ஒரு விஷயத்தை எவரும் அவதானிக்கலாம் ; அரசாங்கச் செயல்பாடுகளில் கணிசமானவை அறிக்கைகள் தயாரித்தலே. ஒரே அறிக்கையை குறுகிய காலத்துக்குள்ளோ அல்லது நீண்ட காலத்திலோ திரும்பத் திரும்ப தயாரித்து அளித்துக் கொண்டேயிருக்க வேண்டியிருக்கும். ஒரு காலத்தில் அதனால் தான் இந்திய அரசியலில் வழக்கறிஞர்கள் மிக அதிக அளவில் ஈடுபட்டனர். மொழி மற்றும் கலைப் படிப்புகள் படித்தவர்களின் தேவை இந்திய அரசியலில் இருந்தது. இந்திய ஆட்சிப் பணியாளர்கள் தேர்வில் மொழியறிவு தேர்ச்சிக்கான முக்கிய விஷயமாக இருந்தது ; இருக்கிறது. இந்திய ஆட்சிப்பணி தன் தேர்வர்களின் ஆங்கில மொழியறிவை முக்கியமாக நினைக்கிறது. தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒருவருக்கு வேறு மாநிலத்தில் பணி நியமனம் நிகழ்ந்தால் அந்த மாநில மொழியைக் கற்று அதிலும் தேர்வு எழுதி தேர்ச்சி அடைய வேண்டும் என்னும் தேர்வுமுறையைக் கொண்டிருக்கிறது. சட்டம் இயற்றப்படுதல் என்பது முன்பு சட்டம் படித்தவர்களை அதிகம் சார்ந்திருந்தது. சட்டங்கள் அதிகமாக அதிகமாக சட்டங்கள் குடிமக்களால் அதிகம் பயன்படுத்தப்படுகையில் அதிகாரிகள் சட்ட திருத்தங்களை மேற்கொள்வதில் பங்களிப்பு ஆற்றத் தொடங்கினர். இன்று இந்திய அரசியலில் நீதித்துறையும் வழக்கறிஞர்களும் ஒரு தனிக்குழுவாக உள்ளனர். அதிகாரவர்க்கம் தனிக்குழுவாக உள்ளது. அரசியல்வாதிகள் தனிக்குழுவாக உள்ளனர். இவர்களுக்கிடையேயான மோதல்களும் ஒத்துப் போதல்களுமே அரசாங்கத்தின் இயக்கம்.
இந்திய ஜனநாயகத்தில் கடைசி குடிமகனின் பங்களிப்பு கூட தினந்தோறும் இருக்கிறது. இன்று நாட்டின் கடைசி குடிமகன் கூட ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ரூ.1 என்ற அளவில் ஜி.எஸ்.டி செலுத்துகிறான். அவ்விதம் எனில் ஒரு நாளைக்கு ரூ.140 கோடி. ஒரு மாதத்துக்கு ரூ.4200 கோடி. ஒரு ஆண்டுக்கு ரூ.49,200 கோடி. சென்ற ஆண்டு மத்திய அரசின் ஜி எஸ் டி வருமானம் ரூ. 22 லட்சம் கோடி.
நம் நாடு சுதந்திரம் அடைந்த போது நம் நாட்டின் வரி வருவாய் என்பது மிகக் குறைவாக இருந்தது. அரசாங்கம் செயல்படும் விதம் ஒருவிதமாக இருந்தது. இன்று நாட்டின் வருவாய் பெருகியுள்ளது. அதற்கேற்ற விதத்தில் பொதுமக்கள் மனநிலையிலும் பங்களிப்பிலும் மாற்றம் இருக்க வேண்டும். வருவாய் வளர்ச்சியை அப்போது தான் நாட்டு மக்களும் சமூகமும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இரண்டு தினங்களுக்கு முன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுநீதி நாள் முகாமுக்குச் சென்றிருந்தேன். அங்கே இணைய இணைப்பு கிடைக்கவில்லை. மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருந்து ஒப்புகைச்சீட்டைப் பெற்றுக் கொண்டு சென்றனர். இதனை நான் தொழில்நுட்பப் பிரச்சனையாகப் பார்க்கவில்லை. இதில் நான் வேறு ஒரு கோணத்தைக் காண்கிறேன். இன்று அரசாங்கம் அரசு ஊழியர்களுக்கும் அரசு அலுவலகச் செயல்பாடுகளுக்கும் அரசு வருமானத்தின் பெரும் தொகையை அளிக்கிறது. ஆனால் அரசு ஊழியர் மனோபாவத்தில் மாற்றம் இல்லை. அந்த மாற்றம் நிகழ வேண்டிய காலகட்டம் வந்து விட்டது.