இப்போது நாட்டில் எங்கும் பொது தொலைபேசி மையங்கள் இல்லை. அலைபேசி மக்கள்தொகையில் பெரும்பான்மையினரிடம் இருப்பதால் பொது தொலைபேசிக்கான அவசியம் இல்லாமல் ஆகி விட்டது. இருப்பினும் பொது தொலைபேசிக்கான தேவை இப்போதும் இருக்கவே செய்கிறது. எனது நண்பர் ஒருவர் வருவாய்த்துறையில் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றினார். அவர் பணி புரியும் கிராமம் ஊரிலிருந்து 10 கி.மீ தொலைவில் இருந்தது. அந்தக் கிராமத்தில் ஏதேனும் மாறுபாடான விஷயங்கள் நடந்தால் ஊரின் பொது தொலைபேசியிலிருந்து அவருக்கு பலர் ஃபோன் செய்து விஷயங்களைத் தெரிவிப்பார்கள். அவ்வாறு தெரிவிப்பவர்கள் தாங்கள் யார் என்பதைக் கூறுவதும் உண்டு. தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் விஷயத்தைக் கூறுபவர்களும் உண்டு. ஊரில் குளத்தில் ஆற்றில் யாரேனும் மணல் அள்ளினால் அலுவலருக்கு ஃபோன் வந்து விடும். அவர் தன் துறை ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்து அந்த இடத்துக்கு விரைந்து செல்லச் சொல்வார். அவருடைய பணியை பொது தொலைபேசி மிகவும் எளிமையாக்கியது என்பது உண்மை. பின்னாட்களில் அலைபேசி பயன்பாட்டுக்கு வந்த போது கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல்கள் வராமல் போனது. அலைபேசியிலிருந்து அழைக்கும் போது தான் யார் எனக் கூறாமல் இருந்தாலும் தனது எண் மூலம் தனது அடையாளம் வெளிப்படும் என்பதால் எவரும் தகவல் கூறாமலேயே போனார்கள் என்று நண்பர் சொன்னார். இது எல்லா விஷயங்களுக்கும் பொருந்தும். ஓர் அரசு அலுவலகம் இருக்கிறது என்றால் அதில் இப்போது ஊழியர்கள் அனைவருக்கும் அலைபேசி உள்ளது. இருப்பினும் அவர்கள் தங்கள் அலைபேசியை சுவிட்ச் ஆஃப் செய்ய முடியும் ; சைலண்ட் மோடில் வைக்க முடியும். அழைப்பை ஏற்காமல் இருக்க முடியும். ஆனால் ஒரு பொது தொலைபேசி இருந்தால் அலுவலக வேலை நேரத்தில் எவரும் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு தகவல்கள் அளிக்க முடியும். காவல்துறை, வருவாய்த்துறை, தீயணைப்பு ஆகிய துறைகளுக்கு பொது தொலைபேசி மூலமான தகவல்கள் பெரிதும் பயன்படும். கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை நாட்டின் சிறு கிராமங்களில் கூட அஞ்சல் நிலையம் இருக்கிறது. நாட்டின் அஞ்சல் நிலையங்கள் அனைத்திலும் பொது தொலைபேசிகள் இருப்பது பொதுமக்களுக்கும் அரசுத்துறைகளுக்குமான தகவல் தொடர்புக்கு மிகவும் உகந்ததாக இருக்கும்.