மனம் என்பதை மனச்செயல் என்று கூறுவார்கள்.
இன்று காலை நடைப்பயிற்சியின் போது அதனை உணர்ந்தேன். இன்று உணர்ந்ததை மிக முக்கியமானதாக நினைக்கிறேன். ரியல் எஸ்டேட் தொடர்பான பல விஷயங்கள் மனதில் நிறைந்திருக்கின்றன. அவை பெருகிக் கொண்டேயிருக்கின்றன. லௌகிகத்தில் அது இயல்பானது. என்றாலும் இன்று அதிகாலையிலேயே அவ்விதம் இருந்தது புதிதாக இருந்தது. இன்று காலை 3 மணி 30 நிமிடம் நடந்தேன். மனம் தன் பல்கிப் பெருகும் செயலிலிருந்து அமைதி கொண்டது 2 மணி 30 நிமிடத்துக்குப் பிறகு தான். கடைசி ஒரு மணி நேரம் மனதில் எழும் எண்ணங்கள் மிக மெதுவானதாக ஆகி விட்டன. அடர்த்தி குறைவான விஷயங்களே மனதில் உதித்தன. உடல் சோர்வுற்றதைப் போல மனமும் சோர்வு கொண்டது. மிக வேகமாக இயங்கிக் கொண்டிருந்த மனம் சோர்வு கொண்டு மெதுவாக ஆனதை விரும்பினேன். அதன் பின் நாள் முழுவதும் மனம் அமைதியாக இருந்தது.
எனக்கு எப்போதுமே மனதை கவனிக்கும் வழக்கம் உண்டு.
ஒரு பேருந்தில் பயணிக்கும் போது மனம் ஒரு விதமாக இருக்கும் ; ரயிலில் பயணிக்கும் போது ஒரு விதமாக இருக்கும் ; இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் போது ஒரு விதமாக இருக்கும் ; பிரியமான ஒருவருடன் பேசும் போது ஒரு விதமாக இருக்கும்; நம்மை அசௌகர்யமாக உணரும் ஒருவருடன் பேசும் போது மனம் ஒரு விதமாக இருக்கும். ஒரு இரைச்சல் கேட்கும் போது மனம் ஒரு விதமாக இருக்கும். ஒரு குழந்தையிடம் பேசும் போது ஒரு விதமாக இருக்கும். இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.
நான் சொல்கிறபடி மனம் கேட்கிறதா? மனம் சொல்கிறபடி நான் கேட்கிறேனா? எனக்குள் இருக்கும் மனம் ஒன்று தானா? எனக்குள் பல மனங்கள் இருக்கின்றனவா?
இவ்விதமான கேள்விகள் எழுந்தன. இவ்விதம் கேள்விகள் எழுந்தது நல்ல விஷயம் என்று தான் எண்ணினேன். ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என ஆர்வம் எழுந்தால் அதைத் தெரிந்து கொள்ள வாய்ப்பு உருவாகிறது அல்லவா?
இன்று காலை மனதில் பிரவாகித்த பல எண்ணங்களில் ஒரு பகுதியைத் தான் இன்று காலை எழுதினேன்.
மனம் பற்றி மேலும் எழுதுகிறேன்.