Saturday, 4 July 2026

அசாத்தியத்தை சாத்தியமாக்குபவர்

கால்பந்தில் ஆர்வம் கொண்ட சிறுவனுக்காக என்ன உதவி செய்ய முடியும் என யோசித்தேன். ஏ ஐ யிடம் இந்த விஷயத்தில் என்ன செய்ய முடியும் என்று கேட்டேன். ஏ ஐ சென்னையில் வெளிநாட்டுப் படிப்புக்கு வழிகாட்டும் ஒரு நிறுவனத்தைப் பரிந்துரைத்தது. அந்த நிறுவனத்தின் தொடர்பு எண்ணுக்குப் பேசினேன். அந்த அழைப்பை ஏற்றவர் ஓர் இளைஞர். அவரிடம் விபரம் கூறினேன். சிறுவனின் 12ம் வகுப்பு மதிப்பெண், ஐ இ எல் டி எஸ் மதிப்பெண் ஆகிய விபரங்களைக் கேட்டுக் கொண்டார். அவர் விபரங்களைக் கேட்டுக் கொண்ட விதத்திலும் உள்வாங்கிக் கொண்ட விதத்திலும் மிகச் சிறப்பான முதிர்ச்சியும் பக்குவமும் வெளிப்படுவதை உணர்ந்தேன். சிறுவனின் ஐரோப்பா பயணம் அந்த இளைஞரின் வழிகாட்டலில் சிறப்பாக நிகழும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. கால்பந்து ஆடும் சிறுவனுடன் சென்று சென்னையில் அந்த இளைஞரைச் சந்தித்தால் விஷயம் வேகம் எடுக்கும் என எண்ணினேன். இருப்பினும் நான் எண்ணிய வண்ணம் உடன் நானும் சிறுவனும் சென்னை செல்ல வாய்ப்பு அமையவில்லை. சென்னை இளைஞர் எனக்கு சில முறை ஃபோன் செய்தார். நான் இரு சக்கர வாகனப் பயணத்தில் இருந்ததால் அலைபேசி அழைப்பை ஏற்க முடியவில்லை. தகவல் தொடர்பு இடைவெளி ஏற்பட்டது. சில நாட்களுக்குப் பின் சிறுவன் என்னிடம் வந்தான். மீண்டும் அந்த இளைஞரைத் தொடர்பு கொண்டு விபரம் கூறினேன். மறுநாளே சென்னையில் நேரில் வந்து சந்திக்கிறேன் என்று கூறினேன். 

சிறுவன் ஐரோப்பா செல்ல வேண்டும் என விரும்புவதே அங்கே கால்பந்து ஆட வேண்டும் என்பதற்காகத்தான். ஐரோப்பா கால்பந்துக்கு பிரசித்தி பெற்ற கண்டம். சிறுவனுக்கு சேர்க்கை அளிக்கக்கூடிய கல்லூரி கால்பந்து கிளப்களுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும் என்பதே முக்கியமானது. இந்த விஷயத்தை இளைஞருக்கு ஃபோனில் விளக்கினேன். 

மறுநாள் நேரில் சந்தித்தேன். சிறுவனின் தேவையை நிறைவேற்றும் கல்லூரியை அவர் தேர்ந்தெடுத்து விட்டார். அந்தச் சிறுவனுக்கு அட்மிஷன் கிடைக்கும் விதமாக இண்டர்வியூவுக்கு தயார் செய்யும் பொறுப்பையும் தானே ஏற்றுக் கொண்டார். விசா நடவடிக்கைகளிலும் முழுமையாக உடனிருப்பதாகக் கூறினார். எனக்குப் பெரும் நம்பிக்கை ஏற்பட்டது. 

சில முறை அலைபேசியில் உரையாடிய வகையில் அவரது வயது என நான் கணித்திருந்ததற்கும் மிகக் குறைவான வயதுடைய இளைஞராயிருந்தார். எந்த ஒரு விஷயத்திலும் அதன் தீர்வுகளும் அதனை அடைவதற்கான வழிமுறைகளுமே அவர் பார்வையில் இருந்தன. முற்றிலும் நேர்மறையானவராகவும் நம்பிக்கையை அளிப்பவராகவும் இருந்தார். 

ஊருக்கு வந்து சிறுவனிடன் அவரது எண்ணை அளித்து அவர் கூறும் குறிப்புகளின் படி செயல்படு எனக் கூறினேன். 

விஷயம் சரியான திசையில் நகர்கிறது. 

இராமாயணத்தில் கம்பன் அனுமனை ‘’சொல்லின் செல்வன்’’ என்கிறான். வால்மீகி அனுமனை ‘’அசாத்தியத்தை சாத்தியமாக்குபவன்’’ என்கிறார். இந்த இரண்டு மொழிகளும் அந்த இளைஞருக்குப் பொருந்தும். சீதை அனுமனை ‘’இன்றென இருத்தி’’ என வாழ்த்துகிறார். அந்த வாழ்த்து அந்த இளைஞருக்கும் உரியது.