வியாழனன்று காலை 7.30 சென்னை விரைவு வண்டியில் சென்னை செல்ல முடிவு செய்தது புதன்கிழமை இரவு. வழக்கப்படி இரு சக்கர வாகனத்தை வீட்டிலேயே வைத்து விட்டு வீட்டில் இருப்பது போன்ற உணர்வை வீட்டில் இருப்பவர்களுக்கு ஏற்படுத்தி விட்டு சென்னை கிளம்பத் திட்டம். இந்த முறை ஒரே ஒரு விஷயத்தைச் சேர்த்தேன். அதாவது நண்பர் ஒருவர் என்னை ஜங்ஷனில் காலை டிராப் செய்வதாக ஏற்பாடு. காலை 5 மணிக்கு அலாரம் வைத்திருந்தேன். ஆனால் காலை 4 மணிக்கே விழித்து விட்டேன். 4.45க்கு நண்பருக்கு ஃபோன் செய்தேன். நண்பர் ஃபோனை எடுக்க வில்லை. சில முறை மீண்டும் செய்தேன். ஃபோன் எடுக்கப்படவில்லை. அதிகாலை நேரத்தில் வாக்கிங் செல்ல மைதானத்துக்கு டூ வீலரில் சென்று கொண்டிருந்த ஒருவர் லிஃப்ட் கொடுத்தார். உணவகம் ஒன்றில் காலை உணவு அருந்தி விட்டு மினி பேருந்தில் ஜங்ஷன் சென்று சேர்ந்தேன். அலுப்பாக இருந்தது. நடைமேடை இருக்கை ஒன்றில் படுத்து உறங்கி விட்டேன். ரயிலுக்கு அதிக அவகாசம் இருந்தது. 7.30 ரயிலுக்குப் பதிலாக 6 மணி ரயிலைப் பிடிக்க விரும்பினேன். அது நிகழவில்லை. நண்பர் வந்து எழுப்பினார். அவருடன் உரையாடிக் கொண்டிருந்தேன். ரயில் வந்தது. முன்பதிவு இல்லாத பெட்டி காலியாக இருந்தது . இப்போதெல்லாம் ரயில்களில் முன்பதிவுப் பெட்டிகள் நிறைந்து விடுகின்றன ; சமயத்தில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் காலியாக இருக்கின்றன. ரயிலில் ஏறியதும் படுத்து உறங்கி விட்டேன். எழுந்த போது சிதம்பரம் வந்திருந்தது. கையில் இருந்த 200 பக்க நூலை படிக்கத் தொடங்கினேன். செங்கல்பட்டில் வாசித்து முடித்தேன். மீண்டும் சிறு உறக்கம். எழுந்த போது வண்டி நுங்கம்பாக்கத்தை தாண்டிக் கொண்டிருந்தது.
எழும்பூரில் இறங்கி அங்கிருந்து ஒரு பேருந்தைப் பிடித்து சி ஐ டி காலனி சென்றேன். பேருந்தில் ஓட்டுநர் நடத்துநர் சேர்த்து மொத்தம் 6 பேர் தான் இருந்தோம். சென்னைப் பேருந்துகள் இவ்விதமும் இருக்கும் என்பதை அன்று அறிந்தேன்.
சந்திப்பு 45 நிமிடம் நிகழ்ந்தது. விடைபெற்றுக் கிளம்பினேன்.
இம்முறை சி ஐ டி காலனியிலிருந்து எழும்பூருக்கு ஆட்டோ.
காலை 5 மணிக்கு உணவருந்தியது. மதிய உணவை 330க்கு அருந்தினேன்.
ரயில் 4 மணிக்கு. ஓப்பன் டிக்கெட் எடுத்துக் கொண்டேன். ரயிலில் இருந்த டி டி ஆர் ஒருவரிடம் ஒரு டிக்கெட் ரிசர்வேஷன் வேண்டும் எனக் கேட்டேன். எஸ் - 5ல் ஏறிக் கொள்ளுமாறு கூறினார். செங்கல்பட்டில் வந்து கூடுதல் கட்டணத்துக்கு ரசீது கொடுத்து ஒரு முன்பதிவு டிக்கெட் கொடுத்தார். வண்டி 20 நிமிடம் தாமதம். இரவு 9 மணிக்கு வரவேண்டிய வண்டி 920க்கு வந்தது. நண்பர் ரயில் நிலைய வாசலில் காத்திருந்தார். ஒரு ஜூஸ் கடைக்குச் சென்றோம். தர்பூசணி ஜூஸ் ஆர்டர் செய்து குடித்தோம். வீட்டில் டிராப் செய்தார். வீட்டுக்கு வந்த போது மணி இரவு 950. வந்ததும் படுத்து உறங்கி விட்டேன்.
ஒருநாள் நிறைவு பெற்றது ; சென்னைப் பயணமும் நிறைவு பெற்றது.