Thursday, 9 July 2026

சம்பவத்துக்கு மறுநாள்

நேற்று இரவு 7 மணி அளவில் வீட்டுக்கு வந்தேன். உணவருந்தி விட்டு முன் நேரத்திலேயே உறங்கி விட்டேன். காலை எழுந்ததும் நேற்றைய சம்பவங்களின் மனத்தொடர்ச்சி மனதில் நிகழ்ந்து கொண்டிருந்தது. இணையத்தைத் திறந்து ரயில்வே பாதுகாப்பு படை, ரயில்வே போலீஸ் ஆகியவற்றின் தொடர்பு எண்களைக் குறித்துக் கொண்டேன். சில எண்கள் இயங்கவில்லை. ஒரு எண் இயங்கியது. அது ரயில்வே போலீஸின் எண். நேற்று நடந்த விபரம் சொன்னேன். 15 நிமிடத்தில் உள்ளூர் ரயில்வே போலீஸிடமிருந்து ஃபோன் எனது அலைபேசிக்கு வந்தது. அந்த அழைப்புக்கும் பதில் அளித்தேன். அடுத்த 15 நிமிடத்தில் ரயில்வே போலீஸிடமிருந்து இன்னொரு ஃபோன். அதற்கும் பதில் சொன்னேன். 

ரயில்வேக்கு நடந்த சம்பவத்தைத் தெரிவிக்க வேண்டும் என நினைத்தேன். இணையத்தில் இருந்து சில தென்னக ரயில்வே பொது மேலாளர், தென்னக ரயில்வே துணை பொது மேலாளர், தென்னக ரயில்வே டிவிஷனல் மேனேஜர் ஆகியோர் மின்னஞ்சல் முகவரிகளை ஒரு காகிதத்தில் குறித்துக் கொண்டேன். நேற்று நடந்த விஷயங்களை எழுதி ரயில்வே லைனுக்கு மிக அருகில் நிகழ்ந்த தீ விபத்து என்ற கோணத்தில் இந்த விஷயத்தை விசாரிக்க வேண்டும் எனக் கோரி மூவருக்கும் ஒரே மின்னஞ்சலில் கார்பன் காப்பி  அனுப்பினேன். 

சற்று சோர்வாக இருந்தது. தீ அணைக்கப்பட்டது நிம்மதி என்றாலும் இதைப் போன்ற விஷயங்களில் இன்னும் கூடுதல் வேகம் இருந்திருக்க வேண்டும். அதுதான் பொதுமக்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கும். சாமானியமாக பொதுமக்கள் அரசாங்கம் மீதும் அரசு அமைப்புகள் மீதும் அரசு ஊழியர்கள் மேலும் நம்பிக்கையில்லாமல் இருக்கிறார்கள் ; இதைப் போன்ற விஷயங்களில் மிக விரைவாகச் செயல்பட்டால் மட்டுமே பொதுமக்கள் அரசு என்னும் முறைமை மேல் நம்பிக்கை கொள்வார்கள். 

சி.பி.கி.ராம்.ஸ் நினைவு வந்தது. ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பிய மின்னஞ்சல் உள்ளடக்கத்தை சி.பி.கி.ராம்.ஸ் ல் புகாராகப் பதிவு செய்தேன். 

காலை உள்ளூரில் சில பணிகள் இருந்தன. அவற்றை முற்பகல் செய்தேன். பிற்பகல் 3 மணி அளவில் சிதம்பரம் புறப்பட்டேன். செல்லும் வழியில் சீர்காழியில் ரயில்வே மேம்பாலத்தின் மேல் இருந்து நேற்று தீ விபத்து ஏற்பட்ட இடத்தைப் பார்த்தேன். பின் சிதம்பரம் சென்று விட்டேன். அங்கே வேலை முடிந்து ஊர் திரும்பிய போது சீர்காழி ரயில் நிலையம் சென்று அங்கே நேற்றைய சம்பவம் குறித்து கூறலாம் எனத் தோன்றியது. ரயில் நிலையம் சென்று பிளாட்ஃபாரம் டிக்கெட் எடுத்துக் கொண்டு நிலைய மேலாளர் இருக்கும் இடம் நோக்கிச் சென்றேன். ரயில்வே ஊழியர்கள் சிலர் அங்கே இருந்தனர். என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு நேற்றைய சம்பவம் குறித்தும் ரயில்வே போலீஸுக்கு இன்று காலை பேசியது சி.பி.கி.ராம்.ஸ் ல் பதிவு செய்தது ஆகியவற்றைக் கூறினேன். நேற்று தீயணைப்பு வண்டியைக் கொண்டு வர எடுத்துக் கொண்ட முயற்சிகளைச் சொன்னேன். 

‘’நமது நாடு இப்போது மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அரசாங்கங்களின் இயங்குமுறையில் குடிமக்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பது மிகவும் முக்கியமானது. நம் வளர்ச்சியைப் பொறுக்காத எதிரி நாடுகள் நம் நாட்டிற்கு மேற்கிலும் கிழக்கிலும் இருக்கிறார்கள். இஸ்ரேலைச் சுற்றியிருக்கும் அத்தனை அண்டை நாடுகளுமே இஸ்ரேல் மேல் பகைமை கொண்டவை. இஸ்ரேல் மீது பயங்கரவாதத்தை ஏவுபவை. இஸ்ரேல் தன் குடிமக்களுக்கு குடிமைப் பண்பையும் எச்சரிக்கை உணர்வையும் இயல்பாக கல்வி மூலம் தனது விரிவான பரப்புரை மூலம் ஏற்படுத்துகிறது. இஸ்ரேலியர்களின் குடிமை உணர்வே அந்நாட்டின் முதன்மைப் பாதுகாப்பு. மாறுபாடாக எதையேனும் பொது இடங்களில் உணர்ந்தால் அதனை அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என்னும் குணம் நம் நாட்டு மக்களுக்கு வர வேண்டும். இந்த உணர்வின் மூலம் பல விபத்துகளைத் தடுக்க முடியும் ; பல சதிவேலைகளை பல பயங்கரவாத தாக்குதல்களை முறியடிக்க முடியும்’’ என்றேன். 

அனைவருக்கும் மகிழ்ச்சி. அங்கிருந்து வீடு திரும்பினேன். மின்னஞ்சலைத் திறந்து பார்த்த போது பொது மேலாளருக்கு அனுப்பியிருந்த மின்னஞ்சல் மேலும் சிலருக்கு ஃபார்வர்டு செய்யப்பட்டிருந்தது ; எனக்கு சிசி அனுப்பப்பட்டிருந்தது.