கல். மதியம் 12 மணிக்கு பலார்ஷா. மதியம் 2 மணி நாகபுரி. இரவு 7.30 மணி போபால். அதிகாலை 1 மணி ஜான்சி. அதிகாலை 4.30 ஆக்ரா. காலை 9 மணி புதுதில்லி. (முதலில் நினைவிலிருந்து எழுதி விட்டேன். பின்னர் ரயில்வே கால அட்டவணையில் சரிபார்த்தேன். இரவு 10.30க்கு சென்னையில் புறப்படும் வண்டியின் நேரம் இப்போது இரவு 10 மணி என்றாகி உள்ளது. மற்ற ஊர்களின் நேரங்களின் ஏறக்குறைய நான் குறிப்பிட்ட நேரம் தான்)  தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் தனது ஐம்பதாவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது. Many more happy returns !

Wednesday, 5 August 2026

உடன்பிறந்தானிடம் பிறந்த வீட்டுப் பெருமை





மத்திய நிதியமைச்சர் தேசியமயமாக்கப்பட்ட பொதுத்துறை வங்கி ஊழியர்களும் நிதியமைச்சகமும் ஒரு குடும்பம் என ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னால் கூறியிருந்தார். வங்கி என்னும் போது கோடானுகோடி வங்கி வாடிக்கையாளர்களும் அதில் அடங்குவார்கள். விரிவான பொருளில், மத்திய நிதியமைச்சர் வங்கி ஊழியர்கள், வங்கி வாடிக்கையாளர்கள், நிதியமைச்சகம் ஆகிய மூன்றும் ஒரு குடும்பம் என்று சொன்னதாகவே அர்த்தம் கொள்வோம். நாட்டின் வளர்ச்சிக்கும் சமூக முன்னேற்றத்துக்கும் வங்கித்துறையின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக சிறப்பிக்கும் விதமாக நிதியமைச்சர் அதனைக் கூறினார். 

தமிழில் ஒரு பழமொழி உண்டு. ‘’உடன்பிறந்தானிடமே பிறந்த வீட்டுப் பெருமை பேசுவது’’ என. உலகெங்கும் பெண்கள் பிறந்த வீட்டுப் பெருமை பேசுவதுண்டு. அதை எவரிடமும் பேசலாம் - உடன்பிறந்தவர்களைத் தவிர. ஏனென்றால் உடன் பிறந்தவர்களுக்கு தங்கள் வீட்டின் பலங்களும் தெரியும் ; பலம் குறைவான விஷயங்களும் தெரியும். பேசுபவருக்குத் தெரிந்திருப்பதை விடக் கூடுதலாகக் கூடத் தெரியும். அது போல வங்கி வாடிக்கையாளர்களுக்கு வங்கி ஊழியர்கள் குறித்து நன்றாகவே தெரியும். நிதியமைச்சகம் அறிந்திருப்பதை விடவும். ஏனென்றால் வங்கி வாடிக்கையாளர்கள் தான் தினமும் காலை 10 மணியிலிருந்து மாலை 3.30 மணி வரை வங்கிக்குச் சென்று வங்கிச் சேவைகளைப் பெறுகிறார்கள். 

வங்கி ஊழியர்களிடம் வங்கி வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பது : 

நீண்ட பட்டியல் வழங்க முடியும். மிகச் சுருக்கமாக சில விஷயங்களை மட்டும் சொல்கிறேன். 

1. வங்கி ஊழியர்கள் அனைவரும் அலுவலக உதவியாளரிலிருந்து வங்கி மேலாண் இயக்குநர் வரை புரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை விஷயம் வங்கி என்பது ஒரு வர்த்தக அமைப்பு என்பதையும் வங்கி வர்த்தகம் செய்கிறது என்பதையும். இந்தப் புரிதல் இருந்தாலே வாடிக்கையாளர் இன்னும் சிறப்பான சேவையைப் பெறுவார்கள். 

2. நம் நாட்டில் சமூகத்தின் பொருளியலுடன் வங்கிகளுக்கு மிக நெருக்கமானத் தொடர்பு உள்ளது. வங்கிகள் சிறப்பாக செயல்பட்டால் சமூக முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். 

3. வாடிக்கையாளர்கள் வங்கியிடமும் வங்கி ஊழியர்களிடமும் எதிர்பார்ப்பது விதிமுறைகளின் படியும் சட்ட திட்டங்களின் படியும் பணியாற்றுங்கள் என்பதே. 

4. புறநானூற்றுப் பாடல் ஒன்று ‘’நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின் ; எல்லாரும் உவப்ப தன்றியும் நல்லாற்றுப் படூஉ நெறியுமா றதுவே’’ என்கிறது. அதாவது, ‘’நீங்கள் நல்லது செய்யாமல் இருந்தாலும் கூட பரவாயில்லை ; நல்லது அல்லாதவற்றை செய்யாமல் இருங்கள் ‘’ என்பதே அதன் பொருள். வங்கி வாடிக்கையாளர்கள் வங்கி ஊழியர்களிடம் எதிர்பார்ப்பதும் அதுவே.  

Tuesday, 4 August 2026

முடிவுகளும் தீர்வுகளும்


ஒரு போராட்டத்தைத் துவங்குவதும் முன்னெடுப்பதும் முக்கியமானது. 

அதை விடவும் முக்கியமானது ஒரு போராட்டத்தை எந்த இடத்தில் நிறுத்திக் கொள்வது என்பதை அறிந்திருப்பதும் ஆகும். 

ஜூலை 28, ஜூலை 29 ஆகிய இரு தினங்களும் ஐரோப்பியக் கல்லூரி ஒன்றின் சேர்க்கைக்காக அக்கல்லூரியின் அந்நாட்டு வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்ப 78 வயது மூதாட்டியும் அவரது உறவினர்களும் உதவிக்காக நானும் சென்றிருந்தோம். விண்ணப்பத்தை அளித்த நாங்கள் கோரியது விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்டோம் என்பதற்கான ஒரு ஒப்புகைச்சீட்டு. அதனை அளித்திருந்தால் நாங்கள் ஐரோப்பிய கல்லூரிக்கு அதனை ஸ்கேன் செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்பி அத்துடன் அந்த விஷயத்திலிருந்து வெளியே வந்திருப்போம். எங்களுக்கு ஒப்புகைச்சீட்டு வழங்கப்படவில்லை. பூர்த்தி செய்து அளித்த விண்ணப்பத்தை நகலெடுத்துக் கொண்டு வரச் சொல்லி அதில் ‘’விண்ணப்பம் பெறப்பட்டது’’ என எழுதி ஒப்பம் இட்டு வங்கி முத்திரையுடன் கொடுத்திருக்கலாம். அதுவே ஒப்புகை தான். அதனையும் தரவில்லை. ஜூலை 28, காலை 11.30க்கு நாங்கள் அளித்த விண்ணப்பம் அன்று மாலை 3.45 மணி அளவில் கணிணியில் உள்ளீடு செய்யப்பட்டுள்ளது. எனவே வெளிநாட்டு நாணய விஷயமாக அது அடுத்த நாள் கணக்குக்கு சென்று விட்டது. ஜூலை 29 அன்றும் பலமுறை வங்கிக்குச் சென்று ஒப்புகைச்சீட்டு கேட்டோம். அன்றும் தரப்படவில்லை. அன்று மாலை 6.45க்கு மூதாட்டியின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டது என குறுஞ்செய்தி வந்தது. அடுத்த நாள் காலை எங்களுக்கு மின்னணு ரசீது கிடைத்தது. 

நான் ஜனநாயகத்தின் மீது ஜனநாயக முறைமைகளின் மீது நம்பிக்கை கொண்டவன். ஜனநாயகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது என்னும் உறுதியான நம்பிக்கை கொண்டவன் நான். சட்டத்தின் ஆட்சியில் ஜனநாயகத்தில் ஒரு சாமானியனுக்கு குரல் எழுப்ப உரிமை உண்டு. அந்த உரிமையின் அடிப்படையிலேயே நான் எனது குரலை எழுப்புகிறேன். 

ஆகஸ்ட் 1ம் தேதி இந்தியன் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரிக்கு ஜூலை 28, ஜூலை 29 ஆகிய தேதிகளில் மூதாட்டிக்கு நடந்த நிகழ்வு குறித்து கடிதம் எழுதினேன். அக்கடிதத்தின் தமிழாக்கத்தை என் தளத்திலும் வெளியிட்டேன். அந்தக் கடிதம் அனுப்புவதற்கு சற்று முன் வரை வங்கியின் தலைமைப் பொறுப்பு என்பது பொது மேலாளர் என எண்ணிக் கொண்டிருந்தேன். அனுப்புவதற்கு சற்று முன் இணையத்தில் தேடிய போது இந்தியன் வங்கியின் தலைமைப் பொறுப்பு ‘’தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மேலாண் இயக்குநர் ‘’ என அறிந்தேன். கடிதத்தில் பொது மேலாளர் என இருந்த இடங்களில் ‘’எம் டி & சி இ ஓ’’ என பேனாவால் மாற்றி முகவரியில் ‘’எம் டி & சி இ ஓ’’ என எழுதி அனுப்பினேன். அந்தக் கடிதத்தின் நகலை முதலில் ரிசர்வ் வங்கிக்கு அனுப்ப வேண்டும் என நினைத்திருந்தேன். கடிதம் டிராஃப்ட் செய்த போது நகல் ரிசர்வ் வங்கி என்றே குறித்திருந்தேன். பின் ஓர் உள்ளுணர்வால் நகலை மத்திய நிதியமைச்சர் என மாற்றினேன். வழக்கமாக எனில் சி பி கி ராம் ஸ் ல் புகார் பதிவு செய்வேன். எனினும் இம்முறை என் உள்ளுணர்வு விரைவுத் தபாலில் கடிதத்தை அனுப்ப வேண்டும் எனக் கூறியது. 

சி பி கி ராம் ஸ் மிகச் சிறப்பான முறை என்றாலும் வங்கிகளால் ஒரு புகாரை அவர்களாகவே மூட முடியும். இதில் ஒரு ஆச்சர்யம் தபாலில் அனுப்பும் போது புகார் குறித்து விசாரித்து வாடிக்கையாளர் விசாரணையிலும் விசாரணை முடிவுகளிலும் திருப்தி அடைந்தார் என்னும் கடிதத்தை வாடிக்கையாளரிடமிருந்து பெற்ற பின் தான் புகார் கோப்பை மூட முடியும். திருப்திக் கடிதத்தை வாடிக்கையாளர் அளிக்கவில்லை என்றால் அந்தக் கோப்பை வங்கி நிர்வாகத்தால் அவ்வளவு எளிதில் மூட முடியாது. வங்கிகள் சி பி கி ராம் ஸ் புகாரை எளிதில் மூடுகின்றன. மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றால் ரிசர்வ் வங்கிக்குச் செய்ய வேண்டும். ரிசர்வ் வங்கியின் அணுகுமுறையைப் புரிந்து கொள்வது எளிதானது இல்லை. தபாலில் அனுப்பும் போது வங்கிகளும் ரிசர்வ் வங்கியும் புகார்களை அணுகும் முறை வாடிக்கையாளருக்கு சாதகமாக இருக்கிறது என்பதை என் அனுபவம் எனக்கு சுட்டிக் காட்டியது. எனவே விரைவுத் தபாலில் கடிதம் அனுப்பினேன். 

அதை ஒரு கடிதம் என்றும் சொல்லலாம் ; புகார் என்றும் சொல்லலாம் ; ஆலோசனை என்றும் சொல்லலாம். இவை அனைத்துமே அதற்குள் இருந்தன. இவ்விதமாக எழுத வேண்டும் என்றும் என் உள்ளுணர்வே எனக்கு சொன்னது. இதனை ‘’எம் டி & சி இ ஓ’’ படிக்க வாய்ப்பு இருக்காது என்றே நான் எண்ணினேன். அவருடைய காரியதரிசி படிக்கவே வாய்ப்பு அதிகம் என்ற எண்ணமே எனக்கு இருந்தது. மத்திய நிதியமைச்சருக்கு நகல் கடிதம் அனுப்பப்பட்டிருந்ததால் மத்திய நிதியமைச்சரின் அலுவலகத்திலிருந்து அதனை வங்கி ‘’எம் டி & சி இ ஓ’’ க்கு அனுப்ப வாய்ப்பு அதிகம். அவ்விதம் நகல் கடிதம் வரும் போது அதன் மூலாதாரமான எனது கடிதத்தை ஏன் தன் கவனத்துக்குக் கொண்டு வரவில்லை என சி இ ஓ கேட்க வாய்ப்பு உண்டு. எனவே அவர் கவனத்துக்குப் போயிருக்கலாம். 

திறந்த மனத்துடன் அந்தக் கடிதத்தை வாசிக்கும் எவருக்கும் அதில் உறைந்திருக்கும் உண்மையும் உணர்வும் புரியும். அந்தப் புரிதல் வங்கியின் தலைமை அலுவலகத்துக்கு ஏற்பட்டது. அந்தக் கடிதம் மின்னஞ்சல் மூலம் வங்கியின் வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட பொது மேலாளர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது என்பதை பிற்பாடு அறிந்தேன். வெவ்வேறு பொது மேலாளர்கள் அந்தக் கடிதத்தை வாசித்தனர். சம்பந்தப்பட்ட வங்கி மேலாளரைத் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்கள் கேட்டு அறிந்தனர். 

இந்தியா போஸ்ட் இணையதளத்தில் நாம் அனுப்பிய ஸ்பீடு போஸ்ட் பெறுநரைச் சென்றடைந்து விட்டதா எனத் தேடி அறிய முடியும். கடிதம் 3ம் தேதி மாலை 3 மணி அளவில் சென்றடைந்துள்ளது என அறிந்தேன். எனக்கு கிளை மேலாளரிடமிருந்து அலைபேசி அழைப்பு வந்த போது நேரம் இரவு 8 மணி. கிளை மேலாளர் இனிய மனிதர். சிறப்பாக வாடிக்கையாளர் சேவையை அளிக்கக் கூடியவர். ஜூலை 28, ஜூலை 29 ஆகிய இரு தினங்கள் அவர் டெபுடேஷனில் வெளியூர் சென்றிருந்தார். அவர் இருந்திருந்தால் இவ்விதம் நிகழ்ந்திருக்காது என்பதை நான் அறிவேன். அவர் நிகழ்ந்த சேவைக் குறைபாட்டுக்கு மிகவும் வருந்தினார். அவர் வருத்தம் தெரிவித்தார். இரவு 8 மணியிலிருந்து இரவு 9.15 வரை பேசிக் கொண்டிருந்தோம். நீண்ட நேரம் ஆகி விட்டதால் காலை வருகிறேன் எனக் கூறி விட்டு வந்தேன். 

04.08.2026 அன்று காலை 7 மணியிலிருந்து தலைமை அலுவலகத்திலிருருந்தும் பிற அலுவலகங்களிலிருந்தும் உயர் அதிகாரிகளும் பொது மேலாளர்களும் தன்னைத் தொடர்பு கொண்டு பேசி வருவதாக மேலாளர் சொன்னார். காலை 10 மணிக்கு கிளைக்குச் சென்றேன். வட்டார மேலாளர் என்னிடம் பேச விரும்புவதாகக் கிளை மேலாளர் சொன்னார். வட்டார அலுவலகத்துக்கு நேரில் சென்று வட்டார மேலாளரைச் சந்தித்துப் பேசுகிறேன் என்று சொன்னேன். வட்டார அலுவலகம் 60 கி.மீ தொலைவில் நாகப்பட்டினத்தில் இருக்கிறது. அவ்வளவு தொலைவு செல்ல வேண்டாம் ; கிளையில் சிஸ்கோ ஐ பி ஃபோன் இருக்கிறது ; அதில் பேசுங்கள் என்றார். அது தரைவழி தொலைபேசி போலும் இருக்கிறது. அதன் சிறு திரையில் பேசுபவர் முகமும் தெரிகிறது. வட்டார மேலாளரிடம் விஷயத்தைக் கூறினேன். ‘’எனது கடிதம் உணர்வுபூர்வமானது ; அதில் வெளிப்பட்டிருகும் உணர்வு உண்மை ; எனது கடிதம் யாருக்கும் எதிரானது இல்லை ; யார் மீதும் எனக்குத் தனிப்பட்ட வெறுப்போ சினமோ இல்லை. தார்மீகக் குரல் ஒன்றை எழுப்பியிருக்கிறேன். எவ்விதம் எனக்கு குரல் எழுப்ப உரிமை இருக்கிறதோ அவ்விதமாகவே எனது எதிர்த்தரப்புக்கும் தன் கருத்தைப் பதிவு செய்ய முன்வைக்க வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் ; நடந்த சம்பவம் குறித்து விசாரணை செய்யுங்கள். விசாரணைக்குப் பின் ஒரு முடிவுக்கு வாருங்கள் ‘’ என்று சொன்னேன். நான் கூறிய அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டார். என் கோரிக்கைகளைப் பரிசீலிக்கிறேன் என்று கூறினார். 

நான் வீடு திரும்பினேன். மாலை 4 மணிக்கு கிளை மேலாளர் ஃபோன் செய்தார். ஜூலை 28 , ஜூலை 29 ஆகிய இரு தினங்களின் அன்னியச் செலாவணி கூடுதல் தொகைக்கு வங்கி அத்தொகைக்கான வங்கி வரைவோலையை கையில் வைத்திருக்கிறது ; வாடிக்கையாளரான 78 வயதான மூதாட்டிக்கு அளிக்கத் தயாராக இருக்கிறது என்று கூறினார். வங்கிக்குச் சென்றேன். மேலாளரை சந்தித்தேன். அவரை எனது இரு சக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு வாடிக்கையாளரின் வீட்டுக்கு வந்து வாடிக்கையாளரான 78 வயது மூதாட்டியிடம் இந்தியன் வங்கி மேலாளரால் இந்தியன் வங்கியின் வங்கி வரைவோலை அளிக்கப்பட்டது. 

துணை மேலாளர் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் வட்டார மேலாளருக்கு உரியது. அவர் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்துள்ளார். வங்கி அன்னியச் செலாவணி மாறுபாடு தொகையை வழங்கியிருப்பதே தார்மீகமாக அவர்கள் மேல் பிழை இருப்பதை ஒத்துக் கொள்ளும் செயல் எனக் கொள்ள முடியும். பிழை இழைத்தவர் மீது நடவடிக்கை எடுத்தால் தான் திருப்திக் கடிதம் அளிப்பேன் என சொல்வது மிக இறுக்கமான அணுகுமுறையாக அன்றி தளர்வான அணுகுமுறையாக இருக்காது என்று எனக்குத் தோன்றியது. மேலாளரும் வட்டார மேலாளரும் தொடர்பு கொண்டு பேசியதையும் நியாயம் நிலைநாட்டப்படும் அவர்கள் அளித்த உறுதிமொழியால் திருப்தி அடைந்துள்ளேன் ; இந்தப் புகாரை குளோஸ் செய்ய சம்மதிக்கிறேன் என கடிதம் எழுதிக் கொடுத்து விட்டு வீட்டுக்கு வந்தேன்.     

Monday, 3 August 2026

பேச்சுவார்த்தை

வெள்ளிக்கிழமை மாலை 6.40க்கு இந்தியன் வங்கி தலைமை நிர்வாக அதிகாரிக்கு அனுப்பிய கடிதத்தை விரைவுத் தபாலில் அனுப்பி அதன் நகலை மத்திய நிதியமைச்சருக்கும் விரைவுத் தபாலில் அனுப்பினேன். தபால் இன்று மாலை 4 மணி அளவில் இந்தியன் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி அலுவலகத்துக்குக் கிடைத்திருக்கிறது. இரவு 8 மணி அளவில் இந்தியன் வங்கி கிளையிலிருந்து மேலாளர் பேசினார். அவர் எனக்கு மிக நல்ல பரிச்சயம் உள்ளவர். அவர் அழைத்த மரியாதைக்கு உடனே வருகிறேன் என்று அங்கு சென்றேன். என் கடிதத்தை தலைமை நிர்வாக அதிகாரி வாசிக்க மிகவும் வாய்ப்பு குறைவு என நான் நினைத்தேன். ஆனால் எனது கடிதம் தலைமை நிர்வாக அதிகாரியின் கவனத்துக்குச் சென்றிருக்கிறது என்பதை கிளை மேலாளரின் பேச்சிலிருந்து புரிந்து கொண்டேன். கடிதம் தலைமை நிர்வாக அதிகாரிக்கு எழுதப்பட்டு அதன் நகல் மத்திய நிதியமைச்சர் அலுவலகத்துக்கும் அனுப்பப்பட்டு இருப்பதால் மத்திய நிதியமைச்சர் அலுவலகத்திலிருந்து தங்களுக்கு வந்த நகல் கடிதத்தை இந்தியன் வங்கி தலைமை நிர்வாக அதிகாரி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வாய்ப்புள்ளது. அந்தக் கடிதம் சில நாட்கள் கழித்தாவது தலைமை நிர்வாக அதிகாரிக்கு வரும். தலைமை நிர்வாக அதிகாரியின் காரியதரிசிகள் அந்தக் கடிதத்தை அதிகாரியின் பார்வைக்கு கொண்டு செல்லாமல் இருக்க முடியாது; அந்நிலையை யூகித்து அதன் மூலாதாரமான என் கடிதத்தை தலைமை நிர்வாக அதிகாரி கவனத்துக்குக் கொண்டு சென்றிருப்பார்கள் என எண்ணினேன். இந்திய அதிகாரவர்க்கம் நூதனமானது ; நூதனமான மனோபாவங்கள் கொண்டது. ஒரு சாமானியன் அவற்றை முழுதும் புரிந்து கொள்ள முடியாது. மேலாளர் இந்தியன் வங்கியின் பல உயரதிகாரிகள் தனக்கு தொடர்ந்து ஃபோன் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று சொன்னார். மேலாளரை சந்திக்கச் செல்லும் போதே பேச்சுவார்த்தையின் எந்த நிலையிலும் உணர்ச்சிவசப்பட்டு விடக் கூடாது என்னும் முடிவோடு தான் சென்றேன். அவர்கள் என்ன தான் சொல்கிறார்கள் என்பதைக் கேட்போம் என முடிவு செய்து கொண்டேன். மேலாளர் ஏதேதோ விஷயங்கள் சொன்னார். அவர் பல விஷயங்களைப் பேசி விஷயங்களை நீர்த்துப் போகச் செய்ய முயற்சிக்கிறார் எனப் புரிந்து கொண்டேன். அவர் மிகவும் நல்ல மனிதர் ; சிறப்பாக வாடிக்கையாளர்களுக்கு சேவை புரிபவர். சம்பவம் நடந்த இரு நாட்களும் அவர் ஊரில் இல்லை ; இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது.  எனினும் இந்த விஷயத்தில் குறைந்தபட்ச நியாயம் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். வங்கியின் இணையதளத்தில் புகாரைப் பதிவு செய்திருந்தாலோ சி பி கி ராம் ஸ் ல் புகாரைப் பதிவு செய்திருந்தாலோ மிக எளிதில் இந்த விஷயத்தை ‘’கேஸ் குளோஸ்’’ செய்து விடுவார்கள். ஏனென்றால் அவர்களுக்கு  கேஸ் என்பது ஒரு எண் ; ஒரு எண்ணிக்கை. இந்த மாதம் 100 புகார்கள் பதிவாயின ; இந்த மாதமே 100 புகார்களுக்கும் தீர்வு கண்டு கேஸ் குளோஸ் செய்தோம் என கணக்கு காட்டுவார்கள். எனவே இம்முறை விரைவுத் தபாலில் அனுப்பி வைத்தேன். இப்போது இந்தியன் வங்கி தலைமை அலுவலகத்துக்கும் எனக்கும் இடையில் இந்த விஷயம் இருக்கிறது. கிளை அலுவலகத்துடனோ அல்லது பிராந்திய அலுவலகத்துடனோ நான் பேச வேண்டும் என அவசியம் இல்லை. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் விபரம் கோரினால் தலைமை அலுவலகம் எல்லா அலுவலகங்களுக்கும் அனுப்பிய கடிதங்களை முழுக்க அளிக்க வேண்டியிருக்கும். இந்தியன் வங்கி அளிக்கும் தீர்வு எனக்குத் திருப்தியில்லை என்றால் நான் ரிசர்வ் வங்கியின் கவனத்துக்கு இந்த விஷயத்தைக் கொண்டு செல்ல உள்ளேன். அப்போது சம்பந்தப்பட்ட வங்கியின் கவனத்துக்கு இந்த விஷயத்தைக் கொண்டு சென்றிருந்தால் தான் அதனை எடுப்பார்கள். அப்போது தலைமை அலுவலகம் பதில் சொல்லும் நிலைக்கு வரும். இந்த விஷயத்தை சரியாக அணுகி மேல் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ரிசர்வ் வங்கிக்கு செல்வேன் என்பதையும் அந்தக் கடிதத்திலேயே குறிப்பிட்டிருந்தேன். 

என் கடிதத்தின் உணர்வையோ அதில் இருக்கும் நியாயத்தையோ வங்கியைச் சேர்ந்தவர்கள் காண மாட்டார்கள். ஒரு சாமானிய வாடிக்கையாளன் ஓர் அசௌகர்யத்தை ஏற்படுத்தி விட்டானே என்பது தான் வங்கியைச் சேர்ந்த அனைவரின் எண்ணமாக இருக்கும். அவர்கள் எளிதில் ஒரு அணியாக மாறுவார்கள். அவர்களுக்கு வாடிக்கையாளர்களை பல ஆண்டுகள் எதிர்கொண்டதன் அனுபவம் இருக்கும். ஒவ்வொரு நிகழ்வும் எவ்விதம் எதிர்கொள்ளப்பட்டன என்னும் நினைவுகள் இருக்கும். அவை அவர்களுக்குள் எளிதில் பரிமாறிக் கொள்ளப்படும். வங்கி நிர்வாகம் கூட்டாகவே எந்த விஷயத்தையும் எதிர்கொள்ளும். இன்னும் சொல்லப் போனால் பிழை இழைத்த தவறிழைத்த ஊழியர்களுக்கு ஆதரவாகவே நிர்வாகம் நடக்கும் ; அதன் மூலம் மொத்த ஊழியர்களின் நன்மதிப்பைப் பெற முயலும். 

இந்த விஷயத்தில் நிறைய ‘’டாகுமெண்டல் எவிடென்ஸ்’’ இருக்கின்றன. வாடிக்கையாளர் வங்கிக்குச் சென்ற நேரம் , ‘’ஸ்விஃப்ட்’’ விண்ணப்பம் அளித்த நேரம் ஆகியவை சி சி டி வி காட்சிகளில் பதிவாகியுள்ளது. வாடிக்கையாளர் விண்ணப்பத்தை அளித்த நேரம் காலை 11.30 மணி. அந்த விண்ணப்பம் அன்றைய ‘’ஃபாரெக்ஸ்’’ நேரத்தைக் கடந்து மாலை 3.30க்கு உள்ளீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு விண்ணப்பம் 4 மணி நேரம் தாமதமாக உள்ளீடு செய்யப்பட்டது என்பது பெரும் பிழை. அந்த விண்ணப்பம் அடுத்த நாள் மாலை 6.45க்கு மட்டுமே பிராசஸ் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்துமே டிஜிட்டலாக பதிவாகியிருக்கும் பதிவுகள். தகவல் பெறும் உரிமைச்சட்டம் மூலம் விபரம் கோரி இவற்றைப் பெற முடியும். வங்கி தன் ஊழியரைக் காக்க முயன்றால் கூட ரிசர்வ் வங்கி ஆம்டஸ்மன் நிச்சயம் நடவடிக்கை மேற்கொள்ளும். 

நேரம் இரவு 9.30 ஆகியிருந்தது. புறப்படுகிறேன் எனக் கூறி புறப்பட்டேன். வாய்மொழியாக அளிக்கப்படும் எந்த வாக்குறுதியையும் ஏற்கக் கூடாது என இருக்கிறேன்; எதுவாக இருந்தாலும் எழுத்துப்பூர்வமாகக் கொடுங்கள் எனக் கேட்க உள்ளேன். பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு இது ஒரு பயிற்சி ; அனுபவம் என எடுத்துக் கொள்ள வேண்டும் என எண்ணினேன்.  

ஒரு புதிய நண்பர்

நேற்று ஊருக்கு அருகில் இருக்கும் கிராமத்தில் ஒருவரைச் சந்தித்து உரையாட வாய்ப்பு கிடைத்தது. அவருடன் 15 நிமிடம் உரையாடிக் கொண்டிருந்தேன். அவர் கிராமத்தில் ‘’காவிரி போற்றுதும்’’ பணிகளை முன்னெடுக்க வாய்ப்பு இருக்குமா என பரிசீலித்தோம். அவருக்கு ஒரு கடிதம் எழுதுகிறேன் என்று கூறினேன்.  

அன்புள்ள நண்பருக்கு,

நமது பண்பாடு மண்ணிலும் கல்லிலும் மரத்திலும் இயற்கையிலும் உறைந்திருக்கும் இறைமையை மானுடரை உணரச் சொல்கிறது. இயற்கையை உணர்பவனும் அறிபவனும் ஆராதிப்பவனுமே இறைமையின் முற்றத்துக்குச் சென்றடைகிறான் என்பது நம் பண்பாட்டின் புரிதல். 

‘’காவிரி போற்றுதும்’’ ஒரு கிராமத்தை ஒரு தேசம் என்றே காண்கிறது. குறியீட்டுரீதியில் ஒரு கிராமத்துக்குச் செய்யும் பணி என்பது தேசம் முழுமைக்கும் செய்யும் பணியே ஆகும். 

நமது கிராமத்தில் நம்மால் பல பணிகளை முன்னெடுக்க முடியும். எளிய அடிப்படையான பணிகள். எனினும் பெருவலிமை கொண்ட அடித்தளமாய் அமைய வாய்ப்புள்ள பணிகள். 

ஒரு கிராமத்தில் தோராயமாக 500 குடும்பங்கள் இருக்கின்றன எனக் கொள்வோம். அந்தக் குடும்பத்தில் இருக்கும் பெண்களுக்கோ சிறுவர்களுக்கோ சிறுமிகளுக்கோ தங்கள் தோட்டத்தில் பலா, நெல்லி, நாவல், பப்பாளி, விருட்சி, நந்தியாவட்டை, வில்வம் ஆகிய மரக்கன்றுகளை வளர்க்க ஆவல் இருக்கக் கூடும். அதற்கான வாய்ப்பு அமையாமல் இருந்திருக்கும். ‘’காவிரி போற்றுதும்’’ ஒரு கிராமத்தின் 500 வீடுகளையும் நேரடியாக அணுகி அவர்களுக்குத் தேவையான மரக்கன்றுகள் எத்தனை எவை எவை என்னும் கணக்கெடுப்பை மேற்கொள்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் சராசரியாக ஒரு உதாரணத்துக்கு 20 மரக்கன்றுகள் வேண்டும் எனக் கூறினால் அந்த கிராமத்தில் சட்டென 10,000 மரங்கள் நடப்பட ஒரு வாய்ப்பு உருவாகிறது அல்லவா? அந்த வாய்ப்பு மிகவும் மங்களகரமானது என்பது ‘’காவிரி போற்றுதும்’’ எண்ணம். அந்த மரக்கன்றுகளை அவர்கள் வீட்டுத் தோட்டத்தில் நட்டு வளர்த்துக் கொள்ள நாம் வழங்குவோம். 

மரங்களைத் தேர்ந்தெடுப்பதில் மரங்களை நடுவதில் மரங்களுக்கு நீர் வார்ப்பதில் நாம் மக்களுக்கு அடிப்படையான சில விஷயங்களைச் சொல்லித் தர வேண்டியிருக்கிறது. 10,000 மரங்களுமே சிறப்பாக வளர அந்த வழிகாட்டல்கள் அவசியம். இருப்பினும் 500 அல்லது 1000 ஆயிரம் பேருக்கு அந்த வழிகாட்டலை அளிப்பது என்பது அதிக நாட்களையும் அதிக நேரத்தையும் எடுத்துக் கொள்ளும் பணி. இருப்பினும் அந்தத் தொடர்பு கொள்ளல் நம் நோக்கங்கங்களை முழுமை செய்யும் என்பதுடன் கிராமத்தின் மொத்த மக்களையும் இணைக்கும் செயலாகவும் இருக்கும். 

முதல் கட்டமாக கிராமத்தின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மரக்கன்றுகள் கொடுத்து அவை ஓராண்டில் கணிசமான அளவில் வளர்ச்சி பெற்றன என்றால் அந்தக் கிராமத்தின் மக்களைக் கொண்டே ஊரின் பொது இடங்களில் நிழல் மரங்களையும் பூமரங்களையும் பெரிய அளவில் நட முடியும். நாம் மரங்களை மட்டும் நடவில்லை ; மக்கள் மனங்களில் நம்பிக்கையையும் ஒற்றுமையையும் நடுகிறோம். 

‘’ஒன்று கூடி சிந்தியுங்கள் ; சேர்ந்து அமர்ந்து விவாதம் செய்யுங்கள் ; உங்கள் மனம் ஒன்றாகட்டும்’’ என்கிறது நம் மறை. 

‘’காவிரி போற்றுதும்’’ இவ்விதமான பணிகளை சில கிராமங்களில் வெற்றிகரமாக முன்னெடுத்திருக்கிறது. எனவே ‘’காவிரி போற்றுதும்’’ இப்பணிகளை எவ்விதம் வெற்றிகரமாக முன்னெடுப்பது என்பதில் பயிற்சியும் அனுபவமும் பெற்றிருக்கிறது. அதன் விளைவாக எதனை முன்னே செய்வது எதனை அடுத்து செய்வது எனத் திட்டமிடுவதிலும் தேர்ச்சி கொண்டிருக்கிறது. 

தங்கள் கிராமத்தில் தங்களுடன் இணைந்து செயல்படுவது மிகவும் மகிழ்ச்சிகரமானது. நாம் சேர்ந்து சிந்திப்போம் ; சேர்ந்து விவாதிப்போம். நம் இலக்கை சேர்ந்து அடைவோம். ‘’காவிரி போற்றுதும்’’ புரிதல்களில் முதன்மையானது ‘’ஒற்றுமையே வலிமை’’ என்பதேயாகும். 

அன்புடன்,


அமைப்பாளர்

‘’காவிரி போற்றுதும்’’

விசாரணையும் முடிவுகளும்





சீர்காழி தீ விபத்து குறித்த சி.பி.கி.ராம்.ஸ் புகாரின் மேல் விசாரணை நடத்தி தெற்கு ரயில்வே பதில் அளித்துள்ளது. ரயில்வே பாதுகாப்பு படையை விசாரணை மேற்கொள்ள ரயில்வே பணித்திருக்கிறது. அவர்கள் தங்கள் விசாரணையை நிறைவு செய்து ரயில்வே நிர்வாகத்துக்கு அறிக்கை அளித்திருக்கின்றனர். 

சீமைக் கருவேல மரங்கள் காட்டுத்தீ என எரிந்து ரயில்வே லைனுக்கு அருகில் இருந்த 11 பனைமரங்களைக் கருக வைத்து கரிக்கட்டையாக்கியிருந்தன. சம்பவம் நடந்தது 08.07.2026 அன்று மாலை 3.15 மணி அளவில். அன்று மாலை 6.15 வரை சம்பவ இடத்தில் இருந்து தீயணைப்பு, காவல் துறை, வருவாய்த்துறை ஆகியவற்றுக்குத் தகவல் தெரிவித்து முழுமையாக அந்த காட்டுத்தீயை அணைத்த பின் அங்கிருந்து கிளம்பினேன். 09.07.2026 அன்று சி.பி.கி.ராம்.ஸ் ல் புகார் பதிவு செய்தேன். 

ரயில்வே நிர்வாகம் 10.07.2026 அன்று தீ விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்த கரிக்கட்டைக்களாய் எஞ்சியிருந்த 11 பனை மரங்களையும் அகற்றியது. ரயில்வே நிர்வாகம் விரைந்து செயல்பட்டது பாராட்டுக்குரியது. 

சம்பவம் நிகழ்ந்த போது மூன்று ரயில்கள் அந்தப் பகுதியைக் கடந்து சென்றன. விசாரணை அறிக்கை, ரயிலில் இருந்த ரயில்வே ஊழியர்கள் லோகோ பைலட், ரயில் கார்டு, ரயிலில் இருந்த ஆர் பி எஃப் காவலர்கள் எவரும் சீர்காழி ரயில் நிலைய மேலாளருக்குத் தீ விபத்து நிகழ்ந்தது குறித்து எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை எனக் கூறுகிறது. வருந்தத்தக்க நிலையாகும் இது. அந்த 3 ரயில்களில் இருந்த ரயில்வே ஊழியர்களிடம் ரயில்வே நிர்வாகம் குறைந்தபட்சம் எழுத்துப்பூர்வ விளக்கமாவது கோரியிருக்க வேண்டும். அவ்விதம் நிகழ்ந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். 

Sunday, 2 August 2026

அம்மை அப்பன்

 இன்று காலை சிதம்பரத்தில் கடலூர் சீனு அவர்களைச் சந்தித்தேன். கால்பந்து ஆடும் சிறுவனின் ‘’விசா’’ நடைமுறைகளுக்கு அவனது குடும்பத்தில் யாராவது ஒருவரின் வங்கிக் கணக்கில் ஒரு பெரும் தொகை குறைந்தபட்சம் 3 மாதங்களுக்காகவாவது ‘’டெபாசிட்’’ ஆகியிருக்க வேண்டும். அது ஒரு வழக்கமான நடைமுறை. எனது நண்பர்கள் அனைவரிடமும் உதவி கேட்டிருக்கிறேன். உதவி கேட்பது அடிப்படை விஷயம். அது நிகழ்ந்தது என்றால் தான் உதவி கிடைப்பது அடுத்து நடக்கும். எத்தனை பேரிடம் உதவி கேட்க முடியுமோ அத்தனை பேரிடமும் கேட்டிருக்கிறேன். நான்கு பேர் உதவி செய்ய முன்வந்தால் கூட எளிதாக இருக்கும். 10 பேர் உதவ முன்வந்தால் மிக எளிதாக இருக்கும். கடலூர் சீனு கடந்த 3 வாரங்களாக நீண்ட தூரப் பயணங்களில் இருந்தார். அவ்வப்போது குறுஞ்செய்தி மட்டும் அனுப்பினேன். கடலூர் சீனுவைப் போல் உணர்வு நுட்பம் கொண்ட இன்னொருவரைப் பார்க்க முடியாது. நாங்கள் சந்தித்துக் கொண்டால் எங்களுக்குள் பேசிக் கொள்ள வேண்டிய அவசியமே இருக்காது. பெரும்பாலும் பேசிக் கொள்ளவும் மாட்டோம். எங்களைச் சுற்றி இருக்கும் சூழலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்போம். எனக்கும் அவருக்கும் பல விஷயங்களில் ஒரே விதமான சிந்தனை இருக்கும். மாறுபாடு இருக்கும் விஷயங்கள் மிகச் சில. மாறுபடும் விஷயத்தில் அவர் பார்வை என்ன கோணம் என்ன என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்வேன். 

கால்பந்து ஆடும் சிறுவன் கல்லூரி சேர்க்கை விஷயத்தில் சீனு பெருமளவு உதவக் கூடிய நபர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் பேசியிருக்கிறார். மிக நல்ல விஷயம் அது. மிக நல்ல உதவியும் கூட. அடுத்த 3 மாதங்களுக்கு பணம் வங்கிக் கணக்கில் இருக்க வேண்டும். கடலூர் சீனு ஒருவரே ஏற்பாடு செய்வதை விட மேலும் சிலரும் இந்த உதவியில் இணைந்தால் சிறப்பாக இருக்கும் என நான் எண்ணுகிறேன். கூட்டுப் பொறுப்பு ஏற்றுக் கொண்டால் பெரிய பாரம் இருக்காது. நாங்கள் உள்ளது உள்ளபடி நிலைமையை பேசிக் கொண்டோம். நாங்கள் சந்தித்து பேசிக் கொண்ட இடம் சிதம்பரம் நடராஜர் ஆலயம். நாங்கள் சிதம்பரத்தில் எப்போது சந்தித்தாலும் நடராஜர் ஆலயத்தில் தான் சந்திப்போம். கோவிந்தராஜப் பெருமாளும் அங்கே இருப்பார் என்பது மேலும் சிறப்பு. எங்கள் இருவருக்குமே சிதம்பரம் கோவிலில் இருப்பது பிடிக்கும். பல மாவட்டக்காரர்களும் பல மாநிலக்காரர்களும் சிதம்பரம் ஆலயத்துக்கு வருவார்கள் என்பதால் சிதம்பரம் எப்போதுமே சிறப்பு மிக்க ஓர் ஆலயம். பெருமாளிடமும் நடராஜரிடமும் சிறுவனுக்காக வேண்டிக் கொண்டோம். நடராஜர் ஆலயத்தில் 3 மணி நேரம் இருந்தோம். நேரம் 12.30 ஆகி விட்டதால் தில்லை காளியம்மன் கோவில் செல்ல முடியவில்லை. அவர் கடலூரிக்கும் நான் ஊருக்கும் புறப்பட்டோம். ஊர் வந்து ‘’வீடடைந்தேன்’’ என குறுஞ்செய்தி அனுப்பினேன். சீனு ‘’குடிகாட்டைக் கடக்கிறேன்’’ எனப் பதில் அனுப்பினார். இன்று மாலை கதிராமங்கலம் வனதுர்க்கையை வணங்கினேன்.

கடலூர் சீனு உடனிருப்பது கால்பந்து ஆடும் சிறுவனின் விஷயத்தில் எனக்கு பெரும் துணையாக உள்ளது. 

உத்தேசம் (நகைச்சுவை)

 நேற்று மகாதானத் தெரு தென்கோடிக்கும் வடகோடிக்கும் இடையே இருக்கும் தூரம் 700 மீட்டர் எனக் கூறியிருந்தேன். இன்று காலை நடைப்பயிற்சிக்கு செல்லும் போது இரு சக்கர வாகனத்தின் ஸ்பீடாமீட்டர் அளவுபடி அளந்து பார்த்தேன். மகாதானத் தெருவில் நீளம் 700 மீட்டர் தான். 

Saturday, 1 August 2026

மனச்செயல்

மனம் என்பதை மனச்செயல் என்று கூறுவார்கள். 

இன்று காலை நடைப்பயிற்சியின் போது அதனை உணர்ந்தேன். இன்று உணர்ந்ததை மிக முக்கியமானதாக நினைக்கிறேன். ரியல் எஸ்டேட் தொடர்பான பல விஷயங்கள் மனதில் நிறைந்திருக்கின்றன. அவை பெருகிக் கொண்டேயிருக்கின்றன. லௌகிகத்தில் அது இயல்பானது. என்றாலும் இன்று அதிகாலையிலேயே அவ்விதம் இருந்தது புதிதாக இருந்தது. இன்று காலை 3 மணி 30 நிமிடம் நடந்தேன். மனம் தன் பல்கிப் பெருகும் செயலிலிருந்து அமைதி கொண்டது 2 மணி 30 நிமிடத்துக்குப் பிறகு தான். கடைசி ஒரு மணி நேரம் மனதில் எழும் எண்ணங்கள் மிக மெதுவானதாக ஆகி விட்டன. அடர்த்தி குறைவான விஷயங்களே மனதில் உதித்தன. உடல் சோர்வுற்றதைப் போல மனமும் சோர்வு கொண்டது. மிக வேகமாக இயங்கிக் கொண்டிருந்த மனம் சோர்வு கொண்டு மெதுவாக ஆனதை விரும்பினேன். அதன் பின் நாள் முழுவதும் மனம் அமைதியாக இருந்தது. 

எனக்கு எப்போதுமே மனதை கவனிக்கும் வழக்கம் உண்டு. 

ஒரு பேருந்தில் பயணிக்கும் போது மனம் ஒரு விதமாக இருக்கும் ; ரயிலில் பயணிக்கும் போது ஒரு விதமாக இருக்கும் ; இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் போது ஒரு விதமாக இருக்கும் ; பிரியமான ஒருவருடன் பேசும் போது ஒரு விதமாக இருக்கும்; நம்மை அசௌகர்யமாக உணரும் ஒருவருடன் பேசும் போது மனம் ஒரு விதமாக இருக்கும். ஒரு இரைச்சல் கேட்கும் போது மனம் ஒரு விதமாக இருக்கும். ஒரு குழந்தையிடம் பேசும் போது ஒரு விதமாக இருக்கும். இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். 

நான் சொல்கிறபடி மனம் கேட்கிறதா? மனம் சொல்கிறபடி நான் கேட்கிறேனா? எனக்குள் இருக்கும் மனம் ஒன்று தானா? எனக்குள் பல மனங்கள் இருக்கின்றனவா?

இவ்விதமான கேள்விகள் எழுந்தன. இவ்விதம் கேள்விகள் எழுந்தது நல்ல விஷயம் என்று தான் எண்ணினேன். ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என ஆர்வம் எழுந்தால் அதைத் தெரிந்து கொள்ள வாய்ப்பு உருவாகிறது அல்லவா?

இன்று காலை மனதில் பிரவாகித்த பல எண்ணங்களில் ஒரு பகுதியைத் தான் இன்று காலை எழுதினேன்.  

மனம் பற்றி மேலும் எழுதுகிறேன்.

உறக்கத்தை விட நடைப்பயிற்சி மேலானது (நகைச்சுவைக் கட்டுரை)

இன்று காலை அலாரம் வைத்து எழுந்தேன். 4 மணி நேரம் நடக்க அலாரம் வைத்துக் கொண்டேன். 3 மணி 30 நிமிடம் நடந்தேன். அதிகாலை நேரம். நடக்கத் தொடங்கிய போது மனம் பெருகிப் பிரவாகித்துக் கொண்டிருந்தது. மனதுக்குள்ளேயே நிறைய ரியல் எஸ்டேட் டீலிங் பேசினேன். நிறைய அட்வான்ஸ் வாங்கினேன். இப்போது கையிருப்பில் இருக்கும் இடங்கள் தொடர்பானவர்களிடம் சொல்ல வேண்டிய சொற்கள் என மனதில் எழுந்தன. அதில் ஒன்று அல்ஜீப்ராவுடன் தொடர்புடையது. ஒரு மீடியேட்டரிடம் சொல்ல வேண்டிய வார்த்தை இது என என் மனத்தில் உருவானது; ‘’நான் ‘’ஒய்’’ என்னும் விலையைச் சொல்கிறேன். இடத்தை வாங்குபவர் ‘’எக்ஸ்’’ என்னும் விலைக்கு கேட்கிறார். நீங்கள் இடைத்தரகர்; ‘’ஒய்’’ என்ற எண்ணுக்கும் ‘’எக்ஸ்’’ என்ற எண்ணுக்கும் இடையில் இருக்கும் ஒரு எண்ணில் தான் பேரம் முடியும். அந்த எண் ‘’இஸட்’’. இடத்தை வாங்குபவரிடம் பேசி  ’’இஸட்’’ என்ன என்பதை என்னிடம் சொல்லுங்கள் ; சொல்லக் கூட வேண்டாம் ; அலைபேசியில் குறுஞ்செய்தியாக அனுப்புங்கள். அந்த ‘’இஸட்’’ என்னும் எண்ணை மட்டும் அனுப்புங்கள் போதும். எனக்கு சம்மதம் என்றால் ‘’யெஸ்’’ என ரிப்ளை அனுப்புகிறேன் ; சம்மதம் இல்லை என்றால் ‘’நோ’’ என ரிப்ளை அனுப்புகிறேன். அவ்வளவுதானே விஷயம்’’ எனக் கூறுகிறேன். இடைத்தரகர்கள் சந்திப்புகளை உருவாக்கவே விரும்புவார்கள் ; சந்திப்பின் மூலம் ஏதேனும் முன்னேற்றம் ஏற்படும் என்பது அவர்கள் எதிர்பார்ப்பு. இப்போது தொடர்பில் இருக்கும் இடைத்தரகரிடம் இவ்வாறு அல்ஜீபரா எல்லாம் சொன்னால் அவர் எவ்வளவு புரிந்து கொள்வார் என யோசித்தேன். விலை ரொம்பவும் குறைத்துக் கேட்கப் போகிறார்கள் என்பது தெரிந்தால் நான் வாங்குபவரை சந்திப்பதைத் தவிர்த்து விடுவேன். இப்போதெல்லாம் அலைபேசியை எப்போதும் கையில் வைத்திருக்கிறேன். அலைபேசி வந்தால் எடுத்துப் பேசுகிறேன். எனக்கு ஒரு வழக்கம் உண்டு. நான் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கிறேன் என்றால் அலைபேசி ஒலித்தால் எடுக்க மாட்டேன். எதற்காக வாகனத்தில் செல்கிறேனோ அந்த வேலையை முடித்து விட்டு வீடு திரும்பிய பின் ‘’ ஜஸ்ட் நௌ சீன் யுவர் மிஸ்டு கால். ஷல் ஐ கால் நௌ?’’ என குறுஞ்செய்தி அனுப்புவேன். எல்லா மிஸ்டு காலுக்கும் இவ்விதம் மெசேஜ் அனுப்புவேன். பேசி விடுவேன். என் மீது பொதுவாக ஒரு புகார் உண்டு. நான் அலைபேசியை எடுப்பதில்லை என. ஆனால் எல்லா அழைப்புகளுக்கும் அப்போதில்லை என்றாலும் அதன் பின்னாவது பேசி விடுவேன். எப்போதும் ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்துபவர்கள் பலர் என்னுடைய ‘’மிஸ்டு கால்’’ பார்த்து விட்டு மெசேஜ் கொடுக்காமலோ பேசாமலோ இருப்பார்கள். என் ஃபோனை எடுக்காமல் இருப்பார்கள். ஃபோன் லைன் மாற்றி வைப்பார்கள். இத்தகையவர்களை ‘’யானை படுத்தாலும் குதிரை மட்டம்’’ என நினைத்துக் கொள்வேன். 

ஏன் காலங்கார்த்தாலேயே ரியல் எஸ்டேட் எண்ணங்கள் என வருந்தினேன். எண்ணங்களை உருவாக்குவதும் மனம் தான். உருவாகும் எண்ணங்களுக்கு வருந்துவதும் மனம் தான் என எண்ணிக் கொண்டு நடந்தேன். 

நடக்கும் போது நடக்க மட்டும் செய்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது. 

அப்போது ஒரு ஜென் கதை நினைவுக்கு வந்தது. ஜென் குரு ஒரு சீடனைப் பார்த்து ‘’ஆறு அடி நீளம் ; ஆறு அடி அகலம் ; ஆறு அடி ஆழம்’’ உள்ள குழியைத் தோண்டு என்பார். சீடன் இரண்டு நாள் கடுமையாக வேலை செய்து குரு சொன்ன விதமான குழியைத் தோண்டு விடுவான். குருவிடம் அதனைக் காட்டுவான். ‘’இந்தக் குழியை மூடி விடு’’ என அப்போது சொல்வார் குரு. இதுதான் ஜென் கதை. இது என் மனதில் வந்தது. நான் படித்த கதை என்ன என்றால் குரு ஒரு பெரிய குழியைத் தோண்டு எனக் கூறுவார். சீடன் பெரிய குழியை இரண்டு நாள் வேலை செய்து தோண்டி வைப்பான். இரண்டு நாட்கள் கழித்து அதனைப் பார்க்கும்  குரு ‘’குழியை மூடி விடு’’ என்பார். இதுதான் நான் படித்த கதை. இந்த ‘’6 அடி நீளம் 6 அடி அகலம் 6 அடி ஆழம்’’ என்பது என்னுடைய சிவில் என்ஜினியரிங் ஃபீல்டில் ஃபவுண்டேஷனுக்காக வெட்டப்படும் குழிகளின் அளவுகளில் ஒன்று. அந்தக் குழியை வெட்ட எவ்வளவு கடுமையான உழைப்பைக் கொடுக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும். அதில் எவ்வளவு மண் வெளியே வரும் என்பதும் எனக்குத் தெரியும். இந்தக் கதையில் இன்னொரு அம்சம் இருக்கிறது. குழி வெட்டும் போது உதாரணத்துக்கு 1 அடி நீளம் 1 அடி அகலம் 1 அடி ஆழம் கொண்ட குழியை வெட்டினால் சாமானியர்கள் நீளம் Xஅகலம் Xஆழம் மூன்றையும் பெருக்கி 1 கன அடி மண் வெளியே வரும் என எண்ணுவார்கள். அந்த பதில் தவறு. 1.5 கன அடி மண் வெளியே வரும். நிலப்பரப்பு இறுக்கமாக இருக்கும். குழி வெட்டப்படும் போது மண் துகள்களின் இறுக்கம் தளர்ந்து விடுவதால் கன அளவு அதிகமாகி விடும். வெட்டிய குழியை திரும்ப மூடுவது நாம் எண்ணிய அளவு இலகுவாக இருக்காது. கூடுதல் மெனக்கெடு தேவைப்படும். உண்மைக்கும் நமது எண்ணங்களுக்கும் இருக்கும் இடைவெளி குறித்த கதை என்றும் அதனைக் கொள்ளலாம். ஒருவர் ஒரு குழியைத் தோண்ட அறிந்திருக்கிறார் என்றால் அவர் குழி தோண்டுதல் குறித்து பகுதி அறிதலும் பகுதிப் புரிதலும் கொண்டிருக்கிறார் என அர்த்தம். குழி தோண்டி அதனை மூடவும் அறிந்திருக்கிறார் என்றால் அவர் புரிதல் முழுமையானது என்று அர்த்தம். முழுமைப் புரிதல் குறித்த கதை என்றும் அதனைக் கொள்ளலாம். புத்த பிக்குகளின் தோற்றம் மனதில் எழுந்தது. அது மனதுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. 

நடக்கும் போது எண்ணங்கள் கிளரப்பட்டு ஏதாவது யோசனை ஓடிக் கொண்டேயிருந்தது. 

இரு இரு சக்கர வாகனங்களில் 6 பேர் கூச்சல் போட்டுக் கொண்டு சென்றார்கள். 

வாட்ச்மேன் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்தார். இங்கே வாட்ச்மேன்களின் வேலை இரவு 11.30 அளவில் படுத்துத் தூங்கி காலை 5 மணிக்கு எழுந்து விடுவது தான். கடை வாசலில் ஒரு ஆள் இருக்கிறார் என்னும் அளவிலான பாதுகாப்பு போதுமானது என கடைக்காரர்கள் எண்ணுவார்கள் என எண்ணிக் கொண்டேன். 

நான் நடந்து கொண்டிருக்கும் தெரு மகாதானத் தெரு. நீளமான தெரு. 700 மீட்டர் நீளம் இருக்கும். தெரு தெற்கு வடக்கானது. வட கோடியிலிருந்து தென் கோடி வரை சென்று விட்டு பின் தென்கோடியிலிருந்து வடகோடி வரை நடக்கிறேன். இது எனக்கு பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறேன். நீண்ட தூரம் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது புதிய பிராந்தியத்துக்குச் சென்றால் தெருநாய்கள் ஒரு குழுவாக மாறி பின் தொடர்கின்றன. அதனால் மகாதானத் தெருவில் வட கோடிக்கும் தென் கோடிக்கும் நடக்கிறேன். 

நாயின் உடலில் இயற்கையாக ‘’ரேபிஸ்’’ வைரஸ் இருக்காது. பூனையின் உடலில்தான் ‘’ரேபிஸ்’’ வைரஸ் இருக்கும். ‘’ரேபிஸ்’’ உள்ள பூனையை நாய் கடித்திருந்தால் அதன் உடலிலும் ‘’ரேபிஸ்’’ வைரஸ் வந்து விடும். 

ஒரு எலி செத்து கிடந்தது

அந்தத் தெருவில் 10 நாய்கள் இருக்கின்றன. வட கோடியில் 7 நாய்கள். தென் கோடியில் 3 நாய்கள். அந்தத் தெரு இப்போது கடைத்தெருவாக ஆகி விட்ட படியால் அவை மிக அதிக மனிதப் புழக்கத்தில் உள்ளவை. ‘’யார் இவன் வித்தியாசமாக காலை 2 மணிக்கு வாக்கிங் போகிறான்?’’ எனப் பார்த்து விட்டு தங்கள் வழமைகளுக்குத் திரும்பி விட்டன. 

இரண்டு நாய்கள் ஒரு பூனையைத் துறத்திக் கொண்டு பஞ்சாப் நேஷனல் வங்கி வளாகத்துக்குள் ஓடின. பூனை தப்பி விட்டது. பூனை சிறிய உடல் கொண்டது. சட்டென மதில் சுவர் மேல் ஏறி விடும். அவ்வளவு லகுவாக நாய்களால் ஏறிட முடியாது. சற்று நிதானித்துதான் ஏறிட முடியும்.

தெருவை பார்க்கும் பார்வைக்கும் ஒரு குறிப்பிட்ட கட்டிடத்தை கவனித்துப் பார்க்கும் பார்வைக்கும் வித்தியாசம் இருக்கிறது என எண்ணினேன். 

நடந்து கொண்டே இருந்தேன். நான் மெதுவாக நடப்பேன் ஆனால் சீராக நடப்பேன். 

வேப்பம்பழங்கள் உதிர்ந்து கிடந்தன. 

வேப்பம்பழத்தின் வாசனையை மனம் உணர்ந்தது. அகம் வாசனைகளால் ஆனது எனத் தோன்றியது. 

என் ஆர் காங்கிரஸ் க்கு ஒருவர் பெரிய பேனர் வைத்திருந்தார். ‘’இன்றைய புதுச்சேரி முதல்வரே! நாளைய தமிழக முதல்வரே! பிறந்தநாள் வாழ்த்துக்கள்’’ என வாழ்த்து சொன்னது அந்த பேனர். திராவிடக் கட்சிகளின் ‘’மோனோபோலி’’ உடைக்கப்பட்டு விட்டது என்பதால் இனி தமிழக அரசியல் ‘’பாலிபோலி’’ எனத் தோன்றியது. நல்ல விஷயம் தான். 

புதிதாகப் பெரிதாக ஒரு கருவுறுதல் மருத்துவமனை பேனர் இருந்தது. ஒருவர் போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்தார். 

ரொம்ப நேரம் ஆனது போல் இருந்தது. அலைபேசி 6 மணிக்கு அலாரம் வைக்கப்பட்டு சுவிட்ச் ஆஃபில் இருந்தது. அலைபேசி அடிக்கும் வரை நடப்போம் என எண்ணினேன். நடந்து நடந்து உடல் சோர்ந்து விட்டது. உடல் சோர்ந்ததும் எண்ணங்கள் பிரவாகிப்பது மிக மிகக் குறைந்து விட்டது. மனம் உடல் வலியை மட்டுமே உணர்த்திக் கொண்டிருந்தது. 

ஒரு வீட்டில் மங்கள இசை ஒலித்தது. 

ஒரு வீட்டில் வெங்கடேச சுப்ரபாதம் கேட்டது. 

சில பெண்கள் வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்து கோலம் போடத் துவங்கினார்கள். 

மகாதானத் தெருவிலிருந்து 2 நிமிடத்தில் டூ வீலரில் வீட்டுக்கு வந்து விட்டேன். நேரம் காலை 5.45.

மனம் அமைதியாய் இருப்பதாக எண்ணினேன். 

மனம் என்றால் என்ன என்னும் கேள்வி எழுந்தது.