Wednesday, 8 July 2026

பொறுப்பின்மையின் உச்சம்

இன்று ஒரு பணி நிமித்தம் சீர்காழி சென்று விட்டு சீர்காழி புறவழிச்சாலையில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தேன். புறவழிச் சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தைக் கடக்கத் தொடங்கினேன். மேம்பாலத்துக்குக் கீழே பல ஏக்கரில் பரவிக் கடந்த சீமைக்கருவை மரங்களின் கணிசமான பகுதி பற்றி எரிந்து கரும்புகை முழு மேம்பாலத்தையும் நிறைத்திருந்தது.  நீளமான அந்த மேம்பாலத்தின் மேல் புகையைக் குறித்து சாமானியமாக எண்ணி 25 சதவீத தூரத்தைக் கடந்திருப்பேன். அப்போது உடல் அந்தக் கரும்புகை அனல்புகையாகவும் இருந்து அனல் கக்குவதை உணர்ந்தது. உடல் முழுவதையும் அனல் வெம்மை சுட்டது. காட்டுத்தீ என்பது என்ன என்பதையும் காட்டுத்தீயில் மனிதர்களும் பிராணிகளும் எவ்விதம் உயிரிழக்கிறார்கள் என்பதையும் அப்போது உணர்ந்தேன். காட்டுத்தீயின் வெம்மை அதன் புகையிலும் இருக்கும். அந்த வெம்மையை தாங்க இயலாமல் தோல் வேகும். புகை நுரையீரலை நிரப்பி உடலுக்கு பிராணவாயு இல்லாமல் ஆக்கி மூச்சுத்திணறச் செய்து சாவைக் கொண்டு வரும். வண்டியை வேகமெடுத்தேன். ஒரு கணம் தொடர்ந்து செல்லாமல் வந்த பாதையில் திரும்பி விடலாமா என எண்ணினேன். மனதைத் திடப்படுத்திக் கொண்டு அந்த மேம்பாலத்தைக் கடந்து விட்டேன். அந்த மேம்பாலத்தை மணிக்கு 40 கி.மீ வேகத்தில் கடந்தால் 2 லிருந்து 3 நிமிடங்களில் கடக்க முடியும். புகை மண்டியிருக்கும் சூழலில் இன்னும் கூடுதல் நேரமாகலாம். எனக்கு மூச்சுத் திணறி இருமல் வந்தது. சற்றுத் தள்ளி வந்து புகை மண்டலத்தைக் கண்டேன். நேரம் அப்போது மாலை 3 மணி இருக்கும். புகை மண்டலத்தைக் கடந்து வந்தவுடன் எனது அலைபேசியை எடுத்து 108 என்ற எண்ணுக்கு ஃபோன் செய்தேன். சாலை விபத்துகள் நிகழ்ந்திருக்கும் இடங்களைக் கடக்கும் போது பலமுறை 108 என்ற எண்ணுக்கு ஃபோன் செய்திருக்கிறேன். ஆம்புலன்ஸ் வந்து விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறது. 108க்கு அழைத்தால் அழைப்பை ஏற்பவர்கள் சாலை விபத்தா அல்லது தீ விபத்தா அல்லது காவல்துறை உதவி வேண்டுமா எதனுடன் தொடர்பு ஏற்படுத்தித் தர வேண்டும் எனக் கேட்பார்கள். ஆனால் இந்த முறை அப்படிக் கேட்கவில்லை. நானாக தீ விபத்து என்று சொன்னேன். அழைப்பை ஏற்றவர் சற்று குழப்பமடைந்ததாக உணர்ந்தேன். எனினும் அவர் எந்த மாவட்டம் எந்த ஊர் என்று கேட்டு விட்டு தீயணைப்பு நிலையத்துக்கு உங்கள் எண்ணைக் கொடுத்து விடுகிறோம் ; அவர்கள் உங்களை அழைப்பார்கள் என்று சொன்னார்கள். ஓரிரு நிமிடம் காத்திருந்தேன். அழைப்பு ஏதும் வரவில்லை. எனக்கு அந்த ஊரின் தீயணைப்பு நிலையம் எங்கேயிருக்கும் என்பது தெரியும். அங்கே விரையத் தொடங்கினேன். அப்போது எரிவாயு நிரம்பிய சரக்கு வாகனம் ஒன்று அந்த மேம்பாலத்தைக் கடக்கத் தொடங்கியது. அனல் நிரம்பிய புகை மண்டலத்தில் எரிவாயு சிலிண்டர்கள் சூடானால் என்ன விபரீதம் நிகழுமோ என்ற அச்சம் என்னைச் சூழ்ந்தது. இன்னும் எத்தனை வாகனங்கள் வருமோ என்ற அச்சம். கைக்குழந்தைகளும் சிறு குழந்தைகளும் காரிலோ பேருந்திலோ பயணித்து இந்தப் பாலத்தைக் கடக்க நேர்ந்து மூச்சுத் திணறினால் என்ன ஆகும் என்ற அச்சம். விரைந்து சென்றேன். 108 அழைத்ததையும் அவர்கள் தீயணைப்பு நிலையம் என்னைத் தொடர்பு கொள்ளும் எனக் கூறியதையும் கூறினேன். அவர்கள் அவ்விதம் அழைப்பு ஏதும் வரவில்லை எனக் கூறியது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவர்களிடம் அங்கிருக்கும் சூழ்நிலையை நானே விளக்கினேன். அங்கே 4 பேர் இருந்தனர். விபரம் கேட்டுக் கொண்டார்களே தவிர நடவடிக்கையில் உடனடியாக இறங்கியதாகத் தெரியவில்லை. என்னுடைய பெயரையும் முகவரியையும் கேட்டு எழுதிக் கொண்டார்கள். எழுதியவர் ‘’நீங்க வெளியூரா?’’ என்றார். எனது நண்பன் ஒருவனுக்கு ஃபோன் செய்து ‘’மிக அவசரம்’’ எனக் கூறி இணையத்தில் சீர்காழி காவல்துறையின் எண் எது இருந்தாலும் அனுப்பு என்று கூறினேன். சீர்காழி துணை காவல்துறை கண்காணிப்பாளர் எண்ணை அனுப்பினான். அந்த எண்ணுக்கு ஃபோன் செய்தேன். முழு சுற்றும் ஒலித்து ஓய்ந்தது. மீட்டிங்கில் இருக்கக் கூடும் என எண்ணினேன். நேராக சீர்காழி காவல்நிலையத்துக்குச் சென்று அதுவரை நடந்தது அனைத்தையும் கூறினேன். அப்போது அங்கே இரண்டு காவலர்கள் இருந்தனர். ஒருவர் ஒரு வழக்கு குறித்து ஒரு வெள்ளைக் காகிதத்தை நீளவாக்கில் நான்காக மடித்து சில பெயர்களையும் அந்தப் பெயர்களை இணைக்கும் காரணிகளையும் அம்புக்குறி போட்டு எழுதிக் கொண்டிருந்தார். இன்னொருவர் அலைபேசியை எடுத்து ஃபோன் செய்தார். இந்த தீ விபத்து தொடர்பாகத்தான் யாருக்கோ தகவல் தெரிவிக்கிறார் என எண்ணினேன். 

‘’ஐயா ! அந்த பொண்ணு புதுசா கல்யாணம் ஆன பொண்ணுங்க ஐயா. கல்யாணம் ஆகி ரெண்டு மாசம் தான் ஆகுது. புருஷன் திட்றான். மாமியார் திட்றாங்கன்னு சொல்லுது ஐயா. யாரோ சிங்கப்பெண்-ல புகார் கொடுங்க சொல்லியிருக்காங்க. அதான் ஐயா விஷயம். சி எஸ் ஆர் மட்டும் போட்ருக்கோம். அந்த நம்பர் சொல்றன் ஐயா’’ என்ற படி ஒரு எண்ணைக் கூறினார். 

நான் அங்கிருந்து நேராக வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் சென்றேன். வருவாய் கோட்டாட்சியர் இருந்தார். அவரிடம் விஷயத்தை முழுக்கக் கூறினேன். ‘’அந்த ஏரியா வி ஏ ஓ வை அனுப்பி பாக்கச் சொல்றன்’’ என்றார். 

‘’சார் ! உங்க கிட்ட போலிஸ் டி எஸ் பி நம்பர் இருந்தா கொடுங்க. என்கிட்ட ஒரு நம்பர் இருக்கு. ஆனா அது ஃபுல் ரிங் ஆகி கட் ஆகுது ‘’ என்றேன். 

கையைக் காட்டி ‘’ரொம்ப பக்கத்துல தான் டி எஸ் பி ஆஃபிஸ் இருக்கு. அங்க போய் சொல்லுங்க ‘’ என்றார். 

நான் டி எஸ் பி ஆஃபிஸுக்கு சென்றேன். அங்கே ஒருவர் இருந்தார். அவரிடம் விஷயத்தைக் கூறினேன். ‘’சார் ! மைக்ல ஹை வே பேட்ரோல் கூப்பிட்டு அந்த ஸ்பாட்டுக்கு போகச் சொல்லுங்க. நான் மிகைப்படுத்தி சொல்லலங்கறது அப்ப உங்களுக்குத் தெரியும்’’ என்றேன். 

‘’ஃபயர் சர்வீஸ்ல சொல்லீட்டிங்கள்ல ; அவங்க போவாங்க ‘’ என்றார். 

மீண்டும் தீயணைப்புத்துறை அலுவலகத்துக்குச் சென்றேன். பிரதான சாலையிலிருந்து பிரிந்து செல்லும் பக்கவாட்டுச் சாலையின் உள்ளே அந்த அலுவலகம் இருக்கிறது. பிரதான சாலையிலிருந்து பக்கவாட்டுச் சாலை பிரியும் இடத்தில் ஒரு இஸ்திரி கடை இருந்தது. அந்தக் கடைக்காரரிடம் என்னுடைய டூ-வீலரில் இருந்தவாறே ‘’ கொஞ்ச நேரம் முன்னாடி ஃபயர் சர்வீஸ் வண்டி இந்தப் பக்கம் போனதா ?’’ எனக் கேட்டேன். அவர் உறுதியாக ‘’இல்லை’’ எனத் தலையாட்டினார். அதன் பின் பக்கவாட்டுச் சாலையின் உள்ளே சென்றேன். அவர்கள் புறப்படும் முஸ்தீபில் இல்லை. நான் திரும்பி வருவேன் என்றும் எதிர்பார்க்கவில்லை. இருந்த 4 பேரில் சீனியரான ஒருவர் ‘’டூ வீலரை எடு. ஸ்பாட்டை பார்த்து விட்டு வருவோம்’’ என்றார். அந்த நேரத்தில் டி எஸ் பி என்னுடைய மிஸ்டு கால் பார்த்து விட்டு ஃபோன் செய்தார். அவரிடம் சுருக்கமாக விஷயத்தைக் கூறி விட்டு ‘’சார் நான் மிகைப்படுத்தி சொல்லல. நிலைமை சீரியஸ். அதனால தான் எல்லா ஆஃபிஸ்க்கும் தகவல் சொல்றன். கைக்குழந்தைகளும் சின்ன குழந்தைகளும் அந்த பாலத்தை கிராஸ் செஞ்சா நிச்சயம் மூச்சுத் திணறும். எனக்கே மூச்சு திணறிடுச்சு. ஒரு சாமானியப் பிரஜையா இதை அரசாங்க அதிகாரிகளுக்கு சொல்ல வேண்டியது எனது கடமை. அதைத்தான் நான் செஞ்சிருக்கன். தேங்க்யூ சார்’’ எனக் கூறினேன். 

டூ வீலரில் ஃபயர் சர்வீஸ் ஊழியர்கள் செல்லையில் நானும் பின் தொடர்ந்து சென்றேன். வந்து பார்த்த அந்த ஊழியர்களுக்கு அதிர்ச்சி.  அவர்கள் நான் கூறிய விஷயம் ஒரு சாமானியனின் பார்வையில் மிகைப்படுத்தப்பட்டது என்றே எண்ணினார்கள். நேரில் பார்த்த போது விஷயம் சீரியஸ் தான் என புரிந்து கொண்டார்கள். சீனியராக இருந்தவர் சட்டென தன் ஜூனியருக்கு எவ்விதம் மேம்பாலத்திலிருந்து கீழே இறங்க வேண்டும் ; தண்ணீர் ஹோஸ் எப்படி லே அவுட் செய்து கொள்ள வேண்டும் என விளக்கினார். ஆஃபிஸுக்கு ஃபோன் செய்து தீயணைப்பு வாகனத்தை வரச் சொன்னார்கள். கிராம நிர்வாக அலுவலரும் அவரது உதவியாளரும் வந்து வருவாய்த்துறைக்கு செய்தி கூறத் தொடங்கினர். அந்த நேரத்தில் அந்த மேம்பாலத்தின் கீழ் 3 ரயில்கள் வடக்கும் தெற்குமாக கடந்து சென்றன. ஸ்டேஷன் மாஸ்டருக்குத் தகவல் தெரியுமா என யோசித்தேன். அவரிடமும் சொல்லி விட்டு வருவோமா என எண்ணினேன். ஊரில் இருந்த பத்திரிக்கை நிருபருக்கு ஃபோன் செய்து அங்கேயிருக்கும் பத்திரிக்கை நிருபர்களுக்கு ஃபோன் செய்ய வேண்டும் என்று சொன்னேன். எண்களை எஸ். எம். எஸ் செய்தார். அவர்கள் இரண்டு பேர் வந்தனர். என் ஹெச் எ ஐ என்பட்டும் தேசிய நெடுஞ்சாலை பாதுகாப்பு ஆணைய பணியாளர்கள் 4 பேர் நெடுஞ்சாலையில் தீயணைப்பு வாகனம் நிற்கிறது என வாகன ஓட்டிகள் சொன்ன தகவல் அடிப்படையில் அவர்களும் வந்தனர். 

அந்தத் தீ நெடிந்து வளர்த்திருந்த 11 பனை மரங்களை எரியச் செய்து கருக்கியிருந்ததைக் கண்டவர்களின் உள்ளம் வேதனைப்பட்டது. 

3.15 அளவில் நான் தகவல் தெரிவிக்க முயற்சி எடுத்ததிலிருந்து 3 மணி நேரம் இந்த விஷயம் நீடித்து 6.15க்கு தீ முழுமையாக அணைக்கப்பட்டு இந்த விஷயம் நிறைவுற்றது. தீயணைப்பு வாகனம் திரும்பிச் சென்றது. வருவாய்த்துறை ஊழியர்கள் திரும்பிச் சென்றனர். நெடுஞ்சாலை பாதுகாப்பு ஆணைய ஊழியர்கள் திரும்பிச் சென்றனர். நிருபர்களும் திரும்பிச் சென்றனர். அனைவரும் சென்ற பின்பு நானும் ஊர் நோக்கி புறப்பட்டேன். 

***

அரசு என்பது பிரும்மாண்டமான ஓர் அமைப்பு. அதில் ஒவ்வொருவருக்கும் ஒரு பணி இருக்கிறது. ஒவ்வொரு துறைக்கும் ஒரு பொறுப்பு இருக்கிறது. மேற்படி விஷயங்கள் வாஸ்தவமான விஷயங்கள். ஒவ்வொரு முறையும் ஜனநாயக அரசமைப்பின் மீது எனக்கு இருக்கும் நம்பிக்கையைக் கூறி விட்டே விமர்சனங்களை முன்வைக்கிறேன். இன்றைய விஷயத்தில் எவை சற்று சீக்கிரம் நிகழ்ந்திருக்க வேண்டும் என்பதைக் கூறுகிறேன். 

(1) 108 எண் சேவை இந்த தீ விபத்து குறித்த தகவலை சீர்காழி தீயணைப்பு நிலையத்துக்குத் தெரிவித்ததா என்பது விசாரணைக்குரிய விஷயம். 

(அ) அவர்கள் தெரிவிக்காமல் இருந்திருந்தால் அது பெரிய பிழை. 

(ஆ) அவர்கள் தகவல் தெரிவித்து அதனை தீயணைப்பு நிலையம் சாதாரணமாக எடுத்திருந்தால் அது இன்னும் பெரிய பிழை. 

(2) முதல் முறை நான் தீயணைப்பு நிலையம் சென்ற போதே அவர்கள் குறைந்தபட்சமாக ஒரு டூ வீலரில் ஒருவரையோ அல்லது இரண்டு பேரையோ அனுப்பி நிலைமையை மதிப்பிட்டிருக்கலாம். அவ்விதம் நிகழ்ந்திருந்தால் தீயணைப்பு நடவடிக்கைகள் 3.35 மணி அளவில் துவங்கியிருக்கும். அவ்விதம் நிகழாமல் போனதால் தீயணைப்பு நடவடிக்கைகள் தொடங்க 4.45 ஆகி விட்டது. 

(3) காவல் துறை தங்கள் வயர்லெஸ்ஸில் புறவழிச்சாலை ரயில்வே மேம்பாலம் அருகில் தீ விபத்து எனக் கூறி ஹைவே பேட்ரோல் வாகனத்தை அனுப்பியிருந்தாலும் நிலைமை என்ன என்பது முன்னரே மதிப்பிடப்பட்டிருக்கும். 

அதிர்ஷ்டவசமாக துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் ஏதும் நிகழவில்லை. ஆனால் அவ்விதம் நிகழ பெரும் வாய்ப்பு இந்த சம்பவத்தில் இருந்தது. வழக்கத்துக்கு மாறான விஷயங்கள் நிகழ்வதாக அரசின் கவனத்துக்கு ஒரு விஷயம் கொண்டு வரப்படும் போது அதனை உள்வாங்கும் பொறுப்பில் இருப்பவர்கள் கூடுதல் பொறுப்புணர்வோடு இருக்க வேண்டும். சக அரசுத் துறைகளுக்குள் கூடுதல் ஒருங்கிணைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். 

***

இந்த சம்பவங்களின் முதல் பாதியில் அரசு அலுவலகங்களின் பொறுப்பின்மை வெளிப்பட்டிருக்கிறது. எனவே இந்தப் பதிவுக்கு ‘’பொறுப்பின்மையின் உச்சம்’’ எனத் தலைப்பிட்டேன். 

***

சம்பவத்தில் முழுக்க உடனிருந்தவன் என்ற முறையில் தீயணைப்பு வாகனம் வந்தவுடன் விரைந்து பணியாற்றி தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள் அனைவருக்கும் என் ந்ன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மற்ற அரசுத்துறை ஊழியர்களுக்கும் நன்றி. பத்திரிக்கையாளர்களுக்கும் நன்றி. 

***

எதிர்பார்ப்புகள் : 

(1) இந்தத் தீ விபத்து மனிதர்களால் உருவாக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்பே அதிகம். அதுவும் மது அருந்தியவர்களால் நிகழ்ந்திருக்க வாய்ப்பு அதிகம். இந்தத் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். 

(2) பனை தமிழகத்தின் மாநில மரம் ஆகும்.தமிழக அரசு விதிமுறைகள் படி தனியார் தன் சொந்த இடத்தில் இருக்கும் பனை மரத்தை வெட்ட வேண்டும் என்றால் கூட அரசிடம் அனுமதி பெற்றே வெட்ட வேண்டும். இல்லையென்றால் அது குற்றம் என அறிவித்துள்ளது தமிழக அரசு. இந்த சம்பவத்தில் 11 பனை மரங்கள் எரிந்து போயுள்ளன. வருவாய்த்துறை இந்த கோணத்தில் விசாரணை நடத்தி 11 பனை மரங்கள் எரிந்து போகக் காரணமானவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு அபராதமும் தண்டனையும் விதிக்க வேண்டும். 

(3) புற வழிச் சாலையில் பலநூறு பேர் போக்குவரத்துக்குப் பயன்படுத்தும் சாலையில் அந்தச் சாலையில் பயணிப்போர் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் சீமைக்கருவேலக் காட்டில் தீ வைத்தவர்களை காவல்துறை விசாரணை மூலம் கண்டறிந்து நீதியின் முன் நிறுத்த வேண்டும்.