சீட் கவர் தைக்கும் டெய்லரின் ரேஷன் கார்டு தொடர்பான மனுவை இன்று அளித்து விட வேண்டும் என பொழுது விடிந்ததுமே எண்ணம் கொண்டேன். அவர் காலை 9.30 மணி அளவில் கடைக்கு வந்து கடையைத் திறக்கிறார். சென்ற ஒரு மாதத்தில் கணிசமான முறை அவர் கடைக்குச் சென்றிருக்கிறேன். எப்போதாவது இன்னொரு பணியாளர் இருப்பார். கடை உரிமையாளரை நான் எப்போதும் கடையில் பார்த்தது இல்லை. ஒரு நாளைக்கு குறிப்பிட்ட தொகை செலுத்தி விட வேண்டும் என்னும் ஒப்பந்தம் அவர்கள் இருவருக்கும் இருக்கக் கூடும். என்னுடைய யூகம் தான் எனினும் யூகம் சரியாக இருக்கவே வாய்ப்பு அதிகம். பார்த்தாலே தெரியும் எந்த ஒரு விஷயத்தையும் நான் வார்த்தையால் கேட்க மாட்டேன். மனுநீதி நாளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்பதாக இருந்தாலும் வட்ட வழங்கல் அலுவலகத்தில் மனு கொடுப்பதாக இருந்தாலும் அலுவலக வேலை நேரமான காலை 10 - மாலை 5ல் ஏதேனும் ஒரு மணி நேரம் ஒதுக்கி அவர் வர வேண்டும். ஜீனி ரேஷன் கார்டை அரிசி ரேஷன் கார்டாக மாற்றித் தரக் கோரும் மனுவை இரு வாரங்கள் முன்பே எழுதி விட்டேன். அவருடைய ரேஷன் கார்டின் எண் தேவைப்பட்டது. அவருடைய வீட்டு எண் தேவைப்பட்டது. அவர் வசிக்கும் தெருவின் பெயரைக் கூறுகிறாரேயன்றி வீட்டு எண் அவரால் கூற இயலவில்லை. வீட்டு எண் என்ன என்று அவருக்குத் தெரியவில்லை. ரேஷன் கார்டு சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் வீட்டுக்கு விசாரிக்க வருவார்கள் என்பதால் வீட்டு எண் தேவை. அதன் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லி வீட்டு எண் அறிந்தேன். ரேஷன் கார்டு அட்டையின் எண் கேட்டு அதனை மனுவில் எழுதினேன்.
இன்று காலை 10.15க்கு அவருடைய கடைக்குச் சென்றேன். சில இரு சக்கர வாகனங்கள் சீட் கவர் மாற்ற வந்திருந்தன. அவர் வேலை செய்து கொண்டிருந்தார். இன்று மனுநீதி நாள் ; இன்று மனு கொடுத்து விடுவோம் என சொன்னேன். அவருடைய மனைவிக்கு ஃபோன் செய்து அவரை வரச் சொன்னார். அவர் ஒரு இரு சக்கர வாகனத்தை இரவலாக வாங்கிக் கொண்டு வந்து சேர்ந்தார். கடைப் பணியாளர் தனக்குப் பதிலாக தனது மனைவியை மனு கொடுக்க அனுப்பி வைக்கிறேன் எனக் கூறினார். அவர் கடையிலிருந்து கலெக்டர் ஆஃபிஸ் 5 கி.மீ தூரம். எனது இரு சக்கர வாகனத்தில் நான் முன்னால் சென்றேன் ; தனது வாகனத்தில் அவர் தொடர்ந்து வந்தார். கலெக்டர் ஆஃபிஸ் வாசலில் சீருடை அணிந்த 15 போலீஸார் கும்பலாக நின்று இரு சக்கர வாகனங்களை சோதனை செய்து கொண்டிருந்தனர்.இந்த வழக்கம் புதிதாக இருக்கிறதே என்ன சோதனை என விசாரித்தேன். மனுநீதி நாள் அன்று மனுதாரர் எவரேனும் பெட்ரோலை உடலின் மீது ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொள்ள முயல்வதுண்டு. அப்படி எதுவும் ஆட்சியர் அலுவலகத்துக்குள் நிகழ்ந்திடாமல் இருக்க இவ்விதம் சோதனை செய்கிறோம் என்றார்கள். என் பின்னால் வந்த சீட் கடைக்காரர் மனைவியின் வண்டியை சோதனை செய்தார்கள். அதில் 250 மி.லி பெட்ரோல் ஒரு பாட்டிலில் இருந்தது. அதனை வாங்கி போலீஸார் வைத்துக் கொண்டார்கள். அவர் வாகனம் உள்ளே வந்து என் வாகனம் நின்ற இடத்துக்குப் பக்கத்தில் நின்றது. ‘’ஏன் பெட்டியில் பெட்ரோல் வைத்திருந்தீர்கள்?’’ எனக் கேட்டேன். பாதி வழியில் நின்றால் இதனை நிரப்பிக் கொள்ள என்றார். ‘’இது மாதிரி செய்யாதீங்க. மூடி லூஸா இருந்து பெட்ரோல் சிந்தி என்ஜின் ஹீட்ல பத்திடுச்சுன்னா விபரீதம் ஆயிடும்’’ என்றேன்.
மனுநீதி நாள் முகாம் நடக்கும் இடத்துக்குச் சென்றோம். 250 பேர் கூட்ட அரங்கில் இருந்தனர். ஆளும்கட்சிக் காரர்களோ எதிர்க்கட்சிக் காரர்களோ அங்கே இல்லை என்பதை கவனித்தேன்.
இந்த மனுநீதி நாள் மனுவின் சிறப்பம்சம் இன்று அளிக்கப்படும் மனுவுக்கு ஒரு ஒப்புகை எண் கொடுப்பார்கள். அந்த ஒப்புகை எண்ணை இணையத்தில் மனுநீதி நாள் தளத்தில் உள்ளீடு செய்தால் அனைவரும் அந்த மனுவையும் மனுவின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையையும் அதிகாரிகளும் மனுதாரரும் காண முடியும்.
கூட்ட அரங்குக்கு வெகு தள்ளி மனுக்களுக்கு ஒப்புகைச்சீட்டு அளிக்கும் இடம் இருந்தது. அங்கு சென்றால் இணையம் வேலை செய்யவில்லை என்று கூறினர். மனுநீதி நாள் குறித்தே மனு அளிக்க வேண்டியிருக்கிறது என எண்ணினேன். கணிசமான நேரம் காத்திருந்தும் ஒப்புகை எண் தரப்படவில்லை. கூட்ட அரங்குக்கு சென்று மனுவை அளிக்கச் சொன்னேன். இன்று மாவட்ட ஆட்சியரே கூட்டத்தை நடத்தினார். மேடையில் 8 அதிகாரிகள் இருந்தனர். எவரிடம் வேண்டுமானாலும் மனு அளிக்கலாம். கூட்டம் இல்லாமல் இருந்த ஒரு வரிசையில் சென்று மனு அளித்தார். மாவட்ட குடிமைப் பொருள் வழங்கும் அலுவலகத்திலிருந்து வந்த ஒருவரை ஒலிபெருக்கியில் அழைத்தார்கள். அவர் மனுவைப் படித்துப் பார்த்து பெற்றுக் கொண்டார்.
சீட் கடைக்காரர் மனைவியிடம் ஒப்புகை எண்ணுக்காகக் காத்திருந்த போது சில விபரங்கள் கேட்டுக் கொண்டேன்.
‘’உங்களுக்கு சொந்த ஊர் எந்த ஊருமா?’’
‘’மாயரம் தான் அண்ணன்’’
‘’உங்க வீட்டுக்காரரும் மாயரம்னு சொன்னாரு’’
‘’அண்ணன் !அவரு என்னோட சொந்த தாய்மாமா’’
‘’அப்படியா ? நீங்க வேலைக்கு ஏதும் போலலையா?’’
‘’திருப்பூர்ல இருந்தப்ப கம்பெனிக்கு வேலைக்கு போனேன். இங்க வந்ததுல இருந்து வேலைக்குப் போகலை’’
‘’என்ன படிச்சிருக்கீங்க?’’
‘’ பிளஸ் டூ படிச்சுருக்கன் அண்ணன்’’
’’ஏன் மேல படிக்கலையா? கரஸ்பாண்டன்ஸ் கோர்ஸ்ல ஏதாவது டிகிரி படிக்கலாம்ல?’’
அவர் பதில் ஏதும் சொல்லவில்லை.
‘’நீங்க என்ன வேலை செய்வீங்க?’’
‘’கடையில பொருள் எடுத்துக் கொடுக்கற வேலை செய்வன் அண்ணன்’’
‘’எந்தக் கடையில ?’’
‘’மளிகைக் கடை’’
‘’மளிகைக் கடையா ? என் ஃபிரண்டு ஒரு ஹார்டுவேர் கடை வச்சுருக்கார். அங்க வேலை செய்யறீங்களா? ஆனா அங்க நூறு விதமான பொருள் இருக்கும். அத்தனையையும் நீங்க அடையாளப்படுத்தி எடுக்கணும். உங்களால முடியுமா? நான் ஃபிரண்டு கிட்ட கேட்டு சொல்றன்’’
‘’செய்வேன் அண்ணன்’’ என்றார்.
மனுவைக் கொடுத்த பின் மீண்டும் ஒப்புகை எண்ணுக்காக வந்தோம். அப்போதும் இணைய இணைப்பு கிடைக்கவில்லை. மதியம் 2 மணிக்கு வரச் சொன்னார்கள். உங்களுக்கு எஸ் எம் எஸ் வரும். அதில் ஒப்புகை எண் இருக்கும். அது போதும் என்றார்கள். எனக்கு அதில் நம்பிக்கையில்லை. அஜாக்கிரதையாக டெய்லர் மெஸேஜை டெலிட் செய்து விட்டால் சிரமம். டெய்லர் மனைவியை வீட்டுக்கு கிளம்பி போகச் சென்னேன். 2 மணிக்கு மேல் வரலாம் என நான் முடிவு செய்து கொண்டேன்.
அந்தப் பெண் வாகனம் அருகே சென்றதும் ஒரு பையிலிருந்து ரூ.100 எடுத்தார்.
‘’அண்ணன் ! இத பெட்ரோல் செலவுக்காக வச்சுக்கங்க. பல தடவை நீங்க இந்த விஷயத்துக்காக மெனக்கெட்டீங்கன்னு வீட்டுக்காரர் சொன்னார்’’ என்றார்.
‘’அதெல்லாம் வேண்டாம் அம்மா! பரவாயில்லை. உங்களுக்கு அரிசி கார்டு கிடைச்சா அது போதும்’’
நண்பரின் அலுவலகத்தில் கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தேன். நண்பரின் ஹார்டுவேர் கடைக்குச் சென்று அங்கே கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தேன். மணி இரண்டு ஆனதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றேன். ஒப்புகை எண் வழங்கும் இடத்தில் யாரும் இல்லை ; மனு நீதி நாள் கூட்ட அரங்கிலும் யாரும் இல்லை. அலுவலர்கள் அனைவரும் மதிய உணவு அருந்த சென்று விட்டார்கள். ஒப்புகை எண்ணுக்காக பொதுமக்கள் இருபது பேர் அமர்ந்திருந்தனர். 2.45க்கு ஊழியர்கள் வந்தனர். அப்போதும் இணையம் வேலை செய்யவில்லை. கொஞ்சம் காத்திருந்து ஒப்புகைச் சீட்டை பெற்றுக் கொண்டேன்.
சீட் கவர் கடைக்குச் சென்றேன். நேரம் அப்போது மதியம் 3.45. மதிய உணவு நான் இன்னும் அருந்தவில்லை. அவரிடம் ஒப்புகைச்சீட்டை அளித்தேன்.
‘’இந்த சீட்டு ரொம்ப முக்கியம். பத்திரமா வச்சுக்கங்க. ஒரு வாரம் 10 நாள்ல எப்படியும் மனு மேல மேல் நடவடிக்கை இருக்கும். நடுவுல நான் வந்து விபரம் கேட்டுக்கறன்’’ என வாசலில் இருந்தே விபரம் கூறி விட்டு வீட்டுக்குப் புறப்படத் தயாரானேன்.
‘’சார் ! பெட்ரோலுக்கும் ஏதும் வாங்கிக்க மாட்டேன்னு சொல்லீட்டீங்கன்னு வீட்ல சொன்னாங்க. நான் உங்களுக்கு என்ன செய்ய முடியும்னு எனக்குத் தெரியல்’’ என்றார் சீட் கடைக்காரர். சொன்ன போது மிகவும் நெகிழ்ந்து கண் கலங்கி விட்டார்.
‘’இன்னைக்கு தான் மனு கொடுத்திருக்கோம். உங்களுக்கு அரிசி கார்டு கிடைச்சா அதுவே போதும்’’ எனக் கூறி விட்டு வீடு நோக்கிப் புறப்பட்டேன் ; மதிய உணவருந்த.