இன்று காலையிலிருந்து மனம் அமைதியற்று இருந்தது. அந்த உணர்வை இன்னதென்று கூறிட முடியாது. எங்காவது வெளியே சென்றால் நன்றாக இருக்கும் என எண்ணினேன். என்னுடைய இரு சக்கர வாகனத்தில் சென்றால் என் மனம் விடுபடலை உணர சில மணி நேரங்களாவது ஆகும். வீட்டில் காலை 7.30 மணியளவில் சட்டை பாக்கெட்டில் ரூ.50 மட்டும் வைத்துக் கொண்டு கையில் ஒரு ஆங்கிலப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டேன். எங்கே செல்வது என பேருந்து நிலையம் செல்லும் வரை கூட எந்த உத்தேசமும் இல்லை. பேருந்து நிலையம் சென்றதும் ஒரு பேருந்தில் ஏறிக் கொண்டேன். அப்பேருந்தில் ரூ.20க்கு ஒரு பயணச்சீட்டு எடுத்துக் கொண்டேன். 30 நிமிடத்தில் பேருந்து அங்கு சென்று சேர்ந்தது. அந்த ஊரின் புராதானமான சிவாலயத்துக்குச் சென்றேன். கோயிலை ஒரு சுற்று சுற்றி விட்டு கோயில் மண்டபத்தில் அமர்ந்து கொண்டு புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன். ஒரு புதிய இடத்தில் அமர்ந்து புத்தகம் படிப்பது என்பது அவ்வளவு இலகுவாக இராது. புதிய ஓசைகள் வாசிப்புக்கு இடையூறுகளை உண்டாக்கும். இருந்தாலும் தொடர்ந்து வாசிக்க ஆரம்பித்தேன். அந்த நூல் ‘’மரணம்’’ குறித்த நூல். மரணம் அடையக் கூடியவர்களுக்கான நூல் என அந்நூலாசியர் தன் நூல் குறித்து குறிப்பிடுகிறார். வாசிக்க மிகவும் சுவாரசியமாக இருந்தது. வாழ்வில் நிச்சயமான ஒன்று மரணம். ஒரு மனிதன் எண்ணியதை எய்த நலமுடன் வாழ செல்வந்தனாக வாழ இயலலாம் அல்லது இயலாது போகலாம் ஆனால் எந்த மனிதனும் மரணித்தே ஆக வேண்டும். இருப்பினும் மனிதர்களுக்கு ‘’மரணம்’’ குறித்த உண்ர்வு அனேகமாக இல்லை. இன்று தான் அவ்வாறு எனக் கூறிட முடியாது ; 5000 ஆண்டுகளுக்கு முன்னால் மகாபாரதத்தில் ‘’யட்சப் பிரசன்னத்தில்’’ யுதிர்ஷ்ட்ரனிடம் இந்த உலகின் ஆச்சர்யம் என்ன என யட்சன் கேட்கிறான். ‘’தினம் தினம் நூற்றுக்கணக்கானோர் சாவதை அறியும் மனிதன் அந்த சாவு தனக்கு வராது என எண்ணி செயல்படுகிறான். இதுவே உலகின் பெரும் ஆச்சர்யம்’’ என பதில் சொல்கிறான் யுதிர்ஷ்ட்ரன். நூலாசிரியர் சிறுவனாக இருந்த போது மயானங்களுக்குச் சென்று அமர்ந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். பிணங்கள் எரிவதை வேடிக்கை பார்க்க அவருக்குப் பிடித்திருக்கிறது. பிணத்தைக் கொண்டு வந்து வைத்து முதல் ஒரு மணி நேரம் பிணத்தைக் கொண்டு வந்தவர்கள் கதறி அழுகின்றனர். சிதையில் நெருப்பு வைத்து விட்டு அங்கிருந்து சென்று விடுகின்றனர். பிணம் எரியும் போது முதலில் எரிவது கழுத்துப் பகுதி. உடலில் தடிமன் குறைவான பகுதி அதுதான். கழுத்துப் பகுதி எரிந்தவுடன் பிணத்தின் தலை ‘’ஃபுட்பால்’’ போல எம்ப ஆரம்பித்து விடுகிறது. நூலாசிரியர் மரக்கட்டைகளை பிணத்தின் தலைப்பகுதியில் அதிகமாக அடுக்கி தலையாகிய ‘’ஃபுட்பால்’’ எகிறி விடாமல் பார்த்துக் கொள்கிறார். நம் உடலுக்கு பஞ்ச பூதங்களின் இயல்பாலான ஞாபகம், அன்கான்சியஸ் , சப்கான்சியஸ், கான்சியஸ் மனங்களின் ஞாபகம், அடாமிக் சப் அடாமிக் கூறுகளின் ஞாபகம், பரிணாம ஞாபகம், மரபணு ஞாபகம் என இத்தனை ஞாபகங்கள் இருக்கின்றன. யோகப்பாதையில் செல்பவர்கள் இந்த ஞாபகங்களை இல்லாமல் ஆக்குகின்றனர். இப்படியாக சென்றது அந்நூல்.
நூலை வாசித்துக் கொண்டே ஆலயத்தில் 4 மணி நேரத்துக்கு மேல் மண்டபத்தில் அமர்ந்திருந்தேன். அந்த அனுபவம் சிறப்பானதாக இருந்தது. அவ்வளவு பெரிய ஆலயத்தில் இருந்து பழகி விட்டால் வீடுகள் மிகச் சிறியதாக தோன்றத் தொடங்கி விடும்.
ஒரு குடும்பம் தன் கைமகவு ஒன்றுக்கு சோறூட்டும் சடங்கைச் செய்தனர்.
அம்மன் சன்னிதியில் ஒரு திருமணம் நடந்தது. அந்த திருமண கோஷ்டி மதிய உணவருந்த கோயிலிலிருந்தவர்களை அழைத்தனர். சென்று உணவருந்தினேன். மதிய உணவருந்திய போது தான் காலை உணவருந்தவில்லை என்பது ஞாபகத்துக்கு வந்தது. மதியம் 1 மணிக்கு கோயில் நடை சாத்தும் நேரம். நடை சாத்தினர். கோயில் வாயிலில் வானத்தைப் பார்த்துக் கொண்டு படுத்திருந்தேன். 30 நிமிடம் அவ்வாறு இருந்திருப்பேன். பின்னர் பேருந்து நிலையம் வந்து ஊருக்குப் பஸ் பிடித்து வந்து சேர்ந்தேன். பேருந்து நிலையத்திலிருந்து வீட்டுக்கு வரும் போது வழியில் ஒருவர் ‘’லிஃப்ட்’’ கொடுத்தார். வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.
கோயில் இறைவன் உறையும் இடம். இறைவன் மனித எல்லைகளுக்கும் கணிப்புகளுக்கும் சிந்தனைகளுக்கும் அப்பாற்பட்டவன். அவனுக்கு உலகில் எறும்பும் ஒன்றே ; ஆனையும் ஒன்றே. அளவோ பாகுபாடோ அவனுக்கு கிடையாது. இறைவன் சன்னிதியில் நீண்ட நேரம் இருக்கும் போது இந்த விஷயங்கள் புலப்படுகிறது.