Monday, 1 June 2026

மனுநீதி நாள் முகாம் குறித்த புகார்

அனுப்புநர்
&&&&
&&&
&&
&

பெறுநர்
மாவட்ட ஆட்சியர் அவர்கள்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மயிலாடுதுறை

ஐயா, 

பொருள் : 01.06.2026 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மனுநீதி நாள் முகாமில் மனுதாரர்களுக்கு ஏற்பட்ட இடையூறுகளையும் சேவைக் குறைபாட்டையும் மாவட்ட ஆட்சியர் கவனத்துக்குக் கொண்டு வரும் கடிதம்

01.06.2026 அன்று நடந்த மனுநீதி நாள் முகாமுக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்திருந்தேன். அங்கு பொதுமக்களுக்கு ஏற்பட்ட சேவைக் குறைபாட்டையும் இடையூறுகளையும் தங்கள் கவனத்துக்குக் கொண்டு வருவதற்காக இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். 

அதாவது, மனுநீதி நாள் முகாமில் பொதுமக்களால் தரப்படும் மனுக்கள் அலுவலக முத்திரை இடப்பட்டு மனுவின் முதல் பக்கம் ஸ்கேன் செய்யப்பட்டு பிரிண்ட் அவுட் ஆக அளிக்கப்படும். அதன் மறுபக்கத்தில் மனு எண், மனுதாரர் பெயர், முகவரி மற்றும் மனு விபரம் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும். மனுநீதி நாள் கணினி மயமாக்கப்பட்டு இணையம் மூலம் இணைக்கப்பட்ட பின் இவை நிகழ்கின்றன. தனது மனு மீது என்ன மேல்நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை மனுதாரர் அறிய இணைய இணைப்பு உதவும். 

01.06.2026 அன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் அரசு அலுவலர்களின் கணினிகள் இணையத்துடன் இணையவில்லை. இணைய இணைப்பில் பல்வேறு சிக்கல்கள். பல மனுதாரர்கள் இந்த இடையூறின் காரணமாக தங்கள் ஒப்புகைச்சீட்டினைப் பெற முடியவில்லை. காலை 11 மணிக்கு மனு அளிக்க வந்தவர்களிடம் மதியம் 2 மணிக்கு மேல் பெற்றுக் கொள்ளுமாறு அலுவலர்கள் கூறினர். மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து வந்திருந்த மனுதாரர்கள் இதனால் பல மணி நேரம் காத்திருக்க நேரிட்டது. 

ஒவ்வொரு வாரமும் வாரநாட்கள் துவங்கும் திங்கட்கிழமையன்று மனுநீதி நாள் என்பது ஆகி வந்த வழக்கம். மாவட்ட அரசு அலுவலகங்களின் தலைமை அலுவலகமான மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நூற்றுக்கணக்கான மக்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து வருகை புரிவதும் ஆகி வந்த வழக்கம். 

அன்றைய தினம் மனுதாரர்களுக்கு கிடைக்க வேண்டிய சேவைகள் சிறப்பான முறையில் கிடைப்பதை உறுதி செய்வது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் கடமை. 

01.06.2026 மாவட்ட ஆட்சியர் அலுவலக மனுநீதி நாளில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் முழுமையாகக் கலந்து கொண்டார். மாவட்ட ஆட்சியர் கவனத்துக்கு இந்த விஷயம் கொண்டு வரப்பட்டதா என்பதை ஆய்வு செய்யுமாறு மாவட்ட ஆட்சியரைக் கேட்டுக் கொள்கிறேன். இது போன்ற சேவைக் குறைபாடுகளும் இடையூறுகளும் இனி மனுதாரர்களுக்கு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சிய்ரை கேட்டுக் கொள்கிறேன். 

தங்கள் உண்மையுள்ள,
&&&

இடம் : மயிலாடுதுறை
நாள் : 01.06.2026

நகல்

கனம் மாநில வருவாய்த்துறை அமைச்சர்
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை
தலைமைச் செயலகம்
சென்னை