Sunday, 21 June 2026

25 கவிதைகள்

உச்சபட்சமான பரபரப்பு கொண்ட உலகியல் வணிகச் செயல்பாடு ஒன்றில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். எல்லா வணிகங்களிலும் சிறிதேனும் இந்த அம்சம் உண்டு எனினும் தற்போது ஈடுபட்டிருக்கும் விஷயம் குறிப்பிட்டுக் கூறும் விதமானது. தொடர் சந்திப்புகள். தொடர் பேச்சுவார்த்தைகள். தொடர் உடன்படிக்கை வாசக பரிசீலனைகள். மனதிலிருந்து கொஞ்சம் கூட நீக்கி வைக்க முடியவில்லை. நள்ளிரவிலும் அதிகாலையிலும் விழிப்பு நிகழ்கிறது. விழித்ததும் அச்செயல்பாட்டின் எண்ணங்கள் மனதில் நகரத் தொடங்குகின்றன. என்னில் ஆரம்பித்து என்னில் முடியும் விஷயம் அல்ல அது. இந்த விஷயத்துக்குள் யார் யார் வரப்போகிறார்கள் என்பதை என்னாலேயே கூறிட முடியாது ; இப்போதே பலர் இருக்கிறார்கள் ; மேலும் பலர் வரலாம். எத்தனை பேர் வருவது குறித்தும் விஷய்ம் இல்லை. எண்ணியவாறு விஷயம் முடிய வேண்டும். நடு வயதின் அனுபவம் எந்த விஷயமும் குறிப்பிட்ட காலம் தாண்டி அதிராது என்பதை பல தருணங்களில் உணர்ந்திருக்கும். எந்த விஷயத்துக்கும் அதிர்வு சில வினாடிகள் ; சில நிமிடங்கள் ; சில மணிகள் ; நில நாட்கள்; சில வாரங்கள் ; சில மாதங்களே. மாதக்கணக்கில் எண்ணங்கள் அதிர்வது வெகு அபூர்வம். நாட்கணக்கில் நீடிப்பது கூட அபூர்வமே. சாமானியமாக சில விஷயங்கள் சில நாட்கள் நீடிக்கும்.  

இன்று மதியம் ஒரு வணிகச் சந்திப்பு ஏற்பாடு செய்திருந்தேன். மூன்று நான்கு நாட்களுக்கு முன் நிகழ்ந்திருக்க வேண்டும். ஒரு காலிமனை கிரயம் தொடர்பான வணிகச் சந்திப்பு. சந்திப்புக்கு வாங்குபவர் ஒதுக்கும் நேரமும் விற்பவர் ஒதுக்கும் நேரமும் ஒன்றாக இருக்கவில்லை. நேரம் முடிவு செய்து இரண்டு மூன்று முறை ஒத்திப் போடப்பட்டது. நாளாக நாளாக நான் பேச வேண்டிய விஷயம் இரண்டு தரப்புக்கும் என மனதில் சொல்லிப் பார்த்த சொற்களை இன்னும் எவ்விதம் சிறப்பாகச் சொல்வது என மாற்றி மாற்றி அமைத்துக் கொண்டிருந்தேன். நான் என்ன சொல்கிறேன் என்பது முக்கியம் என்றாலும் அந்த விஷயத்தை வாங்குபவரும் விற்பவரும் எவ்விதம் புரிந்து கொள்கிறார்கள் என்பது தான் முக்கியம் என்பதால் என் மனம் சொற்களைப் பரிசீலிக்கும் தோறும் சோர்வடைந்தது. 

இன்று காலை வணிகச் சந்திப்புக்கு ஊரின் 3 நட்சத்திர விடுதி அறை ஒன்றை பதிவு செய்து விட்டு வீட்டுக்கு வந்தேன். சந்திப்புக்கு இன்னும் 3 மணி நேரம் இருந்தது என்னும் நிலையில் என் புத்தக அலமாரியில் இருந்து ஒரு பெரிய கவிதைத் தொகுப்பை கையில் எடுத்தேன். நான் பொதுவாக கவிதை வாசிப்பது எவ்வாறு எனில் ஒரு கவிதையை வாசித்த பின் அந்த கவிதை அளிக்கும் உணர்வில் நெடுநேரம் இருப்பேன். எனவே கவிதையை மெல்ல ஒன்று ஒன்றாக வாசிப்பதே என் வழக்கம். ஒரே தொகுப்பில் இருக்கும் ஒரு கவிதையும் அடுத்த கவிதையும் கூட வெவ்வேறு உணர்வுநிலைகளில் இருக்கக்கூடும் என்பதால் ஒவ்வொரு கவிதையாக மெதுவாகவே வாசிப்பேன். இன்று அந்த பெரிய கவிதைத் தொகுப்பின் கவிதைகளை வாசிக்கத் தொடங்கினேன். ஒன்று இரண்டு மூன்று என வாசித்துக் கொண்டே சென்றேன். அந்தத் தொகுப்பை பல முறை வாசித்திருக்கிறேன். இருப்பினும் இப்போதுதான் முதல் முறை வாசிக்கிறேன் என்னும் விதமாக மனம் இருந்தது. ஒரே கவிதையை பலமுறை வாசித்தேன். குறிப்பிட்ட வரிகளை மீண்டும் மீண்டும் வாசித்தேன். அந்தக் கவிதைத் தொகுப்பின் 25 கவிதைகளை வாசித்திருந்தேன். ஒவ்வொரு கவிதையின் வாசிப்பனுபவம் குறித்தும் எழுத வேண்டும் என எண்ணினேன். அந்த நினைவைப் பின் தள்ளி எப்போதும் கவிதைத் தொகுப்புகளைக் கையில் வைத்திருந்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் கவிதைகளை வாசித்துக் கொண்டேயிருப்பது என முடிவு செய்தேன். 25 கவிதைகளைத் தொடர்ச்சியாக வாசித்தது என் மன பரபரப்பை முற்றிலும் இல்லாமல் செய்து விட்டது. கவிதைகளை கையில் வைத்திருத்தல் கவிதைகளுடன் இருத்தலே என உணர்ந்தேன்.